–க.பிரகாஷ்.

மின்னணு புத்தகங்கள் அல்லது மின்னூல்கள் இன்றைய தொழில் நுட்ப உலகில் மிகவும் புகழ்பெற்று மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் புதிதாக பதிப்பிக்கப்படும் புத்தகங்கள், கட்டுரைகள், அனைத்தும் மின்னூல்களாகக் காணப்படுகின்றன. மின்னூல் என்பது நூல் ஒன்றினுடைய மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பாகும். இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள் தாளில் அச்சிட்டு, கட்டுமானம் செய்து தயாரிக்கப்படுகின்றன. அப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள செய்திகளைப் போலவே கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் இடம் பெறச்செய்து அதை இணைய வழியில் படிக்கும் படியாக மின்புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்துவைத்துத் தேவைப்படும் போது படிக்கும் நிலையிலும் மின்னூல் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறாக வளர்ந்த மின்னூல் இன்று உலகமொழிகள் அனைத்திலும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுச் செயல்படுகின்றன. குறிப்பாகத் தமிழ்மொழியில் இன்று பரவலாக மின்னூல்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தனி ஆட்களும், சில தனியார் புத்தக நிறுவனங்களும், பலர்குழுவாக சேர்ந்து மின்னூல்களை வடிவமைத்து வெளியிட்டு வருகின்றார்கள்.

மின்புத்தகங்கள்:
நாம் இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள் தாளில் அச்சிட்டு கட்டுமானம் செய்து தயாரிக்கப்பட்டு வருகின்றன. அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்திகளைக் கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் அல்லது திறன்பேசியில் வெளியிடுவதே மின் புத்தகம் என்று அழைக்கப்படுகின்றன. இதனைப் பதிவிறக்கம் செய்து குறுந்தட்டு வடிவில் சேமித்து வைப்பதையும் மின்புத்தகங்களாக கருதப்படுகின்றன. மின்னூல்கள் பல்வேறு அமைப்பில் வெளியிடப்படுகின்றன. அவை பி.டி.எஃப், இணையத்தில் வெளியீடு, புதிய அனைத்துலகத் தரமான இ-பப் மற்றும் மொபி அமைப்புகளில் காணப்படுகின்றன.

ebook

மின்னூல் அமைப்பு:
• பி.டி.எஃப்
• இணைய அமைப்பு
• இ.பப்
• மொபி
ஆகிய நான்கு அமைப்புகளும் கணினி, இணையம் மற்றும் கையடக்க கருவிகளிலும் இயக்கப்படக் கூடிய அமைப்புகள் ஆகும். பி.டி.எஃப், அமைப்பில் உள்ள மின்னூலை வாசிப்பதற்கு பி.டி.எஃப் ரீடர் எனும் வகையிலான வாசிப்பு செயலிகள் தேவையாகிறது. இணைய அமைப்பில் மின்னூலை வாசிப்பதற்கு உலாவி, மற்றும், இ-பப் அமைப்பில் மின்னூலை வாசிப்பதற்கு இ-பப் ரீடர் என்னும் வாசிப்புச் செயலிகள் தேவையாகின்றன.

