-மேகலா இராமமூர்த்தி

தெருவில் நிற்கும் பெற்றத்தை (மாடு) இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குப் படமாகப் பெற்றிருக்கின்றோம். இந்த ஒளிப்படத்தை எடுத்த திருமிகு. ஷாமினிக்கும், இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து போட்டிக்கு வழங்கியிருக்கும் திருமிகு. ராமலக்ஷ்மிக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

இந்தப் பசுவின் மருண்ட பார்வையில் தெரிவது என்ன?

கன்றைப் பிரிந்த கலக்கமா?

எசமானரைப் பிரிந்த ஏக்கமா?

வழிமாறி வந்துவிட்ட வருத்தமா?

கவிஞர்களைக் கேட்டு விடையறிவோம்! வாருங்கள்!

*****

மனிதா! நீ இயந்திரத்தை இயக்கிய நாளே இந்திய விவசாயம் கீழிறங்கிய நாள்! என் சாணியே விவசாயத்திற்கு அச்சாணி! அது முறிந்ததால் அல்லவோ உன் உடம்பு விதவிதமாய்ப் பல நோய்கட்கு ஆளானது” என்று மாட்டின்மூலம் மானுடரின் பகுத்தறிவற்ற செயல்களை வகுத்துரைக்கும் திரு. காந்திமதிநாதன், தம்முடைய மற்றொரு கவிதையில் மன்னராட்சியில் மணி நீதிக்கு; மக்களாட்சியிலோ money அநீதிக்கு என்று வார்த்தைகளோடு விளையாடி இன்றைய வாழ்க்கையை விளங்கவைக்கின்றார்.

இந்திய விவசாயின் நிலைமை

இறைவனுக்கு அடுத்து விவசாயியே என
முறைப்படுத்தினான் அறத்தை வள்ளுவன்

வள்ளுவன் போற்றிய உழவுத் தொழிலுக்கு
மூடுவிழா நட்த்தி விட்டுவிட்டு
அடிமைத் தொழிலுக்கு பெருநகரம் வந்த
குடிசைவாழ் என் எஜமானரைத் தேடுகிறேன்!

விவசாயி விலாசத்தைத் தொலைக்க வைக்க
வகை செய்த பெரியோரே கண்டீர்களா?

அவரும் நானும் வானும் நிலவும் போல
நானில்லாது இருளாகிப் போனார்!

மண்ணில் ஏர் நின்றால்
என் துணை கைக்கொண்டால்
மண்வளம் செழிக்கும்
மக்கள் நலம் ஜொலிக்கும்

என்று எங்களைத் துறந்து விளைநிலத்தில்
இயந்திரத்தை இயக்கிய நாள் …அன்றே
இந்திய விவசாயம் கீழ் இறங்கிய நாள்!
விவசாயியை நீங்கள் மறந்த நாள்
பசுமையோ மண்ணைத் துறந்த நாள்
விவசாயியின் உயர்வைக் கறந்த நாள்!

மானிடா கேள்!
நான் சாணி போட்டால் உரமாகி
விவசாயத்திற்கோ அச் சாணி அச்சாணி
என் சாணி மறந்ததால் அச்சாணி முறிந்தது
எண் சாண் உடம்புக்குள் விதவிதமாய் நோயினில்
என் சாணியாய்க் காய்கிறாயே……பயிர்கள்
காய்க்க வேண்டிய விளைநிலமோ மருத்துவமனைகளாய்!

மும்மலத்தின் ஏகபோகப் பிரதிநிதியே!
நும் மலமோ துர்நாற்றம்
எம் மலமோ மலர்சூடும்….நீ என்னைப்
பிள்ளையார் பிடிக்கும்போது
சிந்திக்க மறந்தாயே என்ன பிள்ளையப்பா நீ?
ஆமாம்…
யாரப்பா சொன்னா உனக்கு
ஓர ரறிவு அதிகமாமே என்னை விட
அதுவும் பகுத்தறிவாமே…?!
வெளியில் சொல்லாதே
ஓர ரறிவும் எள்ளி நகையாடும்….!

*****

நீதிக்கு வீதி

என் தொழுவத்தில் பிறந்தவர்
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தைக் காட்டு என்றார்
அதை ஏன் மறந்தீர் என்றேன்

குழல் ஊதிய வண்ணமே கருநிறக்
குழலாள் ராதைக் கண்ணன் பாரதக்
குலம் பாரினுக்குப் பரிசளித்த கீதை
வலம் வராதது ஏன் என்றேன்

மன்னனின் மகனால் தேர்க்காலில்
என் இனச் செல்வம் மாண்டதை
மன்னராட்சியிலே நீதி கேட்டதை
மன்னவனே மணி ஓசை கேட்டு

மணி கட்டி வைத்து நீதியை
மக்களுக்கும் மாக்களுக்கும்
சமம் என்ற திருநாட்டில்
நீதி கேட்டால் தெரு வீதியில்

மன்னராட்சி மணி நீதிக்கு
மக்களாட்சி MONEY அநீதிக்கோ??????

*****

”கெடாமலே பட்டணம் சேர்ந்த மனிதர்களோடு கூடவந்த நானோ வீதியில்; அவர்களோ தொற்றுநோய்க்கு அஞ்சி வீட்டுக்குள்!  இவர்கள் வாழ்க்கை என்று விடியும்?” என்ற சிந்தனையை அசைபோட்டு நின்றிருக்கும் மாடிது என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

விடியுமா…

கெட்டும்
பட்டணம் சேர் என்றார்கள்..

