— க. பிரகாஷ்.

இணையம் இன்று உலக முழுவதிலும் பலகோடி மக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுக்கண்டுபிடிப்பு என்று கூறலாம். மிகப் பழைய தகவல்களையும், இன்று புதிதாகத் தோன்றக் கூடிய பல புதிய தகவல்களையும் பெற இணையம் உதவி வருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.

இணையத்தில் படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தகவல்களைச் சேமித்து வைத்துள்ளார்கள். அவை இலக்கியம், இலக்கணம், திரைப்படம், வரலாறு, புவியியல், வானியல், அறிவியல், கணிதம், சோதிடம், பக்தி, பொதுஅறிவு, மருத்துவம், சித்தம், யோகம், சமையல்குறிப்பு, ஓவியக்கலை, விளையாட்டு போன்ற எண்ணற்ற தலைப்புகளில் தகவல்களாகவும், நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.

உலகெங்கும் சிதறிக் கிடைக்கும் தகவல்களை இணையத்தில் இணைத்துவிட்டால் யாரும் எந்த நேரமும் சென்று அத்தகவல்களைப் பெற முடியும். முற்காலத்தில் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நூலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய சூழல் இருந்தது. இப்பொழுது தேவையான ஒன்றையோ அல்லது கருத்தையோ, ஒருவர் பற்றிய தகவல்களையோ, தெரிந்து கொள்ள நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் கையடக்கக் கருவியான அலைபேசி மற்றும்  திறன்பேசி, நுண்ணறிபேசி, வில்லை, மாத்திரை, மடிக்கணினி, கணினி போன்றவற்றில் இணைய வசதிபெற்று கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.

இணையத்தில் செய்திகள் படிக்கலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம், தகவல் பரிமாறலாம், பொழுதுபோக்கலாம், அறிவைப் பெருக்கலாம். இது போன்ற பல தகவல்களைப் பெற்று மனநிறைவு பெறச்செய்வது இணையமாகும். அந்த அளவிற்கு இணையம் இன்று வளார்ந்து கொண்டே வருகின்றது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்” ( குறள் – 666)

என்ற குறளில் எண்ணியவர் எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது போல் நீங்கள் எதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அதனை இணையத்தில் சென்று ஒரு சில நொடிகளில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.

இணையம் சொற்பொருள்:

உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னணு வலையில் சங்கிலிப்பிணைப்பு செய்யப் பெற்று ஒன்றாக்கப்பட்டது தான் இணையம். உலகெங்கும் கணிப்பொறியில் உள்ள செய்திகளின் இணைப்பே இணையம் ஆகும். உலகளாவிய வலை இதனை ஆங்கிலத்தில் World Wide Web என்பர். இதனைச் சுருக்கமாக WWW என்றும் W3 The Web என்றும் குறிப்பிடுவதுண்டு.

இணைய வரலாறு:

இன்றைய உலகம் இணைய வழிகாட்டுதலின்படி பீடுநடை போடுகிறது எனில் அது மிகையன்று. 1950 ஆம் ஆண்டிற்கு அண்மையில், தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயன்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர்.

இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகளை வரிசைப்படுத்தும் முறைகள் மற்றும் தரவுப்பொது நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினார்.

இணையத் தந்தை என ஜே.சி.ஆர்.லிக்லைடர் என்பவரை அழைக்கின்றனர்.

அரியக்கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் பிரிட்டானிய நாட்டு அறிஞர்களான “சார்லஸ் காவ் மற்றும் ஜார்ஜ்ஸ் ஹாக்மேன்” ஆகியோர் ஆவார்.

1980 இல் பிரான்ஸ் நாட்டில் மினிடெல் என்பவர் தொலைபேசிக் கம்பி வழியிலான தகவலறியும் சேவையைத் துவக்கினார் 1992 நவம்பர் மாதம் டெல்ஃபி என்ற நிறுவனம் பெரிய அளவிலான தகவல் சேவையைத் தொடங்கியது.

1993 செப்டம்பர் 15 இல் மிகப்பெரும் அளவிலான தேசியத் தகவல் பரவலுக்கான திட்டம் ஒன்றை அமெரிக்க அரசு வரைவு செய்தது.

1993 இல் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் (National Centre for Super Computing) என்ற மையத்தைச் சார்ந்த மாணவர்கள் பல வசதிகள் கொண்ட இணையத் தேடலுக்கான மென்பொருள் திரையைக் கண்டறிந்தனர். இது மொசைக் என்றழைக்கப்பட்டது. இதனை மார்க் ஆண்டர்சன் மொசைக் என்பவர் கண்டறிந்தார்.

1996 இல் ஃபைபர் நூலிழையின் உதவியால் தகவல்களை ஒளிப் பிம்பங்களாக மாற்றி நெடுந்தொலைவு அனுப்ப முடியும் என்று கண்டுபிடித்தனர்.

வலைப்பின்னல் மையம்:

வலைப்பின்னல் என்பது மீள்கருவி மையம் என்று குறிப்பிடுவர். பல சுருளிணைகள் ஒளியிழை, ஈத்தர்நெட் கருவிகளை ஒன்றாக இணைத்து அவற்றை ஒற்றை வலைப்பின்னல் கூறாகச் செயல்பட உதவும் கருவியாகும்.

1994 இல் WWW என்ற வலைப்பின்னலாக அமைந்த அமைப்பு உலகின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் கருவியாக உருமாற்றம் பெற்றது. இதன் மூலம் தகவல்களை மட்டுமல்லாத படங்களையும் பார்க்க முடிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சொ்ன் என்னும் அணுத்துகள் இயற்பியல் நிறுவனம் உலகு  தழுவிய விரிவு வலைமுறையைக் கொண்டு வந்தது.

1995 இல் கொரிய நாட்டில் பிறந்த பின் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நாம் ஜீன் பெய்க் (Nam Jun Paik) எப்பர் டவுன்  (Yber Town)  என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களை இணைத்தார்.

இணையத்தை வழிநடத்துவோர்:

இணையத்தைத் தனிமனிதரோ அல்லது குழுவோ கட்டுப்படுத்துவதில்லை எனினும் இணையத்தினை வழிநடத்த இணையக் கழகத்தைக் கணினி வல்லுநர்கள் இலாப நோக்கமின்றி நடத்தி வருகின்றனர். அவற்றுள் IAB, IETF ஆகிய இரண்டு கழகங்கள் குறிப்பிடத்தக்கன.

IAB   –           Internet Architecture Board

IETF –           Internet Engineering Test Force

IAB  –  என்பது கணினிகளை இணையத்தில் இணைப்பதற்கான வரையறையாகும். இணையத்தில் இணைந்துள்ள கணினிகளுக்கு முகவரிகளை இது வழங்குகிறது. மேலும் தேவைப்படுகின்ற நேரங்களின் தேவைக்கேற்ப வரையறைகளை மாற்றி அமைக்கும் பணியையும் இக்கழகம் செய்கிறது.

IETF  –  என்பது கணினியின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் அதனால் இணையத்தில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்கள் குறித்தும் முடிவு செய்கிறது.

இணைய விதிமுறைகளைக் கண்காணிப்பதற்காக The Internet Society Overseas for the Development of the Internet என்ற அமைப்பும் இணையத் தளங்களை மேற்பார்வையிடுவதற்காக World Wide Web Consortium என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றன.

இணைய வசதி வழங்குவோர்:

இணைய வசதிகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கட்டணம் செலுத்தி இணைய இணைப்புப் பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஆங்கிலத்தில் Service provider என்று அழைக்கப்படும். தமிழில் சேவை வழங்குநர் என்று கருதப்படுவதுண்டு.

அமெரிக்காவில்  GTR, MCI, SEINT, UUNET, AOL ஆகிய நிறுவனங்கள் இணையச்சேவையை வழங்குகின்றன. இந்தியாவில் VSNL, BSNL, DISHNET, STFY, AIRTEL, RELIANCE, TATA INDICOM முதலிய பல நிறுவனங்கள் இச்சேவையை அளிக்கின்றன.  இணையச்சேவை வசதி என்று குறிப்பிடுவதுண்டு.

இணைய இணைப்பு பெறத் தேவையானவை:

இணைய இணைப்பு பெறுவதற்குக் கணினி, தொலைபேசி, இணைப்பு மாற்றி (Modem) ஆகிய மூன்றும் இருந்தால் போதும், இணைய வசதி பெற்றிடலாம். இணைய வசதி வழங்கும் நிறுவனங்களிடம் கட்டணம் செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் அளவிற்கேற்ப உரியத் தொகையானது முன் தொகையாகவோ பின் தொகையாகவோ செலுத்தப்பட வேண்டும்.

இணைய முகவரி:

ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் மற்றும் முகவரி இருப்பது போல் ஒவ்வொரு இணையதளத்திற்கும் ஒரு பெயர் மற்றும் முகவரி இருக்கிறது. இதனை இணைய முகவரி என்று கூறுவதுண்டு. http://www.prakashtamil.blogspot.com  இம்முகவரியில் ஐந்து பகுதிகள் உள்ளன.

http – Hypertext transport protocol என்பதன்  சுருக்கமாகும் (மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை)

www – Worldwide web  என்பதன் சுருக்கமாகும் (வைய வரி வலை)

prakashtami – குறிப்பிட்ட ஓர் இணையதளத்திற்கு வழங்கப்படும் பெயர் ஆகும்.

blogspo – தனியார் நிறுவனத்தின் பெயர்

com – Commerce என்பது சுருக்கமாகும். இணையதளத்தின் தன்மையைக் குறிப்பிடுவதாகும்.

“சுவிட்சர்லாந்து நாட்டில் செர்ன்’ என்னும் அணுத்துகள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்கு டிம் பெர்னர்லீ என்ற இயற்பியல் வல்லுநர் பணியாற்றினார். இவர் 1989 இல் உலகளாவிய வலைப்பின்னலுக்கு WWW  – world wide web என்ற பெயரிட்டார்.”

டிம்பெர்னா் லீ இணையத்துக்கு அடிப்படையான மூன்று கருத்துக்களை கண்டுபிடித்தார்.

Internet-1(1)

அவை:

http

url

html

http – Hypertext transfer protocol என்பதன் சுருக்கமே ஆகும். (மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை)  வையக வலையில் தகவலைப் பெறுவதற்கான விதிமுறை புரோட்டோக்கோல் எனப்படும். தொடக்கம், செய்தி, படம்,  எழுத்து, முடிவு இவையென இந்த விதிமுறைகள் மூலம் முன்பே தீர்மானித்தார்.

URL – Uniform Resource Locator என்பதன் சுருக்கம் ஆகும். சீரான தள இடங்காட்டி இணையத்தில் உள்ள தகவலின் இருப்பிடம் காட்டும் முகவரியே இதுவாகும். இந்த முகவரியைப் பயன்படுத்தியே உலாவிகள் இணைய தளங்களைக் கண்டறிகின்றன. http;//www.Google.com என்பது சீரான தவள இடங்காட்டிகளுள் ஒன்று ஆகும்.

HTML – Hyper Text Markup Language என்பதன் சுருக்கம் ஆகும். மீயுரைக் குறிப்பு மொழி இணையத்தில் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குத் தாவிச் செல்ல குறிப்புகள் எழுதவேண்டும். இந்த குறிப்புகள் எழுதும் மொழியே மீயுரைக் குறிப்பு மொழி ஆகும். ஆவணத்தில் இரு பகுதிகள் உண்டு.

அவை:

தலை

உடல்

                தலைப்புப்பகுதியில் ஆவணத்தின் தலைப்பும் உடல் பகுதியில் ஆவணமும் இருக்கும். 1991 மே மாதம் இந்த வையக விரிவு வலை அறிமுகமானது. காலாகாலத்திற்குச் சேமிக்க முடிவதால் இப்பொழுது வலையேகதி என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது.

இணைய முகவரியும் இணையச் செயல்பாடும்:

ஒவ்வொரு தொலைபேசி இணைப்பிற்கும் ஓர் எண் இருப்பதுபோல இணையத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு கணிப்பொறிக்கும் ஓர் அடையாள எண் உண்டு. இந்த எண்ணில் நான்கு பகுதிகள் இருக்கும். சான்றுக்கு 456-12-25-78 என்பது ஒரு முகவர் கணிப்பொறியின் அடையாள எண் ஆகும். இந்த அடையாள எண்களை நினைவில் வைத்திருப்பது கடினம். எண்ணிற்குப் பதிலாக எழுத்திலான பெயரைப் பயன்படுத்துகிறோம்.

நமக்குத் தேவையான முகவரியை உள்ளிட்டால் தேடும் பொறி அந்தக் கணிப்பொறியைக் கண்டுபிடித்து நம் கணிப்பொறித் திரையில் காட்டும். இதற்கு யாகு, கூகிள், அல்டாவிஸ்டா எனப் பல தேடும்பொறிகள் உள்ளன.

இணையச் செயல்பாடு:

இணைய இணைப்பைப் பெறத் தேவையானவை சில கருவிகள் உள்ளன. அவை:

கணிப்பொறி – Computer

தொலைபேசி – Tele communication

மாற்றி – Modem

தொடர்பு மென்பொருள் – Communication Software

இணையச் சேவை வழங்குபவர் – Internet Service Provide

இது போன்ற கருவிகளின் மூலம் இணைய வசதிகள் பெற முடிகின்றது. தொலைபேசி வழியே இணையத்தைப் பயன்படுத்துவதில் தொடர்பு மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன. இப்பொழுது ஒளியிழைத் தடங்கள் வழியே இணைய இணைப்பை எளிதிலும் விரைவாகவும் பெறமுடிகிறது.

கணிப்பொறியில் இணையச் சேவை பெறுவதற்கு முன்பே இணையம் செயல்படுவதற்கான மென்பொருள்களைப் பொருத்தி இருக்க வேண்டும். Landline net தொலை நிகர வசதியாகவும், Modem மாற்றி போன்ற முறையிலும் இணையச் சேவை கணிப் பொறியில் பெறமுடியும்.

இணையக்குறியீடுகள்:

இணையக்குறியீடு என்பது ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் வெளிநாட்டிற்கும், கல்வி, பல்கலைக்கழகம், இராணுவம் போன்ற பல நிறுவனங்களின் விரிவான பெயர்களை தான் இப்பொழுது இணையத்தில் சுருக்கமாக வடிவமைத்துக் குறிப்பிட்டுள்ளனர்.

அவை:

கல்வி – edu

பல்கலைக்கழகம் – univ

அரசு சாராநிறுவனம் – org

இராணுவம் – mil

வலைப்பராமரிப்பு – net

அரசாங்கம் – gov

தமிழ்நாடு – tn

இந்தியா – in

சிங்கப்பூர் – sg

கனடா – ca

இங்கிலாந்து – uk

ஒருவருக்கு எழுதப்படுகின்ற கடிதங்களில் சரியான முகவரி இருந்தால் அக்கடிதம் உரியவருக்கு உரிய நேரத்தில் சென்று கிடைக்கும். முகவரி சரியாக இல்லை என்றால் அக்கடிதம் உரியவருக்குச் சென்று சேர்வதில் காலதாமதம் ஏற்படும்.

பல நேரங்களில் அது உரியவருக்குக் கிடைக்காமலேயே போய்விடும். கடிதத்தில் முகவரியே இல்லையென்றால் அக்கடிதம் யாருக்குமே சென்று சேராது.

இணையதள முகவரி சரியாக இருந்தால் அத்தளத்தைச் சரியாகச் சென்றடையலாம். முகவரி சரியாக இல்லையென்றால் உரிய இணையதளத்தை உரிய நேரத்தில் சென்றடைவது கடினம். முகவரியே இல்லையென்றால் இணையதளத்தை அடையவே முடியாது.

ஒவ்வொரு இணையதளமும் எளிதில் அடையும் வகையில் ஒவ்வொரு இணையதள முகவரியைக் கொண்டு விளங்குகின்றன. நாம் எளிதில் மனதில் பதியவைத்து கொள்ளும் வகையில் முகவரிகள் அமைந்திருந்தாலும் கணினிக்கு முகவரிகள் தெரியாது.

முகவரிகளைக் கணினி எண்களைக் கொண்டே அடையாளம் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக 212.58.240.32 என்ற எண் ஒரு முகவரியின் இணையதளத்தைக் குறிக்கிறது. இதனை IP முகவரி என்று கூறுவதுண்டு. Internet Protocol என்பதன் சுருக்கம் IP ஆகும்.

இணையத்தில் தகவல் தேடும் வசதிகள்:

விரிந்து பரந்த இந்த உலகத்தில் ஒருவருக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப்பிடித்தல் என்பது எளிதன்று. ஆராய்ச்சி தொடர்பாக ஒருவர் நூலகத்திற்குச் சென்று தனக்கு வேண்டிய ஒரு நூலைத் தேடினால் அந்நூல் அங்கு இருக்கலாம், இல்லாமல் போகலாம், இருந்து யாராவது எடுத்துப் போயிருக்கலாம் இருந்தும் கூட நம் பார்வைக்கு வைத்தும் கிடைக்காமல் போகலாம்.

இணையம் என்பது அவ்வாறு அல்ல; தேடிய நேரத்தில் தேடியதைக் கண் முன்னே கொண்டு வந்து குவித்துவிடும். சில வேளைகளில் நாம் ஒன்றைத் தேட அதனைக் கொண்டு வந்து தருவதோடு மட்டுமன்றி அதனோடு தொடர்புடைய மேலும் பல தகவல்களை அள்ளித் தந்து நம்மை வியக்கவைக்கும் வகையில் இருக்கின்றது. ஆய்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு இணையம் மிகச்சிறந்த வழிகாட்டுதலாகவும் அமைகிறது.

வேண்டியதை வேண்டியவாறு மட்டுமன்றி கூடுதலாகவும் அதே வேளையில் தனியொரு மனிதனோ அல்லது ஒரு குழுவினரோ தேடிக் கண்டுபிடிக்க முடியாதவற்றையும் மிகுந்த காலம் தேவைப்படுகின்ற தேடுதல்களைக்கூட மிக எளிதாகவும் விரைந்தும் செய்து முடிகின்ற ஆற்றல் வாய்ந்ததுதான் இணையம்.

சிறப்பு மிக்க தேடுதல் வசதிகளைப் பல நிறுவனங்கள் இணையப் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.

தேடு பொறிகள்:

அலெக்ஸா                    Alexa

கூகிள்                              Google

யாஹூ                           Yahoo

ஸ்டார்வர்                      Starware

தமிழ் தேடல்                 W3 tamil Search

மொசிலா ஃபையர் ஃபாக்ஸ் Mozilla Firefox

எம்.எஸ்.என்                 MSN

அல்டாவிஸ்டா           Alta vista

பிங்கு                              bing

ஆஸ்க்.காம்                 com

இவ்வாறு தேடு பொறிகளின் உதவியால் வேண்டிய செய்திகளைச் சில நொடிப் பொழுதில் இருந்த இடத்தில் இருந்தவாறே எளிதில் பெற முடியும்.

தேடு பொறியினால் விளையும் சில நன்மைகள் இருக்கின்றன. அவை கால விரயத்தினைத் தவிர்க்கலாம். குறைந்த செலவில்  தகவல்களை விரைந்து பெறலாம். கூடுதல் தகவல்களையும் பெறலாம். தமிழ் மொழி வழியாகவும் தேடலாம்.

இணையத்தில் கலந்துரையாடல்:

இணைய வழிக் கலந்துரையாடல், இணையவழி அளவளாவுதல், இணையவழி பொழுது போக்குதல் என்று கூறுவர்.

பொழுது போக்கிற்காக நண்பர்கள் ஒன்று கூடி எதனையோ பற்றி பொழுது போக்காகப் பேசி மகிழ்வது ஆகும். இதில் மகிழ்ச்சியும் பொழுது போக்குமே முதன்மை நோக்கமாக இருக்கும்.

இணையவழிக் கலந்துரையாடல் என்பது ஏதேனும் ஒரு பொருள் பற்றி ஆக்கப்பூர்வமான முறையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணையம் வழிக் கூடிப் பேசுவது ஆகும். இக்கலந்துரையாடலுக்கு இ – குழு (e – Group) என்று குறிப்பிடுகின்றனர். இக்குழுவில் நண்பர்கள் ஓய்வான நேரங்களில் அமர்ந்து கொண்டு கணினியிலோ அலைப்பேசியிலோ நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவதும் தகவல்கள் பரிமாறுவதும் போன்ற உணர்வையும் மகிழ்ச்சியையும் இம்முறையின் வழியாகப் பெற இயலும் என்பர்.

பல நிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்ற அவ்வகையில் www.chatting.com என்ற இணையதளம் குறிப்பிடத்தக்கது.

இணையத்தின் பயன்கள்:

இணைய உலகம் உண்மையிலேயே விந்தையானது ஒருவருக்கு ஓரளவு நேரமும் இணையத்தில் உலாவுவதற்குப் புரிதலும் இருந்து விட்டால் உலகையே அவன் தன் கைகளுக்குள் கொண்டு வந்து விடலாம்.

இணையம் விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகையே நம் வீட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் வாய்ந்தது.

இறந்தது காத்தல் எதிரது போற்றல்”  – (தொ.பொ.மரபு) 1610

இணையத்தின் வழி புதியன புகுந்து, அறிவுப் பெருக்கி, சிந்தனை செழிக்கச் செய்கிறது. இதன் மூலம் தகவல்களைப் பெறலாம், அளிக்கலாம், வாங்கலாம், கல்வி பயிலலாம், பயிற்று விக்கலாம், எவரும் – எங்கிருந்தும் – எந்தத் தகவல்களையும் 24 மணி நேரமும் நாடு, இனம், மொழி, என்ற எத்தகைய வேறுபாடுகளும் இன்றிப் பெறும்  ஊடகமாக இணையம் விளங்குகிறது.

இதன் மூலம் தொலைவில் இருப்பவர்களைக் கண்காணிக்க முடியும். இவற்றின் வழி சாதனங்களையும் தகவல்களையும், கருத்துக்களையும் பகிர முடியும்.

இணையத்தில் அ முதல் ஔ வரை எந்தச் செய்தியையும் பெற முடியும். இணைய தளத்தை நல்ல  நண்பனாகவும், எவ்வளவு நேரம் உறவாடினாலும் சலிப்பு ஏற்படாமல் உற்சாகம் குறையாத உணர்விலும் தகவல்களை அளிக்கும் வகையில் இணையம் திகழ்கிறது.

_____________________________________________________

பார்வைநூல்கள்:

திருக்குறள்  உணர்வுரை              –              இரா. கனகசுப்பரத்தினம்

தமிழில் இணைய இதழ்கள்        –              அண்ணா கண்ணன்

தொல்காப்பியம்                               –              தமிழண்ணல்

_____________________________________________________

.பிரகாஷ்

தமிழ்த்துறை

தொழில் நுட்ப கள ஆய்வுப் பணியாளார்

பாரதியார் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர் – 46

_____________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *