Tag: க. பிரகாஷ்

  • திருக்குறளில் மனித வாழ்வியல் கூறுகள்

    — க. பிரகாஷ்.

    குறள்திருக்குறள் நீதி நூலாக மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்கும், 21 ம் நூற்றாண்டிலுள்ள புதிய தலை முறையினருக்கும் வழிகாட்டும் ஒரு அறநூலாகும். வள்ளுவத்தின் மேன்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லை கடந்த மனித வாழ்க்கையை வளப்படுத்தும் அளவிற்குச் சிறந்து விளங்குகிறது.

    வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இனி வரும் தலைமுறையினருக்கும் பொருந்தும் படியாக மனிதனுக்கு வாழச்சொல்லிக் கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் வாழ்க்கையின் மகத்துவத்தை விளக்குகிறது. வள்ளுவம் இலக்கியம் என்னும் நிலையில் நின்று விடாமல் மனித வாழ்க்கையின் அறநெறி சாராம்சத்தையும் பதிவு செய்கின்றது.

    ”இன்பம் பொருள் அறம் வீடென்னும் இந்நான்கும்
    முன்பறியச் சொன்ன முதுமொழிநூல் – மன்பதைகட்
    குள்ள அரிதென்றவை வள்ளுவர் உலகம்
    கொள்ள மொழிந்தார் குறள்”. (நரிவெரூஉத்தலையார்)

    இன்பம் பொருள் வீடு என்னும் இந்நான்கும் மன் பதைகட்கும் முன்பு அறியச் சொன்ன முது மொழிநூல் உள்ள அரிது என்று இன்பம் முதலி இந்நாற்பொருள் இயல்புகளையும் மக்கள் பரப்புக்கு அக்காலத்தில் அறியும் வண்ணம் சொல்லப்பட்ட பழமொழி வேதமானது ஓதி உணரப்படுதற்கு அரிது என்று, வள்ளுவர் அவை உலகம் கொள்ள குறள் மொழிந்தார். மனித வாழ்க்கை தலைசிறந்த அறமாக விளங்கும் அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறியவைத்துப் பயனுடைய வாழ்க்கையை வாழ வள்ளுவம் நன்கு வழி காட்டுகிறது.

    அன்பு, பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித மாண்புகளை விளக்குகிறது. மனிதர்களின் வாழ்க்கை நெறியை உயர்த்தும் கோட்பாடாக வள்ளுவம் நல்லறங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.

    ஆன்மீக அறம்:
    “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு” – (குறள் – 1)

    கடவுளை அறிவு, ஆற்றல் அப்பாற்பட்ட நிலை என்னும் கருதுகோள் நிலையில் வைத்து மனித பெருமைக்கும், சமுதாய அமைதிக்கும் வள்ளுவர் குறள் வழிக் குரல் கொடுத்துள்ளார். “உலகு“ என நினைவூட்டி உலகளாவிய நோக்கத்தை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனுக்கு அவனது மனமாற்றத்திற்கு வள்ளுவம் ஒரு புதிய ஆன்மீக அறத்தைத் தந்துள்ளது.

    வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள், கோட்டைகள் இல்லை ஆனால் அது பேரறிவு, வாய்மையான அறிவு, குணங்களின் திருவுரு, இன்பத்தின் திருவுரு, அன்பின் திருவுரு, அறத்தின் அடையாளம் என்று கருதப்படுகிறது.

    ஈதல் அறம்:
    “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
    ஊதியம் இல்லை உயிர்க்கு”

    மனிதப் பண்பை உணர்த்தும் ஒரு நெறி ஈதல் அறமாகும். ஈகை என்பது பிறருக்குக் கொடுத்து மகிழும் மனம்.அவ்வாறு கொடுத்துதவும் போது மனிதன் பக்குவம் அடைந்தவனாகி விடுகிறான். போட்டியும், பொறாமையும் அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு செல்லும் ஈகைக் குணம் ஒன்றே மனிதனை மாண்புடையவனாக்கும். வள்ளுவர் ஈகை குணமே உயிரின் ஊதியம் என்பர். கொடுத்துப் புகழடையும் வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை என்பதைக் குறள் உணர்த்துகிறது.

    காதல் அறம்:
    காமத்துப்பால் அறவழிப்பட்ட காதலுறவுகளை எடுத்துரைத்துள்ளது. காதலையும், ஆண் – பெண் உறவுகளையும் வள்ளுவர் நெறிப்படுத்தியுள்ளார். காமத்துப்பாலில் காதல், காதலர் உறவுநிலை ஆகியவற்றை இனிமை பயக்கப் பாடி அன்பெனும் நெறிக்குள் மனங்களின் சங்க மருததிற்குள், மாசுபடாத வாழ்வியல் படி நிலையை வடித்துத் தந்துள்ளார். களவையும் கற்பையும் வகைப்படுத்தி மனிதம் அடையும் வாழ்க்கை நெறியை வள்ளுவா் தந்துள்ளார்.

    இல்வாழ்க்கை:
    “பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள் – 44)

    பழி அஞ்சிப் பார்த்து ஊண் உடைத்தாயின் ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்ததற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின், வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.

    அன்பும் அறனும்:
    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது” (குறள் – 45)

    இல் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் ஒருவனது இல்லற வாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்தப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அது பண்பும் பயனும் அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன் விளைவுமாகும்.

    கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும், அறம் பயனும் இல்வாழ்க்கை உரித்தே ஆகும்.

    இல்லவள் மாணாக் கடை:
    “இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை? (குறள் -53)”

    இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்புடையவளானால் அவனுக்கு இல்லாதது எது? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

    அடக்கமுடைமையின் சிறப்பு:
    “பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
    தேரினும் அஃதே துணை” (குறள் – 132)

    ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும் பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும். ஒரு மனிதன் தன் வாழ்வில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதையும் வாழ்க்கை நெறிமுறைகளையும், வாழ்வியல் கூறுகளையும் வழுவாகவும், செழுமையாகவும், செதுக்கியுள்ளார் திருவள்ளுவர்.

    பார்வை நூல்கள்:
    1. திருக்குறள் – வள்ளுவர் கண்ட தத்துவம் – தெ.பொ.மீ.
    2. திருக்குறள் – தமிழ் மரபுரை – ஞா.தேவநேயப் பாவாணர்
    3. மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம் – ப.மருதநாயகம்
    4. புதிய நோக்கில் திருக்குறள் பாயிரம் – எஸ்.முத்துகிருஷ்ணன்

    _____________________________________

    க. பிரகாஷ் எம்.ஏ, எம்ஃபில்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்ப கள ஆய்வு பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

    Share
  • மின்னூல்

    –க.பிரகாஷ்.

    மின்னணு புத்தகங்கள் அல்லது மின்னூல்கள் இன்றைய தொழில் நுட்ப உலகில் மிகவும் புகழ்பெற்று மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் புதிதாக பதிப்பிக்கப்படும் புத்தகங்கள், கட்டுரைகள், அனைத்தும் மின்னூல்களாகக் காணப்படுகின்றன. மின்னூல் என்பது நூல் ஒன்றினுடைய மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பாகும். இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள் தாளில் அச்சிட்டு, கட்டுமானம் செய்து தயாரிக்கப்படுகின்றன. அப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள செய்திகளைப் போலவே கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் இடம் பெறச்செய்து அதை இணைய வழியில் படிக்கும் படியாக மின்புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்துவைத்துத் தேவைப்படும் போது படிக்கும் நிலையிலும் மின்னூல் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறாக வளர்ந்த மின்னூல் இன்று உலகமொழிகள் அனைத்திலும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுச் செயல்படுகின்றன. குறிப்பாகத் தமிழ்மொழியில் இன்று பரவலாக மின்னூல்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தனி ஆட்களும், சில தனியார் புத்தக நிறுவனங்களும், பலர்குழுவாக சேர்ந்து மின்னூல்களை வடிவமைத்து வெளியிட்டு வருகின்றார்கள்.

    மின்புத்தகங்கள்:
    நாம் இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள் தாளில் அச்சிட்டு கட்டுமானம் செய்து தயாரிக்கப்பட்டு வருகின்றன. அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்திகளைக் கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் அல்லது திறன்பேசியில் வெளியிடுவதே மின் புத்தகம் என்று அழைக்கப்படுகின்றன. இதனைப் பதிவிறக்கம் செய்து குறுந்தட்டு வடிவில் சேமித்து வைப்பதையும் மின்புத்தகங்களாக கருதப்படுகின்றன. மின்னூல்கள் பல்வேறு அமைப்பில் வெளியிடப்படுகின்றன. அவை பி.டி.எஃப், இணையத்தில் வெளியீடு, புதிய அனைத்துலகத் தரமான இ-பப் மற்றும் மொபி அமைப்புகளில் காணப்படுகின்றன.

    ebook

    மின்னூல் அமைப்பு:
    • பி.டி.எஃப்
    • இணைய அமைப்பு
    • இ.பப்
    • மொபி
    ஆகிய நான்கு அமைப்புகளும் கணினி, இணையம் மற்றும் கையடக்க கருவிகளிலும் இயக்கப்படக் கூடிய அமைப்புகள் ஆகும். பி.டி.எஃப், அமைப்பில் உள்ள மின்னூலை வாசிப்பதற்கு பி.டி.எஃப் ரீடர் எனும் வகையிலான வாசிப்பு செயலிகள் தேவையாகிறது. இணைய அமைப்பில் மின்னூலை வாசிப்பதற்கு உலாவி, மற்றும், இ-பப் அமைப்பில் மின்னூலை வாசிப்பதற்கு இ-பப் ரீடர் என்னும் வாசிப்புச் செயலிகள் தேவையாகின்றன.

    பி.டி.எஃப் அமைப்பு:
    தாளில் அச்சிட்டு வெளியிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நூலை அச்சுக்கருவியில் அச்சிடுவதற்குப் பதிலாக மின்வடிவில் சேமிப்பதே பி.டி.எஃப் அமைப்பாகும். ஊடகத்தில் மாற்றம் உண்டே தவிர நூல் வடிவமைப்பில் மாற்றம் ஏதும் இல்லை. அட்டைப்படம், உள்ளடக்கம், பக்க எண்கள், பின்னூட்டம் முதலிய நூற் கூறுகள் அனைத்தும் அச்சு வடிவ நூலில் எவ்வாறு பதிக்கப்படுகின்றனவோ அவ்வாறு பி.டி.எஃப் நூலிலும் பதிக்கப்படுகின்றன. விரலைக் கொண்டு தாளில் அச்சிடப்பட்டப் பக்கங்களைப் புரட்டுவதற்குப் பதிலாக சுட்டியைக்கொண்டு திரையில் பக்கங்களைப் புரட்டுகின்றனர். பி.டி.எஃப் வாசிப்புக் கருவியில் தோன்றும் பக்கத்தைப் பெரிதாகவோ சிறிதாகவோ காணலாம். ஆனால் பக்கத்தின் அமைப்பு அவ்வாறே இருக்கும். எழுத்துக்களைப் பெரிதாக்கலாம் அல்லது சிறிதாக்கலாம். அதற்கேற்றாற்போல் படங்களின் அளவும் பக்கத்தின் அளவும் மாற்றப்படும். ஆனால் பக்கத்தின் தோற்றம் மாறாது. ஒரு பக்கத்தில் பத்து வரிகளும், இரு படங்களும், இருந்தால் எத்தனை அளவு மாற்றம் செய்தாலும் அதே பக்கத்தில் தோன்றும் அடுத்தப்பக்கத்தில் உள்ள வரிகள் இந்தப் பக்கத்தில் வராது. அதுபோல அந்தப்பக்கத்தில் உள்ள வரிகள் அடுத்தப்பக்கத்திற்குப் போகாது.

    பி.டி.எஃப் மின்னூல்களை உருவாக்குவது மிகவும் எளிதாகும். அச்சிடுவதற்கான நூலை வடிவமைக்கும் அதே செயலில் இருந்து பி.டி.எஃப் மின்னூல்களைச் சேமிக்கலாம். மைக்ரோசாப்ட், அடோபிஇன்டிசைன், முதலிய செயலிகள் பொருத்தமானவை. கோப்புகளை பி.டி.எஃப், ஆகச் சேமிப்பதற்கு பி.டி.எஃப் ரைட்டர் என்னும் செயலி தேவை. இவ்வகை செயலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. பி.டி.எஃப் அமைப்பில் சேமிக்கப்பட்ட மின்னூலில் ஒரு சில வசதிகளை மட்டுமே சேர்க்கலாம். அடோபி அக்ரோபட் போன்ற செயலிகளைக் கொண்டு உள்ளடக்கப் பக்கத்தில் உள்ள தலைப்புகளை நூலில் உள்ள பக்கங்களோடு இணைக்கலாம். இதுபோன்று சிறுசிறு முன்னேற்றங்களைத் தவிர பி.டி.எஃப் மின்னூல்களில் வேறு எந்தப் புதுமையையும் செய்ய முடியாது.

    இணைய அமைப்பு:
    இணைய அமைப்பில் உருவாக்கப்படும் மின்னூல் மீயுரை குறியீட்டு மொழியில் வடிவமைக்கப்பட்ட நூலாகும். ஓர் இணையதள உருவாக்கத்திற்குப் பயன்படும் அதே தொழில் நூட்பங்களைக் கொண்டே இந்த வகை மின்னூல்களும் உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் தமிழ் மின்னூல்களைப் பதிவேற்றும் திட்டங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. மதுரைத்திட்டம், நூலகம் திட்டம், சென்னை நூலகம் திட்டம், முதலியவை நூற்றுக்கணக்கான தமிழ் நூல்களை இணையத்தில் பதிப்பித்து வருகின்றன. கட்டற்றக் கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா ஒரு பெரிய மின்னூல் களஞ்சியமாகக் கருதலாம்.

    இணையத் தொழில்நுட்பம் என்பதால் எந்தவிதக் கணினிகளிலும் இந்த மின்னூல்களை வாசிக்கலாம். ஒருங்குறி எழுத்துரு தரத்திலான தமிழ் எழுத்துரு மற்றும் உலாவி இருந்தாலே போதும், விண்டோஸ், லினக்ஸ், கணினிகளில் இந்த இரண்டும் உள்ளன. தமிழ் மின்னூல்களைப் படிக்கும் வாய்ப்பு இந்தக் கணினிகளில் இயல்பாகவே உள்ளது. சி.எஸ்.எஸ். மற்றும் ஜாவாஸ்க்ரிப்ட், ஆகிய கணினி மொழிகளின் துணைகொண்டு நூலோடு வாசகர்கள் ஊடாடுவதற்கான வசதிகளைச் சேர்க்கலாம். தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தை புரட்டுவதைப் போன்ற உணர்வு, படங்களையும், எழுத்து வரிகளையும், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்துதல், அருஞ்சொற்களைத் தோர்வுசெய்து அவற்றிற்கான பொருளை இன்னொரு கட்டத்தில் காணுதல், குறிப்பிட்ட சொற்கள் வரும் பக்கங்களைத் தேடுதல் முதலிய பல வசதிகளை இணைய அமைப்பிலான மின்னூல்களில் சேர்க்கலாம்.

    இணைய அமைப்பிலான மின்னூல்களில் பல புதுமைகளைச் செய்வதற்கான வாய்பு இருந்தாலும் சில குறைகள் உள்ளன. பி.டி.எஃப் நூலில் எல்லாப் பக்கங்களும் ஒரே கோப்பில் அடங்குவதுபோல் இணைய அமைப்பிலான நூலில் உள்ள பக்கங்கள் அடங்குவதில்லை. இந்த நூலில் பயன்படுத்தப்படும் படங்கள் தனித்தனியே வெவ்வேறு கோப்புகளில் சேமிக்கப்படுகின்றன. நகர்படங்கள் ஒலிப்பதிவுகள் அனைத்தும் தனித்தனி கோப்புகளில் சேமிக்கப்பட வேண்டும். இணையத் தொடர்பு இல்லாத போது இந்த நூலை வாசிப்பதாக இருந்தால் இந்த நூலுக்குத் தேவைப்படும் அனைத்துக் கோப்புகளும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இணைய அமைப்பில் இது போன்று குறைகளைத் தீர்ப்பதற்காகவும் மின்னூலுக்கென்றே சில சிறப்பு அம்சங்களைச் சேர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் இ-பப் எனும் புதிய மின்னூல் தரம் ஆகும்.

    இ-பப் அமைப்பு:
    இ-பப் என்பது நவீன மின்னூல்களை வெளியீடுவதற்காக idpe எனப்படும் அனைத்துலக மின்பதிப்புக் குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஓர் இலவச கட்டற்ற திறந்தவெளி மின்தரம் என்று குறிப்பிடுகின்றனர். இணைய அமைப்பில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி மின்னூலுக்கென்றே சில புதிய வசதிகளைச் சேர்த்து ஒரே கோப்பில் பதிக்கும் வாய்ப்பை இந்த இ-பப் அமைப்பு அமைந்துள்ளது. மின்னூல்களைக் கணினிகளில் மட்டும் இன்றி கையடக்க கருவிகளிலும் வாசிக்கும் வாய்ப்பை இ-பப் ஏற்படுத்தியுள்ளது. மின்னூல்களை வாசிப்பதற்காகவே சில கருவிகள் சிறப்காகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

    மொபி அமைப்பு:
    மொபி அமைப்பானது இ-பப் போன்றதே ஆகும். ஆனால் திறந்த நிலைக் கோப்பு அல்லாமல் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் கருவியில் மட்டும் படிக்கமுடியும் இதனை நாம் மொபி அமைப்பு என்கிறோம். மேற்குறிப்பிட்ட எல்லா அமைப்புகளிலும் தமிழ் மின்னூல்களைத் தயாரிக்கலாம். வின்டோஸ், மெக்கிண்டாஷ், லினக்ஸ், போன்ற கணினிகளில் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் இயல்பாக இருப்பதால் அனைத்துக் கணினிகளிலும் இந்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லாக் கணினிகளிலும் அதே எழுத்துரு அமைந்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. எல்லாக் கணினிகளிலும் நூலைப் படிக்கும் வாய்ப்பு மட்டும் இருக்கின்றன. ஒவ்வொரு அமைப்பில் உள்ள எழுத்துருவைக் கொண்டு கோப்புகள் தோன்றும்.

    மின்னூலை உருவாக்கும் முறை:
    நாம் வெளியிட விரும்பும் ஆழ்ந்த உட்பொதிந்த கருத்துக்கள் அடங்கிய பொருட்கூறுகளை அல்லது பகுதிகளைக் கணினி தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி தட்டச்சு செய்து கொள்ள வேண்டும். தட்டச்சு செய்து கொண்ட பகுதிகளை ஒரு கோப்பாகச் சேமித்து வைக்க வேண்டும். நாம் தட்டச்சு செய்து கொண்ட கோப்பு எந்த மென்பொருளின் மூலம் இணையத்தில் பயன்படுத்தித் தயார் செய்தோமோ அந்த மென்பொருளின் மூலம் இணையத்தில் பயன்படுத்தும் வகையில் Html – Asp கோப்புகளாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையத்தில் உள்ள அனைத்துத் தகவல்களும் இரண்டு வகை கோப்புகளாகவே வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அவை Html – Asp முதலில் குறிப்பிட்ட வகை கோப்பு நாம் அவ்வாறு தயார் செய்து ஏற்றுமதி செய்யமுடியும். நாம் தயார் செய்து ஏற்றுமதி செய்த கோப்புகள் இணையத்தின் சேமிப்புக்கிடங்கில் சென்று தேங்கி கிடைக்கும். பிறகு நாம் அந்தக் கோப்பை பயன்படுத்த முயற்சிக்கும்போது சேமிப்புக் கிடங்கில் உள்ள அந்தக் குறிப்பிட்ட கோப்பு செயல்படும் பக்கங்களாக மாறி கண்முன்னே தோன்றும். ஒவ்வொரு நாளும் ஏற்றுமதி செய்யப்படும் கோப்புகள் இணைய சேமிப்புக் கிடங்கில் ஆவணமாகப் பாதுகாக்கப்படும். இவ்வாறு வெளியிடப்படும் மின் புத்தகங்களை இணையத்தின் உதவியோடு மென்தட்டுகள் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இவ்வாறு இணைய சேமிப்புக் கிடங்கை முறையாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இணையப் பக்கத்திற்கு ஒதுக்கிய இடத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் வெளியிட்ட மின் புத்தகங்கள் காலாவதியாகிவிடும்.

    கிரியேடிவ் காமன்ஸ் உரிமம் மூலம் உள்ளடக்கத்தைக் காணுதல்:
    கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் மூலம் தமிழில் பல வலைப்பதிவுகளும், தளங்களும் உள்ளன. நாம் அங்கிருந்து உள்ளடக்கத்தைப் பெற மற்றும் மின் புத்தகங்களும் அவர்கள் புத்தகங்களில் அதே உரிமம் மூலம் குறிப்பிட்டு உருவாக்கமுடியும். பல எழுத்தாளர்களும், பல வலைப்பின்னர்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் மூலமாக தங்களுடைய வலைப்பதிவில் வெளியிடுவார்கள்.

    Press book.com என்ற வலைத்தளத்தில் ஒரு கணக்கை உருவாக்க:
    Press book.com என்ற மென்பொருளைப் பயன்படுத்தி மின்னூலை உருவாக்க முடியும். epub, html, pdf போன்ற முறையில் மின்னூல்களை அமைகின்றன. Press book.com என்ற வலைத்தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி, இக்கணக்கில் நமக்குத் தேவையான மின்னூல்களையும், புகைப்படங்களையும், மற்றும் ஒலி, ஒளி, ஊடகங்களையும் தேவைக்கேற்ப நிறுவிக்கொள்ளலாம். புதிதாக ஒரு மின்புத்தகத்தை உருவாக்கும் பொழுது எண் அட்டவணையைப் பயன்படுத்தி அவ்வாறு உருவாக்கிய புத்தகத்தின் வலை முகவரி மற்றும் புத்தகத்தின் தலைப்பு குறிப்பிட்டு பிறகு அதனை நாம் வெளியிடும் முறை தனியுரிமையாகவும் பொதுவாகவும் வெளியிடலாம்.

    புத்தகத்தின் வடிவமைப்பு:
    • அட்டைப் படம்
    • முக்கிய பகுதி
    • அட்டைப் பின் பகுதி

    அட்டைப்படம் Front Matter:
    அட்டைப்படம் என்பது ஒரு புத்தகத்தின் முதல் பகுதியாகவும் மற்றும் நூல் விவரம், தலைப்பு, அணிந்துரை, முகவுரை, பதிப்புரை ஆகியவை குறிப்பிடுவது அட்டைப்படமாகும்.

    முக்கியப் பகுதி Main body:
    ஒரு புத்தகத்தின் பொருளடக்கத்தையே முக்கியப்பகுதியாக குறிப்பிடுகின்றோம். ஒரு புத்தகத்தை உருவாக்கிய பிறகு ஏற்றுமதி சேர்க்கை மற்றும் ஏற்றுமதி தலைப்புக் காட்டும் சேர்க்கை என ஒவ்வொரு இயலுக்கும் அல்லது கட்டுரைகளுக்கும் இம்முறை பயன்படுத்திய பிறகு வெளியிடலாம்.

    புத்தக தகவல் Book information:
    ஒரு புத்தகத்தின் முழு விவரத்தையும் குறிப்பிடுவது புத்தக தகவல் ஆகும். தலைப்பு, குறுகிய தலைப்பு, துணைத் தலைப்பு, குறிப்பிட்டபிறகு அப்புத்தகத்தின் ஆசிரியர் பெயர், ஆசிரியரின் முழு முகவரியும், வெளியிடப்படும் இடம், மொழி, வருடம், ஆகியவை அனைத்தும் பதிவு செய்யவேண்டும்.

    கருப்பொருள் Themes:
    கருப்பொருள் என்பது வரியின் மற்றும் ஒரு பத்தியின் இடைவெளி விட்டு அமைப்பது கருப்பொருள் ஆகும்.

    ஏற்றுமதி Export:
    ஏற்றுமதி என்பது நாம் உருவாக்கிய ஒரு மின் புத்தகத்தை வடிவமைக்கும் அல்லது அமைப்புகள் ஆகும். pdf, epub, mobi, hpub, html, word, press, xml போன்ற வடிவங்களில் மின் புத்தகத்தை ஏற்றுமதி செய்யலாம். Press book.com என்ற வலைத்தளத்தில் உருவாக்கிய உங்கள் கணக்கில் உள்ள கருவிகளை பயன்படுத்தி மின் புத்தகத்தை உருவாக்கமுடியும். அக்கருவிகள், கட்டுப்பாட்டு அறை, மேம்படுத்தல், உரை, புத்தகத்தகவல், தோற்றம், ஏற்றுமதி, விற்பனை, ஊடகம், பயனர்கள் மற்றும் சுருக்கப்பட்டியல் ஆகியவை ஆகும்.

    அட்டையின்பின் பகுதி Back Matter:
    அட்டையின் பின்பகுதி என்பது அப்புத்தகத்தின் பதிப்புரிமை பற்றிய தகவல்களும், ஆசிரியர் பற்றிய தகவல்களும், கவிதைகளும், படங்களும், நூல்களும், விருதுகளும், அட்டவணைகளும், மற்றும் இது போன்ற பல கருத்துகளை வெளியிடுவது அட்டையின் பின் பகுதி ஆகும்.

    மின்னூலை உருவாக்கும் போது ஏற்படும் சிக்கல்கள்:
    இணையப் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள தமிழ்மொழியில் பல்வேறு வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒவ்வொரு இணைய தளமும் ஒவ்வொரு தமிழ் எழுத்துருக்கள் கொண்டு அமைந்துள்ளது. எனவே நாம் வெளியிடும் இணையதளத்தில் உள்ள எழுத்துருக்களைக் கொண்டே நமது நூல் உள்ளடக்கங்களைக் கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். இல்லையேல் நமது நூற்பகுதிகள் இணையப் பக்கத்தில் இருந்து தாறுமாறாக மாறிவிடும். ஆங்கில மொழியில் இந்தச் சிக்கல் இல்லை. எந்த வகை ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு மின்னூல் தயாரித்தாலும் அவை இணையப்பக்கங்களாக ஏற்றுமதி செய்யும் போது தெளிவாகத் தெரிகிறது.

    சிக்கல் ஏற்படுவதற்கான காரணம்:
    ஆங்கில மொழியில் அமைந்த விசைப்பலகைகள் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டவை ஆகும். ஒவ்வொரு வகை ஆங்கில எழுத்துருக்களும் மற்ற வகை எழுத்துருக்களும் இணைந்து கொள்ளும் வகையில் ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றையொன்று துணை செய்வதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் எழுத்துருக்கள் பல விதமான விசைப்பலகைகள் கொண்டு வடிவமைத்துள்ளதால் தமிழில் மின்னூல்கள் தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகின்றன.

    தீர்வு:
    தமிழ் மொழியின் எழுத்துருக்களின் சிக்கலைத் தவிர்ப்பதற்கு ஒருங்குறி (Unicode, NHM Writer) என்ற எழுத்துருக்கள் பெருமளவில் பயன்படுத்தப் படுவதால் அச்சிக்கலில் இருந்து விடுபட்டனர்.

    மின்னூல் வரலாறு:
    • மின்னூல் முதன்முதலாக ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில விளக்க உரையுடன் இலக்கணப்படி அச்சு வடிவிலான நூலாக வெளிவந்திருக்கிறது
    • “முதல் மின் புத்தகம் குறியீட்டு 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கி ராபர்டோஸ்வீடிஷ் தயாரித்த தாமஸ்அக்வினாஸ் படைப்புகளைப் பெரிதும் உரைவிளக்கம் மின்னணு குறியீடாக இருக்கின்றன”
    • ஆங்கிலத்தில் முதன் முதலாக மின் நூலை வெளியிட்டவர் தாமஸ்அக்யூனஸ், ராபட்பூசா, பாப்ரோன் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள் ஆவார். 1930 ல் மின்னூல்களை அடுத்தவர்கள் படிக்கின்ற வகையில் படத்துடன் கூடிய ஒளி நகர்வுடன் வெளியிட்டுள்ளனர்
    • இதற்கு மாற்றாக டவ்ஏங்கல்பர்ட் என்ற வரலாற்று ஆசிரியர் 1960 ல் ncs ஆய்வுத்திட்டத்தில் நூல்களை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 1992 ல் சோனி நிறுவனம் டேட்டா டிஸ்க்மென் என்பதை அறிமுகப்படுத்தியது. இது வன்பொருளில் சேமிக்கும் வசதியைப் பெற்றது.

    மின்புத்தகங்களை வாசிக்க உதவும் கருவிகள்:
    தமிழில் மின்புத்தகங்களை வாசிப்பதற்கான கணினி தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல அம்சங்கள் கொண்ட பெரிய நிறுவனங்களாலும் பல கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அக்கருவிகளைப் பயன்படுத்தி மின்னூலை வாசிக்கலாம். மின்னூலை வாசிப்பதற்கென்று வன்பொருளும், மென்பொருளும், உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வன்பொருள்களிலும், மென் பொருள்களிலும் மின்னூலை வாசிக்கும் போது பக்கத்தைப் பெரிதாகவும் சிறியதாகவும் மாற்றமுடியும். நாம் விட்ட இடத்தில் இருந்து தொடங்கவும் முடியும் இது போன்று பல முறைகளைக் கொண்டு உள்ள கருவிகளாகவும், மென்பொருளாகவும், உள்ளன.

    “மின்னூல் என்பது நூல்களின் மென்வடிவம் மட்டுமில்லை, அதனை எளிதில் படிப்பதற்கும், எடுத்துச் செல்வதற்கும், காகிதமில்லா மின்வழியாகும்” கணினியிலும் அனைத்து இயக்குதளக் கருவிகளிலும் நூல்களை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிக்கும் முறையுள்ளது. மின்னூலைப் படிப்பதற்கென்று கையில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்குப் பல கருவிகள் வளர்ந்துள்ளது. அவை, வன்பொருளாகவும், மென்பொருளாகவும், உள்ளன.

    வன்பொருள்கள்:
    • Kindle
    • Nook
    • Sony
    • kobo
    • Android
    • I phone
    • Computer

    மென்பொருள்கள்:
    • Google play books
    • News Reader
    • Reader pdf Reader
    • Speed Reader
    • Books Reader
    • Readuim – Chorme
    • e – Reader
    • FB – Reader

    Iso கருவிகள் – I Books for ipad (e-pub), kindle for ipad (mobi), Google play books.
    Android கருவிகள் – epub for Android, Fb Reader for Android, Google play books,
    Google Chrome குரோம் உலாவி – Readium.org போன்ற பல கோப்புகளைப் படிக்கலாம்.
    Mozilla Firefox பயர்ஃபாக்சு உலாவி – epubread.com தரும் நீட்சியில் epubகோப்புகளைப் படிக்கலாம்.
    FBreader, Calibre மூலம் Windows, Linux முதலிய பல்வேறு இயங்கு தளங்களிலும் மின்னூல்களைப் படிக்க முடியும்.
    இக்கருவிகளில் மின்னூலை நிறுவி விலையில்லாக் கருவிகள் மூலம் வின்டோஸ், ஐபேட், ஐபோன், ஆன்டிராய்டு, பிளாக்பெரி, எனப் பல கருவிகளில் நிறுவிப் படிக்கலாம்.

    மின்னூல்களின் பயன்பாடுகள்:
    அதிகப் பக்கங்கள் கொண்ட நூல் பகுதிகளைக் கையடக்க வடிவில் சுருக்கிவிடமுடியும். எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். கட்டுமான நூல்களில் வண்ணப் புகைப்படங்களைக் கொண்டு அதிகப் பக்கங்களை இணைக்க முடியாது. அதிகப் பொருட்செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் நூல்களில் அதிக அளவில் வண்ணப் புகைப்படங்களை இணைத்து வெளியிடலாம். மின் நூல்களில் உள்ள பக்கங்களைத் தேவைக்கேற்ப பெரிதாக்கிப் பயன்படுத்த முடியும். சாதாரண நூல்களை இவ்வாறு பயன்படுத்த முடியாது.

    உலகின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் தேவையான பகுதிகளை இணையத்தில் தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக தேடிப் பார்த்துப் பயன்படுத்த முடியும். தேவையான மின்னூல்களை மின்வணிகம் வழியாக வாங்கிப் பயன்படுத்த முடியும். அச்சிடப்பட்ட நூல்களை அச்சுப் பிரதிகளை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் புத்தகங்களைத் தேவையான நேரங்களில் உடனே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மின் புத்தகங்களில் உள்ள தகவல்களை ஆவணமாக நீண்ட காலம் பயன்படுத்த முடியும். அச்சிடப்பட்ட நூல்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிதைந்து விடுகின்றன. ஆனால் மின் புத்தகங்களின் ஆயுள் காலம் பன்மடங்கு நீடிக்கக்கூடியவை ஆகும்.

    வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தின் கருத்துக்கள் ஒரு மாநிலமோ, அல்லது ஒரு நாடோ மட்டும் தான் சென்றடையும்.  மின்னூலாக பதிப்புச் செய்யும் போது உலகளாவிய நிலையில் பரவி எல்லோரும் படித்து இன்புறும் அளவிற்கு மின்னூல்கள் பயன்படுகின்றன.

    பார்வை நூல்கள்:
    http://www.muthalvan.in
    http://ta.wikipedia.org/s/ma7
    http:;//tech.neechalkaran.com

    க.பிரகாஷ்
    தமிழ்த்துறை
    தொழில் நுட்ப கள ஆய்வு பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

    Share
  • மின் நூலகம்

    — க.பிரகாஷ்.

    21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் சாதனமாகக் கணினியில் நூல்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் பணி உலகெங்கிலும் எல்லா மொழிகளிலும் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம், உள்ளிட்ட நூல்களைக் கணினியில் சேமித்து வைக்கும் வேலை அரசாலும், அரசு சார்புடைய அமைப்புகளாலும், தனியார் பலரின் ஆர்வத்தாலும் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் பெரும்பங்காற்றியுள்ளது. சென்னை பல்கலைக்கழகமும் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையைத் தொடங்கி வருகின்றனர்.

    கே.கல்யாணசுந்தரம் என்பவர் தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையை 1988 ஆம் ஆண்டு தொடங்கினார். இது தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் முதல் பணியாகக் கருதப்படுகிறது. இவர் தொடங்கிய திட்டத்திற்கு மதுரைத் திட்டம் என்று பெயர் வந்தது.

    நூலக திட்டங்களை அமைத்து அனைத்து நூலகங்களிலும் மின்னூல் பணியை ஆரம்பித்தனர். இதுவே நூலக திட்டம் என்று குறிப்பிடுகின்றார்.

    தமிழக அரசாங்கம் தமிழகத்தில் உள்ள கன்னிமார நூலகம் தேவநேயப் பாவாணர் நூலகம், தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், தமிழ் பல்கலைக்கழக நூலகம், கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி நூலகம், போன்ற புகழ் மிக்கதும் பழமையானதுமான நூலகங்களைக் கணினிமயமாக்கி பாதுகாத்து வருகிறது.

    மேற்கூறிய பணிகளில் சில நூல்களை முழுவதுமாக படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சில நூல்களின் பட்டியலைப் பார்வையிடும் வகையில் அமைந்து காணப்படுகின்றன.

    இங்ஙனம் தமிழ் நூல்களைக் கணினியில் சேமித்து இணையப் பயன்பாட்டின் மூலமாக எவரும் எங்கிருந்தும் பார்க்கும் வகையில் நூலகமாக அமைத்திடும் முறையையே மின் நூலகம் என்று குறிப்பிடப்படுகின்றன.

    மின் நூலகங்கள்:

    virtual_library_web
    • எண்ணிம நூலகம் – (Digital Library)
    • தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின் நூலகம் – (Tamil Virtual University E – Library)
    • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – (Roja Muthiah Resarch Library)
    • சென்னை மின் நூலகம் – (Chinnai Library)
    • நூலகம்.நெட் – (Noolaham.net)
    • இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் – (Central Institute of Indian Languages – (CIIL)

    மதுரைத் திட்டம், மின்பதிப்புத் திட்டம்:
    உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம் வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யப் பெற்றுள்ளன.

    ஒரு சமூகத்திற்கு இலக்கியங்கள்தான் கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துகாட்டு ஆகும். உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருகும் பகிர்ந்துகொண்டு பின் வரும் சந்ததியினருக்குக் கொண்டுச் செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை ஆகும்.

    மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்கம் அல்லது தனியார் நிறுவன உதவியின்றி, வியபார நோக்க மின்றியும் நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி ஆகும். 1998 ஆம் ஆண்டு தமிழர் பொங்கல் திருநாள் அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்க வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களுக்கும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் கணினியைக் கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்ட பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்வதில் பங்கு பெறச்செயகின்றனர்.

    மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை, தமிழ் எழுத்துக்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால்1999 ஆம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றதிற்கான இணையம் வழி தீர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிட்டு வருகின்றது. 2003 ஆம் ஆண்டில் இருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

    தமிழ் இலக்கியங்களின் வரலாறு மிக பழமையானது. முதற்சங்க கால நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து.

    மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புகளை வெளியிட்டு வருகின்றது. தொன்றுதொட்டு சங்ககால நூல்கள் முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப் படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்கள் காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது ஆகும். காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம்.

    உலக மின்னூலகம்:
    உலக மின்னூலகம் என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரசு நூலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு மின்னூலகம் ஆகும். அனைத்துலக மற்றும் பல்வேறு கலாசாரப் புரிதல்களை ஊக்குவித்தல், இணையத்தில் கிடைக்கும் கலாசார உள்ளடக்கங்கள் அளவிலும், வகையிலும், அதிகமாக்குதல், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், ஆகியோருக்கு அறிவுசார் வளங்களை அளித்தல், பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் அறிவுசார் வளங்களை அதிகாpத்தல் அதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு இடையே உள்ள எண்ம இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை தனது நோக்கமாக உலக மின்னூலகம் கொண்டுள்ளது.

    உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் முதன்மைத் தகவல் ஆதாரங்களான வரைப்படங்கள் அரிய நூல்கள் இசைக் கோர்வைகள் திரைப்படங்கள், அச்சுவடிவங்கள், ஒளிப்படங்கள், வடிவியல், வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக இணையத்தில் கிடைக்கச் செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறது.

    உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது அரபி, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, போர்ச்சுகிசு, ரஷ்யன், ஆகிய மொழிகளில் கிடைத்த 1170 உருப்படிகளைக் கொண்டிருந்தது.

    வரலாறு:
    ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான யுனெஸ்கோ தனது நிலையான பிரதிநிதிக் குழுவை ஐக்கிய அமெரிக்கா மீள அமைத்தது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் நூலகர் முனைவர் ஜேம்சு.எச்.பில்லிங்டன், அந்நாட்டின் ஆணையாளராக யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்டார்.

    “ஜூன் 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ துவக்க நாள் கருத்தரங்கில் அழைப்பின் பேரில் சென்று உலக மின்னூலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார்.”5 அப்போது நிறுவனங்கள் நூலகங்கள் அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய உள்ளடக்கங்களை எளிதில் அணுகி இலவசமாகப் பெறக்கூடிய வகையில் புதிய வடிவில் திரும்ப இந்த உலகிற்கு அளிக்கத் தகுந்த அமைப்பாக உலக மின்னூலகம் செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.

    அரசு தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட உலக மின்னூலகத்தில் 2005 ஆம் ஆண்டு கூகுள் நிறுவணம் உதவியாக இருந்தது.

    பணிக் குழுக்கள்:
    பில்லிங்டன் தொலை நோக்கை நிறை வேற்ற ஒரு செயற் திட்டத்தைக் காங்கிரசு நூலகத்தில் உள்ள உலக மின்னூலக முது நிலை ஆலோசகர் முனைவர் ஜான் வான் ஔடென்ரேன் 2006 ஆம் ஆண்டு கருத்தரங்கில் வழங்கினார்.

    உலக மின்னூலகமானது தனது பங்குதாரர்களை முதன்மையான நான்கு திட்டப்பணிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
    அவை:
    • தொழில் நுட்ப கட்டமைப்பு
    • தேர்வு செய்தல்
    • நிர்வகித்தல்
    • நிதியளித்தல்

    2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைப்பெற்ற உலக மின்னூலக வளர்ச்சி குறித்த மாநாட்டில் இக்குறிக்கோள் வடிவமைக்கப்பட்டது. நான்கு திட்டப் பணிகளில் உள்ள தனிப்பட்ட சிக்கல்களை ஆராய தனித்தனியான பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

    2007 ஆம் ஆண்டு முதற்பகுதியில் ஒன்று கூடி மின்னூலகத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களையும் சேர்த்து கொண்டது.

    ஒவ்வொரு நாடுகளில் இருந்து பணிக்குழுவினருக்கு உதவி செய்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு உலக மின்னூலகம் தொடங்கப்பட்டது.

    காட்சிப்படுத்தல்:
    உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது பல்வேறு காட்சிப்படுத்துதல்கள் சேர்க்கப்பட்டன.
    அவை:
    • செஞ்யின் கதை
    • 11 ஆம் நூற்றாண்டு ஜப்பான் கதை
    • உலகில் முதன் முறையாக எழுதப்பட்ட புதினம்
    • குழந்தை ஏசுவின் முதல் அசுடெக் குறிப்புகள்
    • அல்ஜீப்ரா கணித வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த அரபு மொழி நூல்கள்.
    • எட்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆப்பிhpக்கா ஒவியமான ரத்தம் சிந்தும் மான்.
    • அமெரிக்கா சென்று முதன் முறையாக குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட வால்டுசீமுல்லர் வரைப்படம்.
    • மொழியில் பெயர்க்கப்பட்ட விவிலியம் ருசிய குருவால் அலுசியன்.
    • மாலி நாட்டில் கிடைத்த இசுலாமிய கையெழுத்துப் பிரதி.
    • லுமியர் சகோதரர்கள் உருவாக்கிய உலகின் முதல் திரைப்படம்
    • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு ஒளிப்படம்

    இது போன்று பல்வேறு நூல்களை உலக மின்னூல்கள் துவங்கப்பட்ட போது காட்சிப்படுத்தலின் போது சேர்க்ப்பட்டுள்ளன.

    தமிழ் இணையப் பல்கலைக் கழக நூலகம் – (Tamil Virtual University E – Library):
    உலகம் தழுவி வாழும் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் பயில விரும்பும் மாணவர்கள் முதலியோர் படித்துப் பயன்பெறும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின்நூலகம் ஒன்றை அமைந்துள்ளது. தொல்காப்பியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரையிலான 250 க்கும் மேற்பட்ட ஏறக்குறைய 1,00,000 பக்கங்களுக்கு மேல் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

    தமிழ் இணையப் பல்கலைக் கழக மின் நூலகத்தில் உள்ள நூல்களை உலகில் எவரும் எங்கிருந்தும் எப்பொழுதும் இணைய வழியாகப் படித்தப் பயன் பெறலாம். ஓர் நூலை ஒரே நேரத்தில் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் படித்தப் பயன பெறலாம். ஒருவர் வழக்கமான நூலகத்திற்குச் சென்று தமக்குத் தேவையான நூல்களைத் தேடிப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் நீங்குகின்றன.

    “அவசரமான உலகத்தின் அவசரம் கருதி காலம் பொன்னானது என்ற பொன்மொழியை மனத்தில் கொண்டு படிப்பவர்களின் நேர விரியத்தைத் தவிர்க்கும் வகையில் இந்நூலகம் அமைக்கப்படுகின்றது.” அரிய வசதிகள் கொண்ட இம்மின் நூலகத்தை விரும்புகின்ற அனைவரும் தற்பொழுது கட்டணம் ஏது மின்றி முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மின் நூலகமானது இலக்கண, இலக்கிய நூல்கள் உரோமன் வரி வடிவத்தமிழ் நூல்கள், அகராதிகள், கலைச்சொல், தொகுப்புகள், ஒளிக்காட்சித் தொகுப்புகள் என்ற வகையில் பகுக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக நூலகத்தில் நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் ஆனால், இம்மின் நூலகத்தில் தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும், தமிழர்களின் இறை உணர்வைப் புலப்படுத்துகின்ற சைவ, வைணவக் கோயில்களின் ஒலி, ஒளிக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தமிழர்களின் சமயப் பொறைக்கு எடுத்துக்காட்டாக இம்மின் நூலகத்தில் இசுலாமிய மற்றும் கிறித்துவ ஆலயங்களின் ஒலி, ஒளிக்காட்சிகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

    உள்ளடக்க மின்னூல்கள்:
    தமிழ் இணைய பல்கலைக் கழக மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ள நூல்கள் இலக்கண நூல்கள், சங்க இலக்கியம், பதினெண் கீழ்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு, நூல்கள், நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் உரைநடை, நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்னும் வகைப்பாட்டு முறைமையில் பகுத்தமைக்கப்பட்டுள்ளன.

    இலக்கண நூல்கள்:
    • தொல்காப்பியம்
    • புறப்பொருள் வெண்பாமாலை
    • யாப்பருங்கலம்
    • யாப்பருங்கலக்காரிகை
    • தண்டியலங்காரம்
    • நன்னூல்
    • நம்பியகப் பொருள்
    • தொன்னூல் விளக்கம்
    • இலக்கண விளக்கம்
    • தமிழ் நெறி விளக்கம்
    • சிதம்பரப்பாட்டியல்
    • நவநீதப்பாட்டியல்
    • வீரசோழியம்
    • தமிழ் நூல்
    • முத்துவீரியம்
    • சுவாமிநாதம்
    • நேமிநாதம்
    • அறுவகை இலக்கணம்
    இவை அனைத்து இலக்கண நூல்களுக்கு உரையுடன் அமைந்துள்ளன.

    இலக்கிய நூல்கள்:
    தமிழ் இணைய பல்கலைக் கழக நூலகத்தில் 52 இலக்கிய நூல்கள் உரையுடன் இடம் பெற்றுள்ளன.
    • சங்கஇலக்கியம்
    • பதினெண்கீழ்க்கணக்கு
    • ஐம்பெங்ருகாப்பியங்கள்
    • ஐஞ்சிறுகாப்பியங்கள்
    • பெருங்கதை
    • கம்பராமாயணம்
    • வில்லிபாரதம்
    • அரிச்சந்திர புராணம்
    • காஞ்சிப் புராணம்

    சமய இலக்கியங்கள்:
    சமய இலக்கிய நூல்கள் சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாமியம் என்ற வரிசையில் அமைந்துள்ளன.

    சைவம் –
    • பன்னிரு திருமுறைகள்
    • திருவிளையாடற் புராணம்
    • கந்தபுராணம்
    • கல்லாடம்
    • மெய்கண்டசாத்திரங்கள்
    • திருமுறைத் தலங்கள்

    வைணவம் –
    • நாலாயிர திவ்யபிரபந்தம்
    • 108 வைணவ திவ்யதேச ஸ்தலவரலாறு

    கிறுத்துவம் –
    • தேம்பாவணி
    • இரட்சணிய யாத்திரிகம்
    • திரு அவதாரம்
    • இயேசு காவியம்
    • இரட்சணிய மனோகரம்

    இசுலாம் –
    • சீறாப்புராணம்
    • நெஞ்சில் நிறைந்த நபிமணி
    • நாயகம் எங்கள் தாயகம்
    • யூசுப் ஜீலைகா
    • நாயகம் ஒரு காவியம்

    சிற்றிலக்கியங்கள்:
    • கலம்பகம்-கச்சிக்கலம்பகம்
    • உலா-மூவருலா
    • தூது-அழகர் வீடுதூது
    -தமிழ்வீடுதூது
    • கோவை – தஞ்சைவாணன் கோவை
    • பிள்ளைத்தமிழ்-சேக்கிழார்ப் பிள்ளைத் தமிழ்
    -திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    -மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
    • பரணிஇரணியவதைப் பரணி
    -கலிங்கத்துப்பரணி
    • அந்தாதி – அபிராமி அந்தாதி
    -திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
    • சதகம் – தண்டலையார் சதகம்
    -அறப்பளீசுர சதகம்
    -குமரேச சதகம்
    -கொங்கு மண்டல சதகங்கள்
    • வெண்பா – நள வெண்பா
    • குறவஞ்சி – திருக்குற்றாலக் குறவஞ்சி
    -தியாகேசர் குறவஞ்சி
    • பிரபந்தம் – அஷ்டபிரபந்தம்
    • ஆற்றுப்படை – புலவராற்றுப்படை

    திரட்டு நூல்கள்:
    குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு 12 நூல்களும், சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு 24 நூல்களும், இராமலிங்க அடிகளின் திருவருட்பா, தாயுமானவரின் தனிப்பாடல்கள் உள்ளிட்ட 38 நூல்கள் உரையுடன் அமைக்கப்பட்டுள்ளன.

    நெறி நூல்கள்:
    மனிதர்களை நெறிப்படுத்தும்நோக்கில் நெறிநூல்கள் உருவாக்கியுள்ளார். அவ்வகை நுல்கள்
    • ஆத்திசூடி
    • கொன்றை வேந்தன்
    • மூதுரை
    • நல்வழி
    • வெற்றிவேற்கை
    • உலகநீதி
    • நீதி நெறி விளக்கம்
    • அறநெறிச்காரம்
    • நீதிநூல்
    • சித்தர் இலக்கியங்கள்

    இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் கவிதை:
    • பாரதியார்
    • பாரதிதாசன்
    • வேதநாயகம்பிள்ளையின் பெண்மதி மாலை
    • கவிஞர் முடியரசனின் பூங்கொடி
    • தமிழ் ஒளி கவிதை

    இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் உரைநடை:
    சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, என்ற முறையில் நூல்களை அமைத்துள்ளது.
    • சிறுகதை – பாரதியார்கதைகள்
    • புதினம் – அகல் விளக்கு (மு.வ)
    -சமுதாய வீதி (நா.பார்த்தசாரதி)
    -வேங்கையின் மைந்தன் (அகிலன்)
    • நாடகம் – மனோன்மணீயம்
    • கட்டுரை – புத்தர் அருளிய தம்மபதம்
    • திறனாய்வு – அறமும் அரசியலும் (மு.வ)
    -இலக்கிய ஆராய்ச்சி (மு.வ.)
    -தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் (மயிலை சீனி.வேங்கடசாமி)
    -பதினெண் கீழ்கணக்கும் தமிழர் வாழ்வும் (சாமி.சிதம்பரனார்)
    -பாரதியார் கட்டுரைகள்
    -பாவாணர் படைப்புகள் (30 நூல்கள்)

    வரலாறு:
    மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு, நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள், என பல இலக்கிய நூல்கள் அமைந்துள்ளன.

    மொழி வரலாறு:
    தமிழ் மொழிவரலாறு (தொ.பொ.மீ)

    இலக்கியவரலாறு:
    • சமணமும் தமிழும் (மயிலை சீனி.வேங்கடசாமி)
    • தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ.)
    • பௌத்தமம் தமிழும் (மயிலை சீனி.வேங்கடசாமி)
    • விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு (மா.பொ.சி)

    வாழ்க்கை வரலாறு:
    • என்சரித்திரம் (உ.வே.சா)

    நாட்டுவரலாறு:
    • குடியாட்சி (அப்பாதுரை)
    • தமிழகம் (கா.அப்பாதுரை)
    • தமிழ் இந்தியா (ந.சி.கந்தையாபிள்ளை)
    • தொண்டு (கா.அப்பாதுரை)

    நாட்டுப்புற இலக்கியங்கள்:
    • தமிழர் நாட்டுப் பாடல்கள் (நா.வானமாமலை)
    • மலையருவி (கி.வா.ஜகநாதன்)
    • முத்துப்பட்டன் கதைப்பாடல் (நா.வானமாமலை)

    சிறுவர் இலக்கியங்கள்:
    • வாண்டுமாமா படைப்புகள் (கதைகதையாம் காரணமாம்)

    உரோமன் வரிவடிவ நூல்கள்:
    தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் முழுமையாக உரோமன் வரி வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

    அகராதிகள்:
    தமிழ் இணைய பல்க்கலைக்கழக மின் நூலகத்தில் இலக்கண, இலக்கிய நூல்களேயன்றிச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் – தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, மு.சண்முகம்பிள்ளையின் தமிழ் – தமிழ் அகரமுதல் ஆகிய நான்கு அகராதிகள் இடம் பெற்றுள்ளன. சொற்களுக்கான பொருளை அகர வரிசை முறையிலும், வேண்டிய சொற்களுக்கான பொருளைத் தேடிப் பெறும் வகையிலும், அச்சுவடிவ அகராதியைப் பார்ப்பதைப் போலவே பக்கம் பக்கமாகப் பார்க்கும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கலைச்சொற்கள்:
    சமுதாயவியல், கலை மானிடவியல், அறிவியல், மருத்துவவியல், தகவல் தொழில் நூட்பவியல், சட்டவியல், கால்நடை மருத்துவவியல், பொறியியல் தொழில் நுட்பவியல், மனைஇயல், உயிரியத் தொழில் நுட்பவியல், வேளான்மைப் பொறியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த அளவுகடந்த கலைச்சொற்கள் இந்நூலகத்தில் அடங்கியுள்ளது.

    சுவடிக் காட்சியகம்:
    ஓலைச்சுவடிகள் உள்ள தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்கும் வகையிலும் இம்மின்னூலகம் பணியாற்றி வருகிறது. ஓலைச் சுவடிகளைஒளிப்பட நகல் எடுத்துப் பாதுகாத்து வருகிறது. ஓலைச்சுவடிகள் மட்டுமன்றிச் சில அரிய காகிதச் சுவடிகளையும் பாதுகாத்து வைப்பதோடு அவற்றை இணையம் வழியாகக் காட்சிக்கும் அளிக்கிறது. அவ்வகையில் கீழ்க்காணும் ஓலைச்சுவடிகள் காணக்கிடைக்கின்றன.

    பண்பாட்டுக் காட்சியகம்:
    தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பின்வரும் பகுதிகள் அமைந்துள்ளன. ஒவ்வொன்று பற்றியும் சுருக்கமான விளக்கம், படக்காட்சிகள், ஒலி ஒளிக் காட்சிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    திருத்தலங்கள்:
    • 14 சமணத்தலங்கள்
    • 101 சைவத்தலங்கள்
    • 93 வைணவத்தலங்கள்
    • 9 இசுலாமியத் தலங்கள்
    • 13 கிறித்துவத் தலங்கள்

    திருவிழாக்கள்:
    • 7 தேர் திருவிழாக்கள்
    • 8 பல்வேறு விழாக்கள்

    கலைகள்-16 வகையான கலைகள்
    வரலாற்றுச் சின்னங்கள் – 3 சின்னங்கள்
    விளையாட்டுகள்-5 வகையான விளையாட்டுகள்

    தமிழ் மொழியில் இன்று பரவலாக இருக்கும் நூல்களை அனைத்தும் மின்னூலாக மாற்றி வருகின்றனர். மின்னூல்களை ஒரு கட்டமைப்பாக வைப்பதற்கு மின்னூலகங்கள் உருவாக்கினர். அந்நூலகத்தின் மூலமாக பல மின்னூல்களை வெளியிட்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் கட்டமைக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்த்து விட்டு மின்னூல் படிக்கும் முறை அதிகமாக வளர்ந்து வருகின்றன.

    _________________________________________

    பார்வை நூல்கள்:
    • http://ta.wikipedia.org/s/w97
    • http://ta.wikipedia.org/s/94p
    • இணையமும் இனிய தமிழும் – க.துரையரசன்

    _________________________________________

    க.பிரகாஷ்
    தமிழ்த்துறை
    தொழில் நுட்ப கள ஆய்வு பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

    _________________________________________

    படம் உதவி: https://www.nsf.gov/news/news_summ.jsp?cntn_id=110947

    Share
  • இணையம்

    — க. பிரகாஷ்.

    இணையம் இன்று உலக முழுவதிலும் பலகோடி மக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுக்கண்டுபிடிப்பு என்று கூறலாம். மிகப் பழைய தகவல்களையும், இன்று புதிதாகத் தோன்றக் கூடிய பல புதிய தகவல்களையும் பெற இணையம் உதவி வருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.

    இணையத்தில் படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தகவல்களைச் சேமித்து வைத்துள்ளார்கள். அவை இலக்கியம், இலக்கணம், திரைப்படம், வரலாறு, புவியியல், வானியல், அறிவியல், கணிதம், சோதிடம், பக்தி, பொதுஅறிவு, மருத்துவம், சித்தம், யோகம், சமையல்குறிப்பு, ஓவியக்கலை, விளையாட்டு போன்ற எண்ணற்ற தலைப்புகளில் தகவல்களாகவும், நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.

    உலகெங்கும் சிதறிக் கிடைக்கும் தகவல்களை இணையத்தில் இணைத்துவிட்டால் யாரும் எந்த நேரமும் சென்று அத்தகவல்களைப் பெற முடியும். முற்காலத்தில் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நூலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய சூழல் இருந்தது. இப்பொழுது தேவையான ஒன்றையோ அல்லது கருத்தையோ, ஒருவர் பற்றிய தகவல்களையோ, தெரிந்து கொள்ள நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் கையடக்கக் கருவியான அலைபேசி மற்றும்  திறன்பேசி, நுண்ணறிபேசி, வில்லை, மாத்திரை, மடிக்கணினி, கணினி போன்றவற்றில் இணைய வசதிபெற்று கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    இணையத்தில் செய்திகள் படிக்கலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம், தகவல் பரிமாறலாம், பொழுதுபோக்கலாம், அறிவைப் பெருக்கலாம். இது போன்ற பல தகவல்களைப் பெற்று மனநிறைவு பெறச்செய்வது இணையமாகும். அந்த அளவிற்கு இணையம் இன்று வளார்ந்து கொண்டே வருகின்றது.

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

    திண்ணியர் ஆகப் பெறின்” ( குறள் – 666)

    என்ற குறளில் எண்ணியவர் எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது போல் நீங்கள் எதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அதனை இணையத்தில் சென்று ஒரு சில நொடிகளில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.

    இணையம் சொற்பொருள்:

    உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னணு வலையில் சங்கிலிப்பிணைப்பு செய்யப் பெற்று ஒன்றாக்கப்பட்டது தான் இணையம். உலகெங்கும் கணிப்பொறியில் உள்ள செய்திகளின் இணைப்பே இணையம் ஆகும். உலகளாவிய வலை இதனை ஆங்கிலத்தில் World Wide Web என்பர். இதனைச் சுருக்கமாக WWW என்றும் W3 The Web என்றும் குறிப்பிடுவதுண்டு.

    இணைய வரலாறு:

    இன்றைய உலகம் இணைய வழிகாட்டுதலின்படி பீடுநடை போடுகிறது எனில் அது மிகையன்று. 1950 ஆம் ஆண்டிற்கு அண்மையில், தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயன்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர்.

    இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகளை வரிசைப்படுத்தும் முறைகள் மற்றும் தரவுப்பொது நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினார்.

    இணையத் தந்தை என ஜே.சி.ஆர்.லிக்லைடர் என்பவரை அழைக்கின்றனர்.

    அரியக்கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் பிரிட்டானிய நாட்டு அறிஞர்களான “சார்லஸ் காவ் மற்றும் ஜார்ஜ்ஸ் ஹாக்மேன்” ஆகியோர் ஆவார்.

    1980 இல் பிரான்ஸ் நாட்டில் மினிடெல் என்பவர் தொலைபேசிக் கம்பி வழியிலான தகவலறியும் சேவையைத் துவக்கினார் 1992 நவம்பர் மாதம் டெல்ஃபி என்ற நிறுவனம் பெரிய அளவிலான தகவல் சேவையைத் தொடங்கியது.

    1993 செப்டம்பர் 15 இல் மிகப்பெரும் அளவிலான தேசியத் தகவல் பரவலுக்கான திட்டம் ஒன்றை அமெரிக்க அரசு வரைவு செய்தது.

    1993 இல் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் (National Centre for Super Computing) என்ற மையத்தைச் சார்ந்த மாணவர்கள் பல வசதிகள் கொண்ட இணையத் தேடலுக்கான மென்பொருள் திரையைக் கண்டறிந்தனர். இது மொசைக் என்றழைக்கப்பட்டது. இதனை மார்க் ஆண்டர்சன் மொசைக் என்பவர் கண்டறிந்தார்.

    1996 இல் ஃபைபர் நூலிழையின் உதவியால் தகவல்களை ஒளிப் பிம்பங்களாக மாற்றி நெடுந்தொலைவு அனுப்ப முடியும் என்று கண்டுபிடித்தனர்.

    வலைப்பின்னல் மையம்:

    வலைப்பின்னல் என்பது மீள்கருவி மையம் என்று குறிப்பிடுவர். பல சுருளிணைகள் ஒளியிழை, ஈத்தர்நெட் கருவிகளை ஒன்றாக இணைத்து அவற்றை ஒற்றை வலைப்பின்னல் கூறாகச் செயல்பட உதவும் கருவியாகும்.

    1994 இல் WWW என்ற வலைப்பின்னலாக அமைந்த அமைப்பு உலகின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் கருவியாக உருமாற்றம் பெற்றது. இதன் மூலம் தகவல்களை மட்டுமல்லாத படங்களையும் பார்க்க முடிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சொ்ன் என்னும் அணுத்துகள் இயற்பியல் நிறுவனம் உலகு  தழுவிய விரிவு வலைமுறையைக் கொண்டு வந்தது.

    1995 இல் கொரிய நாட்டில் பிறந்த பின் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நாம் ஜீன் பெய்க் (Nam Jun Paik) எப்பர் டவுன்  (Yber Town)  என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களை இணைத்தார்.

    இணையத்தை வழிநடத்துவோர்:

    இணையத்தைத் தனிமனிதரோ அல்லது குழுவோ கட்டுப்படுத்துவதில்லை எனினும் இணையத்தினை வழிநடத்த இணையக் கழகத்தைக் கணினி வல்லுநர்கள் இலாப நோக்கமின்றி நடத்தி வருகின்றனர். அவற்றுள் IAB, IETF ஆகிய இரண்டு கழகங்கள் குறிப்பிடத்தக்கன.

    IAB   –           Internet Architecture Board

    IETF –           Internet Engineering Test Force

    IAB  –  என்பது கணினிகளை இணையத்தில் இணைப்பதற்கான வரையறையாகும். இணையத்தில் இணைந்துள்ள கணினிகளுக்கு முகவரிகளை இது வழங்குகிறது. மேலும் தேவைப்படுகின்ற நேரங்களின் தேவைக்கேற்ப வரையறைகளை மாற்றி அமைக்கும் பணியையும் இக்கழகம் செய்கிறது.

    IETF  –  என்பது கணினியின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் அதனால் இணையத்தில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்கள் குறித்தும் முடிவு செய்கிறது.

    இணைய விதிமுறைகளைக் கண்காணிப்பதற்காக The Internet Society Overseas for the Development of the Internet என்ற அமைப்பும் இணையத் தளங்களை மேற்பார்வையிடுவதற்காக World Wide Web Consortium என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றன.

    இணைய வசதி வழங்குவோர்:

    இணைய வசதிகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கட்டணம் செலுத்தி இணைய இணைப்புப் பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஆங்கிலத்தில் Service provider என்று அழைக்கப்படும். தமிழில் சேவை வழங்குநர் என்று கருதப்படுவதுண்டு.

    அமெரிக்காவில்  GTR, MCI, SEINT, UUNET, AOL ஆகிய நிறுவனங்கள் இணையச்சேவையை வழங்குகின்றன. இந்தியாவில் VSNL, BSNL, DISHNET, STFY, AIRTEL, RELIANCE, TATA INDICOM முதலிய பல நிறுவனங்கள் இச்சேவையை அளிக்கின்றன.  இணையச்சேவை வசதி என்று குறிப்பிடுவதுண்டு.

    இணைய இணைப்பு பெறத் தேவையானவை:

    இணைய இணைப்பு பெறுவதற்குக் கணினி, தொலைபேசி, இணைப்பு மாற்றி (Modem) ஆகிய மூன்றும் இருந்தால் போதும், இணைய வசதி பெற்றிடலாம். இணைய வசதி வழங்கும் நிறுவனங்களிடம் கட்டணம் செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் அளவிற்கேற்ப உரியத் தொகையானது முன் தொகையாகவோ பின் தொகையாகவோ செலுத்தப்பட வேண்டும்.

    இணைய முகவரி:

    ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் மற்றும் முகவரி இருப்பது போல் ஒவ்வொரு இணையதளத்திற்கும் ஒரு பெயர் மற்றும் முகவரி இருக்கிறது. இதனை இணைய முகவரி என்று கூறுவதுண்டு. http://www.prakashtamil.blogspot.com  இம்முகவரியில் ஐந்து பகுதிகள் உள்ளன.

    http – Hypertext transport protocol என்பதன்  சுருக்கமாகும் (மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை)

    www – Worldwide web  என்பதன் சுருக்கமாகும் (வைய வரி வலை)

    prakashtami – குறிப்பிட்ட ஓர் இணையதளத்திற்கு வழங்கப்படும் பெயர் ஆகும்.

    blogspo – தனியார் நிறுவனத்தின் பெயர்

    com – Commerce என்பது சுருக்கமாகும். இணையதளத்தின் தன்மையைக் குறிப்பிடுவதாகும்.

    “சுவிட்சர்லாந்து நாட்டில் செர்ன்’ என்னும் அணுத்துகள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்கு டிம் பெர்னர்லீ என்ற இயற்பியல் வல்லுநர் பணியாற்றினார். இவர் 1989 இல் உலகளாவிய வலைப்பின்னலுக்கு WWW  – world wide web என்ற பெயரிட்டார்.”

    டிம்பெர்னா் லீ இணையத்துக்கு அடிப்படையான மூன்று கருத்துக்களை கண்டுபிடித்தார்.

    Internet-1(1)

    அவை:

    http

    url

    html

    http – Hypertext transfer protocol என்பதன் சுருக்கமே ஆகும். (மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை)  வையக வலையில் தகவலைப் பெறுவதற்கான விதிமுறை புரோட்டோக்கோல் எனப்படும். தொடக்கம், செய்தி, படம்,  எழுத்து, முடிவு இவையென இந்த விதிமுறைகள் மூலம் முன்பே தீர்மானித்தார்.

    URL – Uniform Resource Locator என்பதன் சுருக்கம் ஆகும். சீரான தள இடங்காட்டி இணையத்தில் உள்ள தகவலின் இருப்பிடம் காட்டும் முகவரியே இதுவாகும். இந்த முகவரியைப் பயன்படுத்தியே உலாவிகள் இணைய தளங்களைக் கண்டறிகின்றன. http;//www.Google.com என்பது சீரான தவள இடங்காட்டிகளுள் ஒன்று ஆகும்.

    HTML – Hyper Text Markup Language என்பதன் சுருக்கம் ஆகும். மீயுரைக் குறிப்பு மொழி இணையத்தில் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குத் தாவிச் செல்ல குறிப்புகள் எழுதவேண்டும். இந்த குறிப்புகள் எழுதும் மொழியே மீயுரைக் குறிப்பு மொழி ஆகும். ஆவணத்தில் இரு பகுதிகள் உண்டு.

    அவை:

    தலை

    உடல்

                    தலைப்புப்பகுதியில் ஆவணத்தின் தலைப்பும் உடல் பகுதியில் ஆவணமும் இருக்கும். 1991 மே மாதம் இந்த வையக விரிவு வலை அறிமுகமானது. காலாகாலத்திற்குச் சேமிக்க முடிவதால் இப்பொழுது வலையேகதி என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது.

    இணைய முகவரியும் இணையச் செயல்பாடும்:

    ஒவ்வொரு தொலைபேசி இணைப்பிற்கும் ஓர் எண் இருப்பதுபோல இணையத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு கணிப்பொறிக்கும் ஓர் அடையாள எண் உண்டு. இந்த எண்ணில் நான்கு பகுதிகள் இருக்கும். சான்றுக்கு 456-12-25-78 என்பது ஒரு முகவர் கணிப்பொறியின் அடையாள எண் ஆகும். இந்த அடையாள எண்களை நினைவில் வைத்திருப்பது கடினம். எண்ணிற்குப் பதிலாக எழுத்திலான பெயரைப் பயன்படுத்துகிறோம்.

    நமக்குத் தேவையான முகவரியை உள்ளிட்டால் தேடும் பொறி அந்தக் கணிப்பொறியைக் கண்டுபிடித்து நம் கணிப்பொறித் திரையில் காட்டும். இதற்கு யாகு, கூகிள், அல்டாவிஸ்டா எனப் பல தேடும்பொறிகள் உள்ளன.

    இணையச் செயல்பாடு:

    இணைய இணைப்பைப் பெறத் தேவையானவை சில கருவிகள் உள்ளன. அவை:

    கணிப்பொறி – Computer

    தொலைபேசி – Tele communication

    மாற்றி – Modem

    தொடர்பு மென்பொருள் – Communication Software

    இணையச் சேவை வழங்குபவர் – Internet Service Provide

    இது போன்ற கருவிகளின் மூலம் இணைய வசதிகள் பெற முடிகின்றது. தொலைபேசி வழியே இணையத்தைப் பயன்படுத்துவதில் தொடர்பு மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன. இப்பொழுது ஒளியிழைத் தடங்கள் வழியே இணைய இணைப்பை எளிதிலும் விரைவாகவும் பெறமுடிகிறது.

    கணிப்பொறியில் இணையச் சேவை பெறுவதற்கு முன்பே இணையம் செயல்படுவதற்கான மென்பொருள்களைப் பொருத்தி இருக்க வேண்டும். Landline net தொலை நிகர வசதியாகவும், Modem மாற்றி போன்ற முறையிலும் இணையச் சேவை கணிப் பொறியில் பெறமுடியும்.

    இணையக்குறியீடுகள்:

    இணையக்குறியீடு என்பது ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் வெளிநாட்டிற்கும், கல்வி, பல்கலைக்கழகம், இராணுவம் போன்ற பல நிறுவனங்களின் விரிவான பெயர்களை தான் இப்பொழுது இணையத்தில் சுருக்கமாக வடிவமைத்துக் குறிப்பிட்டுள்ளனர்.

    அவை:

    கல்வி – edu

    பல்கலைக்கழகம் – univ

    அரசு சாராநிறுவனம் – org

    இராணுவம் – mil

    வலைப்பராமரிப்பு – net

    அரசாங்கம் – gov

    தமிழ்நாடு – tn

    இந்தியா – in

    சிங்கப்பூர் – sg

    கனடா – ca

    இங்கிலாந்து – uk

    ஒருவருக்கு எழுதப்படுகின்ற கடிதங்களில் சரியான முகவரி இருந்தால் அக்கடிதம் உரியவருக்கு உரிய நேரத்தில் சென்று கிடைக்கும். முகவரி சரியாக இல்லை என்றால் அக்கடிதம் உரியவருக்குச் சென்று சேர்வதில் காலதாமதம் ஏற்படும்.

    பல நேரங்களில் அது உரியவருக்குக் கிடைக்காமலேயே போய்விடும். கடிதத்தில் முகவரியே இல்லையென்றால் அக்கடிதம் யாருக்குமே சென்று சேராது.

    இணையதள முகவரி சரியாக இருந்தால் அத்தளத்தைச் சரியாகச் சென்றடையலாம். முகவரி சரியாக இல்லையென்றால் உரிய இணையதளத்தை உரிய நேரத்தில் சென்றடைவது கடினம். முகவரியே இல்லையென்றால் இணையதளத்தை அடையவே முடியாது.

    ஒவ்வொரு இணையதளமும் எளிதில் அடையும் வகையில் ஒவ்வொரு இணையதள முகவரியைக் கொண்டு விளங்குகின்றன. நாம் எளிதில் மனதில் பதியவைத்து கொள்ளும் வகையில் முகவரிகள் அமைந்திருந்தாலும் கணினிக்கு முகவரிகள் தெரியாது.

    முகவரிகளைக் கணினி எண்களைக் கொண்டே அடையாளம் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக 212.58.240.32 என்ற எண் ஒரு முகவரியின் இணையதளத்தைக் குறிக்கிறது. இதனை IP முகவரி என்று கூறுவதுண்டு. Internet Protocol என்பதன் சுருக்கம் IP ஆகும்.

    இணையத்தில் தகவல் தேடும் வசதிகள்:

    விரிந்து பரந்த இந்த உலகத்தில் ஒருவருக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப்பிடித்தல் என்பது எளிதன்று. ஆராய்ச்சி தொடர்பாக ஒருவர் நூலகத்திற்குச் சென்று தனக்கு வேண்டிய ஒரு நூலைத் தேடினால் அந்நூல் அங்கு இருக்கலாம், இல்லாமல் போகலாம், இருந்து யாராவது எடுத்துப் போயிருக்கலாம் இருந்தும் கூட நம் பார்வைக்கு வைத்தும் கிடைக்காமல் போகலாம்.