இவர்கள்
கெடாமலே கெடுவதற்காகப்
பட்டணம் வந்தவர்கள்,
பசுமாடும் கூடப்
பயணம் வந்தது..

பட்டண வாழ்க்கை
வழக்கம்போல் ஓடியது
வேகமாய்,
வந்தது கொரோனா
வாழ்வுமுறை மாறியது,
வீட்டுக்குள் மனிதர்கள்
வெறிச்சோடியது வீதி..

விதியை எண்ணி
வீதியில் பசுமாடு,
காட்டில் மேய்ந்த
கடந்த காலத்தை அசைபோட்டு..

விடியுமா
இவர்கள் வாழ்க்கை…!

*****

”தொற்றுநோய் உனைப் பற்றிடாதிருக்கத் தொழுவத்துக்குச் சென்றுவிடு! கால்கடுக்கச் சாலைதனில் நின்றிடாதே” என்று பசுவுக்கு அறிவுறுத்தும் திருமிகு. சுதா மாதவன், ”பசுவதையைத் தடுத்திடவே விதி செய்வோம்! மேதினியில் பசுவினையே காத்திடுவோம்!” என்று மக்களுக்கும் நல்லுரை நவில்கின்றார்.

கன்றினைத் தேடும் உன் பார்வை
கனிவு மட்டுமே அதன் போர்வை
உனையே தான் தேடிவரும் உன் கன்று
சாலையில் நீ நிற்பது நல்லதன்று!

கொடிய நோய் உனையும் கொன்றிடாது
தொழுவத்தில் தனித்திருந்து காத்துக் கொள்!
சாலைகளில் திரிந்தலைந்து நிற்பதனால்
நீ சாதிக்கப் போவது என்ன என்ன?

பதறிப் போய் உன் எஜமானர் தேடுகின்றார்
பதவிசாய் அவருடனே சென்று விடு
கால்கடுக்கச் சாலைதனில் நின்றிடாதே

பசுவதையைத் தடுத்திடவே விதி செய்தோம்
பாரெங்கும் மேதினியில் உனைக் காப்போம்
கோமாதா எங்கள் குலமாதா
என்றுமே நீ ஜகன்மாதா

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
பாசுரங்கள் உனைப் பாடித் துதித்திடவே
காமதேனு வடிவினிலே எமைக் காப்பாய்
உலகில் பால் வளமும் ஆறாகப் பெருகச் செய்வாய்

*****

”மேய்ச்சல்நிலம் காய்ந்ததென்று புலம்பெயர்ந்து வந்த நாங்கள் அடிமாடாய்  அவலம் எய்தி வாழுகின்றோம்; இனி சொந்தமண்ணே சொர்க்கமென்று திரும்புகின்றோம்!” என்றுணர்ந்துரைக்கும் மாட்டைக் காணுகின்றோம் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனின் கவிதையில்.

அடிமாடு

மேய்ச்சல் நிலம் காய்ந்ததென்று
விளைநிலம் சீர்கெட்டுப் போனதென்று
வயக்காடு வீட்டுமனையானதென்று
ஊரைவிட்டுப் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம்…

வந்த இடம் தந்தமிச்சம் உண்டு வாழ்ந்தோம்
சொந்தமென்று ஏதுமின்றிச் சுற்றி வந்தோம்
பந்துபோல அடிபட்டு ஓடிநின்றோம்
சொந்தமண்ணே சொர்க்கமென்று திரும்புகின்றோம்….

உழைப்பதனை உறிஞ்ச விட்டு
உயிர் மட்டும் மிச்சம் கொண்டு
வீடு நோக்கிச் செல்கின்றோம் – இங்கு
அடிமாடாய் வாழுகின்றோம்…

மாட்டை வைத்து நல்ல கருத்துள்ள பாட்டுக்களை எழுதியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

பசுவின் கேள்வி?
பிறந்து வளர் சிறு மழலைகள் – அறிவு
சிறந்து ஒளிர் பெரியீர் இப்பாரில் பலரும்
ருசித்துப் பருகிடப் பால் சுரக்கும் எமக்கு
புசிக்க நற்பசும்புற்கள் அருகி நிலமெங்கும்
நெகிழி சூழ் உலகாக்கி முப்பொழுதும்
மகிழ்ந்தே மிகு கேளிக்கையால் குலவி
மனம் போன போக்கதனில் நிதம் உழலும்
மானிடப் பதர்களே இன்றியமையாதது
நீரும் உழவுமென நெஞ்சில் நிலைநிறுத்தி
நீவிர் மனம் மாறுவது எப்போது ?

”மானிடர்களே! மழலையர் முதல் பெரியோர்வரை அனைவரும் பருகிடச் சுவையான பாலளிக்கும் பசுவின்பால் அன்பின்றி பசும்புல்லை அழித்து, நெகிழிகளைப் பெருக்கி, மனம்போன போக்கில் வாழும் நீவிர், உழவின் அருமை உணர்ந்து திருந்துவதெப்போது?” என்று வினவி நிற்கும் பசுவினைத் தம் பாட்டில் காட்டியிருக்கும் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *