அண்ணாகண்ணன் யோசனைகள் – 55
அண்ணாகண்ணன்
முன்னர் ஒரு யோசனை தெரிவித்திருந்தேன். ஒவ்வொரு நெல்மணிக்கும் பருப்புக்கும் விளைபொருளுக்கும் அது விளையும் இடத்திலேயே குறியீடு கொடுத்து, பின்தொடர வேண்டும் என்பதே என் யோசனை. ஒரு பொருள் எங்கே, எப்போது விளைந்தது, பயிரிட்டவர் யார், எந்த எந்த விற்பனையாளர்கள் வழியே வாடிக்கையாளரை அடைகிறது, வாடிக்கையாளர் வீட்டில் அது எவ்வளவு காலமாக இருக்கிறது என யாவற்றையும் கண்டறிய வேண்டும். அது இயற்கை உரத்துடன் அல்லது செயற்கை உரத்துடன் வளர்ந்ததா? அதன் மேலே செயற்கைச் சாயம் பூசப்பட்டள்ளதா? விளைபொருளின் தரம் என்ன? அது கெட்டுப் போகாமல் இருக்கிறதா? என அறிய வேண்டும். ஒரு ஸ்கேன் செய்தாலே அதன் மரபணுச் சோதனை நிகழ வேண்டும். அந்தப் பொருளின் உண்மை விவரங்கள், நுகர்வோருக்குத் தெரிய வேண்டும்.
ஒரு பொருளின் வடிவம் மாறும்போது, இந்தக் குறியீடு அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய்யாக மாறும்போது தரப் பரிசோதனை செய்து, வேறு குறியீடு உருவாக்கலாம். இத்தகைய சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட குறியீடுகளையும் விளைபொருள்கள் கொண்டிருக்கலாம்.
காய்கறி, பழம், கீரை உள்ளிட்டவை எப்போது பயிரிடப்பட்டன என்பதுடன் எப்போது அறுவடை செய்யப்பட்டன? எந்த இடத்திலிருந்து இங்கே வந்திருக்கின்றன? என்றெல்லாம் அறிய வேண்டும். இப்போது, இந்த யோசனையைக் கஞ்சாவுக்கும் விரிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.
கஞ்சா வைத்திருந்தார் எனக் குற்றம் சுமத்திப் பலரும் கைது செய்யப்படுவதைப் பார்க்கிறோம். இந்தச் சிக்கலைத் தொழில்நுட்ப ரீதியில் தீர்க்க முடியும் எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு கஞ்சா இலைக்கும் செடிக்கும் அடையாளக் குறியீடு உருவாக்க முடிந்தால், அதன் வரலாறு முழுவதையும் அதிலிருந்து எடுத்துவிட முடியும். அது எங்கே பயிரானது, எந்த இடங்களுக்குப் பயணித்தது என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்டறியலாம். இன்னார் வீட்டுக்கு அது எப்போது வந்தது என்பது வரை பின்தொடரலாம். குறிப்பிட்ட நாளில் அது வந்தது எனில், அது எப்படி வந்தது, யார் மூலம் வந்தது என்பதையும் ஒரு மோப்ப நாயின் உதவியுடன் கண்டறியலாம்.
மேலும், கஞ்சா வைத்திருந்தார் என்பது ஒரு பகுதி குற்றச்சாட்டு தானே? அந்தக் கஞ்சாவை அவர் யாரிடமிருந்து, எப்போது, எப்படிப் பெற்றார் என்பதைக் காவல் துறை உறுதிப்படுத்த வேண்டும். இந்தத் தகவல் இல்லாவிட்டால், குற்றத்தை நிரூபிப்பது எப்படி? கஞ்சா விற்றவருக்குத் தண்டனை பெற்றுத் தருவது எப்படி? எனவே, மேற்சொன்ன வேரினைத் தேடல், காவல் துறைக்கும் பெருமளவு உதவும்.
மனிதர் அனைவருக்கும் மரபணுச் சோதனை நடத்தலாம் என முன்னர் தெரிவித்திருந்தேன். வயது வந்தவர் எனில் அவரது இசைவு அல்லது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர் எனில் அவரது பெற்றோரின் இசைவு பெற்றிருக்க வேண்டும் என்பதை ஒரு விதிமுறையாகச் சேர்க்கலாம் என்றேன். இதிலாவது மனிதர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறது.
ஆனால், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட இதர உயிர்கள் அனைத்திற்கும் மரபணுக் குறியீடு உருவாக்குவது நீண்ட கால நோக்கில் பயனுள்ளது. கலப்படத்தைத் தவிர்க்கவும் உண்மையைக் கண்டறியவும் சில சிக்கல்களின் வேரினைக் கண்டறியவும் இந்த மரபணு அடையாளம் நமக்கு உதவும்.
இது மிகப் பெரிய பணிதான். ஆனால், செய்ய முடியாத பணி இல்லை. முயன்றால் முடியும். முயற்சி திருவினையாக்கும்.