தமிழர் வாழ்வில் சிலம்பு
-மேகலா இராமமூர்த்தி
அன்று தமிழ்மக்களின் வாழ்வில் சிலம்பு சிறந்ததோர் இடத்தைப் பெற்றிருந்தது. சிலம்பின் பெயரைக்கொண்டே ஒரு காப்பியத்தைப் படைத்துத் தமிழர் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர் இளங்கோவடிகள்.
சீர்மிகு சிலம்பைப் பெண் குழந்தைகளுக்கு அணிவித்து அழகுபார்த்தவர் தமிழர். அந்நாளில் சிலம்பு பெற்ற இடத்தை இந்நாளில் கொலுசு பெற்றுள்ளது எனலாம். செல்வச் சிறுமியர் பொற்சிலம்பணிந்திருந்த செய்தியினை (முத்துஅரிப் பொன்சிலம்பு ஒலிப்ப – நற்: 110) சங்கப் பாடல்கள் நமக்கு அறியத்தருகின்றன. சிலம்பில் உள்ளிடு பரல்களாக முத்து, மாணிக்கம் போன்றவை அவரவர் விருப்பத்திற்கும் வளமைக்குமேற்பச் சேர்க்கப்பட்டன.
சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் காற்சிலம்பில் மாணிக்கப்பரல்களும் கோப்பெருந்தேவியின் சிலம்பில் முத்துப்பரல்களும் இருந்தமையை அக்காப்பியம் வாயிலாய் அறிகின்றோம். கண்ணகியின் தந்தையான மாநாய்கன் நாவாய்களோட்டிக் கடல்வாணிகம் செய்தோரின் தலைவனாய்த் திகழ்ந்தமையால் முத்தினும் விலையுயர்ந்த உயர்தர மாணிக்கப் பரல்களாலான சிலம்பினைத் தன் செல்வமகளுக்கு அணிவித்திருந்தான் என்பதும், பாண்டிநாட்டுக் கோப்பெருந்தேவி தன்னாட்டு விளைபொருளும் முத்துக்களில் சிறப்புப்பெற்றதுமான கொற்கை முத்துக்களைப் பரல்களாகக்கொண்ட சிலம்பினை அணிந்திருந்தாள் என்பதும் நாம் ஊகித்தறியக்கூடிய உண்மைகளே.
பெற்றோர் தம் மகளிர்க்கு இளமைப் பருவத்தில் அணிவித்த சிலம்பைக் கன்னிமைச் சிலம்பு என்பர்; திருமணத்தின்போது கொழுநன் அணிவிக்கும் சிலம்புக்குக் கற்புச் சிலம்பென்று பெயர். திருமணத்திற்கு முன்பாகக் கன்னிமைச் சிலம்பைக் கழற்றுவதை ஒரு விழாவாகவே அந்நாளில் நிகழ்த்தியுள்ளனர் தமிழ்மக்கள். அதற்குச் ’சிலம்புகழி நோன்பு’ என்று பெயர். இவ்விழா, திருமணத்திற்கு முன்பு, பெண்ணின் பிறந்தவீட்டில் நிகழ்வதே வழக்கமாயிருந்திருக்கின்றது. ஆதலால், பெண்ணைப் பெற்ற தாய் அதனைத் தன் மனையில் நிகழ்த்துவதையே பெருமையாகயும் – தன் கடமையாகவும் கருதினாள். இச்சிலம்பு கழீஇச் சிறப்பைத் தொல்காப்பியர் கரணம் என்று குறித்தார்.
தலைவி தலைவனோடு, பிறந்தவீட்டார் அறியாமல், உடன்போக்கில் சென்று மணம்புரிந்துகொள்ளும் சூழலில் இந்தச் சிலம்புகழி நோன்பு பெண்ணின் வீட்டில் நிகழாமல் மணமகன் வீட்டில் நிகழ்வதுண்டு. அவ்வாறு நிகழும்போது, அது தலைவியைப் பெற்ற நற்றாயின் உள்ளத்தைப் பெரிதும் வருத்தும்.
”தலைவனை மணமுடிக்கும்போது தன் காலில் அணிந்த சிலம்பினைக் கழற்றுதற்குச் செய்யும் சிலம்புகழி விழாச்சிறப்பை நான் காணாது பிறர்கண்டு மகிழும்வண்ணம் வெயில் காயும் வெம்மைமிகு பாலைவழியில் நடந்துசெல்லும் என் புதல்வியின் மெல்லடிகள் வருந்துகின்றனவோ?” என்று நற்றாயொருத்தி உடன்போக்கில் சென்றுவிட்ட தன் மகள் குறித்துக் கலங்குவதை நற்றிணைப் பாடல் நம் கண்முன் நிறுத்தி நம்மையும் அவள் நிலையெண்ணிக் கலங்கச்செய்கின்றது.
…வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம்
பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே. (நற்: 279 – கயமனார்)
சிலம்பு கழித்தலை செல்வமென்று இத்தாய் பேசுவதிலிருந்து அதனைத் தன் மனையில் நிகழ்த்துதலைச் செல்வமாக – பேறாக அவள் கருதினாள் என்பது தெற்றெனப் புலப்படுகிறதன்றோ?
”தோழிமாரும் தாயரும் கண்டுமகிழுமாறு உறையூரை ஒத்த வளமுடைய தன்வீட்டில் சிலம்புகழி நோன்பும், பெரியோர் நிகழ்த்திவைக்கும் திருமணமும் செய்துகொண்டு தலைவனோடு செல்லாது, தமர் அறியாவண்ணம் தலைவனோடு உடன்போக்கில் சென்று அறியாத் தேயத்தில் சிலம்பு கழித்துத் திருமணம் செய்துகொள்ளுதல் கொடிது” என்று கண்ணீர்விடுகின்ற தாயை நமக்கு வேதனையோடு சுட்டிக்காட்டுகின்றது அகநானூறு.
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர
நன்மாண் விழவில் தகரம் மண்ணி
யாம்பல புணர்ப்பச் செல்லாள்…
[…]
முள்ளெயிற்றுத் துவர்வாய்ச்
சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇ
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. (அகம்: 385 – குடவாயில் கீரத்தனார்)
”கொடிது கொடிது வறுமை கொடிது” என்றார் பிற்கால ஔவையார்;
”கொடிது கொடிது என் மகள் அறியாத் தேயத்தில் சிலம்பு கழித்தல் கொடிது” என்கிறார் இந்த அன்னையார்.
ஐங்குறுநூற்றுத் தாயொருத்தியின் வருத்தத்தை அடுத்துக் காண்போம்.
தன் மகள் உடன்போக்கில் தலைவன் ஊருக்குச் சென்றுவிட்டாள்; ஆங்கே தன் மகளுக்குச் சிலம்புகழி நோன்புச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன என்பதனை அவ்வூரிலிருந்து வந்த தமர் (தமக்கு வேண்டியவர்கள்) வாயிலாக அறிந்த தாயொருத்தி, “மக்களே! பொய்கள் பலவற்றை மெய்போலப் பேசி என் மகளை மயக்கி அழைத்துக்கொண்டு சென்றுவிட்ட அந்தக் காளையின் தாயிடம், உங்கள் வீட்டில் சிலம்புகழி சடங்குகள் செய்தாலும் திருமணச் சடங்குகளை எங்கள் வீட்டில் (பெண் வீட்டில்) செய்யுங்கள் என்று நீங்கள் கூறியிருந்தால் அதனால் உங்களுக்கு வரக்கூடிய குற்றமென்ன?” என்று கேட்டு வருந்துவதனை ஐங்குறுநூற்றில் காண்கின்றோம்.
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே” (ஐங்: 399 – ஓதலாந்தையார்)
சங்க காலத்தில் சிலம்புகழி நோன்பு ஒருநாளும் அதனைத் தொடர்ந்து வதுவை மணமாகிய திருமணம் இன்னொரு நாளுமெனத் திருமணம் இருகூறுகளைக் கொண்டதாக நிகழ்ந்திருப்பதனை இப்பாடல் வாயிலாக நாம் அறிகின்றோம்.
உடன்போக்கில் தலைவனோடு சென்றுவிட்ட தம் மகளின் பிரிவைத் தாங்கமுடியாமலும், அவளுக்குத் தம் மனையில் சிலம்புகழி நோன்பும் திருமணமும் செய்துவைக்க இயலாததாலும் தாய்மார்கள் புலம்புவதனை மேற்கண்ட சங்கப் பாடல்கள் நமக்குத் துல்லியமாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
பண்டைத் தமிழர் வாழ்வில் இடம்பெற்ற எத்தனையோ நிகழ்ச்சிகள், சடங்குகள் காலவோட்டத்தில் மாற்றமடைந்துவிட்டன; சில மறைந்தும்விட்டன; வடவர் வருகையாலும் அவர்தம் மணமுறைகளின் தாக்கத்தாலும் தமிழர் மணத்தில் புதிய சடங்குகள் பல இடம்பெறத் தொடங்கிவிட்டமையும் கண்கூடு.
நம் மக்கள் பெருமிதத்தோடும், செல்வமென்று உயர்வாகவும் கருதி அக்காலத்தில் நிகழ்த்திய சிலம்புகழி நோன்பு இன்று தமிழர் திருமண நிகழ்வில் இல்லாத ஒன்றாகிவிட்டது; எனினும், நம் பண்பாட்டின் ஓர் அங்கமாய்த் திகழ்ந்த அந்நிகழ்வு குறித்து நாம் அறிந்துகொள்வதற்குச் சங்கப் பாடல்கள் இன்றும் துணைநிற்கின்றன என்பது மகிழ்ச்சியளிக்கும் ஒன்றேயல்லவா?
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- நற்றிணை மூலமும் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையும்
- ஐங்குறுநூறு மூலமும் ஔவை. சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் உரையும்
- அகநானூறு மூலமும் நாவலர் திரு ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை இவர்களால் எழுதப்பெற்ற பதவுரை விளக்கவுரையும்