அகதியின் அகத்தீ!
-அமீர்
என்னுரிமை
உன்னுரிமை ஒன்றாக
நாமென்ன சகோதரர்களா?
என்னுயிரும்
உன்னுயிரும்
சமமாக நாமென்ன தோழர்களா?
இல்லை என்பதை உணர்கிறேன்
அதனால் தானே விரட்டப்படுகிறேன்…
பிறந்த மண்ணை
உரிமை கோரல் தவறா?
ஒடுக்கிய பின்பும்
ஒழிக்க நினைப்பது சரியா?
ஏகாதிபத்யமே…
உங்களுகே சொந்தம் என்பது
இந்தப் பரந்த உலகம் மட்டுமா?
அண்ட வெளிக் கிரகங்களும்
அதில் அடக்கமா?
அச்சுறுத்தலும்
தட்டிப்பறித்தலும்
உங்களின் அன்பா?
கொலைமிரட்டலும்
விரட்டி அடித்தலும்
உங்களின் பண்பா?
உயிர்பயத்தில்
கால்கள் கடுக்க ஓடும்போது
தெரியாதவலி
இந்த உலகம்
மவுனமாய்ப் பார்க்கும் போது தெரிகிறது…
ஆளப்படுபவர் அனுமதியின்றி
ஆளப்படுவது
சர்வாதிகாரத்தின் இலக்கணமோ?
ஆட்சியும் மாட்சியும்
துணைவருவதால்
சேரும்ஆணவமோ?
உடலைவிட்டு
உதிரம் பிரிந்தால்
உயிருக்கு இல்லை உத்திரவாதம்
நாங்கள்
உடல் ஓரிடம்
உதிரம் ஓரிடம்
உயிர் ஓரிடமென வாழும்
மண் தேடும் புழு…
நாங்கள்
கருவரையிலிருந்து
கழிவாக வெளியேற்றப்படாமல்
உங்களைப் போன்றே
ஈன்றப்பட்ட பிறவிகளல்லவா!
தாயும்
தாரமும்
பிள்ளைகளும்
இரவில் மட்டும்
எங்கள் மார்சாய்கிறார்கள்
புகைப்பட உதவியோடு!
வெயிலும்
குளிரும்
மழையும் மட்டுமே
நாங்கள் அறிந்த உலக இயற்கை!
ஐ.நா.வும்
செஞ்சிலுவையும்
அனுப்பும் ஆடைகள்
அணியும் தினமே
நாங்கள் அறிந்த திருநாட்கள்!
பாலும் பழமும்
பல்சுவை விருந்தும்
பசிக்குக் கிடைக்கும்
பழைய கஞ்சியில் காண்கிறோம்!
நாடுபிடிப்போரின்
நலியாத ஆசையால்
நாங்கள்
ஈழனென்றும்
பாலஸ்தீனனென்றும்
சூடானி என்றும்
திபெத்தியனென்றும்
பரந்து கிடக்கிறோம்
பாவப்பட்ட உலகில்…
இனி
பரந்து கிடந்தோமென்று
வரலாறு சொல்ல…
பாலைவனம் ஒன்று போதும்
எங்கள் சொந்த மண் என்று துள்ள…
கால்நடையாகவே பயணிக்கிறோம்
அது கிடைக்கும்
நன்னாளை எதிர்நோக்கி!
