-முனைவர் இராம. இராமமூர்த்தி

சங்கத்தமிழ்ப் பூங்காக்கள் எழில் நிறைந்தன. இனிய நன்மணம் பரப்புவன. உண்டற்கினிய நற்கனிகள் மிக்கு விளங்குவன. செறிவுமிக்க பயிரினங்கள் பரந்துவிளங்குவன. இச்சோலையில் நுழையவும் நன்மணத்தை நுகரவும், கனிகளை மாந்தியின்புறவும் நுகர்வோர்க்குப் பொறுமையும் கூர்த்த மதியுமே தேவைப்படும் கருவிகளாம். தமிழர்வாழ்வு இயற்கையோடியைந்தது என்பார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. மேலும் இயற்கையை…இயற்கை எழிலை இறைவனாகக் கண்டு வழிபட்டவர்கள் தமிழர்கள் என்பார் அவர். தமிழர்கள் தாம் கண்ட கடவுளை அழகென – முருகெனக் கண்டு வழிபாடாற்றியவர்கள். அவர்கள் கண்ட எழிலார் இறைவனே முருகன்; முருகன் என்றால் அழகன் என்பார் அந்தத் தமிழ்ப்பெரியார்.

இதனாலேயே, தமிழர்தம் வாழ்வை இயற்கையை ஒட்டியே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்தனர் நம்முன்னோர். இந்நிலங்கட்குரிய ஒழுக்கங்களைக் குறிக்கவும் மேற்சுட்டிய பெயர்களையே இட்டுமகிழ்ந்தனர். இவ்வைந்திணைகளுள் முல்லைநிலக் காட்சி ஒன்றை இங்கே காணலாம்.

முல்லைநில ஒழுக்கமாக, இருத்தலும் இருத்தல் நிமித்தமும் கூறப்பட்டுள்ளது. பொருள்தேடவோ, போர் காரணமாகவோ தலைவன் பிரிந்து செல்லலும், தலைவன் திரும்பிவரும் வரையில் தலைவி இல்லத்தின்கண் ஆற்றியிருத்தலும் இத்திணைக்கண் மிகுதியாக இடம்பெறுஞ் செய்திகளாம். அத்தகைய எழிலார் காட்சியொன்றன் வாயிலாக இயற்கையின் கவின்பெறு வனப்பும் தலைமகனின் காதலன்புப் பெருக்கமும் இயம்பப்பெற்றுள்ள சிறப்பே கவிஞனின் சிறப்பாம். கவிஞன் படைத்த அவ்வழகோவியத்தைக் காணலாமே!

தலைவன், தான் மேற்கொண்ட அருஞ்செயலை முடித்துத் தன்னில்லந் திரும்புகின்றான். தேரேறி விரைந்துவர எண்ணிய தலைமகன், தேர்ப்பாகனைநோக்கித் ”தேரை விரைந்து செலுத்துக!” எனக் கூறுகின்றான். மனையிற் பிரிந்து காத்திருக்கும் தலைவியின் பிரிவுத்துயரைப் போக்க எண்ணுவது தலைவனின் இயல்புதானே!

தேர் புறப்பட்டது; கான் வழியாகக் காற்றினுங்கடிதாக விரைகின்றது. அவன் கடந்துவரும் கானத்தில், பிடா மலர்கள் புதரின்கண் வெள்ளிய கொத்துக்களாய் மலர்ந்து கண்ணைக் கவருகின்றன. அவ்வெண்மலர்க்கொத்துக்கள் மாலைபோல வனப்புடன் திகழ்கின்றன. அத்தகைய முல்லையங்காட்டில் வேடுவன் வேட்டைக்காகத் தன் தோளில் தாங்கியுள்ள கவைக்கோலைப்போல முறுக்கிய கொம்புகளுடன் அழகுற ஆண்மானொன்று துள்ளிப்பாய்கின்றது. அவ்வாண்மான், படர்ந்து விரிந்துள்ள தண்டுகளோடு கூடிய அறுகம்புற்கொத்துக்களைத் தன் குட்டிகளோடு விளையாடும் இளைய பெண்மானுக்குக் காட்டியுண்ணச் செய்கின்றது. அத்துடன் அமையாது, தெளிந்த நீரோடையின் நன்னீரைக் காட்டி அப்பெண்மானை அருந்தச் செய்கின்றது. நீர்வேட்கை தீர்ந்த பெண்மான் தன்குட்டிகளோடு உறங்குமிடத்தைக் காவலும் புரிகின்றது அவ்வாண்மான். என்னே மான்களிடைக் காணலாகும் காதலன்பு!

