என்ன செய்தியைச் சொல்கின்றன அந்த முகங்கள்?
எஸ்.வி. வேணுகோபாலன்

News_45799

அந்த முகங்களை நாளிதழில் பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது. புகைப்படத்தின்கீழ் எந்தக் குறிப்பும் போடாமல் இருந்திருந்தால் எந்த மாதிரியும் புரிந்து கொள்ளலாம் அவர்களை. எதையோ பறிகொடுத்த முகம். யாரையோ இழந்துவிட்ட முகம். எங்கோ தோற்றுப்போய் வந்து நிற்கும் முகம். பசி அல்லது பட்டினி அல்லது களைப்பு. ஓயாத ஒரு வேலையின் களைப்பு.

அதிகபட்சம், இரண்டு நாள் உறக்கமற்ற இரவுகளைக் கடந்தது போன்ற களைப்பை மீறி, ஒரு படுகொலையைச் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கும் எந்தச் சுவடும் அதில் தென்படவில்லை. கடந்த காலத்தைப் பற்றியோ, எதிர்காலம் குறித்தோ எந்தச் சிந்தனையும் இல்லாத அந்த முகங்களில் நிகழ்கால வாழ்க்கையை எப்படியாவது அல்லது எப்படியேனும் வாழ்ந்துவிட்டுப் போகிற முகங்களுக்கான ஒரு புதிய மாதிரிப் படிமம் தெரிந்தது. அதிர்ச்சி அளிக்கும் அந்தக் காட்சியை வெறிக்கும் எந்தக் கண்களும் அடுத்த வேலையில் உடனே போய் மறந்துவிட முடியாது அந்த முகங்களை.

ஏரோநாட்டிக் என்ஜினீயரிங் (ஆகாய விமானங்கள் குறித்த பொறியியல் படிப்பு) மாணவர் ஒருவர்.தகவல் தொடர்பு படிப்பவர் அடுத்தவர். சிவில் பொறியியல் வகுப்பில் இருப்பவர் மூன்றாமவர். கல்லூரியில் ரேகிங் கூடாது என்பது உள்பட ஒழுக்க விதிகளில் மிகவும் கண்டிப்பானவர் கொலையுண்ட கல்லூரி முதல்வர் சுரேஷ் என்பது ஒரு தகவல். சக மாணவர் ஒருவரை பேருந்து இருக்கை தொடர்பான தள்ளு முள்ளு சண்டைக்காக கல்லூரிக்குள்ளும் வெளியேயும் அடித்தார் என்பதற்காக முதலில் குறிப்பிட்ட மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது அடுத்த தகவல். அவரோடு மற்ற இரண்டு மாணவர்களும் சேர்ந்து இந்த வெறிச் செயலில் ஈடுபட்டதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

கல்லூரி வளாகங்களில் பரஸ்பரம் மாணவரிடையே வாக்குவாதங்கள், மோதல்கள், அடிதடி, வெட்டு, குத்து என்பவை புதியவை அல்லதான். ஒழுக்க விதிகளோடு முரண்படும் மாணவர்கள்-கடுமையாக நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகங்கள் இவையும் புதிதான விஷயமல்ல தான். ஆனால் கண்ணுக்குப் புலனாகாது நுட்பமாக இவற்றின் தன்மையில் தீவிரமான, வேதனை தரத் தக்க, மீளுதல் இல்லாத வகையிலான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவை கல்லூரி அளவில் மட்டுமல்ல, நமது சமூக வெளியில் வெவ்வேறு தளங்களில் இப்படி நடப்பதை அன்றாடம் செய்தித்தாள் படிக்கும் யாரும் உற்று கவனித்தால் புரிந்து கொள்ளமுடியும். ஒற்றை திசையிலான இறுக்கமான எண்ணப் போக்கு நமது காலத்தின் அடையாளமாக உருப்பெற்று வருகிறது. இதைச் சிந்தனை என்று சொல்வது கூட பிழையானது. சிந்தித்தால் இத்தனை விபத்துக்கள் நடைபெறாது.

தான் எதை எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அப்படியே அதனை அடுத்தவர் ஏற்க வேண்டும் என்ற எண்ணப் போக்கு. தன்னை மீறித்தான் அடுத்த சங்கதி என்ற எண்ணப் போக்கு. நட்பு, நேயம், உறவுமுறை எல்லாவித சேர்க்கைக்கும் இது முன் நிபந்தனை. இந்த விதிகள் கடுமையானவை. மாற்றத்திற்கு உட்பட இயலாதவை. இளம் வயதிலிருந்து, சொல்லப் போனால் குழந்தைப் பருவத்திலிருந்தே கூட இத்தகைய எண்ணப் போக்கு சூழலின் உரமும், வரமும் பெற்று செழித்து வளருகிறது. எல்லாக் காலத்திலும் அச்சுறுத்தும் எதிர்வினையின் கவசத்தை மேலே போட்டுக் கொண்டே வளரும் இந்த எண்ணப் போக்கு மேலும் இறுகி கெட்டிப்பட்டுவிடுகிறது.

அன்பிற்கும், கவனம் மறுக்கப்படுவதற்குமான இடைவெளி மிகக் குறுகியது. நீ என்னாவாகவும் இரு, எப்படியும் நடந்து கொள் என்று விட்டுவிடுவது குழந்தையின்பால் உள்ள அன்பினால் வழங்கப்படும் சலுகை அல்ல. கவனம் செலுத்த மறுக்கும் புறக்கணிப்பின் நரக திசை அது. பள்ளிக்கூட நாட்களில் திருத்த இயலாதிருந்த மாணவரை ஒரு முறை கண்மண் தெரியாமல் அடித்துவிட்டுப் பிறகு அவனது சூழல் என்ன? ஏது? என்று கரிசனத்தோடு நேரே சென்று கண்டறிந்து அந்த மாணவரோடு போராடி, அன்பினால் வென்று மகத்தான வெற்றியை அந்த மாணவர் எதிர்காலத்தில் பெற முடிந்த தமது வாழ்க்கை அனுபவத்தை கல்வியாளர் எஸ்.எஸ்.இராசகோபாலன் பகிர்ந்து கொள்வதுண்டு.

எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் என்ற முறையில் அழைத்து அவரிடம் ஒரு மரக்கன்றை நடச் சொல்லி அந்தச் செடி போலவே மாணவரும் தழைக்கக் கண்ட எடுத்துக்காட்டு புதுவை கல்வியாளர் ஜே கிருஷ்ணமூர்த்தி அனுபவத்தில் இருக்கிறது. அவ்வளவு எளிதான பயிற்சி அல்ல இது. இப்போது களத்தில் நாம் காணும் சிக்கலான நிலைமை கோருவது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பை.

பெற்றோரும், ஆசிரியரும், அண்டை அயலாரும் மட்டுமல்ல. அனைவருமே எச்சரிக்கை கொள்ள வேண்டிய சிக்கலான நடப்புகளைக் கடந்து கொண்டிருக்கிறோம் நாம். கடன் கேட்டால் தரவில்லை என்று சொந்த சகோதரியை வெட்டிக் கொல்கிறார் ஒருவர். காதலித்து மணந்தவள் தன்னை வேலைக்குப் போகக் கூடாதா? என்று கேட்டதற்கு அவள் கதையை முடித்துவிடுகிறார் இன்னொருவர். பேருந்து பயணத்தில், ரயில்களில், கடைவீதியில், சாலையில் எங்கேயும் எப்போதும் அற்ப விஷயங்களுக்காகக் கொதிக்கக் காத்திருக்கிறது நமது இரத்தம். மிகப் பெரிய சமூகத் தீமைகளைஏறெடுத்துப் பார்க்காமல் திரும்பிக் கொள்ளும் முகங்கள், சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கத்தியைக் கையிலெடுக்கத் தயாராக இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

நமது உணவுப் பழக்கம் நம்மை அறம் சார்ந்த அணுகுமுறைக்கு அனுமதிப்பதில்லை. சைவ, அசைவ உணவுமுறை அல்ல இங்கே குறிப்பிடுவது. வேக உணவு. நார்ச் சத்து குறைவான உணவு. உப்பும், உறைப்பும் கூடுதலாகச் சேர்க்கப் பட்ட உணவு. இயற்கையின் கொடையான காய், கனிகள் மறுக்கப்பட்ட உணவு. உரையாடல்களே அற்ற நமது அன்றாட வாழ்க்கை. பள்ளிக்கூட நாட்களிலேயே பழக்கத்திற்கு வந்து சேரும் மது. போதைதான் நமது எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஓர் இளைப்பாறுதல் என்ற புதிய பண்பாட்டுத் திசை.

அதற்கு அடுத்தடுத்த கட்ட போதைப் பொருள்கள். அவற்றுக்கான நிதி ஆதாரத்திற்காக என்னவும் செய்யப் பழக்கும் சேர்க்கை அனுபவங்கள். இவற்றின் முடிச்சிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலாத ஒரு கட்டத்தில் எந்தக் குற்றங்களுக்கும் தயாராகும் உளவியல் போக்கு. இந்த சாபம் இப்போது பிடித்தாட்டுகிறது நமது இளவட்டங்களை. பொறியியல் படிப்பின் தற்போதைய விலை என்ன? என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் பொறுப்பைத் தீர்மானிப்பது யார் ?என்பது பெரிய கேள்வி. படிக்கப் போன இடத்தில் தனது முக்கிய கடமை என்ன? என்பதும், அங்கே இருக்கும் சட்டதிட்டங்களில் கேள்வி இருந்தால் அதை ஜனநாயகமாக தட்டிக் கேட்க இடமுண்டா என்பது அடுத்த பிரச்சனை.

அப்படியே ஆனாலும், வந்த நோக்கத்திற்குப் புறம்பாகத் தம்மையும் அழித்துக் கொண்டு அடுத்தவர் வாழ்க்கையிலும் விளையாடும் அளவு வெறிச் செயலுக்கு மாணவப் பருவத்தில் எப்படி தூண்டுதல் கிடைக்கிறது என்பது கவனம் கோருகிற அடுத்த முக்கிய கேள்வி. வேலையற்ற திண்டாட்டம், பாலியல் குற்றங்கள், போதை போன்றவை எப்படி முதலாளித்துவ சமூகத்தின் இன்றியமையாத தேவைகள் என்று நமது சமூக அறிவியலாளர்கள் விவரிக்கின்றனரோ, அப்படியே புதிய தாராளமய காலம் வேறு தேவைகளை அதுவே உற்பத்தி செய்கிறது. ஊழலை உருவாக்கும்போதே அந்தப் புழக்கத்தில் பெருகும் பணம் எத்தனை புதிய சமூகத் தீமைகளை உருவாக்கித் தரும் என்பதை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.

பெரும் ஏற்றத்தாழ்வின் ஊடாட்டத்தில் தத்தளிக்கும் ஒரு சமூகம் எப்படி அந்த பிரதிபலிப்புகளின் எதிர்வினைகள் அற்று ஒன்றுமறியாத மாதிரி மனிதர்களை நடத்த முடியும்? இந்தக் கொடிய கரங்களின் பிடியில் நடுத்தர வயதுக்காரர்களே எல்லை மீறும்போது, துடிப்பான வாலிப வயதில் வந்து நிற்போரை நடப்புக் காலம் எத்தனை ஆட்டுவிக்கும் என்பதன் ஒரு அதிர்ச்சிக் கூறு தான் தூத்துக்குடி மாவட்டத்தின் பொறியியல் கல்லூரி விஷயத்தில் நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது.

தனி விஷயமாக இதைப் பார்ப்பதும், விசாரிப்பதும், உண்மையைக் கண்டறிவதும், தண்டிப்பதும் சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் தலை குனிந்து நிற்கும் சமூகம் அதைக் கடந்தும் மிகுந்த கவலையோடு, அக்கறையோடு, எச்சரிக்கையோடு விவாதங்களை நடத்த வேண்டுவது காலத்தின் கரைதலாகும். தனது பொறுப்பை நிறைவேற்றுவதன்றி கொலையுண்டு கிடக்கத் தக்க தவறு எதையும் செய்ததாகத் தெரியாத கல்லூரி முதல்வரின் முகமும் நாளிதழில் இருக்கிறது. அந்த முகத்திற்கும் சமூகம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

நன்றி: தீக்கதிர்: அக்டோபர் 12

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கல்லூரி முதல்வர் படுகொலை

  1. நான் எழுத நினைத்ததை மேலும் சிறப்பாக, திரு.எஸ்.வி. வேணுகோபாலன் எழுதியிருக்கிறார். வாழ்த்துக்கள். தீக்கதிர் ஆதாரம் என்றும், உரைநடை திரு.எஸ்.வி. வேணுகோபாலனுடையது என்று நம்புகிறேன். அதை உறுதிப்படுத்தினால், நல்லது.
    ‘ஒற்றைத் திசையிலான இறுக்கமான எண்ணப் போக்கு நமது காலத்தின் அடையாளமாக உருப்பெற்று வருகிறது. இதைச் சிந்தனை என்று சொல்வது கூட பிழையானது. சிந்தித்தால் இத்தனை விபத்துகள் நடைபெறாது.
    நாம் எதை எப்படிப் புரிந்துகொள்கிறோமோ அப்படியே அதனை அடுத்தவர் ஏற்க வேண்டும் என்ற எண்ணப் போக்கு தான் இதற்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. மது போதையில் அப்பனே மகனைக் கொன்றதாக, இன்றைய செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *