பவள சங்கரி

தலையஙகம்

பீகாரில் 6.4.2016 முதல் பூரண மதுவிலக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இதுநாள் வரை பெருந்துயருற்றிருந்த பெண்களும், பெண்கள் அமைப்புகளும் நேற்று மகிழ்ச்சியில் பாட்னா நகரெங்கும் ஆடியும் பாடியும் இச்சட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளனர். ஆனால் பெரும் குடிமக்கள் சிலரும் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஒரு பெரிய மனிதர் ஆண்டிற்கு 3000 கோடி வருமானத்தை நிதீசு இழந்துவிட்டார் என்று வசை பாடியுள்ளார். இன்னொரு தலைவர் நிதீசு இச்சட்டத்தைக் கொண்டுவந்தது சமூக நலத்திற்காக அல்ல, மாறாகத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகவே இந்த மதுவிலக்கைக் கொண்டுவந்துள்ளார். இதன் மூலம் 50, 60 விழுக்காடு வாக்குகளை தன்னகத்தே வைத்துக்கொள்ளுவார் என்று கூறியிருக்கிறார். எது எப்படியோ, காரணம் எதுவாக இருப்பினும், சமுதாயத்தை கரையான் புற்றாக அரித்துக்கொண்டிருந்த மதுவை ஒழித்த பெருமை நிதீசு குமார் அரசிற்கு உண்டு. இந்த 3000 கோடி உரூபாயை வசூல் செய்ய வேறு வழி இல்லாமல் இல்லை. மக்கள் அவதியுறாத வண்ணம் இந்தத் தொகையினை பீகார் மாநில அரசு எளிதாகப் பெற்றுவிட முடியும். இந்த மது விலக்கை எதிர்த்து உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரளாவில், “பூரண மதுவிலக்கு எங்கள் கொள்கை அதைப் படிப்படியாக நிறைவேற்றுவோம்” என்று சில கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இதையெதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மக்கள் நலனில் அக்கறை உள்ள நீதிமன்றங்களால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. அதுபோலவே பாட்னா உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளும் தள்ளுபடியாக வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். இதேபோல நம் தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு வேண்டி மகாநாடு நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் அம்மகாநாடு தேசத்துரோக சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டது. தேசத் துரோகம் என்று சொல்வதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. மதுவிலக்கைக் கோரி உயிர் துறந்த காந்தியவாதி பிறந்த மண்ணில் மக்கள் நல்வாழ்வு வேண்டி நடத்தப்படும் இதுபோன்ற மகாநாடுகள் தேசத்துரோகமா?

சப்பானிய நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வருவதால் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் எண்ணிக்கை 50 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. எல்லா நாடுகளிலும் வேலை இல்லாத நிலை இருக்கும்போது இங்கு மட்டும் வேலை செய்யக்கூடிய இளைய சமுதாயம் குறைந்துள்ளது என்று அந்நாட்டின் அரசு வருத்தப்பட்டு இளைய சமுதாயத்தின் வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவிலும், இதேபோல இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தங்களுடைய கொள்கையை மாற்றி ஒரு தம்பதியினர் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். உலக அளவில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக இளைய சமுதாயத்தினர் உள்ள ஒரே நாடு இந்தியாதான். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் இளைய சமுதாயத்தினரை தங்கள் நாட்டின் செல்வமாகக் கருதிப் பார்க்கின்ற இக்காலகட்டத்தில் நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் இளைய சமுதாயத்தை பாதாளத்தில் தள்ளக்கூடிய மது விற்பனையை அரசே ஏற்று நடத்தி அதன் மூலமாக ஆண்டிற்கு 20,000 கோடி, 30,000 கோடி என்று வருமானத்தைப் பெருக்கத் துணிவது வேதனைக்குரிய செயலாகிறது. நமது நாட்டின் இளைஞர் சமுதாயத்தை அழிக்கத் துணிகிறோம் என்பதே நிதர்சனம் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *