Featuredஇலக்கியம்கட்டுரைகள்

அமெரிக்காவில் தேர்தல் பின்னடைவு

நாகேஸ்வரி அண்ணாமலை

98f62e054ae1f4328a3471911522cfe05492baa7

அமெரிக்காவில் 2014-க்குரிய இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற மேலவையில் சில இடங்களில் தோற்றுப் பெரும்பான்மை இழந்திருக்கிறது; கீழவையில் தேர்தலுக்கு முன்பே சிறுபான்மையாக இருந்தது; இப்போது இன்னும் சில இடங்களை இழந்து இன்னும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது. 2008-இல் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒபாமா என்னென்னவோ சாதிக்கப் போவதாக அமெரிக்க மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அமெரிக்கா செல்லும் பாதையைத் திசைதிருப்பி உலக அரங்கில் அதன் படிமத்தை உயர்த்த வேண்டும், அமெரிக்காவின் ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய கஷ்டங்களை நீக்குவதற்குக் குறைந்தபட்ச ஊதியம் போன்ற சட்டங்களைக் கொண்டுவர வேண்டும், அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டார். இந்தக் கனவுகளை முறியடிக்கும் விதமாக 2010-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் கீழவையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை போயிற்று. 2012-இல் ஜனாதிபதித் தேர்தலோடு நடந்த இடைத்தேர்தல்களில் எப்படியோ மேலவையில் பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சித் தக்கவைத்துக்கொண்டது. ஆனால் 2014-இல் நடந்த தேர்தலில் மேலவையிலும் பெரும்பான்மை போயிற்று. இப்போது இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்து நிற்பதால் ஒபாமா என்ன திட்டங்கள் கொண்டுவந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடக் குடியரசு உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஜனநாயகக் கட்சி இரண்டு அவைகளிலும் நிறைய இடங்களை இழந்ததற்கு இந்தத் தேர்தலில் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் குறைந்தது ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். கடந்த எழுபது வருடங்களில் – அதாவது 1942 தேர்தல்களுக்குப் பிறகு – இப்போதுதான் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 36.3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பெரும் பணக்காரர்கள் அளித்த ஆதரவோடு குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் செய்த பொய்ப் பிரச்சாரங்களும் இதற்குக் காரணம் என்கிறார்கள். புஷ் காலத்தில் சரிந்த பொருளாதாரத்தை ஒபாமா எழுந்து நடக்கவைத்தார். ஆனாலும் புதிதாக வந்த வளத்தின் நன்மைகள் சிறுபான்மையினரான பணக்கார வர்க்கத்தினருக்கே போய்ச் சேர்ந்தது. மத்தியதர வர்க்கத்தினரும் தொழிலாளி வர்க்கத்தினரும் தங்கள் வருமானத்தில் அதிக வித்தியாசத்தைக் காணவில்லை. இதனால் பொதுமக்களிடையே அதிருப்தி நிலவியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஒபாமாவின் கடந்த ஆறு ஆண்டு சாதனைகளை மறக்கும்படிச் செய்தனர். அவற்றைக் குறைத்து மதிப்பிட்டுச் செய்த பிரச்சாரங்களே வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச் சாவடிகளுக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். கருப்பர்களை வாக்களிப்பதிலிருந்து தடுத்து நிறுத்த சிலர் சில முயற்சிகளை மேற்கொண்டார்கள். கருப்பர்கள் அதிகமாக வாழும் சிகாகோவின் தென்பகுதியில் வாக்குப்பதிவு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்று சிலர் புரளி கிளப்பியதாகச் செய்தி வந்தது. ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் இல்லினாய் மாநிலத்திலேயே ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்ட ஜனநாயக் கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜெயித்திருக்கிறார். எது லோக்சபா தேர்தல், எது அசெம்பிளி தேர்தல் என்று தெரியாத பல அப்பாவி இந்திய மக்கள் இருப்பதுபோல் ஒபாமா போட்டியிடாததால் தாங்கள் ஓட்டுப் போடத் தெவையில்லை என்று நினைத்த அமெரிக்கர்களும் இருக்கலாம்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அவை உறுப்பினர்களும் ஒபாமாவின் முக்கியத் திட்டங்களை முறியடிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு தயாராக இருக்கிறார்கள். முதலாவது பல வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்திருந்து அமெரிக்காவின் குடியுரிமை பெறத் துடிப்பவர்கள் பற்றியது. இவர்களுக்குச் சட்டபூர்வ குடியுரிமை வழங்க ஒபாமா எவ்வளவோ முயன்றார். அவை எல்லாவற்றையும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள் முறியடித்துவிட்டனர். இப்போது இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்திருப்பதால் தன்னுடைய ஜனாதிபதிக்குரிய நிர்வாக அதிகாரத்தை உபயோகித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கப் போவதாக ஒபாமா அறிவித்திருக்கிறார். இதற்குக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கீழவைத் தலைவர் மிகுந்த எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ‘ஒபாமா நெருப்போடு விளையாடுகிறார். நெருப்போடு விளையாடுபவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்வார்கள்’ ஒபாமாவும் தன்னுடைய விஷேச அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுத்தால் தன்னைத் தானே அழித்துக்கொள்வார்’ என்று பயமுறுத்துகிறார். இது ஒரு புறம் இருக்க, ஒபாமா இந்தச் சட்டத்தைத் தன் அதிகாரத்தின் மூலம் கொண்டுவந்தாலும் 2016 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதிக்குரிய இதே அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தை நீக்கிவிடலாம்.

இரண்டாவதாக ஒபாமா மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுவந்த மருத்துவக் காப்பிட்டுத் திட்டம். இதைச் சட்டமாக்குவதற்கு குடியரசுக் கட்சியினர் என்னென்னவோ தடைகள் கொண்டுவந்தனர். ஆனாலும் ஒபாமா எப்படியோ அவர்களின் முயற்சிகளை முறியடித்து அதைச் சட்டமாக்கினார். இப்போது அதை எப்படியும் நீக்கிவிடுவது என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகச் செயல்படப் போகிறார்கள். இதனால் பல ஏழை அமெரிக்கர்களுக்கு மருத்துவ வசதி இல்லாமல் போகும். 65 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு குறைந்த பிரீமியத்தில் வழங்கும் மெடிக்கேர் என்னும் மருத்துவத் திட்டத்தையும் குடியரசு உறுப்பினர்கள் தனியார்மயமாக்க முயற்சிக்கலாம். இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சிரமம் ஏற்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி ஒபாமா மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். கனடாவிலிருந்து கச்சா எண்ணெயை சுத்தீகரிப்பதற்கு டெக்ஸாஸிற்குக் கொண்டுவர ஒரு எண்ணெய்க் கம்பெனி முயன்று வருகிறது. கச்சா எண்ணெயைக் கொண்டுவருவதற்குக் கட்டப்படும் கால்வாயினால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால் ஒபாமா இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்தக் கால்வாய் கட்டப்பட்டால் பலருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது குடியரசுக் கட்சியினரின் வாதம். சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற அப்பெக் (APEC) மாநாட்டில் ஒபாமாவும் சீன அதிபரும் சேர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் கரியமில வாயுவைக் குறைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஒபாமாவின் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கப் பாராளுமன்றம் நிறைவேற்றுமா என்று தெரியவில்லை.

தங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய பல திட்டங்களைக் கொண்டுவந்த ஒபாமாவின் கைகளைப் பலப்படுத்த அவருடைய கட்சிக்கு அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்க வேண்டும். மாறாக ஏழைகளின் (இவர்களில் கருப்பர்கள் அதிகம்) நலன்களைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் `கார்ப்பரேட்டுகளின் நன்மைகளையே முதன்மையாகக் கொண்டு இயங்கப் போகும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை அமெரிக்கர்களின் அறியாமை என்பதா? பணம் படைத்த அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் பலம் என்பதா?

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க