ஒரு ஊதாப்பூவின் கண்ணுறக்கம்

2

தேமொழி

புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளரின் இயற்பெயர் ஸ்ரீ வேணுகோபாலன். இவர் 1000 த்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 300 க்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியவர்.

இவர் கதைகளில் அமைதியில்லா என் மனமே, துள்ளுவதோ இளமை, சிகப்பு ரோஜா கதைகள், என் பெயர் கமலா, காதல் ஒரு கனவு, தாரா… தாரா… தாரா… திருவரங்கன் உலா, மதுரா விஜயம், சத்ய சாய் போன்ற பல நூல்கள் குறிப்பிடத் தக்கன. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது முதல் கதை இவரது 18 ஆவது வயதில் 1949 இல் தினமணிக்கதிர் பத்திரிக்கையில் வெளியானது.

இவரது கதைகள் அறிவியல், சமூகம், துப்பறியும் கதைகள் எனப் பலப் பரிமாணங்களில் வெளிவந்துள்ளன. கதைகளைத் தவிர்த்து தலபுராணங்கள், தொலைகாட்சித் தொடர்கள், நாடகங்கள், ஆன்மீக வரலாற்று நூல்கள் எனப் பல்துறைகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவரது புதினங்கள் பல பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவர் துப்பறியும் கதைகளைத் தனது புனை பெயரிலும், தலபுராணக் கட்டுரைகளைத் தனது இயற்பெயரிலும் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ வேணுகோபாலனாக ஆன்மீக, வரலாற்றுப் புதினங்கள் மற்றும் சமுதாயக் கதைகளை எழுதியவரும், புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வணிக நோக்கில் புகழ்பெற்ற இளமைத் துள்ளல் கதைகளை எழுதியவரும் இவரே என்பது இவரது வேறுபட்ட எழுத்துத் திறமையைக் காண்பிக்கும். உண்மைக் கதைகளை எழுதப் புனைபெயரைத் தேர்ந்தெடுததாக இவர்  குறிப்பிட்டுள்ளார். பதினைத்து ஆண்டுகள் எழுத்தாளர் வாழ்க்கையில் அடையாதப் புகழை ஆறே வாரங்களில் இவருக்குப் புனைபெயர் பெற்றுத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தபால் தலைமையகத்தில் வெளிநாட்டுத் தபால் பிரிவில் பணியாற்றிய இவரால் “ஊதாப்பூ” என்ற மாதாந்திர புதின பத்திரிக்கை ஒன்றும் சொந்தமாகத் துவங்கப்பட்டு, குறுகிய காலத்தில் 50,000 பிரதிகள் வரை விற்பனையை எட்டினாலும், நடைமுறையில் எதிர்கொள்ளப்பட்ட மேலாண்மை தொடர்பான குறைபாடுகள் எழவே நிறுத்தப்பட்டது. ஆன்மிகம் என்ற பத்திரிக்கையையும் ஆசிரியராக இருந்து நடத்தி வந்துள்ளார்.

இவரது எழுதாற்றலுக்காகப் பரிசுகள் பலவும் பெற்றவர். மதுரகவி நாடகத்திற்காக இந்திய அரசாங்க விருது, சிறந்த சிறுகதைக்காக கல்கி பத்திரிக்கை பரிசு, சிறந்த எழுத்தாளருக்கான சாவி பத்தாண்டு விழா விருது, ராணி வெள்ளிவிழா விருது மற்றும் பாலு ஜுவெல்லேர்ஸ் விருது, சிறந்த திரைக்கதைக்காக சென்னை திரைப்பட ரசிகர்கள் விருது, அமுதசுரபி நாவல் போட்டி பரிசு எனப் பலப் பரிசுகளைப் பெற்றவர் இவர்.

இவரது “ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது,” “நந்தா என் நிலா,” மற்றும் “அந்த ஜூன் 16 ஆம் நாள்”ஆகிய கதைகள் திரைபடங்களாக வெளிவந்துள்ளன. அந்த ஜூன் 16 ஆம் நாள் திரைக்கதை வசனத்தையும் எழுதியுள்ளார். 2011 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கத் தேர்வாகிய கலை இயக்குனர் பிரபாகரன் இயக்கியுள்ள ‘அம்மா’ என்னும் குறும்படம் புஷ்பா தங்கதுரை எழுதிய சிறுகதையை மையமாக‌க் கொண்டு உருவாக்கப் பட்டது. இவரது ‘பெண் ஒரு ஜீவநதி, ‘நான் குடும்பத்து ஸ்டார்,’ ‘ஊரார்’ கதைகள் தொலைகாட்சித் தொடர்களாக வெளிவந்தன.

நூல்கள் சேகரிப்பில் ஆர்வமுள்ள இவர் பல்லாயிரக் கணக்கான நூல்கள் நிரம்பிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி இருந்தார். உடல்நலமற்று ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும், பிறகு தனியார் மருத்துவமனை ஒன்றிலும் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா தங்கதுரை அவர்கள் தனது 82 வது வயதில், நவம்பர் 10, 2013 அன்று உயிர் நீத்தார்.

பின் குறிப்பு: எனது சிறுவயதில், இவர் கதைகள் சிறுவயதினர் படிக்கத் தகுதியற்றது என்று என் அம்மாவினால் தடை உத்தரவு போடப்பட்டது . இது இவரது எழுத்திற்கு அக்காலத்தில் இருந்த வரவேற்பைக் காட்டும்.

 

படங்கள் உதவி:
https://plus.google.com/photos/107223873489690009994/albums/5643981174513298545?banner=pwa

http://www.kittz.info/2013/04/blog-post.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஒரு ஊதாப்பூவின் கண்ணுறக்கம்

  1. புஷ்பா தங்கதுரை மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; அவர், நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

  2. உதிர்ந்தது கண் சிமிட்டிய ஊதாப்பூ, ஆழ்ந்த இரங்கல். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *