வேட்டையன் – திரை விமர்சனம்
அண்ணாகண்ணன்
வேட்டையன் படத்தில் ரஜினியின் செயல் வேகம் சிறப்பாக உள்ளது. 73 வயதுள்ள அவர், 58 வயது காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரவுடிகளையும் போக்கிரிகளையும் சுட்டுத் தள்ளி, என்கவுன்டர் புலியாகப் புகழ் பெறுகிறார். அவரது உடல்வாகுக்கு ஏற்ப, சண்டைக் காட்சிகளையும் நடனக் காட்சிகளையும் அமைத்துள்ளது நன்று. முதிய வயதிலும் துடிப்பாக இயங்க முடியும் எனக் காட்டிய வகையில், ரஜினி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தளர்ந்திருக்கும் முதியவர்கள், இவரிடமிருந்து உத்வேகம் பெற முடியும்.
படத்தின் முதல் சிக்கல், நீட்டுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் வலுவாக இல்லை என்பதே. எந்தப் பயிற்சி நிறுவனமும் உன்னைத் தேர்வில் வெற்றி பெற வைக்கிறேன், மருத்துவர் ஆக்கிக் காட்டுகிறேன், வேலை வாங்கித் தருகிறேன் என்று எல்லாம் சொல்வதில்லை. தேர்வில் வெற்றி பெறப் பயிற்சி அளிப்பதும் திறன்களை வளர்க்க உதவுவதும் மட்டுமே அவர்கள் பணி. மற்றபடி படித்துத் தேர்வில் பெறுவது, மாணவர்களின் கடமை. இதை விதிமுறைகளில் தெளிவாக எழுதியிருப்பார்கள். இதற்கென்றே சட்ட நிபுணர் குழுவை வைத்திருப்பார்கள்.
மாணவர்களிடமிருந்து அவர்கள் பெறும் கட்டணம், பயிற்சி அளிப்பதற்கே. மாணவர்களுக்கு ஆசை காட்டுவது எல்லாம் வாய்மொழியாக மட்டுமே இருக்கும். இந்த நிலையில் எத்தனைப் பேர் புகார் அளித்தாலும் சட்டரீதியாக அதை அந்த நிறுவனம் எளிதாகக் கடந்துவிடும். இந்த இடத்தில் BUDS Act (The Banning of Unregulated Deposit Schemes Act, 2019) செல்லுபடி ஆகாது. இதை வைத்து, நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடியாது. அப்படிச் செய்வதானால், தங்கள் சாதனைகளை விளம்பரப்படுத்தும் எல்லாப் பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மீதும் இத்தகைய வழக்குகளைத் தொடுக்க முடியும்.
பயிற்சி நிறுவனம் கொடுத்த கைக்கணினிகள் வேலை செய்யவில்லை என்றால், அது வேறு வகையான புகார். அதை நிறுவனம், வேறு விதமாகச் சமாளிக்க வாய்ப்பு உண்டு.
தங்கள் மீது புகார் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள் ஆபாசமாகப் படம் எடுப்பதையும் கஞ்சா புகைப்பதையும் வீடியோ எடுத்து ஒரு நிறுவனம் பரப்பும் என்பது மிகையான கற்பனை. இதை வைரலாகப் பரவச் செய்தாலும் அந்த நிறுவனம் மீது புகார் கொடுப்பதை இவை எப்படித் தடுக்கும் என்பது புரியவில்லை.
அரசுப் பள்ளி ஆசிரியையாக வரும் துஷாரா விஜயனைக் கொன்றது பயிற்சி நிறுவனத் தலைவர் ராணா டகுபதி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க இயலவில்லை. பிறகு எப்படி அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தார்கள்? நீதிமன்றம் எந்த அடிப்படையில் சிறைத் தண்டனை அளிக்கிறது என்பதும் புரியவில்லை.
துஷாரா விஜயன், குணா உடன் சேர்ந்து சேகரித்த ஆதாரங்களை உடனே இணையத்தில் ஏற்றி, ரஜினியின் மின்னஞ்சலுக்கு அடுத்த நிமிடமே கிடைக்கச் செய்திருக்கலாம். அந்த வன்தட்டை எதற்காகப் பார்சலாக அனுப்ப வேண்டும்? இத்தனைக்கும் குணா, கணிப்பொறி படித்தவர்.
படத்தில் பலரைச் சுட்டுக் கொன்ற ரஜினி, ராணா டகுபதியை மட்டும் சிறையில் தள்ளுகிறார். உன்னைப் போன்ற பணக்காரர்களையும் சிறையில் தள்ள முடியும் என்று மக்களுக்குக் காட்டவே இப்படிச் செய்தேன் என்கிறார். இதற்கான காரணம், வலுவாக இல்லை.
கடைசியில் ராணா டகுபதி தப்பித்துச் செல்லும் இடத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார் ரஜினி. எப்படி? எந்தத் துப்பினைக் கொண்டு அவர் சரியாக அங்கே வந்து இறங்கினார் என்று காட்டவில்லை. கீழே அத்தனை அடியாட்கள் துப்பாக்கியுடன் காத்திருக்கும்போது, மேலிருந்து இறங்கும் ரஜினியின் ஹெலிகாப்டரை மேலேயே சுட்டு வீழ்த்தியிருக்கலாமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் உள்ளன. இன்னும் கச்சிதமாகச் செய்திருக்க வேண்டும்.
அமிதாப் பச்சன், மனித உரிமை காக்கும் நீதிபதியாக இருந்தாலும் என்கவுன்டர் நிபுணர் ரஜினியிடம் மென்மையாக நடந்துகொள்கிறார். அவருக்கு ரகசியமாக உதவுகிறார். கடைசியாக, ரஜினியை என்கவுன்டருக்கு எதிராகப் பேச வைக்கிறார்.
யூடியூபராக வரும் மஞ்சு வாரியர், கவர்கிறார். பகத் பாசில், ரசிக்கும்படி நடித்திருக்கிறார். காவல் துறைக்கு உதவத் தொடங்கிய பிறகும் கடைகளின் கியூ ஆர் கோடினை மாற்றி, அவர்களை ஏமாற்றும் விதமாகக் காட்டியிருக்க வேண்டாம். ரித்திகா சிங்கின் நடிப்பு நன்று.
எல்லோருக்கும் சமமான கல்வி, சமமான சட்டம் என்ற நிலையை மெக்காலே கொண்டு வந்தார் எனச் சொல்கிறார். மெக்காலேவுக்குப் பிறகு தான் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடக்கிறது. அதை நிகழ்த்திய ரெஜினால்டு டையர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஆயினும் ஆங்கிலேய அரசு அவரை ஆதரித்ததுடன், அவருக்கு எந்தத் தண்டனையும் விதிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது, ரெஜினால்டு டையருக்குப் பொருந்தாதா? அவருக்கு அந்த அதிகாரத்தை அளித்தவர்களுக்குப் பொருந்தாதா? சட்டம் ஆளுக்கு ஏற்றபடி வளையும் என்பதற்குப் படத்தில் வரும் ராணா டகுபதியே சான்று இல்லையா?
இயக்குநர் த.செ.ஞானவேல், நீட்டுக்கு எதிராகப் படம் எடுத்ததாகச் சொன்னால், அது தவறு. படம் மொத்தமும் ஒரு பயிற்சி நிறுவனத்துக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. மேலும், பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற வாதமே பலவீனமானது. இதை மீண்டும் மீண்டும் சொல்லி, மாணவர்களை நம்ப வைப்பது, மாணவர்களுக்குச் செய்யும் தீங்கு ஆகும். அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள் என்பதே உண்மை.
நீட் எதிர்ப்புக் குழுக்களைக் குளிர்விக்க வேண்டும், அவர்களின் அரசியலை ஆதரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வசனங்களும் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. பகடையை உருட்ட வேண்டிய ரஜினி, தானே ஒரு பகடைக் காயாக உருண்டுகொண்டிருக்கிறார்.
வாழ்த்துக்கள்!
அந்தக் காலத்தில் இசையுலகில் திரு சுப்புடு அவர்கள் மிகப் பெரிய பாடகர்களையெலலாம் கொஞ்சமும் தயங்காது வறுத்தெடுத்தது போன்ற விமர்சனம்.விமர்சனம் இலக்கியமாக வேண்டும். மிகவும் சிறப்பு
மாறா அன்புடன்
ச.சுப்பிரமணியன்