ஹடினெலன்டு – திரை விமர்சனம்
அண்ணாகண்ணன்
ஹடினெலன்டு (Hadinelentu / Seventeeners) என்ற கன்னடப் படத்தைப் பார்த்தேன். 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவனும் மாணவியும் பள்ளி வகுப்பறையிலேயே உறவு கொண்டு, அதை அவர்களே நிகழ்படமாக எடுக்கிறார்கள். பிறகு அது இணையத்தில் கசிந்து பரவுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளியிலும் நீதிமன்றத்திலும் நடைபெறும் பரபரப்பான விசாரணைகளும் திருப்பங்களுமாகப் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.
இதில் சாதி, வயது, சட்டங்கள், அணுகுமுறைகள் உள்ளிட்ட பலவும் ஒரு சம்பவத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகின்றன என்பதை இயல்பாகக் காட்டியுள்ளார்கள்.
படத்தின் தொடக்கத்தில் பள்ளி முடிந்ததும் ஒருவர் எல்லா வகுப்பறைகளையும் பூட்டுகிறார். பெண்மணி, வகுப்பறை வராண்டாக்களைப் பெருக்கித் தூண்மை செய்கிறார். மாணவனை அழைத்துக்கொண்டு மாணவி, ஒரு வகுப்பறையின் உள்ளே நுழைகிறார். புகுந்து கதவையும் ஜன்னலையும் மாணவியே உள்புறமாகச் சாத்துகிறார். தங்கள் பைகளை இறக்கி வைக்கிறார்கள். மாணவன், ஐ லவ் யூ என எழுதிய சங்கிலியை மாணவிக்குப் பரிசளிக்கிறார். அடுத்து, மாணவன் தன் ஆடைகளைக் களைய முயல்கிறார். அதை அந்தப் பெண்ணே தன் செல்பேசியில் வீடியோ எடுக்கத் தொடங்குகிறார். மாணவன் அந்தச் செல்பேசியைப் பறித்து, நீ முதலில் என்று அந்தப் பெண் உடை களைவதை வீடியோ எடுக்கிறார்.
இப்போது இந்தக் காட்சியை நாம் ஆராயலாம்.
படத்தின் பெரும்பகுதி நம்பகத்தன்மையுடனும் லாஜிக் எனப்படும் தருக்கத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. ஆனால், படத்தின் ஆதாரமான இந்தக் காட்சியில் நம்பகத்தன்மை இல்லை.
மாணவி, அந்த மாணவனை அழைத்துக்கொண்டு செல்வது ஏன்? உறவு கொள்ளும் முயற்சியை மாணவி முன்னெடுக்கிறாரா? அவ்வளவு சகஜமாக, சாதாரணமாக வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை மூடுவது எனில், இது பழகிய இடமா? சிறிய அச்சமோ தயக்கமோ இல்லையே. ஏற்கெனவே இவ்வாறு செய்துள்ளார்களா? இதை மாணவி ஏன் வீடியோ எடுக்க வேண்டும்? இது திட்டமிட்ட செயலா? இந்த அறையை ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்த அறையைப் பணியாளர்கள் பூட்டாதது ஏன்? மாணவர்கள் வெளியேறிச் செல்லும்போதும் பள்ளியில் யார் கண்ணிலும் படவில்லையா?
இதில் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தேடினால், படத்தின் பலவீனம் புரியும். இந்த வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிறது. பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், யாரும் இதைப் பற்றிக் கேட்கவில்லை. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், காவல் துறை, நீதிமன்றம் உள்ளிட்டவை, இந்தக் கேள்விகளை நுணுக்கமாக எழுப்பவில்லை.
தாங்கள் செய்யும் விளைவுகள் குறித்து, இதில் ஈடுபட்ட மாணவர்களுக்குத் தெரியாதா? இதை வீடியோ எடுப்பதும் பகிர்வதும் எத்தகைய சிக்கல்களைக் கொண்டு வரும் என்று அவர்களுக்குத் தெரியாதா? வீடியோ கசிந்தது ஒரு விபத்தாக இருக்கலாம். ஆனால், பெண் இயல்பிலேயே விழிப்புணர்வுடன் இருப்பவள். பட்டப் பகலில் உறவு கொள்வதை அவரே வீடியோ எடுக்கிறார். அல்லது அப்படி கேமரா எதிரில் உறவு கொள்ளச் சம்மதிக்கிறார் எனில் இது நம்பும்படியாகவா இருக்கிறது?
படத்தின் முடிவிலும் ஒரு லாஜிக் சிக்கல் இருக்கிறது. மாணவன், தானே அதை ஒரு பேஸ்புக் நண்பருடன் பகிர்ந்ததாகச் சொல்லிவிட்டுப் பிறகு மறுக்கிறான். மாணவியின் வழக்கறிஞர், இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுகிறார். மாணவனின் பேஸ்புக் கணக்கை ஆராய்ந்தால் (அது நீக்கப்பட்டிருந்தாலும்) பகிர்ந்தாரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். இதை ஏன் அவர் செய்யவில்லை?
படத்தின் மையச் சிக்கல், பதின் பருவத்தினர் உறவுகொள்வதையும் அதை வீடியோ எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இதில் ஈடுபடுவோரின் வயதே பிரதான சிக்கல் என்பதாகப் போய் முடிகிறது. கதை, வசனம் எழுதி இயக்கிய பிரித்வி கோனனூர், இந்தச் சிக்கல்களைத் தவிர்த்திருந்தால், வேறு வகையில் கையாண்டிருந்தால், இன்னும் சிறப்பாக இந்தப் படம் வந்திருக்கும்.
எனினும், இது தரமான படம். பதின்ம வயது இளைஞர்களுக்கு இந்தப் படம், நல்ல பாடம் புகட்டும். ஷெர்லின், நீரஜ் மேத்யூ, ரேகா குட்லிகி, பவானி பிரகாஷ் உள்பட நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். எனவே தமிழிலும் இதர மொழிகளிலும் மொழிமாற்றி வெளியிடலாம்.
முழுப் படமும் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இடைவெளியிலும் இறுதியிலும் கியூ ஆர் குறியீடுகள் காட்டப்படுகின்றன. வாய்ப்புள்ளவர்கள் நன்கொடை அளிக்கலாம்.