அழுக்காறு – அழுக்கு நிறைந்த வழி. அதாவது நன்மையும் இன்பமும் இல்லாத வழி. இத்தகு அழுக்கு வழியில் வாழ்தல் வளர்ச்சிக்குத் துணை செய்யாது. இனியவை கூறல் பற்றிப் பல குறட்பாக்கள் இயற்றிய திருவள்ளுவர். “அழுக்காறு என ஒரு பாவி” என்று அழுகாற்றினைத் திட்டுகிறார்.
ஆம்! அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. மாறாகத் தீமையைத் தரும். இந்த அழுக்காறு தான் மக்கள் மத்தியில் “பொறாமை” என்று பேசப்படுகிறது. அதாவது மற்றவர்களின் ஆக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமை பொறுத்துப் போற்ற முடியாமை அழுக்காறு ஆகும்!
ஆனால் இன்று பலர் நல்லவைகளில் – கல்வியில் பொறாமைப்படலாம். தீமையன்று என்று அறியாமல் கூறுகின்றனர். இது தவறு. ஒருவர் நன்மை செய்வதில் அழுக்காறு கொள்பவன், நன்மை செய்ய முனைப்புக் கொள்ள மாட்டான். அழுக்காறு நிறைந்த உள்ளத்தியல்பும், நன்மை செய்வதில் ஊக்கம் காட்டாது என்றே திருக்குறள் கூறுகிறது.
நஞ்சு, அமுதாவது ஏது? சாக்கடை நன்னீராவது ஏது! அதுபோலவே தான் நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவனைப் பார்த்து குறைந்த மதிப்பெண் வாங்குபவன் அழுக்காறு கொண்டால் கூடுதல் மதிப்பெண் வாங்கும் முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு மாறாக அதிக மதிப்பெண் வாங்கியவன் மீது குற்றங்களை, குறைகளைக் கற்பித்துக் கூறுவான். ஏன் ‘காப்பியடித்து’ விட்டான் என்றே கூறுவான். மேலும் ‘மோசமாகி’ ஆசிரியர், கையூட்டுப் பெற்றுவிட்டார் என்று கூடக் கூறுவான். ஆதலால், எந்த வகையிலும் அழுக்காறு தீதே.
அழுக்கற்றை அகற்றும் வழி, நல்லவர்களை – வாழ்பவர்களைப் பாராட்டி மகிழ்வதுதான். அதோடு பெற்றவைகளைக் கொண்டு மகிழும் மனம் வேண்டும். பெறாதவைகளைப் பெறும் முயற்சியும் வேண்டும். உப்பரிக்கைகளைப் பார்த்துப் புழுங்குதலைத் தவிர்த்து குடிசைகளில் வாழ்பவரை நோக்கி இரக்கங் கொள்ளுதல் வேண்டும். இத்தகு மனப்பான்மை வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.
எப்போதும் நல்லவனவற்றையே நாடுதல், நல்லனவற்றைப் பற்றியே பேசுதல் அழுக்கற்றிலிருந்து தப்பும் ஒரு வழி. எங்கும் எதிலும் எவரிடத்திலும் குற்றம் – குறைகள் இருக்கும். எல்லாரும் கடவுளா என்ன? நாம் அவர்களிடத்தில் உள்ள குணங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும். நல்லவைகளைப் பாராட்ட வேண்டும். நாம் ரோசாச் செடியில் முட்களை எடுக்கக் கூடாது. மலர்களையே எடுக்க வேண்டும்.
அழுக்காறு என்ற தீய குணத்திலேயே மனித குலம் ஒன்றுபட்டு வாழ முடியவில்லை. பகையில் சிக்கித் தவிக்கிறார்கள். அழுக்காறு தனித்தும் நிற்காது. அழுக்காற்றின் படை அவா, வெகுளி இன்னாதன சொல்லல், கலகம் எல்லமேயாம்.
ஆதலால் அழுக்காறு கொண்ட மனிதன் வளர்தல் அரிது; வாழ்தல் அரிது; அதனாலேயே ‘திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்’ என்றது திருக்குறள். தேளின் கொடுக்கு, நஞ்சாம் தன்மைபோல அழுகாறுடையார் உள்ளம் நஞ்சாகும்.
அழுக்காறு கொள்ளற்க! மற்றவர் வாழ்வதைக்கண்டு மகிழ்க! நீயும் வாழ முயல்க! நல்லனவற்றையே காண்க! நல்லனவற்றையே பேசுக. மற்றவர்கள் ஆற்றலை, அறிவைப் பாராட்டி மகிழ்க! எவரோடும் பழகுக! தோழமை கொள்க! மறந்தும் மற்றவர்களைப் பற்றிப் புழுக்கம் கொள்ளற்க!
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளரின் இயற்பெயர் ஸ்ரீ வேணுகோபாலன். இவர் 1000 த்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 300 க்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியவர்.
இவர் கதைகளில் அமைதியில்லா என் மனமே, துள்ளுவதோ இளமை, சிகப்பு ரோஜா கதைகள், என் பெயர் கமலா, காதல் ஒரு கனவு, தாரா… தாரா… தாரா… திருவரங்கன் உலா, மதுரா விஜயம், சத்ய சாய் போன்ற பல நூல்கள் குறிப்பிடத் தக்கன. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது முதல் கதை இவரது 18 ஆவது வயதில் 1949 இல் தினமணிக்கதிர் பத்திரிக்கையில் வெளியானது.
இவரது கதைகள் அறிவியல், சமூகம், துப்பறியும் கதைகள் எனப் பலப் பரிமாணங்களில் வெளிவந்துள்ளன. கதைகளைத் தவிர்த்து தலபுராணங்கள், தொலைகாட்சித் தொடர்கள், நாடகங்கள், ஆன்மீக வரலாற்று நூல்கள் எனப் பல்துறைகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவரது புதினங்கள் பல பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவர் துப்பறியும் கதைகளைத் தனது புனை பெயரிலும், தலபுராணக் கட்டுரைகளைத் தனது இயற்பெயரிலும் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீ வேணுகோபாலனாக ஆன்மீக, வரலாற்றுப் புதினங்கள் மற்றும் சமுதாயக் கதைகளை எழுதியவரும், புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வணிக நோக்கில் புகழ்பெற்ற இளமைத் துள்ளல் கதைகளை எழுதியவரும் இவரே என்பது இவரது வேறுபட்ட எழுத்துத் திறமையைக் காண்பிக்கும். உண்மைக் கதைகளை எழுதப் புனைபெயரைத் தேர்ந்தெடுததாக இவர் குறிப்பிட்டுள்ளார். பதினைத்து ஆண்டுகள் எழுத்தாளர் வாழ்க்கையில் அடையாதப் புகழை ஆறே வாரங்களில் இவருக்குப் புனைபெயர் பெற்றுத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை தபால் தலைமையகத்தில் வெளிநாட்டுத் தபால் பிரிவில் பணியாற்றிய இவரால் “ஊதாப்பூ” என்ற மாதாந்திர புதின பத்திரிக்கை ஒன்றும் சொந்தமாகத் துவங்கப்பட்டு, குறுகிய காலத்தில் 50,000 பிரதிகள் வரை விற்பனையை எட்டினாலும், நடைமுறையில் எதிர்கொள்ளப்பட்ட மேலாண்மை தொடர்பான குறைபாடுகள் எழவே நிறுத்தப்பட்டது. ஆன்மிகம் என்ற பத்திரிக்கையையும் ஆசிரியராக இருந்து நடத்தி வந்துள்ளார்.
இவரது எழுதாற்றலுக்காகப் பரிசுகள் பலவும் பெற்றவர். மதுரகவி நாடகத்திற்காக இந்திய அரசாங்க விருது, சிறந்த சிறுகதைக்காக கல்கி பத்திரிக்கை பரிசு, சிறந்த எழுத்தாளருக்கான சாவி பத்தாண்டு விழா விருது, ராணி வெள்ளிவிழா விருது மற்றும் பாலு ஜுவெல்லேர்ஸ் விருது, சிறந்த திரைக்கதைக்காக சென்னை திரைப்பட ரசிகர்கள் விருது, அமுதசுரபி நாவல் போட்டி பரிசு எனப் பலப் பரிசுகளைப் பெற்றவர் இவர்.
இவரது “ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது,” “நந்தா என் நிலா,” மற்றும் “அந்த ஜூன் 16 ஆம் நாள்”ஆகிய கதைகள் திரைபடங்களாக வெளிவந்துள்ளன. அந்த ஜூன் 16 ஆம் நாள் திரைக்கதை வசனத்தையும் எழுதியுள்ளார். 2011 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கத் தேர்வாகிய கலை இயக்குனர் பிரபாகரன் இயக்கியுள்ள ‘அம்மா’ என்னும் குறும்படம் புஷ்பா தங்கதுரை எழுதிய சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்டது. இவரது ‘பெண் ஒரு ஜீவநதி, ‘நான் குடும்பத்து ஸ்டார்,’ ‘ஊரார்’ கதைகள் தொலைகாட்சித் தொடர்களாக வெளிவந்தன.
நூல்கள் சேகரிப்பில் ஆர்வமுள்ள இவர் பல்லாயிரக் கணக்கான நூல்கள் நிரம்பிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி இருந்தார். உடல்நலமற்று ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும், பிறகு தனியார் மருத்துவமனை ஒன்றிலும் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா தங்கதுரை அவர்கள் தனது 82 வது வயதில், நவம்பர் 10, 2013 அன்று உயிர் நீத்தார்.
பின் குறிப்பு: எனது சிறுவயதில், இவர் கதைகள் சிறுவயதினர் படிக்கத் தகுதியற்றது என்று என் அம்மாவினால் தடை உத்தரவு போடப்பட்டது . இது இவரது எழுத்திற்கு அக்காலத்தில் இருந்த வரவேற்பைக் காட்டும்.
நிலம் கொத்துதல், உழுதல், தோண்டுதல் ஆகிய செயல்களின் வழி, துன்புறுத்துப்படுவது. உலகில் மாந்தர் வாழ்வியலுக்குரிய செயற்பாடு. ஆனால், நிலம் கொத்தப்பட்டும், வெட்டப்பட்டும் துன்புறுத்தப் படுவதனால்தான் நிலம், நிலத்தின் தன்மையை இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது.
கொத்தி உழப்பெறாத நிலம் மண் அரிப்பு நோய்க்கு இரையாகும். அது மட்டுமின்றி நிலம் உழப்பெற்றாலே வான் மழையின் நீரை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது; பசுமைப் புரட்சி செய்யும் ஆற்றலைப் பெறுகிறது.
உலகுயிர்க்கெல்லாம் உணவு அளித்துக் காப்பாற்றும் வேள்வியை நிலம் செய்ய முடிகிறது. நிலம் தன்னை அகழ்ந்து தரும் துன்பத்தினையே தனக்கு ஆக்கமாக மாற்றிக் கொள்கிறது; உழுவாரையும் வாழ்விக்கிறது. நிலத்தின் பொறுமை, ஆக்கமாகிறது; உயிர்க்குலத்தின் வாழ்வாகிறது.
மனிதனும் பொறுத்தாற்றும் பண்பு காத்தல் வேண்டும். பொறுத்தாற்றுவோரை அறியாதார் கோழை என்று ஏளனம் செய்வர். அதனால் என்ன? தீமை வராது; நன்மையே பெருகி வளரும்! கூளம் குப்பைதான் தீக்கு ஆக்கம் – தீமையுடையார் தான் தீமைக்கு ஆக்கம். பொறையுடையோர் முன் தீமை அழியும். நம்மில் வலியோர் தூற்றினால் பொறுத்துக் கொள்வது போலவே நம்மில் கீழோர் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறையுடைமை; பொறுத்தாற்றும் பண்பு.
பிரார்த்தனைக்கு ஈடானது பொறுத்தாற்றும் பண்பு. எல்லை கடந்த நிலையில் நமக்குப் பிறர் இன்னாதான செய்யும் பொழுது காட்டப்படுவதே பொறுத்தாற்றும் பண்பு – ஏன்? பொறுத்தாற்றும் நெறியின் வழி விதியைக் கூட வெல்லலாம். தீமைக்கும் தீவினைக்கும் வாயில் சினமே!
சினம் தவிர்த்துப் பொறுமை மேற்கொண்டொழுகின் தீயவினையும் அதாவது போகூழையும் ஆகூழாக மாற்றலாம். பொறுத்தாற்றும் பண்பு வெற்றிகளைத் தரும். நிலத்தினைப் பார்ப்போம். நிலத்தின் பொறுத்தாற்றும் பண்பை நமது அணியாக ஏற்போம்! நமக்கு இன்னாதான செய்வோரையும் ஏற்போம்! நமக்கு இன்னாதன செய்வோரையும் ஏற்போம்! வாழ்விப்போம்!
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
– திருக்குறள்
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
பொறுத்தாற்றல், பண்புகள் அனைத்திற்கும் மேம்பட்ட பண்பாகும். பொறுத்தாற்றல் பண்பால் பகைமை தடுக்கப்படுகிறது; திருத்தங்கள் காண்பதற்குரிய வாயில்கள் தோன்றுகின்றன; வலிமையும் தகுதியும் வளர்கின்றன. மகிழ்ச்சியின் திறவுகோலாகப் பொறுத்தாற்றும் பண்பு விளங்குகிறது.
உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கும் அதிகமான தன்மானம், பெருமை ஆகியன பற்றிக் கவலைப்படுதல், தேவையில்லா ஒரு மதிப்புபுணர்ச்சியைத் தமக்குத்தாமே உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியன பொறுத்தாற்றும் பண்புக்குத் தடையானவை. சில நாள் பொறுத்திருந்தாலே பல சாதனைகள் செய்யலாம். காலம் கருதிக் காத்திருப்பின் சல்லடையில்கூடத் தண்ணீர் எடுத்துச் செல்ல இயலும். ஆம்! தண்ணீர் பனிக்கட்டியாக உறையும்வரை காத்திருக்க வேண்டும்.
வாழ்க்கையின் இயல்பே கூடிச்சேர்ந்து வாழ்தல்தான் அதுவே மானுட சாதியினுடைய படைப்பின் நோக்கம். கூடிவாழ்தல் எளிதான செயலா? அம்மம்ம! உயிர்க்குலம் அனைத்தினோடும் கூடக் கூடி வாழ்தல் இயலும். பாம்பினைப் பழக்கிடலாம். ஆனால், மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது எளிமையான காரியமன்று!
மானுட ஜாதி தன் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே சண்டை போடுதலைத் தொடங்கிவிட்டது. ஆம்! கலகங்களையும் சண்டைகளையும் நேரிடும் அவமானங்களையும் கண்டு வருந்துதல் கூடாது. திருத்தங்கள் காண முயலவேண்டும். குற்றங்களுக்குத் திருத்தம் காணும் முயற்சியிலேயே கூட்டுறவு வெற்றிபெற இயலும். திருத்தம் காண இயலாது போனால், பொறுமையாக இருந்தாக வேண்டும். சண்டைபோட்டுக் கொள்வதும் பிரிவதும் விரும்பத்தக்கதல்ல.
பொறுத்தாற்றும் பண்பை வளர்த்து உறுதிபடுத்துவது நம்மை வளர்த்துக் கொள்வதேயாகும். வலிமை, தூய்மை யாரிடம் இருக்கிறதோ அவர்களை எந்த இழிவும் சென்றடையாது. அவதூறுகள் நெருப்பிடை வீழ்ந்த உமியெனக் கருகிப்போம். சிலர் கோழை என்று கூறி ஆறுதல் பெறுவார். அதனால் நமகென்ன குறை?
குப்பை கூளம் இல்லாத இடத்தில் நெருப்பு பற்றி எரியுமா என்ன? ஆதலால் பொருத்தாற்றும் பண்பைப் பெற வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; தூய்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதிகள் பலவற்றையும் முயன்று அடைய வேண்டும்.
இப்படி வளர்ந்த நிலையில் காட்டும் பொறுமைதான் பொறுமை; வலிமை சார்ந்த பொறுமை. தகுதி மிகுதியும் உடையோரின் பொறுமையே வாழ்வளிக்கும்; வையகத்தின் வரலாற்றை இயக்கும் திருக்குறள்,
“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.”
என்று கூறி வழிநடத்துகிறது.
