Tag: அண்ணாகண்ணன்

  • அப்துல் கலாமின் புத்தாக்கக் கருவிகள்

    அப்துல் கலாமின் புத்தாக்கக் கருவிகள்

    அண்ணாகண்ணன்

    ஏவுகணை, விண்வெளி, பாதுகாப்புத் துறையில் பல்வேறு திட்டங்களுக்குத் தலைமை தாங்கி முன்னெடுத்தவர், அப்துல் கலாம். இவை மட்டுமின்றி, புத்தாக்கக் கருவிகள் இரண்டை அவர் உருவாக்கினார்.

    இலகுரகச் செயற்கைக் கால்கள் (lightweight floor / leg calipers and artificial prosthetics)

    டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தம் அறிவியல் குழுவினருடன் இணைந்து, ஏவுகணைகள் மற்றும் விண்வெளி ராக்கெட்டுகளுக்காக முதலில் பயன்படுத்தப்பட்ட மேம்பட்ட கார்பன்-கலவைப் பொருட்களைக் கொண்டு,புரட்சிகரமான இலகுரக தரை/கால் அளவிகளையும் செயற்கை உறுப்புகளையும் உருவாக்கினர்.

    முக்கிய அம்சங்கள் மற்றும் புதுமை எடை குறைப்பு: இந்த விண்வெளிக் காலத்து கலவைப் பொருளானது, பாரம்பரிய கால் அளவிகளின் எடையை 4 கிலோவிலிருந்து சுமார் 300 முதல் 400 கிராமாகக் குறைத்துள்ளது (இதனால் அவை 10 முதல் 15 மடங்கு வரை எடை குறைந்தவையாக மாறியுள்ளன).

    மூலப்பொருட்களின் தோற்றம்:அக்னி ஏவுகணையின் மூக்குக் கூம்பிற்குப் பயன்படுத்தப்பட்ட அதே வெப்ப-எதிர்ப்பு கலவைப் பொருட்களைக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.

    கட்டுப்படியாகும் விலை: இது, சுமார் ₹500 முதல் ₹850 வரை செலவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ₹3,500 முதல் ₹4,000 வரை விலை கொண்ட பழைய, கனமான உலோகம் மற்றும் தோல் மாடல்களை விட கணிசமாக மலிவானது.

    கலாம்-ராஜு ஸ்டென்ட் (Kalam-Raju Stent)

    கலாம்-ராஜு ஸ்டென்ட் (Kalam-Raju Stent) என்பது இந்தியாவின் முதல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, மிகக் குறைந்த விலையுள்ள இதய கரோனரி ஸ்டென்ட் ஆகும். 1994ஆம் ஆண்டில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரபல இருதய நோய் நிபுணர் டாக்டர் சோம ராஜு ஆகியோர் இணைந்து இதனை உருவாக்கினர்.

    முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்புகள்:

    ஏவுகணைத் தொழில்நுட்பம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (DRDL), ஏவுகணைகளுக்காகப் பயன்படுத்திய உயர்தர மருத்துவக் தரத்திலான எஃகு (High-grade Steel) பொருளைக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டது.

    விலைக் குறைப்பு: அந்தக் காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டென்ட்டுகள் ₹75,000 முதல் ₹1 லட்சம் வரை விற்கப்பட்ட நிலையில், இந்த சுதேசி ஸ்டென்ட் வெறும் ₹10,000 விலையில் ஏழை மக்களுக்குக் கிடைத்தது. இது சந்தை விலையை 50%க்கு மேல் குறைக்க உதவியது.

    உயிர் காத்த திருப்தி: “மக்களைக் கொல்லும் ஏவுகணைகளை உருவாக்கிய நான், வாழ்க்கையின் இறுதியில் மனித உயிர்களைக் காக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கலாம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    கலாமின் விஞ்ஞானப் பார்வையும் புத்தாக்க முனைப்பும் தலைமுறை தோறும் விரிவடைய வேண்டும். அதுவே அவரது நினைவைப் போற்றச் சிறந்த வழி.

    Share
  • வரலாறு படைத்த பாரதிராஜா

    வரலாறு படைத்த பாரதிராஜா

    அண்ணாகண்ணன்

    பாடல் பெற்ற தலங்கள் என்று திருக்கோவில்களைச் சொல்வார்கள். ஆனால், பட்டி தொட்டிகளை எல்லாம் பாடல் பெற்ற தலங்களாக மாற்றியவர் பாரதிராஜா. செட்டுக்குள் சிறைப்பட்டிருந்த சினிமாவுக்கு விடுதலை தந்து, எட்டுத் திக்கும் உலாவச் செய்தவர்.

    அவருக்கு முன்பும் கிராமத்தையும் கிராமத்து மனிதர்களையும் காட்டினார்கள். ஆனால், அவர்கள் சிறப்பு ஒப்பனைகளால் தங்கள் சிறப்பை இழந்தவர்கள். இவர்தான் மண்வாசனையுடன் அசலான மனிதர்களையும் அவர்களின் உயிர்ப்புள்ள வாழ்வையும் காட்டினார். ஓரத்தில் நின்றுகொண்டிருந்த கிராமத்து மாந்தர்களை மையப் பாத்திரங்களாய் மாற்றினார். இதன் மூலம் அவர்களின் வட்டார வழக்கையும் நடை, உடை, பாவனை, சிகையலங்காரம் உள்ளிட்ட வாழ்வியலையும் ஊரையும் உணர்வையும் ஆவணப்படுத்தினார்.

    அவரையே கிராமம் என்ற சிமிழுக்குள் அடைக்க முயன்ற போது, அந்தக் கோட்டையும் அழித்தார். தமிழ் என்ற வட்டத்துக்கு வெளியே தெலுங்கிலும் இந்தியிலும் படம் எடுத்தார். இன்று உடல் என்ற கூட்டுக்குள்ளிருந்து விடுதலை பெற்றுவிட்டார்.

    அவரது திரைப்படங்கள் (முதல் மரியாதை), திரைக் காட்சிகள் (நான் கரை ஏறிட்டேன்), வசனங்கள் (பத்த வச்சிட்டியே பரட்டை), பாடல்கள் (சிறுபொன்மணி அசையும்) எனப் பலவும் சாகா வரம் பெற்றவை. தான் வரலாற்றில் இடம் பெற்றதோடு புதிய வரலாறு படைத்தார். தன்னுடன் ஒரு பெரும் கூட்டத்தையும் மிகப் பெரும் நிலப்பரப்பையும் வரலாற்றில் இடம்பெறச் செய்தார். மக்கள் நினைவுகளில் என்றும் வாழ்வார்.

    Photo Credit: Stills Ravi / The Hindu Archives

    Share
  • அண்ணாமலையின் புதிய இயக்கம்

    அண்ணாமலையின் புதிய இயக்கம்

    அண்ணாகண்ணன்

    அண்ணாமலையின் உரையைக் கேட்டேன். அவர் கூறியவை அனைத்தும் முற்றும் முழுதாகக் காந்தியக் கொள்கைகள். மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும் என்கிறார். மாறுவோம், மாற்றுவோம் என்பது கேட்க, நன்றாக இருக்கும். ஆனால், நடைமுறையில் மிகக் கடினமானது. அவரும் அவரைப் பின்பற்றும் அனைவரும் மகாத்மாக்களாக இருந்தால் / மாறினால் ஒழிய, இந்த மாற்றம் நிகழாது. எனவே இது அவரது முதல் தடை.

    நாயக வழிபாடு வேண்டாம் என்கிறார். தலைவர், பொறுப்பு, அதிகாரம் என்று வந்துவிட்டால், இத்தகைய நாயக வழிபாடு, இயல்பாகவே வந்துவிடும். அண்ணாமலையே இதற்கு முன்னால் பலரையும் நாயகராகக் கொண்டாடியவர். காலில் விழுந்து வணங்கியவர். பொதுவாக, அவரது உடல்மொழியே அதீதப் பணிவுடன் உள்ளது. இந்தியச் சமுதாயக் கட்டமைப்பும் நிறுவனக் கட்டமைப்பும் குடும்பக் கட்டமைப்பும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டது. அனைவரையும் சமமாகப் பார்க்கின்ற வாய்ப்பு, இதில் மிகக் குறைவு. இந்த இயக்கத்தில் அண்ணாமலையை நாயகராகத்தான் கருதுவார்கள். We the leader என்ற தளத்தின் பெயரும் உறுப்பினராகச் சேரும் தன்னார்வலர்களை Active Leaders என்று அழைப்பதும் ஒவ்வொருவரையும் நாயகராகப் பார்க்கவே உதவும்.

    அறம் செய்ய விரும்பு என்ற வாசகம், அவரது இணையத்தளத்தில் உள்ளது. அப்துல் கலாம் பெயரில் அறத்தையும் அரசியலையும் கற்றுத் தரப் போவதாகக் கூறியுள்ளார். நம் பாடத் திட்டங்களில் திருக்குறளும் இன்னபிற அற நூல்களும் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இவற்றைக் கற்காமல், தமிழ்நாட்டுப் பள்ளிகளிலிருந்து யாரும் வெளியே செல்வது இல்லை. பிறகு ஏன், சமூகத்தில் அறம் ஓங்கி நிற்கவில்லை? இதற்கான காரணங்களைத் தேடினால், இவரது இந்த முயற்சி எவ்வளவு கடினமானது என்பதை அவர் அறிவார்.

    பொறுப்புகளுக்கும் பதவிகளுக்கும் கால வரையறை வைப்பது நல்ல திட்டம். செயல்படுத்தக் கூடியதே. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்ற, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். முக்கியமாக, இது தேசிய அளவிலான கொள்கை. தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, தேர்தல் ஆணையமும் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். பதவி சுகம் கண்டவர்கள், அவ்வளவு எளிதில் இதை நிகழ்த்த விடுவார்களா? அவரது கட்சித் தலைவர் பதவிக்கு வேண்டுமானால் இத்தகைய விதிகளை வைத்துக்கொள்ளலாம்.

    நாமெல்லாம் மிடில் கிளாஸ் என்று அவர் சொன்னது, பலருக்கும் நெருக்கமாக இருக்கலாம். நடுத்தர வர்க்கத்தினரின் குரலாக அவர் ஒலித்தால், உடனடியாக அவருக்கு ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்களின் ஆதரவு கிடைக்கலாம்.

    அறத்துக்குப் பயிற்சி அளிப்பது பயன் அளிக்கிறதோ இல்லையோ. அரசியல் நடைமுறைகளுக்குப் பயிற்சி அளித்த பின் போட்டியிட வைப்பது, நல்ல முயற்சி. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாதது. அடிப்படையிலிருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணம் நன்று. இதை அரசியல் கல்லூரியாக நிறுவினால், இதர கட்சியினரும் அரசியல் ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    இதை எழுதும் நேரத்தில் அவரது தளத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, பத்து லட்சத்தை நெருங்கியுள்ளது. என்னிடத்தில் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைக் கொடுங்கள். நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் கூறினார். இதோ அண்ணாமலையிடம் பத்து லட்சம் பேர் இருக்கிறார்கள். உலகையே மாற்றிக் காட்டலாம்.

    பெரிதினும் பெரிது கேட்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்.

    Share
  • விஜய் எனும் சாதனையாளன்

    விஜய் எனும் சாதனையாளன்

    அண்ணாகண்ணன்

    ஏனெனில்
    ஓய்வுக்குப் பிறகு இல்லை, உச்சத்தில் இருக்கும்போதே நீ அரசியலுக்கு வந்தாய்

    ஏனெனில்
    கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நீ ஆட்சியைப் பிடித்தாய்

    ஏனெனில்
    மாறி மாறி அமைந்த 59 ஆண்டுக்கால திராவிட ஆட்சியை நீ அகற்றினாய்

    ஏனெனில்
    தனித்து நின்று, ஒன்றே முக்கால் கோடி வாக்குகளை நீ பெற்றாய்

    ஏனெனில்
    வாக்குக்குப் பணம் கொடுத்து வெல்லும் பார்முலாக்களை நீ தூக்கி எறிந்தாய்

    ஏனெனில்
    த.வெ.க. வேட்பாளராகப் பல்வேறு சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றி பெற வைத்தாய்

    ஏனெனில்
    பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்தாய்

    ஏனெனில்
    இளைஞர்களை நீ முன்னிறுத்தினாய். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள்

    ஏனெனில்
    அரசியல் பொதுக்கூட்டம், மாநாடு, பரப்புரை ஆகிய அனைத்தையும் குறுகிய நேரத்தில் நிகழ்த்தினாய். இதன் மூலம் புதியதொரு விதி செய்தாய்

    ஏனெனில்
    உன் மதத்தை நீ மறைக்கவில்லை. நான் ஜோசப் விஜய் என்று வெளிப்படையாகச் சொன்னாய்

    ஏனெனில்
    எளிய திரைப்பட ரசிகர்களை நீ அரசியல்மயப்படுத்தினாய்

    ஏனெனில்
    வாக்குரிமை இல்லாத குழந்தைகள் மனத்தையும் நீ வெற்றி கொண்டாய்

    ஏனெனில்
    மக்களின் நம்பிக்கையாக, மாற்றத்தின் அடையாளமாக நீயே இருக்கிறாய்

     

    Share
  • சந்தா ஓ சந்தா பாடலில் ஒரு பிழை

    சந்தா ஓ சந்தா பாடலில் ஒரு பிழை

    அண்ணாகண்ணன்

    சந்தா ஓ சந்தா என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 1998ஆம் ஆண்டு வெளியான கண்ணெதிரே தோன்றினாள் படத்தில், தேவா இசையில், வைரமுத்து எழுதிய பாடல்.

    காதலனை எண்ணிக் காதலி நெஞ்சுருகிப் பாடுகிறாள். இந்தப் பாடலின் கடைசிச் சரணத்தில் இந்த வரிகள் வருகின்றன.

    பாவை உன்னைக் கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா?
    உனக்குள் சென்ற காற்று வேண்டும், எனக்கு மட்டும் தருவாயா?

    இந்த இரண்டாவது வரியைக் கேட்டு வியந்தேன்.

    மனிதன் ஆக்சிஜனை உள்ளிழுத்து சுவாசிக்கிறான். ஆனால், கார்பன் டை ஆக்சைடாக அதை வெளியே விடுகிறான். காதலனுக்குள் சென்ற காற்று வேண்டும் என்றால், அதை அவன் கார்பன் டை ஆக்சைடாகத்தான் வெளியிட முடியும். அதை மீண்டும் காதலி சுவாசிக்க முடியாது. அப்படியானால், அந்தக் கார்பன் டை ஆக்சைடை வைத்துக் காதலி என்ன செய்வாள்? எதற்காக அதைப் பரிசாகக் கேட்கிறாள்?

    வைரமுத்து எழுதிய பாடல்கள் பலவும் அறிவியல் பார்வையும் அறிவியல் செய்திகளும் நிறைந்தவை. இந்தப் பாடலில் எப்படி அவர், அறிவியலுக்கு ஒவ்வாத ஒன்றை எழுதினார்?

    சந்தா ஓ சந்தா என்றால் என்ன பொருள் என்றும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

    Share
  • அரவிந்தன் பற்றிய ஜெயமோகன் கருத்துகள் – எனது பார்வை

    அரவிந்தன் பற்றிய ஜெயமோகன் கருத்துகள் – எனது பார்வை

    அண்ணாகண்ணன்

    அரவிந்தன், அஞ்சலி, சர்ச்சை என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய பதிவைப் படித்தேன்.

    ‘கீழ்மையே கீழ்களின் ஆசாரம்’ என்றார் ஜெயகாந்தன் என ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அச்சமே கீழ்களது ஆசாரம் என்று எழுதியவர், திருவள்ளுவர். ஜெயகாந்தன் இவ்வாறு ஏதும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை.

    /அரவிந்தனுக்கு தன் அடிப்படைச் சூழலில் இருந்து உருவான ஓர் இயல்பு இருந்தது என இன்று நினைக்கிறேன். அது ‘அன்றன்றைய முதலாளிகளுக்கு விசுவாசமாக நயந்து இருத்தல்’ என வரையறுக்கத்தக்கது./

    இவ்வாறு நயந்து இருக்க வேண்டிய தேவை, இன்று பெரும்பாலோரிடம் இருக்கிறது. இது, படிநிலை அமைப்பினைக் கொண்டது. படிநிலையில் கீழே உள்ளோர், மேலே உள்ளோரிடம் அப்படித்தான் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அவர்களால் அங்கே பணியாற்ற முடியாது, வாழவும் முடியாது.

    காவல் துறையில், அரசு அலுவலகங்களில், கட்சி அதிகார அடுக்குகளில். கல்வி நிலையங்களில், ஆன்மீக நிறுவனங்களில், ஊடகத் துறையில், குடும்பங்களில் இப்படி எல்லா இடங்களிலும் இதை நேரடியாகக் காணலாம். இது தனி நபர்களின் கீழ்மை இல்லை. இந்தச் சமுதாயத்தின் அவல நிலை. எங்கெங்கும் கிளைபரப்பி, வேர் ஊன்றி இருக்கும் அதிகாரத்தின் கோர முகம்.

    தங்களுக்கென உச்சமான, தனித்த செல்வாக்கு, புகழ், ஆற்றல் கொண்டோர் மட்டுமே சற்றே சக நிலையில் உரையாடலாம். ஜெயமோகன், தான் பணியாற்றிய திரைப்படங்களில் இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் நயந்து இருக்கவில்லையா? வைரமுத்துக்கு வாழ்த்துக் கூறும் கமல் ஹாசனை வாழும் தமிழ் நிகழ்வின் தூதுவராக அறிவிக்கவில்லையா?

    /அவர் இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார்/ என முந்தைய அஞ்சலிக் குறிப்பில் எழுதியிருந்தார்.

    இரண்டாவது குறிப்பில் /அவருக்கு இந்தியா டுடே இதழில் வேலை கிடைப்பதற்காக அவரை அழைத்துச்சென்று, ஆர்.எஸ்.எஸ். மேலிடத்தில் இருந்தவர்களை சந்தித்து அவர் தகுதியை விளக்கி வாய்ப்பு வாங்கி கொடுத்தவனும் நான்தான். ஏனென்றால் அன்று நான் முக்கியமானவனாக இருந்தேன்/ என எழுதியுள்ளார்.

    /அரவிந்தனுக்கு வருகிறேன். என் இயல்பால் என்னால் உண்மையாக மட்டுமே வெளிப்பட முடியும். நான் ஒன்றை எழுதிய பின்னரும்கூட அதில் உண்மையாக வெளிப்பட்டுள்ளேனா என பலமுறை யோசிப்பேன். மிகை என்று கொஞ்ச ஐயம் வந்தால்கூட சமநிலைக்கு முயல்வேன். அரவிந்தன் பற்றிய என் அஞ்சலிக்குறிப்பு கூட அவ்வாறான உண்மையான உணர்வின் வெளிப்பாடே./

    இந்த ஒரே பத்தியில், மும்முறை உண்மையாக என எழுதுகிறார். ஆனால், அரவிந்தன், இந்தியா டுடே இதழில் சேர்ந்ததில் ஏன் முன்னுக்குப் பின் முரண்பாடு? இவற்றில் எது உண்மை?

    /உண்மையில் அன்பின் பொருட்டு சொல்லப்பட்ட தகுதிகள் அவை, அன்று அரவிந்தன் எதையும் எழுதி நிரூபித்தவர் அல்ல. மிக இளைஞர். அவருக்கு நான் உதவியது அவர் அந்த உடற்குறையுடன் எடைமிக்க மூட்டையுடன் பேருந்தில் ஏறுவதைக் கண்டு அடைந்த மனவருத்தம் காரணமாகவே. அன்று அவருடன் சென்று அந்த காகித மூட்டைகளை நான் பேருந்தில் ஏற்ற உதவியிருக்கிறேன்./

    ஜெயமோகன் எழுதியதில் மனம் வருத்தும் பகுதி இது. அவருக்குத் தகுதி என்று ஏதும் இல்லை. பரிவு, இரக்கம், பச்சாத்தாபம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் பரிந்துரைத்தேன். வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன் என்கிறார். /இதைக் கடந்து அவரை அந்த இளைஞராக மட்டுமே நினைவில் நிறுத்திக்கொள்வேன்/ என எழுதுகிறார். எழுதி எதையும் நிறுவாத 19 வயது இளைஞரை நினைவில் ஏன் வைக்க வேண்டும்? அன்று அரவிந்தன், ஜெயமோகனை மதித்து அவரை வந்து சந்தித்தார். அப்போது அவர் கடுமையான உடலுழைப்பினை முன்வைத்தார். அவரைப் பார்த்து ஜெயமோகன் பரிதாபப்பட்டார். அதன்பின் அரவிந்தன் எழுதத் தொடங்கிய பிறகு, பேசத் தொடங்கிய பிறகு, இருவருக்குமான விலகல் ஏற்பட்டது.

    அடிப்படையில் ஜெயமோகன், இலக்கியத்தில் தன்னை வியந்து பார்ப்பவர்களையே, ரசிப்பவர்களையே, கொண்டாடுபவர்களையே விரும்புகிறார். விமர்சகர்களைத் தூற்றுகிறார். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று ஆழ்ந்து பார்ப்பதில்லை. என்னை அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள், நான் தாக்கப்பட்ட போது அவர்கள் என்ன செய்தார்கள், நான் நடத்திய நிகழ்ச்சி குறித்து அவர்கள் என்ன பேசினார்கள்… இவை அனைத்தின் பின்னணியில் இருப்பது என்ன? நான் என்பதே ஜெயமோகன் மனத்தில் ஓங்கி நிற்கிறது. தன்னை மையப்படுத்தியே அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார்.

    /இந்தியா டுடேயில் இருந்து வெளிவந்தபின் அரவிந்தன் காலச்சுவடின் விசுவாசியானார். காலச்சுவடு எனக்கு எதிராக திரும்பியபோது காலச்சுவடு முதலாளிகளை மகிழ்விப்பதற்காக என்னை வசைபாடி, நையாண்டி செய்து, அவதூறு செய்து கட்டுரைகள் எழுதினார். தன்பெயரில் பிறபெயரில். ஒன்று இரண்டல்ல, நான் பார்த்தவை மட்டும் ஏறத்தாழ முப்பது கட்டுரைகள். மிகப்பெரும்பாலானவை அப்பட்டமான அவதூறுகள்./

    இந்தக் கட்டுரைகள் எவற்றையும் நான் படிக்கவில்லை. அரவிந்தன் பிற பெயரில் எழுதியதற்கு என்ன ஆதாரம்? அவற்றை அரவிந்தன் தான் எழுதினார் என ஜெயமோகன் எதை வைத்துச் சொல்கிறார்?

    /உதவவேண்டும், ஆனால் உதவியதும் விலகிவிடவும் வேண்டும் என்பதே இன்று பெரிய உதவிகளைச் செய்யும் எல்லா நண்பர்களிடமும் நான் சொல்வது. இன்று உக்கிரமான வசைகளை பொழிபவர்கள் பெற்ற உதவிகள் அவர்களுக்குத் தெரியும்/

    தான் உதவியதிலிருந்து ஜெயமோகன் இன்னும் விலகி வரவில்லை. நண்பர் என்று இல்லை, சக மனிதர் ஒருவருக்குத் தன்னால் இயலக்கூடிய ஒன்றைச் செய்வதை உதவி என்றுகூடச் சொல்லக் கூடாது. அது ஒரு வகையில் நம் கடமை. அறம் என வாய்க்கு வாய் கூறும் ஜெயமோகன், தத்துவங்கள் பற்றி வகுப்பு எடுக்கும் ஜெயமோகன், இந்த நான் என்ற மனோபாவத்திலிருந்து வெளிவரவே இல்லை. நம்மிடம் உதவி பெற்றவர்கள் நம்மிடம் நன்றிக் கடன்பட்டு இருக்க வேண்டும் என்ற மனநிலைதான் அவரிடம் உள்ளது. அவர்களுக்கு உதவுகின்ற வாய்ப்பினை நமக்கு அவர்கள் அளித்தார்கள், நம் உதவியை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என நினைப்பதில்லை. இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையிலிருந்து நவீன சிந்தனை எப்படி வௌிப்படும்?

    /தன்பெயரில் பிறபெயரில். ஒன்று இரண்டல்ல, நான் பார்த்தவை மட்டும் ஏறத்தாழ முப்பது கட்டுரைகள். மிகப்பெரும்பாலானவை அப்பட்டமான அவதூறுகள்./

    /அரவிந்தன் எழுதிய ஒரு கட்டுரைக்குக் கூட நான் எதிர்வினையாற்றியதில்லை. அவதூறுகளை புறக்கணிப்பதே என் வழக்கம்./

    அவதூறுகளை புறக்கணிப்பவர், அகத் தீவிரம் கொண்டவர்… ஆனால், தன்னைப் பற்றிய அத்தனைக் கட்டுரைகளையும் எதிர்வினைகளையும் தேடித் தேடிப் படித்திருக்கிறார். யார், எத்தனைக் கட்டுரைகள் எழுதினார்கள், எந்தப் பெயர்களில் எழுதினார்கள் என அனைத்தும் தெரிகிறது. அவர்கள் எந்த முகாமைச் சேர்ந்தவர்கள், எந்தக் கண்ணோட்டம் கொண்டவர்கள் எல்லாவற்றையும் கண்டறிகிறார். இது, படைப்பு மனோநிலை இல்லை, அரசியல் மனோநிலை.

    /integrity என்பதற்கு ஒரு திமிர் தேவை, அது அவரிடம் இல்லை. உண்மையில் நம் நடுத்தரக்குடும்பத்தினரிடமுள்ள அந்த பணிவு அவர்கள் தங்களை தாங்களெ சிறுமை செய்துகொள்ள வழிவகுக்கிறது. எந்த இளைஞரும் எச்சரிக்கைகொள்ளவேண்டிய ஓர் படுகுழி இது. /

    / அவரே என்னிடம் அவருடைய இரு நாவல்களை அளித்து கருத்து கேட்டார். இதை அவரிடம் நேரிலும் சொல்லியிருக்கிறேன். “கொஞ்சமாவது திமிர் இருக்கணும்” இதுதான் அவரிடம் நான் சொன்ன ஆலோசனை. /

    ஜெயமோகன் விழுந்திருக்கிற படுகுழியே இந்தத் திமிர் தான். இது, தான் சொல்வதே சரி என்று தன்னையே நம்ப வைக்கும். நானே இங்கு முதன்மையானவன் என்று எண்ண வைக்கும். மற்ற யாருடைய தகுதியும் கண்ணுக்குத் தெரியாது. நான் என்ற இறுமாப்பும் இந்தத் திமிரும் ஒன்றோடு ஒன்று கலந்தவை. அவர் யாரைப் பற்றி எழுதினாலும் அதில் சரிபாதிக்கு மேல், தன்னைப் பற்றியே இருக்கும். தனக்குக் கீழேயே அனைவரையும் வைத்திருக்கும்.

    /அவர் மறைந்த இத்தருணத்தில் ‘ஆகா மகத்தான படைப்பாளி’ என்பார்கள் பலர். அது தமிழ்ச்சூழலின் சம்பிரதாயப் பாவனை. ஆனால் அவர் எழுதிய எவையும் எந்த வாசகனையும் எவ்வகையிலும் தொட்டதில்லை./

    நடுநிலையான ஒருவர், இந்தக் கருத்தை முன்வைக்க முடியுமா? இதை ஆபாசம், அபாண்டம், அநீதி என எந்தப் பெட்டியில் போடலாம் என நீங்களே முடிவு செய்யுங்கள். அரவிந்தனின் புதிய பார்வையும் ஆழமான கருத்துகளும் கச்சிதமான நடையும், என்னைக் கவர்ந்துள்ளன. என்னைப் போல் யாரும் சொன்னால், நீங்கள் வாசகரே இல்லை என்று ஜெயமோகன் கூறுவார்.

    அரவிந்தன் எழுதிய அனைத்தும் சரியானவை, சிறப்பானவை என்று நான் சொல்லவில்லை. சமரசங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். இது, ஜெயமோகன் உள்ளிட்ட படைப்பாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்ற குறளை நாம் நினைத்துக்கொள்ள வேண்டும்.

    /உண்மையில் அன்பின் பொருட்டு சொல்லப்பட்ட தகுதிகள் அவை/

    அன்பு மிகுந்திருந்த போது, அவருடைய தகுதிகளைத் தேடி எடுத்துரைத்தார். அன்பு வற்றிய பிறகு, குறைகளைத் தேடிச் சொல்கிறார். சிக்கல், அரவிந்தனிடம் மட்டும் இல்லை. அன்பு குறைந்துபோனதிலும் தான் இருக்கிறது.

    Share
  • டி.ஐ.அரவிந்தன்: ஜெயமோகன் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் சில சிக்கல்கள்

    டி.ஐ.அரவிந்தன்: ஜெயமோகன் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் சில சிக்கல்கள்

    அண்ணாகண்ணன்

    அரவிந்தன் குறித்து ஜெயமோகன் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் வேறு சில சிக்கல்களும் உள்ளன.

    தார்ஷியா என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிக்கொண்டிருந்த டி.ஐ.அரவிந்தனின் தந்தைதான் எனக்கு முதலில் அறிமுகம் என்ற முதல் வாக்கியமே மயக்கம் கொண்டது. தார்ஷியா என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தவர் டி.ஐ.அரவிந்தன் என்ற பொருளும் இதில் வருகிறது. எழுத்துத் துறையில் அதிக அனுபவம் கொண்ட ஜெயமோகன், இப்படி மயக்கம் தரும் சொல்லாட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

    ஒரு நாள் சில கதைகளை என்னிடம் அளித்தார். அவற்றை செம்மை செய்து வெளியிட்டேன் என்று சொன்னதன் மூலம், அவை செம்மை செய்ய வேண்டிய நிலையில் இருந்தன என்று சொல்கிறார். நான் செம்மை செய்யும் இடத்தில் இருந்தேன் என்றும் சொல்கிறார்.

    அச்சகங்களில் வெட்டிப்போட்டபின் மிஞ்சும் விளிம்புத்தாள்களை சேகரித்து குறிப்பேடுகள் தயாரிப்பவர்களிடம் விற்கும் தொழிலை அன்று செய்துகொண்டிருந்தார் என்று சொல்வதில் தவறில்லை. எந்தத் தொழிலும் தாழ்வானதோ இழிவானதோ இல்லை. அந்த இடத்திலிருந்து எந்த இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தார் என்றும் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து அவர் எப்படி மேலெழுந்து வந்தார் என்றும் தனது படைப்பியக்கத்தை எப்படித் தொடர்ந்தார் என்றும் எழுதியிருக்க வேண்டும். சக படைப்பாளியாக அவரது இடம் எது என்றாவது எழுதியிருக்கலாம்.

    கடுமையான உடலுழைப்புக்கு இயலாத சிறிய உடற்குறைபாடு கொண்டிருந்தாலும் அன்று மிகக்கடினமான அப்பணியைச் செய்யவேண்டியிருந்ததது என்பது தேவையற்ற குறிப்பு. உடற்குறைபாடு இருந்தாலும் சவாலான பணிகளைச் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் நெஞ்சுரத்தைப் பாராட்ட வேண்டும். இயன்றால் உதவ வேண்டும். ஆனால், கழிவிரக்கம் கொள்வதும் உடற்குறையைச் சுட்டிக் காட்டுவதும் உயர்ந்த பண்பு இல்லை.

    /அவரும் அவர் தமையனும் அவருடைய தந்தை உருவாக்கிய மூன்று குடும்பங்களின் பொறுப்பையும் ஏற்று உழைத்து முன்னெடுத்துக்கொண்டிருந்த காலம் அது/

    அவருடைய தந்தை, மூன்று குடும்பங்களை உருவாக்கியது இங்கே எதற்காக? ஒருவேளை அது உண்மையெனில், மூன்று குடும்பங்களின் பொறுப்பை ஏற்று உழைத்து முன்னெடுத்த அரவிந்தனும் அவர் தமையனும் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள். எழுச்சி மிகுந்த வீரர்களாக அவர்களை முன்வைத்திருக்க வேண்டும். ஜெயமோகனோ, இதையும் ஐயோ பாவம் எனக் கழிவிரக்கம் கொள்ள வைப்பது போலவே எழுதியுள்ளார்.

    எழுத்துத் துறையில், இதழியல் துறையில் 30 ஆண்டுக்காலம் பணியாற்றிய பிறகும் ஒருவரின் முந்தைய தொழில்தான், ஜெயமோகன் நினைவுக்கு வருகிறது. அவரது உடற்குறை, நினைவுக்கு வருகிறது. மாணவராக அவர் இருந்தது நினைவுக்கு வருகிறது. மிக இளைஞராக அவரைச் சந்தித்த முகம்தான் நினைவில் எழுகிறது. அவர் தந்தையாரின் மூன்று குடும்பங்கள், நினைவுக்கு வருகின்றன.

    ஓர் ஐந்தாண்டுக்காலம் அவருடன் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்தது எனச் சொல்லும் ஜெயமோகன், அது குறித்து விரிவாகச் சொல்லியிருக்க வேண்டும். அந்த உரையாடலில் இருவரின் நிலைப்பாடு என்ன? முன்வைத்த கருத்துகள் எவை? என்று பேசியிருந்தால், அரவிந்தனைப் பற்றிய நல்ல சித்திரம் உருவாகியிருக்கும்.

    ஐந்தாண்டுகள் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்த காலத்திலும் ஜெயமோகனுக்கு இவையே நினைவில் அழுத்தமாக மேலோங்கியிருக்கும் என்பது கசப்பான நிஜம். அரவிந்தன் தானும் ஓர் அறிவுஜீவியாக உரையாடியிருப்பார். ஜெயமோகனோ, மேட்டிமை எண்ணத்துடன் அரவிந்தனை அந்தக் கால வட்டத்திலேயே வைத்திருப்பார். இது இயல்பான, ஆரோக்கியமான உரையாடலுக்கு உகந்த சூழல் இல்லை.

    /இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார்/

    இதில் ஜெயமோகன் என்ன சொல்கிறார்? அரவிந்தன், தன் திறமையால், தகுதியால் இந்தியா டுடே இதழில் சேரவில்லை. நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார் என்பது ஏதோ சிபாரிசில் சேர்ந்தது போல் எழுதுகிறார்.

    காலச்சுவடு அணியில் இணைந்த பின், என் மேல் அவர் முழுமையான ஓர் எதிர்மனநிலையில் நீடித்தார் என ஜெயமோகன் சொல்வதைக் கவனிக்க வேண்டும். காலச்சுவடு அணியில் இணைந்துவிட்டால், அவர் எதிர்மனநிலைக்குச் சென்றுவிடுவார் என்பது உண்மையில் அரவிந்தனுக்குச் சொந்தமான சிந்தனை இல்லை என்று கூறுவதாக உள்ளது. காலச்சுவடு மீதான விமர்சனமாகவும் இதைக் கருதலாம்.

    ஒருவரது வாழ்க்கையில், வரலாற்றில் எத்தகைய விவரங்களுக்கு ஜெயமோகன் முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது, இதிலிருந்து புலனாகிறது. உண்மையில், ஜெயமோகனின் மனச் சித்திரமே இதில் அதிகம் வெளிப்படுகிறது.

    அரவிந்தன் இலக்கியத் தடம் என்ற நூல் வெளிவர வேண்டும். அதுவே, இத்தகைய அக்கப்போர்களுக்கு உரிய பதிலாக இருக்கும்.

    Share
  • அஞ்சலி: எழுத்தாளர் அரவிந்தன்

    அஞ்சலி: எழுத்தாளர் அரவிந்தன்

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர், காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் (D.i. Aravindan) மறைந்த செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது. சுமார் 25 ஆண்டுகளாக என் நண்பர். 2001 – 2003 காலக்கட்டத்தில் உலகத் தமிழ் மின்னிதழில் அவர் ஆசிரியராக இருந்த போது, அவரை நேர்கண்டேன். தமிழில் இணைய இதழ்கள் என்ற என் எம்.பில். ஆய்வேட்டிலும், அதே பெயரில் பின்னர் வெளியான புத்தகத்திலும் அந்த நேர்காணல் இடம்பெற்றது. அதன் பிறகு பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும் சந்தித்து வந்தோம்.

    அமுதசுரபியில் (2003 – 2005) நான் ஆசிரியராக இருந்தபோது, சுந்தர ராமசாமி குறித்த விமர்சனங்களை ஓர் இதழில் வெளியிட்டோம். வெங்கட் சாமிநாதன், கிருஷ்ணன் வெங்கடாசலம் Krishnan Venkatachalam உள்ளிட்டோர், சு.ரா.வை விமர்சித்து எழுதினர். அதற்குப் பிறகு, சென்னை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (பிலிம் சாம்பர்) ஒரு முறை சுந்தர ராமசாமி பேசினார். அவர் பேசி முடித்து அரவிந்தனுடன் வெளியே வந்தார். அப்போது, எதிரே நான் வந்தேன். சுந்தர ராமசாமியிடம் அரவிந்தன், இவர்தான் அண்ணாகண்ணன் என அறிமுகப்படுத்தினார். ஓ, நீங்கள்தானா என்று சு.ரா. சற்றே கடுமையாக ஏறிட்டுப் பார்த்தார். நீங்கள் நன்றாகப் பேசினீர்கள் என்றேன். நான் எப்போதுமே நன்றாகப் பேசுவேன் என்றார். நான், சுந்தர ராமசாமியைச் சந்தித்ததற்கு இருந்த ஒரே சாட்சியான அரவிந்தனும் இப்போது இல்லை.

    புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, பத்திரிகையாளர்களுக்கான சிறப்புத் திரையிடலுக்கு அழைப்பார்கள். அவற்றில் அரவிந்தனுடன் இணைந்து திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். பிஆர்ஓ நிகில் முருகன், அவரை நல்ல கிரிட்டிக் (விமர்சகர்) என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்துவார்.

    அரவிந்தன், அழுத்தமான விமர்சனப் பார்வை கொண்டவர். ஆனால், மென்மையான, அமைதியான, கனிவான இயல்பு கொண்டவர். அரவிந்தன், இந்தியா டுடே, இந்து தமிழ் திசை போன்ற வணிக இதழ்களில் இருந்தாலும், தீவிரமான நடையிலேயே எழுதி வந்தார். மீண்டும் அவர் காலச்சுவடு நிறுவனத்துக்குத் திரும்பியது, ஒரு வகையில் வீடு திரும்பலே. ஆண்டுதோறும் சென்னைப் புத்தகக் காட்சியில் சந்தித்து வந்தோம்.

    எப்போதும் மழித்த முகத்துடன், சிரித்த முகத்துடன் இளைஞராகவே வலம் வந்தார். பெரிதாக எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார். அவர் மனைவி ஸ்ரீதேவியும் அதே போன்று புன்னகை மாறாமல் இருப்பவர். இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவரும் குழந்தைகளும் பெற வேண்டும். அரவிந்தன், நினைவுகளால் வாழ்வார். நித்தியத்தில் தோய்வார்.

    நெஞ்சார்ந்த அஞ்சலி.

    Share
  • மகளிர் உரிமைத் தொகையை என்ன செய்யலாம்?

    மகளிர் உரிமைத் தொகையை என்ன செய்யலாம்?

    அண்ணாகண்ணன்

    மகளிர் உரிமைத் தொகையாக, 1.31 கோடிப் பேருக்குத் தலா 5 ஆயிரம் என்ற அளவில் ரூ.6550 கோடியைத் தமிழக அரசு விடுவித்துள்ளது. இது பணப் புழக்கத்தை அதிகரிக்கும் என நம்புகிறார்கள். இதே போன்று, மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் என்ற அளவில் ரூ.1310 கோடியை அரசு விடுவித்து வருகிறது.

    பெண்கள் அன்றாடச் செலவுகளுக்கு இதைச் செலவிடாமல், வேறு வழிகளில் செலவிட்டால் அவர்கள் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பு உண்டு. இந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்யலாம்? எப்படிச் செலவிடலாம்? இதோ என் யோசனைகள்.

    தமிழ்நாடு மகளிர் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கி, இந்த 1.31 கோடிப் பேரும் அதில் சேர வேண்டும். இவர்கள் அனைவரும் தங்களுக்குள் தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    மகளிர் அனைவரின் பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொழில் உள்ளிட்ட விவரங்களைத் தொகுக்க வேண்டும். இவர்களைத் தொழில் அடிப்படையில், ஊர் அடிப்படையில், கல்வித் தகுதி / திறன் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவையும் ஒருவர் வழிநடத்த வேண்டும்.

    இந்தக் குழுக்கள் மாதந்தோறும் சந்தித்துத் தங்கள் தேவைகள், சிக்கல்கள், சவால்கள் ஆகியவற்றைப் பற்றிக் கலந்துரையாட வேண்டும். இந்தச் சிக்கல்களுக்கு அந்தக் குழுவிலேயே தீர்வு கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால், இதர குழுக்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஒருவேளை, தங்கள் அமைப்பிற்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், வெளியிலிருந்து ஆலோசனைகளைப் பெறலாம்.

    இந்த அமைப்பு, தொழில்முனைவுப் பிரிவு ஒன்றையும் உருவாக்க வேண்டும். அதை ஆதரிக்க, நிதி முதலீட்டுப் பிரிவையும் தொடங்க வேண்டும். தொழில்முனைவில் ஆர்வம் கொண்ட பெண்கள் அதில் சேர வேண்டும். தாங்கள் எந்தத் தொழில் தொடங்க விரும்புகிறோம், அதில் தங்களுக்கு என்ன திறமை இருக்கிறது, எவ்வளவு முதலீடு தேவை, எப்போது திருப்பிச் செலுத்த முடியும் என எடுத்துரைக்க வேண்டும் (Investment Pitch).

    நிதி முதலீட்டுப் பிரிவில், வாய்ப்புள்ள, ஆர்வமுள்ள பெண்கள், தங்கள் சேமிப்பையும் உரிமைத் தொகையையும் முதலீடு செய்ய வேண்டும். இவர்களின் பிரதிநிதிகள், உரிய தொழில்முனைவுத் திட்டங்களில் ஆராய்ந்து முதலீடு செய்வார்கள். இதன் மூலம், அந்தத் தொழில்களில் இவர்கள் முதலீட்டாளர்களாக, பங்குதாரர்களாக மாறுவார்கள். இது ஒரே நேரத்தில் தொழில்முனைவோர், முதலீட்டாளர் ஆகிய இருவருக்கும் பயன் அளிக்கும்.

    இதற்குத் துணையாக, வேலை தேடும் பெண்களுக்காகச் செயல் மகளிர் என்ற அமைப்பினை உருவாக்க வேண்டும். தொழில்முனைவோர் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை, விநியோகஸ்தர்களை இந்தச் செயல் மகளிர் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

    தொழில்முனைவோர் உருவாக்கும் பொருள்களை, சேவைகளை இதர மகளிருக்குத் தள்ளுபடி விலையில் வழங்கலாம். இது விற்பனை வலையமைப்பாக உருவெடுக்கும். பொருள்களை உருவாக்குவது, விற்பது, விநியோகிப்பது, கொண்டு சேர்ப்பது ஆகிய அனைத்திலும் பெண்களை ஈடுபடுத்தலாம். இதன் மூலம் இந்த நிதி, பல்கிப் பெருகும். முதலீட்டாளர் அனைவருக்கும் லாபம் கிடைக்கும். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.

    எதிர்காலத்தில் இந்தப் பெண்கள் தங்களுக்குள் கூடிப் பேசி, உள்ளாட்சித் தேர்தல் முதல் பாராளுமன்றத் தேர்தல் வரை போட்டியிடவும் செய்யலாம். தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, இவற்றை நிறைவேற்றினால் மட்டுமே வாக்களிப்போம் என வலியுறுத்தலாம்.

    தங்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்த நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மாற்றுச் சக்தியாகப் பெண்கள் உருவெடுக்கலாம். அதிகாரத்தை வென்றெடுக்கலாம். தங்களுக்குத் தேவையான தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கல்வி, அரசியல் உள்ளிட்ட அனைத்தையும் தாங்களே தீர்மானிக்கலாம். அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடிக்கலாம்.

    தமிழ்நாட்டு மகளிர், இதைக் குறித்துச் சிந்திக்க வேண்டுகிறேன்.

    Share
  • நரேந்திர மோடியின் திருப்புமுனைப் பணிகள்

    நரேந்திர மோடியின் திருப்புமுனைப் பணிகள்

    அண்ணாகண்ணன்

    இந்தியாவின் தீர்க்க முடியாத சிக்கல்களாக, நெடுங்காலமாக நீடித்த பலவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாகத் தீர்த்துள்ளார்.

    * காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகைகளை நீக்கி, யூனியன் பிரதேசமாக மாற்றியது
    * பாபர் மசூதி வழக்கு முடிவு பெற்று, அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை நிர்மாணித்தது
    * பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு
    * பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு
    * முத்தலாக் தடைச் சட்டம்
    * தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது அனேகமாக நிறுத்தப்பட்டது
    * 12 கோடி வங்கிக் கணக்குகள் தொடக்கம். மானியங்கள், அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றன
    * பாஸ்டாக் வழியே சுங்கக் கட்டணம்
    * யூபிஐ வழியே பணப் பரிமாற்றம்
    * இந்திய ரூபாயில் இதர நாடுகளுடன் வர்த்தகம்
    * ரூ.12 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு

    இந்த இலக்குகளை எட்டுவதில் அவருக்கு ஏராளமான தடைகள் இருந்தன. கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார். ஆனால், துணிச்சலாக இவற்றை நிறைவேற்றினார். தொலைநோக்குடன் முடிவுகளை எடுத்தார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயர்த்தினார். எழுச்சி மிக்க புதிய இந்தியாவை மீண்டும் கட்டமைத்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

    துணிவும் தொலைநோக்கும் ஆளுமையும் உறுதியும் மிக்கவராக நரேந்திர மோடி திகழ்கிறார். இன்று 75ஆவது பிறந்தநாள் காணும் அவர் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.

    Share
  • ஆசிரியர் பவளசங்கரி பிறந்த நாள்

    ஆசிரியர் பவளசங்கரி பிறந்த நாள்

    அண்ணாகண்ணன்

    இன்று பிறந்த நாள் காணும் வல்லமை நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்கள் நீடூழி வாழ்க.

    தமிழக அரசின் அம்மா இலக்கிய விருது பெற்றவர், 20க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், கிம் யாங் ஷிக் கவிதைகளைக் கொரிய நாட்டுக் கவிக்குயில் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர், லெஸ்லி டவுனர் எழுதிய கெய்ஷா நூலைத் தமிழில் பெயர்த்தவர், கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம், கொங்கு நாட்டு வரலாறு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தமிழ் கொரியத் தொடர்புகள் குறித்த ஆய்வறிஞர், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையை நிறுவி நடத்துபவர், வல்லமை மின்னிதழை வழிநடத்தும் ஆதார சக்தி, திறமையாளர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவிப்பவர், ஆற்றல் வாய்ந்த பேச்சாளர், ஆளுமை மிகுந்த நிர்வாகி, அயராத உழைப்பாளர் பவளசங்கரி அவர்கள், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க

    இந்தப் படம், 2011ஆம் ஆண்டு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தில் எடுத்தது. பின்னணியில் எழுத்தாளர் சுபாஷினி திருமலை

    Share
  • வாட்ஜ் பேங்க் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம்

    வாட்ஜ் பேங்க் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம்

    அண்ணாகண்ணன்

    கச்சத் தீவை இலங்கைக்கு அளித்த போது, வாட்ஜ் பேங்க் என்ற பகுதி, இந்தியாவிற்கே சொந்தம் என்ற ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த வாட்ஜ் பேங்க் பகுதியில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவை இருந்தால், அவையும் இந்தியாவிற்கே சொந்தம் என உறுதி செய்யப்பட்டது.

    வாட்ஜ் பேங்க் என்பது கன்னியாகுமரிக்கு தெற்கில் 50 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடற்பகுதி. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் 200 மீட்டர் அளவுக்கு இருக்கும். வாட்ஜ் பேங்க் பகுதி 4,000 சதுர மைல் (சுமார் 6,500 சகிமீ) பரப்பளவுடையது. இந்தப் பகுதியில் கடல் பல்லுயிர் வளம் அதிகம் என்பதால் மீன் வளமும் அதிகம்.

    வாட்ஜ் பேங்க் பகுதி மீன் மற்றும் பல்லுயிர் வளத்திற்காக அறியப்பட்ட பகுதியாக இருந்தாலும் இந்தப் பகுதியில் பெட்ரோலியம் கிடைக்கும் சாத்தியமும் இருப்பதாக இந்தியா கருதுகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், வாட்ஜ் பேங்க் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று இடங்களில் பெட்ரோலியம் கிடைக்க வாய்ப்புள்ளதா என ஆராய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது.

    ஆனால், இதைக் கன்னியாகுமரி மீனவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இவர்களை ஆதரித்து, அரசியல் கட்சிகள் பலவும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து, இதற்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

    இந்தப் பகுதியில் இருக்கும் வளங்களுக்காக இலங்கை பங்கு கேட்கக் கூடாது என்பதற்காகவே கச்சத் தீவை இந்திய அரசு விட்டுக் கொடுத்தது. இப்போது, இந்த வளங்களை ஆராயக் கூடாது என்று தமிழக மீனவர்கள் போராடுகின்றனர். கொல்லம் பகுதியில் ஆராய்வதைக் கேரள மீனவர்களும் எதிர்க்கின்றனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

    இந்தச் சிக்கலைத் தீர்க்க, என் யோசனை இதோ.

    இந்தத் துரப்பணப் பணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்காமல், அரசே இதை நேரடியாக நடத்தலாம். குறிப்பாக, தமிழக அரசு ஒரு புதிய நிறுனத்தை உருவாக்கலாம். தமிழகப் பகுதிகளில் இருக்கும் எண்ணெய், எரிவாயு வளங்களை ஆராய்வது, துரப்பணம் செய்வது ஆகிய பணிகளை இந்த நிறுவனமே மேற்கொள்ளலாம். அவ்வாறு இயற்கை வளம் கண்டறியப்பட்டால், அதை எடுப்பதால் வரும் லாபத்தில் ஒரு பகுதியை இந்தப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் செலவிடலாம். இங்குள்ள மக்களில் தகுதி உடையோருக்கு இதன் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கலாம். அரசே முன்னின்று நடத்துவதால், இதன் மீது மீனவர்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.

    உலகின் பல பகுதிகளில் நிலத்தில் அல்லது ஆழ்கடலில் இவ்வாறு எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை எடுத்து வருகின்றனர். அவ்வாறு எடுக்கும் பெட்ரோலியப் பொருள்களை நாம் இங்கே விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம். நம் பகுதியில் அவ்வாறு ஒன்று கிடைக்கும் வாய்ப்பு இருக்குமாயின், அது குறித்து ஆராயக் கூடாது என்பது சரியா?

    சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் திட்டங்களை நிறைவேற்ற, அறிவியல்பூர்வமான பார்வை தேவை. உணர்வுப்பூர்வமாக அணுகுவது, சிக்கல்களைத் தீர்க்காது. நமக்குத் தேவையான தீர்வு, நம் காலடியில் கூட இருக்கலாம்.

    Share
  • நினைவஞ்சலி – நாகேஸ்வரி அண்ணாமலை

    நினைவஞ்சலி – நாகேஸ்வரி அண்ணாமலை

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர், முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை (85 வயது), 2025 ஆகஸ்டு 1 அன்று மறைந்தார் என்ற கொடும் செய்தி, இன்று வந்து சேர்ந்தது. இது குறித்து அவர் கணவர், பேராசிரியர் இ.அண்ணாமலை விடுத்துள்ள உருக்கமான மடல் இங்கே:

    Nageswari, my wife of nearly sixty years of companionship and comfort, left me, and us, at 5.00 p.m. on August 01 in hospital. She passed away peacefully. She was 85. Her lungs got weaker in the last few months as her body got progressively more fatigued from poor appetite and reduced intake that started with some health problems in the last year. I feel that a part of me slipped away and another part says that she is still around me, supporting and critiquing. Yet, emptiness weighs me down.

    My Soliloquy

    ‘சாதலும் புதுவது அன்றே’
    புரிகிறது புறம்

    உண்மை உறவு மரிப்பதில்லை.
    தெரிகிறது அதுவும்.
    இருந்தும்,

    தோளோடு தோள் நின்ற தோழமையைத்
    தோளிலிருந்து இறக்க முடியவில்லை.
    இறப்பை, இழப்பை மறக்க முடியவில்லை.

    என் செய்வேன்?

    பேராசிரியரின் கைகளைப் பற்றிக்கொள்கிறோம். உங்கள் துயரில் பங்கு கொள்கிறோம். நாகேஸ்வரி அம்மா, மறையவில்லை. நம்முடனே, நம் சிந்தையில் வாழ்கிறார். தமது ஈர எழுத்துகளில், அறம் சார்ந்த ஆக்கங்களில் வாழ்கிறார்.

    சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற நாகேஸ்வரி அவர்கள், 1966 முதல், அமெரிக்காவில் வசித்தவர். கணவருடன் கருத்தொருமித்து வாழ்ந்தவர். அமெரிக்காவின் எந்த ஆடம்பரமும் இவர்கள் மீது ஒட்டவே இல்லை.

    வல்லமைக்கு நாகேஸ்வரி அவர்களின் படைப்புகள், பெரும் வலுச் சேர்த்தன. அதன் பெருமையை உயர்த்தின. அமெரிக்காவின் புதிய தரிசனங்களை, அதன் துல்லியமான சித்திரங்களை வல்லமையில் தொடர்ந்து எழுதினார். சொந்த அனுபவத்துடன் கூடவே, சமூகவியல் காரணங்களுடன், அரசியல் விமர்சனங்களுடன் தனது பார்வைகளை முன்வைத்தவர்.

    வல்லமை மின்னிதழில் மிகச் சிறப்பான கட்டுரைகள் பலவற்றை அவர் எழுதினார். பத்தி எழுத்தாளராக, அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் எழுதி வந்தார். இவை உண்மையான, நேர்மையான, ஆழமான கட்டுரைகள். அதே நேரம், எளிமையானவை. கடினமான சொற்களோ, கரடு முரடான வரிகளோ இல்லை. நீரோட்டம் போன்ற நடையில், நறுக்கென மனத்தில் தைக்கும் விதமாக எழுதினார். நாகேஸ்வரியின் கட்டுரைகளை வியந்து கொண்டாடி, தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியோர் பலர்.

    நாகேஸ்வரி அண்ணாமலை கட்டுரைகள்

    நாகேஸ்வரி அவர்கள், துணிவும் பரிவும் ஒருங்கே கொண்டவர். தமிழ்நாட்டில் பேருந்தின் படிகள் உயரமாக இருக்கின்றன, அதில் ஏற எனக்குச் சிரமமாக இருக்கிறது என எழுதினார். கல்வித் துறையில் முனைவர் பட்டங்களும் துணைவேந்தர் பதவிகளும் காசுக்கு விற்கப்படுவதைக் கண்டித்து எழுதினார். ஊழல் அரசியல்வாதிகளைச் சாடினார். அதிபர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் அவரது விமர்சனங்களுக்குத் தப்பவில்லை.

    அமெரிக்காவைப் பற்றி மட்டுமல்லாது, பாலஸ்தீனம், இஸ்ரேல், கியூபா, வியட்னாம் எனப் பல நாடுகள் குறித்தும் எழுதினார். இவற்றுள் பயண இலக்கியமும் உண்டு. வல்லமையில் இவர் எழுதிய கட்டுரைகள், பின்னர் நூல் வடிவம் பெற்றன. இணையத்தில் வேறு இதழ்களிலும் எழுதத் தொடங்கினார். தனி நூல்களும் படைத்தார். *அமெரிக்காவின் மறுபக்கம்*, *அமெரிக்க அனுபவங்கள்*, *பலஸ்தீன–இஸ்ரேல் போர்*, *கியூபாவின் விடுதலை வெற்றி*, *வியட்நாமில் அமெரிக்கப் போர்*, *ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை* ஆகிய நூல்கள், அவரது அழுத்தமான பங்களிப்புகள்.

    எளிய கிராமத்துப் பெண்ணாகத் தம் வாழ்வைத் தொடங்கிய நாகேஸ்வரி, பழுத்த அனுபவத்துடன், பரந்த உலகை வலம் வந்தவர். வளமான, வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும் எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர், வஞ்சிக்கப்பட்டோர் பக்கமே அவர் எப்போதும் நின்றார். அவர்களின் நியாயங்களுக்காகக் குரல் கொடுத்தார்.

    வல்லமைக்குப் பெரும் தூணாக, தமிழ்கூறு நல்லுலகின் சுடர்மிகு எழுத்தாளராகத் திகழ்ந்த முனைவர் நாகேஸ்வரி அவர்களின் மறைவுக்கு வல்லமை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    நாகேஸ்வரி அம்மா, என்றென்றும் நம் நினைவுகளில் வாழ்வார்.

    Share
  • தன்கர் எங்கே? & முகிலன் எங்கே?

    தன்கர் எங்கே? & முகிலன் எங்கே?

    அண்ணாகண்ணன்

    குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரைக் காணவில்லை. பதவி விலகிய பிறகு அவர் இருக்கும் இடமே தெரியவில்லை என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என ஐயம் எழுப்புகிறார்கள். தன்கர் எங்கே என முழங்கி வருகிறார்கள்.

    தன்கரைக் காணவில்லை என அவரைச் சார்ந்தவர்கள், குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் மட்டும் இதை ஊதிப் பெரிதாக்கி வருகின்றன.

    இதே போன்ற முழக்கத்தை எங்கோ பார்த்திருக்கிறோமே என யோசித்த போது, எங்கே முகிலன் நினைவுக்கு வந்தது. முகிலன், ஸ்டெர்லைட், கூடங்குளம், காவிரி மணல்கொள்ளை போன்றவற்றுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் பங்கேற்றார். திடீர்ப் போராளியாகப் பல கூட்டங்களில் தோன்றினார்.

    2019 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அன்று இரவு முதல் முகிலனைக் காணவில்லை எனத் திமுக தரப்பில் பலரும் எழுதினார்கள். எங்கே முகிலன், முகிலன் எங்கே போன்ற ஹேஷ்-டாக்குகளில் பலரும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்கள். தோழர் எங்கே? கடத்தப்பட்டாரா? கொல்லப்பட்டாரா? எனப் பலவிதமான கோணங்களில் அலசினார்கள். காணாமல் போய் இன்று இத்தனாவது நாள் என ஒவ்வொரு நாளும் பதற்றத்தை ஏற்றினார்கள். கொட்டை எழுத்துகளில் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தன. அப்போது இருந்த அதிமுக அரசின் மீதும் காவல் துறை மீதும் ஐயம் எழுப்பினார்கள். அரசுக்கு எதிரான அலையை எழுப்பியதில் இந்த எங்கே முகிலன் என்ற பரப்புரைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

    தேர்தல் முடிந்து, மே 23 அன்று முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களைத் திமுக கூட்டணி வென்றது.

    முகிலன் காணாமல் போனது குறித்து, பிபிசி வெளியிட்டுள்ள செய்தியின் ஒரு பகுதி இங்கே.

    மனித உரிமைச் செயல்பாட்டாளரான ஹென்றி திபேன், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர், முகிலனைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கைத் தமிழக காவல் துறையின் சிபிசிஐடி பிரிவு விசாரித்து வந்தது.

    இந்த வழக்கு ஜூலை 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதியன்று திருப்பதி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷமிட்டுக்கொண்டிருந்த முகிலனை ஆந்திரக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் அன்று இரவே தமிழக சிபிசிஐடி காவல் துறையினரிடம் முகிலனை ஒப்படைத்தனர்.

    ஜூலை 7ஆம் தேதியன்று சென்னை சிபிசிஐடி வளாகத்தில் முகிலன் வைக்கப்பட்டிருந்தபோது, அவரது மனைவி, வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் உள்ளிட்டோர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், முகிலன் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 417, 376ன் கீழ் கைது செய்யப்பட்டார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முகிலன் கைது செய்யப்பட்டார்.

    முகிலன் காணாமல் போனவுடன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த வழக்கறிஞரான சுதா ராமலிங்கம், சென்னையில் போலீஸ் காவலில் இருந்தபோது சென்று சந்தித்தார். “அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை. நன்றி என்று மட்டும் கூறினார். இத்தனை நாட்களாக எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. மாஜிஸ்ட்ரேட்டிம் சொல்வதாகக் கூறினார். அதற்குப் பிறகு நான் வலியுறுத்தவில்லை” என்கிறார் சுதா ராமலிங்கம்.

    இன்று திரும்பிப் பார்க்கும்போது, மொத்த முகிலன் அத்தியாயமும், ஒரு நாடகமாகவே தெரிகிறது. ஒருவரைப் பல இடங்களில் போராளியாக முன்னிறுத்தினர். அவரைக் கொண்டே தூத்துக்குடி துப்பாக்கிச் சுடுதல் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிடச் செய்தனர். அன்று இரவே அவரைக் காணவில்லை எனப் பதறினர். அரசுக்கு எதிராகப் பெரிய அளவில் பரப்புரை செய்தனர். தேர்தல் முடிந்து 45 நாள்களுக்குப் பிறகு எந்தச் சிக்கலும் இல்லாமல் அவராகவே வெளியே வந்தார்.

    இந்தப் பின்னணியை வைத்துப் பார்க்கிற போது, ஜெகதீப் தன்கரைக் காணவில்லை என்பதும் ஒரு நாடகமாகவே தெரிகிறது. ஒரே வித்தியாசம், இது தேசிய அளவிலான பரப்புரையின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. இது, 2026 தேர்தலுக்கான செயல் திட்டமா என்பது, போகப் போகத் தெரியும்.

    Share
  • நீதிமன்ற வழக்குச் சுருக்கம் – ஒரு யோசனை

    நீதிமன்ற வழக்குச் சுருக்கம் – ஒரு யோசனை

    அண்ணாகண்ணன்

    ஒவ்வொரு நீதிமன்றத்திலும் முடிவுற்ற, ஒவ்வொரு நாளும் முடிவுறும் வழக்குகளின் விவரங்களை இவ்வாறு சுருக்கமாகத் தொகுக்க முடிந்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆர்வம் உள்ளவர்கள், முழு விவரங்களைத் தேடிப் படிக்கலாம். முழுச் செய்தியையும் அதன் வழக்கின் முழு விவரங்களையும் ஒருவர் படித்துத் தெரிந்துகொள்வதற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவை. இவ்வாறு சுருக்கமாகத் தொகுக்க முடிந்தால், நிறைய நேரம் மிச்சமாகும். இதை ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்திய மொழிகள் அனைத்திலும் வழங்கலாம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இவ்வாறு செய்ய முடிந்தாலும் முயன்று பார்க்கலாம்.

    இதற்கு அடுத்த நிலையாக, ஒரே மாதிரியான வழக்குகள், ஒரு துறை சார்ந்த வழக்குகள், ஒரு பகுதியைச் சேர்ந்த வழக்குகள், ஒரு நபரின் மீதான வழக்குகள், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் எனத் தொகுக்க முடியும். நீதிபதி ஒருவரின் தீர்ப்புகள், வழக்குரைஞர் ஒருவரின் வழக்குகள், ஒருவர் தொடுத்த வழக்குகள் ஆகியவற்றையும் இவ்வாறு வரிசைப்படுத்தலாம். இவற்றை இணையத்தளத்திலும் செயலியிலும் வழங்க முடியும். நீதித் துறையே இதை முன்னெடுத்தால், மிகச் சிறப்பாக இருக்கும்.

    என் வேண்டுகோளுக்காக, கூகுள் ஜெமினி வழங்கிய விவரங்கள்:

    சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் குறித்த சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்ட தகவல்கள், சமீபத்திய செய்திகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

    வழக்குச் சுருக்க விவரங்கள்

    1. தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பான வழக்கு

    • வழக்கு விவரம் என்ன? தனிநபர்களின் தொலைபேசி உரையாடல்களை குற்றங்களுக்காக ஒட்டுக் கேட்பதை தடை செய்வது.  
    • வழக்குத் தொடுத்தவர் யார்? கிஷோர் என்பவர்.  
    • யாருக்கு எதிராக? மத்திய உள்துறை அமைச்சகம்.
    • தீர்ப்பு என்ன? குற்றச் செயல்களை கண்டுபிடிக்க ரகசியமாக தொலைபேசி ஒட்டுக் கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல என்று கூறி, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  
    • வழக்குரைஞர் பெயர் கிடைக்கவில்லை.
    • நீதிபதி பெயர் கிடைக்கவில்லை.
    • மேல்முறையீட்டு நிலை தற்போதைய நிலையில், இது இறுதித் தீர்ப்பாக உள்ளது.

    2. ரிதன்யா தற்கொலை வழக்கு

    • வழக்கு விவரம் என்ன? வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்குவது.
    • வழக்குத் தொடுத்தவர் யார்? ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் அவரது மாமனார், மாமியார்.
    • யாருக்கு எதிராக? தமிழக அரசு (காவல்துறை).
    • தீர்ப்பு என்ன? முக்கிய சாட்சிகளின் விசாரணை முடிந்துவிட்டதால், குற்றவாளிகளை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • வழக்குரைஞர் பெயர் கிடைக்கவில்லை.
    • நீதிபதி பெயர் கிடைக்கவில்லை.
    • மேல்முறையீட்டு நிலை இந்த ஜாமீன் உத்தரவு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டதாக தகவல்கள் இல்லை.

    3. நிலுவை வழக்குகள் தாமாக முன்வந்து விசாரணை (Suo Motu)

    • வழக்கு விவரம் என்ன? மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகளை விரைந்து முடித்து வைக்க தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
    • வழக்குத் தொடுத்தவர் யார்? சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது (Suo Motu).
    • யாருக்கு எதிராக? இது எந்த ஒரு தனிநபர் அல்லது அமைப்புக்கு எதிரானது அல்ல. இது வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நீதிமன்றத்தின் நடவடிக்கை.
    • தீர்ப்பு என்ன? நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு, அவற்றை விரைந்து முடித்து வைக்க ஏதுவாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • வழக்குரைஞர் பெயர் கிடைக்கவில்லை.
    • நீதிபதி பெயர் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா.
    • மேல்முறையீட்டு நிலை இது நீதிமன்றத்தின் உள் நடைமுறை என்பதால் மேல்முறையீடு இல்லை.

    4. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு

    • வழக்கு விவரம் என்ன? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது.
    • வழக்குத் தொடுத்தவர் யார்? இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்தனர்.
    • யாருக்கு எதிராக? ஞானசேகரன்.
    • தீர்ப்பு என்ன? குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனையும், ரூ.90,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • வழக்குரைஞர் பெயர் கிடைக்கவில்லை.
    • நீதிபதி பெயர் நீதிபதி ராஜலட்சுமி.
    • மேல்முறையீட்டு நிலை இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படலாம்.

    Share