போயர் இன மக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகள்

1

–க. பிரகாஷ்.

7

தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் வட்டத்தைச் சார்ந்த சந்தப்பட்டி ஊராட்சி மற்றும் சந்தப்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் போயர் இன மக்களின் தெய்வ வழிபாட்டு முறைகளும் சடங்குகளும், பிற இன மக்களின் வழிபாட்டு முறைகளுடனும், சடங்குகளுடனும் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. சந்தப்பட்டி கிராமப் பகுதிகளில் வசிக்கும் போயர் இன மக்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருவிழா கொண்டாடுகிறார்கள். வெளியூர்களுக்குச் சென்று கூலித் தொழில், கட்டிடம்கட்டுதல், கல்கட்டுதல், விவசாயம் போன்ற தொழில்கள் செய்து வரும் இவர்கள் விழாக்காலங்களில் மட்டுமே சொந்த ஊருக்கு வருகின்றார்கள். இக்கிராமத்தில் இவ்வினத்தைச் சார்ந்த நூற்று இருபது குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவ்வூர் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அங்காளி பங்காளிக்கு ஒரு கோயில் என்ற முறையில் இரண்டு பொரிய கோயில்களும் (அத்தெய்வங்களைப் பெருந்தெய்வங்களாகவும்), ஊருக்கு பொதுவாக இரண்டு சிறு கோயில்களும் (இத்தெய்வங்களைச் சிறுதெய்வங்களாகவும்), மேலும் ஒரு மாரியம்மன் கோயிலும் (அம்மனைப் பெருந்தெய்வமாகவும்) வழிப்படுகிறார்கள்..

கோயில்கள்:
 வீரமத்தி கோயில்
 சின்னம்மாள் கோயில்
 பத்தரகாளியம்மன் கோயில்
 பிள்ளைமுனி கோயில்
 மாரியம்மன் கோயில்

பூசாரியின் பெயர்கள்:
சாமிக்கண்ணு, சம்பத் இவர்கள் இரண்டுபேரும் கோயில் பூசை செய்யும் பூசாரிகள். மற்ற பூஜைகளுக்கென தனி பூசாரிகள் இருக்கின்றனர் அவர்கள் சத்தி பூசாரி, கரக பூசாரி, கத்தி பூசாரி, பேய் ஓட்டும் பூசாரி, (கருப்பு ஓட்டும் பூசாரி) இளைய பூசாரி எனப் பிரிவுகளாக இருக்கின்றனர்.

பூஜை:
கோயில் பூஜைகள், விரத பூஜைகள், கொலுவைத்தல், சனி பூஜைகள், விருந்தினர் பூஜைகள் எனப் பல வகையான பூஜைகள் நடைபெறுவதுண்டு.

சாமி பெயர்கள்:
 வீரமத்தியம்மாள் ( வரம் வாங்கும் சாமி)
 சின்னம்மாள் ( வரம் வாங்கும் சாமி)
 காளியம்மாள் ( காவு வாங்கும் சாமி )
 பிள்ளை முனியம்மாள் ( காவு வாங்கும் சாமி )
 மாரியம்மாள் ( ஊர் பொது சாமி)

கோயில் அமைப்பும் – இருப்பிடமும்:
 கட்டிட அமைப்பு – மண்சுவற்றிலும், சிமெண்ட்டிலும்
 மரத்தடியில் -புளியமரத்தடியிலும் வேப்பமரத்தடியிலும்
 ஊர் மந்தை
 ஏரிக்கரையின் இடையில்

தெய்வ இருப்பிடம்:
மூன்று பெருந்தெய்வங்களும் இரண்டு சிறு தெய்வங்களும் கிழக்கு பார்த்தபடியே அமர்ந்துள்ளனர். பெருந்தெய்வங்களுடைய சுவர் அமைப்புகள் கற்களால் கட்டப்பட்டவையாகும். சாமியை வைத்திருக்கும் இடத்திற்கு கர்பக்கிரகம் (கர்ப்பகிடங்கு) மூலஸ்தானம், கருவறை, மற்றும் பூஜையறை என்றும் குறிப்பிடுவதுண்டு. பூஜையறைக்கு முன்பாக இருக்கும் அறைக்குத் தாழ்வாரம் என்றும் வாகன அறை என்றும் குறிப்பிடுகின்றனர். கோயிற்சிலை, தெய்வங்களின் வாகனங்கள், சாட்டைகள், சூலாயுதங்கள் போன்ற அனைத்துக் கருவிகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

கொலுவைத்தல்:
பொதுவாக வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கொலுவைப்பது வழக்கமாக உள்ளது. மக்கள் புதியதாக பொன் பொருள் வாங்குவதாக இருந்தாலும், வெளியூருக்குச் செல்வதாக இருந்தாலும், கஷ்டங்கள் வந்தாலும், பேய்பிடித்து இருந்தாலும் பூஜையில் இருக்கும் பூசாரியிடம் தங்கள் தேவைகளைக் கூறுவர். பூசாரி காளியம்மன், சின்னம்மாள் ஆகிய இரண்டு சாமிகளுக்கு இடையில் நாணயத்தை வைத்து மேளமும் மணியும் அடித்து வரம் கேட்பார். சின்னம்மாள் சாமியின் வலது புறத்தில் வைத்திருந்த நாணயம் கீழே விழுந்தால் நற்சகுனம் என்றும் இடதுபக்கத்தில் விழுந்தால் சகுனத்தடை என்றும் தெரிவிப்பது உண்டு.

விழாக்காலங்கள்:
போயர் இன மக்கள் சித்திரை, வைகாசி, ஆனி மற்றும் ஆடி ஆகிய நான்கு மாதங்களில் திருவிழாக்களை நடத்தி முடித்துவிடுவார்கள். இக் களப்பகுதியைச் சார்ந்தவர்கள் ஆனி மாதத்தில் திருவிழாவை நடத்தும் வழக்கம் உள்ளது. இக்கிராமங்களிலுள்ள இரு பிரிவினருக்கிடையே சண்டை, இளம் பெண்கள் பூப்பெய்துதல் மற்றும் இறப்பு ஏற்பட்டுவிட்டால் திருவிழாவை நடத்த இயலாததாகிறது. இதனால் திருவிழா நாட்களில் தொடர்ந்து நடக்கவேண்டிய காரியங்களை மட்டும் பார்ப்பது உண்டு. கோயிலுக்குச் சார்ந்தவர்கள் மட்டுமே (கங்கணம் கட்டியவர்) இறப்பு சடங்கை தவிர்த்துவிடுவார்கள். மற்றும் அவர்களின் உறவினர்கள் என்றால் கங்கணம் அகற்றிவிடுவர்.

திருவிழா வழிபடும் முறை:
சந்தப்பட்டி கிராமத்தில் ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் திருவிழா நடத்துவது வழக்கமாக உள்ளது. திருவிழா நடத்துவதற்கு முன்பு ஊர் சாட்டும் வழக்கமும் உள்ளது. ஏழு நாட்கள் அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஊர் சாட்டுகின்றது. ஊர் சாட்டிய பிறகு, அவ்வூரின்(இன) மக்கள் வெளியூருக்குச் செல்லவோ அல்லது அசைவம் உண்ணவோ கூடாது. விழா திங்கள் கிழமை தொடங்கி வெள்ளிக் கிழமை வரை நடைபெறும்.