ஆம்! மற்றவர் பழிதூற்றினால் அதனால் உண்மையில் விளைவது; தகுதியில்லாதவராக இருந்தால் சினம், பகை, கலகம்; தகுதிமிகுதியும் உடையோராக இருந்தால் திருத்தம் காண முயற்சி செய்வர்; பழிதூற்றுவாரையும் வாழ்த்துவர்.
பரபரக்க வேண்டாம்; உணர்ச்சி வேண்டாம்; தேர்ந்து தெளிக! குப்பைகள் அகற்றப்பட வேண்டியவையே! குப்பைகள் உடைய இடங்கள் அகற்றப்படுவன அல்ல; அகற்றவும் இயலாது. குற்றங்களைத் திருத்துக. பயன் கொள்ள முயலுக. இவ்வழி பொறுத்தாற்றும் பண்பு வளரும்; நாளும் குற்றங்களிலிருந்து விடுதலை பெறுக; வளர்க! வலிமை பெற்றுயர்ந்திடுக; தகுதிகள் பலவும் பெற்று உயர்ந்திடுக; எல்லாரும் அணைவர். கூடி வாழ்ந்திடலாம். கோடி நன்மை பெறலாம்.
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்ற சொல் மக்கள் மன்றத்தில் பரவலாகப் பேசப்பெறுவதே. தீய பழக்கங்கள் வேறு; ஒழுக்கம் வேறு. தீய பழக்கங்களை ஒழுக்கதிற்குள் அடக்கலாம். ஆனால் ஒழுக்கதிற்குள் தீய பழக்கம் வராது. கள்ளுண்ணல் முதலிய குற்றங்கள் தீயபழக்கங்கள் இந்தக் குற்றங்கள் ஒழுக்கக் கேடுகள் அல்ல.
ஒழுக்கம் – ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது – வாழ்வது ஒழுக்கமுடைமை. “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி. மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு. மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு செய்வனவெல்லாம் தீய பழக்கம். ஒழுக்கக்கேடு தவிர்க்கத்தக்கது. மனிதனைச் சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வனவெல்லாம் ஒழுக்கமுடைமை.
“உலகம் வேண்டுவது ஒழுக்கமே!
சுயநலம் தீய ஒழுக்கம்!
சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!”
என்றார் விவேகானந்தர். சுயநலம் தீய ஒழுக்கம். பொது நலத்திற்கு எதிரான சுயநலம் தீய ஒழுக்கம், பொது வாழ்வைச் சிதைக்கும் சுயநலம் தீய ஒழுக்கம்.
நாம் தமிழர்கள், நாம் இந்தியர்கள், நாம் மனிதர் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. தமிழர்களாகவும் இந்தியர்களாகவும் மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கம்.
நாடுகள் சுதந்திரம் பெற்றபின் “குடிமைப் பயிற்சி” என்பது மலிந்து வருகிறது. குடிமைப் பண்பு என்றால் என்ன? ஒருவர் வாழும் ஊரோடு ஒத்திசைந்து வாழ்தல் குடிமைப் பண்பு. இனம், மொழி, சாதி, மதச் சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும். எல்லோரும் ஒரு குலம்; எல்லோரும் ஓர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும்.
நல்லொழுக்கம் நாட்டின் குடிகளைத் தழீஇயதாக விளங்கும். நல்லொழுக்கத்தை ஒருமைப்பாடு என்று கூறினாலும் கூறலாம். மனிதகுல ஒருமைப்பாடே நல்லொழுக்கம். எல்லா உயிர்களிடத்திலும் எத்துணையும் பேதமுறாது, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகுதலே ஒழுக்கம்.
குடிமைப் பண்பிலாதார்,ஒருமைப்பாட்டுணர்வு இலாதார். உலகந்தழீஇய செந்தண்மை இலாதார் ஒரு நாட்டின் குடிமக்களாதல் இயலாது. ஏன்? அவர்கள் மனிதக் கணக்கில்கூட வரமாட்டார்கள். அவர்களை இழிந்த பிறப்பு என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.
ஒன்றே குலம்; எல்லோரும் ஒருகுலம்; எல்லோரும் ஓர் இனம். ஒப்புரவுடன் ஒத்திசைந்து வாழ்தல், உலகம் உண்ண உண்ணல், உலகம் உடுத்த உடுத்தல், வாழ்வித்து வாழ்தல் – இதுவே ஒழுக்கம்.
இந்த ஒழுக்கம் வளர, உழைத்து உண்ணுதல். உண்பித்து உண்ணுதல் என்ற நடைமுறை துணை செய்யும்.
இந்த நல்லொழுக்கதிற்குப் பகையான ‘பிறர் பங்கைத் திருடுதல்’, பிறர் வருந்த வாழ்தல் ஆகியன தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.
ஒழுக்கமே மானுடத்தின் விழுப்பம்; சிறப்பு. ஒழுக்கமுடைய உலகம் வளரும்! வாழும்!
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
தன்னடக்கம் என்பது வளர்ச்சிக்குரிய மூளை. தன்னடக்கம் எனினும் பணிவு எனினும் ஒரு பொருள் தரும் என்பது பிழையாகாது. ஆயினும் நிறைவாகாது. பலர் அடக்கம் உடையோராக இருப்பர். அதன் காரணமாக அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கிவிடுவர். சில சமயங்களில் ஒதுங்கி வாழ்தல் தன் முனைப்பு வளரவும் துணை செய்து விடுகிறது. ஆதலால், பலரோடு பழகிப் பணிவும் இன்சொலும் உடையோராக விளங்கினால் அடக்கமுடைமை முழுமை அடைகிறது. நாம் மற்றவர்களிடம் எப்படிப் பழகுகின்றோம்? இதுதான் கேள்வி. வளர்ச்சியின் ஆரம்பம் வணக்கத்தில் இருக்கிறது என்பது நியதி.
அடக்கமுள்ளவர்களிடம் பிழைகள் காண்பது அரிது. ஏன்? அடக்கமுள்ளவர்கள் பலரோடு பழகுவதால் பக்குவமும் முதிர்ச்சியும் எளிதில் கிடைக்கும்.
தன்னடக்கம் இரு பெரும் பிரிவுகள் உடையது. அவை, பொறி அடக்கம்; புலன் அடக்கம் எனப்படும். பொறியடக்கமாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையடக்குதல். இப்பொறிகளை இயக்கும் புலன்களை அடக்குதல் புலனடக்கம்.
இவற்றுள் நாவடக்கம் தலையாயது. நாவடக்கம் இரண்டு வகைப்படும். முதலாவது நினைத்தபடி பேசாமை. இரண்டாவது உணவடக்கம். உணவடக்கம் உடலுக்கு நலம் பயக்கும். உடல் நலமுறின் பொறியடக்கமும் புலனடக்கமும் எளிதில் சித்திக்கும். உடல் நலத்துக்கும் சீரான இயக்கத்துக்குமே உணவு; சுவைக்கல்ல. விரும்பி அளவோடு சுவைக்கத் தேவை, அவ்வளவுதான் சுவையின் பயன். அல்லது உணவு உண்ணும் ஆர்வத்தை தூண்ட சுவை பயன்படலாம்.
நிறைய பேச – சொல்ல ஆசைப்படக்கூடாது. அதிகமாகப் பிறரிடம் கேட்கும் மனப்பாங்கு வேண்டும். “சில சொல் பேசுதலும் பல கேட்கக் காமுறுதலும்” வளர்ச்சிக்குரிய பண்பு. அதனாலன்றோ, கேட்கும் பணிக்கு மட்டுமே இரண்டு காதுகள் உள்ளன. பேசுவது, உண்பது ஆகிய இரண்டு பணிகளுக்கு ஒரே வாய். அந்தப் பேச்சும்கூட மற்றவர்கள் கருத்தை வாங்கத்தக்க வகையில் பேசினால் மிகமிக நன்று.
இன்றைய உலகம் வாயினால் கெட்டு வருகிறது. நாட்டில் கண்டபடி உணவுச் சாலைகள், மது உட்பட உள்ளன. சந்து பொந்து, சாவடி எங்கும் கூடிக்கூடி ஊர் வம்பு பேசியே காலத்தைக் கழிக்கும் மாந்தர்களின் எண்ணிக்கை மிகுதி. இது போதாது என்று மேடை வேறு போட்டுப் பேசுகிறார்கள். சேரிப்புறத்து அணியாக இருந்த ஏச்சு, அரங்கேறியுள்ளது அவ்வளவுதான்! இது வாழ்வியலன்று. யாரிடமும் பணிவாக இருப்பது, தன் முனைப்பு அற்று இருப்பது, தேவைக்கேற்பச் சிக்கனமாகப் பேசுவது, இவையே அடக்கமுடைமை.
அனுபல்லவி:
இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
எங்களுக் கருள்வாய்- மங்களச் செல்வியே
(சகலகலா வாணியே)
சரணம்:
அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்
(சகலகலா வாணியே)
அருள்வாய் வரங்கள் தயங்காது நீயினி
பார் முழுதும் உன்னை பூஜிக்கும் நாளிது
விஜய தசமியிலே வேண்டிடும் சேயிது – ஜெயஸ்ரீ
பாடல் வரிகளை வழங்கிய சுத்தானந்த பாரதிக்கும், எனது தோழியருக்கும் நன்றி.
படத்தைப் பற்றியக் குறிப்பு:
சரியாக கால் நூற்றாண்டிற்கு முன் வரைந்த கோட்டோவியம் இது. மாசுபடிந்து, களையிழந்து இருந்த படத்தை ஒளிவருடி, எண்ணிம வடிவில் கணினியின் உள்ளிழுத்து, பிரகாசத்தை அதிகரித்து, குறைகளை வெளிறச் செய்து, பிரதி எடுத்து, வரிகளை மீண்டும் செப்பனிட்ட படம். பெரும்பாலும் மாதிரி பார்த்து வரையும் என் பழக்கத்தைத் தவிர்த்து, மாதிரியின்றி, மனதில் பதித்திருந்த பல படங்களில் கண்ட சரஸ்வதியின் படத்தை மனக்கண் முன் கொண்டுவந்து வரைந்த ஓவியம் என்பதால் என் மனதிற்கு நிறைவு தந்த ஓவியங்களில் ஒன்று.
மின்பலகையில் ‘ஸ்கெட்ச் புக் எக்ஸ்ப்ரெஸ்’ (SketchBook Express apps for Tablets) என்ற ஓவியம் வரையும் மென்பொருள் கொண்டு என் முதல் முயற்சியாக உருவாக்கிய எண்ணிம கெளதம புத்தர் ஓவியம்.
நடுவுநிலைமை என்பது உயர்வாழ்வின் கொள்கை, கோட்பாடு. இருவேறு நிலையினதாக இயங்குவதே உலகத்தின் பெருவழக்கு. பல சமயங்களில் பன்முக நிலையில்கூட உலகியல் நிகழும். இந்த நிலைகளில் தன்னலம், சார்பு நிலைகள் கருதி ஒருபக்கம் சார்ந்து விடுதல் கூடாது.
எல்லாக் கருத்துக்களையும், எல்லா நிலைப்பாடுகளையும் அறிவார்ந்த நிலையிலும் பொதுப் பயன்பாட்டு நிலையிலும் தீர ஆய்வு செய்து, ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றையதைத் துணிவுடன் தள்ள வேண்டும். அநீதிக்கும் நீதிக்கும் இடையில் நடுவுநிலையில் நிற்றல் என்பது கூடாது. நன்மையைச் சார்ந்து இராத நடுவு நிலைமை தீமையாகும்.
இன்றைய நமது சமுதாயத்தின் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கினால் அநியாயங்களே நியாயங்களாகிக் கொண்டு வருகின்றன. இன்றைய சமுதாய அமைப்பில் விருப்பு வெறுப்பு உணர்வுகள் (இராகதுவேஷங்கள்) நிறைந்துள்ளன.
நாம் தெரிந்தோ, தெரியாமலோ விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி; சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகு சூழ்நிலையில் நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் அறிந்தறிய வேண்டிய ஒன்று.
ஒரு கருத்து அல்லது ஒரு நடைமுறை சரி அல்லது தவறு என்று ஆய்வில்லாமல் முடிவுக்கு வரக்கூடாது. ஆய்வு நிலையில் ஆய்வுக்குரிய செய்திகள் பாலும் ஆய்வுக்குரிய செய்திக்குரியர்பாலும் நிறை நலம் சார்ந்த நம்பிக்கை இருத்தல் வேண்டும். மதிப்புணர்வு இருத்தல் வேண்டும். அதே போழ்து எல்லை கடந்த சார்பு நிலையும் ஆகாது.
பழங்காலத்தில் வணிகர்கள் பொருளை எடை போடும் முன் எடைப்போடப் பயன்படும் துலாக்கோலை (தராசை) முதலில் எடுத்துத் துலாக்கோலைச் சமநிலையில் காட்டுவர்; பின் எடை போடுவர். அதுபோல முதலில் அனைவரும் ஒத்த கருத்தினர் என்ற சமநிலை உணர்வு தேவை. இன்று நம்முடைய வாழ்க்கையில் துறைதோறும் நடுவு நிலை முறை பிறழ்ந்து கிடக்கிறது. அரசியலில், சொல்லும் கருத்துக்கள் ஆராயப்படாமல் நபர்கள் ஆராயப்படுகின்றனர்.
“சமன்செய்து”, என்றார் திருவள்ளுவர். அதாவது இயல்பாகச் செய்யும் மனப்போக்கு இல்லை. வாழ்வியல் இல்லை என்பது தெளிவு. இந்தப் பூவுலகை மலைகள், கடல்கள் பிரிதிருக்கும் பிரிவுகளை விடக் கோடிக்கணக்கான பிரிவுகளை மனிதன் படைத்திருக்கின்றான். மனிதன் படைத்த பேதா பேதங்கள் – பிரிவுகள் ஆகியன பெற்றெடுத்த நச்சுப் பேய்கள்தானே ‘சுவர்’ ‘காவல்’ ‘வேலி’ ஆகியன. இவற்றிலிருந்து மனிதகுலம் என்று மீளும்? சீர்தூக்கும் கோல் என்றார்.
ஆம்! ஆய்வில் கூடச் சீர்மை பார்த்தலே நோக்கம். தீமை தூக்குவது இல்லை. தீமை தெரியாது! கண்ணிற்குப் படாது! ஆதலால், “கோடாமை” என்றார். ஆம்! மனிதர்கள் அவசரமாகக் கட்சி கட்டிக்கொண்டு, நியாயங்களைப் பார்க்காமல் ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறார்கள். இது மரபன்று. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நியாயத்தின்பால் நிற்காமல் சாய்ந்துவிடக் கூடாது. இத்தகு வாழ்க்கையே மக்களாட்சி முறையை வளர்க்கும்: அறநெறியை வளர்க்கும்.
29. நல்லன எடுத்துக் கூறி நட்பினைத் தோற்றுவிப்பீர்!
இயற்கையின் நியதி ஒன்றாக வாழ்தல்; ஒருமை நலத்துடன் வாழ்தல். வேறுபட்டவெல்லாம் ஒன்றுபட்ட நிலையிலேயே உலகம் இயங்குகிறது, உலகியற்கையில் காணப்பெறும் வேறுபாடுகள் ஒருமை நிலைக்கு ஈர்க்கும் ஆற்றலுக்கு இசைந்த வேறுபாடுகளேயாம்.
மானுடம் கூடிவாழப் பிறந்தது. ஆனால் அது கூடி வாழ்ந்த காலம் எது? எங்கே என்ற விவரம் அறியப்புகின் விடை எளிதில் கிடைக்காது. இந்த உலகில் மானுடம் சேர்ந்து வாழ்ந்ததை விடக் கலகப்போர் செய்து கொண்டு அழிந்த செய்திகளே வரலாற்றுப் புத்தக ஏட்டில் ஆயிரக் கணக்கான பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. ஏன் இந்த அவலம்? மொழி, சமயம் பெற்றுங்கூட ஒருமையைக் கட்டிக் காப்பாற்ற முடியவில்லை.
ஒருவரிடம் ஒருவர், இல்லாத ஒருவரைப் பற்றிக் குற்றங் குறைகளைக் கூறுதல், வெறுப்பை வளர்க்கும்; பகைமையை வளர்க்கும்; பிரிவை உண்டாக்கும். ‘மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாய் திறந்தால் நீ உன் காதைப் பொத்திக்கொள்; கேட்காதே!” என்றார் குவாரல்ஸ்.
ஒருவர் ஒருவருக்குச் செய்யக்கூடிய உதவி என்பது அவர் பலரோடு நட்பாக இருப்பதற்குரிய வாயில்களை அமைத்துத் தருவதேயாம். இருவருக்கிடையில் நட்பை உருவாக்கும் பணிக்கு ஈடான அறம் வேறொன்றும் இல்லை. சிவபெருமான், சேரமான் பெருமாளுக்கும், சுந்தரருக்கும் நட்புண்டாக்கிய வரலாற்றை அறிக. ஒருவருடைய சிறந்த அம்சங்களை எடுத்துக் கூறி அறிமுகப்படுத்தப் பழகுவதற்குரிய வாயில்களை உருவாக்க வேண்டும். நல்ல நட்பைத் தேடிக்கொடுத்து விட்டால்கூட, திருந்த வேண்டியவர் இயல்பாகவே திருந்திவிடுவார்.
ஆதலால், மகிழ்ச்சி நிறைந்த நட்புறவை உண்டாகி வளர்த்தலே அறம். இந்த இனிய அறத்தை அறிந்து செய்ய இயலாதார் குற்றங் குறைகளை எடுத்துக்கூறி நண்பர்களைப் பிரிப்பர்; சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்குவர். இத்தகையோர் நம்மை நாடி வந்து வாய் திறந்தால் நமது காதைப் பொத்திக் கொள்வது நல்லது. புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவர்கள். வல்லவர்கள், நமக்கு நல்லன செய்வது போலக் கூறுவார்கள்; சாத்திர ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவர். காற்று இடைப்புகாது பழகிய நட்பு உடையாரைக்கூடப் பிரித்து விடுவர். எனவே விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
உலகில் உயர்ந்தது நட்பே! உலகில் உயர்ந்த அறம் ஒன்றி நின்று பழகுதலே! ஒன்றுதலுக்கு ஈடான அறம் இல்லை! இந்த அறம் நிகழ்ந்தாலே சமுதாயத்தில் திருத்தங்களும்கூடத் தோன்றும்; தீமைகள் சாயும்; நன்மைகள் பெருகும்.
ஆதலால், ஒருவரைப்பற்றி நன்றாக மட்டும் பேசக் கற்றுக் கொள்க! ஒருவரைப் பற்றிப் பிறிதொருவரிடம் நல்லன எடுத்துக்கூறி நட்பினைத் தோற்றுவித்து வளர்க்க முயல்வீர்! இதுவே வாழும் வழி!
“உயிர்ப்புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயிரினத்தின் பரவல் நிலையை பற்றி ஆய்வதாகும். இத்துறையின் முதன்மைக் குறிக்கோள் யாதெனில், ஓர் உயிரினம் எங்கெங்கெல்லாம் வாழ்கின்றது மற்றும் எத்தனை எண்ணிக்கை உள்ளது என்று அறிவது” (விளக்கம் உதவி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா).
புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்?
உயிர்ப்புவியியலின் முன்னோடிகளில் (one of the founders of Biogeography) ஒருவர் என்று கருதப்படுபவர் ‘அலெக்ஸாண்டர் வோன் ஹம்போல்ட்’ (Alexander von Humboldt / Friedrich Wilhelm Heinrich Alexander von Humboldt – 1769-1859). இன்றைய அறிவியல் உலகம் இவரையும் இவரது பங்களிப்பையும் மறந்துவிட்டது, காலத்தால் வரலாற்றில் இருந்து மறைந்துபோன ஒரு அறிவியல் அறிஞராக இவர் பெயர் பெரும்பாலும் மறக்கப்பட்டும்விட்டது. ஆனால் இவர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாவில் இவர் சிறந்த அறிவாளி எனப் பெயர் பெற்று புகழின் முன்னணியில் இருந்தார். உலகில் பற்பல இடங்களுக்கு, மற்ற புகழ் வாய்ந்தவர்களையும் விட இவர் பெயர்தான் அதிகம் சூட்டப்பட்டுள்ளது. பல தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னால் அதிபதி, ‘தாமஸ் ஜெஃபர்சன்’ (Thomas Jefferson, the third President of the United States) “நான் சந்தித்த அறிவியல் அறிஞர்களில் மிக முக்கியமானவர் ஹம்போல்ட்” என்று குறிப்பிட்டுள்ளார். வெனிசுலாவின் இராணுவ அதிகாரியான ‘சைமன் போலிவர்’ (Simón Bolívar, Venezuelan military leader) “தென்னமெரிக்கக் கண்டத்தை முதலில் கண்டறிந்தவர் ஹம்போல்ட்”தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது புகழைக் கண்டு நெப்போலியன் இவர் மீது பொறாமை கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஹம்போல்ட்டின் நூறாவது பிறந்த நாளன்று அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் முதல் பக்க செய்திகள் அனைத்தும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டு இவர் புகழ் பாடின. அறிவுமேதைகள் பலர் குழுமிய பாரிஸ் (center of intellectual life in Paris) நகரிலும் இவர் புகழ் பெற்றிருந்தார். நான்கைந்து மொழிகளில் நன்கு உரையாடவும், அருமையாக ஓவியங்கள் வரையவும், அத்துடன் அனைவருடன் இசைந்து நன்கு பழகவும் அறிந்து வைத்திருந்தார்.
தனது அறிவியல் பயணத்தைப் பற்றி ‘காஸ்மோஸ்’ (Cosmos) என்ற நூலாக ஹம்போல்ட் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக எழுதிய முப்பது நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஆங்கிலத்தில் மூன்று முறை இவையாவும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது நூல்கள் பல இளம் அறிவியல் அறிஞர்களைத் தோற்றுவிக்க உதவியது, குறிப்பாக, பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிமுகப் படுத்திய ‘சார்லஸ் டார்வின்’ (Charles Darwin) என்ற உயிரியல் மேதையை இவரது எழுத்துக்கள் ஊக்குவித்தது.
“I am at present fit only to read Humboldt; he like another sun illuminates everything I behold” ― Charles Darwin
என்று தம் இளவயதில் தான் வழிகாட்டியாகக் கொண்ட ஹம்போல்ட்டைப் பற்றி அவரது பேனா/அஞ்சல் நண்பரான டார்வின் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். டார்வின் தனது அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த ‘உயிரினங்களின் தோற்றம்’ (Origin of Species) என்ற நூலை வெளியிட்ட காலத்தில் ஹம்போல்ட் புகழின் உச்சியில் இருந்தவர். உலக வரலாற்றிலேயே சிறந்த அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சிறந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டவர். ஆனாலும் காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சிக்கு இவர் அளித்த பங்களிப்பு மறக்கப்பட்டது. மிகுந்த புகழ் வாய்ந்த ஒருவர் வரலாற்றில் மறக்கப்பட்டது மிகவும் விந்தையானதுதான்.
வாழ்க்கைக் குறிப்பு:
ஜெர்மனி நாட்டின் அறிவியல் அறிஞரான இவர் 1769 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள், பெர்லின் நகரில் அலெக்ஸாண்டர் ஜார்ஜ் வோன் ஹம்போல்ட் என்ற அரசு அதிகாரிக்கும், மேரி எலிசபெத் என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக, ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அறிவியியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது உடலில் ஏற்பட்ட புண்ணில் மின்முனைகளைப் (electrode) பொருத்தி மின்சாரத்தைச் செலுத்தி உடலில் ஏற்படும் மாறுதலை ஆராயும் அளவிற்கு அறிவியலில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.
Alexander Von Humboldt
அக்கால ஐரோப்பிய அறிவியல் அறிஞர்கள் கொண்ட ‘அறிவியல் தத்துவங்கள்’ (Philosophy of Science) என்ற கருத்துக் கோட்பாட்டின்வழி, அறிவியல் அறிஞராக வேண்டுமானால் புத்தகங்களில் இருந்தும், நூலகங்களில் இருந்தும், ஆய்வுக்கூடங்களில் இருந்தும் விடுபட்டு, உலகைச் சுற்றி வந்து ஆய்வு நடத்தி, இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற முறையைப் பின்பற்ற விரும்பினார். நிலக்கரி சுரங்கம், சுரங்க ஆய்வு போன்றவற்றைத் தானாகவே தன்னார்வமுடன் பயின்று இக்காலத்தில் ‘நிலவியல்’ (Geology) என்று அழைக்கப்படும் துறையின் நிலவியலாளர் /ஜியாலஜிஸ்ட் (Geologist) ஆகப் பணிபுரிந்தார். ஆனால் அவர் காலத்தில், அறிவியல் பல துறைகளாக உயிரியல், நிலவியல், தாவரவியல் (Biology, Geology, Botany) என்றெல்லாம் தனித்தனியாகப் பலப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கவில்லை. இவரைப் போன்ற முன்னோடியான அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பே பின்னர் அறிவியலில் பல பிரிவுகள் ஏற்படக் காரணமாக இருந்தது. மாவீரன் நெப்போலியனுடன் எகிப்து நாட்டிற்கும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கும் சென்று ஆராய்ச்சிப் பயணம் செய்ய நினைத்த இவர் பயணம் தடைபட்டுப் போனது.
பெற்றோர்கள் மறைவிற்குப் பிறகு இவரது இளம் வயதிலேயே பரம்பரைச் சொத்து இவர் கைவசமானது. இதானால் பயணம் செய்ய பிறரின் நிதியுதவி இவருக்குத் தேவைப் படவில்லை. அறிவியல் ஆராய்ச்சியை தொடர தனது சொந்த செலவிலேயே ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டார். இவருடன் பிரெஞ்சு தாவரவியலார் ‘அய்மி பான்பிளான்ட்’ (Aimé Bonpland, French Botanist) என்பவரும் உடன் சென்றார். இவர்கள் சென்ற காலத்தில் உலக அரசியல் சூழ்நிலையும் இவர்களின் பயணத்திற்குச் சாதகமாக அமைந்தது. ஸ்பெயின் நாட்டின் மன்னர் தென்னமெரிக்கக் கண்டத்தை தங்கள் நாட்டின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர எண்ணினார். ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கத்தால் அக்காலத்தில் தென்னமெரிக்கா ‘இலத்தீன் அமெரிக்கா’ அல்லது ‘ஸ்பானிஷ் அமெரிக்கா’ என்றும் பரவலாக அழைக்கப் பட்டு வந்தது. தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் இருப்பதாகக் கருதப்பட்ட தங்கச் சுரங்கத்தை கைப்பற்றுவது, தென்னமெரிக்காவின் செல்வத்தைச் சுரண்டுவது அக்கால ஸ்பெயின் நாட்டின் குறிக்கோளாக இருந்தது. இக்கொள்கையை நிறைவேற்றும் பொருட்டு ஹம்போல்ட் பயணத்திற்கு ஸ்பெயின் மன்னர் தடையின்றி தாராளமாக அனுமதி அளித்தார். அக்காலத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த(?) கொலம்பஸ் போன்று ஹம்போல்ட் ‘இரண்டாவது கொலம்பஸ்’ என்ற சிறப்புத் தகுதியை அடைந்திருந்தார்.
அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் (1799-1804):
ஸ்பெயின் நாட்டின் சார்பாக ஹம்போல்ட் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பயணதிற்கான காலம் சரியாக ஐந்து ஆண்டுகளும் மூன்று மாதங்களும் ஆகும். இதைத் தொடர்ந்து உருவாகிய ஆராய்சி முப்பது நூல்களாக வெளியிடப்பட்டன. ஏறத்தாழ 24,000 மைல்கள் கொண்டது இப்பயணம், அதாவது உலகை ஒருமுறை சுற்றிவரும் தூரம் கொண்டது இப்பயணம். இவரும் இவரது நண்பர் தாவரவியலார் அய்மி பான்பிளான்ட்டும் தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுலா (Venezuela), கொலம்பியா (Colombia), இக்குவேடார் (Ecuador), பெரு (Peru) நாடுகளிலும், மற்றும் மெக்சிகோ (Mexico), கியூபா(Cuba) நாட்டுப் பகுதிகளிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். அவற்றில் மிக முக்கியமான ஆராய்ச்சிகள் பெரு நாடு மற்றும் இக்குவேடார் நாட்டின் பகுதிகளில் உள்ள ‘ஆண்டீஸ் மலை’த்தொடரின் (Andes mountains) பகுதிகளிலும், குறிப்பாக இக்குவேடார் நாட்டின் ‘சிம்பராசோ’ (Mount Chimborazo in Ecuador) என்ற உறங்கும் எரிமலை சிகரத்தின் பகுதியிலும், வெனிசுலா(Venezuela) நாட்டுக் காடுகளிலும், அங்குள்ள ‘ஆர்நிக்கோ’ ஆற்றிலும் (Orinoquia/Orinoco River) மேற்கொள்ளப்பட்டது. ஆர்நிக்கோ ஆற்றின் முழு நீளமும், அதன் 1,700 மைல்கள் தொலைவும் இவர்களால் ஆராயப்பட்டது. இப்பகுதியின் காடுகள் அபாயகரமான விலங்குகளாலும், கொடிய நோய்களாலும் மரணத்தைக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.
அப்பொழுது அக்காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள் உபயோகப்படுத்திய ‘குரேர்’ தாவரம் (Curare plant) கொண்டு உருவாக்கப்படும் நஞ்சு தடவிய அம்பு தயாரிக்கும் முறையை அவர்களிடம் இருந்து அறிந்து கொண்டார். மலேரியா (Malaria) நோய்க்கு மருந்தான குயினின் (quinine) தயாரிக்கப் பயன்படும் சின்கோனா (Cinchona tree bark) மரப்பட்டையைப் பற்றிய தகவலையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் பெரு கடற்கரையை ஒட்டிய பசுஃபிக் கடலில் உள்ள நீரோட்டத்தையும் (Pacific water current), அதனால் பெருவிற்கு கிடைக்கும் மழைப்பொழிவைப் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர் இந்நீரோட்டம் ‘ஹம்போல்ட் நீரோட்டம்’ என்று இவரது பெயராலேயே அழைக்கப் படுகிறது. புதிய வகை மின்சார ஈல் (Electric Eel) மீன் இருப்பதும் இவரால் குறிப்பெடுக்கப்பட்டது. பல விலங்குகளின் தோல்கள், பற்பல பறவைகளின் சிறகுகள், ஏராளமான தாவரங்களின் இலை மற்றும் பூக்கள் என ஒரு பெரிய சேகரிப்பு இப்பகுதியில் ஹம்போல்ட்டிற்குக் கிடைத்தது. பெரு நாட்டின் பகுதியின் ஆண்ட்டீஸ் மலைத்தொடரின் பகுதி இவரால் விரிவாக வரையப்பட்டது.
இக்குவேடார் நாட்டின் பகுதியில் உள்ள ஆண்டீஸ் மலைத்தொடரில் உள்ள சிம்பராசோ மலையின் சிகரத்தின் பல உயரங்களிலும் காற்றழுத்தம் ஹம்போல்ட்டினால் அளக்கப்பட்டது. இவர் பயணக் காலத்தில் சிம்பராசோ சிகரம்தான் உலகின் மிக உயரமான சிகரம் எனக் கருதப்பட்டது. கடலில் தொலைவில் இருந்து காணமுடிந்த இச்சிகரத்தில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை காற்றழுத்தமும் மற்ற பிற அளவுகளும் இவரால் குறிக்கப் பட்டன. ஒவ்வொரு உயரத்திலும் காணப்படும் விலங்குகளும் தாவரங்களும் இவரால் ஆவணப்படுத்தப்பட்டன. உயிரினங்களின் வகையும், அவற்றின் இருப்பும் உயரத்திற்கு ஏற்ப வேறுபடுவதை அப்பொழுது அவர் கண்டுகொண்டார். ஆனால் இவரால் சிகரத்தை அடைய முடியாமல் முயற்சியைக் கைவிட்ட பிறகு எழுபது ஆண்டுகள் கழித்தே ‘எட்வர்ட் வைம்ப்பெர்’ (Edward Whymper, 1886) என்ற ஆங்கிலேயர் ஒருவரால் சிம்பராசோ சிகரத்தை அடைய முடிந்தது. ஆனால் ஹம்போல்ட் வரைந்த விரிவான வரைபடங்களும் அதில் குறிக்கப்பட்ட பற்பல அளவீடுகளும் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the theory of unity of nature) என்ற அவரது கோட்பாட்டிற்கு உறுதுணையான ஆதாரங்களாக விளங்கின.
ஒத்தவெப்பநிலை வரைபடங்கள் (Isotherms):
ஹம்போல்ட்டின் மிக முக்கியப் பங்களிப்பு அவர் உருவாக்கிய ஒத்தவெப்பநிலை (Isotherm) வரைபடங்கள். தனது தென்னமெரிக்க ஆராய்ச்சிப் பயணத்தில் பல அறிவியல் சோதனைக் கருவிகளை ஹம்போல்ட் தன்னுடன் எடுத்துச் சென்றார். பதினான்கு கோவேறு கழுதைகள் பொதி சுமந்து செல்லும் அளவுக்கு பெட்டிப் பெட்டியாகக் கருவிகளை எடுத்துச் சென்றார். அக்கால பிரெஞ்சு நிறுவனகள் சுற்றுச்சூழலை துல்லியமாக அளக்கும் பல்வேறு அறிவியல் உபகரணங்களை வடிவமைத்திருந்தன. ஹம்போல்ட்டும் எதையம் முறையாக அளந்து துல்லியமாகக் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தும் பண்பைக் கொண்டவர். எனவே தான் சென்ற இடங்களின், ஆச்சிஜன், வானின் நீலநிறத்தின் அளவு, காற்றின் வேகம், காற்றழுத்தம் (air pressure), உயரம், வெப்ப நிலை (temperature), நிலத்தின் அமைப்பு (shape of the land), காந்தப்புலத்தின் வலிமை (strength of magnetic field), ஒவ்வொரு இடத்திலும் உள்ள விலங்குகள், தாவரங்கள் அவற்றின் எண்ணிக்கை எனப் பற்பல குறிப்புகளை ஒன்றுவிடாமல் கவனமாகக் குறிப்பெடுத்து தனது வரைபடத்தில் குறித்துக் கொண்டார்.
Isotherms
பிறகு ஒத்த வெப்பநிலை உள்ள இடங்களின் புள்ளிகளை ஒரே கோட்டில் இணைத்தார், இவ்வாறு உருவாக்கிய படங்களுக்கு ‘ஐஸோதெர்ம்’ (Isotherm) வரைபடங்கள் எனப்பெயரிட்டார். இவை வளைந்த கோடுகளை உடைய கோட்டோவிய (contour line maps) வரைபடங்கள். அவ்வாறு ஒத்த இயற்கை தட்ப வெட்ப சூழ்நிலையில் வசிக்கும் உயிரினங்கள் (விலங்குகளும், தாவரங்களும்) யாவும் ஒத்திருப்பதை இக்கோட்டோவிய வரைபடம் தெளிவு படுத்தியது. அதுவரை இந்த அடிப்படைத் தகவலை, வாழுமிடங்களுக்கு ஏற்ப உயிரனங்கள் மாறுபடும் என்ற தொடர்பை (connection with the ‘habitats’ and the species living at that place) அறிவியல் அறிஞர்கள் கவனிக்கத் தவறியிருந்தனர். முதன் முதலில் தரவுகளை அனைவருக்கும் விளங்கும் வண்ணம் வரைபடங்களாக வரைந்து விளக்கியவர் ஹம்போல்ட்தான். அதற்கு முந்தைய நூற்றாண்டுவரை உருவாக்கப்பட்ட ‘டோப்போக்ராஃபிக்’ (topographic maps) என்றழைக்கப்பட்ட நிலவியல் வரைபடங்கள் இதுபோன்ற தகவல்கள் இன்றியே வரையப்பட்டு வந்தன. மேலும் இவர்காலத்தில் அச்சுகூடங்களின் தொழில் நுட்பம் சிறந்த வளர்ச்சியடைந்து இருந்ததால், வரைபடங்களை அதிக அளவில் குறைந்த விலையில் பிரதிகள் எடுப்பதும் சாத்தியாமாயிற்று.
‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature): “Everything Is Interrelated”—Alexander von Humboldt
அறிவியல் தகவல்களை வரைபடக் காட்சி வழியாக (visual-presentation of scientific data as maps, charts and graphs) ஹம்போல்ட் விளக்கிய முறை அறிவியலில் ஒரு திருப்புமுனை. இதனால் இயற்கை சூழலுக்கேற்ப உயிரினங்கள் வாழ்வதும் இடத்திற்கு இடம் அவை வேறுபடுவதும் தெளிவாகியது. நிலப்புவியியலுக்கு இதுவே அடிப்படை என்பதால் இவர் இத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அத்துடன் இந்த பங்களிப்பே சுற்றுச்சூழலியலிலும் (ecology) இவரை முன்னோடியாகக் கருத வைக்கிறது. இயற்கையும், சுற்றுச்சூழலும், உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை (intersconnectedness of all nature, intersconnectedness of geography) அதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப் படவேண்டும் என்பதும், இயற்கையில் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதும் புலனாகிறது. இயற்கையில் பல்வேறு சக்திகள் உள்ளன (forces make up nature). அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன (interrelated forces in nature). அவ்வாறு ஏற்பட்டுள்ள தொடர்பு ஓர் ஒருமைப்பாட்டுடேன் இயங்குவதால் இயற்கை சம நிலையில் இருக்கிறது (balance of forces in nature) என்று ஹம்போல்ட் முடிவிற்கு வந்தார். இதனை ஹம்போல்ட் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature) என்று விளக்கினார்.
ஹம்போல்ட்டின் அறிவியல் பங்களிப்பு:
இவரது அறிவியல் கண்டுபிடிப்புகள், செய்முறைகள், பங்களிப்புகள் தற்கால அறிவியலில் பலதுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேதியியல், பொறியியல், இயற்பியல், மருத்துவம், உயிரியல், கணிதம் போன்ற துறைகள் யாவும் ஏதோ ஒரு விதத்தில் பயனடைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமாகக் கருதப்படுவது, அளவுகளை துல்லியமாகக் குறிப்பிடும் ஒத்தவெப்பநிலை வரைபடங்களும் (Isotherm), இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடும் (the unity of nature) ஹம்போல்ட்டினால் அறிவியல் உலகத்திற்கு காட்டப்பட்டதுதான். இதுவே டார்வினின் உயிரினங்களின் தோற்றம் என்ற கோட்பாட்டிற்கு தாக்கமாக அமைந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
(1) துல்லியமாக வரைபடத்தில் அளவீடுகளைக் குறிப்பது என்பது அறிவியலில் திருப்புமுனையைக் கொண்டுவரும் அளவிற்கு ஒருமிகப்பெரிய மாற்றம் இல்லை எனவும், (2) ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற டார்வினின் கோட்பாடு போல இவரது முப்பது நூல்களிலும் விரவிக் கிடந்த ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ என்ற அறிவியல் தகவல்கள் சுருங்க விளக்கப்படவில்லை எனவும், (3) டார்வினின் கோட்பாடு இவரது கோட்பாட்டின் தகவலை மங்கச் செய்து விட்டது எனவும், இதனாலேயே இவரைப் பற்றிய தகவல்கள் நாளடைவில் மறக்கப் பட்டது எனப் பல காரணங்கள் இவர் புகழ் மங்கியதற்குக் கற்பிக்கப்படுகின்றன.
சிந்தனைக்கு:
இயற்கை சூழலுக்கேற்ப, தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப உயிரினங்கள் வாழ்ந்திருப்பதும் இடத்திற்கு இடம் வேறுபடுவதும் (role of environment on diversity of life) அதனால் உயிர்ப்புவியியலுக்கு ஹம்போல்ட் முன்னோடியாகக் கருதப்படுகிறார் என்ற தகவலையும் நாம் அறிந்து கொள்ளும் வேளையில்; தவறாமல் சிந்தனையில் குறுக்கிடும் ஒரு கேள்வி இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லையா என்பதே.
முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை,
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
(காடுகாண் காதை, 64-66)
என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
அது போலவே சங்கல கால இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு திணைப்புலதிற்கும் சிறப்பான பறவைகளை, விலங்கினங்களை, மரங்களை, பூக்களை என விலங்கின, தாவரக் குறிப்புகள் யாவற்றையும் தருவது இங்கு தேவையற்றது என்ற காரணத்தினால் கீழ்கண்ட சுருக்கமானப் பட்டியல் கொடுக்கப் பட்டுள்ளது. காப்புரிமை பெறாத, பலரும் அறிந்த எளிய உண்மைகள் மீண்டும் மேலைநாட்டினர் வசமானதாகத் தோன்றுவதை ஏனோத் தவிர்க்க இயலவில்லை.
இந்தத் திருக்குறள் சொற்பொருள் நிறைந்தது. பொருளில் தத்துவமும் அறநெறிக் கோட்பாடும் பொதிந்த திருக்குறள் இது!
‘நடுவுநிலை’ என்பது ஓர் உயர்ந்த வாழ்வியல் தத்துவம்; கொள்கை; கோட்பாடு! நியாயம்-அநியாயம், நீதி-அநீதி ஆகியவற்றுக்கிடையில் யார் பக்கமும் சாராது நிற்றல் என்பது பொருளல்ல. இங்ஙனம் நிற்றல், அதாவது அநீதிக்கும் நீதிக்கும் இடையே நடுநிலையாக நிற்றல் என்பது அறியாமை; கோழைத்தனம்! இல்லை, அநீதிக்கே துணை போவது போலத்தான்!
ஆதலால் அநீதி-நீதி இவற்றுக்கிடையே மோதல் வந்தால் தற்சார்பு, அச்சம், அவா ஆகியவற்றின் காரணமாக எது நீதியெனத் தெரிந்து கூறாது, சார்ந்து நில்லாது விடுதல் நடுவுநிலையன்று. அதுபோலவே பொருள், உழைப்பால் படைக்கப்படுவது; உரிமையால் பேணப்படுவது.
உழைப்பவர் படைத்த பொருளை உழைக்காமல் அடைய நினைப்பது, உரிமை கொண்டாடுவது நடுவு நிலைமையுடைய சார்பல்ல. உழைப்பவர்க்கே பொருள் உரிமை! உண்ணும் உரிமை!
“நன்பொருள்” – பரிசுச் சீட்டில் கிடைத்த பொருளல்ல; பிறர் பங்குப் பொருள் அல்ல; சலத்தால் செய்த பொருளும் அல்ல. உழைப்பில் உருவாய பொருள். அதனால் ‘நன்பொருள்’ என்றார்.
ஒருவருடைய உழைப்பின் பொருளை, ஒருவர் திருடிக் கொண்டால் அந்தக் குடும்பம் வளர்ந்து விடாது. ஏன்; பொருளைவிடப் பொருளைப் படைக்கும் உழைபாற்றல் விலை மதிப்புடையது, மாறாத் தன்மையுடையது; ஊற்று வளம் நிகர்த்தது. சுரண்டுதல் மூலம் பிறர் பொருள் கிடைப்பின் வாழ்க்கையின் தேவைக்குக் கிடைத்து விடுவதால் உழைக்கும் உணர்வு தலையெடுக்காது.
அதனால் உழைப்பாற்றல் மிக்க புலன்கள், பொறிகள் காலப்போக்கில் தம்முடைய உழைக்கும் தகுதியை இழக்கும். நோய் கொள்முதல் ஆகும்! ஏமாற்றப்படுபவன் விழித்துக் கொண்டால் சுரண்டவும் இயலாமல் போய்விடும்! அப்புறம்?
வாழ்க்கை திண்டாட்டம்தான்! அதனால், வாழ்வு கெடும்! உழைக்கும் இயல்பின்மையால் குற்றங்கள் செய்து வாழும் நிலை உருவாகும். அதனால் திறமை, ஒழுக்கம், பண்பாடு வளர உழைப்பு தேவை! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலே வாழ்வு! உழைக்கும் வாழ்வே அறவாழ்வு! நலவாழ்வு!
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
பிறருடைய செல்வம், புகழ் முதலியன கண்டு மகிழ முடியாத குணம் பொறாமை எனப்பெறும். பொறாமையைத் திருக்குறள் அழுக்காறு என்று கூறுகிறது. அதாவது அழுக்கு நிறைந்த வழி. நமது நாட்டில் அறிந்தும் அறியாமலும் நல்லவைகளின் அடிப்படையில் அழுக்காறு கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.
ஆயினும் அழுக்காறு கொள்ளுதல் எந்த நிலையிலும் தீதே. அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. அழுக்காறு நெஞ்சமுடையார் நல்லவைகளையும் கூடத்தாம் பெற முயற்சி செய்ய மாட்டார்கள். நல்லவைகளைப் பெற்றிருப்பவர்கள் மாட்டு அழுக்காறு கொண்டு அவர்களுக்குக் குற்றங் குறைகளைக் கற்பித்துப் புழுக்கங் கொள்வர்! பழி தூற்றுவர்.
அதனால் அழுகாறுடையார் மாட்டு உயர்வு தோன்றவும் இயலாது. உலக மகாகவி ஷேக்ஸ்பியர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்! எதற்கு? அழுக்காற்றிடம் சிக்கிச் சீரழியாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக!
“O Beware My Lord of Jealousy” என்று கூறுகிறார். “அழுக்காறு நெஞ்சம் பெறுதல் சாதலுக்கு நேரானது” என்பார் காட்டன். “Envy will sting it self to death” என்பது அவர் கூற்று. அழுக்காறு உடையார் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சான்றாக ஒரு முடவன் (நொண்டி) தன்னுடைய காலைப் பழுது நீக்கிச் சீரமைத்துக் கொள்ள விரும்புவதில்லை, முயற்சி செய்வதில்லை. அடுத்தவன் கால் முடமாகி விட்டால் தான் நடக்க இயலும் என்று நினைப்பான். இதற்கே அழுக்காறு என்று பெயர்.
தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. “தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபசகுனமாக வேண்டும் என்று நினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்” என்பர். இத்தகைய அழுக்காறு தீமைகளின் பிறப்பிடம்.
நற்குணம் இம்மியும் இல்லாத இழி பிறவிகளே அழுக்காறுடையராய் இருப்பர். அழுக்காற்றினைத் திருக்குறள் ‘பாவி’ என்றே திட்டுகிறது. இன்று எங்கும் பரவிக் கிடப்பது அழுக்காறேயாம்.
அழுக்காறில்லாத நெஞ்சம் பெறுதல் நல்லொழுக்கத்தின் இயல்பாகும். அழுக்காற்றினை எங்கனம் அகற்றுவது? அழுக்காறு வந்தபின் அகற்றுவது கடினம். அழுக்காறு வராமல் பாதுகாத்துக் கொள்வதே நல்லது. வருமுன் பாதுகாப்பு வேண்டும்.
பிறருடைய செல்வத்தை, செல்வாக்கைக் கண்டால், கேட்டால் மகிழும் இயல்பினைப் பெறுதல் வேண்டும். மகிழ்ந்தால் மட்டும் போதாது. அவர்களுடைய செல்வம், செல்வாக்கைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள நாம் துணையாக இருக்க வேண்டும்.
அதாவது, மற்றவர்களுடைய செல்வம், செல்வாக்குகளைக் கண்டபொழுது மகிழ்ச்சியடையும் உள்ளத்தினைப் பெறுதல் வேண்டும். பாராட்டுகின்ற குணம் பெற்றிருத்தல் வேண்டும். அப்போதுதான் அழுக்காறு நம்மைத் தீண்டாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும்.
எப்போதும் செல்வம், செல்வாக்கில் தம்மில் உயர்ந்திருப்பாரை நோக்கி அண்ணாந்து பார்க்கக் கூடாது. அதற்கு மாறாகத் தம்மில் கீழிருப்பாரை எண்ணி அமைதி பெறும் இயல்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும், இத்தகைய பழக்கங்களில் அழுக்காறு வந்து பற்றாது.
அழுக்காறு தீது! அழுக்காற்றினின்று விலகுக! முற்றிலும் விலகுக! பிறர் வாழ்வு நலன்கள் கண்டு மகிழ்க! ஊன் உருக உளம் உருகப் பாராட்டுக! அவற்றை இழக்காது துய்க்கும் வண்ணம் பாதுகாத்திடுக, பெறாததைப் பெற முயலுக! பெற்றவர்மீது புழுக்கம் கொள்ளற்க! உளம் குளிரப் பாராட்டுக! வளரும் வழி இது! அழுக்காறு இல்லாத வாழ்வே சிறப்புடைய வாழ்வு.