லப்பர் பந்து – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்
லப்பர் பந்து, ஒரு நல்ல முயற்சி. ஆனால், இன்னும் சிறந்த முயற்சியாக வந்திருக்கலாம்.
விளையாட்டுத் துறைகளில் ஆர்வமாக ஈடுபடுவோர் பலரும் அதில் வெற்றி பெற்று, விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற வேண்டும் என்பதைத் துணை இலக்காக இல்லாமல், முதல் இலக்காகவே வைத்திருப்பர். ஆனால், வேறு பொருளாதார இலக்குகள் ஏதுமின்றி, நடுத்தர வயதினை எட்டிய பிறகும் விளையாடும் ஆர்வத்துக்காகவே விளையாடுவோர் பலர். இதற்காக, ஆளுக்குச் சிறிது பணம் போட்டு, அணி நடத்துவோரும் போட்டி நடத்துவோரும் பற்பல ஊர்களில் உண்டு. இந்த உள்ளூர்க் கிரிக்கெட்டை விறுவிறுப்பாகக் காட்டுவதில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெற்றி அடைந்திருக்கிறார்.
இத்தகைய போட்டிகளில் ஒரு சிக்கல் இருக்கிறது. விளையாட்டுத் திறமையும் இருக்க வேண்டும், அதை நேசிக்கவும் வேண்டும். இதையும் தாண்டி, விளையாட்டு உணர்வு என்பது அடிப்படையாக இருக்க வேண்டும். அடுத்தவர் திறமையை மதிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாராட்டி, ஊக்கம் கொடுத்து, தட்டிக் கொடுத்துப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் இது குறைவாகவே இருக்கிறது.
விளையாட்டு மைதானம், கெத்து காட்டுகின்ற இடமில்லை. திறமையைக் காட்டுகின்ற களம். இங்கே நான் பெரியவனா, நீ பெரியவனா என ஈகோ காட்ட வேண்டிய தேவையில்லை. இதில் நான், என் அணி, என் கிரிக்கெட் கிளப் என வீரர்களின் அகந்தையே மேலோங்கி இருக்கிறது. ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி, கேலி செய்து, சீண்டி, வம்பிழுத்து, சண்டை போடுவது தேவையே இல்லாதது. அப்படியே நடந்தாலும் இயக்குநர் அதற்கு முன்னுரிமை கொடுக்கத் தேவையில்லை.
கெத்து தினேஷ், உள்ளூர் அணிகளில் பெரிய கிரிக்கெட் வீரர். லப்பர் பந்துக் களங்களில் வாகை சூடுகிறார். ஆனால், கார்க் பந்து வைத்து விளையாடும் போது, அவரால் ஜொலிக்க முடியவில்லை. கடைசியில் இறுதிப் போட்டியில் குறிமூடி, கால்மட்டை, கையுறை போன்ற முறையான பாதுகாப்பு ஏதுமின்றி, கார்க் பந்தினை எதிர்கொண்டு விளையாடி 94 ஓட்டங்கள் எடுக்கிறார். இத்தனை ஆண்டுகளாகக் கிரிக்கெட் ஆடும் தினேஷ், இத்தகைய தொழில்முறை விளையாட்டுக் களத்துக்கு ஏன் தயாராகவில்லை? அவருக்கு அதன் மீது அச்சமா? அவரிடம் இதற்கான திறமை இல்லையா? அப்படி விளையாடி அடிபட்டால் என்னாகும் என்று அவருக்குத் தெரியாதா? இதைப் பற்றிய எந்த எச்சரிக்கையும் இல்லாமல், வெறும் கெத்துக்காக ஆடலாமா? தினேஷ் உடன் விளையாடுபவர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி, பயிற்சி அளித்திருக்கலாம். நவீன விளையாட்டுக்கு இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் அரிய வாய்ப்பினை இயக்குநர் இங்கே தவறவிட்டிருக்கிறார்.
ஓட்டப் பந்தயங்களில் ஆப்பிரிக்க வீரர்கள் முன்னர் வெறுங்காலில் விரைவாக ஓடி எளிதாக வென்றனர். ஆனால், புதையணி அணிந்து வெற்றி பெற அவர்கள் போராட வேண்டியிருந்தது. வெறுங்காலில் களிமண் தரையில் விளையாடியவர்கள், புதையணி அணிந்து உள்ளரங்கக் களத்தில் ஆடுவதற்குக் கடும் பயிற்சி தேவைப்பட்டது. உள்ளூர் அணி வீரர்களை இப்படியாக ஆற்றுப்படுத்தி, ஊக்குவித்திருக்கலாம்.
அடுத்து, உள்ளூர் அணிகளுக்கு ஆடும் பலரும், நாள்முழுவதும் அதே கதி எனக் கிடப்பர். வேலைக்குச் செல்வதையோ தொழில் நடத்துவதையோ செய்யாமல், குடும்பத்தைக் கவனிக்காமல், பொறுப்புகளைச் செய்யாமல் இருப்பார்கள். இதனால் குடும்பத்தினர், விளையாடப் போகக் கூடாது என எதிர்ப்பார்கள். அவர்களை ஏமாற்றி இவர்கள் விளையாடச் செல்வார்கள். இந்தப் பகுதியை இயக்குநர் நன்றாகக் காட்டியிருக்கிறார்.
தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகா, பிரமாதமாகச் செய்திருக்கிறார். சிறுவர்களிடமிருந்து தவறி வந்த லப்பர் பந்தினை அரிவாள் மணையில் இரண்டாக நறுக்கி எறிவது, அவரது கோபத்தை நன்றாகக் காட்டுகிறது. தினேஷின் மகளாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அழகாக, அருமையாக நடித்திருக்கிறார். அவரது காதலனாக வரும் ஹரிஷ் கல்யாண், கவனமாக நடித்திருக்கிறார். இவர் சற்றே அடக்கி வாசித்தது போல் இருக்கிறது. ஆண்கள் அணியில் ஒற்றைப் பெண்ணாக அகிலாவை விளையாட வைத்த இயக்குநருக்குப் பாராட்டு. அட்டகத்தி தினேஷ், இதில் கெத்து தினேஷாக ஜமாய்த்திருக்கிறார். பிரிந்து சென்ற மனைவியின் சேலையில் அவர் படுத்துத் தூங்கும் காட்சி மிக அழகு. நண்பர்களாக வரும் பால சரவணனும் காளி வெங்கட்டும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தின் இறுதிக்கட்டக் காட்சி, மிகுந்த ஏமாற்றம் அளித்தது. விளையாட்டை முதன்மையாக வைத்துள்ள படத்தில், ஜாதியைப் புகுத்தியது முதல் தவறு. எதிரணியில் பாலய்யா என்ற பட்டியலின வீரர் ஆடுவதற்காக, அந்த அணியே ஜெயிக்கட்டும் என விட்டுத் தருவது போல் காட்டியது மிகத் தவறு. அவர் ஜெயித்ததால், அவர் ஜாதியில் அவர் போல் இன்னும் சிலர் அணியில் இடம் பிடித்துள்ளனர் எனக் காட்டியது, ஜாதியை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. விட்டுத் தந்துதான் அவர்கள் ஜெயிக்க வேண்டும் எனக் காட்டியது, அவர்களின் திறமையை மட்டம் தட்டியதாகவும் அமைந்துவிட்டது. இயக்குநர் சறுக்கிய இடம், இதுதான்.
வெட்டி வீறாப்பு, வாய்ச்சவடால், கெத்து – இவற்றையெல்லாம் விளையாட்டுத் துறையில் அகற்ற வேண்டும். மாறாக, விளையாட்டு நுணுக்கம், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நம் உள்ளூர் அணிகள், சர்வதேசப் போட்டிகளுக்கு வீரர்களைத் தயார் செய்யும் களங்களாக இருக்க வேண்டும். சாதிக்கும் ஊக்கத்தைத் தருபவையாக இருக்க வேண்டும். நம் துரதிருஷ்டம், குடும்ப உணர்வுகளில், ஈகோ மோதல்களில் சிக்கி, படம் எங்கோ வழி தவறிச் சென்றுவிட்டது.
தொலைந்து போன அந்த லப்பர் பந்தினை யாராவது தேடிக் கண்டுபிடியுங்கள். அடுத்த பந்தினை வீச்சுடன் வீசுவோம்.