Year: 2018

  • வாழ்ந்து பார்க்கலாமே 25

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களை எப்படி சமாளிப்பது?

    மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் நாம் மாற்றங்களைச் சந்திக்க நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அது எப்படி முடியும்?

    1. மாற்றங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
    2. மாற்றங்களை எதிர் கொள்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
    3. மாற்றங்களின் வேகத்திற்கு நம்மை அடிமையாக்கிக் கொள்ளாமல் அவைகளை இடம் மற்றும் காலங்களுக்குத் தகுந்தவாறு ஏற்றுக்கொள்ள அறிந்துகொள்ள வேண்டும்.
    4. மாற்றங்கள் நமக்குத் தேவைதானா என்பதை அறிந்து அதை ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றார்களே என்பதற்காக கண்மூடித்தனமாக அவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
    5. மாற்றங்கள் நம்முடைய சமுதாயப் பண்புகள், கலாச்சாரங்கள், மனித நேயம், வாழ்க்கை வளமை மற்றும் நேர்மை, பேராண்மை இவற்றுக்கு அதிக அளவில் தாக்கங்கள் ஏற்படுத்தாதவாறு அவற்றை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

    மாற்றங்களைக் கண்மூடித்தனமாக நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுதும், அவைகள் நமக்குத் தேவையற்ற நிலையிலும் அவைகளைத் தவறாக நாம் பயன்படுத்தும் பொழுதும் துயரங்களையும் விரும்பாத தகாத சூழ்நிலைகளையும் அமைதியின்மையையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கும். உதாரணமாக, தற்போதைய தொழில் மற்றும் கணினி சார் வளர்ச்சியின் தாக்கங்கள் நம்முடைய வாழ்க்கைப் போக்குகளையும் வாழ்க்கை பற்றிய காலந்தொட்டு வளர்ந்துவந்த கோட்பாடுகளையும் அடியோடு சாய்த்து விட்டன. இதனால் தற்போதைய சமூகத்தில் பலர் தேவையற்ற துனபங்களுக்குத் தம்மை அடிமைகளாக்கிக் கொண்டு வருகின்றனர்.

    காலந்தொட்டு நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரு அறிவுரை.” சிறுகக் கட்டிப் பெருக வாழ்.”  நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டும் வைத்துக்கொண்டு அமைதியுடன் வாழ்தலே உடலுக்கும் மனதிற்கும் நல்லது., இருக்கிறது என்பதற்காக அளவின்றி உணவை உண்ணும் பொழுது அது நமக்கு பல நோய்களுக்கு வித்தாக அமைகின்றது. அதேபோல் நம்முடைய தேவைகளை அதிகரித்துக்கொள்ளும் பொழுது அதனைச் சார்ந்த பலவித மகிழ்வுகளோடு துயரங்களும் நமக்குக் கிடைக்கின்றன.

    ஒரு காலத்தில் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குவது இழுக்காகக் கருதப்பட்டது. “கடன் வாங்கினார் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற வார்த்தைகளை முன்னுதாரணமாகக் காட்டி அதன் உணர்வுபூர்வ தாக்கங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஒருவனின் வளர்ச்சிக்கும் சில முக்கிய தேவைகளுக்கும் கடன் கொடுப்பதும் கடன் வாங்கிச் செலவு செய்வது பொறுப்பான செயல்களாகக் கருதப்பட்டன. குழந்தைகளின் படிப்பு, மகளின் திருமணம், குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகள் போன்ற பலவற்றிற்காக கடன் பெறுதலும் அவைகளை அடைத்தாலும் ஒரு பொறுப்புள்ள மனிதனுக்கு அடையாளமாகக் காட்டப்பட்டன. காலப்போக்கில் கடன் வாங்குவதைச் சார்ந்த பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பதற்காக வங்கிகள் மூலமாக பலருக்கும் இலவசத் தவணைமுறைகளில் கடன்கள் வழங்கப்பட்டன. காலப்போக்கில் கடன் வாங்குதலும், தேவையற்ற நிகழ்வுகளுக்கு கடன்களை அதிகரித்துக்கொள்ளுவதும், அவைகளைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதும் வழக்கமாகி விட்டன. மேலும் ஒரு கடனைத் திருப்பித்தர முடியாமல் அதற்காக இன்னொரு கடன் வாங்கி அதை சமாளிப்பதும் வழக்கத்தில் உள்ளன. இதற்காக மக்களின் மனங்களில் மாயைகளை ஏற்படுத்தும் பலவிதமான காணொளிக்  காட்சிகள் ஏராளமாக நடைமுறையில் உள்ளன. “எனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது ” என்று சொல்லி பெருமைப்படும் பலரையும் பார்த்திருக்கின்றோம்.

    தன் கையில் சல்லிக்காசு இல்லாமல் வாங்கிக்கடன்கள் மூலமாக தொழிலதிபர்களாகி அந்தக் கடன்களைக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. தங்களுடைய பணத்திற்கான வட்டி சீக்கிரத்தில் குட்டி போடவேண்டுமென்று தங்கள் சேமிப்புக்களைத் தகாதவர்கள் கைகளில் கொடுத்து தங்கள் வாழ்வின் சேமிப்புக்களை இழந்தவர்களைக் கண்கூடாக நாம் காண்கின்றோம்.

    இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

    நாம் நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகளையும் அடிப்படைகளையும் மறந்து மற்றவர்களுடைய வாழ்க்கை முறைகளை பின்பற்றத் துடித்துக்கொண்டிருப்பதே !’

    நாம் மற்றவர்களுக்காக நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுவது மட்டுமின்றி இல்லாத ஒரு மாயைக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றோம். நமக்கும் வளர்ச்சி தேவைதான். ஆனால் அது ஆரோக்கியமான அமைதியைக் கெடுக்காத வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

    சமீபத்தில் நான் கண்ட இரண்டு நிகழ்வுகள். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி தன்னிடம் வைத்திருந்த எட்டு வங்கிகளின் கடன் அட்டைகள் (Credit Cards) மூலமாக அதிக அளவில் செலவு செய்து விட்டு அந்த எட்டு வங்கிகளிடமும் பணம் செலுத்த முடியாமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார். உண்மையில் அவருக்கு வாழ்க்கைச் சுமைகள் அதிகம் இல்லாமலும் இருப்பதற்கு அழகான ஒரு வீடு இருந்தாலும் தேவைற்ற பல பொருள்களைத் தன்னுடைய வளத்திற்கு மேல்பூச்சுப் பூசுவதற்க்காக வாங்கி வைத்ததே காரணம். பல நண்பர்கள் தங்களுக்குத் தேவையில்லாத பொருட்களையும் சமுதாயத்திலும் நண்பர்களிடமும் உறவுகளிடமும் தங்களுடைய போலி வளமையைக் காட்டிக்கொள்வதற்காக கடன் முறையில் வாங்கி அவதிப்படுவதைப் பார்த்தேன் ;பலபேர் இந்தமாதிரி போலி வாழ்க்கைக்குத் தங்களை அடிமையாக்கி கொள்கின்றார்கள்.   இது ஒரு சிந்திக்க வேண்டிய கருத்து.

    இதே போன்று ஒரு இளம் தம்பதியர் தங்களுக்காக ஒரு பன்மாடிக் கட்டிடத்தில் தவணை முறையில் வீடு வாங்கி அமைதியாக வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களிடையே மனக்குமுறல்களும்   அமைதியின்மையும் வந்தன. காரணம்? வங்கிக் கடன் மூலமாக இரண்டாவது வீடு ஒன்று வாங்கி இரண்டு வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய தவணைகளைச் சரியான முறையில் கொடுக்க முடியாமல் துன்புற்றதே. அது மட்டுமின்றி, அந்த நேரத்தில் அந்த நண்பரின் அலுவலகத்தில் ஆட்குறைப்பு ஏற்பட துயரத்தின் எல்லைகள் வளர்ந்தன. பலரும் தங்களுக்கு தேவைகள் நிறைவேறிவிட்டாலும் ஆசைகளுக்கு இடம் கொடுத்து துயரங்களைச் சமாளிக்கும் நிலைகளைக் காண்கிறோம்.

    எல்லோருக்கும் கடன் அட்டை நிச்சயம் தேவை. மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் இது ஒரு ஆரோக்கியமான சிந்தனையே. ஆனால் அதை நாம் எவ்வாறு எதற்கு எப்போது பயன் படுத்த வேண்டும்?