இவ்வெழின்மிகு காட்சியைக் கண்டனன் நம் தலைமகன். இக்காட்சி அவன் உளத்திடை எத்துணை எண்ணங்களை எழுப்பியிருக்கும் எண்ணுக. நம் கவிஞர்பெருமான் இக்காட்சியை இத்துடன் நிறுத்தித் தலைமகன் கண்முன்னே மற்றொரு காட்சியைக் காட்டுமுகத்தான், காட்சிமாற்றம் செய்கின்றார். இக்கவிஞர் காவியப்புலவர் மட்டுமல்லர்; நாடகந்தீட்டும் நற்கலைஞரும் ஆவார் போலும்! அடுத்த காட்சி நந்தலைவனின் நெஞ்சைத்தொடும் உணர்ச்சிமிக்க காட்சி!

தலைவியின் இல்லம் அது. ஆங்கு அன்னங்கள் தம்பெடைகளோடு ஆடிக்களிக்கின்ற அழகிய காட்சியினைத் தலைவனைப் பிரிந்த தலைவி காணுகின்றாள். வினைமேற்சென்ற தலைமகன் இன்னும் இல்லத்திற்கு மீண்டுவரவில்லையேயென அவளன்பு மனம் தனிமைத்துயரான் தவிக்கின்றது. தலைவி, தான் அன்புடன் பாலூட்டிப் பாராட்டும் பைங்கிளியை முன்கையில் ஏந்தியவளாய்த் தன்னில்லத்தார்க்கு அஞ்சியவளாய்ப் பிறரறியாவாறு கொல்லைப்புறம் சென்றாள். அங்கே தன் அன்புக்கிள்ளையை நோக்கி ஒரு வேண்டுகோளை வைக்கின்றாள். கிள்ளாய்! “என் தலைவர் இன்றே திரும்பிவருவார் என இன்மொழி கூறுக!” என்பாள் தலைவி. அவளது பிரிவுத்துயரும் தலைவனின் நெஞ்சத்திரையில் திகழும் காட்சியாய் வலம்வருகின்றது. தலைவன் உள்ளத்துடிப்புடன் தேர்ப்பாகனை நோக்கிச் ”செல்க தேரே!” எனக் கட்டளையிடுகின்றான்; காட்சிகள் நிறைகின்றன.

இத்தகு எழிற்காட்சியினைப் புனைந்த கவிஞரை அறிந்துகொள்ள விழைதல் இயல்புதானே! அக்கவிஞர் மருதனிளநாகனார். இவ்வழகோவியம் இடம்பெற்றுள்ள சங்கப்பனுவல் அகநானூறென்க. தமிழ்க்கவிஞர்கள், இயற்கையெழிலை வறிதே புனையாமல் வாழ்வுடன் இணைத்துக்காட்டும் நல்லியல்பினர் ஆவர். அச்சொல்லோவியத்தை அடியிற்காணலாம்.

சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
கண்ணியின்
மலரும் தண்நறும் புறவில்
தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன
இருதிரி மருப்பின் அண்ணல் இரலை
செறியிலைப் பதவின் செங்கோல் மென்குரல்
மறியாடு மருங்கின் மடப்பிணை யருத்தித்
தெள்ளறல் தழீஇய வார்மணல் அடைகரை
மெல்கிடு கவுள துஞ்சுபுறங் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்
செல்க தேரே நல்வலம் பெறுந
பசைகொல் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி
துறைவிட் டன்ன தூமயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற்,
செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாணலம் பெறவே!  (அகம்-34: மருதனிளநாகனார்)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *