இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (191)
— சக்தி சக்திதாசன்.
அன்பினிய நெஞ்சங்களே!
அன்பான வணக்கங்களுடன் உங்களை இம்மடல் மூலம் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஏப்பிரல் மாதத்தின் முதல்பகுதியில் வசந்தத்தின் முன்னே வரும் ‘ஸ்பிரிங்'(Spring) எனும் காலப்பகுதியில் நடைபயின்று கொண்டிருக்கிறோம்.
சமுதாயம் என்பது பலவிதமான பண்புகளையும், நடைமுறை வழக்கங்களையும் உள்ளடக்கிய மனிதர்களின் கூட்டுச்சேர்க்கையாகும். ஒரு நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அந்நாட்டின் சமுதாயங்களின் முன்னேற்றத்தில் தான் தங்கியுள்ளது. சமுதாய முன்னேற்றத்திற்கு அச்சமுதாயத்தின் அங்கங்களாகிய மக்களின் முன்னேற்றமே அடிப்படைக் காரணியாகிறது. சமுதாயத்தின் முக்கிய தூண்களாக அவற்றைத் தாங்கிப் பிடித்திருக்கும் முதுகெலும்பாக இளையதலைமுறையினரே அமைகின்றனர். அச்சமுதாயத்தினை தகுந்த முறையில் முன்னேற்ற வேண்டுமானால் இளைய தலைமுறையினர் தகுந்தமுறையில் செதுக்கப்பட வேண்டும். அவர்களது வாழ்க்கைப் பண்புகளும் சரியான முறையில் பயிற்றப்பட வேண்டும்.
அவ்விளைய தலைமுறையினரைச் செதுக்கும் பணியில் முக்கிய பங்காற்றுவோர் யார் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இன்றைய அவசர சமூகத்திலே வசதிகளின் தேடல்களை மனதில் வகுத்துக் கொண்டு வாழ்க்கையை இயந்திர கதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகச் சூழலில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம். இதிலே எமது அடுத்த தலைமுறையின் செழிப்பான வாழ்விற்கான செதுக்கல்களை மேற்கொள்வதற்கான ஆக்கமும் ஊக்கமும் எமக்கு உள்ளதா? என்பதே கேள்வியாகிறது. பெற்றோராக எமது கடமையை, சமுதாயக் காவலர்களாக எமது கடமையை, பொறுப்புள்ள அயலவர்களாக எமது கடமைகளை எத்தனைபேர் சமுதாய நோக்கோடு முன்னெடுக்கிறோம் என்பது கேள்விக்குரியதே ! பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது தலையாய கடமையாக தாம் கற்பிக்கும் பாடத்தை மட்டுமே கொள்கிறார்களா ? இல்லை தாம் போதிக்கும் பாடங்களோடு சமூகத்தின் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் பண்புகளையும் போதிக்கிறார்களா? என்பதே முக்கியமாகிறது.
இன்று இங்கிலாந்தில் ஒரு நீதிபதி இரண்டு இளம் பெண்களுக்கு விதித்த தண்டனையே எனது இந்த மடல் மூலம் எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது.
‘அஞ்சலா ரைட்சன்'(Angela Wrightson) எனும் 39 வயதான பெண்மணி கோரமாகக் கொலை செய்யப்பட்டார். இவர் குடிபோதைக்கு அடிமையான ஒருவராவார். ஒருநாளைக்கு சுமார் 8 லிட்டர் ‘சைடர்’ (Cider) என்றழைக்கப்படும் மதுவை உட்கொள்வார் என்று கூறப்படுகிறது. எட்டு சகோதரர்களுடன் பிறந்த இவர் மிகவும் கடுமையான வாழ்வுக்குள்ளாக்கப்பட்டார். பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டதால் இங்கிலாந்து அரசினால் சமூக நல்வாழ்வுப் பிரிவினால் பராமரிக்கப்படும் ‘பெற்றவர்களால் புறக்கணிக்கப்படும் குழந்தைகள் நலவிடுதி’யிலே தனது இளம்பிராயத்தைக் கழித்தார்.
வளர்ந்து குடிபோதைக்கு அடிமைப்பட்ட இவர் பலமுறை சட்டத்தினால் தண்டிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. போதையினால் புரியும் பல குற்றச்செயல்களினால் 47 தடவைகள் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவரது வீட்டில் எப்போதும் ஒரு போதைக்கும்பல் கூடியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களினால் இங்கிலாந்தில் மது உட்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. ஆகையால் இவர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இவரது வீட்டில் கூடி இவரது உதவியுடன் மதுவைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
அப்படியாக இவருடன் இணைந்த 13, 14 வயதுச் சிறுமிகள் இருவர் இவரது உயிருக்கு எமனாக வந்ததுவே இன்றைய வழக்குமன்றத் தீர்ப்புக்குக் காரணம். தமது அந்தச் சிறுபிராயத்திலே மிகவும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டவர்களே இந்தச் சிறுவர்களாவார்கள். இவர்களும் சமுதாய முன்றிலிலே வழிநடத்த வேண்டிய பெற்றோர்களினால் கைவிடப்பட்டவர்களாவார்கள். ஒரு குழந்தையின் இளமைக்கல்வி சிலையில் எழுத்து என்பார்கள் முன்னோர்கள். அதாவது அந்த வயதில் அவர்கள் கற்றுக் கொள்ளும் பண்புகளே வாழ்வு முழுவதும் அவர்களுடன் கூடவரும் என்பதுவே அதன் விளக்கமாகும். ஆனால், அந்தப் பருவத்தில் திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட சிறகுகளற்ற பறவைகளைப் போன்றே இச்சிறுமிகள் கைவிடப்பட்டார்கள்.
சட்டத்தின் மதிப்பை உணரத் தவறிய இவர்கள் அதே சட்டத்திற்குப் புறம்பான செயல்களைப் புரியும் அந்த 39 வயதான அஞ்சலா ரட்சன் என்பவருடன் கூட்டிணைந்தது ஆச்சரியமில்லாத ஒன்றேயாகும். 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி தனது வீட்டில் வாடகைக்குக் குடியமர்ந்திருக்கும் அஞ்சலா ரைட்சன் இல்லத்திற்கு, அதற்கு முதல்நாள் அவர் தன்னை நோக்கிக் குடிபோதையில் தூக்கி எறிந்த வீட்டுச்சாவியைத் திரும்பக் கொடுக்க வந்த அவ்வீட்டின் சொந்தக்காரர் கண்ட காட்சி அவரைத் தூக்கி வாரிப்போட்டது.
அரைகுறை நிர்வாண கோலத்தில், படு கோரமாகத் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார் அஞ்சலா ரைட்சன். அதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட போலிசார் இக்கொலையை அவ்விரண்டு சிறுமிகளுமே நடத்தியதாகக் கண்டுபிடித்தனர். அப்போது அவர்களின் வயது வெறும் 13, 14 மட்டுமே. ஆடைகளை மினுக்கும் இயந்திரம், டி.வி, மற்றும் கதிரை என்பவற்றால் அந்தப் பெண்மணி முகம் மற்றும் பல பாகங்களிலும் கோரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவரது உடம்பில் 100 காயங்களுக்கும் அதிகமாகக் காணப்பட்டுள்ளது.
இன்று 15 வயது நிரம்பிய அச்சிறுமிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, குறைந்தது அவர்கள் தலா 15 வருடங்களாவது சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். குடிபோதைக்கு அடிமையாகிய 39 வயதுப் பெண்ணொருவர், குடிபோதைக்கு அடிமையாகிய வெறும் 14 வயதே நிரம்பிய சிறுமிகளால் கொலைசெய்யப்பட்டிருப்பது செய்தி என்று பார்க்கையில் ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கலாம். ஆனால், நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில் வயது எனும் ஏணியின் நடுவிலும், அடியிலும் இருக்கும் இரு பகுதியினரும் இத்தகைய வகையில் கொடுமையான குடிபோதைக்கு அடிமையாகியதில் சமுதாயத்தின் பங்கு எத்தகையது என்பது நியாயமான கேள்வியே !
நாளைய உலகம் அமைதியையும், சமாதானத்தையும் நோக்கி நடக்க வேண்டுமெனில் இன்றைய உலகத்தின் பல்வேறு சமூகங்களில் வாழும் மக்களும் தமது அவசர வாழ்க்கையைக் கொஞ்சம் நிறுத்தி தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டியது அவசரமாகிறது. வாழ்க்கை எனும் தராசின் ஒரு தட்டில் தேவைகளையும் அதன் மறுதட்டில் வசதிகளையும் போட்டு நிறுக்கத் தலைப்படும்வரை வாழ்வின் அர்த்தங்களும் திசைமாறிப்போவது தவிர்க்க முடியாததே.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
(நன்றி- பி.பி.ஸி இணையதளம்- தகவல்களுக்காக)
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