    மாற்றங்கள் மகிழ்வுக்குத் தென்றலாக வேண்டும். அவைகளே வாழ்க்கையின் அமைதியைக் கெடுக்கும் புயலாக மாறிவிடக்கூடாது.

    கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப் படும் மாற்றங்களும் தேவையின்றி நாம் ஏற்றுக்கொள்ளும் மாற்றங்களும் நமக்குத் தேவைதானா என்பதை சற்றே சிந்திக்க வேண்டும்.

    புதுமையான வாழ்வை ஏற்றுக்கொள்ளும் பொழுது நாம் அமைதியை இழந்துவிடக்கூடாது. சரிதானே ?

    வாழ்க்கையை இன்னும் சற்று தெளிவோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்..

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180616 -Balanarasimha and Prahlada lr

    வாமனனாய் வந்தார், வடிவில் சிறுத்(து)அரி,
    பூமன(பிரகலாத ஸ்வாமி) பக்திக்(குட்)உட் பட்டதால்: -கோமண
    சோணை ரமணமுனி சொன்னது பக்திமனத்
    தூணில் ஒளியும் துரும்பு(அங்குஷ்டாப்யாம்)….!

    ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….!

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி
    குளிர்ந்தவன் மேனியைக் கட்டிடும், சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….கிரேசி மோகன்….!

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 6

    -மேகலா இராமமூர்த்தி 

    மனித யாக்கையும் செல்வமும் நிலையில்லா இயல்புடையவை என்பதை நாலடியார் பாடல்கள் பலவும் திரும்பத் திரும்ப நினைவுறுத்தி மனிதர்களை மனப்பக்குவமும் புலனடக்கமும் கொண்டவர்களாய் வாழ வலியுறுத்துகின்றன.

    வாழ்க்கை நிலையில்லாத் தன்மையுடையதே எனினும், உயிரோடு வாழும்வரை மனிதர்கள் செல்வத்தைத் தேடித் தொகுக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள். அப்போதுதான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பமுடியும். எனினும், வாணாள் முடியும்வரை பொருளைத் துரத்திக்கொண்டே இருப்பதில் பொருளுண்டோ? 

    முன்னரே சாநாள் முனிதக்க மூப்புள
    பின்னரும் பீடழிக்கும் நோயுள – கொன்னே
    பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங்
    கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. 
    ( நாலடி 92 )

    மனிதர்கள் தம்மை வரவேற்கக் காத்திருக்கும் கிழப்பருவத்தையோ மரணத்தையோ தள்ளிப்போட முடியாது. அதுபோதாதென்று, உடல்நலத்தைக் குலைக்கும் பிணிகளுக்கும் வாழ்வில் பஞ்சமில்லை. இத்துணைத் துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வாழ்வில் அணிவகுத்து நிற்பதால், செல்வம் உள்ள ஒருவன், மேலும் செல்வத்தைத் தேடி அலைவதிலோ, இருக்கும் செல்வத்தைத் தனக்குமட்டுமே பயன்படவேண்டும் என்று ஒளித்து வைப்பதிலோ, வாழ்வைக் கொன்னே கழியாது, பகுத்துண்ண வேண்டும் என்பது நாலடியார் வழங்கும் அறிவுரை.

    ஈதல், இசைபட வாழ்தலே உயிர்களுக்கு உண்மையான ஊதியமாகும்.

    ஈகை, வாழ்வில் அனைவரும் கைக்கொள்ளவேண்டிய நல்லறம் என்பதில் ஐயமில்லை. எனினும், நாம் யார்க்குக் கொடுக்கிறோம் எதற்குக் கொடுக்கிறோம் என்பதன் அடிப்படையும் ஆராயவேண்டிய ஒன்றாகும். ”இன்று இவருக்கு நான் நூறு ரூபாய் ஈந்தால் நாளை இவரிடமிருந்து இருநூறு ரூபாய் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று மனக்கணக்குப் போட்டுச் செய்யும் உதவியெல்லாம் அறமென்றோ ஈகையென்றோ கொள்ளத்தக்கவை அல்ல. அவை பயனை எதிர்பார்த்துச் செய்யும் வணிகம் போன்றவையே.

    இதனைப் பின்வரும் நாலடியார் பாடல் சிறப்பாக விளக்குகின்றது. 

    ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
    தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் – ஆற்றின்
    மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
    பொலிகடன் என்னும் பெயர்த்து
    .  (நாலடி – 98)

    வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த கரையை உடையவனே, ஒருவர்க்கு ஒன்று உதவுவதானால், இரந்த கையை மாற்றாமல் (மறுக்காமல்) இயன்றது எதையேனும் வேறுபாடின்றி, கைம்மாறு செய்ய இயலாத வறிஞர்க்கு உதவுவதே ஓர் ஆண்மகனின் கடமையாகும். எதிருதவி செய்வார்க்கு ஒன்று உதவுதல் ’விளக்கமான கடன்’ என்னும் பெயருடையது; அஃது ஈகையில் சேராது!

    இதே கருத்தையே வள்ளுவரும்,

    வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து”
    என்றார்.  (ஈகை – 221)

    புறநானூற்றுப் பாடலொன்றும் இதே கருத்தை ஒரு மன்னனின் செயலோடு தொடர்புபடுத்திச் சுவைப்படச் செப்புகின்றது.

    ”இம்மையில் ஒருவருக்கு உதவுவது இம்மைப் புகழுக்கும், மறுமையில் கிட்டும் துறக்கவின்பம் கருதியுமே என்பது உலகத்தார் பலரின் எண்ணம். ஆனால் எம் மன்னனாகிய ஆய் அண்டிரனோ இம்மைச் செய்தது மறுமைக்காகும் என்றெண்ணி அறத்துக்கு விலைகூறும் வணிகன் அல்லன். இல்லாதோர்க்குக் கொடுத்துதவ வேண்டியது இருப்போரின் கடன் எனும் சான்றோர் நெறிபற்றி அமைந்ததே அவன் கொடைப்பண்பு” என்று ஆய் அண்டிரனைப் பாராட்டுகின்றார் ஏணிச்சேரி முடமோசியார்.

    இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
    அறவிலை வணிக னாயலன் பிறரும்
    சான்றோர் சென்ற நெறியென
    ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே.
      (புறம் – 134)
     

    கையிலுள்ள பொருளைப் பிறர்க்கு ஈந்துவிட்டால் நாளை நம் நிலைமை என்னவாகும்? என்று அஞ்சும் குணம்படைத்த பணம்படைத்தோரையும் குவலயத்தில் குறைவின்றிக் காணலாம். அவர்கட்கும் ஏற்றதொரு பதிலைச் எடுத்துரைக்கின்றது நாலடியார்.

    நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்
    கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
    இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
    விடுக்கும் வினையுலந்தக் கால். 
    (நாலடி – 93)
     

    பிறருக்குப் கொடுத்துத் தான் துய்ப்பினும், பொருள்சேரும் காலமென்றால் சேரும்; அதுவே நல்வினைப்பயன் முடிந்துபோய்விட்டதென்றால், சேர்த்த செல்வத்தை எவ்வளவுதான் நாம் இறுக்கிப்பிடித்தாலும் அது நில்லாது போய்விடும். இவ்வுண்மையை அறியாதோரே வறுமை வந்துவிடுமோ என்று நடுக்குற்றுத் தம்மைச் சேர்ந்தோரின் வாட்டத்தைப் போக்காது தம் செல்வத்தைப் பூட்டிவைப்பர். 

    ”பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம.
    ” (ஊழ் – 376) என்று நம் உளங்கொளும் வகையில் வள்ளுவமும் இதே கருத்தை விளம்பியிருப்பதை ஈண்டு நாம் எண்ணிப் பார்க்கலாம்.

    மனிதர்கள் வாழ்வில் நற்பலன்கள் பெறுவதற்கும் கெடுபலன்கள் அடைவதற்கும் அவர்தம் முன்வினைப்பயனே காரணம் என்கின்றனர் நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள்.

    பண்டை வினைகள் தக்க காலத்தில் தம் பலனைத் தராமல் போவதில்லை என்பதை அறிந்துகொள்ளச் சிலப்பதிகாரத்தினும் சிறந்த சான்றில்லை. ”ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்பதைக் காப்பிய உண்மைகளில் ஒன்றாகவே படைத்தளித்தவர் அல்லரோ அடிகள்!

    பல பசுக்களின் இடையில் விடப்பட்டாலும் இளைய ஆன்கன்றானது தன் தாயினைத் தேடித் தெரிந்தடைதலைப்போலத் தொன்று தொட்டுவரும் பழவினைகளும் தன்னைச் செய்த உரிமையாளனைத் தப்பாமல் தேடி அடையும் தன்மையுடையவை என்கிறது நாலடியார்.

    பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
    வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
    பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
    கிழவனை நாடிக் கொளற்கு. 
    (நாலடி – 101)
     

    உலக வாழ்க்கையில் நாம் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள் பலவுண்டு. அவற்றில் ஒன்று…”நல்லறிஞர்களெல்லாம் விரைவில் வீழ்வதும் (மாள்வதும்), பயனற்ற வீணர்கள் புவியில் நெடுநாள் வாழ்வதும் ஏன்?” என்பது. அதற்குத் தக்கதோர் விடையிறுத்து நம்மைத் தெருட்டுகின்றது நாலடியார்.

    பலவகைப்பட்ட பரந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில் விரைவில் இறக்கவும், கல்லாதார் நீடுவாழ்வது எங்ஙனமென்று கருதுவீராயின், அதற்குக் காரணம் அறிவென்னும் அப்பிழிவு வீணர்களிடம் இன்மையால் அவர்களை வெறுங்கோது (சக்கை) என்று கருதிக் கழித்துவிடுகின்றான் கூற்றுவன்.

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
    கல்லாதார் வாழ்வ தறிதிரேல் – கல்லாதார்
    சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
    கோதென்று கொள்ளாதாம் கூற்று. 
    (நாலடி – 106)
     

    கற்றார் அறிவுச்சாறு பெற்றுக் கனிந்துவிட்டவராதலின் பிறவிப்பயனை அவர்கள் அடைந்துவிட்டமை கருதி அதனினும் மேனிலையுறும் பொருட்டு அவர்தம் ஊனுடல் விரைவில் கழற்றப்பட்டதெனவும், கல்லாதார் இன்னும் அத்தகுதி பெறாமையால் இவ்விடமே கழித்து விடப்பட்டனரெனவுந் தெரிவித்து, அதன்வாயிலாக, விரைவில் நல்வினை செய்து நன்னிலையுறுகவென அறிவுறுத்துகின்றது இச்செய்யுள்.

    ”…இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
    உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
    செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
    மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.” 
    ( சிலம்பு – வரந்தரு காதை: 199-202)  
    என்ற வரந்தரு காதை அடிகள் மூலம் இளங்கோ அடிகள் நமக்கு வலியுறுத்துவதும் இதைத்தானே?

    [தொடரும்]

     

     

     

    Share
  • முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…

    —————————————————————————————————————————–

    ஈரோடு மாவட்டப் பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்கள் புத்தகத்திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…

    —————————————————————————————————————————–

    ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் , பயிலும் மாணவர்களும் , ஈரோடு புத்தகத் திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலரிடத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை வேண்டுகோள் வைத்தது.

    புத்தகத் திருவிழா நடைபெறுவதையொட்டி பள்ளிகளில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டங்கள் மற்றும் வகுப்பறைகளில் பாடப் புத்தகங்களுடன் பொதுப் புத்தகங்களையும் வாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்றும் , பள்ளி மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் நல்ல புத்தகங்களை வாங்கி அவரவர் இல்லங்களில் சிறு நூலகங்கள் அமைக்க ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் பேரவையின் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இதற்கான வேண்டுகோள் கடிதத்தை பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பாலமுரளி அவர்களிடம் வழங்கினார்.

    பேரவையின் பணிக்குழு உறுப்பினர்களாக விளங்கும் முன்னாள் தலைமையாசிரியர்கள் கவுந்தப்பாடி எஸ். சண்முகம் , தளவாய்பேட்டை   பி.ஆர். செல்வராஜ் , சிவகிரி சி.ஆறுமுகம் , ஈரோடு டி. கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Share
  • டி.கே.வி.தேசிகாச்சாரியார்

    த்யாகச் செம்மலே ,தேசிகாச்சார் தெய்வமே,
    யோகப் பிதா(க்ருஷ்ணமாச்சார்)அன்று யோஜித்த -சாகஸத்தை,
    லோகஷேம லவ்(LOVE)சிவமே,(அன்பே சிவம்) லீலா தரங்கரே,
    சாகா வரம்பெற்ற சாது(மகான் -பிதாமகர் அல்ல பிதாமகான்)

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

     

    180614 – Yogacharya Krishnamacharya – bw A4 – graphite

    ”பதஞ்சலி பின்வந்த பிதாமகரே, ஆன்ம
    பதஅஞ்சலி ஏற்றிடுவீர், பாதம் -பதிந்தோம்உம்
    ஆஸிபல கூறிடும் ,ஆச்சார்ய க்ருஷ்ணமாச்சார்
    தேசிகரே யோகத் தெளிவு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180611 New Forever – 26×36 cms (10×14”) Arches -cold pressed – lr

    ஆண்டவா, பழுப்புவண்ணம் பூண்டவா, நீள்விசும்பில்
    நீண்டவா, பாரதப் பாண்டவராய் -வேண்டவா?,
    தூண்டவா பக்தியால் ?, தீண்டவா பாரதியாய் ?
    கீண்டவா தீங்கைக் கிழித்து….கிரேசி மோகன்….!

    நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
    போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
    இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
    இடப்பயல் தாளே இருப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180525 Gopala nandan -gov pattabhishekam A4 lr

    கிள்ளை(கிளி) மணிமுடிமேல், பிள்ளை மணிவண்ணன்,
    வெள்ளைப் பசுவேந்தும் வாத்ஸல்யம், -கொள்ளை
    அழகுதான் கேசவ், குழந்தையும், கன்றும்
    பழகச் சுரந்திடும் பால்….கிரேசி மோகன்….!

    Share
  • பழங்குடியினரும் பாறை ஓவியங்களும்

    -ரா. பிரசன்னாதேவி

    முன்னுரை

    பண்டைய தமிழக வரலாறு, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகம், வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை அறிய தொல்வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ளத் தேவையான ஆதாரங்களில் பாறை ஓவியங்கள் முக்கியமானவை. ஓவியம், சிற்பம், இலக்கியம் முதலியவற்றின் செய்திகளும், பயன்பாடுகளும் அறிய பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவை வாழ்வியல் நெறிகளை வழிநடத்திச் செல்லும் சட்டங்களாகவும், சான்றுகளாகவும் உள்ளன. (தமிழ்ப்பொழில் கல்வெட்டுகளில் இலக்கியச் சான்றுகள்.ப.321) கலைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து இன்றுவரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பாறை ஒதுக்குகள் மற்றும் கற்குகைகள் ஆகியவற்றில் கற்செதுக்குகளாகவோ வண்ண எழுத்தோவியங்களாகவோ காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் அந்தந்தக் காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்களின் சமூகப் பொருளாதார மற்றும் கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் பதிவுகளாய் உள்ளன. பழைய கற்காலம், புதிய கற்காலம் அல்லது இரும்புக்காலம், வரலாற்றுக்காலம் என எல்லாக் காலகட்டங்களிலும் நடந்த பலநிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளவை இவை. இவைகளின் ஊடே பழங்குடியினாரின் பாறை ஓவியங்கள் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பாறை ஓவியங்களின் நோக்கங்கள்

    பொதுவாக இந்தப் பாறை ஓவியங்களை அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தகவல் பரிமாற்றம், அலங்காரம் என அவற்றைப் பெயரிட்டு அழைக்கலாம். பொதுவாக ஓவியம் ஒருவனது மனக்கிடக்கையில் இருக்கும் காட்சிகள், அவற்றுடன் இணைந்த உறவுகள் ஆகியன நிலைத்த வடிவமின்றி இலகுவாய் மாற்றியமைக்கும் கட்டமைப்புக்கு உரியனவாய், உகந்த காலம் மற்றும் இடத்திற்கேற்ப வெளிப்படுத்த விழையும் உந்துதலில், கோடுகளாய் உருவெடுத்து, அலங்காரமாய்ப் பரிணமித்து, கனபரிமாணமாய் நீண்டு, வண்ணங்களால் நிறைவுபெற்றுத் தகவல்களைப் பரிமாறும் கால ஓட்டத்தில் உருமாறிப் புதிய பரிணாமங்களோடு தொடர்ந்து பயணிக்கிறது.

    தமிழகப் பாறை ஓவியங்கள்

    தமிழகத்தில் இதுவரை சுமார் 75 இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் பாறை ஒதுக்குகளிலும் பெருங்கற்கால ஈமச் சின்னங்களிலும், சில இடங்களில் குகைகளிலும், வரையப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாறை ஓவியங்கள் தருமபுரி, கிருட்டிணகிரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, தேனி போன்ற மாவட்டங்களில் பரவலாகக் காணப்படினும், இதுவரை வடக்கு மற்றும் வடமேற்குத் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் இவ்வோவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.131) இவை பெரும்பாலும் இடைக்கற்கால, புதிய கற்கால, பெருங்கற்கால, இரும்புக்கால மற்றும் வரலாற்றுக்கால ஓவியங்கள் எனக் கருதப்படுகின்றன. மேலும் பல இடங்களில் தொல்லியல் சின்னங்களுக்கு அருகிலேயே பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில் பெரும்பான்மையானவை இருளர் (நீலகிரி, தருமபுரி மற்றும் வடதமிழகப் பகுதிகளில் வாழ்பவர்கள்), குறும்பர், தோடர், கோத்தர், (நீலகிரி), இரவாளர், மலசர், பளியர், புலையர், முதுவர், மூப்பார் (கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்) போன்ற பழங்குடி மக்கள் வாழும் குறிஞ்சி நிலப்பகுதிகளில் தான் காணப்படுகின்றன. இருப்பினும் கால்நடை மற்றும் சிறு வேளாண்மை செய்யும் சமூகங்கள் வாழும் முல்லை நிலப்பகுதிகளிலும் இது போன்ற பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    ஓவியங்களின் வண்ணங்கள்

    சிறுமலை, மயிலாடும் பாறை, உல்கோம்பை போன்ற இடங்களில் இடைக்கற்கால ஓவியங்கள் உள்ளன. தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகளும் வாழ்விடங்களும் மயிலாடும் பாறை, மூனாண்டிப்பட்டி, கீழ்வாலை, பெருமுக்கல், மல்லப்பாடி, மையம்பள்ளி போன்ற இடங்களில் ஓவியங்களோடு காணப்படுகின்றன. அதுபோலவே சில தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ள குகைத் தலத்தின் விதானத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை அங்குள்ள எழுத்துக்களைவிடக் காலத்தால் முந்தியவையாகும். தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களால் வரையப்பட்டுள்ளன. இருப்பினும் கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ண ஓவியங்கள் சில இடங்களில் கிடைக்கின்றன. சிவப்பு மற்றும் வெள்ளை ஓவியங்கள் சில இடங்களில் சேர்ந்தும், சில இடங்களில் தனியாகவும் உள்ளன.

    பாறை ஓவியங்களின் தன்மைகள்

    இப்பாறைகளில் பெரும்பாலும் ஓவியன் தான்கண்ட உருவங்களை எளிய முறையிலேயே வரைந்துள்ளான். இருப்பினும் வெள்ளாரிக்கோம்பை, ஆலம்பாடி போன்ற இடங்களில் உருவங்கள் நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத நிலையில் வரையப்பட்டள்ளன. இவை அவ்வோவியனது உளக்கிடக்கையில் அமைந்த அச்சம், நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துபவைகளாகக் காணப்படுகின்றன. ஆனால் குறியீடுகளும் அலங்காரக் கூறுகளும் தமிழகப் பாறை ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் காணக் கிடைக்கவில்லை. குறியீடுகள் பெரும்பாலும் தகவல் பரிமாற்றம் செய்யவும் அலங்கார ஓவியங்கள் சடங்குகளின்போது ஒப்பனைக்காகவும் வரையப்பட்டள்ளன. பாறை ஓவியங்கள் யாவும் அழகியல் நோக்கில் சிறப்பானவை அல்ல. இருப்பினும் அவற்றின் நோக்கம், காலம், கருத்து வெளிப்பாடு போன்ற தன்மைகளில் அவை சிறப்பிடம் வகிக்கின்றன.

    பாறை ஓவியங்களின் சிறப்பு

    இந்தப் பாறை ஓவியங்கள் கடும் மழைக்காலங்களில் ஒதுங்கிய பாறையின் விதானங்கள், சுவர்கள், நீர்நிலைகளுக்கு அருகில்உள்ள பாறை ஒதுக்குகள், உயரமான தேன்பாறையின் சுவர்கள், வழிபாடு மற்றும் வழித்தடங்களுக்கு அருகில் உள்ள பாறைமுகடுகள் எனப் பிறர்வந்து போகும் பொதுஇடங்கள் ஆகியவற்றில்தான் அதிகம் வரையப்பட்டுள்ளன. சில சமயங்களில் ஓவியன் மிக உயரமான பாறைகளில் ஏறிக் கடும் சிரத்தையை மேற்கொண்டு, தன் சாகசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளான். இந்த ஓவியங்கள் நேர்த்தியான தோற்றம் உடையவைகளாகவும் குறியீடுகளாகவும் அடையாளப்படுத்த முடியாத உருவங்களாகவும் அமைந்துள்ளன. இப்பாறை ஓவியங்கள் உள்ள இடங்களுக்குப் பிற்காலத்தில் வந்த இனக்குழுக்கள் தங்க நேர்ந்ததால் அவர்களது ஓவியங்களும் ஏற்கனவே வரைந்த ஓவியங்களுக்கு மேல் வரையப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ள இடங்கள் சில இன்று வரை உள்ளுர் மக்களால் வழிபாட்டுத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

    பழங்குடிகளும் பாறை ஓவியங்களும்

    பாறை ஓவியங்கள் தொல்மாந்தரின் சமகால வாழ்வியல் சூழலை மட்டும் அல்லாமல் நம்பிக்கை மற்றும் தத்துவார்த்த வாழ்வியலை குறியீடுகளாகவும் நேர்த்தியான உருவங்களாகவும் அலங்காரங்களாகவும் பதிவு செய்துள்ளன. ஒலிகளற்ற இம்மொழி நெடிய காலங்கடந்தும் இன்றுவரை தகவல்களைப் பரிமாற்றிக் கொண்டிருக்கின்றன. எழுத்து உருவாவதற்கு முன்னரே தொல்மாந்தரின் கற்பனை மற்றும் கலை உருவாக்கங்கள் பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன. பாறை ஓவியங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் எல்லாப் பகுதிகளிலும், இதுவரை சுமார் 50 மில்லியன் ஓவியங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் இதுவரை கண்டறியப்பட்ட ஓவியங்களில் மிகத் தொன்மையானவை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளன. இவை சுமார் 30,000 – 40,000 ஆண்டுகளுக்கு முந்தையன என்று கார்பன் 14 போன்ற அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிம்பெட்காவில் கிடைத்த தீக்கோழியின் முட்டையின்மீது வரையப்பட்ட ஓவியங்கள், சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கண்டறிந்துள்ளனர். (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.130) தொடர்ந்து இந்தியாவில் காஷ்மீர் முதல் தமிழ்நாடுவரை எல்லா மாநிலங்களிலும் பாறை ஓவியங்கள் பரவலாகக் காணப்படினும் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் அவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

    உலகில் கிடைக்கப்பெற்ற பாறை ஓவியங்களில் 80% சதவீதம் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. சமூக மற்றும் பொருளாதார நோக்கில் இந்த ஓவியங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

    1. தொன்மையான வேட்டைச் சமூகம்
    2. வளர்ந்த வேட்டைச் சமூகம்
    3. கால்நடைச் சமூகம்
    4. கலப்புப் பொருளாதாரச் சமூகம் 

    தொன்மையான வேட்டைச் சமூகம்

    இந்த வேட்டைச் சமூகத்தில் வில், அம்பு குறித்த அறிவு இல்லை எனலாம். இவர்களது ஓவியங்களில் உருவங்களும் குறியீடுகளும் பெரும்பாலும் சேர்ந்தே காணப்படுகின்றன.

    வளர்ந்த வேட்டைச் சமூகம்

    இச்சமூகத்தில் வில், அம்பின் பயன்பாடு உள்ளது. ஓவியங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் தன்மையில் உள்ளன.

    கால்நடைச் சமூகம்

    கால்நடைகளைப் பிரதானமாய்க் கொண்டுள்ள சமூகத்தின் ஓவியங்களில் பெரும்பாலானவை கால்நடைகளைப் பழக்கப்படுத்துதல் மற்றும் அதன் தொடர்பானவை.

    கலப்புப் பொருளாதாரச் சமூகம்

    வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்ட இச்சமூகத்தில் பலதரப்பட்ட பொருளாதாரச் சூழலில் இருந்து கலைப்படைப்புகள் உருவாகியுள்ளன. மேலும் இறைநம்பிக்கை, இதன் தொடர்பான கதைகள், குறியீடுகள், திட்டமிட்ட உருவத் தொகுப்புகள் ஆகியன இவர்களது ஓவியங்களில் அதிகம் காணப்படுகின்றன.

    காரிக்கையூர் ஓவியங்கள்

    தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை ஓவியங்களில் மிகப்பெரியன, அதிக எண்ணிக்கையில உருவங்கள் அமைந்தன. நீலகிரி மாவட்ட கோத்தகிரி தாலுகாவில், இருளர் பழங்குடிகள் வாழும் காரிக்கையூர் ஓவியங்கள் ஆகும். காலனிய சுலிவன் என்பவனின் அசுர பாதம் பதிந்த முதல் நீலகிரி மலைக்கிராமம் இது. இங்குள்ள பொறிவரை என்னும் பாறை ஒதுக்கு பவானி ஆறு பாயும் நீண்ட பள்ளத்தாக்கின் உயரமான விளிம்பில் கிழக்கு முகத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 200 அடி நீளத்திற்கு, 20 அடி உயரத்தில், 500 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் சிவப்பு மற்றும் வெள்ளைவண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இங்கு விலங்குகள், மனிதர்கள், விலங்குகளுடன் மனிதர்கள், குறியீடுகள், அடையாளங் காணமுடியாத உருவங்கள் எனப் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. உருவங்கள் தனியாகவும் தொகுப்பாகவும் உள்ளன. மேலும் இங்குள்ள ஓவியங்கள் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டவை. சில இடங்களில் ஏற்கனவே வரையப்பட்டுள்ள ஓவியங்களின் மேல் வேறு ஓவியங்களைப் பின்னால் வந்த ஓவியர்கள் வரைந்துள்ளனர். இங்குள்ள ஓவியங்களில் வேட்டையாடுதல், அதன் தொடர்பான சடங்குகள், விலங்குகளைப் பழக்கப்படுத்துதல், நடனம், இசை மற்றும் பிற வன வாழ்வியற் சூழல் ஆகியன சிறப்பிடம் பெறுகின்றன. மனிதன் வேட்டையாடும் விலங்குகள், மனிதனை வேட்டையாடும் விலங்குகளின் இயல்பான வாழ்க்கையையும் அவற்றின் விளையாட்டுகளையும் அதிகம் கொண்டுள்ளன. இருப்பினும் பறவைகள், தாவரங்கள் மற்றும் ஊர்வன ஆகியன குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன. மனிதர்களைவிட, விலங்குகளே பிரதானமாக வரையப்பட்டுள்ளன. எருமை, பன்றி, மான், சருகுமான், உடும்பு மற்றும் யானை வேட்டை பற்றிய காட்சிகள் இங்குக் காட்டப்பட்டுள்ளன. அதுபோலவே, வேட்டைக்குப் பயன்படும் நாய்களும் வரையப்பட்டுள்ளன.

    மனித உறவுகளைப் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு காலச்சூழல்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஆயுதங்களும் அவற்றைப் பயன்படுத்தும் விதமும் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஆரம்பகால ஓவியங்களில் மனிதர்கள் வேட்டையின்போது, கையில் தடிமனான மரத்தடிகளுடன் உள்ளனர். பின்னர் வில், அம்பு, வில் அம்போடு வாள், வாளோடு கேடயம் என வெவ்வேறு வடிவங்களில் ஆயுதங்கள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வரையப்பட்டுள்ள போர்க்காட்சிகள் மிகவும் கவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மலைகளில் நடைபெற்ற மற்றும் தரைப்பகுதிகளில் நடந்த போர்க்காட்சிகளை வேறுபடுத்திக் காட்டும் விதமாக உருவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் வாழும் கோத்தர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து இரும்பின் பயன்பாட்டை அறிந்து, அதைத் தங்கள் தேவைக்குத் தகுந்தாற்போல் உருவாக்கியும்; பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஆயுதங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து, பிற பழங்குடியினரான இருளர், குறும்பர், தோடர் போன்றவர்களிடம் விற்றுப் பண்டமாற்று வணிகம் செய்து வந்துள்ளனர். அக்காலத்தில் இவர்கள் உருவாக்கிய இரும்பு ஆயுதங்கள் இன்று இங்குள்ள ஓவியங்களின் வழியாக மட்டுமே நமக்குக் காணக்கிடைக்கின்றன.

    தோடர்கள் காலங்காலமாக எருமை மாடுகளையே தங்கள் வாழ்வாதாரமாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர். தொல்பழங்காலத்தில் பெரும்பாலான சமூகத்தவர் வேட்டையைப் பிரதானமாகக் கொண்டிருந்த போது, தோடர் போன்ற பழங்குடியினர் கால்நடைகளைப் பழக்கப்படுத்தி அவற்றின் பயன்பாடுகளை அறிந்து பராமரித்து வந்தனர். இக்காட்சிகள் யாவும் காரிக்கையூர் பாறை ஓவியங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்கள் செய்நேர்த்தியோடும் அழகியல் தன்மையோடும் சிறப்பாகக் காணப்படுபவை. கூட்டமாய் மாடுகள் நடந்து செல்வது, நுனி மரக்கிளையில் குரங்குகள் ஏறுவது, கூட்டங் கூட்டமாய் மான்கள் மேய்வது, நீண்ட உடும்புகள் ஊர்வது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் வரவேற்பது, பன்றி வேட்டை, நடனம், விலங்குகள் தங்கள் குட்டிகளுக்குப் பால்கொடுப்பது, வேட்டை நாய்களுடன் உறங்கும் மனிதன், குழந்தையைப் பலி கொடுத்தல், போர்க்காட்சிகள் போன்றவைகளாகும். 

    எழுத்துப்பாறை ஓவியங்கள்

    இயற்கையின் மாற்றங்களைப் புரிந்து வாழ்வியலைத் தன் வசப்படுத்திய மனிதன் சில சமயங்களில் இயற்கையின் சீற்றங்களையும் மாறுபாடுகளையும் பற்றிய புரிதலின்றிப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றான். அச்சத்திலிருந்து மீளத் தெரியாது. ஒன்றின் மேல் நம்பிக்கை கொண்டு, சடங்குகளும் நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் மாறுபடும். அது போல, நீலகிரியில் வாழும் பழங்குடிகள் மத்தியில் குறும்பர் இன மக்களின் வாழ்வியலும் நம்பிக்கைகளும் பிற மலைவாழ் மக்களிலிருந்து மாறுபடுகிறது. இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதிகளில் பாறைச் சரிவுகளிலும், இயற்கையாய் அமைந்த குகைகளிலும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இயற்கையையும் பிற எதிரிகளையும் எதிர்கொள்ளச் சடங்குகளின் மீது அபார நம்பிக்கை கொண்டு, மாந்திரிக வழிபாட்டை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, இன்றுவரை, தங்கள் வழிபாட்டுத் தலமான “எழுத்துப்பாறையில் ஆண்டுக்கு ஒருமுறை சென்று வழிபாடு செய்கின்றனர். இவ்வழிபாட்டின் போது வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் நேர்த்தியான குறியீட்டு ஓவியங்களை வரைந்துள்ளனர். இங்குள்ள பழமையான ஓவியங்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த ஓவியங்கள் இயற்கைச் சீற்றம் மற்றும் பிற இனக்குழுக்களின் தொல்லைகளில் இருந்து தங்களைக் காப்பாற்றும் என்பது இவர்களின் நம்பிக்கை. இவ்வகை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் வெள்ளாரிக்கோம்பை, குறும்பவரை மற்றும் சேலகொரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

    ஜவ்வாது மலைப் பாறை ஓவியங்கள்

    ஜவ்வாது மலை மலையாளியினர் திருமணச் சடங்கின்போது, மணமகன் வீட்டில், திருமணத்திற்கு முதல் நாள், வாசலுக்கு அருகில் ஒரு சோடிக் கால் பாதங்களை வரைகின்றனர். அதுபோல் திருமணம் முடிந்த பின்னர் மற்றுமொரு சோடிக் கால் பாதங்கள் அருகிலேயே வரையப்படும். அது போல் கார்த்திகை தீபம், பொங்கல் மற்றும் துர்க்கை அம்மன் திருவிழாக்களின் போது வீடுகளைச் சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்துக் கோலம் போட்டு, அலங்கரிக்கின்றனர். குறிப்பிட்ட செம்மண்ணிலிருந்து சிவப்பு வண்ணமும் அவரை இலையை அரைத்துப் பச்சை வண்ணமும் தயாரித்துக் கம்பந்தாள் கொண்டு ஓவியங்கள் வரையப்படுகின்றன. இங்கு ஓவியங்கள் வரையும் மரபு பெண்களிடம் மட்டுமே காணப்படுகின்றது. இந்த ஓவியங்கள் சமயத்திருவிழாக்களின் போது மட்டுமே வரையப்படுகின்றன. இருப்பினும் தங்களின் முன்னோர்களை வழிபடும் விதமாக அவர்களையும் இத்திருவிழாக்களின் போது குறியீடுகளாக வரைந்து வழிபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்துச் சுவர் ஓவியங்கள்

    மதுரை மாவட்டத்தில் வாழும் பழங்குடியினரான பிறன்மலைக் கள்ளர் சமூகத்தில் கல்யாணத்தின்போது, மணமகன் வீட்டின் முகப்புச் சுவர்கள் கல்யாணத்திற்கு முதல் நாள் பெண்களால் அலங்கரிக்கப்படுகின்றன. இவை “பச்சைக் கோலம்” என்று அழைக்கப்படுகின்றன. (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.137) இந்த ஓவியங்கள் பச்சை இலை மற்றும் தழைகள்கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்ட சுவர்களிலேயே வரையப்பட்டு வந்தன. தற்போது சிமெண்ட் மற்றும் கான்கிரிட் கலாசாரம் வந்தபின் இந்த ஓவியமரபு மறைந்துகொண்டு வருகின்றது. இருப்பினும் அளவுகள் குறைந்து குறியீடுகளாக இன்றுவரை வரையப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர் பாறை ஓவியங்கள்

    தஞ்சையிலுள்ள பிரகதீசுவர் கோயிலில் பிரதட்சண வீதிச் சுவர்களிலும், கர்ப்பக்கிருகத்தைச் சுற்றியுள்ள இருண்ட பாதையிலும் இரண்டு அடுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றன. மேலாகத் தெரியும் ஓவியங்கள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவை முக்கியமானவையல்ல. அவற்றினடியில் உள்ளவை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இராசராசசோழன் காலத்தில் தீட்டப்பெற்றவை. மேலேயுள்ளவை சில விடங்களில் மட்டுமே உரிந்து வந்திருக்கின்றன. இதில் சிவன் பிராமணக் கிழவன் போல் சுந்தரருடைய திருமணத்தன்று வந்து அவரை அடிமையாக உரிமை கொண்டாடுதல் வரையப்பட்டுள்ளன. (கலைக் களஞ்சியம் தொகுதி-2 ப.738)

    முடிவுரை

    பொதுவாக மலைவாழ் பழங்குடி மக்கள் தங்களது பூர்வீகக் கலை மற்றும் கலாசாரங்களோடு இணைந்து வாழ்ந்தாலும் சமவெளியில் வாழும் பிற மக்களுடைய கலாசாரம் இவர்களது வாழ்வியலோடு இரண்டறக் கலந்துள்ளது. இவர்களுக்குள் பண்டமாற்று வணிகம் காலங்காலமாக இருந்து வருகின்றது. இடையர்கள் போன்ற கால்நடை வளர்ப்புச் சமூகங்கள் மலைவாழ் பழங்குடிகளுக்கும் சமவெளியில் வாழும் மக்களுக்கும் இடையே நட்புப் பாலமாய் உள்ளனர். இவர்கள் வழியாகச் சமவெளியில் வாழும் மக்களுடைய நம்பிக்கை, சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் பிற கலாசாரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து இன்றுவரை இருந்து வருகின்றன. அதே சமயம் பழங்குடி மக்களது பூர்வீகக் கலாசாரமானது ஊடகங்கள் மற்றும் பிற மக்களின் தொடர்பால் அழிந்து வருகின்றது. குறிப்பாக இவர்களது நடனம், இசை, பாடல்கள், செவிவழி மரபுகள் ஆகியன பெரும்பாலான இடங்களில் வேகமாக மறைந்து வருகின்றன. நவீன தொழினுட்பத்தின் உதவியோடு இம்மரபுகளை ஆவணப்படுத்துதல் மிக அவசியமானதாகும்.

    *****

    ஆய்விற்குரிய நூல்கள்

    1. இந்தியப் பழங்குடிப்பண்பாடும் தமிழ்ப் பண்பாடும், முனைவர் அ. மரியசூசை, தூய நெஞ்சக் கல்லூரி திருப்பத்தூர்.
    2. தமிழ்ப்பொழில், தமிழாராய்ச்சித் திங்களிதழ், ஆவணி மலர்-7, ஆகஸ்ட் 2017.
    3. கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள், தி.வை.சதாசிவபண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம் சென்னை-08.
    4. இலக்கியமும் கல்வெட்டுக்களும், தி.வை.சதாசிவபண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம் சென்னை-08.
    5. கலைக்களஞ்சியம், தொகுதி இரண்டு, தமிழ் வளர்ச்சிக் கழகம்,பதிப்பு-1955 சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழியல் துறை,
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
    அண்ணாமலை நகர்,
    சிதம்பரம்.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180613 DWA icam l

    பாதத்தில் மாருதி, பதுமநாபர் பார்த்தனுக்கு
    கீதை மொழிந்தபின் காட்டுகிறார் -பாதாதி
    கேசத்தை விஸ்வரூபக் காட்சி கமல்சார்டூ(பார்ட்-2)
    கேசவ்தன் சித்திரத்தில் காண்’’…..கிரேசி மோகன்….!

    Share
  • ஆன்மாவின் ஓசை

     

     

    வே.சுமதி

     

    அர்த்தமற்ற நிலையில்

    அறுந்து விழுகின்றன

    சபிக்கப்பட்ட வார்த்தைகள்….

    மந்திர நாடகங்கள்

    தினந்தோறும் அரங்கேற்றம்

    செய்யப்படுகின்றது

    நகர வீதிகளில்….

    ஆத்திச்சூடியின்

    மூச்சுக்காற்றில்

    கொஞ்சமாய் கொதித்துக்கொண்டிருக்கிறன

    வரலாற்றின் எஞ்சங்கள்…

    சர்வ காலமும்

    ஆகாயத்தின்

    அந்தப்புரத்திலிருந்து

    ஏதோ ஒன்று

    பந்தெனத் துள்ளிக்குதிக்கிறது…

    வானத்தில் கொஞ்சும்

    விண்மீன்களை

    ரசித்தபடி

    லயித்திருக்கிறது

    யாருமற்ற இந்த இரவு….

    கணத்த இதயம்

    இளஞ்சூட்டில்

    மிதமான தென்றல் காற்றோடு

    காத்துக்கொண்டேயிருக்கிறது..

    நிலாவில்

    வடை சூடும் பாட்டியோடு

    விளையாட…

    Share
  • எங்கள் பயணம்

    சு.திரிவேணி

    உலக சகோதரத்துவம்
    நோக்கிய பயணத்தில்
    சக மனிதனை நேசிக்க
    இயலாதவர்கள் நாங்கள்
    வசதிகளுக்காக வாழும் உரிமை
    பறிப்பது எம்மியல்பு
    நித்தம் செத்துப் பிழைக்கும்
    நித்திய நரகம் கடந்தால்
    காத்திருக்கிறதாம் சொர்க்கம்!
    அவ்வின்ப வாழ்வு குறித்தான
    கற்பனையிலேயே முடிகிறது
    எங்கள் வாழ்வு
    கண்முன்னே பல கொடுமைகள்
    கடந்து வருகிறோம்
    சகித்துக் கொள்கிறோம்
    பெற்ற தாயை
    பிறந்த பூமியை
    ரத்த உறவுகளை
    பழைய நினைவுகளை
    விடைபெற்றுச் செல்கிறோம்-
    ஈரமில்லா இதயங்களை நோக்கி!
    வழி விடுங்கள்
    சடலங்களைக் கடந்து தான்
    எங்கள் சொர்க்க வாழ்வை
    எழுத வேண்டும்!

    Share
  • சுற்றுச் சூழல் சுத்தமாவது என்று!

     

     

    அ.ஸ்ரீதேவி

     

     

     

    நீரோடும் ஆறுதான்  அன்று

    சாயநீரோடும் ஆறானதே இன்று

    சகலமாய் இருத்த நீரோடை அன்று

    சாக்கடை நீர் செல்லும் நீரோடை என்று?

     

    ஏக்கரில் தோப்புகள் அன்று

    எல்லாம் குப்பைகளே இன்று

    வளர்ந்து செழித்த மரங்கள் அன்று

    வானுயிர் கட்டிடமே இன்று

     

    இயற்கை அன்னை எழில் முகம் காட்டுவது என்று?

     

    தூயக் காற்றாம் அன்று

    நச்சுப் புகைக்காற்றாம் இன்று

    மரம் நச்சைப் புகை சுவாசித்தது அன்று

    நாம் நச்சைப் புகை சுவாசிக்கிறோம் இன்று

     

    தென்றல் வீசுவது என்று?

     

     

    குயிலின் இன்னிசை அன்று

    குறையாத இறைச்சல்தான் இன்று

    தேனிசை  தான் என்று?

    நன்செய் புன்செய் விளைந்த நிலம் அன்று

    நடுகற்கள் முளைத்தபூமியோ இன்று

    நாம் திருந்துவது என்று?

     

    அமிர்த மழைநீராம் அன்று

    அமில மழையாம் இன்று

    அண்டம் மாறுவது என்று?

     

    மகிழ்ச்சியாய் குழந்தைகள் ஓடின அன்று

    மருத்துவமனையே வீடு இன்று

    மதியைத் தேடுவது என்றோ ?

    சுற்றுச்சூழல் சுத்தமாகுமே அன்று

    சுற்றுச் சூழல் காப்போம்

     

    புவியைமீட்போம்…….!

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 7

    பாலன் நாச்சிமுத்து

     

    பண்டைய தக்காண அரசுகள்

                 (சாதவாகனர்களும் காரவேலனும்)

    சாதவாகனர்:

            அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவாகனர்கள்(SATAVAHANA) தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள் தக்காணத்தை ஆண்டனர். சாதவாகனர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் அல்லது சாதவ கன்னர்(சாதவ என்பது சதம், அதாவது நூறு ஆகும்) என்பர். இவர்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் பிராகிருதமும் இருந்தன(1).        சாதவாகனர் சங்ககாலத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தமிழகத்தோடு போர் செய்ததாகவோ, வெற்றி பெற்று தமிழகப் பகுதிகளைப் பிடித்துக் கொண்டதாகவோ தகவல் இல்லை. அவர்கள் தமிழ் அரசுகளின் கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த தக்காணப் பகுதிகளைத் தாக்கி வென்றிருக்கலாம். ஆனால்  உடனடியாகத் தமிழ் அரசுகளால் அவை திரும்பக் கைபற்றப்பட்டது. கிருட்டிணா நதிக்குக் கீழ் அவர்கள் வரவில்லை. சங்ககாலம் வரை தமிழ் அரசுகள் மிக வலிமையோடு இருந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைக்கால வாக்கில் இந்நிலை மாறியிருக்கலாம். சாகர்கள், மேற்கு சத்ரப் அரசுகள், மகத அரசு போன்ற பிற வடநாட்டு அரசுகளோடு தான் சாதவாகனர்கள் போர் புரிந்ததாக அவர்களது கல்வெட்டுகளும், அவர்களைப்பற்றிய இன்ன பிற குறிப்புகளும் கூறுகின்றன.

         டாக்டர் கே. கே. பிள்ளை,  ஆர். எசு. சர்மா ஆகிய இருவரும் தங்களது நூல்களில் சிமுகா(கி.மு. 230-207), சதகர்னி(கி.மு. 180-124),  கௌதமிபுத்ர சதகர்னி(கி.பி 106-130), வசிட்திபுத்ர புலுமாயி(கி.பி 130-160), யாஜன சதகர்னி(கி.பி. 170-199)  ஆகிய ஐந்து சாதவாகன அரசர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்(2). கி.பி.2ஆம் நூற்றாண்டில் ஆண்ட மூன்று முக்கிய அரசர்கள் குறித்துத்தான் ஓரளவு தரவுகள் உள்ளன. பிற அரசர்களின் ஆண்டுகள் புராணங்கள் தரும் ஆண்டுகளை வைத்தே தரப்பட்டுள்ளன. கி.மு. 180-124 வாக்கில் ஆண்ட சதகர்னி குறித்து கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் குறித்துள்ளான்.சாதவாகனர்கள் தங்கள் ஆட்சி மொழியாகத் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் கொண்டிருந்தனர். தமிழர்களின் கடற்படை வலிமையை, அவர்களது ஐக்கிய கூட்டணியின் வலிமையை, பொருள் உற்பத்தி, தொழிநுட்ப மேன்மை, வணிகம் ஆகியவற்றில் தமிழர்களின் உயர்நிலையை சாதவாகனர்கள் அறிந்ததன் காரணமாக, தமிழ் அரசுகளோடு அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை பகைமை பாராட்டாமல் இருந்தனர் எனலாம். சாதவாகனர்கள் அரசு அழிந்த உடன் தமிழகமும் களப்பிரர்களால் கைப்பற்றப்பட்டு விட்டது.

    மொழிபெயர் தேயம்:

        தமிழ்மொழி இருக்கிற நிலையில் இருந்து பெயர்ந்து கொடுந்தமிழாக மாறியிருந்த நிலையை மொழி பெயர்ந்தநிலை எனவும் அவ்வாறு மொழி பெயர்ந்த நிலையில் உள்ள கொடுந்தமிழைப் பேசும் பகுதியை மொழிபெயர் தேயம் எனவும்  பண்டைய தமிழர்கள் குறிப்பிட்டனர். கி.மு.4-ஆம், 3-ஆம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. வடக்கே பிராகிருதமும், தெற்கே தமிழும் செல்வாக்கு பெற்றிருந்தன. அதனால் தமிழர்கள் இடைப்பட்ட பகுதியை, தமிழ்மொழி தேய்ந்து, கொடுந்தமிழே பேசப்பட்ட பகுதியை, மொழிபெயர் தேயம் என்றனர். இந்த மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை மாமூலனாரின் அகம் 31 ஆவது பாடல் உறுதிப் படுத்துகிறது. மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்றால் மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு ஒன்று சேர்ந்து செயல்பட அவர்களிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

    கலிங்க மன்னன் காரவேலன்:

               கலிங்க மன்னர் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு தமிழர்களின் ஐக்கிய கூட்டணி குறித்துப் பேசுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165 ஆகும். அதன் 11வது மற்றும் 13வது வரிகள் தமிழரசுகள் குறித்துப் பேசுகிறன.

    Hathigumpha inscription: Sadananda Agrawal has prepared the text in Sanskrit, which has been published in his book Śri Khāravela, 2000.

    Line 10-11 – And in the eleventh year [His majesty] secured jewels and precious stones from the retreating [enemies]. [His Majesty] caused to be cultivated Pithunda, founded by former kings of Kalinga, with ploughs drawn by asses. Also [His Majesty] shattered the territorial confederacy of the Tamil states having populous villages, that was existing since thirteen hundred years.

     Line 13 – [His Majesty] caused to erect towers with strong and beautiful gateways at the cost of two thousand coins. [His Majesty] obtained horses, elephants and jewels losing strange and wonderful elephants and ships. The King of Pandya caused to be brought here Kalinga various pearls, jewels and precious stones hundred thousand in number(3).

    11வது வரி :     11ஆம் ஆட்சியாண்டில், 1300 ஆண்டுகளாக இருந்து வந்த, மக்கள்தொகை நிறைந்த ஊர்களையும், நகரங்களையும் கொண்ட, தமிழரசுகளின் கூட்டணியை உடைத்து முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட, “பித்துண்டா” என்ற நகரத்தைப் பிடித்து, அதனை கழுதை கொண்டு உழுது, பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக் கொண்டேன்.”

    13வது வரி :     “12ம் ஆட்சியாண்டில் பாண்டிய அரசன் நூறு ஆயிரம் அளவிலான, விலை மதிப்பற்ற கற்களையும், முத்துக்களையும், ஆபரணங்களையும் கலிங்கத்தின் தலை நகருக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன்” என்கிறான் கலிங்க மன்னன் காரவேலன்

    பித்துண்டா நகரம்:

          “பித்துண்டா” என்கிற நகரம் முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம் என்பதைத் தெளிவாகக் காரவேலன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலிங்கத்தில் இருந்த முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்நகரம் (பித்துண்டா நகரம்)  தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் நகரமாக, அவர்களின் காவல் அரணாக இருந்து வந்துள்ளது என்கிற செய்தி, தமிழகத்தின் வட எல்லையில் இருந்து கலிங்கத்தின் தென் எல்லை வரையான கடலை ஒட்டிய இன்றைய ஆந்திரப் பகுதி முழுவதும் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்துள்ளது என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கிறது எனலாம். அதன் மூலம் மொழிபெயர் தேயம் என்பது தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் தான் இருந்து வந்தது என்கிற மாமூலனார் அவர்களின் செய்தி, இக்கல்வெட்டின் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.

    தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி :

        மேலும் இந்நகரம் மீண்டும் தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகளின்கீழ் வந்து விடக் கூடாது என்பதற்காக, அது தரை மட்டமாக்கப்பட்டு கழுதைகொண்டு உழப்பட்டுள்ளது. டி.என். சன்பக் (D.N.Shanbhag) அவர்கள், தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகள் பலமுறை கலிங்க அரசுக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், காரவேலன் வடநாட்டின் மீது படை எடுத்துச் சென்ற போது, அவை கலிங்கத்தை தங்கள் காவல் அரணான பித்துண்டா நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு தாக்கியதாகவும், அதற்குப் பதிலடி தரும் விதமாகத்தான் காரவேலன் பித்துண்டா நகரத்தைத் தாக்கி, தமிழரசுகளின் நீண்ட கால ஐக்கியத்தை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாகவும், பித்துண்டா என்பது ஒரு துறைமுக நகரம் எனவும் குறிப்பிடுகிறார்(4).

         சன்பக் அவர்கள் தரும் செய்திகள், பித்துண்டா என்பது கலிங்கத்தின் தென் கிழக்கு எல்லையில் கடலோரத்தில் இருந்த தமிழக அரசுகளின் துறைமுகக் காவல் அரண் என்பதை உறுதி செய்கின்றன. தமிழக அரசுகள் மகதத்துக்கு அருகிலுள்ள வலிமையான, காரவேலனின் கலிங்க அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அளவு வலிமை மிக்கவனாக இருந்தன என்ற அவரது செய்தி, தமிழ் அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்தது என்பதை, மொழிபெயர் தேயப் பகுதிகள் இக்கூட்டணி அரசுகளின் கீழ் இருந்தன என்பதை சந்தேகமின்றி ஆதாரத்தோடு உறுதிப் படுத்துகின்றன.

         அடுத்த வருடம் (13வது வரியில்), காரவேலனின் வலிமையை உணர்ந்த பாண்டிய அரசன் தொடர்ந்து வட நாடுகளோடு வணிகம் செய்ய, காரவேலனின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்து , அவனோடு சமாதானம் செய்து கொள்ளும் பொருட்டு, பெரும் அளவிலான பரிசுப் பொருட்களை அனுப்பி, காரவேலனோடு நட்புக் கொண்டுள்ளான். அதைத்தான் காரவேலன் பாண்டியனே எனக்கு நிறைய பரிசுப்பொருட்களை அனுப்புமாறு நான் செய்வித்தேன் என்கிறான். மாமூலனாரின் பாடல்களும்  காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதையும், மொழிபெயர்தேயப் பகுதிகளான ஆந்திரம், கர்நாடகம் முதலியன தமிழக அரசுகளின் கூட்டணியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதையும் உறுதிபடுத்துகின்றன.  இந்த பித்துண்டா நகரம் குறித்து, ஒரிசாவின் பொருளாத வரலாறு என்கிற நூலும், விக்கிபீடியாவும் தரும் தகவல்களைக் காண்போம்.

         பண்டைய கலிங்கத்தின் மிக முக்கிய நகரம் பித்துண்டா((PITHUNDA) ஆகும். மகாவீரர் (கி.மு. 599-527) காலத்தில், இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் மிக முக்கிய நகர் மையமாக இருந்துள்ளது என உத்தரதயான சூத்திரம் (UTTARADHAYANA  SUTRA) என்கிற சமண நூல் குறிப்பிடுகிறது. இந்த பித்துண்டா துறைமுக நகரம் குறித்து டாலமி(கி.பி. 90-168) தனது புவியியல் நூலில்(GEOGRAPHY OF PTOLEMY) குறிப்பிட்டுள்ளார். இந்தப் பித்துண்டா துறைமுகம், பண்டைய கலிங்கத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுகம் எனவும் இரண்டாவது பெரிய துறைமுகம் எனவும் விக்கிபீடியா குறிப்பிட்டுள்ளது. இந்த நகரத்தைக் காரவேலன் தமிழ் அரசுகளின் கூட்டணியிடமிருந்து கைப்பற்றிக் கழுதைகளைக் கொண்டு உழுதான் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது. காரவேலனின் ஆண்டு கி.மு. 209-170 எனச் சொல்லப்பட்டுள்ளது(5).

         நிகார் இரஞ்சன் பட்னாய்க் அவர்களும், விக்கிபீடியாவும் தரும் செய்திகள் இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் பண்டைய இரண்டாவது பெரிய துறைமுக நகரம் என்பதையும், கலிங்கத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த துறைமுக நகரம் என்பதையும் தமிழரசுகளின் கூட்டணியிடமிருந்து கலிங்க மன்னன் காரவேலனால் இந்நகரம் கைப்பற்றப்பட்டு கழுதை கொண்டு உழப்பட்டது என்பதையும் உறுதி செய்கின்றன. டாலமியின் புவியியல் நூலும் இந்நகரம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது என்கிற செய்தி இந்நகரம் முன்பிருந்தே ஒரு புகழ் பெற்ற துறைமுக நகரமாக இருந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.

    பார்வை:

    1.இந்து ஆங்கில நாளிதழ், ஐராவதம் மகாதேவன், “An epigraphic perspective on the antiquity of Tamil”, நாள்: 24/6/2010.

    2.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா-தமிழி மாஜினி,  ஜூன் 2004, பக: 260-264.  2.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே. கே. பிள்ளை, 8ஆம் பதிப்பு, 2011    பக்: 34-37) 3. விக்கிபீடியா(SATAVAHANA DYNASTY).

    3.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

    4.சன்பக் (D.N. Shanbhag), www.freeindia.Org/biographies/kharavela/index.htm.

    5.ஒரிசாவின் பொருளாதார வரலாறு-நிகார் இரஞ்சன் பட்னாய்க், பக்: 22, 24, 131, 137. (ECONOMIC  HISTORY OF ORISSA BY  NIHAR RANJAN  PATNAIK, PAGES – 22, 24, 131,137) & பித்துண்டா(PITHUNDA)-விக்கிபீடியா

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    திரிலோக சஞ்சாரி நாரதன் உ(க)லகம் கண்ணனை கண்டதும் நன்மையில் முடிந்தது…..!

    ”நாத தனிமனுஷன் நாரதன் தம்புரா
    ஓதுமே நாரண ஓங்காரம்(ஓம்நமோநாராயணா) -யாதவரைக்
    கண்டதில் நாரதன் , கார்வண்ணன் நன்மையாய்க்
    கொண்டலாய்ப் பாடினான் கண்டு’’….கிரேசி மோகன்….!
    (அல்லது)
    விண்டனன் ஓங்கார விஷ்ணு…..!

    Share