தெய்வம் நிறைவேற்றிய வேண்டுதல் பற்றிய கல்வெட்டு

0
image (6)

சேசாத்திரி ஸ்ரீதரன்

உலகில் கடவுள் இல்லவே இல்லை என்போர் சிறு தொகையராகவே இருந்து வந்துள்ளனர். ஆன்மீக பூமியான தமிழகத்தில் தோன்றிய ஆசீவக முதன்மை ஆசான்களான மகங்கலி புத்திரர் என்ற மற்கலி கோசாலரும் நந்த வாச்சா என்ற மாங்குளக் கல்வெட்டு கணி நந்தாசிரியரும் கிசசாங்கிசா என்னும் வெண் காசிபரும் நாத்திக மதத்தை பரப்பினர். இவர்களின் சமகாலத்தவரான மகாவீரர் இன்னொரு நாத்திக மதமான சமணத்தை வடநாட்டில் வழிநடத்தினார். புத்தர் கடவுள் இருப்பை பேசவும் இல்லை மறுக்கவும் இல்லை. இப்படி இந்தியாவில் 2,500 ஆண்டுகள் முன் தோன்றிய இந்த நாத்திக மதங்கள் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அசோகா வேந்தனின் வெறுப்பு, உள்முரணான (intra contradiction) பிரிவுகள் ஆகியவற்றால் அழிந்து குலைந்து போயின.

இந்த நாத்திக மதங்கள் அழிந்த காலத்தில் தான் நாதர் வழிபாட்டுநெறி (Natha cult) என்ற சித்தர் மதம் மச்சேந்திர நாதரால் வட இந்தியாவில் தோன்றி இந்தியாவெங்கும் பரவலுற்றது. இதே காலகட்டத்தில் தோன்றிய வியாசர் 18 புராணங்களை  புண்ணியம், பாவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதினார், “அஷ்டா தஸ புராணேஷு வியாஸஸ்ய வசநத்வயம் பரோபகாராய புண்யாய பாபாய பர பீடனம்” இதாவது, பிறர்க்கு நன்மை செய்வது புண்ணியம், பாவம் என்பது பிறர்க்கு தீங்கு இழைப்பது ஆகும் என்பதே. நல்வினைக்கு புண்ணியம் என்றும் தீவினைக்கு பாவம் என்றும் இவர் பெயர் வைத்தார். இவரது நான்கு கைகள் கொண்ட  புராண நாயகர்களே தமிழகத்தில் தெய்வங்களாக ஏற்கபட்டு சிவ, விண்ணவ மதங்களாக இந்தியாவெங்கும் பரவக் காரணமானது. இதற்கு ஆழ்வார்கள், நாயன்மார்கள் இயக்கமே முதன்மைக் காரணம்  ஆகும். இது 7- 8 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. இந்த புராண மதங்களின் வளர்ச்சிக்கு பல்லவர்கள் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். குறிப்பாக, தெய்வச் சிலைகளை செதுக்கிப் பதித்து கோவில் எழுப்பினர், நிவந்தங்கள் பல தந்து பிரமதேயங்களை உருவாக்கி கோவில் இயக்கத்தை போற்றி வளர்த்தனர்.

இந்த கோவில், உருவ வழிபாட்டை ஏளனம் செய்து தான் சிவவாக்கியர் பாடல் 520 இல் ஓக சித்தர் சிவவாக்கியர் “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்”  என்று பாடினார். இவர் உருவ வழிபாட்டை எதிர்த்த தந்திர யோகி ஆவார். வரையறை இல்லாக் கடவுள் வரையறை உள்ள கல்லிலோ செப்புச் சிலையிலோ இல்லை எனவே பூசைகள் பயன்தரா என்றார் அவர். இறைவன் உன் எண்ணமாவே உள்ளான் என்பதே அவர் கூறவரும் செய்தி. எனவே கடவுளை சிந்தையால் ஏற்க வேண்டுமே அன்றி பூசனையால் அல்ல. இது பெரிய கடவுள் (GOD) எனப்படும் நிற்குண பிரம்மத்தை ஒட்டி வந்த கருத்து. நிற்குணம் என்பது தன்னையன்றி இன்னொரு இரண்டாவது பொருளை உணராதது என்பதால் தான் தந்திர யோகிகள் கடவுள் ஒன்று தான் இரண்டல்ல என்றனர்.  ஆனால் இந்தியாவில் பண்டுதொட்டே மக்கள் இயற்கை உள்ளிட்ட பல தெய்வங்களை வணங்குபவராக உள்ளனர். அவை ஒவ்வொன்றும் குணத்தால், ஆற்றலால் ஒன்றற்கொன்று மாறுபட்டவை. நிற்குண பிரம்மம் இரண்டாவது ஒரு பொருளை உணராததால் அது எந்த வேண்டுதலுக்கும் செவிமடுப்பதில்லை என்பதே உண்மை. அதனாலேயே அதை நன்மை, தீமை எதற்கும் எதிர்வினை ஆற்றாத அனைத்திற்கும் ஒரு காணும் பொருளாக (witnessing entity) உள்ளதாக யோகிகள் கருதுகின்றனர். சரி, கல் கடவுள் ஆகாது, உருவம் கடவுள் ஆகாது என்றால் மக்கள் ஏன் பன்னெடுங்காலம் தொட்டே இன்றளவும்  கற்கடவுள்களை வணங்குகின்றனர்? மக்கள் தம் பலகுறை தீர வேண்டிக் கொண்டு அதற்காக பல நேர்த்திக் கடன்களை வேண்டுதல் நிறைவேறிய பின் செலுத்துவது இன்று மட்டுமல்ல பண்டைக்கால  கல்வெட்டிலும் காணப்படுகிறது. நோயுற்றும் போரில் காயமுற்றும் உடல் நன்றாக வேண்டி வேந்தர், மன்னர், அரையர், படைத்தலைவர் உள்ளிட்ட பலர் கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்த செய்தி பல கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளன. ஆனால் நோய் தீர்ந்ததா என்ற குறிப்பு மட்டும் அவற்றில் இல்லை.

நட்ட கல் பேசாது, செயலாற்றாது என்றால் மக்கள் வேண்டுதலை உண்மையில் நிறைவேற்றுவது யார் என்ற அடுத்த கேள்வி நம்முள் எழும் அல்லவா? அப்படியானால் அந்த வேண்டுதல் யாரால் நிறைவேறுகிறது என்பதை பற்றித் தெளிவோம் இனி. நிற்குணம் என்ற பெரிய கடவுள் (GOD) போல் இல்லாமல் சகுணப் பிரம்மம் என்ற பல சிறிய தெய்வங்கள் (gods) உள்ளன. GOD, god (demi god) இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. யோக தியானப்  பயிற்சியால் உயரிய சித்துகளை அடைந்தவர் சப்தரிஷி எனப்படுகின்றனர். கலாவதாரம், கண்டாவதாரம், அம்ஸாவதாரம் என  இப்படி  சப்தரிஷிகளில் 16 படிநிலைகள் உள்ளன. எல்லோரும் 16 படிநிலைகளை ஒரே பிறவியில் எய்திவிட முடியாது. இந்த சப்தரிஷி நிலையை எய்தியவர் இறந்த பின்பு மோட்சம் அடையாமல் ஆவி (luminous body) ஆகிவிடுகிறார். ஆய்+வி= ஆவி, தமிழில் ஆய் என்றால் ஒளி. எனவே, மென்மேலும் ஆன்மீக முன்னேற்றம் அடையவதற்காக வேண்டி இந்த சித்தர் ஆவிகள்தாம் மக்களுக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்து ஆன்மீக முன்னேற்றம் அடைய முயல்கின்றன. இதற்காக மக்கள் கூடிவழிபடும் கோவில் இடங்களை தம் வயப்படுத்தி அருவமாக மக்களுக்கு அருள்புரிவதால் தான் மக்கள் வேண்டுதல் நிறைவேறுகின்றது, இன்னல் தீருகின்றது. உருவமுள்ள தெய்வம், உருவமில்லாத கடவுள், நடுகல் சிலை என இப்படி எப்பேர்பட்ட தெய்வத்தை வேண்டி வணங்கினாலும் அதை இந்த சித்தர் ஆவிகள் தாம் நிறைவேற்றுகின்றன. இவ்வாறு செய்வதால் அந்த ஆவிகளுக்கு அடுத்தடுத்த சப்தரிஷி நிலை கிட்டுகிறது. இது மோட்சம் என்ற வீடுபேறு கிட்டும்  வரை அல்லது அடுத்த பிறவி கிட்டும் வரை நடக்கிறது. மோட்சம் என்பது நிற்குண பிரம்மத்தில் ஒன்று கலப்பது ஆகும். மறுபிறவி எடுக்க முடியாமலும் மோட்சம் எய்த முடியாமலும் உள்ள இந்த சகுண பிரம்ம நிலை தான் முக்திநிலை எனப்படுகிறது. ஆக இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் உள்ள இந்த அந்தரமான நிலை சித்தர் ஆவிகளுக்கு ஒரு துன்ப நிலை ஆகும். எனவே, இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்காகத் தான் புகழ்மிக்க கோவில்கள் இந்த சித்தர் ஆவிகளால் ஆட்கொள்ளப்படுகின்றன என்பதை அறிக. இந்த உண்மைகளை ஆன்மீகத்தில் உள்ள பெரியோர் வெளிப்படையாகச் சொல்லுவது கிடையாது. ஏனென்றால் அப்படி சொல்லிவிட்டால் மக்கள் தம் பிறவித் தளையை அறுக்க முயலாமல், நிற்குண பிரம்ம நிலையை எய்த முயலாமல் சிறு தெய்வங்களான சகுணப் பிரம்மத்தை சிறிய உலகியல் நோக்கங்களுக்காக வணங்கி ஆறுதல் அடைந்துவிடுவர், மோட்சம் என்ற வீடுபேற்றை மறந்துவிடுவர் என்பதால் தான். மக்களுக்கு இறைவன் பற்றிய எண்ணம் துன்பம், எதிர்பார்ப்பு ஆகியவற்றால் தான் ஏற்படுகிறது இல்லாவிடில் எல்லோரும் ஒருவகையில் நாத்திகரே. சகுண பிரம்மம் மோட்சம் அடையாததால் அவற்றால் மக்களுக்கு ஒருபோதும் மோட்சத்தை மட்டும் தரவியலாது. மாறாக, அந்த மோட்சத்திற்காகத்தான் அவை இந்த மக்கள் குறையை போக்கும் தொண்டில் ஈடுபட்டுள்ளன என்பதே உண்மை. ஆகையால் சித்துகளை அடைவது மட்டுமே ஆன்மீகம் ஆகிவிடாது மோட்சம் அடைவதே ஆன்மிகம் என்று தெளிக. இந்த சப்தரிஷிகள் தாம் இந்த பூமிப் பந்துக்கு எந்தக் கேடும் நேராமல் காப்பதாக சப்தரிஷி நிலை எய்திய பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் சொல்கிறார். ஜீவ சமாதி, சீரடி சாயிபாபா வழிபாடு இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். எளியவரான ஆழ்வார்கள், நாயன்மார்கள் நிகழ்த்திய சித்துக்கள் அனைத்தும் உண்மையில் இந்த சித்தர்கள் நிகழ்த்தியவையே என்கிறார் இன்னொரு சப்தரிஷியான பழனிமலை ஈசுவர பட்டர். அதனால்தான் வியாசரால் பாவ, புண்ணியத்தை விளக்க கதையாக சொல்லப்பட்ட நான்கு கை தெய்வங்கள் சக்தி மிக்கவையாக ஆக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. ஏரணப்படி (logically) இந்த குற்றத்திற்கு முழு பொறுப்பு சித்துகள் நிகழ்த்திய இந்த சித்தர்களையே சாரும். இது போல எந்த சித்தும் நிகழ்த்தி இருக்காவிட்டால் புராணங்கள் கதைகளாகவே ஏட்டில் பதிந்து இருந்திருக்கும். இசுலாமிய படையெடுப்பின் போது இந்த சித்தர்கள் மக்கள் இறை நம்பிக்கை குலையும் வண்ணம் வாளாயிருந்தனர் சித்து ஏதும் செய்யவில்லை, விளைவு பெரும் நாசம். மக்கள் நெஞ்சங்களில் அவர்கள் கட்டி எழுப்பிய இறை நம்பிக்கையை அவர்கள் தானே காக்கவேண்டும்? காக்க வில்லையே! ஆதலால் அந்நேரத்தில் இறைவன் உண்டு என்பது பொய் ஆகிப்போனது. எனவே இதன் உண்மைக் குற்றவாளிகள் அந்நேரத்தே செயல்படாத இந்த சகுண பிரம்மங்களே, சப்த ரிஷிகளே. சகுண பிரம்மம், சப்தரிஷி என்பது ஒரு பொருட் பன்மொழி. இதை ஏற்பதற்கு மக்களுக்கும் மதவாதிகளுக்கும் மனம் ஒவ்வாது என்பது பேருண்மை.

நாத்திகர் கேட்கின்றார் கடவுள் இருந்தால் மக்களிடம் ஏன் இவ்வளவு துயரம்? ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வு, வேறுபாடு என்று. ஆதலால் கடவுள் என்பதே இல்லை என முழங்குகின்றார். இயற்கை காற்றாக, மழையாக, வெய்யிலாக பொதுவாகத் தான் செயற்படுகின்றது. அங்கே மனிதன் – விலங்கு, ஏழை – பணக்காரன், முதியவர் – இளையோர் என்று இயற்கை பாகுபாடு பார்ப்பதில்லை. இந்த துயரமும் வேறுபாடும் மனித அறிவால், சிலர் மட்டும் ஒத்துகூடி செயற்படும் முயற்சியில் பலர் வெளியே நிறுத்தப்படுவதால் நேர்ந்தவை. ஆனால் இயற்கை எனும் தெய்வத்தின் இந்தப் பொதுவான தன்மையை மனிதன் தன்னுடைய திறமை என்று சொல்லி மூடி மறைத்தும், மறந்தும் விடுகிறான். எனவே துயரமும் ஏற்றத் தாழ்வும் கடவுளால் அல்ல மாறாக மனித அறிவால், செயற்பாட்டால் உண்டானவை என்று தெளிக. ஆதலால் மனிதன் தன்னலத்தை உதறி விட்டு கூட்டுறவாக (co-operative), கூட்டிணைவாக (co-ordinate) செயற்பட்டால் இந்த துயரத்தையும் ஏற்றத் தாழ்வையும் பேரளவு குறைக்க முடியும். இயற்கையில் மனிதன் விலங்குகளைப் போலத் தான் தாயிடம் பிறக்கிறான் ஆனால் அந்த விலங்குகளிடம் ஏமாற்றுதல் இல்லை, ஏற்றத் தாழ்வு இல்லை, வறுமை இல்லை என்பதை ஆராய்ந்தால் மனிதரிடம் உள்ள ஏற்றத் தாழ்வும் வறுமையும் அவனது அறிவால், சிலர் ஒத்து கூடி தன்னலத்தோடு செயற்படுவதால் தான் உண்டானவை என்பது புரியும். செல்வ நிலையும் ஏழ்மை நிலையும் மனிதர் உருவாக்கியவை. இங்கே கடவுளின் குற்றம் எங்குள்ளது? இன்னுமொரு கேள்வி நாகரிக மனிதரிடம் உள்ள கவலையும் துன்பமும் ஏற்றத் தாழ்வும் இதே பூமியில் வாழும் பழங்குடிகளிடம் இல்லையே அங்கு மட்டும் கடவுள் அந்த மனிதருக்கு சாதகமாக செயற்படுகிறானா? இல்லை. எனவே தன்னல மனித தவற்றுக்கு கடவுள் இல்லை என்று சொல்லி கடவுள் மீது பழிபோடுவது நாத்திகரின் குற்றம். அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த பெருஞ் சித்தர் சப்தரிஷி நிலை எய்திய பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் நாத்திகரின் இந்த குழப்பமான பேச்சுக்கு இதாவது, வறுமையும் ஏற்றத் தாழ்வும் மனித தன்னலம் ஏற்படுத்திய குற்றம் என்று விடை இறுத்துகிறார். எனவே இதை கடவுள் இல்லை என்பதற்கு கேள்வியாக வைக்கக் கூடாது. சிந்தனை இல்லா மக்கள் வேண்டுமானால் இதற்கு பலியாகிடலாம், ஆனால் உண்மையான ஆன்மீகவாதிகள் இதை கேட்டு நகுவர்.

மேற்சொன்னவற்றால் நாத்திகவாதிகள், உருவமில்லாமல் ஒற்றை இறைவனை வணங்குவதாக மார்தட்டும் ஆத்திகர் என யாரொருவரும் உருவ வழிபாட்டை விமர்சிக்கும் தகுதி துளியும் இல்லாதவர் என்பது புலனாகும். ஒரு சிறு வேலை நிகழ ஆட்சியர் அலுவலக பணியாளரால் முடியும் போது அதை ஆட்சியரே நேரடியாக வந்து நிறைவேற்ற வேண்டும் என்பது மூடமை. ஆதலால் பன்மைத்தன்மை கொண்ட சகுணப் பிரம்மத்தால் இயன்றதை அவற்றிடம் பெற விழையாமல் அந்த ஒற்றை நிற்குணத்தையே எல்லாவற்றுக்கும் நாடுவது முறையோ? நாத்திகவாதம் ஒரு பொய் பித்தலாட்டம் என்பதை உணர  அரசன் முதல் ஆண்டி வரையான மக்கள் வேண்டுதலை நிறைவேற்றிய இறைவன் பற்றிய கல்வெட்டுகளை  இனிக் காண்போம். இப்போதும் இக்கோயில்களில் இந்த வேண்டுதலை நிறைவேற்றும் ஆற்றல் உண்டு என்று நம்பலாம்.

கோயம்பத்தூர் மாவட்டம் உடுமலை வட்டம் கடத்தூர் மருதீசர் கோயில் மகாமண்டபத்தின் கிழக்கு சுவர் இடப்புற வாசலில் உள்ள 17 வரிக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு 29 வது விக்கிரம சோழ திருபுவன சிங்க
  2. னேன். கடற்றூர் ஆளுடையார் திருமருதுடையார் எனக்கு ப்ரமேகம் தீர்ந்தமையால்  இந்நாயனா
  3. ர் திருவொத்த சாமத்துக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணிக்கு நான் நீர்வார்த்து விட்ட நிலமாவது  _ _ _ _ கரை
  4.  ர வழிநாட்டுக் கண்ணாடிப் புத்தூர் வடகரையில் உதயாதிச்ச தேவந்  துரோகியாய்  வடகொங்கில்
  5. ப் போனமையில் அவந் நிலம் அறுகலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவற்கும் இவ்விருவ
  6. _ _ _ _ இக்காணியாக்கினேன் என்று திருமுகம் தந்தமையில் இதில் என்னோபாதி மன்றாட்டு வி
  7. _ _ _ கலமும் இந்நாயனார்குத் திருவ _ _ _ ரப்படிக்கு நீர்வாத்துக்  குடுத்த இந்நெல் முக்கலத்துக்கும்
  8. _ _ _ வது வடகரையில் பூலுவப்பற்றில் விதை அறுகலத்தில்  என்னோ பாதி விதை முக்கலத்
  9. _ _ _ ல்லையாவது இக்கிழைக்கு வடக்கும் உதையாதித்த தேவந்  நிலத்துக்கு  மேற்கும் அதியமான் _ _
  10. _ _ {சோ}ழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்குத் தெற்கும் இந்நான்
  11. கெல்லைக்குட்பட்ட நெல்விதை இருக்கலனே வீரசோழீஸ்வரமுடையார் தேவத்தானத்துக்கு வடக்கும் மேல் _ _ _
  12. _ _ னத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்கு மேற்கு இந்நிலத்திற்குப் பாய்கிற கவருக்குத்  தெற்கெ
  13. ல்லைக்குட்பட்ட  நெல் விதை கலனே முக்குறுணியில் நெல் விதை கலமும் ஆக நெல்வி
  14. தை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக எனக்கும் என் மக்களுக்கும் விலையொற்றி _ _ _
  15. ஸ்த்ரீதனத்துக்குரிதாவுவதாக நாயனார் திருவுள்ளம் செய்தபடியே ஆளுடையார்
  16. மருதுடையாற்கு கல்வெட்டிக் குடுத்தேன் விக்கிரம சோழ திருபுவன சிங்க தேவனேன். இது தி
  17. ருபுவன சிங்க தேவனேன் எழுத்து. இவை கொத்தப்பி  சோழன் எழுத்து பன்மாஹேஸ்வர ரக்ஷை

பிரமேகம் – நீரிழிவு, சக்கரை நோய், diabetes; திருஒத்த சாம பூசை  – பின்னிரவு ஒரு பூசை; திருமுகம் – அரசாணை; மன்றாட்டு – வேண்டிப்பெற்று, கால்நடை மேய்ச்சல் நிலம்; கவர் – ஆற்றுக்காலில் பிரிகிற கால்வாய்; விலை ஒற்றி – விலை நீக்கி, இலவசமாக;  ஸ்ரீதனம் – பெண் பிள்ளை சொத்து; திருவிள்ளம் – இசைந்து

விளக்கம்: மூன்றாம் கொங்கு விக்கிரம சோழனின் 29 ஆம் ஆண்டு (1302)  ஆட்சியின் போது விக்கிரம சோழ திருபுவன சிங்கன் கூறியது. கடற்றூர் இறைவன் திருமருதுடையாரை வேண்டி எனக்கு பிரமேகம் என்னும் நீரிழிவு நோய் தீர்ந்தமையால் பின்னிரவு ஒரு பூசைக்கு ஒவ்வொரு நாளும் ஆகும் அரிசியை குறுணி அளவிற்கு வழங்க நான் நீர்வார்த்து தானமாக விட்ட நிலம் கரைவழி நாட்டில் உள்ள கண்ணாடிப் புத்தூரின் வடகரையில் வாழ்ந்த உதயாதித்த தேவன் நாட்டுத் துரோகியாகி, இராசதுரோகியாகி வடகொங்கில் தஞ்சம் போய்விட்டபடியால் அவனது நிலமும் அதில் வரும் ஆறு கலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவனுக்கும் ஆக இவ்விருவருக்கும் உரிய காணியாக்கினேன் என்று வேந்தரிடம் இருந்து வந்த ஆணையால் இதில் வந்த என்னோட பங்கு பாதியை வேண்டிப்பெற்று நெல் மூன்று கலமும் இந்த இறைவனுக்கு திருப்படிக்கு நீர்வார்த்து தானமாக விட்டேன். இந்நெல் முக்கலமும் வடகரையில் உள்ள பூலுவப்பற்றில் விதை நெல் ஆறு கலத்தில் என்னோட பாதி விதையான முக்கலத்துக்கு எல்லையாவது இந்த கிழக்கு வடக்கு உதயாதித்த தேவன் நிலத்திற்கு மேற்கும் அதியமான்  _ _ _ சோழிஈஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் வயலுக்கு தெற்கும் ஆக இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலத்தில் நெல் இரு கலனும், வீரசோழீஸ்வரமுடையார்  தேவதானத்துக்கு வடக்கும் மேல் _ _ _ (நந்தவ)னத்துக்கு கிழக்கும் அழகாண்டார் வயலுக்கு மேற்கே இந்நிலத்திற்கு பாய்கிற ஆற்றுக்காலில் பிரிகிற கால்வாயின் தெற்கு எல்லைக்கு உட்பட நிலத்தில் வரும் நெல் விதை ஒரு கலன் முக்குறுணியில் நெல் விதை ஒரு கலனும் ஆக மூன்று கலன் நெல்லும் இறையிலி முற்றூட்டாக எனக்கும் என் பிள்ளைகளுக்கும் விலை நீக்கி தந்ததை நான்  பெண்பிள்ளை சொத்தாக வேந்தர் ஆணை தந்தபடியே அதை நான் இசைந்தபடி மருதீசருக்கு தானமாகக் கல்வெட்டிக் கொடுத்தேன் விக்கிரம சோழ திருபுவன சிங்க தேவன். இது திருபுவன சிங்க தேவன் ஒப்புதல் கையெழுத்து. இவை கொத்தப்பி சோழன் ஒப்புதல் கையெழுத்து. இது சிவனடியார் காப்பு.

இக்கல்வெட்டு ஆங்காங்கே பொறிந்து போனதால் நிலம் குறித்த விவரம் தெளிவாகத் தெரியவில்லை.  நிலத்தின் அளவை குறிக்காமல் நெல் அளவுக் குறிப்பு குழப்புகிறது. அரசத் துரோகி உதயாதித்த தேவன் நிலத்தை கொங்கு சோழன் திருபுவன சிங்க தேவனுக்கும் அவன் தம்பிக்கும் இலவசமாக கொடுத்ததை பார்த்தால் இவர்கள் வேந்தனுக்கு செய்த அருந்தொண்டிற்காக வேந்தன் பரிசாக கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பார்வை நூல்: கல்வெட்டு இதழ் 75, பக்கம் 45 & கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்கம் 225

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சித்தலிங்கமடம் ஊரில் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன் மண்டபம் தெற்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்தொன்பதா
  2. வது மலாடாகிய ஜனநாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்து ப்ரஹ்மதேயஞ் சிற்றிங்கூர் ஆளுடையார்
  3. திருப்புலிப்பகவ தேவர்க்கு. இக்கோயிலில் சிவப்ராஹ்மணந் பாரத்வாஜி பஞ்சனதி பெரியாந் இத்தேவர்க்கு ப்ரார்
  4. தித்து ஆண்பிள்ளை பெற்று வைத்த திருநந்தா விளக்கு ஒந்றுக்கு பசு முப்பத்திரண்டுக்காக இக்கோயிலில் சிவ
  5. ப்ராஹ்மணரோம். எங்களுபையத்தால் கொண்ட அந்றாடு நற்காசு பத்து. இக்காசு பத்தும் கைக்கொண்டு இத்தேவர்
  6. க்குத் திருநந்தா விளக்கொன்றும் சந்த்ராதித்தவற் எரிக்கக் கடவோமாக சம்மதித்தோம் இக்கோயில் சிவப்ராஹ்மணரோம். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை.

எங்கள் உபையம் – எமது இரு கைகள்

விளக்கம்: முதலாம் குலோத்துங்க சோழனின் 49 ஆவது ஆட்சி ஆண்டு 1118 இல் மலாடு என்னும் ஜனநாத வளநாட்டின் குறுக்கை கூற்றத்தின் பிரம்மதேயமான சிற்றிங்கூர் இறைவன் திருபுலிப்பகவ ஈசுவரன் கோயிலில் பணிசெய்யும் சிவபிராமணன் பாரத்வாச கோத்திரத்தான் பஞ்சநதி பெரியான் என்பவன் இந்த ஈசுவரனிடத்தில் வேண்டி ஆண்பிள்ளை ஒன்று பெற்றுக் கொண்டான். அந்த நிறைவேறிய வேண்டுதலுக்காக அவன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றினுக்கு முப்பத்திரண்டு பசுக்களை வாங்க இக்கோயில் சிவபிராமணரிடம் அன்றாட்டு நற்காசு பத்து கழஞ்சு  கொடுத்தான். எமது இருகைகளால் இந்த பத்து கழஞ்சு காசை வாங்கிக்கொண்ட சிவபிராமணராகிய நாம் இந்த இறைவனுக்கு சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரை அந்த ஒரு நுந்தா விளக்கு எரிப்போம் என்று இசைவளித்தோம். இது சிவனடியார் காப்பு.

ஆண் பிள்ளை வேண்டுவது தமது உரிமைகளும் கடமைகளும் தடையின்றி அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டும் மற்றும் மத நம்பிக்கை ஆகியவற்றால் நிகழ்ந்திருக்கலாம்.

பார்வை நூல்: விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 119, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு. SII Vol 26 No 392 pg 255

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூர் ஊரில் வைகுந்த பெருமாள் கோயில் அர்த்த மண்டபம் வடக்குப் பட்டி  2 வரிக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவ  லை திருவெண்ணெய் நல்லூர் ஸ்ரீவைகுந்தத் தெம்பெருமான் கோயில் தாநத்தார் கண்டு விடை தந்ததாவது  இக்கோயிலில்
  2. நமக்கு புத்ரார்த்தன கூடி அருள பண்ணின திருவைகுந்தத் தாழ்வார்க்கு திருவிடையாட்டமாக ஏமப்பேறூர்  _ _ _ சிறுபாக நல்லூரில் இவ்வூர் காணியாளர் பக்கல் நா_ _ _  (சிதைந்துவிட்டது)

விடை – விட்டுக் கொடுத்த தானம்; புத்ரார்த்தம் – ஆண் பிள்ளைச் செல்வம்; கூடி – வாய்த்து; திருவிடையாட்டம் – திருமால் கோவிலுக்கு கொடுக்கும் தானம்; பக்கல் – இருந்து

விளக்கம்:  இது காடவராயர் கோப்பெருஞ்சிங்கர் காலத்து கல்வெட்டு என்று தெரிகின்றது. திருபுவனச் சக்கரவர்த்திகள் ஓலை. திருவெண்ணை நல்லூர் திரு வைகுந்தப் பெருமாள் கோயில் பொறுப்பாளர் பார்வைக்கு. நாம் தந்த தானமானது இக்கோயிலில் வேண்டிக் கொண்டு நமக்கு ஆண்பிள்ளைச் செல்வம் கூடியதால் அதற்கு அருள்வித்த திருவைகுந்தப் பெருமாளுக்கு தானமாக ஏமப்பேறூர் நாட்டில் அடங்கிய சிறுபாக நல்லூரில், இந்த ஊரில் காணி உரிமை பெற்றவரிடம் இருந்து நாம் விலை கொடுத்து வாங்கிய நிலத்தை தானமாக தந்தேன். திருவாய்க்குலத்து ஆழ்வார் கண்ணனை எழுந்தருளுவித்து அபிஷேகம் செய்வித்து என்று நடுவண் தொல்லியல் துறை ஆண்டு அறிக்கை 485/1921 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மைப்படியில் கூடுதல் வரிகள் படியெடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இக்கல்வெட்டு இன்னும் நூலாக அத்துறையால் வெளியிடப்படவில்லை. ஆனால் தமிழ்நாடு தொல்லியல் துறை படியெடுத்தபோது 2 வரிகளுக்கு பின் இருந்த வரிகள் சிதைந்துவிட்டன போலும்.

நாடாளும் மன்னவனும் இறுதியில் தனது வேண்டுதலுக்கு இறைவனுடைய அடியைத் தான் தொழுகிறான். வேறு வழியில்லை என்ன செய்வது. மன்னவர் பொதுவாக அதிகப் பெண் தொடர்புடையவர். ஆதலின் அவர் குருதியில் பித்தம் அதிகமாகி ஆண் குழந்தை பிறப்பிற்கு தேவைப்படும் Y குரோமோசோம் உற்பத்தியை பாதித்திருக்கும். அதனால் ஆண் பிள்ளை வாய்க்காது. பித்தம் குறைய எண்ணத்தாலும் கனவாலும் காம  நினைப்பை தவிர்க்க வேண்டும்.

பார்வை நூல்: விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 237, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம் சோழபுரம் அருள்மிகி விக்கிரம பாண்டீஸ்வரமுடையார் கோவில் நடராஜர் மண்டபத் முன்னுள்ள கல்தூண் மண்டபம் கல்வெட்டுகள் இரண்டு

1

  1. ஸ்வஸ்திஸ்ரீ கோணா
  2. ங்கூருடையான் பட்டன் தே
  3. வனவன் தனபாலன்
  4. உடம் பிறப்பழகி
  5. யானைப் பெற ப்ர்ரார்
  6. த்தித்து நாட்டின
  7. க் கல்  ஸ்வஸ்திஸ்ரீ

2

  1. ஸ்வஸ்திஸ்ரீ சோள நா
  2. ங்கூர் உடையா
  3. ன் ஆமன் தேவ
  4. ன் தேன்மொ
  5. ழியாகனேன்
  6. தனபாலன் உ
  7. டப் பிறப்பழகி
  8. யா யழகியானைப் ப்ர
  9. ஸாதித்து நாட்டின கல்.

பிரசாதித்து / prajaati – பிள்ளை பெறு, procreative power; பட்டன் – படைத்தலைவன்

விளக்கம்: ஒரே செய்தியுடன் தொடர்புடைய 13 ஆம் நூற்றாண்டு பேரரசுப் பாண்டியர்க் கால இரு தூண் கல்வெட்டுகள். கோநாங்கூரைச் சேர்ந்த படைத்தலைவன் தேவன் என்னும் தனபாலன் தனக்கு ஆண் பிள்ளை பிறக்க வேண்டிக்கொண்டு அதற்கு தூண் ஒன்றை மண்டபத்திற்கு செய்தளிப்பதாக வேண்டித் தூண் ஒன்றை செதுக்குவித்து நிறுத்தினான். அக்குழந்தை பிறப்பதற்கு முன்பே உடம் பிறப்பழகியான் என்று அதற்கு பெயரும் இட்டுவிட்டான் என்கிறது முதற் கல்வெட்டு.

இரண்டாம் கல்வெட்டில் சோள நாங்கூரைச் சேர்ந்தவன் என்று இந்த சோழபுரத்தைத் தான் குறித்தானோ? இவன் பெயரை இன்னும் விரிவாக ஆமன்தேவன் தேன்மொழியான தனபாலன் என்று குறித்து உடம்பிறப்பழகியாள், உடம்பிறப்பழகியான் ஆகிய இரு குழந்தைகளை பெற்றெடுத்தேன் அதனால் இந்த இரண்டாவது தூணை நிறுவினேன் என்று ஒரு குழந்தைக்கு இரு குழந்தையாக தந்ததனால் பின்னர் இன்னொரு தூணையும் நாட்டி, இரு தூண்கள் நிறுவி கல்வெட்டி உள்ளான் இந்த படைத்தலைவன். வீரர்கள் போருக்கு வேண்டி ஆண் பிள்ளைகளையே நாடுவது இயல்பு.

பார்வை நூல்: விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி II, பக் – 129 & 130, த நா தொ து வெளியீடு எழும்பூர்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், மலையடிப்பட்டி வாகீசுவரர் கோவிலின் குடிபோக கோவிலின் வட புறச் சுவரில் உள்ள 47 வரிக் கல்வெட்டு

பஹு தாநிய / ஆண்டு தயி மாதம் 11 நாள் / வாகீ[ஸ்வர ஸ்வா] மி யாரு / க்கும் வடிவுள்ள மங் / கைக்கும் பூச்சிக்குடியில் யி / க்குனாம்  ஆவுடையா தேவ / ர் திருநெடுங்கோள / ம் தேவடியாள் வீ / ட்டுக்கு போயிருக்கச்சே ம / றுபடி ஒரு பிராமண / னை அழைச்சு வீட்டுலே இருந்தபடியினாலே  னா / ன் அவற்கள் ரெண்டு பே / ரையும் வெட்டிப் போட்டு / மலையடி வந்துவிட / திலே ரெண்டு கண்ணு / ம் தெரியாதே போன / படியினாலே இத்தோ / ஷம் போக / வாஹீஸ்வர / ஸ்வாமிக்கு என்னு / ட  வயல் கல்லு / ப் போட்டு குடுக்கு / றோம் என்று வேண்டி கொண் / டு எனக்கு கண் தெ / ரிஞ்சபடியினா / லே என்னுடை / ய காணியாந ஆவுடையான் குடி[க்][கா] / டு  னாங்[கெ]ல்லை உள் / பட்ட நிலமும் கல்ப் / போட்டு குடுத்தேன். இ / ந் / நிலம் ஸ்வாமி ஸந்நதி / இ ஸிலாசாதனமும் / எழுதி குடுதேன். இ / ந்த நீலதில் யா / தாமொருவன்  பெச / கு பண்ணினால் வா / ஹீஸ்வர ஸ்வாமி  ச / ன்னதி தொ / றோகீயாக போவன். கெங்கைக் / கரையில் காரா / ம்பசுவை கொண் / ண தோஷதிலே / போவன்.

பிசகு – கலன், வில்லங்கம், விலக்கம்.

விளக்கம்: இதன் எழுத்தமைதியால் 15 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு எனக் கொள்ளப்படுகிறது. அந்நூற்றாண்டில் கி.பி. 1418 மற்றும் கி.பி. 1478 ஆகிய ஆண்டுகளில் வந்த பகுதானிய ஆண்டு ஏதேனும் ஒன்றில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டிருக்கலாம். கிழமை குறிக்காமல் தை மாதம் 11 ஆம் நாள் என்று மட்டும் குறிக்கப்பட்டுள்ளது.

இறைவன் வாகீஸ்வரருக்கும் இறைவி வடிவுள்ள மங்கைக்கும், பூச்சிக்குடியில் இருக்கும் ஆவுடையா தேவனான நாம் திருநெடுங்கோளத்தில் உள்ள தேவடியாள் வீட்டுக்கு போயிருந்த போது அவளை ஏற்கனவே எச்சரித்திருந்தும் மீண்டும் அவள் இன்னொரு பிராமணனை அழைத்து வந்து வீட்டில் இருந்தபடியால் ஆத்திரத்தில் நான் அவ் இருவரையும் வெட்டிக்கொன்று போட்டு மலையடிக்கு வந்துவிட்ட போது என் இரு கண்களும் பார்வை இழந்தன. எனவே இக் கொலைத் தோஷம் போக வாகீஸ்வர இறைவனுக்கு எனக்கு உரிமையான வயலை எல்லைக் கல் நாட்டி தானம் கொடுக்கிறேன் என்று வேண்டிய போது எனக்கு மீண்டும் பார்வை கிட்டியது. அதனால் என்னுடைய உரிமை நிலமான ஆவுடையான் குடிக்காடு நான்கு எல்லைகளையும் குறித்து அந்நான்கு இடத்திலும் எல்லைக் கல் நிறுத்தி தானம் கொடுத்தேன். இந்நில விவரத்தை இறைவன் திருமுன் கல்வெட்டும் எழுதி வைத்தேன். இந்நிலத்தில் ஏதேனும் ஒரு விலக்கம் நேர்ந்தால் அவன் வாகீஸ்வரனுடைய சிவத்துரோகி ஆகிடுவான். கங்கை கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்தில் இறப்பான்.

காசுக்கு தன் உடலை விற்பவள் தான் தேவடியாள் என்ற விலைமகள், பொது மகள். பொழுதிற்கு ஏதோ ஒரு ஆணிடம் இருப்பது தான் அவள் தொழில். இதனை மறந்த ஆவுடையாத் தேவர் அவள் என்னவோ தான் தாலி கட்டிய மனைவி போல எண்ணி அவளை மனைவி போல நடந்து  கொள்ள எதிர்பார்த்தார். அப்படி இல்லாதது கண்டு அவள் மேல் கோவம் கொண்டு அவளை மட்டுமல்லாது உடன் இருந்த பிராமணனையும் சேர்த்து கொன்று போட்டார். இது ஒரு அடாத செயல் அதன் விளைவை உடனே அனுபவித்தார். ஒரு பிராமணன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடாமல் இருக்கச் செய்வது பிராமண சமூகத்தின் கடமை. ஒழுக்கக்கேட்டை தடுக்காவிட்டால் அது ஒட்டுமொத்தமாக அச்சமூகத்தின் மீது தான் பழியாய் விழும்.

வீட்டிற்கு தெரியாமல் கள்ளத்தனமாக மீன் உண்ணும் ஒரு தமிழ் பிராமணனை நோக்கி “இப்படி மீன் தின்பதால் நீ பிராமணனே இல்லை என்று சொன்ன போது, ஏன் பிற சாதிமார் இவ்வாறு ஒழுக்கக்கேடு செய்தாலும் அந்தந்த சாதிக்காராகத் தானே அழைக்கப்படுகிறார்” அது போல ஒழுக்கம் கெட்டாலும் நானும் ஒரு பிராமணன் தான் என்றார். அவர் சொல்லுவது போல பிராமணர் என்பது ஒரு சாதியும் அல்ல, வர்ணமும் அல்ல. அது சாதியாகவும் வர்ணமாவும் பின்னீடு தான் ஆக்கப்பட்டது. விப்பிர என்பது தான் வர்ணம். அதன் பொருள் கற்றோன், அறிஞன் என்பது. வரலாற்றுபடி கற்றோரான வெள்ளாளரும் விப்ரர் என்பதில் தான் வருவர். ஆனால் இப்போது அது வேறாகிவிட்டது. பொய், கொலை, களவு, முறையற்ற காமம், புலால் – மது ஆகியன தவிர்த்த தந்திரயோக (தியான) வாழ்க்கை நெறியை பின்பற்றும் ஒரு தனிமதம் தான்; வேத மதம் – தந்திரயோக மதம் ஆகியவற்றின் கலப்பு மதம் தான் பிராமணிய மதம். இந்த ஐந்து ஒழுக்கங்களைக் கைக்கொண்டால் தான் யோக சித்தி எளிதில் விரைந்து கைக்கூடும் என்பதற்காகவே பிராமணர் இந்த ஐந்து ஒழுக்கத்தையும் பேணுவதற்காகவே பிறரோடு ஒன்று கலவாமல் இருந்து தனிமைப் பேணினார்கள் பண்டு. பின்பு வந்த புத்த, சமணம் ஆகிய இந்திய நாத்திக மதங்களும் இந்த ஐந்து ஒழுக்கத்தையும் தமதாக ஏற்று தம் பின்பற்றிகளை கடைபிடிக்க வலுயுறுத்துகின்றன. ஏனென்றால் அவையும் தந்திர யோகத்தை பின்பற்றுபவை என்பதால். சிலர் மயிர் மழித்தும் இன்னும் சிலர் மயிர் நீட்டி சடை வளர்த்தும் துறவு பூண்ட பின் இந்த பஞ்சமா பாதகத்தை ஒழிக்கத் தலைப்படுகின்றனர், இது தேவையற்றது. உலகோர் பழிக்கின்ற இந்த ஐந்து பாதகங்களை ஒழித்தாலே போதும் இதற்காக துறவு பூணத் தேவை இல்லை என்கிறார் வள்ளுவர் “மழிதலும் நீட்டலும் வேண்டா” என்ற குறளில். ஏனெனில் ஒழுக்கம் துறவாளருக்கு மட்டுமானது அல்ல மக்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் வள்ளுவம் எனது சமயம் என்று மார்தட்டி விட்டு மேடையை விட்டு இறங்கியதும் புலால், மது என வாழ்பவரே மிகுதியாக உள்ளனர். தமிழ் நாட்டில் தான் இத்தகு வேடிக்கையாளர் நிறையபேர் இருக்கின்றார்.

1400 ஆண்டுகள் முன் கிபி 7 ஆம் நூற்றாண்டில் புராண தெய்வங்களை வழிபாட்டு தெய்வமாக பிராமணர் ஏற்றுக்கொண்ட போது தான் பிராமணருக்கும் பிறருக்கும் ஒரு பொதுத் தன்மை ஏற்பட்டது. ஏனென்றால் பிறரும் அந்தப் புராண தெய்வங்களை ஏற்று  வழிபடத் தொடங்கினர் என்பதே. ஆக புராண மதம் தான் பல்வேறு சாதிகளையும் பிரிவுகளையும் அக்காலத்தே  ஒன்றாக இணைத்தது. இந்த இணைப்பு இசுலாமிய படையெடுப்பின் போது ஒற்றுமை உணர்வை தந்தது. இல்லாவிடில் இன்று இந்தியா ஒரு இசுலாமிய நாடு என்றாகி இருக்கும். இந்த புராண மதம் தான் வெவ்வேறு நெறிகள், கோட்பாடுகள், துணை மதங்களை இணைத்தது என்பதே வரலாற்று உண்மை. புராணங்களின் தந்தை மீனவ குலத்தில் பிறந்த வியாசர் என்பவர் ஆவார். அவருக்கு பின்பு தோன்றிய ஆதி சங்கரர் அதை மேலும் ஆறு சமயமாக வகைப்படுத்தி குறுக்கினார் என்பர். இதுவும் பல மதங்களின் கலப்பு மதம் தான். அதுவே இன்றைய இந்து மதம். இது பேரரசுப் பல்லவர் காலத்தில் நிகழ்ந்தது. ஆனால் தலித்தியர், திராவிடர் இந்த வரலாற்றை திரித்து பிராமண வெறுப்பு ஏற்படும்படியாகப் பேசுகின்றனர். இந்த ஒழுக்கக்கேடு பஞ்சமா பாதகத்தில் அடங்கியது. இந்த ஐப்பெரும் ஒழுக்கத்தைக் கைக் கொள்ளாதவர் தந்திர யோகப் (தியானம்) பயிற்சிக்கு சிறிதும் தகுதியற்றவர். தமிழகத்தில்  ஒழுக்கத்தை பிராமணரல்லாத வள்ளலார், பட்டினத்தார் போன்ற பிற சாதி துறவிகளோ, ஆன்மீகவாதிகளோ வலியுறுத்துகின்ற போது அதற்கு ஆரவாரத்தோடு ஆதரவு தரும் தமிழன் ஒழுக்கத்தை ஒரு பிராமணன் வலியுறுத்தினால் மட்டும் அங்கே ஏளனம், வசை தான் விஞ்சுகிறது. எனவே இது தமிழரிடம் உள்ள பிளவுபட்ட ஆன்மீகத்தின் வெளிப்பாடு ஆகும்.  ஒழுக்கம் என்பது அனைவர்க்கும் பொது அதை யாரும் எவருக்கும் எங்கும் முன்மொழியலாம். ஆனால் அதை முதலில் முன்மொழிபவர் பின்பற்றவேண்டும். கம்யூனித்துகளை பார்த்து செருமானிய மார்க்சிடம் இருந்து கருத்துகளை திருடிக் கொண்டனர் என்று எவரேனும்  சொல்லமுடியுமா? அவர்களும் அக் கருத்தால் மார்க்சு போல் அல்லவா ஆகிவிட்டனர். இதில் திருட்டு எங்கே வந்தது. தான் செய்தால் சரி அதையே அடுத்தவன் சொன்னாலோ செய்தாலோ அது தன்னுடைய கருத்தின் திருட்டு என்பது தவறான பரப்பல் ஆகும். தெய்வ வழிபாடு, மருத்துவம், இசை, ஜோசியம் எல்லாவற்றையும் ஆரியர் நம்மிடம் இருந்து தான் திருடிக் கொண்டனர் என்போரை கவனித்தால் இது தெளிவாகப் புரியும். இதற்கு எந்த சான்றையும் இவர்கள் முன் வைப்பதில்லை. ஆஃப்கான் முதல் இந்தோனேசியா வரை; காசுமீர் முதல் குமரி வரை பரவி வாழ்ந்த பெருந்தொகை பிராமணருக்கு தமிழ்நாட்டு சிறுபான்மை வள்ளுவ மக்கள் தான் ஆசான் என்பது போல இவர் பேசுவர். ஆதலால் இவர்கள் தான் உண்மைப் பார்ப்பனர் என்றும் பிராமணரை வேஷப் பார்ப்பனர் என்றும் வேடிக்கையாக (fun) பேசுவர். ஒரு சிறு பரப்பில் வாழும் ஒரு சிறு குழு (1.35 லட்சம் பேர்) பெரும் பரப்பில் வாழும் கூட்டத்தாருக்கு (5 கோடி பேர்) எப்படி ஆசானாக முடியும்? என்று தமிழர் யாரும் இதை இன உணர்வு காரணமாக கேள்விப்படுத்துவது இல்லை. கேட்டதும் சிரிக்க மட்டுமே செய்கின்றனர். சிறுபான்மை வள்ளுவ மக்களுக்கு உரித்தான சிறப்பையும் நற்பெயரையும் மொத்த பறையர் சமூகத்திற்கும் சொந்தமானதாகக் காட்டுவது மட்டும் வேஷம் இல்லையா? Edgar Thurston இருவருக்கும் என்ன வேறுபாடு காட்டுகின்றார் என்று பார்த்தல் இந்த கேள்வி நியாயமானதாகத் தெரியும். இதனால் தமிழர் சிந்தனைத் திறன் இவ்வளவு தானா என்ற கேள்விக்கு இடமாகிறது. முதலில் அயோத்திதாசரின் இந்த கருத்து தமிழர் அனைவரையும் வேடிக்கை (making fun of tamils) ஆக்குவது ஆகும் என்ற புரிதல் தமிழருக்கு ஏற்பட வேண்டும். Fun என்றால் இங்கே நகைப்பு, இழிவு, முட்டாள்தனம் ஆகியவற்றின் கலவை ஆகும். மேற்சொன்னபடி எத்தனையோ பிழையான, தவறான கருத்துகள் வெறுப்பைப் பரப்ப கடந்த 150 ஆண்டுகளாக தமிழகத்தில், தமிழர் நெஞ்சங்களில் திணிக்கப்பட்டுவிட்டன. அவற்றை திருத்திக் கொள்ளவே இந்த கல்வெட்டு வாசிப்பு, விளக்கம் யாவும். பிழையை திருத்திக் கொள்ளாவிடில் எங்கெங்கோ அலைந்து தேடிப்பிடித்து கொண்டுவந்து தட்டச்சு செய்து மேற்கொள்ளும் இந்த கல்வெட்டு வாசிப்பு முயற்சி அனைத்தும் ஒரு நேர வீணடிப்பு என்பதாகத் தான் இதை படிபவருக்கும் அமையும். பிழையான கருத்துகளை இன்னும் எவ்வளவு காலம் தமிழ்நாட்டில் உலாவ விடுவது? எனவே தமிழருக்கு அறிவின் விழிப்பு மிக அவசியமாகிறது. தமிழன் கொஞ்சமானா சிந்திக்க வேண்டாமா இனி!!!

பார்வை நூல்: Inscriptions of the Pudukkottai state arranged according to dynasties, எண்: 904, பக். 595 & 596

வட ஆர்க்காடு  மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் அருணாச்சலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றின் வடக்கு சுவர் 5 வரிக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராஜஇராஜ தேவற்க்கு யாண்டு 18 வது காத்தியை மாதம் பிறந்த பதினேழான் தியதி{யா}ன நாயற்றுக்கிழமையும் ரேவதியும் தஸமியும் பெற்ற
  2. இன்று சென்ன(த்)திக் கானையான யாதவராயர் முதலிகளில் நின்றையில் குளத்துழான் திருக்காளத்தி உடையானான வில்லவராயர் மகளார் யச்சிய பாடியில் கலிச்சித்தன் திருவேகம்பமுடையா
  3. ர்க்குப் புக்க  கோமளவல்லியேன் உடையார் திருவண்ணாமலை உடைய நாயநா{ர்}க்கு வைத்த  திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு விட்ட சாவா மூவா வாடு னூறு இ{வ்}வாடு னூறுன் திருவிளக்கு மன்றாடி வ
  4. சம் விட்டுச் சந்திராதித்தவரை செல்வதாக விட்டேன் கோமளவல்லியேன். இது பன்மாஹேஸ்வர ரக்ஷை . பின்பு விட்ட ஆடு இருபதும் ஆக ஆடு நூற்று இருபது. இவ்வாடு கோடந்தை மருமகன் நங்கைகோன் வசம் விட்டது.

நின்றையில் (நின்ற + அயில்) – பிடித்த வேல்; முதலி – படைத்தலைவன்; புக்க – மணமாகி கணவன் வீடு புக;

விளக்கம்: இக்கல்வெட்டு மூன்றாம் இராசராச சோழனின் 18 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.1234 இல் கார்த்திகை மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ரேவதி நட்சத்திரம் கூடிய நாளில் வெட்டப்பட்டது. சித்தூர் பகுதியை ஆண்ட சென்னத்தி கானை யாதவராயர்க்கு படைத்தலைவராக அமைந்த குளத்துழான் திருக்காளத்தி உடையான் வில்லவராயன் என்பவருடைய மகள் கோமளவல்லி யச்சியபாடியில் வாழும் கலிச்சித்தன் திருவேகம்பமுடையான் என்பவனை மணந்து கணவன் வீடு சென்றதால் தன் திருமண வேண்டுதலை நிறைவேற்ற திரு அண்ணாமலை இறைவனுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிக்க 100 ஆடுகள் கொடுத்துள்ளாள். பின்னொரு போது மேலும் 20 ஆடுகள் கொடுத்துள்ளாள். இவை 120 ம் கோடந்தையின் மருமகன் நங்கைகோனிடம் அன்றாடம் நெய் வழங்க ஒப்படைக்கப்பட்டன.

இக்கல்வெட்டில் திருமணம்  நடக்க வேண்டிக்கொண்ட வேண்டுதல் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. அந்நாளில் பெண்கள் 13-14 வயதில் மணம் முடித்தனர். எனவே இது காதல் திருமணமாக இருக்காது. பெற்றோர் தம் மகளுக்கு நல்ல இடத்தில் நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும் அப்படி அமைந்து திருமணமாகி மகள் கணவன் வீட்டிற்கு சென்றால் நுந்தா விளக்கு எரிப்பதாக வேண்டிக்கொண்டு அவ் வேண்டுதலைத் தம் மகள் பெயரில் நிறைவேற்றுவர். இதே போல “புக்க” என்ற சொல்லாட்சி பெற்ற திருமணக் கல்வெட்டு SII தொகுதி 7, எண் 831 இல் உள்ளது. அது திண்டிவனம் திண்டீசுவரர் கோவிலில் தியமங்கலமுடையான் கண்டராபரணன் குணசீலன் மகள் சோழமண்டலத் தென்கரை நாட்டு கொற்றமங்கலமுடையான் வேளாண் சந்திரசேகர இராசராச விழிஞத் தரையனை மணந்து கணவன் வீடு சென்றதற்காக உடையநங்கை என்ற பெயருடைய அவள் நுந்தா விளக்கு எரிக்க 30 பசு கொடுத்துள்ளாள் என்று உள்ளது. கும்பகோணம் திருவிடை மருதூர் கோவிலில் தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங்கின் (கிபி 1775) மாமன் மகள் அம்முனு அம்மணி தன் பொன்னான மனதில் அவனையே கணவனாகக் கொள்ள எண்ணி ஏற்ற விரதத்தை முடித்து இலட்ச தீபம் ஏற்றியதற்கு அடையாளமாக  தன் உருவம் ஒத்த பாவை விளக்கை செய்து நிரந்தரமாக கோவிலில்  நிறுத்தினாள். அவள் மன்னனை மணந்தாளா என்ற குறிப்பு அந்த பாவை விளக்கின் பீடத்தில் குறிக்கப்பட வில்லை (காண்க ஆவணம் இதழ் 29, 2018 பக். 189). எனவே திருமணம் ஆக இறைவனிடம் வேண்டுவது ஒரு வகை வேண்டுதல் ஆகும். இப்படி வேண்டுதல் இல்லாவிடினும் பெண்ணுக்குத் திருமணம் கட்டாயம் நடக்கும். ஆனால் படைச் சாதியார் தான் இப்படி வேண்டுவது செய்யும் கல்வெட்டு பொறிப்புகள் கிடைக்கின்றன என்பது அவர்கள் அந்தஸ்தை பேணுவதற்கே வேண்டுகின்றனர் என்று புரிகிறது.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண்: 84 பக். 46, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் முன்மண்டப கிழக்கு சுவர் 17 வரிக்கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ ருத்ரோதிகாரி ஆண்டு வைகாசி மாதம் 22 தியதி பெருமாள் / ஆலால சுந்தரம் பெருமாள்  திருவாய் மொழிந்தருளினபடிக்கு திருவெண்ணைநல் / லூர்  கைக்கோளரில் திருப்புவனமுடையார் இலங்கேசுவர தேவனுக்குரிய முறி. / இவந் வரும் சித்திரை மாதம் பதி எட்டு ஐஞ்சாந்திருமுறை ஆட்கொண்டருளிய  சித்திரைத் திருநாள் திருவுலா செய்தருளுகையில் ந / __ _ _ / _ _ _ தேவ _ _ _ ய்ய நாட்டு _ _ _ _ கையில் _ _ _ _ _ / _ _ _ வீரமாயேசுவரர் இருந்த தெருவில் _ _ _ _ / யில் _ _ _ முன்பு பொ _ _ _ ம் என்றும் சொன்னபடிஆலே இந்த _ _ _ த்ருமடைவிளாக வதி _ _ _ / _ _ _ முடையாரிலே வீரமாயேசுவர _ _ _ _ / இந்த திருபுவனமுடைய _ _ _ / மாணிக்கத்தில் மனைக்குக் கீழ்பார்க்கெல்லை பொன்மேந்த சோழப் பல்லவரையர் மனை / க்கு மேற்கு மேற்படியார் பக்கல் கொண்டுடைய _ _ _ மனை ^ ம் பொன் மேய்ந்த சோழன் நாமத்தில் மனையில் கட்டளையில் _ _ _ / மத்தின் விட்ட _ _ _  ஆக தடி _ _ _ னால் பன்னீரடிக் கோலால் குடி _ _ _ / _ _ _ வெட்டி _ _ _ முதல் ஒடுக்குலே பற்றுனால் _ _ _ _ காணி கூட _ _ _

முறி – ஓலை எழுத்து ஆவணம்

விளக்கம்: இக் கல்வெட்டு எழுத்தமைதியால் 12-13 நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. வேந்தர் ஆட்சி ஆண்டுக்கு குறிப்பு ஏதும் இல்லை. திருவெண்ணெய்நல்லூரில் வாழும் கைகோளர்களில் (செங்குந்தர்) திருபுவனமுடையார் இலங்கேசுவர தேவன் சித்திரை மாதம் 18 ஆம் நாள் சித்திரைத் திருவிழாவில் தேவாரத்தின் ஐந்தாம் திருமுறையை உலாவின்போது பாடிக்கொண்டு நேரே தன் வழியில் சென்று கொண்டிருந்த வேளையில் அவ் வழியில் ஏதோ கலவரம் நடக்க அதில் அவர் தவறுதலாக கொல்லப்படுகிறார். அவருக்கு திருமடைவிளாகத்தில் பொன்மேந்த சோழபல்லவரையன் பெயரில் அமைந்த வீட்டை அந்த சோழப்பல்லவரையனிடம் இருந்து வாங்கி அந்த வீடும் காணியும் தரப்பட்டதற்கான ஓலை ஆவணம் இது. இந்த ஆவணம் சித்திரைக்கு அடுத்த வைகாசி மாதம் 22 ஆம் தியதி இக்கோவில் இறைவன் ஆலால சுந்தர பெருமானின் கட்டளைப்படி இலங்கேஸ்வர தேவன் இறப்பிற்கு ஒரு மாதம் பின்பு தரப்பட்டது. இக்கல்வெட்டு மாநில தொல்லியல் துறை படிஎடுத்த போது அதிகம் சிதைந்து விட்டதால் மத்திய தொல்லியல் துரையின் ஆண்டறிக்கை 437/1921 இல் இருந்து குறிப்பு எடுக்கப்பட்டது.

பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி 15 (விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி II), பக். 38-39, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் நுழைவுவாயில் வலதுபுறச் சுவர் 21 வரிக்கல்வெட்டு

விபவ வருஷம் தை _  15 நாள் பெருமாள் ஆலா / ல சுந்தரப்பெருமாள் திருவாய்மொழிந்தருளின / படி நம்மை ஆண்ட தடுத்தாட் கொண்டருளிய  தம் / பிரானார் திருவாய்மொழி மல(ர்)ந்து இராவுத்தநல்லூரில் இருக் / கும் கன்னட பிராமணரில் சவுண்டரசர் மகன் (சோமரா) / சற்கு (கடி)யார  க்ஷேத்திறத்து _ _ _ _ (வி)த்துக் குடுத்த இ / துக்கு குருவி மூலை முதல் தரத்தில் இவற்கு சீவிதமா  / கச்  சேத்துக் குடுத்த பிறஸாதம் இருநாழி இதுக்கு வடக்கு / போய் திருவீதிக்கு தென்சிறகு _ _ _ _ / _ _ _ த்துக்கு மேற்கு முன்னா _ _ _ (பண்டாரத்துக்கு) திருமு / னைப்பாடி நம்பி கொண்ட மனை வடக்கு _ _ _ / கிழக்கு (சோமாசி) _ _ _ விட்ட மனை ஒன்று _ _ _ /  இந்த மனை ஒன்றும் இந்த பிறஸாதமும் இத்த / (ருமம் செய்தாரும்) இவற் வர்க்கத்தில் உண்டானவர்களும் / _ _ _ _ அனுபவித்து _ _ _  வித கிறையத்துக்கு / யோக்கியமாக ஆ(சந்த்ராதித்தவரை)யாக அனுபவித்து /  (திறி)ஸத்தியம் _ _ _ யாரா _ _ _ தம் கற்பித்து / கத்திலே இருக்கவும் இப்படி ஆலால சுந்தரப் / பெருமாள் திருவாய்மொழிந்தருளியபடி(க்கு) / இவை திருமந்திர ஓலை திருமுனைப்பாடி நம்பி / _ _ _ _

கடியார சேத்திரம் – நேரம் அறிவிக்கும் நிலம்; க்ஷேத்ரம் – வயல்வெளி; திருவாய்மொழி – கட்டளை,

விளக்கம்: இக்கல்வெட்டு 15-16 ஆம் நூற்றாண்டினதாக கொள்ளப்படுகிறது. வேந்தர் ஆட்சி ஆண்டு குறிப்பு ஏதும் இல்லை. திருவெண்ணை நல்லூர்க் கோவில் இறைவன் ஆலால சுந்தரனின் கட்டளைப்படி இராவுத்த நல்லூரில் வாழும் கன்னட பிராமணர் சவுண்டராசரின் மகன் சோமராசனுக்கு நேரம் அறிவிக்கும் வயல்புறத்தில் பிழைப்பு நிலமாக  2 மாவும், அளவீடு பிரசாதமாக இரு நாழி நெல்லும், ஒரு வீடும் திருமந்திர ஓலை நம்பியால் இவரது வங்கிசத்தார் உள்ளவரை அனுபவித்துவர எழுதி தரப்பட்டது.  இக்கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளதால் மத்திய தொல்லியல் துறையின் ஆண்டறிக்கை 460/1921 இல் இருந்து குறிப்பு எடுக்கப்பட்டது. மேல் உள்ள இரண்டு கல்வெட்டிலும் இறைவன் ஆலால சுந்தரனே நேரடியாகக் கட்டளை இட்டது என்பது சப்தரிஷி நிலை எய்திய சித்தர் ஒருவரின் சித்து வேலை தான் இது என்று அறிய முடிகிறது.

பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி 15 (விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி II), பக். 155-156, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு.

தஞ்சாவூர் மாவட்டம்  48 வரி வல்லம் செப்பேடு

ஆனந்த ஸ்ரீ கார்த்திகை மாதம் 13. வல்லத்து / க்கு தாசா ஒரு பாதையில் வான வாச / மான காட்டுப் பாதையில் தஞ்சாவூர்  ரு / யிந்து வல்லத்துக் பக்கிர சா போ / கச்சே ஒரு பிராமணதிம்மாள் வல்ல / த்தியிருந்து தஞ்சாவூர்க்கு போனாள். / அப்போ கள்ளர் வந்து பிறாமநித்தியே பரி / க்க வந்தா அப்போ ஓடி வந்து பக்கிரி சா / ய்பு காலுலே விளுந்தாள். பக்கிரி சா / ய்பு யிருந்து கொண்டு யிந்த பிறாமணத்தி / உங்கள்க்கு தெயிவமது வாரி அ / வளே தொட வேண்டா மென்று சொ / ன்னாற் சொன்னவிடத்திலே பக்கிரி சாய / பே குத்தினார்கள்.  அந்த பிறாமணத்தி  / எனக் கோசர அல்லோ பக்கிரி சாய / பே குத்தி போட்டார்கள் யென்று அவள் / நாக்கே பிடிங்கிக் கொண்டு செத்துப் போனா / ள்  கள்ளருக்கு யெல்லாம் கன்னு தெரி / யாமல் போச்சுது னாலு சாமத் / துக்கும் கன்னு தெரியாமல் போச் / சுது. அப்போ கல்லர் யிருந்து கொண்டு  / நாங்கள் அறிஞ்சி அறியாமல் செ / ய்து  போட்டோம் யெங்கள்க்கு  / கன்னு வெளிச்சம் தந்திகளே / ஆனா உங்களுக்கு கோவில் கட்டி கொ / னரும் வெட்டிவிச்சு கொளமும் வெட்டிவிக்குறோம். யிந்த சேதி / விசைய ரெகுநாத னாயக்கர் / னாலையிலே யிதுக்கு மானிய நிலம் / 1500 குளி மானியம் நஞ்சை  நி / லவிட்டு  குடுத்தகர்கள், நாயக்கர் கல்லும் / காவேரி பில்லும் பூமி வரைக்கும்  நட / ப்பிவிச்சார்கள். யிந்தப் பாதை கா / சி  றாமேசுரத்துப் பாதை மக்கா மதி / னத்துப் பாதை. துலுக்கநாகப்பட்டவன் / யிந்த மானியத்துக்கு மரிச்சால் ப / ன்னியே அருத்து தின்னான் சூத்திர / ன்னானவன்  மரிச்சால் கெங்கை / கரையில் பசுவே கழுத்தை அரு / த்தான். யிந்த தற்மம் காய்கரி ம / ரவேடை பிரவேடை  அனுபோ / விச்சு கொண்டு போகவும்  யிந்த / தற்ம  அழிவில்லாமல் அனுபோ / விச்சு கொண்டுவரவும் இந்த ப / டிக்கு விசைய ரெகு னாயக்கி னா / னையிலே நடப்பிவிச்சு நடந் / து கொள்ளுகிற தந்மம் யிது / க்கு  மரிக்க தேவையில்லை.  

தாசா –  போகும் வழி; பக்கிரி சாயுபு – fakir sahib, பிச்சை கொண்டு வாழும் இசுலாமிய துறவி; கள்ளர் – கள்வர், வழிப்பறி கொள்ளையர்; சாமம் – 3 மணி நேரம்; 1500 குழி – நாலரை ஏக்கருக்கு கூடுதல்; மறி – தடு, தடை; வேடை – பயிர் தொழில்;  

விளக்கம்: வல்லம் தஞ்சைக்கு இடையே 12 கி.மி. தொலைவு  இடைவெளி உள்ளது. இங்கே தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இச் செப்பேடு குறிக்கும் பிராமணப் பெண்ணின் நினைவுச் சின்னமும் குளமும் கிணறும் உள்ளது.  இச்செப்பேடு தஞ்சை நாயக்கர் ஆட்சியின் போது கி.பி. 1614 இல் ஆனந்த வருடம் திருக் கார்த்திகை மாதம் 13 நாள் வெளியிடப்பட்டது. வல்லத்திற்கு போகும் வழிகளில் ஒரு பாதையில் வனாந்திரமான காட்டுப் பாதை ஊடே தஞ்சாவூரில் இருந்து வல்லத்திற்கு வரும் பிச்சை எடுத்து வாழும் இசுலாமிய துறவியான பக்கிரி (fakir) சாயபு போகையில் எதிரே ஒரு பிராமணப் பெண் வல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்கு போய்க் கொண்டிருந்தாள். அப்போது வழிப்பறி செய்யும் கள்வர் அப் பிராமணத்தியை பின் தொடர்ந்து வந்து உடைமைகளை பறிக்க வந்தனர். அப்போது அவள் ஓடிச்சென்று பக்கிரி சாயபுவின் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி தஞ்சம் வேண்டி நின்றாள். பக்கிரி சாயிபு அவளை தன் அருகே அழைத்துக் கொண்டு “இந்த பிராமணத்தி அம்மாள்  உங்களுக்கு தெய்வம் மாதிரி அவளைத் தொட வேண்டாம்” என்று எச்சரித்தார். கள்வர்கள் உடனேயே கத்தியை உருவி அந்த இடத்திலேயே பக்கிரி சாயிபுவை குத்திக் கொன்றார்கள். உடனே அந்த பிராமணத்தி அறச்சிந்தனை மேலீட்டால் என்னைக் காப்பதற்காக அன்றோ இவர் கொலையுண்டார் ஆதலால் இவர் சாவிற்கு நானே பொறுப்பாவேன் என்று பதறி அவள் தனது நாவைப் பிடுங்கிப் போட்டு அந்த இடத்திலேயே செத்துப் போனாள். அவளது துயர எண்ணம் கள்வர்களின் பார்வையை பறித்தது. அவர்களும் குருடராகிப்போயினர். இப்படி நாலு சாமம் (அரை நாள்) கண் குருடாக இருந்த கள்வர்கள் நாங்கள் அறிந்தும் அறியாது செய்த பிழையை மன்னித்து எங்களுக்கு கண் பார்வையை மீட்டுத் தந்தால் உங்களுக்கு நினைவுக் கோவில் கட்டி  கிணறும் வெட்டி குளமும் வெட்டுவிக்கிறோம் என்று வேண்டினர். இங்கே நாலு சாமத்திற்கு கண் தெரியவில்லை என்றால் அதன் பின் பார்வை தெரிந்தது என்று தானே பொருள்? ஏனென்றால் செப்பேட்டில் பார்வை வந்தது போல நேரடிக் குறிப்பு ஏதும் இல்லை.

இந்த அதிசயச் செய்தி மன்னர் விசைய ரகுநாத நாயக்கர் காதுகளுக்கு எட்டியது. அவர் நாளையில் இருந்து இதுக்கு மானியமாக நஞ்சை நிலம் 1500 குழி தானமாக கொடுத்தேன் என்று அறிவித்தார். அதை கொடுக்கின்ற போது நாயக்கர் கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் உள்ள வரை இது செல்வதாகட்டும் என்று சொன்னார். இந்த தர்ம தானப் பாதை காசி இராமேசுவரம் போன்ற தர்மப் பாதை ஆகும்; மக்கா மதீனா போன்ற புனிதப் பாதையாகும். யாரேனும் ஒரு துலுக்கன் இந்த தர்ம மானியத்தை தடுத்தால் அவன் பன்றியை அறுத்துத் தின்றவன் ஆவான். யாரேனும் சூத்திரன் ஒருவன் தடுத்தால் அவன் கங்கைக் கரையில் பசுவின் கழுத்தை அறுத்தவன் ஆவான். இந்த தர்ம நிலத்தில் காய்கறி, பழ மரங்கள் நடல், பிற வேலைகள் ஆகியவற்றை செய்து அனுபவித்துக் கொண்டு போகவேண்டும் என்று இந்த இடத்தைப் பாதுகாக்கும் பணியாளருக்கு உரிமையாக தருகின்றார். இந்த தர்மம் நின்று விடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும். இது மன்னன் விசைய இரகுநாத நாயக்கன் ஆணையில் நடத்துவிக்கிற நடந்து கொள்கிற தர்மம் ஆகும். இதை யாரும் தடுக்க வேண்டியதில்லை என்று ஆணையிட்டார் இரகுநாத நாயக்கர். செங்குட்டுவன் பத்தினி தெய்வத்திற்கு கடும் முயற்சியில் இயமத்தின் கல் கொண்டு கண்ணகிக் கோட்டம் எடுத்தது போலல்லாமல் இது தஞ்சை மன்னரின் ஒரு மிகச் சிறு தர்மம் ஆகும்.

வழிப்போக்கரான இசுலாமிய பக்கீரும், பிராமணப் பெண்ணும் எந்த ஊர் என்ற முகவரி அறியப்படாததால் அவர்தம் பெயர் இச் செப்பேட்டில்  குறிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு ஏதும் தந்திருக்க வாய்ப்பில்லை. பிராமணத்தி அம்மாள் என்ற சொல்லாட்சி அவள் நடுவயதினள் என்பதைச் சுட்டுகிறது. இந்த  பிராமணப் பெண்ணின் தெய்வீக ஆற்றலுக்காகத் தான் மன்னர் விசய ரகுநாத நாயக்கர் அவராகத் தாமே முன்வந்து பிராமணப் பெண்ணின் நினைவுக் கோவிலைப் பேண 1500 குழி நிலம் தானமாகத் தந்தார். செப்பேடு பேச்சு வழக்குத் தமிழில் உள்ளது என்றாலும் பல சொற் பிழைகளுடனும் பல எழுத்துப் பிழைகளுடனும் இலக்கணப் பிழைகளுடனும்  எழுதப்பட்டுள்ளது. இது தமிழ்ப் படிப்பு செப்பேடு எழுதுவோரிடம் குறைந்து வந்ததோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. அப்படியானால் நாயக்கர் ஆட்சி தான் தமிழ், தமிழ் பண்பாட்டிற்கு வீழ்ச்சி தந்த ஆட்சி. தமிழகத்தின் இருண்ட காலம் எனலாம். இசுலாமியரிடம் இருந்து மீட்பு என்பது பொய். 

தமிழ் வேந்தர் ஆட்சிக் கல்வெட்டுகளில் எந்த ஒரு சாதியும் சூத்திரர் என்று குறிக்கப்படவில்லை. இதே காலத்து சேதுபதி மன்னர் கல்வெட்டுகளில் கூட சூத்திரன் என்ற சொல்லாட்சி இல்லை என்பது சிந்திக்கத்தக்கது. ஆந்திரத்தை ஆண்ட காகதீய அரசர்கள் தம்மை சூத்திரர் என்று கல்வெட்டு பொறித்தார்கள். அதன் பின் இசுலாமிய ஆட்சியை ஆந்திரத்தில் ஒன்றுகூடி ஒழித்த நாயக்கர்களில் சில ரெட்டிமார் ஆட்சியாளர் இசுலாமியர் ஆக்கிரமிப்பு, ஆட்சி  ஒழிப்பு எல்லாம் சத்திரியர் இருந்து செய்யவேண்டிய வேலை. அவர்கள் இப்போது இல்லாததால் சூத்திராகிய தாம் அதை செய்ததாக தம்மைச் சூத்திரர் என்று கல்வெட்டு பொறித்தார்கள். இப்படி ஆட்சியாளரே தம்மை சூத்திரர் என கூறிக்கொள்வதன் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ந்தால் “நானே ஒரு  சூத்திரன் என்றால் எனக்கு கீழ்படிந்த சிற்றசர், அவரைச் சார்ந்த படைத்தலைவர், படை ஆள்கள், பணி ஆள்கள், பொது மக்கள் எல்லோருமே சூத்திரர் (அடிமை) தான்” என்று எல்லோருக்கும் சூத்திர பட்டத்தை கட்டி இடையில் சத்திரியர், வைசியர் என்போர் இல்லாதபடி உளவியல் ரீதியாக அவர்கள் மேன்மை உணர்வு கொள்ளாதபடி செய்வதே ஆகும். அந்த ஆந்திர ஆட்சியாளரின் வழிவந்தவனல்லவா இந்த தஞ்சையை ஆண்ட மன்னன் விசய ரகுநாத நாயக்கன்? ஆகையால், தான் நேரடியாக வெளியிட்ட ஆணைச் செப்பேட்டில் பிராமணரல்லாதாரை சூத்திரர் என்று குறிப்பிடுகின்றான் என்பது இந்த செப்பேட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய வரலாற்றுச் செய்தி ஆகும். தமிழரின் சூத்திரப் பட்டத்திற்கு யார் உண்மைக்கு காரணம் என்பதற்கு இச்செப்பேடு ஒரு நல்ல சான்று ஆகும். இவருக்கு முன்னோனான சேவப்ப நாயக்கருக்கு தொடர்புள்ள கி.பி.1550 கால தஞ்சாவூர் இரயில் நிலைய வடக்கில் உள்ள மசூதி கல்வெட்டிலும் இப்படி சூத்திரன் என்ற சொல்லாட்சி உள்ளது (காண்க ஆவணம் இதழ் 4, 1994, பக். 102 &103). தமிழனை சூத்திரன் ஆக்கிவிட்டால் அவன்  செல்வத்தையும் கல்வியையும் நோகாமல் பறித்துவிட முடியும். இப்படி தெலுங்கு ஆட்சியாளரால் தமிழர் மீது திணிக்கப்பட்ட இந்த சூத்திரப் பட்டத்திற்கு எதிராகத் தான் அதே தெலுங்கு சாதியில் பிறந்த ஈரோட்டுக்காரர் திராவிடத்தின் பெயரால் சுயமரியாதை இயக்கம் கட்டினார். சூத்திரன் என்றால் அடிமை என்ற உண்மைப் பொருளை மறைத்து வேறு ஒரு பொருத்தமற்ற சொல்லால் பரத்தை மகன் என்று எழுத்திலும் பேச்சிலும் அவரால் தமிழன் இழிவு செய்யப்பட்டான் என்பது வரலாற்று வேடிக்கை. இதற்கு தமிழன் இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை மாறாக அவ் விடத்திலேயே அடைக்கலம் ஆனான். தமிழர் மீதான இந்த சூத்திர பட்டத் திணிப்பு தஞ்சை நாயக்கர் தொடங்கி தமிழகம் முழுமைக்கும் பரவியதற்கு தெலுங்கு நிலவுடைமை ஆண்ட பரம்பரை படைச் சாதியாரே காரணம் என்பது வரலாறு. இதற்கும் இந்து மதத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்று தெளிக. இது தெலுங்கு திராவிடத்தாரின் குற்றம் என்பதால் இந்த செப்பேட்டைப் பற்றி திராவிடம் ஒருபோதும் மேடையில் பேசத் துணியாது. பார்க்கலாம் இனியாவது இந்த நிலவுடைமைச் சாதிகளைக் குற்றம் சாட்டும் துணிவுள்ளவர் வேறு யார் என்று. ஆனால் தமிழக கம்யூனிசமும் தலித்தியமும் இதை பேச முன் வரலாமே. எப்போதுமே திராவிடப் பொய்களைப் பிடித்துக்கொண்டு தான் ஊர்ந்து போக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இவர்களுக்கு இல்லையே!! மேடையும் உமது, ஒலிவாங்கியும் உமது, முன் நிற்கும் மக்களும் உமது கருத்தியல் மக்கள் தானே பின் என்ன தயக்கம்? இதற்கு முதலில் உண்மையின் மீது நாட்டமும், குற்றம் யார் செய்யினும் குற்றமே என்ற அறத் துணிவும் (moral courage) வேண்டும். அதை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.

பார்வை நூல்: வரலாற்றில் வல்லம், ச. கிருஷ்ணமூர்த்தி, பக். 108 – 109 

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் ஊராட்சி சித்தாலங்குடி கிராமம் வல்லப சுவாமி 9 வரிக் கல்வெட்டு

  1. 1861 (1000 800 60 1) சதுர்தசி கரியான தமிள துன்மதி ஆண்டு
  2. வையாசி  மாதம். 26 நாள். மகாராஜா  ச
  3. த்திரபதி போதகுரு மகாராஜா அவற்கள்  பி
  4. ரான் மலைக்கி வேங்கைப்புலி வேட்டைக்கி ச
  5. வாரி விஜயமாகும் போது படமாதூரிலிருக்கும்
  6. யிஷ்ட குல தெய்வமாய வல்லப ஸ்வாமிக்கி செ
  7. யிது கொண்ட பிரார்த்தனைப்படிக்கி புலி
  8. யை சுட்டுக் குத்தினதுனாலேயும் யிந்
  9. த திருமதிலக் கட்டினது

கரியான – கிருஷ்ணபக்ஷமான; சவாரி – குதிரை மீது ஊர்ந்து;

விளக்கம்: ஆங்கிலர் ஆட்சித் தாக்கம் காரணமாக கல்வெட்டில் கிரிகேரியன் ஆண்டும் குறிக்கப்படுகிறது. தமிழ் துன்மதி ஆண்டு வைகாசி மாதம் 26 ஆம் நாள் சதுர்தசி கிருஷ்ணபக்ஷம் அன்று (07/06/1861, வெள்ளிக்கிழமை) சிவகங்கை அரச மரபில் வந்த மகாராஜா சத்திரபதி போதகுரு மகாராஜா பிரான்மலைக்கு வேங்கைப்புலி வேட்டையாடக் குதிரைமீது செல்லும்போது அதற்கு முன் படமாத்தூரில் இருக்கும் தன் குலத்து இஷ்ட தெய்வமான வல்லப சாமியை வேண்டி வணங்கி வேட்டையில் புலியைச் சுட்டுக் குத்திக் கொன்றபடியால் இந்த மதிலை தன் வேண்டுதல்படியே கட்டுவித்தார் என்கிறது கல்வெட்டு.

புலி வேட்டையில் தனக்கும் தன் பணியாட்களுக்கும் புலியால் எந்த ஊறும் நேராமல் புலியை விரைந்து கண்டு சுட்டுக் கொன்று விட்டால் மதில் கட்டுவதாக வேண்டி இருக்கலாம். உயிர் அச்சம் யாரை விட்டது அதனால் இப்படி குல தெய்வத்தை துணைக்கு அழைப்பது ஒன்றும் புதிதல்ல. வேண்டுதலில் பாதுகாப்பு வேண்டுவதும் ஒரு வகையே.

பார்வை நூல்:  2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாத நாளேட்டுச் செய்தி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டம் பக்தஜனேஸ்வரர் கோயில் திருநாவலூர் மண்டபத்தின் கிழக்கு சுவரில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்திஸ்ரீ உடையார் திருத் தொண்
  2. டீஸ்வரமுடைய நாயநார் ரேவ(ல்)லாலே 
  3. இவ்வூர் வியாபாரி வேளூர் கிழவந்
  4. பள்ளி பட்டணசுவாமி பெரியா
  5. ன் இத்திருமண்டபம் இரண்டும்
  6. செய்த்து கீழைத் திருவாசலுந் திற
  7. ந்து அத்திருவாசலும் செய்வித்தாந்

 திருவாசல் – கதவு, வாயில், doorway

விளக்கம்: இதன் காலம் தெரியவில்லை மன்னர் ஆட்சிஆண்டு குறிப்பு இக்கல்வெட்டில் இல்லை. இந்த திருத்தொண்டீஸ்வரம் கோவில் இறைவன் ஏவலால் (கனவிலோ அல்லது மனக்குரலாகவோ / inner voice கேட்டு) இந்த ஊரைச் சேர்ந்த வணிகன் வேளூர் கிழவன் பள்ளியான பட்டணசுவாமி பெரியான் என்பவன் இந்த திருமண்டபம் இரண்டையும் செய்ததோடு கிழக்கில் வாசலைத் திறந்து அதற்கு கதவும் செய்து வைத்தான்.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7, எண் 1002 ARE NO 372 of 1902 பக். 477

தஞ்சை மாவட்டம் திருவாரூர் வட்டம் தியாகராஜர் திருக்கோவில் இரண்டாம் பிரகாரம் தெற்கு பிரகாரம் வடபுறச் சுவர் 8 வரி நெடிய கல்வெட்டு 

  1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாலை மிடைந்து _____ தலை
  2. த்தலை சிறப்ப _______ ஒப்பாகி தெரிவையர்
  3. திலதன் தியாகப் ______ கோப்பரகேசரி வன்மரான திருபுவன சக்ரவத்திகள் ஸ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு அஞ்சாவது மிதுன ஞாயிற்று பூர்வ பட்சத்து சப்தமியும் ஞாயிற்றுக் கிழமையும் அத்தமமான நாள் முன்னூற்று நாற்பதினால் கேயமாணிக்க வளநாட்டு   திருவாவூர் கூற்றத்து திருவாரூருடையார் வீதி விடங்கர் சித்திரைத் திங்கள் திருநாளில் சதய _ _ _ சி தேவர் ஸ்ரீ _ _ _  திருக்காவணத்தில் சிம்மாசனத்து எழுந்தருளியிருந்து  பதியிலாளர் தியாக விநோதத் (தலைக் கோலியை ஆட்டகொண்டருளா நிற்ப ஸ்ரீகாரியம் சுப்பிர
  4. மங்கலமுடையான் மாதவன் ரவியான மானாலாய மூவேந்த வேளார் விண்ணப்பத்தினால் பதிபாத மூலப் பட்டுடை பஞ்சாட்சரிய தேவ கன்மிகளுக்கும் கோயிலங்  _ _ _ யார்க்கும் திருவாய் மொழிந்தருளினபடி நம் ஏவலால் பூலோக ராஜ்யம் செகிற  சூரியபுத்திரன்மனு தன் புத்திரன் ஏறிவருகிற தேரில் பசுவின் கன்று அகப்பட்டு  பிரமாதப்பட அதின் மாதாவான சுரபி கண்டு துக்கித்து மனுவின் வாசலில் மணியை எறிய அது  கேட்டு மனு தன் மந்திரி இங்க நாட்டுப் பாலையூருடையான் உபயகுலாமனைப் பார்த்து நீ சென்று இதனை அறிந்து _ _ _ _ வாயிற்புறத்து ஒரு பசு மணியெறியா நின்றது என்று சொல்ல அது கேட்டு மனு புறப்பட்டு பசுவையும் பட்டுக் கிடந்த _ _ _ _ படி வினவ தன புத்திரன் ஏறின தேரி
  5. லே பட்டமை அறிந்து அக்கன்றுக்கு நேராக தன புத்திரன் பிரிய விருத்தனை தேரிலே ஊர்ந்து கொடுக்க வென்று உபய குலாமனுக்குச் சொல்ல அவன்  சதோபத்தோடும் புறப்பட்டு தன செவிகளை தரையிலே குடைந்து கோடுபட்டது கண்டு துவாரபாலகன் புகுந்தது உபயகுலாமன் தன் செவிகளை குடைந்து கொண்டு _ _ _ _  தும்மிதனாய் மனுதானே புறப்பட்டு தன் புத்திரனை தானே தேரிலே ஊர்ந்து  கொடுக்க அப்போதே நாம் அவனை அனுக்கிரகித்து கன்றுக்கும் மந்திரிக்கும் மனு புத்திரனுக்கும் ஜீவன் கொடுக்க அது கண்டு மன சந்தோஷித்து கன்றினை எடுத்துக் கொண்டு பசுவிற்கு காட்டிக் குடு _ _ _ டாபிஷேகம் பண்ணி இவனுக்கு உபயகுலாமலன் மகன் சூரியனை மந்திரியாக்கி இவனுக்கு தன் புத்திரன் மாளிகை _ _ _ மங்கல _ _ _ _  மூரும் கொடுத்து மனுவும் உ
  6. பயகுலாமலனும் தவசினை தலை நின்றமையில்  பாலையூருடையான் உபயகுலாமலன் வம்சத்தானாகிய பாலையூருடையார் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வான(திராயர்) வம்சாதி ஆக வருகிற மாளிகை மனை பழையபடி மாளிகையாக எடுத்து எடுத்து குடி வைப்பிப்பதாக நாம் சொல்ல _ _ _ _  இதிலே நித்தமும் நம் அடியார்க்கு சோறு இடப்பெற வேணுமென்று  இவன் நமக்கு சொன்னமையில் காட்டிப் பெறுவதாகவும் இம்மாளிகை வம்சாதிஆக ஸ்வயமாய் வரு _ _ _ மாளிகையிலே எழுத்துவெட்டுபித்து கொடுக்க வென்று இப்படிக்கு வெட்டிக்கொடுக்க வென்றும் திருவாய் மொழிந்தருள திரும _ _ _ தியாக விநோத பிரம்ம மகாராஜன் எழுத்தினால் புகுந்த திருமுக _ _ _ _
  7. பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வானாதி ராஜனுக்கும் மனுவுக்கு மந்திரியானவன் தன் வம்சத்தில் பாலையூருடைய உபயகுலாமலன் மனுவின் பக்கம் பெற்றுடைய மாளிகை மனை தனக்கும் _ _ _ _ நாம் காணியாகத் தந்தோம்.  இம்மாளிகை பழ _ _ _ப _ _ _  மனை நிலத்துக்கு கீழ்ப்பார்க்கெல்லை தாது _ _ _ _  முடுக்குக்கு மேற்கும் தென்பார்க்கெல்லை _ _ _ வடக்கும் மேல்பாற்க்கெல்லை அரு மொழீஸ்வரமுடையார் தளிச்சேரி பால் நத்தத்துக்கு கிழக்கும் வடபார்க்கெல்லை பாலையூருடையான் மாளிகைத் தெரு
  8. வுக்கு தெற்கும் இவ்விசைந்த பெரு நான்கெல்லை நடுவுபட்ட மாளிகை மனை குழி நூற்றிருபதும் பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்க சோ மகாபலி வாணராஜனுக்கு வம்சாதியாக ஸவமானப்படி ஸ்ரீ மாகேஸ்வரருக்கும் பதிபாத மூலுப் பட்டுடை பஞ்சாட்சரிய தேவர் கன்மிகளுக்கும்  _ _ _ ர்க்கும் உடையார் வீதிவிடங்க தேவர் திருவாய்மொழி _ _ _ _ தச்சரில் _  _ ந்தமுடைய தச்சன் கோபூம்பன்  அ _ – _ போக் கோயில் ஆசாரியன் கல்வெட்டியது.  இது பன் மாகேஸ்வர _ _ _

மிதுன ஞாயிறு – ஆனி; பூர்வபக்ஷம் – வளர்பிறை; திருக்காவணம் – பந்தல், மண்டபம்; பிரமாதப்பட – கொல்லப்பட; எறிய – அடித்தல், உதைத்தல்; சதோபம் – செருக்கு; குடை – அராவி; கோடு – நடுநிலை தவறி;  தும்மிதன் – வெகுண்டவன்;

விளக்கம்: விக்கிரம சோழனின் 5 ஆம் ஆட்சி ஆண்டு கிபி. 1123 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. முதல் இரண்டு வரிகளில் விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தி இடம் பெறுகிறது. அவனது 5 ஆம் ஆட்சி ஆண்டு ஆனி மாதம் வளர்பிறை 7 ஆம் நாள் ஞாயிற்று கிழமை அஸ்த நட்சத்திர கூடிய நாள் 340 ஆம் நாள் கேயமாணிக்க வளநாட்டுப் பிரிவில் அடங்கிய திருவாரூர் கூற்றத்தின் திருவாரூருடைய கோவில் வீதி விடங்கர் சித்திரைத் மாத திருநாளின் போது சதய நட்சத்திரம் கூடிய அன்று வேந்தர் திரு விக்கிரம சோழர் பந்தலின் கீழ் அரியணையிட்டு அமர்ந்திருக்க அப்போது பதியிலார் தியாகவிநோதத் தலைக்கோலி ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். அரச அலுவலன் சுப்பிரமணிய மங்கலம்முடையான் மாதவன் ரவியான மானாலாய மூவேந்த வேளார் வேண்டிக்கொள்ள பதிபாதமூலப் பட்டுடை பஞ்சாட்சரிய தேவ கன்மிகளுக்கும் கோயிலங்காடியார்க்கும் சோழன் கட்டளையாகச் சொன்னது. (இங்கே இறைவன் சொல்லுவது போல) நம்முடைய திட்டப்படியான நிகழ்வின்படி மண்ணுலகில் அரசாள்கிற சூரிய புத்திரன் மனுவின் மகன் (இளவரசன்) ஏறிவரும் தேரின் சக்கரத்தில் பசுவின் கன்று ஒன்று அகப்பட்டு கொல்லப்பட அதன் தாய்ப் பசு அதைக் கண்டு வருந்தியது. உடனே மனுவின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த மணியை அடித்து ஒலியெழுப்பியது. அதை செவியுற்ற மனு தன் அமைச்சன் இங்கநாட்டின் பாலையூருடையானான உபயகுலாமலனை நோக்கி ‘நீ சென்று என்ன காரணம் என்று அறிந்து வா’ என்று அனுப்பினான். அங்கே வாயிற் புறத்தில் ஒரு பசு மணியை அடித்தபடி இருந்தது. அதை சொன்ன போது மனு தானே நேரில் சென்று பசுவையும் தேரில் இறந்த கன்றையும் பார்த்தான். இதற்கான காரணத்தை வினவிய போது தனது மகன் ஏறிய தேர் சக்கரத்தில் அடிபட்டு கன்று இறந்துவிட்டது என்று அறிந்து கொண்டான்.

இதனால் அரசன் சூரியபுத்திரன் மனு, அக்கன்றுக்கு நேராகத் தன் மகன் பிரியவிருத்தனை படுக்கவைத்து தேரை ஏற்றிக் கொல்க என்று அமைச்சன் உபயகுலாமலனுக்கு ஆணையிட்டான். அவனும் அரச கட்டளையை நிறைவேற்றும் செருக்கோடு நடந்துசென்றான். அப்போது இந்த இக்கட்டான நிலையைத் தடுக்க அமைச்சன் தன் காதுகளைக் குடைந்து அறுத்து எறிந்து நடுநிலை தவறி உயிர்விட்டதை பார்த்த வாயிற்காவலன் அரசனிடம் சென்று உபயகுலாமலன் தன்  காதுகளை அறுத்தெறிந்து இறந்ததைக் கூறுகிறான். உடனே வெகுண்டெழுந்த மனு தானே சென்று தன் மகன் பிரிய விருத்தனைப் படுக்க வைத்து தேரை அவன் மேல் ஓட்டிக் கொன்றான். உடனே நாம் (இறைவன்) அவனுக்கு அருள்புரிந்து அமைச்சனுக்கும் கன்றுக்கும் இளவரசனுக்கும் உயிர் கொடுத்து எழுப்ப அது கண்டு மகிழ்ந்த அரசன் சூரியபுத்திரன் மனு கன்றைக் கையில் ஏந்தி பசுவிடம் கொண்டு விட்டான். தன் மகன் பிரிய விருத்தனுக்கு பட்டாபிஷேகமாம் மணிமுடி சூட்டி இவனுக்கு அமைச்சன் உபயகுலாமனின் மகன் சூரியனை அமைச்சனாக்கி அவனுக்கு தன் மாளிகையில் அலுவல் கொடுத்து மங்கல _ _ _  ஊரும் கொடுத்து விட்டு சூரியபுத்திரன் மனுவும் அமைச்சன் உபயகுலாமலனும் தவ வாழ்க்கை ஏற்று துறவு பூண்டமையால் பாலையூருடையான் உபயகுலாமலன் வழிவந்த பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வாணாதிராயர் வங்கிசத்தில் வழிவழியாய் வருகிறவர் மாளிகை மனையை பழைய படியே மாளிகையாக கட்டிக்  குடிபுகலாம் என்று நாம் (உத்தம சோழன்) உரிமை கொடுத்தோம். இந்த மாளிகையில் எப்போதும் நம்முடைய அடியார்களுக்கு சோறு இட வேண்டுமென்று அமைச்சன் வாணாதராயன் நம்மிடம் கோரிக்கை வைக்க அவ்விதமே ஆகட்டும் என்றும் இனி இம்மாளிகை இவன் வமிசத்தாருடையதாக வருவதாக மாளிகையில் எழுத்து வெட்டுவித்து கொடுக்க வேண்டி இப்படியாக வெட்டிக்கொடுக்க என்று வேந்தன் கட்டளையிட திருமந்திர ஓலை தியாக வினோத பிரம்மா மகாராஜன் எழுத்தினால் ஏற்பட்ட வேந்தன் ஆணை இது.

பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வாணாதிராஜனுக்கு மனுவுக்கு அமைச்சனானவன் தன்  வம்சத்தில் பாலையூருடைய உபயகுலாமலன் என்பவன் மனுவிடம் இருந்து பெற்ற மாளிகை, மனை ஆகியவற்றை நாம் உரிமையாகத் தந்தோம். இந்த மாளிகை இருக்கும் இடம் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது ஆனால் அந்த இடம் கல்வெட்டில் சிதைந்ததால் தெளிவாகப் புரியவில்லை. இது மாகேஸ்வரருக்கும் பதிபாத மூலப்பட்டுடை பஞ்சாட்சரிய தேவ கன்மிகளுக்கும் இறைவன் வீதிவிடங்க தேவர் சொல்லால்  அறிவிக்கப்படுகிறது. இதை கோவில் ஆசாரி கல்லில் வெட்டினான். வீதி  விடங்க தேவர் பெயரில் யாரோ ஒரு சப்தரிஷி இந்த உயிர்ப்பிக்கும் சித்தை நிகழ்த்தியுள்ளார் என்று உணர முடிகிறது.

இக்கல்வெட்டு பெரிய புராண மனுநீதிச் சோழன் கதைக்கு அடிப்படையாக அமைந்த கல்வெட்டாகும். காலத்தால் அந்நூலுக்கு சற்று முற்பட்டது. அது உத்தம சோழன் காலத்தில் எழுதப்பட்டது என்றால் இந்த நிகழ்வு முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் நடந்திருக்கும் என்று தெரிகிறது. இது தான் கல்வெட்டிலும் சுட்டிக் காட்டப்படுகிறது. சூரிய புத்திரன் மனு திருவாரூரின் அரையன் / சிற்றரசன் அரசன் என்று தெரிகின்றது. ஆனால் இவன் சோழர் குடியைச் சேர்ந்தவன் என்பதற்கு எந்த குறிப்பும் கல்வெட்டில் இல்லை. இவனது அமைச்சன் வாணர் குலத்தை சேர்ந்தவன் என்று தெரிகின்றது.

பார்வை நூல்: திருவாரூர்க் கோயில், கல்வெட்டு எண் 27, பக் 351 – 354, குடவாயில் பாலசுப்ரமணியம் & தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 எண் 456

காஞ்சிபுரம் மாவட்டம்  ஆரப்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் முதன்மைக் கோவிலின் தென் சுவரில் உள்ள 62 வரிக் கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ /(இரண்டாம் இராசாதிராச சோழன் மெய்க்கீர்த்தி) யாண்டு ஐஞ்சாவது ஈழப்படை பாண்டிமண்ட / லத்தை கைக்கொண்டு மதுரையிலே யிருந்தராஜா குலசே / கரனை போகத் துரத்திப் பின்பு மஹாராஜா ஸ்ரீ ராஜாதிராஜ தேவ / ஸாமந்தரோடே பூசல் போரத் துடங்கி தொண்டி பாசி பிரதேச / த்திலே பூசலுண்டாய் அபாயத்திலே ஈழப்படை ஜயித்த / வாறே சோழமண்டலத்திலும் மற்றுள்ள னாட்டுக்களிலு முள் / ள ஜநங்களெல்லாம் பயப்பட்டமையைக் கேட்டு எதிரி / சோழச் சம்புவராயநேந் இநக்கு யிது எங்ங நேயாமோவென்று விசா / ரந் தோன்றி ஸ்வாமிதேவர் ஸ்ரீபாதத்தேறச் செந்று இப்படி புகுந்த / து ஈழப்படையாகிறது சாலப்பாப கர்ம்மாக்கள் அவர்கள் சோழ மண்ட / லத்தெல்லையிலே புகுதில் ஸ்ரீமஹாதேவர் கோயிலுள்ளிட்ட தேவர்க / ள் கோயிலுக்கும் ப்ராஹ்மணர்க்கும் ராஷ்ட்ரத்துக்கு மடங்க விரோதமுண்டா / யிதுக்குப் பரிஹாரமாக ஜபஹோமார்ச்சநங்களாலெல்லாப்படியாலு / ம் அபூஷ்ட்ரமதம்  பண்ணியருள வேணுமென்று விண்ணப்பஞ் செய்ய தே / வர் அருளிச் செய்தருளுகிறார் ஈழப்படையாகிற இது சாலப் பாபிஷ்டருமாய்  துர்ஜநருமாய் திருவிராமீஸ்வரத்தில் தேவர் கோயிலைத் திருக்காப்புக் கொண் / டு பூசை முட்டப்பண்ணி அங்குள்ள ஸ்ரீபண்டார மெல்லாம் கைக்கொண்டு / ஸிவத்ரோஹிக ளெந்நு மிடம் மறித்தோம் அவர்கள் பூசலிலே அறப்பட்டு / துரப்புண்டு போம்படிக்கு அத்ருஷ்ட முகத்தாலே வேண்டும் ய / த்நம் பன்ணுகிறோமென்றருளிச் செய்து  இருபத்தெட்டு நாள் அஹோர / ஸுபூஜை பண்ணியருளிநார். இதுக்குப் பிந்பு பிள்ளை பல்லவராயர் / பாடு நின்று மிநக்கு ஓலை கொண்டு தூதர் வந்தார்கள். அதில் ஜயத்ரத தண்ட நாயக் / கநும் லங்காபுரி தண்ட நாயக்கநு முள்ளிட்ட ப்ரதாநிகளும் படையுமட / ங்கப்பட்டு ஓடிப் போசது மென்று சொல்லி வந்தது. இப்பட்டாங்கை தேவர் ஸ்ரீ பாதத்திலே ஸம்ப்ரமத்துச் சொ _ _ _ _ நான் தேவர் செய்தருளிந அத்ருஷ்ட யத்நமாய் / இப்படி பலித்ததென்று விண்ணப்பஞ் செய்து “தேவர் ஸ்ரீ பாதபூஜையாக னான் தரு / வேநென்று விண்ணப்பஞ் செய்ய” நீர் நமக்கு முன்பேதேநும் குறையாகச் செய்ததுண்டோ /   அவஸ்யமேதேநும் தரவேணு மென்றிருந்ததாகில் ஆல் பாக்கமாகிற ஊரைச் செம்பிலும் / கல்லிலும் வெட்டித்தருவ தென்றருளிச் செய்ய ஜயங்கொண்ட சோழமண்டல / த்து எயிற் கோட்டத்து மாகறல் நாட்டு ஆல் பாக்கத்துப் புஞ்சை நஞ்சை அகப்பட விளை நில / ம் நூற்றறுபத்தேழு வேலியும் எரிகோளும் நத்தமும் குட்டமும் கிணறும் மேநோக்கிந மரமு மகப் / பட நாற்பாற்கெல்லை உள்பட நிலம் வெள்ளைவாரி பண்ணிக்கக் கூலி தறி யிறை தட்டார் / பாட்ட மந்தராயம்பாட்ட முட்பட ஆயமெல்லா மகப்பட்ட ஏகபோக இறையிலியாக கௌ / ட தேசத்து தக்ஷிணராடத்து கங்கோலி ஸாவர்ண்ண கோத்ர மஹா மஹேஸ்வர ஸ்ருதி ஸ்ம்ர்தி சிந்தி /த கார்ஹஸ் தந்மாஸ்ரித உமாபதி தேவராந ஞாநஸிவ தேவற்கு நீர்வார்த்து ஸூர்ய்ய சந்த்ரர் களுள்ள தி / நையும் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுத்தேன் எதிரிலி சோழச்சம்புவ_ _ _ /  த்யநம் ஈழப்படை சோழமண்டலத்தில் புகுதாமைக்கும் பூசலிலே பட்டு ஓடிப்போகைக்கு மீ / ளயாவர் சிலர் சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது. எங்கள் வம்ஸத்து / தர்ம்மம் பரிபாலித்து யாவநொருவ நிந்த தர்ம்மம் பரிபாலியாதொழி கிறாந்  அவந் கங் _ _ _ பித்ருபதமும் மாத்ருபதமும் பிராம்மணி பதமும் ஸிவத்துரோஹமும்  பண்ணினார் பட்ட  _ _ / சம்புவராயர் அருளிச் செய்ய கல்லிலே எழுத்து வெட்டிநேந் பொருளாசாரியநே _ _ _ ( எஞ்சியவை சமசுகிருதத்தில் உள்ளன)

பாசி – மீன்பிடிப்பு பகுதி; சாமந்தர் – உயர் படைத் தலைவர்;  பூசல் – வலுச்சண்டை, skirmish; விசாரம் – கவலை; சுவாமி தேவர் – வேந்தனின் ஆசான், அரசகுரு; அறப்பட்டு – முழுவதும் வீழ்ந்து; துரப்புண்டு – துரத்தப்பட்டு; அத்ருஷ்ட முகம் – கண்கட்டி; யத்நம் – வேள்வி; அகோர – ஒரு மாத; பாடு – பால் இருந்து; போசது – போச்சுது; இனக்கு – எனக்கு; பட்டாங்கு – நடப்பு உண்மை, யதார்த்தம்; ஸம்ப்ரம – தெளிவாக சொல்லி; வெள்ளை வாரி – நீரட்டி;

விளக்கம்: இரண்டாம் இராசாதிராஜா சோழனின் 5 ஆம் ஆட்சி ஆண்டு 1171 இல் வெட்டிய கல்வெட்டு இது. பராக்கிரம பாண்டியன் மதுரையையும் குலசேகர பாண்டியன் நெல்லையையும் ஆண்டு கொண்டிருந்தனர். குலசேகரன் மதுரையை முற்றுகையிட்ட போது இலங்கை வேந்தன் பராக்கிரம பாகுவின் துணையை நாடினான் பராக்கிரம பாண்டியன். அதற்குள் பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டு குலசேகரன் மதுரையை கைப்பற்றினான். அப்போது இலங்கை வேந்தன் பராக்கிரமபாகுவின் படை ஜயத்ரத தண்டநாயக்கன், இலங்காபுரி தண்டநாயக்கன் தலைமையில் பாண்டிய மண்டலத்தை கைப்பற்றி குலசேகரனைத் துரத்தி விட்டது. பின்பு சோழன் இராராதிராசன் போர்படைத் தளபதிகளுடன் தொண்டி மீன்பிடி பகுதியில் போர்த் தொடங்கியது. தொடக்கத்தில் சோழப்படை பின்னடைவைச் சந்தித்தது. வெற்றிகொண்ட ஈழப்படை சோழமண்டலத்திலும் புகுந்து அட்டூழியம் செய்தது. இச்செய்தி எதிரிலிச்சோழ சம்புவராயரின் செவிகளுக்கு எட்டியது. இதனால் கவலையுற்ற சம்புவராயர் இராசாதிராசனின் அரசகுருவிடம் ஈழப்படை அட்டூழியம் செய்து சிவன் கோவில், பிராமணர், நாட்டிற்கு அழிவு செய்கிறது இதற்கு ஜெப ஓம பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஈழப்படை இராமேஸ்வரம் கோவிலை கைப்பற்றி பூசைகளை நிறுத்தி கருவூலத்தை கொள்ளையிட்டது என்று சொல்லியபோது அரசகுருவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி கண்காணாத முகத்தாலே யக்ஞம் செய்து எதிரிப்படை முழுவதும் வீழ்ந்து துரத்தப்படும் வேள்வி செய்வதாக ஒப்புக்கொண்டார். 28 நாள் தொடர்ச்சியாக ஒரு மாதம் அந்த வேள்வியை செய்து முடித்த பின்னர் பிள்ளை பல்லவராயர் பால் இருந்து எனக்கு  தூதுவர்கள் ஓலை கொண்டுவந்து தந்தார்கள். அதில் ஈழப்படை அடக்கப்பட்டு ஓடிப்போனதாகச் செய்தி இருந்தது. இந்த உண்மைநடப்பை அரசகுருவிடம் தெளிவாகச் சொல்லி அவர் செய்த வேள்வியால் தான் இப்படி நிகழ்தேறியது என்று சொல்லி இதற்கு நான் உமக்கு நன்மதிப்பு தருவேன் என்று சொன்ன போது அவர், “நமக்கு முன்னர் ஏதும் குறைவாக செய்ததில்லை எனவே தேவைப்படாது”, ஆயினும் கட்டாயம் தர வேண்டும் என்று இருந்தால் ஆல்பாக்கம் என்ற ஊரை இறையிலித் தானமாக கல்லிலும் செம்பிலும் வெட்டித்தருக என்று சொன்னார். எனவே மாகறல் நாட்டில் அமைந்த ஆல்பாக்கத்தில் நஞ்செய், புஞ்செய் விளை நிலம் 167 வேலி எல்லா வரியும் நீக்கி இறையிலியாக நீரட்டிக் கொடுத்தேன் வங்காளத்து தக்ஷிண ராஷ்டிரத்து கங்கொலி சாவர்ண்ண கோத்திரத்து மகேசுவர சுருதிஸ்ம்ரிதி சிந்தித உமாபதி தேவரான ஞான சிவதேவர்க்கு என்கிறான் எதிரிலி சோழ சம்புவராயன். இது ஈழப்படையை துரத்தி மீண்டவர், சோழ வேந்தர் காக்க வேண்டும், எமது வங்கிசத்தார் ஆகியோர் பாதுகாக்க வேண்டும் என்று மேலும் சில வரிகள் சமசுகிருதத்தில் முடிகின்றன. பாண்டியர் படை இரு அணியாகளாகப் பிளந்து ஒரு அணி சிங்களப் படைப் பக்கம் சாய்ந்ததால் குலசேகரன் படையால் சிங்களப் படையை எதிர்கொள்ள முடியாது போனது போலும். எனினும் இதில் சோழர் படையின் வலுவும் குன்றிய அறிகுறி பின்னாளில் கோப்பெருஞ்சிங்கர், பாண்டியர், போசளரும் எதிர்க்கும் துணிவை தந்துவிட்டது எனலாம். இந்த ஈழப்படை யெடுப்பு தொடர்பான இன்னொரு கல்வெட்டை பக். 42 – 44  Select Inscriptions of Tamilnadu நூலில் காண்க.

வேள்வி, வேட்டல் என்பது தந்திர யோகம் போல் அல்லாத முற்றும் ஒரு மாறுபட்ட வழிபாட்டுமுறை ஆகும். இதில் பல தெய்வங்கள் இருந்தாலும் அவற்றுக்கு உருவம் கிடையாது, உருவ வழிபாடும் கிடையாது. அந்தந்த தேவதைகளைப் பெயரிட்டுக் கூப்பிடும் போது அந்த தேவதைகள் ஓமகுண்டத்தில் வந்துவிட்டதாக எண்ணி கைகூப்பிக் கொள்ள வேண்டியது தான். இது ஒரு உருவமில்லா வழிபாடு. எனில் ரிக்கு வேதத்தில் 1,500 ஆண்டு வியாசரின் நான்கு தலைப் பிரம்மன் எப்படி இடம் பெற முடியும் என்று கேள்வி கேட்டு அதை ஒரு இடைச்செருகல் என்று முடிவு கட்டுபவர் தான் அறிவாளி. அவர் தான் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார். இல்லை வெள்ளைக்காரன் சொன்னதே உண்மை என்பவர் அறிவுக் கடன்வாங்கி. தமிழக அரசியலில் அறிவுக் கடன்வாங்கிகளே அதிகம் உள்ளனர். நான்கு  தலை புராண பிரம்மன் வேறு, உருவமில்லா பரப்பிரம்மம் வேறு. உருவம் இல்லா பிரம்மத்திற்கு தலை, தோள், வயிறு, தொடை என்று ஏதும் இல்லை. இல்லாத உறுப்பில் இருந்து யாரும் பிறக்க முடியாது என்ற அறிவு வேண்டும். வேள்வியில் வேதப் பாடலைச் சிலர் பாடி வேள்வியை நிறைவேற்றுவர். அவர்களை வைதிகர் என்பர். இந்த வைதிகரில் உயிர் பலி கொடுக்கும் வைதிகர் என்றும், பரப்பிரம்மக் கருத்தை ஏற்று வேள்வியில் உயிர் பலி தவிர்த்த தந்திர யோகம் பயின்ற வைதிகரான பிராமணர் என இரு பிரிவு உண்டானது. உயிர் பலியிடுவோரை ஒப்பிட வேள்வியில் உயிர் பலி தவிர்த்த பிராமணர் ஒழுக்கத்தால் பஞ்ச மாபாதகத்தை விடுத்த செழுமிய பண்பாளர் (highly refined) ஆவர். இவர்கள் மேற்கொண்ட தந்திர யோக தவ வாழ்க்கையால் மக்களிடம் பிராமணர்க்கு  மதிப்பு கூடியது. ஆயினும் மக்களுக்கு உயிர் பலி கொடுக்கும் வைதிகருக்கும் தவ பிராமணருக்கும் வேறுபாடு தெரியாமல் இருந்தது. இதனால் 1,300 ஆண்டுகள் முன் பிரயாகையில் கூடிய பிராமணர் மாநாட்டில் மீன், புலால், மது தவிர்க்காத வைதிகர் பிராமணரே அல்லர் என்று அறிவிக்கப்பட்டு தென்னகத்தில் ஐந்து பிரதேச பிராமணர் மட்டுமே திராவிட பிராமணர் என்றும் வடக்கில் ஐந்து பிரதேச பிராமணர் மட்டுமே பஞ்ச கௌட பிராமணர் என்றும் அறிவிக்கப்பட்டு மற்ற பீகார், வங்காள பிரதேசத்தில் மீன் உண்ணும் வைதிகர் பிராமண சாதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக, பிராமணர் இவருடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இன்றைய சமத்துவ விரும்பிகள் எவரும் தம்மை ஒழுக்கத்தால் மேம்படுத்திக் கொள்ள விரும்பாமல், முயலாமல் பிராமணர் பழையபடி புலால் உண்ணும் வைதிகர் போல் ஆகிவிட்டால் சமத்துவம் நிறுவப்பட்டுவிடும் என்று அறிவுத்துகின்றனர். “நான் குடிப்பதை நீ கேலி செய்கிறாயா இரு உன்னையும் நான் குடிக்க வைக்கிறேன்” என்ற உத்தி தான் இது. நான் புலால் உண்டாலும் நாய்க் கறி, பன்றிக் கறி, மாட்டுக் கறி, குதிரைக் கறி மட்டும் உண்ண மாட்டேன் என்பதும் ஒருவகை கட்டுப்பாடு தானே அது போலத் தானே எல்லா வகைப் புலாலையும் ஒதுக்குவதும் என்று புரிந்தால் இப்படியான இழிந்த நாத்திகரின் சிந்தனை எழாது. இப்படி ஒரு ஒழுக்கம் ஒழிந்த சமத்துவம் தேவையே இல்லை. ஒழுக்கம் எல்லாரிடமும் மேம்பட்டு ஒரு சமத்துவம் ஏற்படுமே அந்த சமத்துவ நிலையே தேவை. உணவு ஒழுக்கத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வங்காள பிராமணரே சோழ வேந்தர்களின் அரசகுருவாக ஏற்கபட்டது வேள்வியில் உயிர் பலியை ஆதரிப்பதற்காகவா என்று தெரியவில்லை. கொங்கணி, கேரள  நம்பூதிரிகள் இந்த வங்காளி வைதிகர் வழிவந்தோர் என்பதால் பஞ்ச திராவிட பிராமணரில் இவர்கள் ஏற்கபடவில்லை. இந்த கடும் ஒழுக்க நடவடிக்கை காரணமாக பின்னாளில் அவர்கள் உயிர் பலி, புலால் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பல்லவர்கள் அசுவமேத யாகம் உள்ளிட்ட பல யாகம் செய்தவர்கள். எனவே பல்லவர் வழிவந்த இந்த சம்புவராயர் போர் வெற்றிக்காக வேள்வி இயற்றியது ஒன்றும் வியப்பில்லை.

பார்வை நூல்:தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 6, எண்: 456, பக். 188-190 & Select Inscriptions of Tamilnadu  pg 96 -98

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.