    இணையம் என்பது அவ்வாறு அல்ல; தேடிய நேரத்தில் தேடியதைக் கண் முன்னே கொண்டு வந்து குவித்துவிடும். சில வேளைகளில் நாம் ஒன்றைத் தேட அதனைக் கொண்டு வந்து தருவதோடு மட்டுமன்றி அதனோடு தொடர்புடைய மேலும் பல தகவல்களை அள்ளித் தந்து நம்மை வியக்கவைக்கும் வகையில் இருக்கின்றது. ஆய்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு இணையம் மிகச்சிறந்த வழிகாட்டுதலாகவும் அமைகிறது.

    வேண்டியதை வேண்டியவாறு மட்டுமன்றி கூடுதலாகவும் அதே வேளையில் தனியொரு மனிதனோ அல்லது ஒரு குழுவினரோ தேடிக் கண்டுபிடிக்க முடியாதவற்றையும் மிகுந்த காலம் தேவைப்படுகின்ற தேடுதல்களைக்கூட மிக எளிதாகவும் விரைந்தும் செய்து முடிகின்ற ஆற்றல் வாய்ந்ததுதான் இணையம்.

    சிறப்பு மிக்க தேடுதல் வசதிகளைப் பல நிறுவனங்கள் இணையப் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.

    தேடு பொறிகள்:

    அலெக்ஸா                    Alexa

    கூகிள்                              Google

    யாஹூ                           Yahoo

    ஸ்டார்வர்                      Starware

    தமிழ் தேடல்                 W3 tamil Search

    மொசிலா ஃபையர் ஃபாக்ஸ் Mozilla Firefox

    எம்.எஸ்.என்                 MSN

    அல்டாவிஸ்டா           Alta vista

    பிங்கு                              bing

    ஆஸ்க்.காம்                 com

    இவ்வாறு தேடு பொறிகளின் உதவியால் வேண்டிய செய்திகளைச் சில நொடிப் பொழுதில் இருந்த இடத்தில் இருந்தவாறே எளிதில் பெற முடியும்.

    தேடு பொறியினால் விளையும் சில நன்மைகள் இருக்கின்றன. அவை கால விரயத்தினைத் தவிர்க்கலாம். குறைந்த செலவில்  தகவல்களை விரைந்து பெறலாம். கூடுதல் தகவல்களையும் பெறலாம். தமிழ் மொழி வழியாகவும் தேடலாம்.

    இணையத்தில் கலந்துரையாடல்:

    இணைய வழிக் கலந்துரையாடல், இணையவழி அளவளாவுதல், இணையவழி பொழுது போக்குதல் என்று கூறுவர்.

    பொழுது போக்கிற்காக நண்பர்கள் ஒன்று கூடி எதனையோ பற்றி பொழுது போக்காகப் பேசி மகிழ்வது ஆகும். இதில் மகிழ்ச்சியும் பொழுது போக்குமே முதன்மை நோக்கமாக இருக்கும்.

    இணையவழிக் கலந்துரையாடல் என்பது ஏதேனும் ஒரு பொருள் பற்றி ஆக்கப்பூர்வமான முறையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணையம் வழிக் கூடிப் பேசுவது ஆகும். இக்கலந்துரையாடலுக்கு இ – குழு (e – Group) என்று குறிப்பிடுகின்றனர். இக்குழுவில் நண்பர்கள் ஓய்வான நேரங்களில் அமர்ந்து கொண்டு கணினியிலோ அலைப்பேசியிலோ நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவதும் தகவல்கள் பரிமாறுவதும் போன்ற உணர்வையும் மகிழ்ச்சியையும் இம்முறையின் வழியாகப் பெற இயலும் என்பர்.

    பல நிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்ற அவ்வகையில் www.chatting.com என்ற இணையதளம் குறிப்பிடத்தக்கது.

    இணையத்தின் பயன்கள்:

    இணைய உலகம் உண்மையிலேயே விந்தையானது ஒருவருக்கு ஓரளவு நேரமும் இணையத்தில் உலாவுவதற்குப் புரிதலும் இருந்து விட்டால் உலகையே அவன் தன் கைகளுக்குள் கொண்டு வந்து விடலாம்.

    இணையம் விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகையே நம் வீட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் வாய்ந்தது.

    இறந்தது காத்தல் எதிரது போற்றல்”  – (தொ.பொ.மரபு) 1610

    இணையத்தின் வழி புதியன புகுந்து, அறிவுப் பெருக்கி, சிந்தனை செழிக்கச் செய்கிறது. இதன் மூலம் தகவல்களைப் பெறலாம், அளிக்கலாம், வாங்கலாம், கல்வி பயிலலாம், பயிற்று விக்கலாம், எவரும் – எங்கிருந்தும் – எந்தத் தகவல்களையும் 24 மணி நேரமும் நாடு, இனம், மொழி, என்ற எத்தகைய வேறுபாடுகளும் இன்றிப் பெறும்  ஊடகமாக இணையம் விளங்குகிறது.

    இதன் மூலம் தொலைவில் இருப்பவர்களைக் கண்காணிக்க முடியும். இவற்றின் வழி சாதனங்களையும் தகவல்களையும், கருத்துக்களையும் பகிர முடியும்.

    இணையத்தில் அ முதல் ஔ வரை எந்தச் செய்தியையும் பெற முடியும். இணைய தளத்தை நல்ல  நண்பனாகவும், எவ்வளவு நேரம் உறவாடினாலும் சலிப்பு ஏற்படாமல் உற்சாகம் குறையாத உணர்விலும் தகவல்களை அளிக்கும் வகையில் இணையம் திகழ்கிறது.

    _____________________________________________________

    பார்வைநூல்கள்:

    திருக்குறள்  உணர்வுரை              –              இரா. கனகசுப்பரத்தினம்

    தமிழில் இணைய இதழ்கள்        –              அண்ணா கண்ணன்

    தொல்காப்பியம்                               –              தமிழண்ணல்

    _____________________________________________________

    .பிரகாஷ்

    தமிழ்த்துறை

    தொழில் நுட்ப கள ஆய்வுப் பணியாளார்

    பாரதியார் பல்கலைக்கழகம்

    கோயம்புத்தூர் – 46

    _____________________________________________________

    Share
  • போயர் இன மக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகள்

    –க. பிரகாஷ்.

    7

    தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் வட்டத்தைச் சார்ந்த சந்தப்பட்டி ஊராட்சி மற்றும் சந்தப்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் போயர் இன மக்களின் தெய்வ வழிபாட்டு முறைகளும் சடங்குகளும், பிற இன மக்களின் வழிபாட்டு முறைகளுடனும், சடங்குகளுடனும் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. சந்தப்பட்டி கிராமப் பகுதிகளில் வசிக்கும் போயர் இன மக்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருவிழா கொண்டாடுகிறார்கள். வெளியூர்களுக்குச் சென்று கூலித் தொழில், கட்டிடம்கட்டுதல், கல்கட்டுதல், விவசாயம் போன்ற தொழில்கள் செய்து வரும் இவர்கள் விழாக்காலங்களில் மட்டுமே சொந்த ஊருக்கு வருகின்றார்கள். இக்கிராமத்தில் இவ்வினத்தைச் சார்ந்த நூற்று இருபது குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவ்வூர் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அங்காளி பங்காளிக்கு ஒரு கோயில் என்ற முறையில் இரண்டு பொரிய கோயில்களும் (அத்தெய்வங்களைப் பெருந்தெய்வங்களாகவும்), ஊருக்கு பொதுவாக இரண்டு சிறு கோயில்களும் (இத்தெய்வங்களைச் சிறுதெய்வங்களாகவும்), மேலும் ஒரு மாரியம்மன் கோயிலும் (அம்மனைப் பெருந்தெய்வமாகவும்) வழிப்படுகிறார்கள்..

    கோயில்கள்:
     வீரமத்தி கோயில்
     சின்னம்மாள் கோயில்
     பத்தரகாளியம்மன் கோயில்
     பிள்ளைமுனி கோயில்
     மாரியம்மன் கோயில்

    பூசாரியின் பெயர்கள்:
    சாமிக்கண்ணு, சம்பத் இவர்கள் இரண்டுபேரும் கோயில் பூசை செய்யும் பூசாரிகள். மற்ற பூஜைகளுக்கென தனி பூசாரிகள் இருக்கின்றனர் அவர்கள் சத்தி பூசாரி, கரக பூசாரி, கத்தி பூசாரி, பேய் ஓட்டும் பூசாரி, (கருப்பு ஓட்டும் பூசாரி) இளைய பூசாரி எனப் பிரிவுகளாக இருக்கின்றனர்.

    பூஜை:
    கோயில் பூஜைகள், விரத பூஜைகள், கொலுவைத்தல், சனி பூஜைகள், விருந்தினர் பூஜைகள் எனப் பல வகையான பூஜைகள் நடைபெறுவதுண்டு.

    சாமி பெயர்கள்:
     வீரமத்தியம்மாள் ( வரம் வாங்கும் சாமி)
     சின்னம்மாள் ( வரம் வாங்கும் சாமி)
     காளியம்மாள் ( காவு வாங்கும் சாமி )
     பிள்ளை முனியம்மாள் ( காவு வாங்கும் சாமி )
     மாரியம்மாள் ( ஊர் பொது சாமி)

    கோயில் அமைப்பும் – இருப்பிடமும்:
     கட்டிட அமைப்பு – மண்சுவற்றிலும், சிமெண்ட்டிலும்
     மரத்தடியில் -புளியமரத்தடியிலும் வேப்பமரத்தடியிலும்
     ஊர் மந்தை
     ஏரிக்கரையின் இடையில்

    தெய்வ இருப்பிடம்:
    மூன்று பெருந்தெய்வங்களும் இரண்டு சிறு தெய்வங்களும் கிழக்கு பார்த்தபடியே அமர்ந்துள்ளனர். பெருந்தெய்வங்களுடைய சுவர் அமைப்புகள் கற்களால் கட்டப்பட்டவையாகும். சாமியை வைத்திருக்கும் இடத்திற்கு கர்பக்கிரகம் (கர்ப்பகிடங்கு) மூலஸ்தானம், கருவறை, மற்றும் பூஜையறை என்றும் குறிப்பிடுவதுண்டு. பூஜையறைக்கு முன்பாக இருக்கும் அறைக்குத் தாழ்வாரம் என்றும் வாகன அறை என்றும் குறிப்பிடுகின்றனர். கோயிற்சிலை, தெய்வங்களின் வாகனங்கள், சாட்டைகள், சூலாயுதங்கள் போன்ற அனைத்துக் கருவிகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

    கொலுவைத்தல்:
    பொதுவாக வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கொலுவைப்பது வழக்கமாக உள்ளது. மக்கள் புதியதாக பொன் பொருள் வாங்குவதாக இருந்தாலும், வெளியூருக்குச் செல்வதாக இருந்தாலும், கஷ்டங்கள் வந்தாலும், பேய்பிடித்து இருந்தாலும் பூஜையில் இருக்கும் பூசாரியிடம் தங்கள் தேவைகளைக் கூறுவர். பூசாரி காளியம்மன், சின்னம்மாள் ஆகிய இரண்டு சாமிகளுக்கு இடையில் நாணயத்தை வைத்து மேளமும் மணியும் அடித்து வரம் கேட்பார். சின்னம்மாள் சாமியின் வலது புறத்தில் வைத்திருந்த நாணயம் கீழே விழுந்தால் நற்சகுனம் என்றும் இடதுபக்கத்தில் விழுந்தால் சகுனத்தடை என்றும் தெரிவிப்பது உண்டு.

    விழாக்காலங்கள்:
    போயர் இன மக்கள் சித்திரை, வைகாசி, ஆனி மற்றும் ஆடி ஆகிய நான்கு மாதங்களில் திருவிழாக்களை நடத்தி முடித்துவிடுவார்கள். இக் களப்பகுதியைச் சார்ந்தவர்கள் ஆனி மாதத்தில் திருவிழாவை நடத்தும் வழக்கம் உள்ளது. இக்கிராமங்களிலுள்ள இரு பிரிவினருக்கிடையே சண்டை, இளம் பெண்கள் பூப்பெய்துதல் மற்றும் இறப்பு ஏற்பட்டுவிட்டால் திருவிழாவை நடத்த இயலாததாகிறது. இதனால் திருவிழா நாட்களில் தொடர்ந்து நடக்கவேண்டிய காரியங்களை மட்டும் பார்ப்பது உண்டு. கோயிலுக்குச் சார்ந்தவர்கள் மட்டுமே (கங்கணம் கட்டியவர்) இறப்பு சடங்கை தவிர்த்துவிடுவார்கள். மற்றும் அவர்களின் உறவினர்கள் என்றால் கங்கணம் அகற்றிவிடுவர்.

    திருவிழா வழிபடும் முறை:
    சந்தப்பட்டி கிராமத்தில் ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் திருவிழா நடத்துவது வழக்கமாக உள்ளது. திருவிழா நடத்துவதற்கு முன்பு ஊர் சாட்டும் வழக்கமும் உள்ளது. ஏழு நாட்கள் அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஊர் சாட்டுகின்றது. ஊர் சாட்டிய பிறகு, அவ்வூரின்(இன) மக்கள் வெளியூருக்குச் செல்லவோ அல்லது அசைவம் உண்ணவோ கூடாது. விழா திங்கள் கிழமை தொடங்கி வெள்ளிக் கிழமை வரை நடைபெறும்.

    திங்கட்கிழமை திருவிழாவின் முதல் நாள் அன்று காலை நகரத்துக்குச் சென்று சாமிக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு ஊர் எல்லையில் எல்லோரும் ஒன்று கூடி மேளதாளங்களோடு ஊர் சன்னதிக்கு வந்து சேர்வதுண்டு. அன்று இரவு பெருந்தெய்வச் சிலைகளை எல்லாம் டிராக்டர் வண்டியில் பலகையை வைத்து ஒன்றுக்குப்பின் ஒன்றாக அலங்கார கோலத்தில் வைத்தபிறகு (மகமேரி) தேரை வடிவமைத்து ஊர் மந்தையில் தேரை நிறுத்தி வைத்துவிட்டு ஊர் மக்கள் அனைவரும் சாமிக்கு பூஜை செய்து வணங்கிய பிறகு தேர் உலா செல்லும். தேருக்கு முன்பு கரகாட்டத்தை நிகழ்த்தி வருவதுண்டு. இத்தேர்த்திருவிழா விடியும் வரை நடத்தப்படும்.

             12

    இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோழிக்காரனை வைத்து, 11.00 மணியளவில் பொங்கல் வைக்கவேண்டும் என்று ஊர் சாட்டுவது வழக்கம். காலையில் பொங்கல் வைத்து முடித்தவுடன் அவரவர்களுடைய பொங்கல் பானையை அடையாளப்படுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குச்சென்று விடுவார்கள். மதியம் இரண்டு மணியளவில் ஊர்க்கோடியில் இருக்கும் எல்லைப் பகுதியில் வேண்டுதல் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று கூடி சாமிக்கு முன்பாக நின்று வழிபடுவார். பிறகு பம்பைக்காரரை வைத்து ஒலி எழுப்பி அருள் வந்தபிறகு அலகு குத்துவார்கள். அலகு குத்தியபிறகு கோயில்களுக்குச் சென்று அலகினை எடுத்துவிடுவார்கள். நான்கு மணியளவில் விளக்குமாவு எடுத்துக் கொண்டு ஊர் மந்தையில் ஒன்று கூடி கோலாட்டத்துடன், சாமிகளைத் தூக்கிக் கொண்டு மந்தைக்கு வந்து சேர்வார்கள். பிறகு தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்து முடித்தவுடன் பெண்கள் வீடு திரும்பிவிடுவார்கள். நான்கு மணியளவில் பூஜை செய்து ஆடு, கோழிகள் மேல் தீர்த்தம் தெளித்து விட்டபிறகு தலை ஆட்டிவிட்டால் “கத்திப்” பூசாரியால் ஆடு, கோழிகள் வெட்டப்படும் ( கத்திப்பூசாரியினர் பரம்பரை பரம்பரையாகவே இந்தப் பூஜையை செய்து வருகின்றனர்).

             34

    திருவிழாவின் மூன்றாவது நாள் புதன் கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோழிக்காரனை வைத்து, 11.00 மணியளவில் பொங்கல் வைக்கவேண்டும் என்று ஊர் சாட்டுவது வழக்கம். காலையில் பொங்கல் வைத்து முடித்தவுடன் அவர்களுடைய பொங்கல் பானையை அடையாளப்படுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று விடுவார்கள். மூன்று மணியளவில் விளக்குமாவு எடுத்துக் கொண்டு ஊர் மந்தையில் ஒன்று கூடி கோலாட்டத்துடன், சாமிகளைத் தூக்கி கொண்டு மந்தைக்கு வந்து சேர்வார்கள். பிறகு தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்து முடித்தவுடன் பெண்கள் வீடு திரும்பிவிடுவார்கள். நான்கு மணியளவில் பூஜை செய்து ஆடு, கோழிகள் மீது தீர்த்தம் தெளித்து விட்டபிறகு அவை தலை ஆட்டிவிட்டால் கத்திப் பூசாரியால் அவ்வாடு, கோழிகள் வெட்டப்படும். ஐந்து மணியளவில் பிள்ளை முனி கோயிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து பூஜை செய்து முடித்தவுடன் கோழி வெட்டி தீர்த்தம் தெளிக்கின்றனர் அதன்பிறகு அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிடுவார்.

    திருவிழாவின் நான்காம் நாள் வியாழக்கிழமை அன்று சாமிகளை ஊர் வலமாகக் கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிற்கும் பூஜை போட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. அப்போது யார் வீட்டிலாவது பேய் பிடித்தவர்கள் இருந்தாலோ, செய்வினை செய்து இருந்தாலோ கண்டுபிடித்துவிடுவர். மேலும் இறந்தவர்களுக்குப் படையல் போட்டு ( கடலை, வெல்லம், தேங்காய், மிட்டாய், வாழைப் பழம்) பூசை செய்து வழிப்பட்டு கண்ணீர் விட்டு அழுது வருவதும் உண்டு.

             56

    ஐந்தாவது நாளன்று வெள்ளிக்கிழமை சாமி ஊர்வலம் வந்து எல்லோர் வீட்டிற்கும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் கொடுத்துவிட்டு மாலை நேரத்தில் சாமியை வாகனத்திலிருந்து தனியே எடுத்து வைத்துவிட்டு உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மஞ்சள் நீராடுவது வழக்கம். திருவிழாவின் இப்பகுதி போட்டியோடு தொடங்கப்படுகிறது. அண்ணன், தம்பி (பங்காளி) எல்லாம் ஒரு பக்கத்திலும், மாமன், மைத்துனன் எல்லாம் ஒரு பக்கத்திலும் சேர்ந்து இடையில் ஒரு கயிறு கட்டி வண்ணம் கலந்த நீரை வீணாக்காமல் ஒட்டுமொத்தமாக வைத்துக் கொண்டு இரு அணிகளில் தலா ஒருவரைப் பிடித்து பாத்திரங்களில் வைத்திருக்கும் நீரை அவர் மீது ஊற்றி விளையாடுவார்கள்.

    பேய் ஓட்டும் முறை:
    ஆறாவது நாளும் ஏழாவது நாளும் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) மாலை நேரத்தில் பேய் பிடித்தவர்களை சாமி அழைத்து வந்து மந்தையில் உட்காரவைத்து பேய் ஓட்டுவது வழக்கம். பூசாரிக்கு அல்லது கருப்பு ஓட்டும் பூசாரிக்கு அருள் வந்தவுடன் சாட்டையை வாங்கி பேய்பிடித்தவர்களை அடிப்பதுண்டு. அந்த அடியில் ஒருசிலப் பேய்கள் ஓடிப்போய்விடும். அப்படிப் போகவில்லை என்றால் சூலாயுதம் கொண்டு கருப்பு ஓட்டுபவர் சக்கர வடிவில் ஒருவட்டத்தை வரைந்து பேய் பிடித்ததவர்களை அச்சக்கரத்தின் உள்ளே உட்காரவைத்து அருள் அழைத்து பேய் பிடித்த நபரிடம் வினாக்களை எழுப்புவதுண்டு. அவர்களிடம் வினாக்களைக் கேட்கும் போது படிக்காதவர்கள் கூடப் பல மொழிகளில் பேசுவதும் உண்டு.

    “யார்?”, “எதற்காகப் பிடித்திருக்கிறாய்?”, ” உனக்கு என்ன வேண்டும்?”, “இவரை விட்டு விலகு?”, என்ற கேள்விகளுக்கு, ஒருசிலப் பேய்கள் தான் அடைய நினைப்பதைக் கூறும். அதுபோலவே நாங்கள் செய்து விடுகிறோம். அவரை விட்டு நீங்கிப்போ என்று வாக்களித்த பிறகு, வட்டத்தில் எத்தனைச் சக்கரங்கள் இருக்கிறதோ அத்தனை சக்கரங்களுக்கும் எலுமிச்சைப் பழமும், தேங்காய், வத்தி, கோழி அல்லது ஆடுகளை வைத்த பிறகு கருப்பு ஓட்டுபவர் அந்த ஆட்டையும் கோழியையும் உயிருடன் பிடித்து இரத்தத்தை உறிஞ்சி விழுங்குவதோடு பேய்பிடித்தவரிடம் இருந்து மூன்று தலைமுடியை எடுத்து கொடுக்கச் சொல்லி அம்முடியை (மூன்று) முடிச்சுகள் போட்டு ஊர் எல்லையில் இருக்கும் ஆலமரத்தில் ஆணி அடித்துவிட்டுத் திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர்ந்திடுவார்கள்.

    போயர் இன மக்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருவிழா கொண்டாடுகிறார்கள். அவர்கள் அத்திருவிழாவினை ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். பொங்கல் வைத்தல், விளக்குமாவு எடுத்தல், ஆடு, கோழிகள் வெட்டுதல், மஞ்சள் நீராட்டுதல் என வரிசையாக இக்கிராமத்தில் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். திருவிழா முடிந்தபிறகு பேய் ஓட்டி ஊர் எல்லைகளுக்குப் பூஜை செய்து ஒவ்வொரு திசைக்கும் ஒரு ஆடு என்ற கணக்கில் நான்கு திசைக்கும் நான்கு ஆடுகள் வெட்டிய பிறகே வெளியூர் பயணங்களை மேற்கொள்வதுண்டு.

    ஊரில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு சாமிச் சிலைகளை இப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த தீர்த்தமலைக்கும், அனுமன் தீர்த்தத்துக்கும் கொண்டு சென்று கழுவியபிறகே ஊருக்குள் கொண்டுவருவர். சாமிசிலைகள் ஊருக்கு வந்த அடுத்தநாள் வீடுகளைச் சுத்தம் செய்து அத்தீர்த்தத்தைத் தெளித்துவிட்டால் வீடுகளும், ஊரும் சுத்தமாகிவிடும் என்பது இம்மக்களின் நம்பிக்கை.

    போயர் இன மக்கள் வருடம் வருடம் திருவிழா நடத்துவது உண்டு. இம்மக்களிடம் இரண்டு பிரிவினர் இருப்பதால், (மாமன் மைத்துனன் ஒரு பிரிவு; அண்ணன் தம்பிமார் (பங்காளி) ஒரு பிரிவு), சில நேரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகின்றன. இதன் அடிப்படையாக வைத்து திருவிழாவை நடத்தக் கூடாது என்று ஒரு பிரிவினர் தெரிவித்தால் அந்த ஆண்டு திருவிழா நடத்த முடியாமல் போய் விடும். மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே திருவிழாவை சிறப்பாக நடத்தமுடியும். ஒரு ஆண்டு திருவிழா நடத்தவில்லை என்றால் மூன்று ஆண்டுகளுக்கு நடத்த முடியாமல் போய்விடும். நான்காம் ஆண்டுதான் திருவிழாவை நடத்தமுடியும் அந்த ஆண்டும் நடத்தமுடியாமல் போனால் ஐந்தாம் ஆண்டும் நடத்தமுடியாது. பின் ஆறாம் ஆண்டு மட்டுமே தான் திருவிழா நடத்தமுடியும். போயர் இன மக்கள் இத்திருவிழாவைச் சிறப்பாகவும், எந்தச் சடங்குகளும் மாறுபாடு இல்லாமல் நடத்தி வருகின்றனர்.

    தகவலாளர்கள் விவர குறிப்பு:
    க.கந்தசாமி வயது – 45, சந்தப்பட்டி
    க.லத்தா வயது – 40, சந்தப்பட்டி
    க.தாயம்மாள் வயது – 63, சந்தப்பட்டி
    க.குருசாமி வயது – 72, சந்தப்பட்டி

    ___________________________________________

    க.பிரகாஷ்

    க. பிரகாஷ்
    ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பாரதியார்பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46
    ___________________________________________

    Share