கலைச்சொல்லாக்கமும் மொழிவளர்ச்சியும் கலைப்புலங்களுக்கான தேவைகளும்
செயபாண்டியன் கோட்டாளம்
கலைச்சொல்லாக்கத்தை வெறும் தமிழ்வளர்ச்சிக்கான செயலாக கருதுவது போதாது. பிற துறைகளுக்கு பயன்படும்வகையில் கலைச்சொற்கள் அமைந்தாலே அந்த துறைகளுடன் மொழியும் வளரும்.
விரும்பத்தகு பண்புகள்
சட்டம், மருத்துவம், அறிவியல் போன்ற துறைகளில் கலைச்சொற்கள் துல்லியமாக வரையறுக்கப்பட்டவை. organic chemistry, inorganic chemistry எனும் கருத்துருக்களுக்கு கரிமவேதியியல், கனிமவேதியியல் என்ற சொற்கள் முதனோக்கில் நல்ல சொற்களாக தோன்றுகின்றன. ஆனால், carbon chemistry, mineral chemistry என்ற கருத்துருக்களை எதிர்கொள்ளும்போது நாம் முதலில் தேர்ந்த சொற்கள் துல்லியமற்றவை என்பதை உணர்கிறோம்.
ஒரு கருத்துருவுக்கு ஒரு சொல் மட்டுமே வழக்கிலிருப்பது திட்டவட்டம். ஒரு சொல்லை ஒரு கருத்துருவுக்கு ஒதுக்கியபின் அந்தச்சொல்லை வேறொரு பொருளுக்காக பயன்படுத்தாதது ஒருத்துவம். திட்டவட்டமும் ஒருத்துவமும் சேர்ந்து சொற்கணத்துக்கும் பொருட்கணத்துக்குமிடையில் ஒரு ஒன்றுக்கொன்றான தொடர்பை உள்ளுரைக்கின்றன. இவ்வாறான ஒன்றுக்கொன்றான தொடர்பு இருக்கும்படி வேதிப்பொருள்களுக்கு பெயரிடும் முறை வேதியியலிலும் உயிரினங்களுக்கு பெயரிடும் முறை உயிரியலிலும் வழக்கிலுள்ளது.
ஒரு கருத்தைக்குறிக்கும் கலைச்சொல் பரந்த பொருளுடையதாக இல்லாமல் அந்த கருத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக இருப்பது குறிப்புமை. Anaesthetic என்பதற்கு மயக்கமருந்து என்றோ மரப்பு மருந்து என்றோ சொல்வது குறிப்புமையற்றது. மயங்கிவிழுவதும் கைகால் மரத்துப்போவதும் வேறு பல சூழமைவுகளிலும் நிகழ்பவை. மாறாக, anaesthesia என்ற சொல் மருத்துவர்கள் மருத்துவமனைகளில் மிகுந்த கட்டுப்பாட்டுச்சூழ்நிலைகளில் வேண்டுமென்றே தம் நலம்பெறுநர்களில் தூண்டும் நிலையையே குறிக்கிறது. இதற்கு தமிழிலும் வேறெங்கும் பயன்படாத உணர்மறைப்பு என்ற சொல்லை பயன்படுத்துவது சிறப்பு.
ஒரு கலைச்சொல்லை கருதும்போது அதனுடன் தொடர்புள்ள மற்ற சொற்களையும் கருதவேண்டும். இது சொற்களிடையில் ஒரு ஒவ்வுமையை நிலைநாட்டுகிறது. Electroனுக்கு எதிர்மின்னி, protoனுக்கு நேர்மின்னி என்ற சொற்களை ஆக்கும்போதே antielectroனுக்கும் antiprotoனுக்கும் என்ன சொல்லப்போகிறோம் என்பதை சிந்திக்கவேண்டும். சிந்திக்காமல், apogee – சேய்மைப்புள்ளி, perigee – அண்மைப்புள்ளி என்று வழக்கில் வரவிட்டால், aphelion, perihelion என்ற சொற்களை எதிர்கொள்ளும்போது திண்டாடுவோம்.
ஒரு கலைச்சொற்பட்டியல் ஒரு கலைத்துறையிலாவது முழுமையாயிருந்தால் மட்டுமே அது அந்தத்துறையில் பயனளிக்கும். சில சொற்களை மட்டும் வழங்குவது பயனளிப்பதில்லை. மேலும் இவை வளர்ந்துவரும் துறைகள். இந்த வளர்ச்சிக்கு நிகராக நம் பட்டியலும் இற்றையடைந்துவரவேண்டும். இவ்வாறு, முழுமையும் இற்றையுடைமையும் கலைச்சொற்பட்டியலின் விரும்பத்தகு பண்புகள்.
தமிழார்வலர்கள் சொல்லாய்வு என்ற பெயரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கலைச்சொற்களை முன்மொழிகின்றனர். இந்த அணுகுமுறையால் ஒரு சில கலைச்சொற்களையே உருவாக்கலாம். முழுமையை ஒருபோதும் எட்டமாட்டோம். உலகில் 1.7 இருமடியாயிரம் உயிரினங்கள் இருப்பதாக உயிரியலாராய்ச்சிகள் காட்டுகின்றன. வேதிப்பொருள்களின் பதிவகத்தில் 200 இருமடியாயிரத்துக்கும் மேலான வேதிப்பெயர்கள் பதிவாகியுள்ளன. தமிழார்வலர்களது இன்றைய அணுகுமுறை அளவுறாதது; பேரெண்ணிக்கைகளுக்கு நீட்டவியலாதது.
தனித்தமிழ் எதுவரை?
கலைச்சொற்களில் பிறமொழிச்சொற்களை ஏற்கலாமா என்ற கேள்வியை கருதுவோம். தமிழின் தூய்மையை எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று பகுதிகளின் தூய்மையாக பிரிக்கலாம்.
தமிழ் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தன் படிமலர்ச்சியை நிறைவுசெய்து முழுமையையும் முதிர்ச்சியையும் அடைந்துவிட்ட ஒரு மொழி. ஒரு கட்டுக்கோப்பான இலக்கணம் அதற்கு அப்போதே உண்டாகிவிட்டது. ஒரு கட்டடம் அடித்தளத்திலிருந்து எழுந்து பல படிநிலைகளால் ஒரு மாளிகையாக வளர்வதைப்போலவே எழுத்துக்கணத்திலிருந்து மெய்மயக்கவிதிகளும் புணர்ச்சிவிதிகளும் எழுந்து அவற்றிலிருந்து சொற்களும் சொல்லிலக்கணமும் எழுகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படையான எழுத்துக்கணத்தை நாம் மாற்றினாலோ அசைத்தாலோ மாளிகை முழுவதும் அசைந்து ஆட்டங்கண்டு நாளடைவில் வலுவிழந்து வீழ்ந்துவிடும். ஏற்கனவே முழுமையான ஒரு அமைப்பில் கிரந்த எழுத்துகளை உள்ளெடுத்தவர்கள் அவற்றுக்கான சொற்பிறப்பின் இலக்கணத்தையோ மெய்மயக்கவிதிகளையோ புணர்ச்சிவிதிகளையோ வகுக்கவில்லை. எனவே, ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துகளை கலைச்சொற்களில் தவிர்க்கவேண்டும்.
இதன் மறுபக்கமாக, கலைப்புலங்களில் செயலாற்றும் நமக்கு போன்ற கணிதச்சமன்பாடுகளையும் வேதிச்சமன்பாடுகளையும் எவ்வாறு எழுதுவது என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறான குறியீடுகளை கணிதக்குறிகளாக கருதவேண்டுமேயன்றி, தமிழின் எழுத்துக்கணத்தில் கலப்படம் விளைவிப்பதாக எண்ணக்கூடாது. குறியீடுகளும் அவற்றின் ஒலிகளும் தமிழ்ச்சொற்களில் இடம்பெறா. மாறாக கிரந்த எழுத்துகள் சொற்களில் இடம்பெறுவதை நோக்குக.
எழுத்துக்கணம் ஒரு மூடிய கணம். அதன் அடிப்படையில் சொற்களும் இலக்கணமும் உண்டாகின்றன. ஆனால் ஒரு மொழியில் இத்தனை சொற்கள் இருக்கவேண்டும் என்ற வரையறை இல்லை. அது திறந்த கணம். எனவே, கிரந்த எழுத்துகளை நீக்குவது ஒப்பளவில் எளிய செயலாயினும், திசைச்சொற்களையும் வடசொற்களையும் நீக்குவது அவ்வளவு எளிதன்று. தமிழிலக்கண மரபுகளை மீறாதனவும் வெகுகாலமாக தமிழில் புழங்கி மக்கள் மனங்களில் பதிந்து விட்டனவுமான சொற்களை நாம் அறிவியலிலும் மற்ற கலைப்புலங்களிலும் ஏற்கவேண்டும்.
பாட்டீரியம், வைரசு என்ற சொற்கள் தமிழிலக்கணவிதிகளுள் எதையும் மீறவில்லை. இவற்றை வேண்டாம் என்று சொல்வதற்கான ஒரே காரணம் ஆங்கிலத்தில் bacterim, virus என்ற சொற்கள் இருப்பதே. ஆனால் இது ஒரு போலிக்காரணம். ஆங்கியமறியாத தமிழறிந்தோருக்கு இது ஒரு பொருட்டன்று. வாழைமரம் என்ற ஒரு தமிழ்ச்சொல்லை கருதுவோம். இந்த சொல் உலகின் வேறெந்த மொழியிலாவது இருக்கிறதா என்று முற்றிலும் ஆராய்ந்துபார்த்துவிட்டா நாம் அதை தமிழ்ச்சொல்லாக ஏற்கவேண்டும்? நியூட்டனின் விதிகளை நியூட்டனின் விதிகள் என்றே சொல்லவேண்டும். போலியான தமிழ்ப்பெருமைக்காக சாத்தனின் விதிகள் எனலாமா! அவ்வாறு சொல்வது அறிவியலின் நன்னெறிக்கு புறம்பானது.
பொருட்டூய்மையை கருதும்போது, வேற்றுநாடுகளில் கண்டுபிடித்த அறிவியற்கருத்துகளையும் அங்கு வளரான தொழினுட்பங்களையும் நாம் ஒதுக்கவேண்டியதில்லை. நம் பண்பாட்டு விழுமியங்களை மாற்றியமைக்காத கருத்துகளை ஏற்கலாம். சான்றாக, புற்றுநோயின் காரணங்களும் அதன் சிகிச்சைகளும் அமெரிக்காவில் கண்டுபிடித்தாலும் அந்த உண்மைகள் உலகின் எல்லா மக்களுக்கும் பொதுவானவை.
சொற்பிறப்பியலால் பின்னடைவு
சொற்பிறப்பியலின் அடிப்படையில் பெயர்ப்பது தமிழரை பல நூற்றாண்டுகளுக்கு பின்னடையவைக்கிறது. Acid என்ற பொருளுக்கு அதன் சுவையின் அடிப்படையில் பெயரிட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த அறிவியலர்கள் அதை எலுமிச்சம்பழச்சாறு போன்ற புளிமமாகத்தான் எண்ணியிருப்பார்கள். ஆனால் இப்போது பல விதமான acidகளையும் அவற்றின் வேறுபட்ட பண்புகளையும் தொழிலகங்களில் அவற்றின் பயன்பாடுகளையும் அறிவோம். புளிப்புச்சுவை acidகளின் முதன்மையான பண்பன்று. ஆங்கிலத்தில் acid என்ற சொல் புளிப்பு என்ற பொருளிலிருந்து விடுபடுவதற்கு சில நூற்றாண்டுகள் ஆயின. நாம் புளிமத்தில் தொடங்கினால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த நிலையில் தொடங்குகிறோம். Acid என்பதற்கு இன்றைய பொருளை புரிந்துகொள்ளும்வகையில் அமிலம் என்ற இடுகுறிப்பெயரை பயன்படுத்துவது சிறப்பு.
நொதித்தலின்போது enzymeஐ கண்டுபிடித்ததால் அவ்வாறு பெயரிட்டனர். இன்றைய நம் அறிவியலறிவு enzymeஐ நொதித்தலிலிருந்து வெகுதொலைவு கொண்டுவந்துவிட்டது. ஊக்கிப்புரதம் என்பது இன்றைய பொருளை உணர்த்துகிறது.
Bacterium என்ற உயிரினங்களை நுண்ணோக்கியால் கண்ட அறிவியலர்களுக்கு அவை சிறுகுச்சிகள் போன்று தோற்றமளித்ததால் இந்த உயிரினங்களுக்கு அந்த பெயர் உண்டாயிற்று. ஆனால் இன்றைய நிலையில் bacterium என்று சொல்லும்போதோ கேட்கும்போதோ குச்சிகளை யாரும் எண்ணுவதில்லை; ஒருவித நுண்ணியிரிகளையே எண்ணுகிறோம். மேலும், இன்று bacillus – குச்சியம், coccus – மணியம், vibrio – அதிரியம், spirillum – சுருளியம் போன்ற பல வடிவங்களில் நாம் பாட்டீரியங்களை அறிவோம். தமிழிலும் பாட்டீரியம் என்ற இடுகுறிச்சொல் ஒரு குறிப்பிட்ட நுண்ணியிரிவகையையே தமிழருக்கு நினைவுறுத்துகிறது. ஆங்கிலச்சொல் கட்டியிழுக்கும் வரலாற்றுச்சுமை தமிழுக்கு தேவையில்லை.
முடிவுரை
மேற்சொன்ன வழியுரைகளை பின்பற்றி கலைச்சொற்களை தொகுத்தும் திருத்தியும் தேவையானபோது ஆக்கியும் ஒரு கலைச்சொற்பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். இது மின்பட்டியலாக இருப்பதால், ஆங்கிலத்தில் அகரமுதலாக்கும்போது ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருந்தால் திருத்தி திட்டவட்டத்தை நிலைநாட்டவும் தமிழில் அகரவரிசையாக்கும்போது ஒரே சொல் பல பொருளில் வந்தால் திருத்தி ஒருத்துவத்தை நிலைநாட்டவும் வசதியாகிறது. இந்த முறையாலே apogeeக்கும் aphelioனுக்கும் ஒரே சொல் இருப்பதைக்கண்டு மாற்றினேன்.
கலைச்சொற்களின் செந்தரம் என்ற விளக்கநூலையும் சொற்பட்டியலையும் (http://oss.neechalkaran.com/dictionary/) அந்தந்த தொடுப்புகளில் காணலாம்; jkottalam@gmail.com என்ற மின்முகவரியிலிருந்தும் இலவசமாக பெறலாம். அறிஞர்கள் பட்டியலை பயன்படுத்தும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் திருத்தங்களையும் தெரிவிப்பது பட்டியலின் அடுத்த வேற்றங்களை மேம்படுத்தும்.
செ. கோட்டாளம் அறிவியலிலும் தகவற்றொழினுட்பத்திலும் ஆராய்ச்சியாளராகவும் வளராக்கருமாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1954ஆம் ஆண்டு இந்தியாவின் தெற்குத் தமிழ்நாட்டிலுள்ள கொற்கயிைல் பிறந்தார். சென்னயிலுள்ள இந்தியத் தொழினுட்பப்பயிலகத்தில் முதுவறிவியற்பட்டத்தையும் அமெரிக்கவொன்றிய மாநிலங்களின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்திலிருந்து முனைனவர் பட்டத்தையும் பெற்றார்; சாண்டியாகோவிலுள்ள கலிபோனியாப் பல்கலைக் கழகம், கிரிப்பசின் ஆராய்ச்சிப்பயிலகம், ஆர்வடு பல்கலைக் கழகம், கிரேயின் ஆராய்ச்சியகம் முதலிய இடங்களில் நோபல்சூடிய பேராசிரியர் கார்ப்பிளசு உட்பட பல அறிவியலர்களுடன் பணியாற்றினார். புரதம், அணுக்கருவமிலம் போன்ற பெருமூலக்கூறுகளின் கட்டமைப்பையும் இயக்கங்களையும் மிகைக்கணினியில் பாவனையாக்குவதற்கான எண்கணிப்பப் படிமுறைகளை வளராக்குவதில் இவர் பங்களித்தார். மேலும், கணக்கீட்டுப் பாய்மயியக்கவியல், புள்ளியியயியற்பியை் ஆகிய துறைகளிலும் பங்களித்துள்ளார். இப்பபாது ஆங்கில மொழியிலுள்ள அறிவியற் செல்வங்களை திட்டமிட்ட ஒழுங்குமுறையில் தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
J. Kottalam is retired after serving in the scientific and technological research and development fields. He was born in 1954 in Kotkai of southern Tamilnadu in India. Having received MSc from Indian Institute of Technology at Madras and PhD from Michigan State University in USA, he worked at institutions such as University of California at San Diego, Scripps Research Institute, Harvard University and Cray Research with scholars including Nobel laureate Martin Karplus. He contributed to developing numerical algorithms for simulating the structures and dynamics of macromolecules such as proteins and nucleic acids in supercomputers. His further contributions are in the fields of Computational Fluid Dynamics and Statistical Physics. Now he is engaged bringing the scientific wealth available in English to Tamil in a planned systematic manner.
jkottalam@gmail.com
https://www.facebook.com/kottalam