குறளின் கதிர்களாய்…(506)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(506)
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
– திருக்குறள் – 579 (கண்ணோட்டம்)
புதுக் கவிதையில்…
தம்மைத் துன்புறுத்தும்
இயல்புடையோரிடத்தும்
இரக்கம் கொண்டு
அவர் குற்றத்தைப்
பொறுத்தருளும் பண்பே
புவியாளும் மன்னர்க்குப்
பெருமை தரும்
தலையாய இயல்பாகும்…!
குறும்பாவில்…
இன்னல் தமக்குத் தந்திடும்
இயல்புடையோரிடத்தும் இரக்கத்துடன் பொறுத்திடல் மன்னர்க்கு
உயர்வளிக்கும் தலையாய பண்பு…!
மரபுக் கவிதையில்…
இன்னல் தமக்குத் தருகின்ற
இயல்பை யுடையோர் தம்மிடமும்
துன்பம் மறந்தே யவர்தந்த
தொல்லை மறந்தே பொறுமையுடன்
அன்பாய் இரக்க மதுகாட்டி
அணைத்துச் செல்லும் அருங்குணமே
மன்னர் தமக்குப் பெருமைதரும்
மதிப்ப துயர்ந்த பண்பாமே…!
லிமரைக்கூ…
துன்பம் தமக்குத் தந்திடும்
தீயோரிடத்தும் இரக்கத்துடன் பொறுத்திடும் இயல்பால்
மன்னர்க்குப் பெருமை வந்திடும்…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும் நல்லகொணம்
ஒலக வாழ்க்கயில
எல்லாருக்கும் வேணும் எரக்ககொணம்..
தனக்குத் துன்பம் தருற
கொணமுள்ளவங்க கிட்டயும்
எரக்கம் காட்டி
அவுங்க குத்தத்தயெல்லாம்
பொறுத்துப் போறது
நாட்டு ராசாவுக்குப்
பெரும தரக்கூடிய
ஒசந்த பண்புதான்..
அதால
வேணும் வேணும் நல்லகொணம்
ஒலக வாழ்க்கயில
எல்லாருக்கும் வேணும் எரக்ககொணம்…!