அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (24.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி – 259

  1. ஆட்டுக் குட்டிகளாய்…

    ஆட்டை வளர்ப்பான் அறுத்திடவே
    அதிக விலைக்கு விற்றிடவே,
    கேட்டைத் தந்திடும் இச்செயலைக்
    கேட்க ஆளிலை அவனியிலே,
    ஆட்டுக் குட்டிகள் அறியாமல்
    அவனை நம்பி யிருக்கின்றன,
    காட்டும் இலைகளில் மயங்கிடுதல்
    காணலா மின்று மனிதரிலே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. கறுப்பு நிற ஆட்டின் முறையீடு :
    இள ஆடும் பயம் அறியாது
    நல விரும்பியாக நீயிரு
    குலம் செழிக்க வாழ்த்துவேன்
    பலம் பெற்ற காளிதாசன் பாட்டால்

    ஆட்டை மேய்த்தனின் பாட்டை
    நாட்டை ஆண்டவனின் கோட்டை
    கோட்டை விடாது கொண்டதால்
    பாட்டுடை கவியோ நாட்டுடமை

    ஆடென எள்ளி நகை ஆடாதே -நாங்கள்
    நாடாண்ட பரம்பரை சிந்தி

    வணிகத்தில் புகுந்தது
    ஆங்கிலேய கறுப்பு ஆடு
    கணித சாஸ்திர கலாசாரம்
    கண்டதோ கறுப்பு ஏடு

    மனிதநேய பாரத
    பலமே ஆனது கேடு

    தனித்தனி பிரித்தாளும் சூழ்ச்சி
    பாரதத்தில் வெள்ளையன் ஆட்சி

    கோட்டையை கோட்டைவிட்ட
    ஒற்றுமை யின்மைக்கு
    வைத்துக் கொண்டதோ
    கறுப்பு ஆடென
    என் இனப் பெயர்
    தீராத பழியப்பா

    இனத்தை அழிப்பது பாவம்
    இனத்தை பழிப்பதோ மகாபாவம்

    வாயில்லா ஜீவன் என்பதால்
    வழக்காட இயலவில்லை

    உலக மனித உரிமை
    கழகம் இருந்தும்
    கலகம் செய்யும்
    இனப் படுகொலையை
    தடுக்க முடியலையே

    களங்கம் சுமத்தும்
    கலை எங்கு கற்றீர்

    முள் குத்திற்று
    கள்ள ரயில்
    கல் தடுக்கிற்று
    கறுப்பு பணம்
    கறுப்பு ஆடு

    மானிடா என்று நீ
    உன்னை உன்னுள்
    தேட முயலுகிறாயோ
    அன்று தான்
    வீண்பழி சுமத்த மாட்டாய்

    தன் பழி தாங்கிட முடியும்
    பலிகடா வாகிய என்னால்
    என் இனப்பழி முடியலை
    அதனாலே இந்த முறையீடு

    சீ.காந்திமதிநாதன்
    கோவில்பட்டி

  3. வாக்காளனுக்கு ?

    அன்போடு இரண்டு
    ஆடுகள் அளவளாவின !

    ஓராடு சொல்லிற்று,
    போராடும் வாழ்க்கை
    பிற உயிர்க்கெல்லாம்
    நமக்கோ வேளாவேளை
    நற்றளிர்கள், பசும்புற்கள்
    நாவூறும் இலை தழைகள் !

    நமது எசமான் இனி
    நாம் தொழும் இறை
    நினைவில் நீ கொள்
    நம்முயிர் பிரியும் வரை !

    அடுத்திருந்த ஆடு
    ஆதங்கத்தோடு
    பிதற்றிய ஆட்டின்
    பேதைச் செவியில்
    உணரும் வண்ணம்
    உரக்கச் சொன்னது !

    இரையும் புல்லும்
    இனிதாய் கொடுத்து
    வளர்ந்த பின்பு
    வாளால் கொல்வர்
    கழுத்தில் இருக்கும்
    கயிறே சாட்சி !

    சிரத்தை கொய்யும்
    சிந்தை கொண்டே
    ருசிக்கத் தருவர்
    புசிக்கப் பலவும் !

    உணர்ந்த ஆடு
    உரைத்தது மெல்ல
    உலகில் யாரும்
    உளரோ நமைப்போல் ?

    ஏளனத்தோடு எள்ளி
    ஏனில்லை உலகில்
    இரண்டாம் ஆடு
    இரைந்து சொன்னது !

    அரசியல்வாதியிடம்
    அன்பளிப்புப்பணம்
    பெற்று வாக்களிக்கும்
    பேதை வாக்காளனும்
    நம்மினமே, நன்றாக
    நீ உணர்வாய்.

    வரையாட்டிற்க்கு புரிந்தது
    வாக்காளனுக்கு ?

    ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்
    கோவை

  4. கருணை மனு….
    தேசப் பிதாவிற்கு பால் கொடுத்தேன்
    உனக்கோ தோள் கொடுக்கிறேன்
    என் தோல் நீ உரிக்கலாமா

    உன் நலன் என் நலன்
    உன்றனக்கு தெரியுமா

    நெல்லை என்றால் அல்வா
    தில்லை என்றால் நடராசர்
    முல்லை என்றால் பாரி
    எல்லை என்றால் கண்காணிப்பு

    சைவம் என்றால் காய்கறி
    அசைவம் என்றால் நானா

    என் கொழுப்பு மனித தேகத்தில்
    அதிக நாட்கள் உறையுமாமே
    அதிக உயிர்பலி வாங்குகிற
    கொவைட்19 தீநுண்பி நோய்த்தொற்று

    அதிக பட்சம் என் ஆயுளோ
    மூவாறு ஆண்டுகள் அறிவாயோ
    மூயிரு திங்களாவது தின்னாது
    வாயது கையது உன்னை கட்டாது
    கயிறது என் கழுத்தில் பாவமே

    என் படைப்பு உனதான பின்பு
    தின்பதை நிறுத்து என் ஊண்
    தீநுண்பி நோய்த்தொற்று
    மடியும் வரையில்…

    சீ.காந்திமதிநாதன்
    கோவில்பட்டி

  5. தன்னம்பிக்கை.

    அம்மாவைக் காணோமே தம்பி – அட
    அதற்காயேன் அழவேண்டும் வீணாக வெம்பி
    எம்மா துயர் வந்த போதும் – துணிந்(து)
    இருப்போம் நாம் எப்போதும் எம்மையே நம்பி.

    கண்ணாக காத்திட்டாள் அம்மை – நாம்
    கவலைகள் இல்லாமல் வாழ்ந்தது உண்மை
    எண்ணாமல் தன் நெஞ்சில் எம்மை – அவள்
    எங்கு போய் மாண்டாளோ! எவர் செய்த தீமை?

    ஆயிரம் துயர் வந்த போதும் – நாம்
    அழுவதாற் பயனில்லை கலங்காதே தம்பி
    தாயவள் பாலினி இல்லை -நாம்
    தளைகுழை யுண்டுதான் வாழணும் தம்பி.

    காய்கின்ற வயிற்றுடன் அன்னை – வந்து
    கட்டியணைத்துப் பால் தருவாளென்றெண்ணி
    சேய்கள் நாம் இனிவாழலாமோ – இல்லை
    தேடுவோம் உணவினை முயற்சிகள் பண்ணி

    கயிற்றினால்க் கட்டி வைத்துள்ளார் – நாம்
    கட்டினை அறுத்துவிட் டோடுவோம் தம்பி
    வயிற்றிலே பசியோடு வாடி – நாம்
    வாடவோ வா உடன் சேர்ந்தறுத் தெறிவோம்.

    துள்ளித் திமிறிடுவோம்நாம் – எங்கள்
    சுதந்திரம் காணத் துடித்தெழுவோம் நாம்
    அள்ளி அணைத்தவெம் அன்னை – தன்னை
    அறுத்தபா தகர்தனை நம்பிடலாமோ?

  6. படக்கவிதைப் போட்டி 259

    ஆகாரத்தில் நீங்கள் ஓர் அங்கம்
    அசைவப் பிரியர்களுக்கு

    மிரள்கின்ற உன் பார்வை
    இப்படியானோமே என்றா?

    குளிர்காலத்தில் கம்பளியாகிறாய்
    கொண்டாட்டங்களில் விருந்தாகிறாய்

    சாணத்தை உரமாக்கினாய்
    பாலினை சத்தாக்கினாய்

    கன்னங்களில் அசைப்போட்டு
    மந்தையாய் செல்லும் கூட்டம்

    வரிசையாய் அழகாய் செல்லும்
    உங்கள் ஆட்டு மந்தைக் கூட்டம்

    கர்த்தரின் கைகளில் நீங்களே
    காத்து ரட்சிப்பர் அவரே
    நீர் தாழ்ச்சியடையீர்!!

    சுதா மாதவன்

  7. பலியாடுகள்

    உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை
    பிழைப்புக்கேற்ற தொழிலும் இல்லை
    களைத்து ஒதுங்க குடிலும் இல்லை
    வறுமையைத் தீர்க்க வழியும் இல்லை
    போதை தீர்ந்த நேரம் இல்லை
    பாதை காணத் திறனும் இல்லை
    நாளை குறித்து திட்டம் இல்லை
    பிரரைக் குறைசொல்லி வாழ்ந்துவிட்டோம்

    ஐந்தாண்டுக்கு ஒருமுறை
    அதிகாரம் மாற்ற வாய்ப்பிருந்தும் -அதை
    ஆயிரம் ஐநூறுக்கு விற்றுவிட்டு
    எதிர்காலம் தொலைதது விட்டோம்…

    பலிபீடத்தில் நின்றுகொண்டு
    பச்சைதழை இலைகள் உண்டு
    வரும் கொடுமை உணராத
    பலியாட்டு மந்தைகள் நாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.