பி.டி.எஃப் அமைப்பு:
தாளில் அச்சிட்டு வெளியிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நூலை அச்சுக்கருவியில் அச்சிடுவதற்குப் பதிலாக மின்வடிவில் சேமிப்பதே பி.டி.எஃப் அமைப்பாகும். ஊடகத்தில் மாற்றம் உண்டே தவிர நூல் வடிவமைப்பில் மாற்றம் ஏதும் இல்லை. அட்டைப்படம், உள்ளடக்கம், பக்க எண்கள், பின்னூட்டம் முதலிய நூற் கூறுகள் அனைத்தும் அச்சு வடிவ நூலில் எவ்வாறு பதிக்கப்படுகின்றனவோ அவ்வாறு பி.டி.எஃப் நூலிலும் பதிக்கப்படுகின்றன. விரலைக் கொண்டு தாளில் அச்சிடப்பட்டப் பக்கங்களைப் புரட்டுவதற்குப் பதிலாக சுட்டியைக்கொண்டு திரையில் பக்கங்களைப் புரட்டுகின்றனர். பி.டி.எஃப் வாசிப்புக் கருவியில் தோன்றும் பக்கத்தைப் பெரிதாகவோ சிறிதாகவோ காணலாம். ஆனால் பக்கத்தின் அமைப்பு அவ்வாறே இருக்கும். எழுத்துக்களைப் பெரிதாக்கலாம் அல்லது சிறிதாக்கலாம். அதற்கேற்றாற்போல் படங்களின் அளவும் பக்கத்தின் அளவும் மாற்றப்படும். ஆனால் பக்கத்தின் தோற்றம் மாறாது. ஒரு பக்கத்தில் பத்து வரிகளும், இரு படங்களும், இருந்தால் எத்தனை அளவு மாற்றம் செய்தாலும் அதே பக்கத்தில் தோன்றும் அடுத்தப்பக்கத்தில் உள்ள வரிகள் இந்தப் பக்கத்தில் வராது. அதுபோல அந்தப்பக்கத்தில் உள்ள வரிகள் அடுத்தப்பக்கத்திற்குப் போகாது.

பி.டி.எஃப் மின்னூல்களை உருவாக்குவது மிகவும் எளிதாகும். அச்சிடுவதற்கான நூலை வடிவமைக்கும் அதே செயலில் இருந்து பி.டி.எஃப் மின்னூல்களைச் சேமிக்கலாம். மைக்ரோசாப்ட், அடோபிஇன்டிசைன், முதலிய செயலிகள் பொருத்தமானவை. கோப்புகளை பி.டி.எஃப், ஆகச் சேமிப்பதற்கு பி.டி.எஃப் ரைட்டர் என்னும் செயலி தேவை. இவ்வகை செயலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. பி.டி.எஃப் அமைப்பில் சேமிக்கப்பட்ட மின்னூலில் ஒரு சில வசதிகளை மட்டுமே சேர்க்கலாம். அடோபி அக்ரோபட் போன்ற செயலிகளைக் கொண்டு உள்ளடக்கப் பக்கத்தில் உள்ள தலைப்புகளை நூலில் உள்ள பக்கங்களோடு இணைக்கலாம். இதுபோன்று சிறுசிறு முன்னேற்றங்களைத் தவிர பி.டி.எஃப் மின்னூல்களில் வேறு எந்தப் புதுமையையும் செய்ய முடியாது.

இணைய அமைப்பு:
இணைய அமைப்பில் உருவாக்கப்படும் மின்னூல் மீயுரை குறியீட்டு மொழியில் வடிவமைக்கப்பட்ட நூலாகும். ஓர் இணையதள உருவாக்கத்திற்குப் பயன்படும் அதே தொழில் நூட்பங்களைக் கொண்டே இந்த வகை மின்னூல்களும் உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் தமிழ் மின்னூல்களைப் பதிவேற்றும் திட்டங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. மதுரைத்திட்டம், நூலகம் திட்டம், சென்னை நூலகம் திட்டம், முதலியவை நூற்றுக்கணக்கான தமிழ் நூல்களை இணையத்தில் பதிப்பித்து வருகின்றன. கட்டற்றக் கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா ஒரு பெரிய மின்னூல் களஞ்சியமாகக் கருதலாம்.

இணையத் தொழில்நுட்பம் என்பதால் எந்தவிதக் கணினிகளிலும் இந்த மின்னூல்களை வாசிக்கலாம். ஒருங்குறி எழுத்துரு தரத்திலான தமிழ் எழுத்துரு மற்றும் உலாவி இருந்தாலே போதும், விண்டோஸ், லினக்ஸ், கணினிகளில் இந்த இரண்டும் உள்ளன. தமிழ் மின்னூல்களைப் படிக்கும் வாய்ப்பு இந்தக் கணினிகளில் இயல்பாகவே உள்ளது. சி.எஸ்.எஸ். மற்றும் ஜாவாஸ்க்ரிப்ட், ஆகிய கணினி மொழிகளின் துணைகொண்டு நூலோடு வாசகர்கள் ஊடாடுவதற்கான வசதிகளைச் சேர்க்கலாம். தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தை புரட்டுவதைப் போன்ற உணர்வு, படங்களையும், எழுத்து வரிகளையும், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்துதல், அருஞ்சொற்களைத் தோர்வுசெய்து அவற்றிற்கான பொருளை இன்னொரு கட்டத்தில் காணுதல், குறிப்பிட்ட சொற்கள் வரும் பக்கங்களைத் தேடுதல் முதலிய பல வசதிகளை இணைய அமைப்பிலான மின்னூல்களில் சேர்க்கலாம்.

இணைய அமைப்பிலான மின்னூல்களில் பல புதுமைகளைச் செய்வதற்கான வாய்பு இருந்தாலும் சில குறைகள் உள்ளன. பி.டி.எஃப் நூலில் எல்லாப் பக்கங்களும் ஒரே கோப்பில் அடங்குவதுபோல் இணைய அமைப்பிலான நூலில் உள்ள பக்கங்கள் அடங்குவதில்லை. இந்த நூலில் பயன்படுத்தப்படும் படங்கள் தனித்தனியே வெவ்வேறு கோப்புகளில் சேமிக்கப்படுகின்றன. நகர்படங்கள் ஒலிப்பதிவுகள் அனைத்தும் தனித்தனி கோப்புகளில் சேமிக்கப்பட வேண்டும். இணையத் தொடர்பு இல்லாத போது இந்த நூலை வாசிப்பதாக இருந்தால் இந்த நூலுக்குத் தேவைப்படும் அனைத்துக் கோப்புகளும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இணைய அமைப்பில் இது போன்று குறைகளைத் தீர்ப்பதற்காகவும் மின்னூலுக்கென்றே சில சிறப்பு அம்சங்களைச் சேர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் இ-பப் எனும் புதிய மின்னூல் தரம் ஆகும்.

இ-பப் அமைப்பு:
இ-பப் என்பது நவீன மின்னூல்களை வெளியீடுவதற்காக idpe எனப்படும் அனைத்துலக மின்பதிப்புக் குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஓர் இலவச கட்டற்ற திறந்தவெளி மின்தரம் என்று குறிப்பிடுகின்றனர். இணைய அமைப்பில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி மின்னூலுக்கென்றே சில புதிய வசதிகளைச் சேர்த்து ஒரே கோப்பில் பதிக்கும் வாய்ப்பை இந்த இ-பப் அமைப்பு அமைந்துள்ளது. மின்னூல்களைக் கணினிகளில் மட்டும் இன்றி கையடக்க கருவிகளிலும் வாசிக்கும் வாய்ப்பை இ-பப் ஏற்படுத்தியுள்ளது. மின்னூல்களை வாசிப்பதற்காகவே சில கருவிகள் சிறப்காகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

மொபி அமைப்பு:
மொபி அமைப்பானது இ-பப் போன்றதே ஆகும். ஆனால் திறந்த நிலைக் கோப்பு அல்லாமல் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் கருவியில் மட்டும் படிக்கமுடியும் இதனை நாம் மொபி அமைப்பு என்கிறோம். மேற்குறிப்பிட்ட எல்லா அமைப்புகளிலும் தமிழ் மின்னூல்களைத் தயாரிக்கலாம். வின்டோஸ், மெக்கிண்டாஷ், லினக்ஸ், போன்ற கணினிகளில் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் இயல்பாக இருப்பதால் அனைத்துக் கணினிகளிலும் இந்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லாக் கணினிகளிலும் அதே எழுத்துரு அமைந்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. எல்லாக் கணினிகளிலும் நூலைப் படிக்கும் வாய்ப்பு மட்டும் இருக்கின்றன. ஒவ்வொரு அமைப்பில் உள்ள எழுத்துருவைக் கொண்டு கோப்புகள் தோன்றும்.

மின்னூலை உருவாக்கும் முறை:
நாம் வெளியிட விரும்பும் ஆழ்ந்த உட்பொதிந்த கருத்துக்கள் அடங்கிய பொருட்கூறுகளை அல்லது பகுதிகளைக் கணினி தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி தட்டச்சு செய்து கொள்ள வேண்டும். தட்டச்சு செய்து கொண்ட பகுதிகளை ஒரு கோப்பாகச் சேமித்து வைக்க வேண்டும். நாம் தட்டச்சு செய்து கொண்ட கோப்பு எந்த மென்பொருளின் மூலம் இணையத்தில் பயன்படுத்தித் தயார் செய்தோமோ அந்த மென்பொருளின் மூலம் இணையத்தில் பயன்படுத்தும் வகையில் Html – Asp கோப்புகளாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையத்தில் உள்ள அனைத்துத் தகவல்களும் இரண்டு வகை கோப்புகளாகவே வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அவை Html – Asp முதலில் குறிப்பிட்ட வகை கோப்பு நாம் அவ்வாறு தயார் செய்து ஏற்றுமதி செய்யமுடியும். நாம் தயார் செய்து ஏற்றுமதி செய்த கோப்புகள் இணையத்தின் சேமிப்புக்கிடங்கில் சென்று தேங்கி கிடைக்கும். பிறகு நாம் அந்தக் கோப்பை பயன்படுத்த முயற்சிக்கும்போது சேமிப்புக் கிடங்கில் உள்ள அந்தக் குறிப்பிட்ட கோப்பு செயல்படும் பக்கங்களாக மாறி கண்முன்னே தோன்றும். ஒவ்வொரு நாளும் ஏற்றுமதி செய்யப்படும் கோப்புகள் இணைய சேமிப்புக் கிடங்கில் ஆவணமாகப் பாதுகாக்கப்படும். இவ்வாறு வெளியிடப்படும் மின் புத்தகங்களை இணையத்தின் உதவியோடு மென்தட்டுகள் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இவ்வாறு இணைய சேமிப்புக் கிடங்கை முறையாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இணையப் பக்கத்திற்கு ஒதுக்கிய இடத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் வெளியிட்ட மின் புத்தகங்கள் காலாவதியாகிவிடும்.

கிரியேடிவ் காமன்ஸ் உரிமம் மூலம் உள்ளடக்கத்தைக் காணுதல்:
கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் மூலம் தமிழில் பல வலைப்பதிவுகளும், தளங்களும் உள்ளன. நாம் அங்கிருந்து உள்ளடக்கத்தைப் பெற மற்றும் மின் புத்தகங்களும் அவர்கள் புத்தகங்களில் அதே உரிமம் மூலம் குறிப்பிட்டு உருவாக்கமுடியும். பல எழுத்தாளர்களும், பல வலைப்பின்னர்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் மூலமாக தங்களுடைய வலைப்பதிவில் வெளியிடுவார்கள்.

Press book.com என்ற வலைத்தளத்தில் ஒரு கணக்கை உருவாக்க:
Press book.com என்ற மென்பொருளைப் பயன்படுத்தி மின்னூலை உருவாக்க முடியும். epub, html, pdf போன்ற முறையில் மின்னூல்களை அமைகின்றன. Press book.com என்ற வலைத்தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி, இக்கணக்கில் நமக்குத் தேவையான மின்னூல்களையும், புகைப்படங்களையும், மற்றும் ஒலி, ஒளி, ஊடகங்களையும் தேவைக்கேற்ப நிறுவிக்கொள்ளலாம். புதிதாக ஒரு மின்புத்தகத்தை உருவாக்கும் பொழுது எண் அட்டவணையைப் பயன்படுத்தி அவ்வாறு உருவாக்கிய புத்தகத்தின் வலை முகவரி மற்றும் புத்தகத்தின் தலைப்பு குறிப்பிட்டு பிறகு அதனை நாம் வெளியிடும் முறை தனியுரிமையாகவும் பொதுவாகவும் வெளியிடலாம்.

புத்தகத்தின் வடிவமைப்பு:
• அட்டைப் படம்
• முக்கிய பகுதி
• அட்டைப் பின் பகுதி

அட்டைப்படம் Front Matter:
அட்டைப்படம் என்பது ஒரு புத்தகத்தின் முதல் பகுதியாகவும் மற்றும் நூல் விவரம், தலைப்பு, அணிந்துரை, முகவுரை, பதிப்புரை ஆகியவை குறிப்பிடுவது அட்டைப்படமாகும்.

முக்கியப் பகுதி Main body:
ஒரு புத்தகத்தின் பொருளடக்கத்தையே முக்கியப்பகுதியாக குறிப்பிடுகின்றோம். ஒரு புத்தகத்தை உருவாக்கிய பிறகு ஏற்றுமதி சேர்க்கை மற்றும் ஏற்றுமதி தலைப்புக் காட்டும் சேர்க்கை என ஒவ்வொரு இயலுக்கும் அல்லது கட்டுரைகளுக்கும் இம்முறை பயன்படுத்திய பிறகு வெளியிடலாம்.

புத்தக தகவல் Book information:
ஒரு புத்தகத்தின் முழு விவரத்தையும் குறிப்பிடுவது புத்தக தகவல் ஆகும். தலைப்பு, குறுகிய தலைப்பு, துணைத் தலைப்பு, குறிப்பிட்டபிறகு அப்புத்தகத்தின் ஆசிரியர் பெயர், ஆசிரியரின் முழு முகவரியும், வெளியிடப்படும் இடம், மொழி, வருடம், ஆகியவை அனைத்தும் பதிவு செய்யவேண்டும்.

கருப்பொருள் Themes:
கருப்பொருள் என்பது வரியின் மற்றும் ஒரு பத்தியின் இடைவெளி விட்டு அமைப்பது கருப்பொருள் ஆகும்.

ஏற்றுமதி Export:
ஏற்றுமதி என்பது நாம் உருவாக்கிய ஒரு மின் புத்தகத்தை வடிவமைக்கும் அல்லது அமைப்புகள் ஆகும். pdf, epub, mobi, hpub, html, word, press, xml போன்ற வடிவங்களில் மின் புத்தகத்தை ஏற்றுமதி செய்யலாம். Press book.com என்ற வலைத்தளத்தில் உருவாக்கிய உங்கள் கணக்கில் உள்ள கருவிகளை பயன்படுத்தி மின் புத்தகத்தை உருவாக்கமுடியும். அக்கருவிகள், கட்டுப்பாட்டு அறை, மேம்படுத்தல், உரை, புத்தகத்தகவல், தோற்றம், ஏற்றுமதி, விற்பனை, ஊடகம், பயனர்கள் மற்றும் சுருக்கப்பட்டியல் ஆகியவை ஆகும்.

அட்டையின்பின் பகுதி Back Matter:
அட்டையின் பின்பகுதி என்பது அப்புத்தகத்தின் பதிப்புரிமை பற்றிய தகவல்களும், ஆசிரியர் பற்றிய தகவல்களும், கவிதைகளும், படங்களும், நூல்களும், விருதுகளும், அட்டவணைகளும், மற்றும் இது போன்ற பல கருத்துகளை வெளியிடுவது அட்டையின் பின் பகுதி ஆகும்.

மின்னூலை உருவாக்கும் போது ஏற்படும் சிக்கல்கள்:
இணையப் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள தமிழ்மொழியில் பல்வேறு வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒவ்வொரு இணைய தளமும் ஒவ்வொரு தமிழ் எழுத்துருக்கள் கொண்டு அமைந்துள்ளது. எனவே நாம் வெளியிடும் இணையதளத்தில் உள்ள எழுத்துருக்களைக் கொண்டே நமது நூல் உள்ளடக்கங்களைக் கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். இல்லையேல் நமது நூற்பகுதிகள் இணையப் பக்கத்தில் இருந்து தாறுமாறாக மாறிவிடும். ஆங்கில மொழியில் இந்தச் சிக்கல் இல்லை. எந்த வகை ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு மின்னூல் தயாரித்தாலும் அவை இணையப்பக்கங்களாக ஏற்றுமதி செய்யும் போது தெளிவாகத் தெரிகிறது.

சிக்கல் ஏற்படுவதற்கான காரணம்:
ஆங்கில மொழியில் அமைந்த விசைப்பலகைகள் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டவை ஆகும். ஒவ்வொரு வகை ஆங்கில எழுத்துருக்களும் மற்ற வகை எழுத்துருக்களும் இணைந்து கொள்ளும் வகையில் ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றையொன்று துணை செய்வதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் எழுத்துருக்கள் பல விதமான விசைப்பலகைகள் கொண்டு வடிவமைத்துள்ளதால் தமிழில் மின்னூல்கள் தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகின்றன.

தீர்வு:
தமிழ் மொழியின் எழுத்துருக்களின் சிக்கலைத் தவிர்ப்பதற்கு ஒருங்குறி (Unicode, NHM Writer) என்ற எழுத்துருக்கள் பெருமளவில் பயன்படுத்தப் படுவதால் அச்சிக்கலில் இருந்து விடுபட்டனர்.

மின்னூல் வரலாறு:
• மின்னூல் முதன்முதலாக ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில விளக்க உரையுடன் இலக்கணப்படி அச்சு வடிவிலான நூலாக வெளிவந்திருக்கிறது
• “முதல் மின் புத்தகம் குறியீட்டு 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கி ராபர்டோஸ்வீடிஷ் தயாரித்த தாமஸ்அக்வினாஸ் படைப்புகளைப் பெரிதும் உரைவிளக்கம் மின்னணு குறியீடாக இருக்கின்றன”
• ஆங்கிலத்தில் முதன் முதலாக மின் நூலை வெளியிட்டவர் தாமஸ்அக்யூனஸ், ராபட்பூசா, பாப்ரோன் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள் ஆவார். 1930 ல் மின்னூல்களை அடுத்தவர்கள் படிக்கின்ற வகையில் படத்துடன் கூடிய ஒளி நகர்வுடன் வெளியிட்டுள்ளனர்
• இதற்கு மாற்றாக டவ்ஏங்கல்பர்ட் என்ற வரலாற்று ஆசிரியர் 1960 ல் ncs ஆய்வுத்திட்டத்தில் நூல்களை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 1992 ல் சோனி நிறுவனம் டேட்டா டிஸ்க்மென் என்பதை அறிமுகப்படுத்தியது. இது வன்பொருளில் சேமிக்கும் வசதியைப் பெற்றது.

மின்புத்தகங்களை வாசிக்க உதவும் கருவிகள்:
தமிழில் மின்புத்தகங்களை வாசிப்பதற்கான கணினி தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல அம்சங்கள் கொண்ட பெரிய நிறுவனங்களாலும் பல கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அக்கருவிகளைப் பயன்படுத்தி மின்னூலை வாசிக்கலாம். மின்னூலை வாசிப்பதற்கென்று வன்பொருளும், மென்பொருளும், உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வன்பொருள்களிலும், மென் பொருள்களிலும் மின்னூலை வாசிக்கும் போது பக்கத்தைப் பெரிதாகவும் சிறியதாகவும் மாற்றமுடியும். நாம் விட்ட இடத்தில் இருந்து தொடங்கவும் முடியும் இது போன்று பல முறைகளைக் கொண்டு உள்ள கருவிகளாகவும், மென்பொருளாகவும், உள்ளன.

“மின்னூல் என்பது நூல்களின் மென்வடிவம் மட்டுமில்லை, அதனை எளிதில் படிப்பதற்கும், எடுத்துச் செல்வதற்கும், காகிதமில்லா மின்வழியாகும்” கணினியிலும் அனைத்து இயக்குதளக் கருவிகளிலும் நூல்களை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிக்கும் முறையுள்ளது. மின்னூலைப் படிப்பதற்கென்று கையில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்குப் பல கருவிகள் வளர்ந்துள்ளது. அவை, வன்பொருளாகவும், மென்பொருளாகவும், உள்ளன.

வன்பொருள்கள்:
• Kindle
• Nook
• Sony
• kobo
• Android
• I phone
• Computer

மென்பொருள்கள்:
• Google play books
• News Reader
• Reader pdf Reader
• Speed Reader
• Books Reader
• Readuim – Chorme
• e – Reader
• FB – Reader

Iso கருவிகள் – I Books for ipad (e-pub), kindle for ipad (mobi), Google play books.
Android கருவிகள் – epub for Android, Fb Reader for Android, Google play books,
Google Chrome குரோம் உலாவி – Readium.org போன்ற பல கோப்புகளைப் படிக்கலாம்.
Mozilla Firefox பயர்ஃபாக்சு உலாவி – epubread.com தரும் நீட்சியில் epubகோப்புகளைப் படிக்கலாம்.
FBreader, Calibre மூலம் Windows, Linux முதலிய பல்வேறு இயங்கு தளங்களிலும் மின்னூல்களைப் படிக்க முடியும்.
இக்கருவிகளில் மின்னூலை நிறுவி விலையில்லாக் கருவிகள் மூலம் வின்டோஸ், ஐபேட், ஐபோன், ஆன்டிராய்டு, பிளாக்பெரி, எனப் பல கருவிகளில் நிறுவிப் படிக்கலாம்.

மின்னூல்களின் பயன்பாடுகள்:
அதிகப் பக்கங்கள் கொண்ட நூல் பகுதிகளைக் கையடக்க வடிவில் சுருக்கிவிடமுடியும். எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். கட்டுமான நூல்களில் வண்ணப் புகைப்படங்களைக் கொண்டு அதிகப் பக்கங்களை இணைக்க முடியாது. அதிகப் பொருட்செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் நூல்களில் அதிக அளவில் வண்ணப் புகைப்படங்களை இணைத்து வெளியிடலாம். மின் நூல்களில் உள்ள பக்கங்களைத் தேவைக்கேற்ப பெரிதாக்கிப் பயன்படுத்த முடியும். சாதாரண நூல்களை இவ்வாறு பயன்படுத்த முடியாது.

உலகின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் தேவையான பகுதிகளை இணையத்தில் தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக தேடிப் பார்த்துப் பயன்படுத்த முடியும். தேவையான மின்னூல்களை மின்வணிகம் வழியாக வாங்கிப் பயன்படுத்த முடியும். அச்சிடப்பட்ட நூல்களை அச்சுப் பிரதிகளை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் புத்தகங்களைத் தேவையான நேரங்களில் உடனே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மின் புத்தகங்களில் உள்ள தகவல்களை ஆவணமாக நீண்ட காலம் பயன்படுத்த முடியும். அச்சிடப்பட்ட நூல்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிதைந்து விடுகின்றன. ஆனால் மின் புத்தகங்களின் ஆயுள் காலம் பன்மடங்கு நீடிக்கக்கூடியவை ஆகும்.

வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தின் கருத்துக்கள் ஒரு மாநிலமோ, அல்லது ஒரு நாடோ மட்டும் தான் சென்றடையும்.  மின்னூலாக பதிப்புச் செய்யும் போது உலகளாவிய நிலையில் பரவி எல்லோரும் படித்து இன்புறும் அளவிற்கு மின்னூல்கள் பயன்படுகின்றன.

பார்வை நூல்கள்:
http://www.muthalvan.in
http://ta.wikipedia.org/s/ma7
http:;//tech.neechalkaran.com

க.பிரகாஷ்
தமிழ்த்துறை
தொழில் நுட்ப கள ஆய்வு பணியாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *