தமிழ்நாட்டில் ஓர் ஆச்சரியம்
அண்ணாகண்ணன்
நுகர்வோர் ஆணையிட்ட பொருள்களைக் கொண்டு சேர்க்கும் (டெலிவரி) துறையில் ஒரு புது நிறுவனத்தின் பெயரைக் கண்டேன். பின்னால் பெரிய பெட்டியுடன் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஓட்டி வந்தார். அருகில் உள்ள வீட்டுக்கு டெலிவரி செய்ய வந்திருந்தார். அந்த இளைஞரிடம் பேசினேன். ஆச்சரியம், அவர் 12ஆம் வகுப்புப் படிப்பதாகக் கூறினார்.
இன்னும் 18 வயது ஆகியிருக்காதே. இந்த நிறுவனத்தில் எப்படிச் சேர்ந்தீர்கள் என்று கேட்டேன். என் அண்ணனின் சான்றிதழ்களைக் கொடுத்துச் சேர்ந்துவிட்டு, அன்றாடப் பணிகளை நான் எடுத்துச் செய்கிறேன் என்றார். பள்ளி முடிந்த பிறகு, மாலையில் இவ்வாறு டெலிவரி செய்யப் போவதாகக் கூறினார்.
ஓர் இடத்தில் டெலிவரி செய்தால் தனக்கு 28 ரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு 40 டெலிவரி செய்தால் 1120 கிடைக்கும் என்றார். சுவிக்கி, ஸொமேட்டோ போன்று உணவும் டெலிவரி செய்வது உண்டு. அவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு எனக் கொடுக்கிறார்கள் என்றார். அது சற்றே குறைவாக இருக்கும் என்றார்.
பெரிய டெலிவரி நிறுவனங்களுக்குக் கீழே அவர்களின் பணிகளை எடுத்துச் செய்ய, சிறு நிறுவனங்கள் பலவும் ஆங்காங்கே தோன்றியுள்ளன. இவர்கள், துணை ஒப்பந்தம் (சப்-கான்ட்ராக்ட்) மூலம் பணிகளை எடுத்துச் செய்கிறார்கள். இப்படி உள்ள நிறுவனத்தில் வேலை செய்ய, ஆட்கள் அதிகம் கிடைப்பதில்லை. எனவே தான் அவர்கள் வாகனம் வைத்திருக்கும் துடிப்பான பள்ளி மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள்.
பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே மாதம் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்க முடிவதைத் திறமை என்பதா? இதைத் தமிழ்நாட்டின் பொருளாதார வளம் என்பதா? இப்படிச் சம்பாதிக்க வேண்டிய குடும்பச் சூழல் இருக்கிறது எனக் கருதுவதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?