வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-24

தி. இரா. மீனா
துக்களே
*இவர் ஜேடர தாசிம்மையனின் மனைவி. ஆடை நெய்வது இவரது காயகமாகும். தாசிம்மையனோடு சேர்ந்து இவர் வரலாறும் சிறப்பானது. ’தாசய்யப் பிரிய இராமநாதா ’ இவரது முத்திரையாகும்.
“பக்தனெனில் பசவண்ணர் போலிருக்க வேண்டும்
ஜங்கமனெனில் பிரபுதேவர் போலிருக்க வேண்டும்
யோகியெனில் சித்தராமன் போலிருக்க வேண்டும்
போகியெனில் சென்னபசவண்ணர் போலிருக்க வேண்டும்
ஐக்கியமெனில் அஜகண்ணர் போலிருக்க வேண்டும்
இவர்தம் கருணையின் மேன்மையைப் பெற்று
மடிந்தவர் போலிருக்க வேண்டுமேயன்றி
தத்துவப் பேச்செதற்கைய்யா?
தாசய்யப்பிரிய இராமநாதனே.”
தேசிகேந்திர சங்கனபசவய்யா
தேசிகேந்திரன் [நாடோடி] என்ற அடைமொழியோடு அழைக்கப் படுவதால் பற்றற்ற சரணராக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். “நிரஞ்சன சென்ன பசவலிங்கா“ இவரது முத்திரையாகும்.
1. “ஆடிச் சோர்வதில்லை என்கால்கள்
செய்து சோர்வதில்லை என்கைகள்
பார்த்துச் சோர்வதில்லை என்கண்கள்
பாடிச் சோர்வதில்லை என் நா
கேட்டுச் சோர்வதில்லை என் செவிகள்
வேண்டிச் சோர்ந்து போகாது குருநிரஞ்சனாம்
சென்னபசவலிங்கனே உன் சரணரின் அன்பில் என் எண்ணம்”
2. “கண்டேன் என்பது பொய், காணாமலிருப்பது மெய்
காணக்கூடியவர்கள் எதிரில் பார்ப்பதுவே உண்மை
காணாதவர் எதிரில் பார்க்காமலிருப்பதே உண்மை
குரு நிரஞ்சனாம் சென்ன பசவலிங்கத்தில்
துவைதம் என்பதில்லை அத்வைதம் என்பதுவுமில்லை
என்றான் சரணன்“
3. “கல்லிற்குள் இருக்கும் நெருப்பு எரியாமல் தெரியாது
கட்டைக்குள் இருக்கும் நெருப்பு பயன்படாமல் பரவாது
விதை நீரும் மண்ணுமின்றி முளைக்காது
அது போலவே சரணரின் பேச்சு
உண்மை தவிரப் பிறிதொன்றை வெளிப்படுத்தாது
குரு நிரஞ்சனாம் சென்ன பசவலிங்கத்தின் வார்த்தை
மாசற்ற காரணத்தால்”
4. “கால்களில்லாத நடை
கைகளில்லாத தொடுகை
கண்களில்லாத பார்வை
காதுகளில்லாத கேட்டல்
நாசியற்ற நறுமணம்
நாவற்ற மொழி
தானெனும் அகந்தையற்ற சுகம்
குரு நிரஞ்சனாம் சென்ன பசவலிங்கனே
உனது சரணர் இலிங்க ஐக்கியமானோர்.”
நகேய மாரிதந்தே
சிரிக்கவைப்பதையே காயகமாகக் கொண்ட கலைஞர். ”ஆதுர வைரி மாரேஸ்வரா“ என்பது இவரது முத்திரையாகும். உவமைகள், கருத் துச்சுருக்கம் ஆகியவைகளோடு வசனங்கள் அமைகின்றன.
1. “நெல்லைப் பரப்பி வலையை விரித்து
சிட்டுக் குருவியைப் பிடிக்கின்றவனைப் போல
பேச்சில் அத்வைதம் கற்று
சம்ஸ்கிருதச் சொல்லின் கடைவிரித்து
மீன் வாயில் இரையைப் போட்டது போல்
எத்தகைய பேச்சது? மாய்மாலம்
ஆதுரவைரி மாரேஸ்வரனே“
2. “குருவிடம் குணமில்லையெனில் வணக்கம் ஏன்?
இலிங்கத்தில் உயர்வின்றேல் சந்தியாவந்தனம் ஏன்?
ஜங்கமத்தில் சாதியின்றேல் உயர்வு தாழ்வு ஏன்?
இதை என்னவென்பது?
குரு பிறப்பிற்கு ஆட்பட்டவன்
இலிங்கம் அடையாளமுடையது
ஜங்கமன் சாதிக்கு ஆட்பட்டவன்
இது எனக்கு மகிழ்ச்சியளித்ததா?
வஞ்சனை வேண்டாம் ஆதுரவைரி மாரேஸ்வரனே.”
3. “விதை வெடித்து முளைக்கும் போது இலை எங்கிருந்தது?
இலை படரும் போது கிளை எங்கிருந்தது?
கிளை பரவி மலர் மலரும் போது கனி எங்கிருந்தது?
கனி கனிந்து சாறு நிரம்பியபோது சுவை எங்கிருந்தது?
சுவைத்துப் பயனறிந்த போது என்ன நிறைவு அது!
இத்துணை அறிவாய், ஆதுரவைரி மாரேஸ்வரனே“
நிஜகுண யோகி
சிம்மலகி இவருடைய ஊராகும். இவரது முத்திரை நிஜகுண யோகி.
“நானிருக்கும் வரையில் நீயிருப்பாயா மாயையே?
நானில்லையெனில் நீயில்லை
நான் நீ என்னும் இரண்டு நிலையழிய
ஆனந்த நிஜகுண யோகம்”
நிராலம்ப பிரபுதேவா
‘நிஸ்ஸங்க நிராள நிஜலிங்க பிரபுவே’ இவரது முத்திரையாகும். சிவசக்தி பஞ்சாங்க வசன என்ற பார்வையில் சிவாச்சாரத்தை அறியவேண்டுமென்பதை வலியுறுத்துகிறார்.
“குரு கருணையால் கொடுத்த இட்டலிங்கத்தை
கை, மனம், எண்ணத்தில் வைத்து வழிபட முடியாமல்
உயர்சாதியினர் சொல்கேட்டு விரயத்துக்கு ஆட்படுகின்ற
செம்பு பித்தளை எனப் பலதெய்வங்களைப் பாடி
வணங்கும் அஞ்ஞானத்தின் உருவமானவரை
எனக்கு ஒருமுறையும் காட்டாதிருப்பாய்
நிஸ்ஸங்க நிராள நிஜலிங்கப் பிரபுவே”
[தொடரும்]
[*துக்களேயின் அற்புதமான சிந்திக்கும் ஆற்றல் அவளை ஜேடர தாசிம்மய்யனின் மனைவியாக்கிய சுவையான நிகழ்வு முன்னர் – ஜேடரதாசிம்மையன் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.]