தீபாவளி இனிப்புகள், பலகாரங்களை எறும்பு வராமல் காப்பது, அவ்வளவு எளிதில்லை. அப்படியே எறும்பு வந்துவிட்டால், அவற்றை அப்புறப்படுத்துவது, ஒரு பெரிய வேலை. இந்நிலையில், எறும்புகள், பூச்சிகள் வராமல் உணவுப் பொருள்களைக் காப்பதற்குக் கற்பூரம் பயன்படும் என இன்று தெரிந்துகொண்டேன். இது குறித்து என் மனைவி ஹேமமாலினி உடன் ஒரு நேர்காணல்.
விரலழுத்த மருத்துவம் (Reflexology) என்பது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்து நாட்டு மருத்துவ முறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என மருத்துவர் ஒருவரின் கல்லறையில் காணப்படும் சித்திரங்களிலிருந்து அறிய முடிகிறது. வாய்வழியாக அதைப் பரப்பியிருக்க வேண்டும். இந்தியாவிலும் சீனாவிலும் புத்தருடைய பாதங்களில் இம்முறை வைத்தியம் காணப்படுகிறது.
மருத்துவர்கள் மட்டுமில்லாமல் இதை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கற்கலாம், நோயாளிகளுக்கு மட்டும்தான் இம்முறை பயன்படும் என்பதில்லை, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க, பிறருக்கும் உதவி செய்ய முடியும் என்று டாக்டர் வில்லியம் பிட்ஸ்ஜெரால்டு (Dr.William Fitzgerald) என்பவர் 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.
கை அல்லது கால் விரல் ஒன்றின் நுனியை இரு விரல்களால் அழுத்தினால், அதனுடன் தொடர்புள்ள வேறொரு பாகத்தில் சில விநாடிகள் சொரணை போய்விடும் – மயக்க மருந்து கொடுத்தாற்போல்.
இதே உத்தியைப் பயன்படுத்தி, உடலில் எந்தப் பாகத்தில் சிக்கல் இருக்கிறது என்று கண்டறியலாம். அதே போல், அந்தச் சிக்கலை ஒரு குறிப்பிட்ட பாகத்தில் அழுத்துவதன் மூலம் சரி செய்யலாம். எந்தெந்தப் பாகத்தில் விரல்களால் அழுத்தினால் எந்தெந்தச் சிக்கல்களைச் சரி செய்யலாம் என்பதை இந்த அமர்வில் நிர்மலா ராகவன் விளக்குகிறார். அத்துடன் படுப்பதற்கான நிலைகள், சவாசனம் செய்யும் முறை, நீண்ட நேர விமானப் பயணத்தில் தூங்குவதற்கான வழிமுறை ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறார். விரலழுத்த மருத்துவத்தை மற்றவர்களுக்குச் செய்த பிறகு நமக்கு அது தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
இன்று காலை இந்தப் பறவையைப் பார்த்தேன். கூரிய அலகுடன் தலையைத் திருப்பிக்கொண்டே இருந்தது. முதலில் மீன்கொத்தியைப் போன்று இருந்தது. பிறகுதான் தெரிந்தது, இதன் பெயர், நீலவால் பஞ்சுருட்டான். இது, ஒருவகைப் ஈப்பிடிப்பான் பறவை. குளம் குட்டை போன்றவற்றின் கரைகளில் காணப்படும். நான் பார்த்தபோது இது, மூங்கில் கழியில் அமர்ந்திருந்தது.
படத்திற்கு நன்றி – By A.Savin (Wikimedia Commons · WikiPhotoSpace) – சொந்த முயற்சி, FAL, https://commons.wikimedia.org/w/index.php?curid=89642206
சக்தி வாய்ந்த யோக முத்திரைகளின் இரண்டாம் பாகம் இங்கே. உடலின் ஒவ்வோர் உறுப்புகளுக்கும் உரிய தனித் தனி முத்திரைகளைப் பார்த்து வருகிறோம். இந்த அமர்வில், இதய நலனுக்கான முத்திரைகள், வயிறு, செரிமானம், வயிற்றின் உள் உறுப்புகள் அனைத்திற்குமான முத்திரைகள், மலச்சிக்கலைப் போக்கும் முத்திரை உள்ளிட்ட பலவற்றையும் நிர்மலா ராகவன் விவரித்துள்ளார்.
பணம் வருவதற்கான முத்திரையைத் தொடர்ந்து, நினைத்தது நடப்பதற்கான முத்திரையையும் போட்டியில் வெல்வதற்கான முத்திரையையும் செய்து காட்டியுள்ளார். பூமியிலிருந்து சக்தியைப் பெறுவதற்கான முத்திரை, கால்கள் வலிமை பெறுவதற்கான முத்திரை, தியான முத்திரை, உடலைத் தளர்த்தும் முத்திரை, மன அமைதி தரும் முத்திரை, மன்னிப்புக் கேட்பதற்கான முத்திரை ஆகியவற்றையும் விளக்கியுள்ளார்.
நெற்றியில் பொட்டுவைப்பதற்குப் பின்னுள்ள காரணத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். அசைவ உணவு உண்ணும்போது எட்ட முடியாத தியான நிலைகளைச் சைவ உணவு உண்ணும்போது எட்ட முடிந்ததை உதாரணத்துடன் கூறியுள்ளார். மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தலைவலி, வயிற்றுவலியைப் போக்குவதற்கான மருந்தையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேர்காணலைப் பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நம் மரபுவழி யோக முத்திரைகள், பல நோய்களை, வலிகளை, சிக்கல்களைத் தீர்க்க வல்லவை. இடர்கள் வராமலும் காக்க வல்லவை. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் வலிமை சேர்க்கும் முத்திரைகள் உண்டு. தலைவலி தீர, மாதவிடாய்க் காலத்து வலி நீங்க, மூட்டுவலி அகல, இடுப்பு வலி விலக, இன்னும் கண் நலத்துக்கு, காதுக்கு, பல்லுக்கு, புருவத்துக்கு, தோலுக்கு, தொண்டைக்கு, சக்திக்கு, நினைவாற்றலுக்கு, நுரையீரலுக்கு நலம் புரியும் முத்திரைகள் உண்டு. மேலும் ஒவ்வாமை, மூச்சிரைப்பு, நெஞ்சுக்கட்டு ஆகியவை சரியாகவும் முத்திரைகள் உண்டு.
பணம் வர வேண்டுமா? அதற்கும் ஒரு முத்திரை உண்டு. தலைமுடி உதிராமல் இருக்கவும் மேற்கொண்டு நன்றாக வளரவும் முத்திரை உண்டு. இவை அனைத்தையும் நமக்குச் செய்து காட்டுகிறார், நிர்மலா ராகவன்.
மலேசியாவில் வாழும் எழுத்தாளரும் பரத நாட்டியக் கலைஞருமான இவர், இந்த முத்திரைகளைப் பல்லாண்டுகளாகப் பயின்று பலன் பெற்று வருகிறார். இவரிடமிருந்து கற்றுக்கொண்ட பலருக்கும் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இந்த அரிய முத்திரைகளை நம் நேயர்களுக்காக நிர்மலா ராகவன் செய்து காட்டுகிறார். இவற்றைப் பார்த்து நீங்களும் பயன் பெறுங்கள். உங்களுக்கு எத்தகைய பயன்கள் கிடைத்தன என்று உங்கள் அனுபவத்தை, பின்னூட்டத்தில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர் சக்தி சக்திதாசன், என் வேண்டுகோளை ஏற்று, இங்கிலாந்தின் இலையுதிர்காலக் காட்சிகளை நம் அலைவரிசைக்காகப் படம் எடுத்து அனுப்பியுள்ளார். அவருடைய இனிய வர்ணனை, நாம் அதை நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இருந்த இடத்திலிருந்தே இங்கிலாந்தின் வனப்பைக் காண்போம், வாருங்கள்.
குடியுரிமை பெற மிக எளிய வழி எது? தங்கக் கடவுச்சீட்டு (Golden Passport) என்றால் என்ன? இரட்டைக் குடியுரிமை பெற முடியுமா? ஐரோப்பாவில் பிறந்தாலே குடியுரிமை உண்டா? வீடு வாங்குவதன் மூலமாகக் குடியுரிமை பெற முடியுமா? ஊழியர் ஒருவர், தன்னைச் சார்ந்துள்ளோர் (Dependant) என யார் யாரை அழைக்கலாம்? யாரை அழைக்க இயலாது? ஐரோப்பாவில் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்? அதிகக் குழந்தைகள் பெற்றவர்களுக்கு அதிகப் பயன்கள் உள்ளன எனில், மக்கள் ஏன் அதிகக் குழந்தைகள் பெறுவதில்லை? இப்படிப் பல கேள்விகளுக்குப் பெல்ஜியத்திலிருந்து மாதவன் இளங்கோ விரிவாகப் பதில் அளித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது தொடர்பான உரையாடலின் இந்த இரண்டாம் பகுதியைப் பாருங்கள்.
ஐரோப்பியக் குடியுரிமை தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் எழுப்புங்கள். மாதவன் இளங்கோ அவற்றுக்குப் பதில் அளிப்பார்.
மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமது எழுத்துலக அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்கின்றார். கதைகளுக்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது? கதைகளில் உண்மையும் கற்பனையும் எவ்வாறு கலக்கின்றன? எந்த விகிதத்தில் கலக்கின்றன? எவ்வளவு காலம் கழித்து ஒரு சம்பவம் கதையாகிறது? உள்ளிட்ட பலவற்றைச் சில எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்குகிறார்.
கருவில் குழந்தை இருக்கும்போது, அதன் தாயின் மீது விதவிதமான ஆண்கள் பலரும் கட்டைக் குரலில் பேசியபடி வந்து, படுத்து அமுக்குகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தைக்கும் உடலெங்கும் வலிக்கிறது. வலி தாங்காமல் அது புரண்டு படுக்கிறது. தாயும் குழந்தையைத் திட்டுகிறாள். அந்தக் குழந்தை, எதிர்காலத்தில் என்னவாக ஆகிறது? வித்தியாசமான கருவில் அமைந்த தனது கதைகள் குறித்து நிர்மலா ராகவன் விவரிக்கிறார்.
மேலும், யோக முத்திரைகள் சிலவற்றை நமக்காகப் பிடித்துக் காட்டியுள்ளார். மயக்கமா? குழப்பமா? மனதிலே நடுக்கமா? இந்த யோக முத்திரையைப் பிடித்தால் போதும். உங்கள் குழப்பம் தீர்ந்து, தெளிவு கிடைக்கும். இது என்ன முத்திரை என்று கற்க, இந்த நேர்காணலைப் பாருங்கள்.
ஐரோப்பிய நாடுகளில் சமூகப் பாதுகாப்பு என்ற அமைப்பு (Social Security System) உள்ளது. அங்கே குடியுரிமை பெற்றால், உயர்தரத்தில் அமைந்த கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் பலவற்றையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செலவே இல்லாமல் பெறலாம். குழந்தை பிறந்தால் தாய்க்கு உதவித்தொகை, படிக்கும் மாணவருக்கு உதவித்தொகை, வேலையிழந்தால் உதவித்தொகை, திறன்வளர்ப்புப் பயிற்சிகள் எனப் பலவற்றையும் அரசே வழங்குகிறது. தன் குடிமக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் இருக்க வேண்டும் என்பதில் அரசுகள் முனைப்புடன் இருக்கின்றன. இத்தகைய ஒரு நாட்டில் வாழும் வாய்ப்பினை நாமும் பெற முடியும். அந்த நாடுகளில் பணியாற்றுவது எப்படி? எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது? அங்கே குடியுரிமை பெறுவது எப்படி? அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன? குடியுரிமை பெறுவதால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் என்னென்ன? இவை அனைத்தையும் நமக்கு விளக்குகிறார், மாதவன் இளங்கோ.
பெல்ஜியத்தில் குடியுரிமை பெற்று வாழும் மாதவன் இளங்கோ, தலைமைப்பண்புப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். இவர், வல்லமை மின்னிதழின் வல்லமையாளர் விருது பெற்றவர். இவருடைய சிறுகதையை வெங்கட் சாமிநாதன் உள்ளிட்ட பெரியோர்கள் பாராட்டியுள்ளனர். அம்மாவின் தேன்குழல் என்ற தலைப்பிலான இவரது சிறுகதைத் தொகுப்பினை அகநாழிகை வெளியிட்டுள்ளது. இந்த மிக முக்கியமான நேர்காணலைப் பாருங்கள்.
ஐரோப்பியக் குடியுரிமை தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் எழுப்புங்கள். இதன் அடுத்த பகுதியில், மாதவன் இளங்கோ அவற்றுக்குப் பதில் அளிப்பார்.
உங்கள் வீட்டுக் கொலுவை வீடியோ படம் எடுத்து வாட்ஸாப் வழியே +91-9841120975 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். Google Drive அனுப்புவோர், annakannan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவோம். எடுக்கும்போது அதை விளக்கிச் சொல்லுங்கள். உங்கள் செல்பேசியைக் கிடைமட்டமாக (horizontal) வைத்துப் படம் எடுங்கள். தொடங்கும்போது எந்த ஊரிலிருந்து யார் பேசுகிறீர்கள் என்று சொல்லுங்கள். பாடத் தெரிந்தவர்கள் எனில், பாடியும் அனுப்பலாம். ஓம்சக்தி, பராசக்தி! – அண்ணாகண்ணன்
நவராத்திரியின்போது, கொலுப் படிக்கட்டில் பொம்மைகளை வைப்பதற்கு முன், முதலில் கலசம் வைத்து, அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்வது மரபு. நம் இல்லத்தில் எழுந்தருளி, அருள்பாலிக்கும் அம்பிகையின் திருக்கோலம் இங்கே.
குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்துள்ளது. மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ள குஷ்வந்த் சிங் ரசித்த ஜோக்ஸ் பல உண்டு. அதில் சர்தார்ஜி ஜோக் ஒன்றும் உண்டு.
ஒரு பெண் தன் உடைகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்கிறார். சர்தார்ஜி உடனே அவளது காரை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார். இதைக் கேட்ட அவரது நண்பரான இன்னொரு சர்தார்ஜி, நீ செய்தது சரிதான். அவளது உடைகள் உனக்குச் சரியாக இருக்காதே என்றாராம். கெட்டிக்கார சர்தார்ஜிகள்.
நேற்று இரவு முழுவதும் உங்களையே நினைத்துக்கொண்டிருந்தேன் எனக் குஷ்வந்த் சிங், நிர்மலாவிடம் சொன்னது ஏன்? குஷ்வந்த் சிங்கின் Indecent habit எது? நிர்மலாவைப் பற்றிக் குஷ்வந்த் சிங் என்ன எழுதினார்? தில்லியில் குஷ்வந்த் சிங்கின் வீட்டுக்கு நிர்மலா சென்றபோது, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ்.நைபால் அங்கே இருந்தார். அவர் நிர்மலாவிடம் கேட்ட கேள்வி என்ன? இவற்றுக்கான விடைகளை அறிய, இந்த நேர்காணலைப் பாருங்கள்.
மலேசியாவுக்கு வந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கை நிர்மலா ராகவன் ஒரு நேர்காணலுக்காகச் சந்தித்தார். ஆனால், அதற்கு முன்னதாகக் குஷ்வந்த் சிங், நிர்மலா ராகவனை ஒரு மணிநேரம் நேர்காணல் செய்தார். இந்தியர்களுக்குத் தங்கள் தாய்மொழியை விட, ஆங்கிலமே நன்றாக வரும் எனக் குஷ்வந்த் சிங் மேடையில் சொல்ல, நிர்மலா ராகவனும் மேடைக்குச் சென்று, நானும் இந்தியாவிலிருந்து வந்தவள்தான். எனக்கு ஆங்கிலத்தை விட, தமிழே நன்றாக வரும் எனக் கூறினார். மறு பிறவி இல்லை என்று குஷ்வந்த் சிங் சொல்ல, அப்படியானால் ஒருவர் ஏழையாகவும் இன்னொருவர் பணக்காரராகவும் பிறப்பது எப்படி? கர்ம வினைதானே அதற்குக் காரணம்? எனக் கேட்டுள்ளார்.
எழுத்தாளர் குஷ்வந்த் சிங் உடனான தம் உரையாடல்கள், அவருடன் மேற்கொண்ட பயணம், குஷ்வந்த் சிங் பகிர்ந்துகொண்ட பல்வேறு சுவாரசியமான அனுபவங்கள் ஆகியவற்றை நிர்மலா ராகவன், இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.