போட்டோகிராப் – திரை விமர்சனம்
அண்ணாகண்ணன்
போட்டோகிராப் (Photograph) என்ற இந்திப் படத்தைப் பார்த்தேன். இப்படி ஒரு கவித்துவமான படத்தை, அண்மையில் நான் பார்க்கவில்லை. மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சுற்றுலாப் பயணிகளைப் படமெடுத்துத் தரும் நிழற்படக் கலைஞர், நவாசுதீன் சித்திக். படமெடுத்து அங்கேயே அச்சிட்டுக் கொடுக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.30 வாங்குகிறார்.
கேட் வே ஆப் இந்தியாவில் சான்யா மல்ஹோத்ரா நடக்கும்போது, அவரை உடனடிப் படம் எடுத்துத் தருகிறேன் என நவாசுதீன் சித்திக் பின்தொடர்ந்து கேட்கிறார். வேண்டாம் என்று சான்யா சொல்ல, இன்று நீங்கள் என்னிடம் படம் எடுத்தால், உங்கள் முகத்தில் விழும் சூரிய ஒளியையும் உங்கள் கூந்தலை இந்தக் காற்று கலைப்பதையும் பின்னொரு நாள் பார்க்கும்போது காண்பீர்கள் என்பார். இங்கே கேட்கும் அனைத்துக் குரல்களையும் அப்போது கேட்பீர்கள் என்பார். உடனே சான்யா சம்மதிக்கிறார். அவர் சி.ஏ. படிக்கும் மாணவி. சற்றே வசதியானவர். அவசரத்தில் நிழற்படத்துக்கு அந்த 30 ரூபாய் கொடுக்காமல் சென்றுவிடுகிறார்.
நவாசுதீன் சித்திக்கின் பாட்டி, இவரைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி நச்சரிக்கிறார். மருந்து சாப்பிடவும் மறுக்கிறார். அவரைச் சமாதானம் செய்ய, பாட்டிக்கு இவர் ஒரு பொய்க் கடிதம் எழுதுகிறார். இங்கே நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். எனக்காக அவளை நீயே தேர்ந்தெடுத்தது போல் உணர்ந்தேன். அவள் கண்கள், கேள்விகளால் நிரம்பியிருந்தன. ஆனால், பதில்களாலும் நிரம்பியிருந்தன. அவள் புன்னகையைக் கண்டால், எல்லாத் துக்கமும் துயரமும் பறந்தோடிவிடும். நமது நிலத்தில் விழுந்த முதல் மழை, உனக்கு நினைவிருக்கிறதா? அதே போல் இருந்தது அவளது சிரிப்பு. அவளது பெயரும் அழகானது என எழுதுகிறார். அந்த நேரத்தில் தொலைவில் ஓ நூரி நூரி என ஒரு திரைப்படப் பாடல் ஒலிக்கிறது. எனவே, நூரி என்றே அவளுக்குப் பெயர் சூட்டிவிடுகிறார். பாட்டி, இவர்களைப் பார்க்க ஊரிலிருந்து வருகிறார்.
பணம் கொடுக்காமல் சென்ற சான்யாவை நவாசுதீன் சித்திக் மீண்டும் சந்திக்கிறார். பாட்டிக்காக, தன் காதலியாக நடிக்க முடியுமா எனக் கேட்கிறார். சான்யா அதற்குச் சம்மதிக்கிறார். இவர்களை ஒருசேரப் படம் எடுக்குமாறு பாட்டி கேட்கிறார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒரே தட்டில் ரசகுல்லாவும் குலாப் ஜாமூனும் இருப்பது போல் இருக்கிறது எனச் சொல்வது ருசிகரம். பாட்டி ஊரிலிருந்து வரும்போது உடன் வரும் கர்ப்பிணிப் பெண், ரயிலில் குழந்தை பெறுகிறாள். அவளுக்கு ரயில் மலர் எனப் பெயர் சூட்டினார்களாம். பாட்டி இரவெல்லாம் கண்விழித்திருந்து கோமதி நதி வரும்போது அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வீசி எறிந்தாளாம். இதையெல்லாம் பாட்டியே சொல்கிறார்.
சான்யா இளம் வயதில் கெம்ப கோலா குடித்தது பிடிக்கும் என்கிறார். இப்போது உற்பத்தியை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது என்றாலும் நவாசுதீன் சித்திக், அந்த உற்பத்தியாளரைத் தேடிச் செல்கிறார். உன்னைப் போல் முன்னர் ஒருவர் தேடி வந்தார். அவருக்கு இந்த பார்முலாவை நான் கொடுத்தேன். அவர் வீட்டில் அதை இன்றும் தயாரிக்கிறார் என நினைக்கிறேன் என்கிறார். அந்த இன்னொருவரைத் தேடிச் சென்று ஒரு புட்டி கெம்ப கோலாவை வாங்கி வருகிறார். இது உன் சிறப்பு நண்பருக்காக எனச் சொல்லிக் கொடுக்கிறார்.
நடிக்க வந்த சான்யா, உண்மையிலேயே நவாசுதீன் மீது காதல் வயப்படுகிறார். தன் வீட்டில் பார்க்கும் அமெரிக்க மாப்பிள்ளையை மறுத்துவிட்டு, இவருடன் பழகுகிறார். படத்தின் முடிவை வெளிப்படையாகச் சொல்லாமல், பார்ப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். பாட்டியாக நடித்திருக்கும் பரூக் ஜாபர் கலக்கியிருக்கிறார்.
படத்தில் ஆங்காங்கே கவித்துவமான காட்சிகள் வருகின்றன. ஆனால், இது கலைப்படம் போன்று மெதுவாக நகர்கிறது. உரையாடல், ஒளிப்பதிவு, பின்னணி ஒலிகள், நடிப்பு அனைத்தும் இயல்பாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. ஆனால், நிறையப் படங்களைப் பரபரப்பாகவே பார்த்துப் பழகிவிட்டதால், இயல்பாகச் செல்லும் இந்தப் படம், மெதுவாக நகர்வது போல் தெரிகிறது.
இயக்குநர் ரிதேஷ் பாத்ராவின் திரைமொழி, மேம்பட்ட ரசனை உள்ளவர்களுக்கானது. வணிகத் திரைப்படமாக எடுத்து வருவாயை வாரிக் குவிக்க நினைக்காமல், தரமான படத்தினை அளித்துள்ளார். இயல்பான திரைப்படங்களை விரும்புவோர், இதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள்.