படக்கவிதைப் போட்டி _ (58)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
பழங்கதையாய்…
வெப்பம் நிறைந்த கோடையிலே
விளையா நுங்கு குடித்தபின்னே
அப்பா லெறிந்த கூந்தலிலே
அழகு வண்டி தனைச்செய்து
கொப்பை ஒடித்தே ஓட்டியநாள்,
கணினி உலகில் மெய்மறக்கும்
இப்போ துள்ள பிள்ளைகட்கே
இலாமல் போன பழங்கதையே…!
-செண்பக ஜெகதீசன்…
வனங்கள் தொலைந்தது போல நம்
வாழ்வின் வசந்தங்கள் தொலைந்தனவோ……
மரங்கள் தொலைந்தது போல நம்
மனம்லயிக்கும் விளையாட்டுகள் தொலைந்தனவோ…..
கூடிவிளையாடும் கூத்துகள் தொலைந்து
கணிணி விளையாட்டில் தனிமைப்பட்டனவோ…..
காலக்கொடுமையால் இயற்கையைத் தொலைத்து
மூச்சுத்திணறும் செயற்கையில் வாழ்கிறோம்.
முன்னோர் காட்டிய பாதை தொலைந்து
முட்டுச்சந்தில் முட்டிமோதி வாழ்கிறோம்.
இளந்தலைமுறை மீதொரு இறுக்கத்தை
எதற்குச் சுமத்துகின்றீர் கல்வியின் பெயரால்…
பள்ளிக்கூடங்கள் சிறைச்சாலைகளா…
மனனஞ்செய வைக்கும் தொழிற்சாலைகளா….
நுங்கையே மறந்த சிறுவர்க்கு
நுங்குமட்டை வண்டியோட்டத் தெரியுமா….
சுற்ற மறந்த பம்பரங்களாய்…
துள்ள மறந்த கோலிக்குண்டுகளாய்….
தாவ மறந்த கிட்டிப் புள்ளாய்….
தாண்ட மறந்த குதிரைகளாய்…
பூப்பறிக்க வரமறந்த சிறுமிகளாய்…..
பாண்டியாட மறந்த நொண்டிகளாய்…….
சிறுமணல்வீடு கட்டமறந்த சிறுசுகளாய்…
காக்காக்கடி மறந்த வெள்ளந்திகளாய்….
பல்லாங்குழி விழ மறந்த பட்டுகளாய்….
தட்டாங்கல் மறந்த தளிர்களாய்……
இயற்கையை மறந்து இயற்கையை இழந்து
இயற்கையைத் தொலைத்து இயற்கையைக் கலைத்து
எங்கெங்கோ திரிகின்றோம்
இழந்தனவற்றை அறியாமலேயே….
என்செயப்போகின்றாய் இயற்கையன்னையே….
எம் இளந்தலைமுறையையே!
கவிஞர் ” இளவல் ” ஹரிஹரன், மதுரை.
நொங்கு வண்டி பூட்டிக்கிட்டு
சந்து பொந்து தாண்டி வந்தோம்
பத்து மரக் காற்றிலும்
பட்ட துன்பம் தான் மறந்தோம்
எட்டு திசை போனபின்பும்
விட்டு மனம் போகலையே
ஒட்டு மொத்த சிறுவர்களுக்கும்
உஷ்ணம் தனிக்கும் நொங்கு வண்டி
– ஹிஷாலி