சாகசத்தின் மறுபக்கம்
அண்ணாகண்ணன்
உயிரைப் பணயம் வைத்து, சாகசம் நிகழ்த்தினர் மேலே – அதை
உயிரைப் பணயம் வைத்து, கண்டு களித்தனர் கீழே
சூர்யகிரண் விமானப் படை அணிவகுப்பு மேலே
சூரிய கிரணங்கள் குவிந்தன எங்கள் தலைமேலே
புகை கக்கின வானூர்திகள் உச்சியிலே
அனல் கக்கிய நேரமும் அதே உச்சியிலே
விர்ரென விரைந்து பறந்தன விண்ணிலே
சுர்ரெனத் தலை வலித்தது மண்ணிலே
வித்தைகள் பலவும் காட்டினர் விண்மீது – அந்த
விந்தைகள் கண்டு, சுருண்டு விழுந்தனர் மண்மீது
அண்ணாந்து பார்த்து வியந்தனர் ஆகாயத்தில் – ஓர்
அடியெடுத்து வைக்கப் பயந்தனர் பேராபத்தில்
பறந்து பறந்து வீரம் காட்டினர் விண்ணிலே
நடந்து நடந்து கால்கள் தொய்ந்தன மண்ணிலே
மனங்களை ஸ்தம்பிக்க வைக்கும் முயற்சி தான்
மொத்தமும் ஸ்தம்பித்துப் போனதே கொடுமை தான்
எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம் என்பார் ஒருபுறம்
எல்லா இன்னல்களையும் அனுபவித்தோம் என்பார் மறுபுறம்
எங்கள் மேல் பிழையே இல்லை என்பார் ஒருபுறம் – வெளியே வந்த
எங்கள் மேல் தான் பிழை என உணர்ந்துவிட்டனர் மக்கள்
கூட்டம் கூடும் இடங்களுக்கு இனிச் செல்லமாட்டேன் – ஒரு
குடுவை நீரில்லாமல் வெளிச் செல்லமாட்டேன்
ஓடாய்த் தேய்ந்து உறுதி எடுத்தனர் மக்கள்
பாடாய்ப் பட்டுப் பாடம் படித்தனர் மக்கள்
லிம்கா சாதனை எனக்கு இப்போது தேவையில்லை – ஒரு
லிம்கா பானம் கிடைத்தால் அது நிரம்பப் பரவாயில்லை
அங்குமிங்கும் பறப்பதைக் காண ஆனந்தமே – போக்குவரத்தில்
ஓர் அங்குலம் நான் முன்னகர்ந்தால் அது பேரின்பமே
தேசம் வளர்ந்திருப்பதை அறிய மகிழ்ச்சி தான் – இப்போதைக்கு
வீடுபோய்ச் சேர்ந்தால் அதுவே எனக்கு நிம்மதி
#airshow #chennaiairshow