திங்கட்கிழமை திருவிழாவின் முதல் நாள் அன்று காலை நகரத்துக்குச் சென்று சாமிக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு ஊர் எல்லையில் எல்லோரும் ஒன்று கூடி மேளதாளங்களோடு ஊர் சன்னதிக்கு வந்து சேர்வதுண்டு. அன்று இரவு பெருந்தெய்வச் சிலைகளை எல்லாம் டிராக்டர் வண்டியில் பலகையை வைத்து ஒன்றுக்குப்பின் ஒன்றாக அலங்கார கோலத்தில் வைத்தபிறகு (மகமேரி) தேரை வடிவமைத்து ஊர் மந்தையில் தேரை நிறுத்தி வைத்துவிட்டு ஊர் மக்கள் அனைவரும் சாமிக்கு பூஜை செய்து வணங்கிய பிறகு தேர் உலா செல்லும். தேருக்கு முன்பு கரகாட்டத்தை நிகழ்த்தி வருவதுண்டு. இத்தேர்த்திருவிழா விடியும் வரை நடத்தப்படும்.

         12

இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோழிக்காரனை வைத்து, 11.00 மணியளவில் பொங்கல் வைக்கவேண்டும் என்று ஊர் சாட்டுவது வழக்கம். காலையில் பொங்கல் வைத்து முடித்தவுடன் அவரவர்களுடைய பொங்கல் பானையை அடையாளப்படுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குச்சென்று விடுவார்கள். மதியம் இரண்டு மணியளவில் ஊர்க்கோடியில் இருக்கும் எல்லைப் பகுதியில் வேண்டுதல் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று கூடி சாமிக்கு முன்பாக நின்று வழிபடுவார். பிறகு பம்பைக்காரரை வைத்து ஒலி எழுப்பி அருள் வந்தபிறகு அலகு குத்துவார்கள். அலகு குத்தியபிறகு கோயில்களுக்குச் சென்று அலகினை எடுத்துவிடுவார்கள். நான்கு மணியளவில் விளக்குமாவு எடுத்துக் கொண்டு ஊர் மந்தையில் ஒன்று கூடி கோலாட்டத்துடன், சாமிகளைத் தூக்கிக் கொண்டு மந்தைக்கு வந்து சேர்வார்கள். பிறகு தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்து முடித்தவுடன் பெண்கள் வீடு திரும்பிவிடுவார்கள். நான்கு மணியளவில் பூஜை செய்து ஆடு, கோழிகள் மேல் தீர்த்தம் தெளித்து விட்டபிறகு தலை ஆட்டிவிட்டால் “கத்திப்” பூசாரியால் ஆடு, கோழிகள் வெட்டப்படும் ( கத்திப்பூசாரியினர் பரம்பரை பரம்பரையாகவே இந்தப் பூஜையை செய்து வருகின்றனர்).

         34

திருவிழாவின் மூன்றாவது நாள் புதன் கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோழிக்காரனை வைத்து, 11.00 மணியளவில் பொங்கல் வைக்கவேண்டும் என்று ஊர் சாட்டுவது வழக்கம். காலையில் பொங்கல் வைத்து முடித்தவுடன் அவர்களுடைய பொங்கல் பானையை அடையாளப்படுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று விடுவார்கள். மூன்று மணியளவில் விளக்குமாவு எடுத்துக் கொண்டு ஊர் மந்தையில் ஒன்று கூடி கோலாட்டத்துடன், சாமிகளைத் தூக்கி கொண்டு மந்தைக்கு வந்து சேர்வார்கள். பிறகு தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்து முடித்தவுடன் பெண்கள் வீடு திரும்பிவிடுவார்கள். நான்கு மணியளவில் பூஜை செய்து ஆடு, கோழிகள் மீது தீர்த்தம் தெளித்து விட்டபிறகு அவை தலை ஆட்டிவிட்டால் கத்திப் பூசாரியால் அவ்வாடு, கோழிகள் வெட்டப்படும். ஐந்து மணியளவில் பிள்ளை முனி கோயிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து பூஜை செய்து முடித்தவுடன் கோழி வெட்டி தீர்த்தம் தெளிக்கின்றனர் அதன்பிறகு அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிடுவார்.

திருவிழாவின் நான்காம் நாள் வியாழக்கிழமை அன்று சாமிகளை ஊர் வலமாகக் கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிற்கும் பூஜை போட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. அப்போது யார் வீட்டிலாவது பேய் பிடித்தவர்கள் இருந்தாலோ, செய்வினை செய்து இருந்தாலோ கண்டுபிடித்துவிடுவர். மேலும் இறந்தவர்களுக்குப் படையல் போட்டு ( கடலை, வெல்லம், தேங்காய், மிட்டாய், வாழைப் பழம்) பூசை செய்து வழிப்பட்டு கண்ணீர் விட்டு அழுது வருவதும் உண்டு.

         56

ஐந்தாவது நாளன்று வெள்ளிக்கிழமை சாமி ஊர்வலம் வந்து எல்லோர் வீட்டிற்கும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் கொடுத்துவிட்டு மாலை நேரத்தில் சாமியை வாகனத்திலிருந்து தனியே எடுத்து வைத்துவிட்டு உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மஞ்சள் நீராடுவது வழக்கம். திருவிழாவின் இப்பகுதி போட்டியோடு தொடங்கப்படுகிறது. அண்ணன், தம்பி (பங்காளி) எல்லாம் ஒரு பக்கத்திலும், மாமன், மைத்துனன் எல்லாம் ஒரு பக்கத்திலும் சேர்ந்து இடையில் ஒரு கயிறு கட்டி வண்ணம் கலந்த நீரை வீணாக்காமல் ஒட்டுமொத்தமாக வைத்துக் கொண்டு இரு அணிகளில் தலா ஒருவரைப் பிடித்து பாத்திரங்களில் வைத்திருக்கும் நீரை அவர் மீது ஊற்றி விளையாடுவார்கள்.

பேய் ஓட்டும் முறை:
ஆறாவது நாளும் ஏழாவது நாளும் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) மாலை நேரத்தில் பேய் பிடித்தவர்களை சாமி அழைத்து வந்து மந்தையில் உட்காரவைத்து பேய் ஓட்டுவது வழக்கம். பூசாரிக்கு அல்லது கருப்பு ஓட்டும் பூசாரிக்கு அருள் வந்தவுடன் சாட்டையை வாங்கி பேய்பிடித்தவர்களை அடிப்பதுண்டு. அந்த அடியில் ஒருசிலப் பேய்கள் ஓடிப்போய்விடும். அப்படிப் போகவில்லை என்றால் சூலாயுதம் கொண்டு கருப்பு ஓட்டுபவர் சக்கர வடிவில் ஒருவட்டத்தை வரைந்து பேய் பிடித்ததவர்களை அச்சக்கரத்தின் உள்ளே உட்காரவைத்து அருள் அழைத்து பேய் பிடித்த நபரிடம் வினாக்களை எழுப்புவதுண்டு. அவர்களிடம் வினாக்களைக் கேட்கும் போது படிக்காதவர்கள் கூடப் பல மொழிகளில் பேசுவதும் உண்டு.

“யார்?”, “எதற்காகப் பிடித்திருக்கிறாய்?”, ” உனக்கு என்ன வேண்டும்?”, “இவரை விட்டு விலகு?”, என்ற கேள்விகளுக்கு, ஒருசிலப் பேய்கள் தான் அடைய நினைப்பதைக் கூறும். அதுபோலவே நாங்கள் செய்து விடுகிறோம். அவரை விட்டு நீங்கிப்போ என்று வாக்களித்த பிறகு, வட்டத்தில் எத்தனைச் சக்கரங்கள் இருக்கிறதோ அத்தனை சக்கரங்களுக்கும் எலுமிச்சைப் பழமும், தேங்காய், வத்தி, கோழி அல்லது ஆடுகளை வைத்த பிறகு கருப்பு ஓட்டுபவர் அந்த ஆட்டையும் கோழியையும் உயிருடன் பிடித்து இரத்தத்தை உறிஞ்சி விழுங்குவதோடு பேய்பிடித்தவரிடம் இருந்து மூன்று தலைமுடியை எடுத்து கொடுக்கச் சொல்லி அம்முடியை (மூன்று) முடிச்சுகள் போட்டு ஊர் எல்லையில் இருக்கும் ஆலமரத்தில் ஆணி அடித்துவிட்டுத் திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர்ந்திடுவார்கள்.

போயர் இன மக்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருவிழா கொண்டாடுகிறார்கள். அவர்கள் அத்திருவிழாவினை ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். பொங்கல் வைத்தல், விளக்குமாவு எடுத்தல், ஆடு, கோழிகள் வெட்டுதல், மஞ்சள் நீராட்டுதல் என வரிசையாக இக்கிராமத்தில் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். திருவிழா முடிந்தபிறகு பேய் ஓட்டி ஊர் எல்லைகளுக்குப் பூஜை செய்து ஒவ்வொரு திசைக்கும் ஒரு ஆடு என்ற கணக்கில் நான்கு திசைக்கும் நான்கு ஆடுகள் வெட்டிய பிறகே வெளியூர் பயணங்களை மேற்கொள்வதுண்டு.

ஊரில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு சாமிச் சிலைகளை இப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த தீர்த்தமலைக்கும், அனுமன் தீர்த்தத்துக்கும் கொண்டு சென்று கழுவியபிறகே ஊருக்குள் கொண்டுவருவர். சாமிசிலைகள் ஊருக்கு வந்த அடுத்தநாள் வீடுகளைச் சுத்தம் செய்து அத்தீர்த்தத்தைத் தெளித்துவிட்டால் வீடுகளும், ஊரும் சுத்தமாகிவிடும் என்பது இம்மக்களின் நம்பிக்கை.

போயர் இன மக்கள் வருடம் வருடம் திருவிழா நடத்துவது உண்டு. இம்மக்களிடம் இரண்டு பிரிவினர் இருப்பதால், (மாமன் மைத்துனன் ஒரு பிரிவு; அண்ணன் தம்பிமார் (பங்காளி) ஒரு பிரிவு), சில நேரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகின்றன. இதன் அடிப்படையாக வைத்து திருவிழாவை நடத்தக் கூடாது என்று ஒரு பிரிவினர் தெரிவித்தால் அந்த ஆண்டு திருவிழா நடத்த முடியாமல் போய் விடும். மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே திருவிழாவை சிறப்பாக நடத்தமுடியும். ஒரு ஆண்டு திருவிழா நடத்தவில்லை என்றால் மூன்று ஆண்டுகளுக்கு நடத்த முடியாமல் போய்விடும். நான்காம் ஆண்டுதான் திருவிழாவை நடத்தமுடியும் அந்த ஆண்டும் நடத்தமுடியாமல் போனால் ஐந்தாம் ஆண்டும் நடத்தமுடியாது. பின் ஆறாம் ஆண்டு மட்டுமே தான் திருவிழா நடத்தமுடியும். போயர் இன மக்கள் இத்திருவிழாவைச் சிறப்பாகவும், எந்தச் சடங்குகளும் மாறுபாடு இல்லாமல் நடத்தி வருகின்றனர்.

தகவலாளர்கள் விவர குறிப்பு:
க.கந்தசாமி வயது – 45, சந்தப்பட்டி
க.லத்தா வயது – 40, சந்தப்பட்டி
க.தாயம்மாள் வயது – 63, சந்தப்பட்டி
க.குருசாமி வயது – 72, சந்தப்பட்டி

___________________________________________

க.பிரகாஷ்

க. பிரகாஷ்
ஆய்வாளர்
தமிழ்த்துறை
பாரதியார்பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46
___________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “போயர் இன மக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *