வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16

4

தேமொழி

சகலகலா வாணி

 

sagalakalaa vani

 

சகலகலா வாணியே 
ராகம்:  கேதாரம்
தாளம் : ஆதி
பாடல்: சுத்தானந்த பாரதி

பல்லவி:
சகல கலா வாணியே- சரணம் தாயே
சங்கீத வீணா பாணியே
(சகலகலா வாணியே)

அனுபல்லவி:
இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
எங்களுக் கருள்வாய்- மங்களச் செல்வியே
(சகலகலா வாணியே)

சரணம்:
அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்
(சகலகலா வாணியே)

முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
முப்பெரும்  அறிவுடன் இப்பொது விளங்கிடும்
புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
(சகலகலா வாணியே)

 

சரசவாணியே! சகலகலாவல்லியே!

வீணையேந்திய சகலகலா வாணியே
வேதங்களின் விழுப்பொருள் நாயகியே
வெண்டாமரையிலுறையும் அன்னையே
வேண்டுவதெல்லாம் அறிவோய் நீயே!

நூல்வடிவாய் நின்ற நாயகியே
பால்வடியும் கவிமாலையானவளே
கல்மனமும் கனிந்துருகும் காதலாலே
சொல்வனமாய் திகழும் உன்னருளாலே!
– பவள சங்கரி

கமலமே  உந்தன் வெண்ணிறமே
அமரவே  என்  உள்ளமே
உயருமே  உவகை கொள்ளுமே!

வீணையே உன் வடிவு விந்தையே
ஆணையாய்  உன் ஒலியிலே
இருப்பவள் தன்னையே
அருள்தரச்சொல்லுவையே!
– ஷைலஜா

வெள்ளைக் கலையுடுத்தி வீணையுடன் வீற்றிருப்பாய்
வெல்லும் திறமளித்து வீழ்ச்சியில்லா வாழ்வளிப்பாய்
வெம்மை நிறைந்தொளிரும் பொன்சுடரே சாரதையே
வேண்டும் வரம் பெறவே கரம் குவித்தோம் பதமருள்வாய்

வாணி நாமகளே பாரதியே பாமகளே
வாக்கின் எழிலரசி  வணங்குகிறோம் கலைமகளே
வேத நாதன் தொழும் ஞானத் திருமகளே
வெற்றி முரசொலிக்க‌  விரைவாய் வந்தருள்வாய்
– பார்வதி இராமச்சந்திரன்

நான்முகன் நாயகியே வேதவல்லி உன்னை
நாத மழையில் நித்தம் நனைத்திடுவேன்
நாயகன் மனம்மகிழ் நாதஸ்வரூபிணி

அருள்வாய் வரங்கள் தயங்காது நீயினி
பார் முழுதும் உன்னை பூஜிக்கும் நாளிது
விஜய தசமியிலே வேண்டிடும் சேயிது
– ஜெயஸ்ரீ

 

பாடல் வரிகளை வழங்கிய சுத்தானந்த பாரதிக்கும், எனது தோழியருக்கும் நன்றி.

படத்தைப் பற்றியக் குறிப்பு:
சரியாக கால் நூற்றாண்டிற்கு முன் வரைந்த கோட்டோவியம் இது.  மாசுபடிந்து, களையிழந்து இருந்த படத்தை ஒளிவருடி, எண்ணிம வடிவில் கணினியின் உள்ளிழுத்து, பிரகாசத்தை அதிகரித்து, குறைகளை வெளிறச் செய்து, பிரதி எடுத்து, வரிகளை மீண்டும் செப்பனிட்ட படம். பெரும்பாலும் மாதிரி பார்த்து வரையும் என் பழக்கத்தைத் தவிர்த்து, மாதிரியின்றி, மனதில் பதித்திருந்த பல படங்களில் கண்ட சரஸ்வதியின்  படத்தை மனக்கண் முன் கொண்டுவந்து வரைந்த ஓவியம் என்பதால் என் மனதிற்கு நிறைவு தந்த ஓவியங்களில் ஒன்று.

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16

 1. கவிதைகளும் ஓவியமும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. வாழ்த்துக்கள்.

 2. பாரதி(சுத்தானந்த)யுடன்
  பாவையரின் பாட்டோவியமும்,
  தேமொழியின்
  கோட்டோவியமும்
  நல்ல நவராத்திரி ஸ்பெஷல்…!

 3. சகலகலா வாணி
  சகலகலா வாணிகள் – பாராட்டுகள்.

 4. ஓவியத்தைப் பாராட்டி ஊக்கமளித்த திரு.செண்பக ஜெகதீசன்அவர்களுக்கும்,தோழர்கள் சச்சிதானந்தம் மற்றும் தனுசு ஆகியோருக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

  அன்புடன்
  …..தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *