Tag: கவிஜி

  • மாயப் பூட்டுகள்!

    -கவிஜி 

    மாயப் பூட்டுகளும்
    மந்திரமின்றியே
    திறந்து கொள்கின்றன…

    மறைக்க மறைக்க,
    சிரைக்கச் சிரைக்க
    வளருவது போல
    மறைக்க முடிவதேயில்லை…

    அத்தனைப் புனைவுகளும்
    கட்டுடைந்து
    கசிந்து விடுகின்றன…

    ரகசியக் காப்புரிமைகள்
    பலபோது மீறுவதுதான்
    சுகமென்றாக்கப் படுகிறது…

    தொடாமலும் படாமலும்
    தோல்விகள் துவளுவதாய்க்
    கடன் தீர்க்கும்
    கரை தேடுகிறது…

    முகமூடிகள் கிழிபட
    வெறும் மூத்திரக் குழிகள்
    என்று சொல்லிக் கடந்து
    போக முடியாத தூரமெங்கும்
    ஆதாமின் நிர்வாணங்களும்
    ஏவாளின் ஆப்பிள்களும்…
    சுற்றிலும் தடை செய்த
    பழங்கள் இருக்க,

    மனதுக்குள் திறந்து கொள்ளும்
    ஏதேன் தோட்டத்தில்
    ஆடைகளே இல்லை…
    இல்லாத வேலிகளைப் போல!

     

    Share
  • வட்டங்களில் வட்டம் …

    –கவிஜி.

     

     


    வட்டம், நிலா வட்டம், பலா வட்டம், தோசை வட்டம், இட்லி வட்டம், பானையின் வாய் வட்டம், சக்கரம் வட்டம், மின் விசிறி வட்டம், மைதானம் வட்டம், மாநகரம் அடக்குவது வட்டம், மா வட்டம், கழிவறை குழி வட்டம், கணக்கின் பூஜ்யம் வட்டம், தட்டு வட்டம், தட்டை முறுக்கு வட்டம், கருவிழி வட்டம், கால் கொலுசு வட்டம், பொட்டு வட்டம், தோட்டா வட்டம், மாங்கல்ய கயிறு வட்டம், மத்தளம் வட்டம், ரோஜா பூ வட்டம், தேன் அடை வட்டம், சூழ்ச்சிப்படை வட்டம், புள்ளி வட்டம், மல்லி வட்டம், குறுந்தகடு வட்டம், மூடி வட்டம், சுழற்காற்று வட்டம், நியூட்ரினோ வட்டம், பூமி வட்டம், பால்வீதி வட்டம், கோள்கள் வட்டம், பந்து வட்டம், இப்படி வட்டங்களில் சுழல்கிறது வாழ்க்கை. வாதிட வாதிட வாதங்கள் முடிவது வட்டங்களில். வெற்றிகள் தோல்விகள் சுழலுவது, சந்திப்பது வட்டங்களில். நீ நான் என்பது ஆரம்பிப்பது வட்டங்களில். நீ நான் என்பது முடிவது வட்டங்களில். மனக் கிணறு வட்டம், எழும் குமிழிகளில் வட்டம்.

    சிந்தனையின் சங்கமம் வட்டம். உற்று பயணிக்கையில் தூக்கம் மூழ்கி போவது வட்டங்களில். உண்மை, பொய், தத்துவம், இருப்பது, இல்லாமல் போவது யாவும் வட்டங்களில் என்பதான தோற்றம் வர வைக்கும் வட்டம். வட்டம் ஒரு மாயை என்று ஒரு ஆரம்பம் தளைக்கட்டும். வட்டம் பற்றிய சிந்தனை விழுந்த நொடி நின்று போன ஒரு வட்டமாக இருக்கலாம்,விழுகின்ற மழைத்துளி வட்டம், என்று வளர ஆரம்பித்த வட்டங்களில் சுற்றி விளையாடும் மனநிலைக்குள் ஊறிக் கொண்டிருக்கும் புதையல் பானைகள் வட்டமாக இருக்கின்றன.

    புத்தன் ஏசுவின் கால் தடங்களில் வாழ்க்கை சூட்சுமம் வட்டமாக படிந்து கிடப்பதாகவே எண்ணுகிறது. இந்த வட்ட மேசை மாநாடு, மாநாடு நடத்தும் மனிதனின் மௌனங்கள் வட்டங்களில் இருந்தே திட்டம் தீட்டுவதாக நம்புகிறது. ஒரு வட்ட புகை மண்டலம் ஆதி மனிதனையும், நாளைய மனிதனையும் இணைக்கும் சங்கிலி வட்டமாகத்தான் இருக்க முடியும். பெரிய பெரிய ஞானிகளின் சிந்தனை வடிவம் வட்டத்தின் விரல் பிடித்தே நடக்கிறது. பெரிய பெரிய அழிவுகளின் கோரம் வட்டங்களின் வழியாகவே தாண்டவமாடுவதாக ஒரு வட்ட முடிவு ஏற்படுகிறது.

    ஆக்சிஜனின் அறிவியல் பெயர் வட்டத்தில்தான் இருக்கிறது. மரணம் என்ற சொல்லில் மறைந்திருக்கிறது வட்டங்கள். வட்டங்களாய் தெறித்து விழும் குமிழ்களின் ஈரத்தில் அகன்று சுருங்கும் விழிகளுக்குள் உருள்கிறது வட்டங்கள். உருவமில்லாத வட்டங்களே காதலிலும் உருள்கிறது. விரலிலும், விதியிலும் வட்டம் இருப்பதை வரைந்து சொல்கிறது. படைப்புகளும் படைப்பாளிகளும் பயணப்படும் கூற்றுகளில் வட்டம் இருப்பதை வட்டமடித்து சொல்லும் கழுகு.

    வட்டமாய் சுருண்டு கிடக்கும் காகிதத்துக்குள் வாதங்களின் தொகுப்பாய் இந்த வட்டக் கட்டுரை. வட்டம் இல்லை என்பவர்கள் ஒரு முறை கண்களை சுழற்றிக் கொள்ளுங்கள் …

    Share
  • இந்தியன்!

    -கவிஜி

    கண்ணீரில் மிதக்குது பூமி – அட
    எங்கிருக்க நீ  தான் சாமி…?
    நாட்டுக்குள்ள  எங்க ஊரு சேரி – கொஞ்சம்
    எட்டிப் பாரு கிடைக்கும் நூறு சேதி!

    அன்னனைக்கு உழைச்சா சோறு…
    மழை பெஞ்சா வீதியெல்லாம் சேறு…
    கோடைக்காலம் கொள்ளி  வைக்கும் பாரு…
    இந்தியாதான் எங்களுக்கும் நாடு!

    தண்ணி வேண்டி காத்திருக்கா பொம்பள…
    தண்ணிக் கட முன்னால ஆம்பள!
    எதிர்காலம் எங்களைத்தான் நம்பல – அட
    எதிர்நீச்சல் போட இனித் தெம்பில்ல!

    வறுமை வாட்டுது வயசக் கூட்டுது
    வாழ்க்கை பறபறக்கும் ரயிலு…
    பணந்தான் ஆட்டுது பந்தப் போல உருட்டுது
    இலக்கே  எங்களுக்கு கூழு!

    சாக்கடையும் பூக்கடையும் ஒண்ணுதான்…
    கொசு வளர்க்கும் பண்ணை இந்த மண்ணுதான்…
    வெட்டிப் பேச்சு திண்ணை இங்க இல்லைதான்
    வெட்டியான் வேலைகூட தில்லுதான்!

    சாரங்கட்டி  தொங்குவோம்  கயிறுல…
    சாவப்பாத்து பயப்படத் தெரியல…
    சங்கடந்தான் ரத்தம் எங்க உயிருல
    சரித்திரத்தில் எங்களுக்குப் பெயரில்ல!

     

    Share
  • சிவப்பு!

    -கவிஜி

    கொழுத்த தனிமனிதத்
    தத்துவம்
    குளமாகி
    வழியத் துவங்க,

    பொதுவுடைமை
    கடல் ஆக,
    காத்து நிற்கும்
    கொக்கின்
    ஒற்றைக் காலைக்
    கவ்விக் கொண்டு
    நிற்கிறது
    பசி என்னும்
    மாயக் கைகளின்
    வயிறு…!

    வயிற்றின் மேல்
    ஒட்டிக் கிடக்கும்
    சிவப்புத் துணியில்
    கொழுத்தவனின்
    குளம்
    வடிகட்டப் படுகிறது…!

    ஏகாதிபத்திய
    எதேச்சாதிகாரம்
    திமிங்கலத்  தீவாய்
    கடல் அசைக்கிறது!

    கரைதட்டி நிற்பது
    குளம் கொண்ட
    காவுகளின்
    சிவப்பு வண்ணச்
    சித்தாந்தம்!

    நீச்சல் மறக்கும்
    திமிங்கிலம்
    கரைக்கு இரையாவது
    எதிர்காலப் புரட்சி!

    வந்தே தீரும்
    வந்தது தீர்ந்தது போல!

     

    Share
  • யாசக வேண்டுதல்!

    -கவிஜி

    உள்ளக் கசிவின்
    உறுத்தலில்
    ஒருவகை நெளியலாம்…

    அல்லாத ஒன்றைக் கொண்டு
    சூடிக் கொள்ளும்
    சூட்சுமக் கயிறுகளின் புழுவில்
    நீண்ட பசி
    சிறு சிறு
    வயிறாகலாம்…

    கற்று மறந்த கல்வியை
    வெற்றுப் புறம் தள்ளப்
    பட்டுப் பாழாகும்
    பரிதவிப்பில் தரிசனம் உடைந்த
    ஒற்றைக் கண்ணாகலாம்…

    சற்றே மறந்த
    கணப் பொழுதைப்
    பிசைந்து உருட்டி
    உடல் முழுக்கப் பூசிக் கொண்ட
    பூதமாகலாம்…

    இல்லவே இல்லாத
    கருந்துளையின்
    சுவர்ப் பரப்பில்
    அசைந்தாடும் எச்சிலின்
    காமம் வழிந்தும் நெளியலாம்…

    நம்பினோரின் நயம்பட
    நர்த்தக நடனம்
    நலம் சொல்லும்
    நாளை நாளிலும்
    அவ்வகையே தெளியலாம்…

    உயிருக்குள் அறுந்தபடியே
    தொங்குவது
    திக்கென்று நின்றுவிட்ட
    யாசக வேண்டுதலின்
    விளிம்பாகவும் இருக்கலாம்…

    இருக்கட்டும்…!

     

    Share
  • நியந்தாவின் வானவில்

    கவிஜி.

    “நான் தான் பேசறேன்” இது தான் நீ என்னிடம் பேசிய முதல் வார்த்தை வாக்கியம். கவிதை…ம்ம்ம்… வேறு என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அது உண்மை. இப்போது நினைத்தாலும் அந்த ஒரு வாக்கியம் தரும் பேரின்பம். எனக்கு வேறு இலக்கியங்கள் தருவதில்லை என்றே நினைக்கின்றேன். நான் ஒரு பறவை என்பதை அன்று தான் முதன் முதலாக உணர்ந்தேன். வானத்தின் நயனங்கள் ஆனது உன் புருவ சுழிப்பு. உணர்தலில் உள்ளூர உத்சவம் நடத்தும். உண்மையில், உணர்தல் உன் சொல் என்பதை நாம் முதலில் சந்தித்த அந்த நீல நதிக்கரை இருபக்கமும் மறந்து நம்மையே கண் கொட்டி பார்த்ததே. அந்த பார்வையில் ஒரு சொல்லாகிப் போன நாம், நாம் சேர்ந்து எழுதாத புதுக் கவிதையின் மரபு உண்மையில் மை இல்லாத காகிதம் போல, பொய்மையில் வாய்மை எனப்படுவது உன் அருகாமை என்று நான் உள்ளூர வியந்து கிடந்தது. நாம் ஒன்றாக நடந்த அன்று தான்எத்தனை ஆச்சரியம் நீ. “இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?” என்று உன்னிடமே நான் வியந்து முயங்கிக் கிடந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நீ சொல்லும் மொழி நான் நினைத்தே பார்க்க முடியாத ஓவியம். அல்லது கிறுக்கல் (இந்த இரண்டில் நீ குழந்தையா, கவிதையா, என்பது தானே, நமக்கான சண்டை).

    “ம்ம்ம்… நீங்களும் தான் எனக்கு பிடிச்ச மாதிரிஇருக்கீங்க” என்று நீ கூறும் நொடியில் நான் நீயாகவே மாறியதை நாம் முதல் முறை பிரிந்த போது தான் உணர்ந்தேன். பொதுவாக நீ பேசும் ஒவ்வொரு சொல்லிலும் கலந்திருக்கும் போதி மரத்தின் இலைகளின் பச்சை நரம்புகளை நான் பின்னிக் கொண்டே இருப்பேன் என்று உனக்கு தெரிந்த நாளில் “ம்ம்ம்…போங்க…” என்று சொல்வாயே, அதில் கலந்த மூச்சு காற்றை நான் வாசிக்கவில்லை. சுவாசிக்கிறேன்.

    அலைபேசியில் நீ ஆச்சரியம். நேரில் பார்க்கும் போது நீ முழு பரீட்சை. மிரண்டு அருகினில் வந்தேன் நீயும் அதையே கூறினாய். ஒருவரையொருவர் ஆழமாக பார்த்தோம் (இருவருமே நடிப்பில் பிரமாதம் இல்லையா). பின், அளவோடு பார்ப்பதாகக் காட்டிக் கொண்டோம். பின்னொரு நாளில் பேசிக் கொள்ளும் போது சொல்லி சிரித்தோம். செதுக்கிய பூங்காற்றை உன்னிடமே கொண்டாய். பாராங்கல், நான் கூட கட்சி மாறினேன் பூக்களுக்கு. உனது கண்களை கடன் கொடுப்பதே உன் வேலை என்பேன் “போங்க” என்பாய். “போடா சொல்” என்றால் “ம்ம்ம் …மாட்டேன் போ” என்பாய் அதில் எனைத் தின்பாய். எனை எப்போதுமே வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கின்றன உனது சொற்களும் உனது பற்களும். கூடவே உனது மௌன முற்களும். இதற்க்கெல்லாம் முன், அந்த கண்களின் கவிதை வட்டமென உருட்டல் மிரட்டல்.

    உனக்கு நினைவிருக்கிறதா நான் நினைத்த ஒன்றை நீ கூறினாய். நீ பார்த்த ஒன்றை நான் காட்டினேன். பின் இருவருமே ஒரே சொல்லை ஒரே நேரத்தில் ஒன்றாக கூறினோமே. நம் காதலை பரிமாறிக் கொண்ட மிக அற்புதமான தருணம் அது. அந்த தருணத்தில் “ஹே” என்று இருவருமே ஒரு கணம் திரும்பி முகம் பார்த்துக் கொண்டதில், கண்டிப்பாக நம் பூமி நின்று தான் சுற்றி இருக்கும். பட்டும் படாமல் கைகள் உரசி. விரல் பற்றிக் கொள்ளாமலே, தோளும் தோளும் உரசி, சிறகாக முடியாமலே தடுமாறிய நினைவுகளை பின் ஒரு நாளில் இருவருவுமே அவரவர் பார்வையில் விவரித்துக் கொண்டது புது திரைக்கதை யுக்தி. அது தீராக் காதலின் முக்தி.

    எத்தனை கடிதங்கள் எழுதிக் கொண்டோம். அத்தனையிலும் நிஜங்கள் மட்டுமே. நமக்கு முகமூடி தெரியாது. எழுதிய எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் நீ வண்ணங்களில் பூத்த மாயாஜாலங்கள் நிகழ்த்தினாய். நானும் பூக்கள் நட்டினேன் என்பது உன் அன்பின் வெளிப்பாட்டில் நான் புரிந்து கொண்டது. சின்ன சின்ன சண்டைகளில் நீ நிலவை உடைப்பாய். நான் நிலவாய் உடைவேன்நான். எரிமலையாய் வெடிப்பேன். நீ ஏறிந்த பின்னும்கிடைப்பாய். உன் கோபங்களில் நான் மெல்லிசை. என் கோபங்களில் நீ பன்னிசை. இசைகளின் கோர்வையில் நீ, நான் சங்கீத சங்கேதம். மௌனங்களில். நாம் நீரில்லா மீனைப் போல துடித்தே இருந்தோம் என்று பின் பேசிக் கொண்ட இரவுகளில் காதோரம் கிசு கிசுத்துக் கொள்வோம். நதியோரம் கனவுகளாய் வசீகரித்துக் கொள்வோம். இத்தனை காதலை உன்னிடமே நான் உணர்ந்தேன் தோழி. உன்னிடமே புரிந்தேன் தோழி. இப்போதும் ஒரு முறை சொல்லத் தோன்றுகிறது. இப்படி ஒரு பெண், நான் கடந்த பாதையில் இல்லை.இல்லவேயில்லை. மீண்டும் ஒரு முறை, இல்லவேயில்லை

    உன் பாதையில் நான் கடக்கவே இல்லை. நான் கடக்கவே முடியாத பாதை. நீ கடந்தாலும் கிடைக்காத தூரம். நீ கிடைத்தாலும் தூரமாய், இன்னும் தூரமாய். நீ உன் தேசத்து தூரிகைகளின் ரசனைக்கார மழைத் துளியின் வெடித்து விடாத குமிழ் நானாக இருக்கவே ஆசைப் படுகிறேன். நாம் அடிக்கடி கட்டிக் கொள்ளும் நதியை நான் சமைத்த ஒரு நாளில் தான் நீ புது கூழாங்கற்களை தூவினாய். கரையோரங்களில் பூக்கள் மட்டுமல்ல, செடிகளும் இருக்கட்டும் என்றாய். நாம் வளர்த்த மான் குட்டி ஒன்று நதியில் விழுந்த அன்று நீ அழுத அழுகைக்கு நான் அர்த்தம் தேடாமலே அணை கட்டினேன். நீர் பஞ்சம் வந்தாலும் பரவாயில்லை உன் விழியில் நீர் கொஞ்சம் கூட வேண்டாம் என்றேன். ஓடி வந்து கட்டிக் கொண்டாய். புது மான் போல முட்டிக் கொன்றாய்.

    முதல் சந்திப்பில் அந்த மலை உச்சியில் நாம் மட்டும் நின்றது நினைவிருக்கிறதா? நமக்காகவே வீசிய காற்றை நான் உன் தோழி என்று நினைத்தேன். நீ என் தோழன் என்று வெறுத்தாய் (உனக்குதான் என் தோழர்கள் பிடிக்காதே). ஒரு காட்டாற்றின் வேகத்தின் உன் சொல் பிரயோகம் மூச்சடைத்து நின்றேனே. நீ ஏதோ ஒரு புள்ளியில் என் அருகே வர, நான் மிகவும் கடினத்துடன் சற்று பின் சென்றேன். நினைவிருக்கிறதா? பின் சென்றது உன்னை பிடிக்காமல் அல்ல மிகவும் பிடிக்கும் என்பதால் தான். பிடித்த ஒன்றில் பிடிக்காத ஒன்றும் இல்லாமலே போக, பிடிக்காத ஒன்றும் பிடிக்கும் ஆச்சர்யம் உன் அருமையில் மட்டுமே. பிடித்தல் என்பதும் பிடிக்காது என்பதும் ஒன்றுமில்லாமல் போனது உன் தூரத்தில் நான் கண்ட பொய் என்று சொன்ன நிஜம். பூர்வகுடி இருப்பில் பூஜ்யம் சாத்தியம். சூனியம் காத்திருக்கும் கதவடைப்பில் கத்தரிப் பூ மழையில், முழு இரவு பனி. நீ எனக்கு நான் யார் என்று பிரிவுகள் சொல்வதில் சிறு சிறு மரணம் தான் எனக்கு.

    நம் நண்பனின் திருமணப் பந்தியில் உனக்காக அத்தனை நேரம் நான் காத்திருந்து கொஞ்சம் கோபமாகி, நான் மட்டும் சென்று சாப்பிட, எனக்கு சற்று பின் தான் நீ வந்தாய். நீ எனக்கு முன்னால் அமரும் சூழலில் எனைப் பார்த்து யாருக்கும் தெரியாமல் ஒரு புன்முறுவல் தந்தாயே அதை இந்த ஜென்மத்தில் நான் எப்படி மறக்க? மறக்கும் வியாதி இருந்தால் யாரிடமாவது கொஞ்சம் கடன் வாங்கி அனுப்பு. மறந்தாலாவது நான் மரிப்பேனா பார்க்கிறேன். நான் உன்னைப் பார்த்து பொய் கோபத்துடன் “போ” என்று ஜாடை செய்தது உனக்கு பிடித்ததென்று பின் ஒரு நாளில் குறுஞ்செய்தி ஒன்றில் சொல்லி இருந்தாய். மீண்டும் ஒரு முறை எனைக் கிள்ளிப் பார்க்கிறேன். உனக்கு எப்படி என்னைப் பிடித்தது என்று உன்னை முழுதாக பார்த்து முடிக்கவே எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது நியந்தா. தேன் கூட்டின் சரி பாதியென இரு கண்கள். அதில் கடலென தத்தளிக்கும் அலைகளின் தேடலை நான் மட்டுமே உணருகிறேன். உணருதலில் ஓஷோ சற்று இளைப்பாரட்டும், அல்லது புத்தனே வந்து இலை மறை காயாகட்டும். எல்லாம் தாண்டிய தியானம் நீ உனைச் சேரும் தனிமைக்குள் நான் மட்டுமே. பூதக் கண்ணாடி தரித்துபுன்னகை புரிவேன். மனச் சரிவில் மாட்டிக் கொண்ட பின்னாலும் நினைவுகளில் நீ சரிந்து கிடப்பது வரம். உன்னோடு துறவறம் கூட அறம்

    உனது கோபங்களின் தாபங்களை எனையன்றி யார் புரிவார். நீ வெறுத்தாலும் வெறித்தாலும் அங்கே வெற்றிடமாய் நான் மட்டுமே. நீ வரையும் ஓவியங்களில் நான் வண்ணமற்று போகிறேன். சில போது எண்ணமற்றும். வெளிகளின் தடத்தில் நீ வலைகளை வரைந்தாலும் நான் நிழலற்று வந்து மாட்டிக் கொள்ளும் நிறங்களின் காதலனாகிறேன். நமது பேச்சுகளை தீரா நதி என்று யாராவது சொல்லக் கூடும். தீர்ந்தாலும் நதி என்பது போலதான் நம் சண்டை நாட்களிலும், சண்டைக்கு பின் நான் பேசும் அலைபேசியில் முதலில் நீ பேசுவது இப்படித்தான் இருக்கும்.

    “என்ன சொல்லுங்க. உங்க கூடயெல்லாம் பேசறேன் பாருங்க என்ன சொல்லணும். உங்களுக்கு இன்னும் என்ன பத்தி தெரியல நான் ஒரு நாள் இல்லாம போவேன் அப்போ தான் யோசிப்பீங்க.”

    இப்போது யோசிக்கிறேன். நியந்தா உன்னை எப்படியெல்லாம் திட்டி இருக்கிறேன். அடித்திருக்கிறேன் ஒரு ஆணாதிக்க கவிதையாய் உன் மேல் படர்ந்திருக்கிறேன். நீ இருக்கும் போது உன் ரயில் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. இன்று நீ ஒற்றை ரயிலாய் வெகுதூரம் போன பின் தான் ஒற்றைப் பனைமர வலி தெரிகிறது. பேய் பிடித்த மரமாய் கள் உண்டு கிடக்கிறேன்.நீயும் தான் என்னை யாருமே சொல்லி திட்டாத வார்த்தைகளால் கொன்று இருக்கிறாய் இருந்தும். நான் பிழைத்துக் கிடப்பது அந்த ரயில் புன்னகையாலும், “ம்ம்ம்… பாப்பு உங்களயே நினைச்சிட்டு இருக்கா” என்று நீ சொல்லும் ததும்பளுக்காகவும்தான்.

    காட்டாற்று கடைக்கோடி துகள் என உன் அழுகை. நினைத்து நினைத்து நான் செய்யும் தொழுகை. நிஜமாலுமே நீ எனக்குள் நானே போட்டுக் கொண்ட சிலுவை. ஐயோ இதை மறந்து விட்டேனே, சிலுவை என்றதும்தான் மோதிரம் மாற்றி நாம் செய்து கொண்ட திருமணம் நினைவுக்கு வருகிறது. மோதிரம் மாற்றும் போது நீ சிரித்ததும் மாற்றி முடித்ததும் மெல்ல நீ அழுததும், எனக்குள் பதிந்து போன மாயக்கண்ணாடி. பாதரசம் போனாலும், பாதி ரசம் என்னை சுரண்டும் யாத்திர தேடல் அல்லவா அது! முகத்திரை கிழியாத போது யாத்திரைகள் சுலபமல்ல என்பதை நித்திரை கிழித்த கனவில் உன் முகம் கூறியதை நான் புலம் பெயர்ந்த ஆழ் மன வலியோடு உணர்ந்தேன். உணர உணர கிணறு தோண்டும் இல்லாமை, கல் மணல் என கொஞ்சம் நீரையும்தான் கண்ணீராக மாற்றும் தந்திரச் சூழலில் போய்க் கொண்டே இருக்க, தூரம்… தூரம்… இன்னும் கொஞ்சம் தூரம் பூமியின் மறுபக்கம் முகம் தெரிய அங்கும் நீ நான் நம் நிழலென நம் காதல்.

    நம் சண்டையில் நம் குழந்தை, காதல், பாவம் அது அனாதையாக அழுது கொண்டிருப்பதை விரும்புகிறாயா? நியந்தா, நீ நான் அழுதாலே துடித்து போவாய். உனக்கு அன்பு காட்டத்தான் தெரியாதே தவிர அன்பின் உருவம் நீ. உனது காதலை உள் வாங்கவே கடவுளாக வேண்டும். நான் கடவுள்களின் மொத்தம் என்று நீயே கூறி இருக்கிறாய். கடவுளாய் இருப்பது எந்தனை வலி என்று தெரியுமா உனக்கு? கவிதையாய் இருப்பதை விட கவிஞனாக இருப்பதுதான் கஷ்டம். எழுத எழுத கவிதையாகி விடுவாய் எழுதாமல் விட்டால் கவிஞன் இல்லாமலே போவான். கடவுளும் அப்படியே. புதைக்க புதைக்க பீரிட்டு எழும் நம் காதலைப் போல,தொலைந்து காணாமல் போய் பின் கிடைக்கும். நம் பின்னிரவின் முத்தம் போல நம் அறையின் தீரா வெட்கமென ஒரு சுழல் கொண்ட வானவில் கலைதலாய் கடவுளும் இருந்து விடட்டும் என்பது எனது கவிதையின் சாரம். அல்லது உன் ஓவியத்தின் ஓரம்.

    உன் ரகசிய மொழிக்குள் நான் பகிரங்கமாய் காணாமல் போவது நீ அறிந்தும் அறியா கானல் நீரின் சூடு. மதில் தாண்டாத பூனைகளின் தேசத்தில் நான் புலி என்பதில் காடு எதற்கு? மிஞ்சிய யாவும் தான்சேனின் இசையென அழுகிறது. நம் மழை சொல்லும் தத்துவத்தில் நாம் குடையானோம். காற்று திசை அறியாத போது மழையாகவே ஆகிடுவோம் குடை வலிக்கிறது.

    குறும்பு புன்னகை உனது ரகசியக் கசிதலாக, அரும்பும் மானுடம் என்னை புசிக்கிறது தோழி. நீ தீர்வை சுமந்து கொண்டதில் பாரம் முழுக்க எனக்குபறக்க பறக்க திறக்கும் வாசலென உன் வானத்தில் நான் ஒரு எரிகல்லாகவாது இருந்து விட்டு போகிறேன். யாத்திர பாதைகளில் இருவர் பாதங்களும் ஒன்றாக தான் இருக்கும்.கால இடைவெளி என்பதை கண் கொண்டு கண்டது. நம் வாழ்வில் தான் பெண்ணே நமது பால்வீதியின் ஒரு முனை உன்னிடம் மறுமுனை என்னிடம் முனைகளின் ஆரம்பிப்பதும் இல்லை முடிவதும் இல்லை. ஒரு தூரம் இல்லையா.

    கடைசியாக நாம் போட்ட சண்டையில் உன்னை அதிகமாக அழ வைத்தேன். ஆனால், ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக நான் அழுவது உனக்கு தெரியாமல் இல்லை. நமக்குள் இருக்கும் எல்லாமே இது தான். நாம் ஒருவரையொருவர் உணர்த்த வேண்டியதே இல்லை. வெறும் மௌனம் கூட வேண்டாம். இருத்தல் வேண்டவே வேண்டாம். மரணத்தில் கூட புரிந்து கொள்ளும் காதல் நமக்கு வாய்த்திருக்கிறது. நியந்தா அது தான் தேவ மகத்துவம் மௌனக் கடலின் அசையாத அலை என்பது நம் தத்துவம்.

    வந்து விடு. ஒரு கடவுளாகவாவது. துடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறு மீனின் அலை உன் உள்ளங்கை சூடு.

    Share
  • சலாம் கலாம்!

    -கவிஜி 

    அவர் அனுப்பும்
    ஏவுகணைகள் கூடக்
    கருணை கக்கிக் கொண்டுதான் சீறுகிறது…!

    எப்போதும் புன்னகைக்கும்                                         abdulkalam
    பூந்தோட்டமெனக்
    கனவுகளின் திறவுகோலையே
    தருகிறார்…

    எதிர்கால வளையத்தை
    நிகழ்காலக் கரங்களில்
    விட்டு விட்ட
    அக்னிக் கடவுள் அவர்!

    தன்னலம் அற்று
    விண் நலம் காக்கும்
    மண்ணுலகம் தந்த ஹிப்பி
    வைத்த அறிவியல் அவர்!

    சென்ற இடமெல்லாம்
    கல்வியை விட்டுச் செல்லும்
    நூலகம் அவர்!

    சிறகுகளின் வெளிகளைச்
    சின்னஞ்சிறு குழந்தைகளின்
    கண்களில் கொட்டிய விசைக்காரர்…
    கூட இசைக்காரர்!

    மகாத்மா என்றொரு
    சொல்லுக்கு மீண்டும்
    உயிர் கொடுத்தவர்,
    ஆன்மாவின் வலிமையோடு
    இன்னும் இன்னும் நிறைகிறார்…
    நிறைக்கிறார்!

    கனவைக் கண்டே
    தீர்வதுதான் அவருக்கான
    சமர்ப்பணம்!

    மரம் மட்டுமா நட்டார்…?
    மனங்களையும் தான்…
    எனக்கும் எவர்க்குள்ளும்!

    மீண்டும் முளைக்கும்
    சிறகுகளாக
    அவரின் தீட்சண்யம்
    வானம் தாண்டிப் பறக்கும்!

    வந்தே மாதரம்!

     

    Share
  • நியந்தாவின் இரவு

    — கவிஜி .

    பனி விரட்டும் இரவைக் கடந்திருக்கிறீர்களா?

    மழை விரட்டி, வெயில் விரட்டி ஓடுவது போல பனி விரட்டி ஓடிவிட முடியாது. அது இப்பக்கமிருந்து வருவது போல தெரியும் அப்பக்கமிருந்தும் வந்து விடும். மாய வித்தைகளின் பரவலாய் அப்படி அப்படியே பார்க்க பார்க்க, கண்கள் சுழன்று நிற்கும் இடத்தில் காட்சி வெள்ளையாகி, சூழ்ந்திருக்கும் கணங்களில் வானம் பூமி இணைக்கும் மாய தத்துவம் அது. சொல் வார்த்தையாகி, வார்த்தை வாக்கியமாகி, பாடு பொருள் இதுவென தீர்மானிக்கும் கவிதைப் பிரசவத்தைப் போல, அது ஒரு மூடு மந்திரம் விதைக்கும்.

    இதய நரம்புகளின் இளகிய, குறுகிய இடைவெளியில் சீறிப் பாயும் புது ரத்தம் சற்று நின்று தலை தூக்கிப் பார்க்கும். பனிகளின் பதுங்கல் அதிகாலை புலியின் உறுமலாய் ஆழ் மனத்தில் அக்கினி விதைக்கும். அப்படி ஒரு அக்கினித் தூறல் பனிப் போர்வை பாதாளம் எதுவென கேட்கும். இதுவென வரும் சந்தேகத் தாழ் திறந்த சல சலப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கிய இரவில், நான் இனி ஓட முடியாமல் ஓடத் தெரியாமல், தலையைச் சுற்றி பார்த்தேன். தலையே சுற்றியது பார்வையும் இருட்டியது.

    மை விழி மயங்கிச் சரிய, மானுடக் கதைகள் புரிய பாம்பின் காலோடு வெற்றிட புள்ளி சற்று விரிய, நான் ஒரு கிணற்றுக்குள் தவழத் தொடங்கினேன். என் உடல், ரப்பர் குழாய்க்குள் நெளிந்து நெளிந்து ஒரு பாம்பைப் போல நீந்திக் கொண்டே, ஒரு இடைவெளியை நிரப்பிக் கொண்டே கடந்து கொண்டிருந்தது. காற்றின் வேகம் வெளிச்ச தாகம். இனம் புரியாத வெற்றிட சூடு பனிகளின் பற்கள். இரைச்சலற்ற தனிமையில் வெடித்து விடும் காதுச் சவ்வின் அகலம் இன்னும் இன்னும் மூச்சடைத்து விழச் செய்தன.

    உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அல்ல, கை விட்டுப் போன உயிரைப் பிடித்து விடும் நோக்கில்தான் நான் நீந்தினேன். நீச்சல் என்பதை நீரின்றி செய்தலில் காற்றாகி, இன்னும் இன்னும் இலகுவானேன். எனை நகர்த்தி செல்லும் நீண்ட உருளை, எனைக் கடக்க வைத்து கடக்க வைத்து சுருங்கிக் கொண்டே என் பின்னால் புள்ளியாகி வருவதை உணர்ந்தபடியே நான் எடை இழக்கத் தொடங்கினேன்.

    செரிக்க முடியாத மலைப் பாம்பு, நீண்ட முயற்சிக்குப் பின் “சீ போ” என துப்பி வெளியே தள்ளுவது போல அந்த நீள உருளையில் இருந்து வெளியே வந்து விழுந்தேன். இன்னும் தீரவில்லை பனி மூட்டம். தீர்க்கவில்லை மன ஓட்டம்.

    வெள்ளை தேசத்து உணவாய் மட்டும் நான் என்னை அடையாள படுத்திக் கொள்ள வேண்டுமோ! எனக்கு நான் உயிருடன் இருப்பது கூடப் புரியவில்லை. அது வேறு ஒரு மண். வேறோர் உணர்வு. வேறோர் உந்துதல். வேறு ஒரு காற்று. எனது இதயம் துடிப்பதை என்னால் இப்போது நன்றாக உள் வாங்க முடிந்தது.

    “பனி சொல்லும் கவிதையோ… இந்த பார்வையின் தேடல்”ஆழ் மனக் கதறல் கவிதையாய் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயற்சித்தது.

    வெற்றிடங்கள் மெல்ல மெல்ல பனியைக் கடக்கத் தொடங்கியது. என் மனதுக்குள் ஆயிரம் மனங்கள் தவளைகளாகி கத்தத் தொடங்கின. எங்கு இருக்கிறேன்? இது எந்த இடம்? நான் எதோ ஒரு வழியாக ஒரு பயணம் செய்து எங்கேயோ வந்திருக்கிறேன். அது நன்றாகத் தெரிகிறது. ஆனால் எங்கு இருக்கிறேன்? ஏன் இருக்கிறேன்? எதற்கு! இது என்ன தேசம்! இது என்ன காட்சி? எனக்கு பனி சொன்ன கதைகள் புரியாத போது முகம் திருப்பிய பனி மெல்ல மெல்ல கலையத் தொடங்கியது. மின் மினிப் பூச்சிகள் மொய்க்க வீதியும் வீடுகளும் மெல்ல கண்ணுக்கு தெரியத் தொடங்கின.

    எனக்கு முகம் வியர்க்கத் தொடங்கியது. வியர்த்த முகத்தில் கருப்பு வெள்ளைக் காட்சிகளாய் நினைவுகள். முளைத்தன எது நிஜம் எது மாயம் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. “இதே வீதி, இதே வீடுகள், இதே கட்டடங்கள் எல்லாவற்றையும் நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன். முன் ஜென்மத்திலா? நான் இந்த தெருக்களில் ஓடியிருக்கிறேன். இதோ இங்கு விளையாடி இருக்கிறேன் “

    இரவு தன்னை திறந்த மேனியாக்கி இளைப்பாரிக் கிடந்தது.

    “இதோ இந்த வீடு என் நண்பன் குட்டியின் வீடு. இதோ இந்த வீடு அபிதாவின் வீடு. இந்த வீடு என் வீடு. இந்த வீட்டில் நான் வசித்து இருக்கிறேன்.” எனக்கு நிதானம் எதுவென்றே புலப்படவில்லை. மாயக் குழப்பங்களில் சாயும் நிழலென, என் கற்பனைகள் இலை பிடித்த எறும்பாகி நீந்திச் செல்ல, அங்கே ஆறு இல்லாத மணல் பரப்பில் நாங்கள் சிறுவயதில் கட்டி விளையாடிய மணல் வீடு இடிந்திருந்ததன என்பது போலொரு யோசனை.

    நான் யோசித்துக் கொண்டே அந்த வீதி முழுக்க ஒரு இரவாக சுற்றி அலைந்தேன். வீதியை நிரப்பும் நாய்கள் எனைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனக்கு இந்த நாயுடன் கூட பழக்கம் இருப்பதை உணர முடிந்தது. இது பேர் ரோசி. நாயனக்காரர் வீட்டு நாய். எனக்கு சில விஷயங்கள் புரிவது போல ஒரு மாய யதார்த்தம். மீண்டும் எனக்குள் பனி விதைத்தது. விதைக்க, விதைக்க என் விழி கதைக்கும் நினைவுகளில் நான் எடை கொண்ட காற்றாகி வீதி நிறைந்து கிடந்தேன் எனக்குள் நியந்தாவின் ஞாபகம் மெல்ல துளிர் விடத் தொடங்கியது

    நியந்தா …

    அவளைப் பற்றிய நினைவுகளை எப்படி நான் மறக்க? மரணித்த பின்னும் மறக்க கூடாது என்பது தானே விதி. விதி மாற்ற நான் யார்? அல்லது மாறிய விதியிலும் அவளே இருப்பதை நான் எப்படி மாற்ற? கற்ற பொருளில் பொருள் முதல் வாதம் தான் நிஜம் என்று சொல்லும் விதியில் கருத்து முதல் வாதக் கொள்கையை வேரோடு விட்டு செல்ல விடுவதில்லை இந்தக் காதல். கலவிக்கு பின்ஒரு நாளில் நிதானமாக வந்திருக்க வேண்டும் இந்த காதல் என்பது தானே பொருள் முதல் வாதம். முதலில் செயல் பின் தான் சிந்தனை என சிந்தனை முழுக்க நிறைந்து நிற்கும் நியந்தாவை எந்த பொருள் முதல் வாதத்தில் சேர்க்க?

    தொடர்பற்ற சிந்தனைச் சோர்வில் நான் சித்திரமாகிப் போனேனோ? சித்த பிரமையாகிப் போனேனோ? காற்றுள்ள காட்சியில் கடைசிப் பொருளும் நானே என்பது போல ஒரு நிலை எனக்கு முன்னால் மறைந்து, மறைந்து போய்க் கொண்டிருந்தது. திக் கென்று சுவரோரம் நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். தலை தூக்கிய நாய் அர்த்தத்தோடு பார்த்து விட்டு தலை கவிழ்ந்து படுத்துக் கொண்டது. இன்னும் முழுதாக விலகாத பனி என் உடலையும் உள்ளத்தையும் நடுங்க வைத்துக் கொண்டிருந்தது. உள்ளம் முழுக்க நான் ஒரு கனவுக்குள் இருப்பதாக ஒரு பதற்றம் எனைத் தொற்றிக் கொள்வதை நான் விரும்புவனாகவே இருந்தேன். தைரியம் என்பது அதீத பயம் என்று பிறந்த கருத்தை, கழுத்தை பிடித்துக் கொல்லத் துணியாமல், கால் பிடித்து இழுத்துக் கொண்டே அந்த நிழலைப் பின் தொடர்ந்தேன். அந்த நிழல் அங்கும் இங்கும் பார்த்தபடி வேக வேகமாய் மூச்சிரைக்க இரவைக் கிழித்துக் கொண்டு சென்று பெரிய வீதிக்குள் நுழைந்து. ஒரு சுவற்றில் சாய்ந்து நின்று மீண்டும் மீண்டும் சுற்றிப் பார்த்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

    அந்த முகம் அந்த உடல் என்னைப் போலவே இருந்தது. அந்த மூச்சிரைப்பும் எந்தன் மூச்சிரைப்பும் ஒன்று போலவே இருந்தது. இன்னும் இன்னும் தெளிவாய் யோசிக்கும் மன நிலையில் எனக்கு என் உள் மனம் சொல்லும் விளக்கங்கள் நிஜமாகவே பட்டது. இது முழுக்க முழுக்க என் கனவாக இருக்குமோ என்று நான் யோசித்த தருணத்தை, அல்லது ஒரு கற்பனையாக இருக்குமோ என்று உணர்ந்த தருணத்தை, அல்லது யாரோ ஒருவரின் கதையாக கூட இருக்குமோ என்று நினைத்த தருணத்தை, அந்த முகம் எனக்கு என்னை கடந்து யோசிக்க வைத்து விட்டது. எனக்கு ஒரு வழியாக புரியத் தொடங்கியது… எல்லாம்…

    எல்லாம் இன்று நடந்த அனைத்தும், எனக்குள் ஒரு தெளிவை காட்டத் தொடங்கியது. அது நான் தான். எனக்கு முன்னால் நிழல் போல போய்க் கொண்டிருக்கும் அவன், நான் தான். அப்போ நான்? நானும் நான் தான். அந்த நிழலும் நான் தான்! அவன் இப்போது நியந்தாவை பார்க்கப் போய்க் கொண்டு இருக்கிறான். எனக்கு புரிந்து விட்டது மனதுக்குள் ஊடுவிய பனியை என்னால் விலக்கி வைக்க முடிந்தது. மூளைக்குள் குத்தும் நினைவு ஊசியல்ல இது. இது என் முன் ஜென்மக் கதை அல்ல, இது நிஜம். அறிவியல் தேடும் உண்மை. சாத்தியக் கூறுகளின் ஒட்டு மொத்தம். ஆம்… அது நானே தான். எனது 18வது வயதில் நான் தான் அது.

    நான் வார்ம்ஹோல் வழியாக என் கடந்த காலத்துக்குள் வந்திருக்கிறேன், எந்தக் கடவுளைக் கூப்பிட. இது சந்தோஷமா சங்கடமா? ஒன்றும் புரியவில்லை, ஏன் வந்தேன்? அதற்கும் பதில் இல்லை. இப்போதைக்கு என்னை நான் பின் தொடர வேண்டும் அப்போது தான் காரண காரியங்கள் விளங்கும் என்று நான் என்னை பின் தொடந்தேன். என்னை நானே பார்ப்பது எப்படிப் பட்ட அனுபவம் !!!
    அதை விவரிக்க முடியாத
    காகிதத்தில்
    நான்
    வெறும்
    எழுத்துப்
    பிழையாகவே …இருந்து….. விட்டுப் ………போகிறேன்………

    “எதுக்கு இந்த நேரத்துக்கு வரச் சொன்னா? மணி 11 ஆகுது. யாராது பார்த்து தொலைச்சா, காலைல பஞ்சாயத்து அது இதுன்னு ஊரக் கூட்டி ஒரு நாளை ஒட்டிடுவானுங்களே. என்ன பண்ண? சாயந்திரம் வரைக்கும் இவ கூடத் தானே விளையாடிட்டு இருந்தேன் அப்பெல்லாம் சொல்லாததையா இப்போ சொல்லப் போறா? லூசு மாதிரி, பேய் புடிச்ச மாதிரி, 11 மணிக்கு கிழக்கு கிணத்துக்கு வரச் சொல்றாளே. ஐயோ கடவுளே, இந்த இடத்துல தான் லட்சுமி அக்காவ வெட்டிக் கொன்னாங்க. அது வேற ஆவியா சுத்திட்டு திரியுதுன்னு சொல்றாங்களே, இவ வேற. என்ன சொல்றதுக்கா இருக்கும்?” நான் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டே, ஏதேதோ நினைத்துக் கொண்டே, மெல்ல என் கால் தடங்களை பூமியில் அச்சடித்து விடாமலே நடந்தேன்.

    “எம காதப் பயலுக, தூங்கற மாதிரியே எதாவது ஒரு மொட்ட மாடில படுத்துப் படம் பாத்துட்டு இருப்பானுங்க. விடிஞ்சதும் திரைக்கதையெல்லாம் சேர்த்து வேற படம் ஒட்டிடுவானுங்க”

    நான் கிணற்றை நெருங்கி விட்டேன். பனி சொல்லும் பார்வையில் புகை போல நியந்தா தலை விரித்தபடி கிணற்று மேட்டில் கிணற்றுக்குள் கால் தொங்கும் படி விட்டு வெறிக்க அமர்ந்திர்ந்தாள். காலம் வரைந்த சித்திரமாக இருந்த அந்த காட்சிக்குள் நான் சித்திரத்துக்குள் நுழையும் ரசிகனாக கிணற்றை நெருங்கினேன். எனக்கு நியந்தாவை ரெம்ப பிடிக்கும். அது காதலா? என்றால் அது தெரியவில்லை. அது பற்றிய ஒரு முடிவுக்கு நான் வரவில்லை. ஒரு நாளுக்கு ஒரு நிறத்தில் இருப்பது போன்ற ஒரு நிறம் அவள். கனத்த உதடுக்காரி. கனத்த கூந்தல் காரியும் கூட. கொஞ்சம் குண்டு பெண்தான். பூசினார் போல இருப்பதில் பல சமயங்களில் நான் மூச்சிரைத்திருக்கிறேன். சைக்கிளில் அவளை வைத்து அழுத்தும் போதுஎன்னோடு நிறையப் பேசுவாள். நான் பேசாத போது நிறைய அழுவாள். அவளுக்கு எல்லாவற்றிக்கும் நான் வேண்டும். இப்படி ஒரு தோழமையை நிராகரிக்கும் எனது கோபத்தை அவ்வப்போது நான் நிந்தித்ததும் உண்டு. ஆமாம், இன்று மாலை கூட ஒரு மாதிரிதான் இருந்தாள். ஏதாவது பிரச்சினையா? அவள் அம்மாவின் தொழில் ஊரறிந்த ஒன்று. என்ன செய்ய அவளுக்கு அது மட்டும் தான் தெரியும் என்று ஊர் பேசிக் கேட்டதுண்டு. விட்டுப் போன கணவனைப் பற்றி அவள் அம்மாவும் பேசியது இல்லை. விட்டு போன அப்பாவைப் பற்றி அவளும் பேசியது இல்லை. நான் கேட்ட போது கூட “எங்க அம்மா மட்டும் என்ன ரெம்ப நல்லவங்களா எல்லாம் அப்டி தாண்டா நிறைய பேருக்கு காதலும் புரியறது இல்ல.கட்டி பிடிக்கறதும் புரியறது இல்ல”என்று ஒரு நாள் பெரிய மனுஷியைப் போல பேசினாள். எனக்குதான் ஒன்றும் விளங்கவில்லை. நான் கழுத்தை உற்று நோக்கிய தினம் ஒன்றில் “வேணும்னா தொட்டு பார்டா. இது ஒண்ணுமே இல்ல வெறும் சதை தான்” என்று என்னை மிரள வைத்தவள். எனக்கு அவளை ரெம்ப பிடித்த தருணம் அது.

    நான் மெல்ல அவள் பின்னால் போய் நின்றேன். பனி விழுந்து கொண்டிருந்தது. சுவாசிக்கும் காற்றில் கலந்திருந்த பனித் துகள்களில் நிறமற்ற சூடு பரவியிருந்ததை உணர முடிந்தது. என் உடல் நடுங்கிக் கொண்டிருக்க அவள் அசையாது அமர்ந்திருந்தாள். கிணறு முழுக்க அவளே அமர்ந்திருந்தது போல ஒரு தோற்றம். அந்த நள்ளிரவில் என் மனக் கண்ணில் கழுகாய் வட்டம் அடித்தது. அவள் வெற்றிடம் ஒன்றை பொதுவாக வெறித்திருக்க வேண்டும். சட்டென ஒரு யோசனை எனக்கு வந்தது எப்பவும் செய்வது தான். அப்போதும் எந்த வித யோசனையும் இன்றி செய்தேன்.

    “ப்ப்பெ” என பின்னால் நின்று அடித் தொண்டையில் கத்தினேன்.

    “ஆக்ஹ்” என்று வெடுக்கென்று திரும்பிய அவள் என்னைப் பார்த்தபடியே என் மேல் பின்னோக்கி சரிந்தாள்.

    ஒரு கணம் திகைத்து. இதயம் நின்று பின் வேகமாய் துடித்தது எனக்கு.

    எனக்கு ஒன்றும் புரியவில்லை “ஐயோ… ஹே… நியந்தா… நியந்தா… சும்மாதான பயமுறுத்தினேன். இதுக்கு போய் மயக்கம் போடுவாங்களா? அயோ கடவுளே இது என்ன புதுப் பிரச்சினை. நியந்தா ப்ளீஸ் எந்திரி. சாரி, இனி பயமுறுத்தல எதுக்கு கூப்ட்ட? இந்த நேரத்துல ஏன் இங்க வர சொன்ன. பேய் மாதிரி இருக்குடி உன்னப் பார்த்தா. யாராது பார்த்துடப் போறாங்க. எந்திரி விளாடாத. ஐ… ஐ… நியந்தா…நடிக்கிறா…”வேகமாய் அடிக்கின்ற இதயத்தை நானே சரி செய்தபடியே என்ன நானே சமாதானப் படுத்தும் வகையில் என்னென்னமோ பேசினேன்.

    ம்ஹும்… அவளிடம் எந்த வித அசைவும் இல்லை. அவள் மார்பில் காது வைத்துக் கேட்டேன், சத்தமில்லை. உடல் குளிருக்குள் பயணிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். உள்ளங்கை சில் என்று இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அழத் தோன்றியது. ஆனால் அதற்கு அது நேரம் இல்லை. உள்ளுக்குள் ஒரு அலாரம் அடித்தது. இப்படியே விட்டுப் போனால் அது எப்படியும் மாட்டிக் கொள்வேன். என்னைத் தானே போலிஸ் பிடிக்கும். மூளைக்குள் பேய் பிடிக்கத் தொடங்கியது. மூளை தாறுமாறாக யோசித்தது. கண நேர யோசனைக்கு பின் நியந்தாவைத் தூக்கி கிணற்றுக்குள் போட்டு விட்டு வேகமாய் வீடு வந்து படுத்துக் கொண்டேன். அடிக்கடி கிணற்று மேட்டில் அவள் அமர்வது ஊரறிந்த விஷயம். ஏற்கனவே வீட்டில் அவள் அம்மாவுடன் அடிக்கடி சண்டை போடுவதும் ஊரறிந்த விஷயம். ஆக, தற்கொலை செய்து கொண்டதாக ஊர் நம்பும். எப்படியும் நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று கேவலமாக நினைந்தேன். ஆனால், உள்ளுக்குள் உதறலும் அழுகையும் மாறி மாறி வந்து கொண்டே இருந்தது. சும்மாதானே பயப் படுத்தினேன் அதுக்கு போய் சாவாங்களா! நானே கொன்னுட்டேனே. ஐயோ, நியந்தா என்ன மன்னிச்சிடு நியந்தா நான் என்ன பண்ணுவேன் “ஒரு பக்கம் அவளின் மரணம் என்னை ஆழ்ந்த பைத்தியத்துக்குள் இழுத்துப் போனது. இன்னொரு பக்கம் அவள் எதற்கு என்னை வரச் சொன்னாள் அதுவும் தெரியவில்லை. நான் அவளை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டதை யாராவது பார்த்திருப்பார்களா என்னால் கண்களை திறக்க முடியவில்லை,, இறுக மூடிக் கொண்டேன்

    விடிந்தது ஊரே கிணற்று மேட்டில்தான் இருந்தது. நியந்தாவுக்கு ரெம்ப நாட்களாக பேய் பிடித்து இருந்ததாகவும் அதன் அடுத்த கட்ட விபரீதமாக பேய் அவளை கிணற்றுக்குள் இறக்கி விட்டு கொன்று விட்டதாகவும் ஊர் நம்பியது.

    நானும் நம்பினேன். என் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது. தலைக்குள் பம்பரம் ஒன்று சுழலாமலே குத்திக் கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் “இவளைக் கொன்றது இவன்தான்” என்று கை காட்டக் கூடும் என்பதை எதிர் பார்த்தபடியே கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டிருந்தேன். எனக்கு வாந்தி எடுக்க வேண்டும் போல இருந்தது. வெடித்துச் சிதறும் இதயத்தை அடக்கி வைத்துக் கொண்டு நின்றேன். பாதாள சோதி போட்டு, பல பேர் சேர்ந்து நியந்தாவை கிணற்றுக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்தார்கள். கிணற்று மேட்டில் கிடத்தப்பட்டவளைக் கட்டிக் கொண்ட அவளின் அம்மா கதறி கதறி, அழுது துடித்து, நியந்தாவின் கழுத்தோடு ஏதோ செய்து கொண்டிருப்பதை ஆங்காங்கே சுற்றி நிற்பவர்களுடன் சேர்ந்து நானும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.

    “ஏம்மா, முடிஞ்சு போச்சுஇனி அழுது ஒண்ணும் ஆக போறது இல்ல. இன்னும் பாடிய வைச்சுகிட்டு இருந்தா போலிஸ் அது இதுன்னு கேசாகிடும். வழிய விடு இப்டியே தூக்கிட்டு போய் எரிச்சிட்டு வந்துடுவோம். ஏம்ம்மா பொம்பளைங்கள்ளா சேர்ந்து கொஞ்சம் அந்த அம்மாவ தூக்கிட்டு போங்க”என்று ஊர் பெரியவர் கத்த, நியந்தாவின் அம்மா நியந்தாவின் கழுத்துப் பகுதியில் இன்னும் ஏதோ செய்து கொண்டே இருந்தது. அதற்குள் சில பெண்கள் சேர்ந்து நியந்தாவின் அம்மாவை இழுத்து அந்தப் பக்கம் கொண்டு வந்து விட. அந்த அம்மா செய்து கொண்டிருந்த வேலையை பாதியிலேயே விட்டு வந்ததை அனைவருமே கண்டு கொண்டார்கள். நானும் கூட.

    “ஓ … இது தான் பிரச்சினையா எவனோ தாலிய கட்டிருக்கான். ஏமாத்திட்டான் போல, அதான் புள்ள கதைய முடிச்சுகிச்சு. ஏம்மா நீ அந்த தாலிய கழட்டத்தான இவ்ளோ நேரம் போராடிகிட்டு இருந்த. கண்டிப்பா பையன் யாருன்னு உனக்கு தெரியும். சொல்லு சாயந்திரம் பஞ்சாயத்துல பாத்துக்கலாம். இப்போ பொணத்த தூக்குங்கப்பா. நேரம் ஆச்சு. உடம்பு ஊறிக் கிடக்கு”என்றபடியே நியந்தாவைத் தூக்கி கயிற்றுக் கட்டிலில் வைத்து காடு நோக்கித் தூக்கிப் போனார்கள்.

    நியந்தாவின் அம்மா அத்தனைக் கூட்டத்திலும் என்னை உற்றுப் பார்த்தது எனக்கு இன்னும் தூக்கி வாரிப் போட்டது. நானும் நியந்தாவின் கழுத்தில் கிடந்த தாலியைப் பார்த்தேன் எனக்கு எல்லாம் புரிந்தது. அயோ கடவுளே இது என்ன விளையாட்டு. ரெண்டு வருசத்துக்கு முன்னால இந்த தாலிய நான்தானே கட்டினேன். நினைவுக்குள் அந்த கல்யாணம் கட்ற விளையாட்டு மெல்ல ஒரு மலைப் பாம்பாய் நீளத் தொடங்கியது.

    பத்து பேர்… அது பசங்க, புள்ளைங்க, பெருசுங்க என யார் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடக் கூடிய ஒரு விளையாட்டு. அடுத்தடுத்து வரிசையாக பத்து குழிகளைத் தோண்டி, ஒவ்வொரு குழிக்கும் பத்து பேரில் ஒவ்வொருவரின் பெயர் வைக்கப் படும். சாட் பூட் த்ரி போட்டு கடைசியாக வருபவர் கையில் ஒரு பந்தைத் தந்து விடுவார்கள். அந்த குறிப்பிட்ட நபர் சற்று இடைவெளியில் யார் குழிக்குள் வேண்டுமானாலும் அந்த பந்தை உருட்டி விடலாம். அப்படி உருளும் பந்து யார் குழிக்குள் விழுகிறதோ. அந்த குழிக்கு சொந்தக்காரர் உடனே சுதாரித்துக் கொண்டு பந்தை எடுத்து யார் அருகில் இருக்கிறாரோ, அல்லது அடிக்க யார் தோதாக கிடைக்கிறாரோ அவரை அடிக்க வேண்டும். அடிபட்டவர் இப்போது பந்தை உருட்ட வேண்டும். யார் மீதும் அடி படவில்லை என்றால் திரும்ப அவரே வந்து மீண்டும் பந்தை உருட்ட வேண்டும். பந்து யார் குழிக்குள் வேண்டுமானாலும் விழுகும் என்பதால் மிச்சம் இருக்கும் ஒன்பது பேருமே குழிகளை சுற்றிதான் நிற்பார்கள். அதாவது பந்தையும் எடுக்க வேண்டும் அதே சமயம் தன் குழியில் விழுகவில்லை என்று உறுதி படுத்திக் கொண்டு அடிபடாமலும் ஓடி விட வேண்டும். அப்படி ஒரு இடைவெளியில் தயாராய் நிற்பார்கள். விளையாட்டு முடிந்து யார் தோற்கிறார்களோஅவரின் கையில் நிஜமாகவே ஒரு மஞ்சள் பதித்த ஒரு தாலியை கொடுத்து வீதிக்குள் உலவ விடுவார்கள். முதலில் யார் கண்ணில் படுகிறார்களோ அவர் தன் குடும்பத்தை சாராதவர்கள் யாராக இருந்தாலும்அவரின் கழுத்தில் கட்டி விட வேண்டும். அது முழுக்க முழுக்க ஒரு விளையாட்டு. மாலை வரை அந்த தாலி அப்படியே இருக்கும். பின் கழற்றி ஊர் சாமியின் கழுத்தில் போட்டு விடுவார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை சில சமயங்களில் ஞாயிறுகளில் ஊரே நின்று வேடிக்கை பார்க்கும். தாலி கட்டும் நேரத்தில் ஊரே கதவடைத்து கொண்டு விளையாட்டு காட்டும். தோற்றவர் தாலியுடன் ஒளிந்து ஒளிந்து விரட்டிக் கொண்டிருப்பார். ஊரே கலை கட்டும் அப்படித்தான் இரண்டு வருடங்களுக்கு முன் நான் விளையாட்டில் தோற்று எதிர்ப்பட்ட நியந்தாவின் கழுத்தில் கட்ட அவள் அதை கழட்டாமலே இன்று வரை சுமந்து கொண்டிருந் திருக்கிறாள்.

    இப்போது தான் எனக்கு நிறைய விஷயங்கள் புரிகிறது. அவள் என்னோடு காதலாகத்தான் பழகி இருக்கிறாள் நான் தான் ப்ரெண்ட் என்று நினைத்து இருந்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த விஷயம் அவளின் அம்மாவுக்கு தெரிந்திருக்க வேண்டும். அது தான் கூட்டத்தில் தன் மகளின் மானம் போய் விடக் கூடாது என்று தாலியைக் கழற்ற முயற்சி செய்திருக்கிறாள். என்னை உற்றுப் பார்த்ததும் அதனால் தான் ஊர் மக்களும், தாலிக்கும் விளையாட்டுக்கும் உள்ள தொடர்பை யோசிக்கவில்லை. எனக்குத் தலையே சுற்றியது. காதலை சொல்லி இருக்கலாமே. ஐயோ, கூட இருந்த போதும் சாகடித்திருக்கிறேன். காதலை சொல்ல நினைக்கும் போதும் சாகடித்திருக்கிறேன். எனக்கு பைத்தியம் பிடித்தால் கூட பரவாயில்லை என்று தோன்றியது. எத்தனை நாள் மற்ற பெண்களைப் பற்றி அவளிடம் பேசி இருப்பேன். எல்லாத்துக்கும் ஒரு புன்னகைதானே தருவாள். விளையாட்டாய் கட்டிய தாலியை இப்படி உயிருக்குள் வைத்து கொண்டாடுவாள் என்று தெரியாமல் போனதே. காதல் இத்தனை வலிமையானதா? யாரிடம் சொல்வேன். எவ்ளோ பெரிய தப்பு செய்திருக்கிறேன்நான். அழுதேன் கத்திக் கத்தி அழுதேன். மூச்சடைத்து அழுதேன். என்னை நானே நொந்து கொண்டேன். நியந்தா போல ஒருத்தியை வாழ்நாளெல்லாம் தொலைத்து விட்டேன். நானே கொன்று விட்டேன் காலம் முழுக்க சுமக்கும் ஒரு சிலுவையை காதலாக்கி தந்து விட்டு போய் விட்டாள். அவளின் அம்மாவும் என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட யாரிடமும் சொல்லவில்லை. அதன் பிறகான நாட்களில் உயிர் வலித்து ஊரை விட்டே வெளியே வந்து விட்டேன். இன்னும் நியந்தாவை மறக்க முடியாமல், குற்ற உணர்ச்சியில் நான் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தான் வார்ம் ஹோல் வழியாக எனது பதினெட்டாவது வயது காலத்துக்குள் வந்து இதோ இப்போது சாகப் போகும் நியந்தாவை மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    “எதுக்கு வர சொல்லிருப்பா அதும் இந்த நேரத்துக்கு” என்று என் 18 வயது நான் யோசித்துக் கொண்டே கிணற்று மேட்டை நெருங்க வெற்றிடம் நோக்கி தலை விரித்தபடி கிணற்றுக்குள் கால் தொங்கும் படி அமர்ந்திருந்தாள் நியந்தா.

    இந்த முறை நான் சுதாரித்துக் கொண்டேன். அன்று என் 18 வயது. நான் பின்னால் நின்று “ப்பென்னு” கத்தியதால் தானே நியந்தா, இதயம் நின்று செத்துப் போனாள். இன்று நான் கத்தவில்லை என்றால் அவள் சாக மாட்டாள் தானே!

    சரி. இப்போது என்ன செய்யலாம். என் 18 வயது என்னை ப்பெ என்று கத்தும் நொடியில் கவனம் கலைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். 18 வயது நான் அவள் பின்னால் நின்று கத்த தயாராகும் போது, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் காலம் தாண்டி வந்திருக்கும் நான் சிறு கல் ஒன்றை எடுத்து கிணற்றைத் தாண்டி வீசினேன். அந்த கல்லின் சல சலப்பு ஏற்படுத்திய சத்தத்தில் கத்த முயற்சித்த 18 வயது நானும் அதே சமயம் மெல்ல திரும்பிப் பார்த்த நியந்தாவும் கவனம் கலைந்தார்கள். நான் கத்தவில்லை, அவள் சாகவில்லை என்று நினைத்த நான்பெரு மூச்சு விட்டபடி இருந்த பனி விலக்கி இன்னும் கொஞ்சம் முன்னோக்கி சென்று அவர்களை உற்று நோக்கினேன். கால குளிர் உணரும் நொடியில், கடவுள் கண்டதைப் போல காலம் ஒரு மரணத்தை மறக்கப் போகிறது என்று எண்ணிய பெருமிதத்தில் ஏனோ புன்னைகைக்க தோன்றியது.

    ஆனால், இம்முறையும் நியந்தா 18 வயது என் மீது சரித்து கொண்டிருந்தாள்.

    ஆஹ்… ஆஹ்… கத்திக் கொண்டே, தலையில் கை வைத்துக் கொண்டு கீழே விழுந்தேன். பனி மூடத் தொடங்கியது மீண்டும் ஒரு பாம்பின் வயிற்றுக்குள் நெளிந்தபடியே முன்னோக்கி நீந்த நீந்த… இப்போது வேறு ஒரு பனி மூட்டத்தின் பிடியில் வெளியே விழுந்தேன். அதே வார்ம்ஹோல் வழியாக வேறு எங்கோ வந்திருக்கிறேன்

    அங்கு … அங்கு என் கல்லறைக்கு. 65 வயது நியந்தா பூங்கொத்து வைத்துக் கொண்டிருக்கிறாள்.

    அதும் ஒரு பனி விழும் இரவு.

    Share
  • சூன்யத்தின் மறுபக்கம்…

    -கவிஜி 

     இருமுறை
    தூக்குப் போட்டும்
    தப்பித்துக் கொண்டவர்…
    ஒருநாள்
    திடும்மெனக் காணாமல்
    போனவர்…

    ஏனோ அவரை
    நாங்கள் ஒருபோதும்
    தேடவேயில்லை!

    இன்றும் மிகப் பெரிய
    முகப்பறையில்
    தனியாக, புகைப்படமாய்த்
    தொங்கிக் கொண்டிருக்கும்
    தாத்தா-
    எனக்குச் சொல்ல
    ஒன்றுமில்லை என்பது போலப்
    பார்க்கிறார்!

    நாங்களும் கேட்காத
    காதுடன்தான்
    அறையைக் கடக்கிறோம்!

    அறை முழுக்க
    நிரம்பிக் கிடப்பதாகத்
    தோன்றுகிறது
    சூன்யத்தின் வெளிச்சம்
    அல்லது தாத்தாவின் நீட்சி!

     

    Share
  • விக்கிரமாதித்தனின் கிருஷ்ணவேணி …

    — கவிஜி.

    விக்கிரமாதித்தனின் கிருஷ்ணவேணி

    இந்தக் கதைக்கு நான் முக்கியம் என்று இப்போதைக்கு எனக்குத் தோன்றவில்லை. ஆனால், கிருஷ்ணாவை பின் தொடரத்தான் வேண்டும். அவன் இன்று பாபநாசம் செல்கிறான், எதற்கு என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவனுக்கும் தெரியாமல் பின் தொடரத்தான் வேண்டும். தெரிந்தால், கத்துவான். கத்தினால் கதை இல்லை*.

    கிருஷ்ணா, ஓரளவு படித்து சமுதாயத்துக்கு தேவையான ஒரு வேலையில் இருக்கும் சமுதாயச் சிந்தனை உள்ள ஒரு குடிமகன். இங்கு தான் எனக்கு கொஞ்சம் சந்தேகம். குடிமகன்…

    இந்த வார்த்தையில் கடைசி எழுத்தில் “ன்” இருக்கிறதே. அது “ள்” ஆக இருக்குமோ என்று! எனக்கு அவ்வப்போது சந்தேகம் வருவதுண்டு. அவனும் அப்படித்தான் நடந்து கொள்வான். நன்றாகப் பேசிக் கொண்டிருப்பான். சட்டென கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு நடப்பான். கண்ணாடி பார்க்கும் போது அவன் தன்னை மறப்பதை நான் ஒளிந்திருந்து பார்ப்பதுண்டு. வெகு நேரம், தன்னை மறந்து கண்ணாடியையே பார்த்துக் கொண்டிருப்பான். பொட்டு வைத்துக் கொள்வான். திடீர் என்று அழுவான். அவனுக்கு சுட்டு போட்டாலும் சமைக்க வராது. இந்த ஆறு மாத காலமாத்தான் அவன் சமைக்கவும் செய்கிறான். அவன் சமையல் செய்யும் போது கிட்டதட்ட ஒரு பெண்ணாகவே அவன் மாறிப் போவான். எதையாவது படித்துக் கொண்டே இருக்கும் பழக்கமும் இந்த ஆறு மாதத்தில் தான் அவனுக்கு வந்திருக்கிறது. நண்பர்கள் உறவினர்கள் எல்லாரும் அவனை ஒரு மாதிரி பேசத் தொடங்கி விட்டார்கள். இப்போதெல்லாம் அடிக்கடி மனப் பிறழ்வானவன் மன நிலையில்தான் அவனின் தோற்றம் இருக்கிறது.

    இரவுகளில் தனியாகக் காட்டுக்குள் நடமாடுவது, அவனைப் பற்றிய பிம்பத்தை உள் வாங்கவே முடியாத தருணத்துக்கு நம்மைக் கொண்டு செல்கிறது. பேய் பிடித்திருக்கும் என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. அவனின் அறையில் அவ்வவ்போது பெண்களின் உள்ளாடையை கொடியில் காண முடிகிறது.

    முதலில் கொஞ்சம் குடித்துக் கொண்டிருந்தான். இந்த ஆறு மாத காலமாக குடிப்பதை நிறுத்தி விட்டான். அவன் கைகையெழுத்துகூட மாறி இருக்கிறது. அவன் உடலில் இருந்த ஆண்மைக்கான கம்பீரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை காண முடிகிறது. வெறித்த விழியில் அறைக்குள் சில நேரங்களில் நடந்து கொண்டே இருப்பான். ஏதோ சிறைக்குள் தன்னை இருத்திக் கொண்டதைப் போல அவனின் யோசனை இருப்பதாக, ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்துக் கிடக்கும் சூழலில், கடந்து போகும் புரிதல்களில், “ஒன்றும் இல்லை”- என்பது போல முகத்தை சட்டெனத் திருப்பிக் கொள்வான்.

    பார்க்கும் காட்சிகளில், பறவையோ வானமோ, அது அதுவாகத் தெரிய வேண்டிய அவசியம் எல்லை என்பது போல, அவனின் எதிர் வினைகள் இருக்கிறது. அவன் சிரிப்பது கூட இப்போதெல்லாம் கவர்ச்சியாகத் தெரிகிறது.

    அவன் பயணிக்கத் தொடங்கி விட்டான். பயணம் அவனுக்குப் பிடித்தமானதாக இருப்பதாகத்தான் தெரிகிறது. பயணங்கள் போலே பறக்கும் பறவை கூட இல்லையோ என்று தோன்றும், சித்தெறும்பு கவனம் ஒரு மீறுதலை, ஆறுதலை அவனுக்கு தந்தேதான் இருந்திருக்க வேண்டும். எந்தப் பறவை அழுகிறது என்று கேட்ட அவன்தான், இப்போதெல்லாம் பறவை அழுவதும் சிரிப்பதும் உணர முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறான். மனிதன் சமயங்களில் இறந்து கொண்டே இருக்கிறான், அதே சமயங்களில் பிறந்து கொண்டே இருக்கிறான்.

    சொல்லாத வாக்கியமாய், அடிக் கோடிட்ட வாக்கியமாய், ஆழ்மனதில் ஒரு சிலுவை. சிறகை ஒடித்துக் கொண்டே இருக்கும் இவ்வாழ்வில், எது தான் நிதர்சனம்? உயிர் கொண்டதெல்லாம் வாழ்கிறதா? வாழ்வதெல்லாம் உயிர் கொண்டிருக்கிறதா? கொள்ளுதல் யாருக்கும் உரிமைல்ல! கொல்லுதலுமா?

    நான் விக்கிரமாதித்தன்.

    நீலவேணி. மாநிற தேவதை என்று சொல்லும், இலக்கியமும் இலக்கணம் மீறிய விழிகள். இக்கணம் கூட நினைவில் அது உளிகள்என் வயதுக்கே, காதல் கொண்டு சேர்த்த உடல்காரி. தீக்குள் விரல் வைத்தால் நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலா, என்று பாரதி சொன்ன வரிகளில் அருவிக்குள் மீனாய் வாழ்பவள் போல, அவளைக் கண்ட நொடியே தீப் பிடித்து எரிந்தது என் முதுமைக் காடுகள். வெட்கம் தாண்டிய என் தனிமைகள் அவளின் கருவிழிக்குள் ஒரு மீனாய் சுழன்றது. அவளின் அரும்பு மீசை கொண்ட மேல் உதடில், முறுக்கேறும் என் சோம்பல் .என் வறண்ட பாலைவனத்தில் கானலில் முளைத்த மரமாய் அவள் ஆடை.

    ஐந்து பெண் பிள்ளைகளாய் வந்திருந்தவர்களில் நான் நீலவேணியை மட்டுமே எனக்குள் குவித்துக் கொண்டிருந்தேன்.

    என் மனைவி நடத்தும் விடுதியில் தான் அந்த 5 பேரும் தங்கி இருந்தார்கள். விடுதி என்றால் விடுதி அல்ல, வீட்டின் ஒரு பகுதியை பாபநாசம் அருவியை சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவது, சமைத்துத் தருவது.

    அதுவும் பெண் பிள்ளைகள் தைரியமாக வந்து தங்கலாம். இது வரை வந்த எந்த பின் பிள்ளைகள் மீதும் என் கண் இப்படி ஒரு பார்வையை உதிர்த்ததில்லை. எனக்கு இந்த நீலவேணியைக் கண்டதுமே. உள்ளுக்குள் ஒரு வித உயிர்க் கசிதல் ஏற்பட்டதை என்னால் தடுக்கவே முடியவில்லை. நான் அவளை ரசித்தேன். அவள் என்னை தாத்தா என்று அழைத்தாள். தாத்தா தான். ஆனால் என் பேத்திக்கு 5 வயது மட்டுமே உள்ள தாத்தா. எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான். நான்தான் முதல் நாள் அருவி சுற்றிக் காட்ட அழைத்துப் போனேன். ஐவரில் நீலவேணி என்னிடம் அதிகமாகப் பேசினாள். என் கைகளைத் தொட்டுத் தொட்டு பேசினாள். அவள் கொண்டு வந்திருந்த காகிதம் சுற்றிய மிட்டாய்களை எனக்குக் கடித்துக் கொடுத்தாள். என் வாழ்நாளில் இப்படி ஒரு உணர்வை அன்று அவள் அருகில் இருந்த போது தான் உணர்ந்தேன். என்ன விதமான உணர்வு இது என்ன விதமான இன்பம் இது. என்ன கருப்பராயா விளையாடறியா!? நான் ஏன் இப்படி சமநிலை தவறுகிறேன் பெண் பித்தா?

    நான் அந்த இரண்டு நாளில் நிறைய மாறி இருந்தேன். என் முகமே ஒரு சாந்த நிலைக்கு வந்திருந்தது. என் மனைவி கூட முகத்தை திருப்பிக் கொண்டு ஏதோ முனங்கினாள். பாவம், கிழவிக்கு என்ன தெரியும். அவள் அப்படித்தான், நல்லவள்.

    நான் இப்போதெல்லாம். பிணம் எடுக்க செல்வதில்லை. என் இளமை பருவத்தில் பாபநாசத்தில் சுற்றுலாவுக்கு வருபவர்கள் தவறி உள்ளே விழுந்து செத்து போனால் நான் தான் பிணம் எடுக்கச் செல்வேன். ஒரு முறை, இரு முறை என்று பின் ஒரு நாளில் அதுவே என் தொழிலாக மாறி விட்டது.பிணம் எடுக்க நீருக்குள் மூழ்கும் ஒவ்வொரு முறையும் நான் இறந்தே விடுவேன், மூச்சைப் பிடித்துக் கொண்டு தேடுகையில், ஏதாவது பாறை சந்துக்குள் சிக்கி, அலங்கோலமாய் ஆடை இன்றிக் கிடக்கும் போது இந்த மனித சமூகத்தின் மீது ஒரு வித பரிதாபம் ஏற்படும். நிறைய உடல்கள் நிர்வாணமாகக் கிடக்கும். நாள் பட்ட பிணங்கள்மீன் கொத்தி சிதிலமடைந்து, உறுப்புகள் சிதைந்து கிடக்கும். மேலே, கரையில் உறவுகளின் கூச்சல், நீர் தாண்டி சுடும். என் வேட்டியை அவிழ்த்து பிணத்தை சுற்றிக் கொண்டு மேலே தூக்கி வருவேன். சதை பிய்ந்து தொங்கும் காட்சிகள் என்னை பல இரவுகளில் அலற வைத்திருக்கின்றன. என் மனைவி, நான் ஒவ்வொரு முறையும் பிணம் தேடிப் போகையில் நடுங்கிக் கொண்டிருப்பாள். சில பிணங்கள் போக்கு காட்டும், என்னை அலைக்கழிக்கும் விளையாட்டுக் காட்டும் கோபம் காட்டும்.

    என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு பிணத்தை தூக்கி வர விடாமல் மற்ற சாத்தான்கள் அழிச்சாட்டியம் செய்யும். மன திடம் இல்லையென்றால் சாக வேண்டியது தான். ஆனால், நான் எதற்கும் அசைய மாட்டேன். அப்படி ஒரு சூழலில், ஒரு நாள் ஒருவன் உள்ளே விழுந்து விட்டான். நான் தேடினேன், கிடைக்கவில்லை. அடுத்து ஒரு முறை, அடுத்து ஒருமுறை இப்படி அதற்குப் பின் எனக்குப் பிணம் கிடைக்கவேயில்லை. என் தொழில் சரியத் தொடங்கியது. மற்றவர்களுக்கு பிணம் கிடைத்து விடுகிறது. எனக்குக் கிடைப்பதே இல்லை. கருப்பராயன் போதும் என்று நினைத்து விட்டான் போல. என் மனைவி பெரு நிம்மதி அடைந்தாள் ஆனால் எனக்குத் தூக்கம் போனது.

    நான் தூக்கிய பிணங்கள் இரவினில் என்னருகே வந்து படுக்கத் தொடங்கின. பிணங்களின் சில்லிட்ட தொடுதல். சுடு மணலுக்குள் பெரு விரல் பட்ட தகிப்பாய் எரியும்காலம் கடக்க கடக்க பழகிப் போன பிணங்கள். எனைச் சுற்றி படுத்தே கிடக்கத் தொடங்கின. காலம் ஓட ஓட, பிணங்கள் என்னை மறக்கத் தொடங்கின. ஆனால், ஒரு முறை மறுபடியும் பிணம் எடுக்க முயற்சி செய்த போது மற்ற பிணங்கள் சேர்ந்து கொண்டு எனக்கு வழி விடாமல் செய்தன எனக்கு புரிந்தது. பிணங்களின் புன்னகையில் மச்சமாகி கிடக்கிறது மிச்சங்கள். அவை காலத்துக்கும் தீரவே தீராத அச்சங்கள். அச்சமில்லை உச்சம் என்பது மரணம் என்பதால் இனி போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.

    பெரும் மன உளைச்சல்என்னை பாடாய்ப் படுத்தியது. அதை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய், நான் வெளியேறி இப்போது மனதையும் தேற்றிக் கொண்டு சுற்றுலா வருபவர்களுக்கு வழிகாட்டியாக வேலை செய்து வருகிறேன். பாபநாசம் அருவி என்னைப் பார்த்துக் கொண்டே, பேசிக் கொண்டே எதையோ சொல்லிக் கொண்டே இருப்பதாக உள்ளுக்குள் ஒரு திரி எரிந்து கொண்டே இருப்பதை மட்டும் நான் அணைக்க முயற்சிப்பதே இல்லை.

    அருவிகளில் விழுவது தண்ணீர் மட்டுமா?

    ஆம்புலன்ஸ்… ஆம்புலன்ஸ் வேகமாக, படு வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. போய்த்தான் ஆக வேண்டும். நீலவேணி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள் விட்டால் செத்தே போவாள். அவள் சாகக் கூடாது. இந்த வாழ்விற்கு ஒரு அர்த்தம் கொடுத்த பெண் அவள். இந்த சின்ன வயதில் அவள் சாக கூடாது “கருப்பராயா என் உயிர் எடுத்துக் கொள் அவளைக் காப்பாற்று,” வண்டி வேகமாய் போய்க் கொண்டிருந்தது

    இரவு … இரவு ஒரு தீரா வானத்தைச் சுமந்து கொண்டே போர்வையாகிறது. நிலவின் வெளுத்த முகத்தை உரிந்து கொண்டே ஒரு மாயம் செய்து கொண்டு இருப்பதாக உணரப் பட்ட மனதில் பெரும் போராட்டம். ஏதோ உந்திக் கொண்டே இருந்தது. கதவை யாரோ தட்டுவது போல ஒரு காட்சிப் பிழை வியர்வையாகி கொட்டிக் கொண்டிருந்தது. அருகினில் என் மனைவி ஆழமாய் மூச்சு விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கம் என்பதே சிறு மரணம் தானே. நான் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். அருவிக்குள் நின்று யாரோ என்னை அழைப்பது போல ஒரு சத்தம். எனக்குள் ஏதேதோ தோற்றங்கள். நானே வேறு ஒரு ஆளாக மாறியது போல ஒரு பிரம்மை. தலைக்குள் யாரோ பம்பரம் சுழற்றுவது போல ஒரு சாட்டை பாம்பாய் வீம்பாய் என்னை சுழலச் செய்து கொண்டே இருந்தது. யாரோ என் கால்களைப் பற்றி இழுப்பது போல. என் வீடு எங்கேயோ ஒரு புதை மணல் தேசத்தில் புதைந்து கொண்டு இருப்பது போல. கல்லறை ரத்தம் என் வீடெங்கும் கருப்பு நிழலை வாட்டி வதக்கிக் காய வைத்துக் கொண்டு, என்னை வெளியே போ என்றது போல உணரப்பட்டேன்.

    “விக்கிரமாதித்தா… வா… வா… விக்கிரமாதித்தா…”

    என் வீட்டுக்குள் பலத்த காற்று சுழலுவதை உணர்ந்தேன். எதுவும் தெரியாமல் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். காற்றில் வித விதமான முகங்கள் பழக்கப் பட்ட முகங்கள். என்னை, “வெளியே போ, வெளியே போ” என்று சொல்லாமல் சொல்லி, தள்ளாமல் தள்ளிக் கொண்டிருந்தனநான் தட்டுத் தடுமாறி வெளியே வந்தேன். ஊரெல்லாம் கண்கள் மூடிக் கிடக்க நான் மட்டும் திறந்த கண்களில் பூமியை சிமிட்டிக் கொண்டு நகர்ந்தேன். என்னை முன்னேற விடாமல் நான் இதுவரைத் தூக்கிய பிணங்கள் முன்னும் பின்னும் என்னைத் தடுத்துக் கொண்டே இருந்தன. என் கால் பிடித்து கத்திக் கொண்டே தரையோடு தரையாக உருண்டு கிடந்த ஒரு பிணம் தன் தலையை, மடார் மடார் என கீழ கிடந்த பாறையில் முட்டிக் கொண்டே எனைப் பார்த்து “போகாதே போகாதே” என்று கதறியது.

    கருப்பராயன் சிலை காற்றில் அசைந்துகொண்டு இருப்பது போல எனக்கு கண்ணாமூச்சி காட்டியது இரவு. நான் கருப்பனை ஆழமாகப் பார்த்தேன். கருப்பனின் மீசையில் அத்தனை உக்கிரம் காற்றுக்கு, அது கோடரி போல தெரிந்தது. கண்ணுக்கெட்டும் தூரம் வரைஅருவியும் காற்றும் பின்னிசையில் சல சலவென ஒரு தேக நடுக்கம். குளிரை விரைத்துக் கொண்டே வீரிட்டுக் கொண்டிருந்தது.

    “சீக்கிரம் போ” என்று கருப்பன் உத்தரவு தந்து போல உணர்ந்தேன்.

    அடித் தொண்டையில் இருந்து “விக்கிரமாதித்தா. இந்த முறையாவது என்னைக் காப்பாற்று வா நான் தான்.” காதலில் இருந்த வேகம், தாகம், யாவும் எனக்கு புரிந்து விட்டது. “ஐயோ, கருப்பா, என்ன இது? “

    நான் ஓடிய வேகத்தில் அருவிக்குள் பாய்ந்தேன். இரவும் நிலவும்சாட்சியாகி, காற்றும் ஆகாயமும் பறந்து விரிந்து கிடக்க நான் நீந்தத் தொடங்கினேன். நீச்சல் கடக்க முடியாத நீராய், பாயாய் வழுக்கிக் கொண்டே மீனாகிப் போனேன். நான் நீந்தினேன் என்று சொல்வதை விட நீர் என்னில் நீந்தியது, நீர் முழுக்க சூடு.

    நான் நீந்திக் கொண்டே ஆழம் சென்று விட்டேன். அங்கே அங்கே நீரின் கிழிசல்களில், நீரின் நெளிவுகளில், வெண் நுரை தரித்த நேர் கோலம் உருவமாகி, தக தகவென மின்னிக் கொண்டு, ஒரு மீனின் அசைவோடு, புது நீரின் இசைவோடுவிரிந்த தலையில் சிமிட்டாத கண்களுடன்.

    நீலவேணி !!! நீலவேணி… நீலவேணி எனைப் பார்த்தாள். எனக்கு மூச்சு முட்டியது.

    “நீலவேணி”… என் வார்த்தை நீருக்குள் குமிழியானது. மூச்சுக்குள் நீர் போனது. நெஞ்சடைத்து செத்தால் என்ன என்று தோன்றியது. மூளைக்குள் பேய் பிடித்த நொடி ஒன்றை, கசக்கிக் குடித்த கசாயம் போல, நான் பித்தேறி தலை சிலுப்பினேன்.

    என் எண்ணங்களைப் புரிந்து கொண்ட நீலவேணி என் அருகே வந்து என் கண்களை துடைத்து விட்டாள். நீலம் பூத்த கண்களில், நீலம் பூத்த உடலில், ஒரு கடற்கன்னியாகவே தெரிந்தாள். என்னை அழைத்துக் கொண்டு முன்னே நீந்திச் சென்றாள். பின்னே நானும் மௌனமாக நீருக்கு வலிக்காமல், அசைவின்றி சென்றேன் கனத்த மௌனம்நீலவேணி நீந்துவதை நிறுத்தினாள் கை காட்டினாள்.

    நிசப்த காலத்துக்குள் விண் கற்கள் மோதுவதை நீருக்குள் கேட்டேன். மௌனம் அறைந்து கிழிய செய்யும் சத்தத்தில் நான் மூச்சுத் திணறினேன். ஒரு வழியாக சமாளித்துக் கொண்டேன். அவள் காட்டிய திசையில் இருந்த ஒரு பாறை இடுக்கில் ஒரு உடல் மாட்டிக் கொண்டிருந்தது. எனக்கு வேகமாய் எல்லாம் புரிந்து விட்டது. சட்டென நீலவேணியைக் கடந்து அந்த உடலை மெல்ல வெளியே இழுத்தேன். உடலில் சூடு இருந்தது அசைவும் இருந்தது. “இப்போது தான் விழுந்திருக்க வேண்டும்,” என்று யோசித்துக் கொண்டே வேகமாய் மேலே இழுத்து வந்தேன். நீலவேணியும் என் பின்னால் நீந்திக் கொண்டே வந்தாள். இரவு அருவியாகிக் கொட்டிக் கொண்டிருந்தது.குளிர் கரை எங்கும் விரைத்துக் கிடந்தது. நிலவின் கண்களில் மேகமாய் கடந்து கொண்டிருந்தது அருவியின் நாளைய தொடர்ச்சி.

    கரை ஏறிய மணித் துளிகளில் அந்த உடல் விழித்துக் கொண்டது. நீருக்குள்ளிருந்து நீலவேணி தலையை மட்டும் கரைக்கு வெளியே நீட்டிக் கொண்டு விக்கிரமாதித்தனையும் அந்த உடலையும் பார்த்துக் கொண்டே இருந்தாள். முகத்தில் பூத்திருந்த நீர், முத்துக்களோ என்று தோன்றும் முகத்தில் மூக்குத்தி மின்னிக் கொண்டிருந்தது. விக்கிரமாதித்தன் நீலவேணியையும் அவனையும் பார்த்துக் கொண்டே இருந்தார்.

    அந்த உடல்… அவன்… அவன் தான் கிருஷ்ணா.

    கிருஷ்ணா, இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தான். நீலவேணியை ஆசை தீரப் பார்த்தான். கை நீட்டி முகம் தொட்டான் தொட முடியாத கைகள் நீரை அள்ளின நீருக்குள் நிலவை ஏந்துவது போல நீலவேணியின் முகத்தை ஏந்தினான். அந்த முகம் நீராய் ஒழுகியது. அது காலத்தின், மரணத்தின் கண்ணீர். மூவரின் கண்களும் மாறி மாறிப் பார்த்தன. புரியாத தருணங்களை புரிய முயற்சித்தன. விக்கிரமாதித்தன் கண் கலங்கினார். மாறி மாறி பார்த்தார் அர்த்தத்தில் மௌனம் கூட கேள்வியானது.

    நீலவேணி கண்கள் மூடினாள்…நிலவு இருண்டது.

    “ஹாய், விக்கிரமாதித்தா! நாங்க அருவி சுத்திப் பாக்க போறோம் வரியா” என்று கத்திய நீலவேணியில் கண்கள் சிரித்தன.

    தாத்தா என்று அழைப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று நேற்று இரவு தூங்கும் போது காதுக்குள் முணங்கி சென்றிருந்தார் விக்கிரமாதித்தன். மீண்டும் சிரித்தாள் நீலவேணி. அர்த்தமுள்ள சிரிப்பு, அத்திப் பூ சிரிப்பு, கத்தும் குயிலோசையின் கடைசி உயிர்ப்பு. அத்தை மகள் போலே ஞாபகங்கள் தாலாட்டும். அருவிச் சாரலின் தூறலோடு. நீலவேணி நகர …

    “நீ போயிட்டு வாம்மா இந்தக் கிழவி எனக்கு ஒரு வேலை குடுத்திருக்கா ” என்று விக்கிரமாதித்தன் கூறினார்.

    நீலவேணிஅவர் கண்கள் அவள் கண்களையே பார்த்தது. அந்த கண்களில் தான் எத்தனை ஒளி. அது கடவுளின் விழி போல உள்ளுக்குள் ஒரு மின்னல் வெட்டியது. சொல்லொணா இன்பம் அதுகோடி யுகம் கடந்து மீண்டும் ஒரு யுகம் செய்யும் வித்தை. அந்த நடையில் இருந்ததை அவர் உள்ளுக்குள் நிறைத்தார். அருவிக்குள் குருவி சத்தம். கற்பனை சிறகு நீரானது பின் வேறானது. அது வேறானது, உள்ளங்கையில் அள்ளிக் கொஞ்சம் வானம் தெளித்தாள். மிஞ்சிப் போன கொஞ்சல் கொண்ட நீர்த்துளிகளில் பூமி களித்தாள்.

    தோழிகள் ஆங்காங்கே நின்று நீருக்குள் இடுப்பு வரை நின்று விளையாடிக் கொண்டிருக்க, தவம் ஒன்று கண்ட வரம் போல நீலவேணி சட்டென நீருக்குள் இழுக்கப் பட்டாள். எதிர் பாராத இந்த சறுக்கலை அவள் கால்கள் உணரும் முன்னே வழுக்கி பின்னால் நீர் விலக்கிய தலை, நீருக்குள் மூழ்கியது. நீர்க்குமிழிகள் தீ முட்டைகளை வெடிக்க துடிக்க துடிக்க மூச்சு திணறினாள். மூச்சே திணறியது. பேச்சின்றி, வாய் பிளந்து, நீர் நிறைய குடித்தது பெருங்குடிகாரன் இந்த பேரருவி.

    தோழிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கத்தத் தொடங்க. விஷயம் மேலே நின்றவர்களுக்கு எட்டியது. ஆளாளுக்கு ஓடி வந்து என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டு உள்ளே குதித்துத் தேடத் தொடங்கினார்கள். நீண்ட தேடலுக்குப் பின், நீல நதிக் கரை போலஒரு பாறை இடுக்கில் மூச்சற்று கிடந்தாள் நீலவேணி. பேச்சற்று துடித்தார்கள் தோழிகள். வெளியே இழுத்து வந்து முதலுதவி செய்ததும், காணாமல் போன மூச்சு கபக்கென்று ஏங்கி வெளியே வந்தது. ஆம்புலன்ஸ் வந்தது வண்டியில் ஏற்றப் பட்டாள். வண்டி பறந்தது போகும் வழியிலேயே இறந்தும் போனாள்.

    கடந்த காட்சிகளை அவர்கள் பார்த்தார்கள். திகைத்து வெறித்தார் விக்கிரமாதித்தன். அன்று ஆம்புலன்ஸ்சில் ஏற்றும் போது கண்ட காட்சியின் முன் தொடர்ச்சியை இன்று காணும் போது அவரின் உடல் மேலும் சில்லிட்டது. மனதுக்குள் ஏதோ உந்தித் தள்ள மீண்டும் காட்சியை பின்னோக்கி நகர்த்தி நீலவேணி நீருக்குள் அமிழும் இடத்தில் இன்னும் ஆழமாக பார்த்தார் விக்கிரமதித்த்தன். யாரோ நீலவேணியின் கால்களை நீருக்குள் இருந்து இழுத்ததை நன்றாக காண முடிந்தது. புரிந்து போனதுபுரிந்தே போனது

    “அட பாவிங்களா. இது உங்க வேலையா? “

    “ஆம்”

    பிணம் எடுத்து தந்தால் உறவினர்களிடமிருந்து கிடைக்கும் 2000 ரூபாய் பணத்துக்காக, இவர்களாகவே சுற்றுலாவுக்கு வந்து சற்று ஆழம் உள்ள இடத்தில் நீருக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் யாரையாவது நீருக்குள் பதுங்கி இருந்து, காலைப் பிடித்து உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு போய் பாறை இடுக்கில் வைத்து விட்டு, பின் ஒரு 2 மணி நேரம் கழித்து, பிணம் தேடுபவர்கள் போல தேடி கண்டு பிடித்துக் கொடுத்து ரூபாய் 2000 பெற்றுக் கொள்ளும் பிணம் தின்னும் கழுகுகளின் வேலை.!!!!!!”

    பற்கள் கடித்தார் விக்கிரமாதித்தன் வாய் விட்டுக் கதறினார்.

    “அன்னைக்கு நீ கூப்டியே. நான் வந்துருக்கலாம் நீலவேணி.” என்று உள்ளுக்குள் முணங்கினார் விக்கிரமாதித்தன்.

    அருகினில் கிருஷ்ணாவும் நீலவேணியும் கண் கலங்கி அவரைப் பார்த்தனர்.

    சற்று நேரம் தலை குனித்து அமர்ந்திருத்த விக்கிரமாதித்தன். ஏதோ நினைவு வந்தவராக. “ஆமா தம்பி நீ யாரு?”என்று கேட்டபடியே கிருஷ்ணாவின் பக்கம் திரும்பினார்.

    நீலவேணியை உற்றுப் பார்த்தபடியே “நான் தான் நீலவேணி விக்கிரமாதித்தா” என்று அமைதியாக கூறினான் கிருஷ்ணா.

    சட்டென தலை தூக்கிப் பார்த்த விக்கிரமாதித்தன் இடது பக்கம் திரும்பி நீலவேணியைப் பார்த்தார்.

    நீலவேணி அழுதபடியே நீருக்குள் அமிழ்ந்து போய்க் கொண்டிருந்தாள். நீரின் வட்ட வட்ட குமிழ்கள், வாழ்வின் தூரங்களை குறுக்கிக் கொண்டே, விரிவதாக இரவு புரிந்து கொண்டது. அடுத்து ஏதும் பேசாமல் கிருஷ்ணாவும் எழுந்து, புரிதல்கள் ஒன்றுமில்லை, தனித்து விடப்பட்ட உலகம். விண் கற்களால் வீழத்தான் போகிறது வீழ்வதே இங்கு வாழ்வது தான் என்ற மாய தத்துவமாய். நீண்ட ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினான்.

    ஒன்றும் புரியாத விக்கிரமாதித்தன் வேகமாய் எழுந்து, இன்னும் வேகமாய் ஓடி கருப்பரயாயன் காலடியில் விழுந்தார். காற்றும் அமைதியும் இரவை புரட்டத் தொடங்கின. பேரமைதியின் குறியீடாக நிலவின் வெளிச்சம் பேய்களின் இருண்மைக்குள் பற்றிக் கொண்ட பெருந்தீ எனஒரு வெள்ளைப் போர்வை, சிவப்பின் கீற்றாக விழுந்து கொண்டே இருந்தது

    கருப்பரயாயன் கையில் இருக்கும் அருவாள் கீழே விழுந்தது. மழை ரத்தமாய் கொட்டத் துவங்கும் இனி என்பதாய்ஒரு பெரும் மழை ஆரம்பித்தது. பச்சைப் பயிர் வாழ மண்ணில் களை எடுத்தால் தவறில்லை.

    அதன் பிறகு அவர் பிணம் எடுக்கும் வேலையை தொடர்ந்து செய்தார். ஒவ்வொரு முறையும் நீலவேணி அவருக்கு பிணம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொண்டே இருந்தாள். பிணங்களின் தொந்தரவு அவருக்கு இல்லாமல் போனது. பிணம் தின்னும் கழுகுகளின் தொந்தரவும்.

    நீலவேணி கடவுளாகிப் போனாள். அன்பின் ஏதாவது ஒரு புள்ளியில் கடவுளாகிப் போகிறது. காதலைப் போல எதுவும். வீட்டில் புகைப்படமாய் மாட்டிக் கும்பிடத் தொடங்கினார்.

    ஆம்புலன்ஸ்…

    ஆம்புலன்ஸ் வேகமாக படு வேகமாக போய்க் கொண்டிருந்தது. போய்த்தான் ஆக வேண்டும். நீலவேணி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள் விட்டால் செத்தே போவாள். அவள் சாக கூடாது. இந்த வாழ்விற்கு ஒரு அர்த்தம் கொடுத்த பெண் அவள். இந்த சின்ன வயதில் அவள் சாக கூடாது கருப்பராயா என் உயிர் எடுத்துக் கொள் அவளைக் காப்பாற்றுவண்டி வேகமாய் போய்க் கொண்டிருந்தது.

    வேகத்தின் அடுத்த கட்டமாக ஆம்புலன்ஸ் எதிரே வந்த லாரியில் மோதி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கிருஷ்ணாவின் மூளை செயல் இழந்ததை அடுத்து, சட்டென முடிவு எடுத்தது மருத்துவ உலகம். மூளை சாகாமல் இருந்த நீலவேணியின் மூளையை மூளை சாவு அடைந்த கிருஷ்ணாவுக்கு இரு வீட்டாரின் சம்மதத்தோடு மூளை மாற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

    ஒரு உயிராவது வாழட்டுமே.

    எப்படியோ நீலவேணி. பாபநாசத்தை கவனித்துக் கொண்டே இருக்கிறாள். இந்தக் கதையை எழுத ஆரம்பித்த நான். காலம் மட்டும் அல்ல.

    தொடரும் …

    *விக்கிரமாதித்தன் கிருஷ்ணவேணி பாபநாசம் என்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் முழுக்க முழுக்க கற்பனையாக எழுதப்பட்ட கதை இது.

    Share
  • காமராஜ் அய்யா

    -கவிஜி

    ராசா மகராசா நீரைய்யா – உம்
    ஆட்சி பொற்கால தேரைய்யா
    பாத்துட்டோம் உம்போல யாரைய்யா
    கும்புட்டோம்நீர் படிக்காத மேதைய்யா!

    சோறு குடுத்துப் படிக்க வைச்ச
    சொக்காக்கூட தெச்சுக் குடுத்த                     kamaraj
    மச்சு வீட்டுப் புள்ள கூட,
    சரி சமமா நிக்க வச்ச

    சொந்தப் பேர எழுத வச்ச
    மந்தை கூட்டம் தெளிய வச்ச
    கூரை வீட்டுக் காரனையும்,
    குனியாதன்னு புரிய வச்ச

    தொழில் பல கொண்டு வந்த
    அடுப்பெரியக் கங்கு தந்த
    பஞ்சம் பட்டினி விரட்டி விட்ட
    தஞ்சம் அடைஞ்சா தூக்கி விட்ட

    ஆகட்டும் பாக்கலாம்னு
    ஆனமட்டும் பாத்திட்ட
    ஐயோ பாவமுன்னு
    ஜனங்களத்தான் காத்திட்ட

     அம்மாவும் அய்யாவும்
    ஆனமட்டும் பறிச்சாங்க
    அவுங்கவுங்க வீட்டுக்குத்தான்
    ஆத்தக் கூட வித்தாங்க

    ஆட்சி மாற
    கணம் படைச்சு நின்ன
    காட்சி மாற
    மனம் உடைஞ்சு நின்ன

     நீர் கொடுத்த இலவசங்க
    தலைமுறை காக்கும் கவசங்க
    இப்ப கிடைக்கும் பணவசங்க
    சோம்பேறி ஆக்கும் பவுசுங்க

    ஓட்டுக்கெல்லாம் பணமைய்யா
    ஒட்டுக் கோவணத்துலயும் போனைய்யா
    பாவிப் பள்ளிக்கு ஒரு ரேட்டையா
    புள்ள பொறந்ததுமே அட்மிஷன் பாட்டையா!

     காட்டழிச்சுக் கட்டிப்புட்டோம்
    கட்டடத்துக்குள்ள,
    கல்லறையப் புதைச்சுப்புட்டோம்!

    பத்துல ஒரு மரம்
    தூக்குப் போட உதவுது
    பத்தாது தூக்குப் போட- குயில்
    மரம் வைக்கக் கூவுது

    நல்ல வேளை நீர் இல்லை
    இன்று நல்ல
    சோலை நீர் இல்லை
    என்ன சொல்லி என்னாச்சு?
    ஒன்பது வருஷத்தோடு,
    ஜனநாயகம் நின்னாச்சு!

    இந்த எழுத்து
    நீர் போட்ட பிச்சை
    என்ன எழுதி
    நான் உம்மை மெச்ச!!

     

     

    Share
  • கதை கதையாம் காரணமாம் …

    கவிஜி.

    கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள். மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும். சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள். நற நறத்தே கிடக்கின்றனமணல்களின் படிமங்களாய் வழுக்கிக் கொண்டே செல்லும் இரவுகளின் வீரியத்தில் நிழல்கள். தன்னிறம் மாறுவதை ஹைக்கூவாக உணர்ந்த பின் கிடைக்கும் புதுக் கவிதையாக, ஒரு மரபு மாந்திரீகம் விதைக்கிறது. எப்போதும் இரவென்றால் எப்படி இருக்கும் பாலைவனம்!!

    வனங்களில், கணிக்க முடியாத வானம் கொண்ட பாலைவனம் குளிர்களின் கம்பிளியை போர்த்திக் கொண்டே இருக்கிறது. கடுங்குளிர் தேகம் நடுக்க, நடுவினில் வளைந்து வளைந்து செந்தளிராய் மூட்டிய நெருப்பு ஒரு அருகாமை சூட்டை சுற்றிலும் தெளித்துக் கொண்டிருக்கிறது. உடல் முழுக்க மணல், அல்லது மணல் முழுக்க உடல். கடல் தவிக்கும் கண்களை நெருப்பு மூட்டிய நிஜமாய் நியந்தா சுமந்து கொண்டிருந்தாள். எதிரே… எல்லாம் தெரிந்தும் தெரியாமல் கவிஜி.

    காற்றும் கவிதையும் கதை பேசும் தருணமாக, கண்கள் நான்கும் மணல் கொண்ட புதையலாய் புதைந்து நிமிரும் புதுப் பயணம் சுமந்து கிடக்கிறது. விரல் பிடித்துக் கொண்ட வேகத்தில் நிலவு சற்று நிழல் தேடியது மேகத்துக்குள். இருக்கும் இருட்டில் இன்னும் சிவப்பாய் நியந்தா இனி தாங்காது என்பது போல தாங்கி கொள்ளும் சூட்சுமம் வரைந்தான் கவிஜி. வரைவதில் கிறுக்கல்கள் கொண்ட பித்தனைப் போல வரைந்தாலும் அது அவள்தானே என்பதை போல ஒரு பிக்காசோ அது.

    மெல்லிடை படிய, மார்புக்கவளம் விரிய, மை விழிக்காரி நியந்தா. மௌன மொழியில் கத்திக் கொண்டது நாணம் கடந்த பின்னிரவு துவக்கம். கவிஜி மெல்ல பின்னால் சரிய, மேல் நோக்கி சரிந்து கொண்டே இதழ் வருடும் இதழை மிக மிக அருகினில் கொண்டு வந்தாள் நியந்தா. ஒரு மணல் காற்று வந்து கடந்து போனது. முதுகினில் கொஞ்சும் சாரலாய் மணலை அள்ளி வீ சிப் போன நொடியில் உள் வாங்கிய முதுகு வெளியானது, சுவாசம் கூடிய அவனுக்கு.

    கண்கள் நான்கும் பார்த்தன. அவள் இதழ் விரியக் கிசுகிசுத்தாள்.

    “அது என்னடா பேர் கவிஜி?”

    கவிஜி சட்டென முகம் உயர்த்தி அவள் இதழில் ஒரு முத்தம் பதித்தான்.

    “நான் கேட்டுட்டு இருக்கேன்ல, அதுக்குள்ளே என்ன அவசரம்?”

    மீண்டும் ஒரு முத்தம்.

    அவள் சப்பென்று ஒரு அறை வைத்தாள்.

    இம்முறை கன்னம் கடித்தான்.

    மீண்டும் முத்தம்.

    அடிக்க கை எடுத்த அவள் அவனின் தலை கோதினாள். இம்முறை இன்னும் ரகசியமாக கேட்டாள்.

    “அது ஏன் கவிஜி? பொண்ணு பேர் மாதிரி இருக்குடா”

    “ஏன் நல்ல இல்லையா?”

    “இருக்கு”

    “பிடிக்கலையா?”

    “உன்னையே பிடிச்சிருக்கு, பேர் பிடிக்காதா?”

    “சரி, ஏன்னு சொல்றேன் கண்ண திறந்துகிட்டே. இதோடு இதழ் பதி. அப்போ தான் சொல்லுவேன்.”

    “அப்போ நீ சொல்லவே வேண்டாம். போடா. இவன் பெரிய கவிஞன்”

    “நான் பெரிய கவிஞன்னு யார்டி சொன்னா பிசாசு?”

    “என்ன? பிசாசா?”

    “ஆமா, இப்டி முடிய விரிச்சு போட்டு இருந்தா பிசாசு தான்.”

    அவர்கள் மூன்று முறை உருண்டு சற்று தள்ளி குளிருக்குள் சென்று விட்டார்கள். தீ நாக்கின் எச்சில் குளிரை விரும்பியது போல, தீக்குள் விழுந்த சிறு மணல் ஒன்றின் உள்ளே தீர்த்த கடல் கொண்ட தெற்கு மூளை மறந்த வரியாக.

    “டேய்! கை எங்க போகுது கொன்னுடுவேன்.”

    “ஆமா, உலகமே அழிஞ்சு போய்டுச்சு, என்னையும் கொன்னுட்டு என்னடி பண்ணுவ? அழகி.”

    சற்று விலகிக் கிடந்தவள். உடல் நடுங்கியவளாய் ஓடி வந்து அணைத்துக் கொண்டு முகம் முழுக்க முத்த மழை பொழிந்தாள். ஈர முத்தங்களுக்கிடையில் சிக்கிய மணல் துகள்கள் மோட்சம் போகும் என்பது இரவின் கூப்பாடு/ காற்றை கொண்டு வேவு பார்த்த மனம் குளிர்ந்தது.

    வெப்பம் கொண்ட தேகம். தெப்பம் ஆகும் தாகும். மொத்த முத்தம். எச்சில் கத்தும் கூந்தல் நுழைந்த விரல்களில். இரவுச் சூரியன். பின் கழுத்தில் நுழைந்த முகத்தினில் இரு நிலாக்கள்.

    “இந்த உலகமே இன்னைக்கு இல்ல. நீ நான் மட்டும். அப்புறம் நம்ம காதல். ஏன் நாம மட்டும் பொழைக்கணும் நியந்தா.”

    அவர்கள் பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை. உடல் தேடும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்க மறந்த மூளையின் மடிப்பு, மணல் துளிகளால் பயம் நிரப்பிக் கொண்டேயிருந்தது.

    காதுக்குள் கிசு கிசுத்த வார்த்தைகளில் அவள் வாக்கியமாய் நெளித்தாள்.

    “தெரில கவிஜி, ஆனா, அடுத்து என்ன பண்ணப் போறோம்? இப்டியே எத்தன நாள் இங்க இருக்கறது? எங்க இருக்கோம்ன்னும் தெரியல. சூரிய வெளிச்சமே வர மாடேங்குதே. பயமா இருக்குடா.”

    “பயந்தா எப்டி நியந்தா! இப்போ இந்த உலகத்துக்கு நீயும் நானும் தான் ஆதாம் ஏவாள். ஆதாம் ஏவாள் பயந்திருந்தா இன்னைக்கு நீயும் நானும் இல்லடி”

    “போடா எப்போ பாரு உனக்கு அதே தான்.”

    “என்ன? அது என்ன அவ்ளோ ஈசியா? என் பக்கம் நின்னு பாரு. கஷ்டம் எவ்ளோன்னு தெரியும்.”

    அவள் சிரித்து விட்டாள். இப்போது அவள் முறை.

    “கூந்தல் சுருட்டு. விடியட்டும்”

    “என்ன கவிதையா? நானும் சொல்லி.. லி… லிரூ…வே… ண்டா…”

    “முதல்ல மூச்சு வாங்காம இந்த வார்த்தைய சொல்லுடி, பாப்போம்.”

    சட்டென்று முன்னோக்கி சரிந்து, நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் பதித்து. மீண்டும் முதல் இருந்த நிலைக்கு வந்தவள், “நெற்றி வியர்வை துடைத்த இதழில் முத்தப் புரியாமை” என்றாள்.

    அப்டியா? இப்ப பாரு … என்றவன் இப்படி…

    “விழி செய்த மொழியில் சிமிட்டல்-ஜென்.”

    “ம்ம் ” என்று நடுங்கிக் கொண்டே யோசித்தாள் இப்படி.

    “உணர்தல் வெறுமை. கண்டும் காணாமல் போவது தத்துவம்.”

    “நிறம் தாண்டிய சுழற்சியில் பிம்பம் புதுமை.”

    “புகைப்படம் எடுக்கப்பட்ட நான், கணம் ஒன்றில் சிறையான வெற்றிடம்.”

    அடுத்த கவிதை யார் சொல்ல என்று யோசிக்கும் போதே. இதழும் இதழுமாய் இன்னும் ஆழமாய் எல்லாருக்கும் புரிந்த கவிதையை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

    பின்னிரவு துவக்கம்…

    அவள் மடி சாய்ந்து கிடந்தாள், அவன் குடை சாய்ந்து கிடந்தான்.

    “இன்னும் எத்தன நாள் கவிஜி? நாம் உலகத்துல தான் இருக்கோமா? இல்ல ஒரு வேலை செத்துட்டோமா?”

    “உன்னோடு இருந்தால் செத்து விடுவதும் சுகமடி மூக்குத்தி பெண்ணே.”

    அவள் இன்னும் அவனின் மார்புக்குள் தன்னை நெருக்கிக் கொண்டாள்.

    “என்ன இது வரை நீ அடிச்சதே இல்லல? ஏன் கவிஜி?”

    “ஹே… என்னடி இது கேள்வி? எதுக்கு அடிக்கணும்?”

    “ஆணின் அரவணைப்பு போல அடித்தலும் ஒரு வகை கூடல் தானே, கவிஞரே.”

    “ஆமாமா, உங்க தமிழ் எனக்கு வராதுடி. நான் அடிக்க மாட்டேம்பா?”

    “என் கவிதை உனக்கு புரிஞ்சா போதுண்டா. பொறுக்கி, ப்ளீஸ்… ப்ளீஸ்… அடியேன்”

    “ம்ஹும். நீ கவிதைக்காரிதான். அதுக்காக உன்ன அடிக்கவெல்லாம் முடியாது. வேணுன்னா சொல்லு. முத்தம் குடுக்கிறேன்.”

    “நீ அடிச்சா. நீ அடிக்கடி கேப்பீல்ல அதை பண்ணுவேன் எப்படி வசதி? என்று அவள் கண்ணடித்தது அந்த வெளிச்சத்திலும் ஒரு மின்னலை வெட்டியது.

    “நம்பலாமா?”

    “நம்பித்தான காதலிக்கறேன். என் முட்டாள் கவிஞனே”

    “ம்…ம்… இந்தா” என்று ஒரு அறை.

    “போடா. இதுக்கு நீ ஆக மாட்ட”

    “அதுக்கு”என்று அருகினில் சென்று கேட்டான். ரகசியமாய்.

    “அதுக்கு மட்டும் தாண்டா நீ ஆவ. ஓடிடு” என்றாள்.

    பொய்யான கோபத்திலும் மின்னிய மூக்குத்தி “நெஞ்சம் ஒரு முறை நீ என்றது” என்று முணங்க வைத்தது.

    “அடிப்பாவி, சரி, நீ சொல்றதும் சரிதான். ஒரு ஆதாம் அப்டி தான் இருக்கணும். இந்த பூமியே என்ன நம்பிதாண்டி இருக்கு”

    “நானும்”என்று தோள் சாய்ந்தவளைமீண்டும் ஒரு அறைஅறைந்தான்.

    “ம்ஹும். கொசு கடிச்ச மாதிரி இருக்கு மை மேன்” என்று காது கடித்தாள்.

    “சரி இது? “என்று மீண்டும் ஒரு அறை அறைந்தான்.

    கீழே கிடந்தவளின் கழுத்துக்குள் சென்று கிசு கிச்சு மூட்டினான் கவிஜி.

    நியந்தா எழவில்லை.

    “ஹே என்ன இது விளையாட்டு. எந்திரிடி. இப்ப எந்திரிக்கல அப்புறம் அது தான். சொல்லிட்டேன்”

    அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை…அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை…

    அவள் எழவேயில்லை.

    நியந்தா… நியந்தா… நியந்தா…

    தலைக்குள் வண்டு, வண்டு புகுந்து கொண்ட ரீங்காரம், மூளை உதிரத் தொடங்கியது.

    பெருமூச்சு வாங்கிய எழுத்தாளர் சந்தோஷ் படுக்கையில் இருந்து வேகமாய் பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தார். அவரின் உடல் நடுங்குகிறது. அதே நேரம்…அதே இரவு… அதே நாள்… அதே கனவோடு…, எழுந்து அமர்கிறார். எழுத்தாளர் சரவணா மற்றும் எழுத்தாளர் அகன் அவர்களும்.

    ஒரே கனவு, ஒரே நாள், ஒரே நேரத்தில். மூன்று பேருக்கு.

    மூன்று பேரும் ஒரே நேரத்தில் உச்சரித்த பெயர் கவிஜி நியந்தா.

    அவர்களின் பெருமூச்சு அவரவர்களின் அறையில், இல்லாத சுவர்களை எழுப்பிக் கொண்டிருந்தன.

    இது கனவாஇல்லை. நடக்கப் போவதா இல்லை. நடந்து முடிந்ததா? மூவரின் கேள்விகளும் முதலை தேடும் கண்ணீரை சுரந்து கொண்டே இருந்தன.

    நன்றாகத் தெரியும். அது கவிஜிதான். கூட இருந்த பெண் கவிஜி அடிக்கடி சொல்லும் நியந்தாவாகதான் இருக்க வேண்டும். அந்த முகம் சரியாக நினைவுக்கு வராமல் மூவருமே யோசித்தார்கள். யோசனையின் வழியில், ஒற்றையடி பாதைக்கே வழியில்லாமல் தடுமாறிய பாதங்களில் முள் குத்தியது போல, தலைக்குள் ஊசியின் குளிரைஉணர முடிந்தது.

    அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பின் …
    கவிஜியின் வீட்டை நெருங்கி விட்ட சந்தோஷ். ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாமல் அங்கேயே நின்றார். பார்த்துக் கொண்டே நின்றார்.

    “கவிஜியை பார்க்க வேண்டும். பேச வேண்டும். பேசியே ஆக வேண்டும்”என்று யோசித்துக் கொண்டே முன்னேற முயற்சி செய்த சந்தோஷால் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வீட்டை நோக்கி நகர முடியவில்லை. எதுவோ தடுத்தாற்போல, காற்றில் ஏதோ சுவர் போல ஒரு வித மயக்க நிலைக்குள் விழுவதாக, ஒரு வித கற்பனையை சுமந்து நின்றார். இரவுக்குள் மின்னிய வெளியில் அந்த வீடு மிதந்து கொண்டு இருப்பதாகத் தோன்றியது. தானும் மிதப்பதாக நினைத்த சந்தோஷ் சத்தம் போட்டு கூப்பிட்டார்.

    “கவிஜி… கவி…ஜி… வெளிய வாங்க. கொஞ்சம் பேசணும்” இன்னும் இன்னும் கத்தினார். கத்தி கத்தி கத்தினார். தான் கத்துவது தனக்கே கேட்காததை அப்போது தான் உணர்ந்தார். தன்னை ஒருமுறை கூர்ந்து கவனித்தார். காதுகள் அடைத்து இருப்பதை உணர முடிந்தது.

    “இந்த இடத்தில் என்னால் ஏன் இயங்க முடியவில்லை? என்னால் ஏன் நகர முடியவில்லை? எல்லாம் புதிராக இருக்கிறதே ஏன்? கேள்விகளால் கண்கள் சிமிட்டுவது, கொடும் விஷத் துளியாகி காட்டுக்குள் தொலைவதைப் போல இருக்கிறதே!”—— எத்தனை யோசித்தும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ஆனால் சந்தோஷால் கவிஜியை இப்போது நன்றாகக் காண முடிந்தது. ஆனால் ஆள் ஒரு மாதிரி வெளுத்துப் போய் இருப்பது போல ஒரு எண்ணம் கண்களில் தூசியாய் விதைந்தது

    விலக்க விலக்க காற்றுக்குள் ஒருவித திரை விழுந்து கொண்டே இருந்ததை உணர முடிந்த சந்தோஷ், இன்னும் கண்களை நன்றாகக் கூர்மையாக்கிப் பார்த்தார். கவிஜி வாசல் வருவதும், உள்ளே யாரிடமோ பேசுவது, நின்று நிலவை ரசிப்பதும், ஏதோ எழுதுவதும், உள்ளே சென்று சற்று நேரத்தில் ஒரு கோப்பை மதுவோடு வெளியே வந்து நின்று கொண்டு வானம் பார்த்து குடித்துக் கொண்டே உள்ளே யாரிடமோ பேசுவதையும் நன்றாக பார்க்க முடிந்தது. வானம் முழுக்க நட்சத்திரங்கள், முழு நிலா முன்னிரவு தொடக்கம். பிரபஞ்ச வெளியில் துகள்களால் நெய்யப்பட்ட உருவமாய் கவிஜியின் சாயல் இருந்ததைக் கண்ட சந்தோஷ் முழுக்க முழுக்க குழப்பத்தால் சுழன்றார். இப்போது ஒன்றை கவனிக்க முடிந்தது. இந்த வீட்டை சுற்றி எதுவுமே இல்லாதது போல ஒரு வெறுமை சந்தோஷுக்குத் தெரிந்தது. சந்தோஷ் தலையைப் பிடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். யாரோ தன்னை கடந்து போவதை உணர முடிந்த சந்தோஷ்ஷால் கடந்து போனது என்ன? யார் என்பதைப் பார்க்க முடியவில்லை. அது ஒரு வகை இளம் சூட்டை பனியில் கலந்த மலை உச்சி பயணமாய், சர்ரென கொண்டு போகும் ஒரு பறவையின் தீவிரத் தேடலைப் போல இருந்தது.

    அடுத்த அரை மணி நேரத்துக்குப் பின்…
    கடந்து போன காற்றில் அதிவேகமாய் நண்பனுக்கு என்ன ஆனதோ என்று தேடி வந்தது போல சரவணா பெருவிழிகள் கொண்டு நின்றார். பெருவெடிப்பின் தூரம் போல கண்களுக்குள் தூசுகளால் நிறைந்து நின்றது கவிஜியின் வீடு.

    “அதே வீடு. ஆம், இது அதே வீடுதான். ஆனால், நிறைய மாற்றங்களுடன் இருப்பதை உள் வாங்க சற்று நேரம் பிடித்தது. வழக்கமாக உள்ளே நுழையுமிடத்தில் சட்டென நின்றார். கண்கள் முழுக்க பனி மூட்டம் எத்தனை விலக்கியும் உள்ளே நுழைய முடியவில்லை. “ஏன் இப்படி? ” என்று நினைத்துக் கொண்டே .”கவிஜி …ஜி… ஹலோ…ஜி… நான் சரோ. கொஞ்சம் வெளிய வாங்க. ஒரு முக்கியமான விஷயம் பேசனும் “- கத்த கத்தவே, ஏதேதோ யோசனைக்குள் சிக்கிய மனதை வெளியே பிடித்து எதுவோ இழுப்பது போல உணர முடிந்தது. உணர உணர முடிந்து கொண்டே இருந்தது எதுவோ எதுவோ அது என்று யோசிக்க, யாசித்து வீழ்கிறது. உள்ளுக்குள் ஒரு பிம்பம். உடைவது மட்டுமென்ன உடையாமல் இருப்பதும் தூரங்களா? கேள்விக்குள் பதிலை வண்டாக்கி ரசித்த பூவில் உதிரத் தொடங்கிய இதழ்களை கூர்ந்து கவனிக்க விடாத பனிமூட்டம். மூளையெங்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல். கையை அசைத்து அசைத்து கூப்பிட்டார்.

    நன்றாகத் தெரிந்தது, அந்த வீட்டில் ஒரு பெண் வெளியே வருவதும், நிலவைப் பார்ப்பதும், உள்ளே யாரிடமோ பேசுவதும், கையில் மதுக் கோப்பையில் மது அருந்திக் கொண்டே சிரிப்பதும். நன்றாகத் தெரிந்தது. ஆனால் அது முழுக்க முழுக்க கவிஜியின் உடல் மொழியில் இருந்தது. இன்னும் கண்களைக் கசக்கும் பனியை ஊதி விலக்கி. கிடைத்த இடைவெளியில் பார்க்க பார்க்க அது கண்டிப்பாக ஒரு பெண்ணாகத்தான் தெரிந்தது.

    “நியந்தா நிலவின் வெளிச்சத்தில் ஒரு விதமான சாம்பல் பூத்த நிறத்தில் இருந்தாள். மூக்குத்தி மின்னியது. கண்கள் கண்ட காட்சியில் கவிதைச் சிறகு உடைந்து உடைந்து பறப்பது போல, ஒரு அழுகை ஆளுமையானது. பூத்துவிட்ட விழித் திரைகளில். இனம் புரியாத பூத்தூவல்கள் பனி மூட்டத்தில் நெளி நெளியாய் சரவணா முன் விரிந்தன மீண்டும் ஒரு முறை படிக்க மீண்டும் ஒரு முறை எழுது கவிஜி படிக்க படிக்க அழகாகும் இவள் பற்றிய கவிதையில் இவள் இன்னும் இன்னும் அழகாகிறாள். அழகாவது தானே அத்தனை அழகு காதலில் நிழற்படமாய் நீண்டு கிடந்த நினைவுகளில் திடீர் புகை… திடீர் சோகம் அப்பிக் கொண்டே இருந்தது. நீண்டது. நீட்சியின் சூட்சுமம். சூட்சுமங்கள் நிஜங்களைக் கொண்டே சமைக்கப் படுகிறது. புதிய புதிய கிறுக்கல்களில் வாழ்கிறது காதல் என்று அடிக்கடி கவிஜி கூறும் கூற்று. அங்கு காற்றாய் வாழ்வதாக த்தோன்றியது சில பாறைகள் நீரை வார்க்கத்தான் செய்கிறது பனி மூட்டம் மட்டும் கொஞ்சம் உடன் பட்டால் உள்ளே சென்று விடுவது சுலபம் என்று சரவணா யோசிக்க யோசிக்கவே, நிமிடங்களைக் கடக்க விட்டுக் கொண்டிருந்தது காலம்.

    அடுத்த அரை மணி நேரத்துக்கு பின்…
    ஒரு பாலைவனக் காற்று. மணல்வெளியை புதைத்துக் கொண்டிருக்க, ஒரு குதிரையில் தரையில் கால் குளம்பு படாமல் காற்றை கிழித்துக் கொண்டு கவிஜி வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார் அகன். அந்தக் குதிரை நிற்கவே இல்லை அது வந்து கொண்டே இருந்தது.

    ஆனால் வீட்டை நெருங்க முடியவில்லை. குதிரையின் கால்களும் நிற்கவில்லை. அது தீராப் பயணத்தை விதைத்து கொண்டே இருந்தது. அவரும் நிறுத்த முயற்சிக்க வில்லை. ஒரு கட்டத்தில் முயற்சித்தும் குதிரை நிற்கவில்லை. நிற்காத ஒன்றாய் நீட்சியின் இரண்டாய். தூரம் விதைத்து தூரம் போய்க் கொண்டே இருப்பது துக்கம் செய்தது. துக்கித்த ஏக்கம் தகித்த துக்கம். சித்திரம் உடைத்து கொண்டே இருப்பதில் காலத்தின் கணக்கை முறியடிக்காத வலிமையைக் கொண்டே இருப்பதாக சிந்தனையின் குளறுபடி. தலைக்குள் பாரமாய், தவிப்பாய், நெருப்பாய் உணர முடிந்தது. இப்போது கவிஜியின் வீட்டை நன்றாக பார்க்க முடிந்தது.

    தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தார். ஆனாலும் வீட்டுக்குள் நுழையமுடியவில்லை. யோசிக்க யோசிக்க மணல் வெளிகளின் ஒரு புத்தியில், உதிர்ந்து கொண்டே இருப்பதாக சுழன்ற யுக்தியில்,ஒரு வித மயக்க நிலை காரியம் விதைத்தது. கவிஜியை நன்றாகக் காண முடிந்தது. நிலவொளியில், இரவாய் செய்யப்பட்ட உருவமாய் நின்று நிதானித்து, சுற்றும் கவனித்து, அமர்ந்து எழுதி உள்ளே யாரிடமோ பேசிக் கொண்டே., சிரித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. மணலால் செய்யப்பட்ட ஏதோ ஒன்றாய் தன்னை உணர்த்தார். “ஏன் தன்னால் இதற்கு மேல் போக முடியவில்லை?” என்று யோசிக்க யோசிக்க மறப்பது நல்லது போல ஒரு வித சுழல் அவரை நிறைக்கத் தொடங்கியது. காற்றில் மிதப்பதாக தோன்றியது. காற்றே மிதப்பதாக தோன்றியது.

    கவிஜி இப்போது உள்ளே சென்றான் அகனின் பார்வையும் பின்னால் சென்றது உள்ளே, நியந்தா படுத்துக் கிடந்தாள் கவிஜி அருகில் அமர்ந்தான். ஏதோ பேசினான், சிரித்தான். குனிந்து நெற்றியில் முத்தமிட்டான். கன்னம் பிடித்து கிள்ளினான் அவள் அசையாமல் கிடந்தாள். அகனின் முகம் மெல்ல மாறியது. கண்களின் காட்சியில் வார்த்தைகள் காலம் சுமப்பதாக இருந்தது. இருப்பது எல்லாமே இருப்பது தானா திசை மாறும் மனச் சுழலை மெய் மறந்து கண்டு விடுவது தானே நியதி என்பது போல தீக்குள் விரலைக் கொண்ட நந்தலாலாவாக கண்டு கொண்டே இருந்தார்.

    கவிஜி கீழே கிடக்க. நியந்தா எழுந்து அவன் அருகே அமர்ந்து ஏதோ பேசினாள். பின், எழுந்து வெளியே வந்தாள். நிலவைக் கண்டாள். நிலவும் கண்டது. எழுதினாள். காற்றோடு காற்றாக கவிதை வாசித்தாள். அகன் தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினார். அவர் கத்துவது அவருக்கே கேட்கவில்லை அவர் யோசித்துக் கொண்டே. சிந்தனையை பின்னோக்கிக் குவித்தார்.

    அந்த வீட்டைச் சுற்றி ஒரு சுழலாய் சுழன்று கொண்டிருந்தது கவிஜிநியந்தாவின் காதல் கதை.

    நமக்குப் பிடித்தது போல ஒருவர் அவருக்கும் நம்மை பிடித்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அவர்களின் பிடிப்பு திகட்டாத காதல். தீர்க்கவே முடியாத காதல் நிலவின் பிடியில் சிக்கியக் கவிதையாக வரிகளின் உள்ளங்கைக்குள் எப்போதும் அடுத்தவருக்கான முத்தத்தை பிடித்துக் கொண்டேதான் இருப்பார்கள். எப்போதும் பேசுவார்கள். பேசப் பேச கவிஜியின் உருவகத்தில் நியந்தா ஒரு சிண்ட்ரெல்லாவாக உருவெடுப்பாள். அவளின் வானம் வெள்ளுடை தரித்தே கிடப்பதாக அதிகாலை எழுப்பிக் கூறுவான். பதில் அணைப்பைத் தவிர வேறு என்ன என்பது போல. அணைப்பாள், மிதப்பாள், கைகள் விதைப்பாள். கவிதை தைப்பாள்கண்கள் தாழ்பாள்.

    “போங்க. எப்பவும்” இப்டியேதான் என்று நகைப்பாள்.

    கவிஜி (இடைவெளியில் கண்கள் சுருக்குவாள். இதழ்கள் முறுக்குவாள்). கவிஜி, நீ ஏன் இவ்ளோ காதலோட இருக்க? என்று செல்லமாக சண்டை போடுவாள். அவள் நெற்றியில் நிலா என்று எழுதி வைப்பான். அவள் உடனே நெற்றியில் முத்தம் கேட்பா, அவன் கொடுப்பான்.

    “இப்போ இது சர்க்கரை நிலா” என்பாள்.

    சிரிப்பார்கள் …

    கோபம் இருவருக்குமே உச்சத்தில் இருக்கும் போது அழுவார்கள், அடித்துக் கொள்வார்கள். அப்படி ஒரு நாள் அடித்ததில்தான் அவள் செத்தே போனாள். அந்த இரவு. பிணமான பின்னாலும் மறக்கவே முடியாத இரவு. பிணமாகி போக மறுக்காத இரவு. கீழே செயலற்றுக் கிடந்த உடலை குலுக்கி ஆட்டி, எழுப்பி தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அழுத கவிஜி, ஆயுளுக்கும் உண்டான அழுகையைக் கொட்டித் தீர்த்தான். தீர்க்க முடியுமா காதலின் அழுகையைகெஞ்சினான் இனி அடிக்க மாட்டேன் நியந்தா விட்டுப் போகாதே என்று கதறினான். அவளுக்கு காதல் இருந்தும் காதில்லை. கவிதை இருந்தும் நினைவில்லை. திரும்ப திரும்ப யோசித்தான். ஒரு வேகத்தில் ஒரே ஒரு அறைதானே! இந்த கை அடித்தா மரணம் வரும்? இந்த மனம் அடித்தா மறதி வரும்? லயம் மறந்த வரியில் இன்னிசை சாகத்தானே செய்யும். அசரீரி கனவில் காகித கிழிசல். கவிதை என்று சொல்லும் மூடன். தாடிக்குள் கவிஜியாக இருந்தான்.

    மரணம் …

    “ஏய் சனியனே, உன்னை இங்கு யார் அழைத்தது? என் நியந்தாவை என்னிடமே திருப்பிக் கொடு. அவள் இல்லாத உலகில் என் பார்வை காட்சிக் குருடு தானே. அவள் இல்லாத தூரத்தில் நான் பயணம் அற்றவன் தானே. அவள் இல்லாத போதியில் மீண்டும் நான் சித்தார்த்தன் தானே” காடும் வெளியும் மலையும் கடலும் கதறுவதாக அவனின் மூளை நரம்புகள் முடிச்சை விட்டு விடத் தீர்மானித்தது போல சுழன்று புரண்டான்.

    “மரணம் ரணம். ரணம் மனம். மனம் கணம், கணம் கனம். இனி தினம். நான் பிணம். யாரிடம் சொல்லி இவளை பிழைக்க வைப்பது?” தன்னையே அடித்துக் கொண்டான். “இந்த காதலின் மொத்தம். இவள் தானே என்று நினைத்தேனே இனி என்ன செய்வேன்”- அவன் புலம்பல்கள். இலக்கிய சிந்தையில் தப்பு தப்பாய் கவிதை படைப்பதாக யோசித்தான். எல்லாமே தவறாக போவதின் வெளிப்பாடே அண்டத்தில் சிறையாகும். அகத்தின் பிம்பம் அகம் மறைக்கும் அவலத்தில் ஆண்டு விடப் போகிறது யாதும். யாவும் அற்றவன் அவளாகிப் போகும் போது அதுவாகி இன்னும் இருக்கிறது காதல்.

    முதல் முறையாக கடவுளை அழைத்தான். காதுள்ள கடவுள் கூப்பிட்ட மறுநொடி முன்னே வந்து நின்றார். வெகு தூரப் பயணமாம். குளிர் வேறு என்று படுக்கையில் கம்பளி போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தார்.

    மடியில் கிடந்த நியந்தாவைக் கண்டார். மடிந்துக் கிடந்த கவிஜியை கண்டார்.

    “எழுதப்பட்டவைகளை மாற்ற நான் யார் கவிஜி? உன் கவிதையை நீதான் முடிக்க வேண்டும் என் பார்வை எப்படி இருப்பினும்.”

    “கவிதை சொல்லும் நேரமா இது கடவுளே?”

    “நேரம் கடந்தால்தான் கவிதையே கவிஜி. உனக்கு சொல்லித் தர வேண்டுமா?”

    “காலம் கடப்பது இருக்கட்டும் காலம் கடக்கும் முன் ஏன் இவளைக் கை விட்டீர்?”

    “நீ ஏன் கை வைத்தீர்?”

    “அய்யோ விவாதம் செய்யும் நேரமில்லை இவளைக் காப்பாற்று. உயிர் கொடு”

    “அத்தனை சுலபமா? கவிஜி உயிர் என்பது சூட்சுமம். அவனவன் உயிரை அவனவன்தான் பாத்துக் கொள்ள வேண்டும். உயிர் கிடைப்பது. வெளிகளின் சிந்தனை.”

    கவிஜி பாவமாக பார்த்தான். பாவம் அற்றவனாய் பார்த்தான்.

    “பிறப்பது யாவும் இறக்கத்தான் கவிஜி. அது கவிஜியே. ஆனாலும், மரணத்தைப் போல் ஒரு மகத்துவம் இல்லை கவிஜி. நன்றாக யோசித்துப் பார் இது வரை. இவளை ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நினைத்தாய்?”

    —————————-

    “மொத்தமாக ஒரு 8 மணி நேரம். அவ்ளோ தான். ஆனால், இனி 24 மணி நேரமும் நினைப்பாய். காதல் இப்போது தானே அதிகம் ஆகிறது. காதலுக்கு உடலும் தேவை இல்லை. உயிர் கூடத் தேவை இல்லை. அது நினைவுகளால் கட்டமைக்கப்பட்ட சூத்திரம். அது இயற்கையின் ஒற்றை விரல்.”

    கடவுள் மறைந்து போனார். மறந்து போனார்.

    யோசிக்க யோசிக்க யாசித்துக் கிடக்கவே தோன்றியது. அழுது அழுது அழுத்தம் நிறைந்த கவிதையாக வெடித்து விட்ட பெரு வெடிப்பாய் சிதறிப் போக மனம் துடித்தது. துளி கண்ணீர் கூட நெருப்புக் குழம்பாய் நியந்தாவின் காதலால் எரிந்து கொண்டிருந்தது.

    “என்ன செய்ய யாரை அழைக்க?” -கடவுளைத் திட்டத் தொடங்கினான். அறை முழுக்க ஓடி ஓடித் திரிந்தான். தேடினான் கடவுளைத் தேடினான். கடவுளே உன்னைக் கொல்லவேண்டும். உன்னைக் கொல்ல வேண்டும், உன்னை மட்டும் கொல்ல வேண்டும். கை ஏந்தி நிற்பவனைக் கடந்து போகும் நீ கடவுள் அல்ல. நீ கடவுள் அல்ல சாத்தான். சாத்தான் சாத்தான். சாத்தான் சாத்தான்.”- அழுத்தி அழுத்தி கத்தும் காலம் சற்று நிற்க எதிரே அழுது கொண்டு நின்றார் சாத்தான்.

    “இந்த கடவுள்களே இப்படி தான் கவிஜி. நான் இருக்கேன். நியந்தா உனக்கு உயிரோடு வேண்டும் இல்லையா? வா. இது பாவமான உலகம். இங்கே எல்லாமே வெள்ளையாகிப் போன குருட்டுக் கூட்டம். எல்லாவற்றுக்கும் கோஷம் போடும் முட்டாள் மக்களைக் கொண்டு ஜோடிக்கப்பட்ட பூமி. தீர்க்கமுடியாத நோயினால் தினம் தினம் அழுது அழுது சாவான் மனிதன். அது தான் கடவுள்களின் திட்டம். நினைத்தபடி வாழ முடியவில்லை என்றால் எதற்கு இந்த பிறப்பு கவிஜி. ஒரு பக்கம் குடிசை, ஒரு பக்கம் மாளிகை விளங்குமா? கடவுளைக் கொல்ல வேண்டும் கவிஜி.

    நாம் எல்லாருக்கும் மாளிகை கட்டி தருவோம். அவர் ஏதோ பாடம் சொல்லித் தருகிறாராம். அதனால் தான் இந்த பொன்னான பூமியில் இத்தனை களேபரங்களாம். இத்தனை மரணங்களாம். ஒரு அறைக்கு யாராவது சாவார்களா! எத்தனை முட்டாள் பார் இந்த கடவுள்! பிடிக்காத மாமியார்க்கு கை பட்டாலும் குத்தமாம் கால் பட்டாலும் குத்தமாம். அப்படி இருக்கிறது இந்தக் கடவுள்களில் செயல்பாடுகள் நான் வன்மையாக கண்டிக்கிறேன் கவிஜி. பிரச்சினை செய்வதெல்லாம் கடவுள்கள். பலி, சாத்தான்களுக்கு என்ன செய்வது? எழுதப்பட்டவை. நாம் அதை உடைப்போம். ப்ரேக் தி ரூல்ஸ். உடைப்பவன்தான் இங்க விஞ்ஞானி. அணுவைப் பிளப்பவன்தான் அடுத்த மானுடம் வா. நியந்தாவை பிழைக்க வைப்போம். ப்ளேக் மேஜிக் கேள்விப் பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். அதில் ஒரு கட்டம். இது” என்று ஏதோ ஒன்றை சொல்லிக் கொடுத்தார் சாத்தான்.

    “இது பற்றி சித்தர்களே சொல்லி விட்டு போயிருக்கிறார்களே”-என்று கண்கள் விரிய கேட்டான் கவிஜி.

    “சித்தனாகி இதை செய்வதற்குள் நீ பித்தனாகி விடுவாய் கவிஜி. இது குறுக்கு வழி. பில்லி சூனியம். இதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதோ இப்போது இதை வைத்து உன் நியந்தாவின் உடலை எழுப்ப போகிறாய், முதல் கட்டமாக. இதை செய். மற்றவை. இன்னும் ஓரிரு நாட்களில் கற்றுத் தருகிறேன் கற்க இருக்கிறது நிறைய. கற்றவன் கண் இமைப்பது போல. எதுவும் இங்கு சாத்தியம் அல்ல. சாத்தியத் தோற்றங்களே,.உங்க பாரதி பாடினாரே “யாவும் தோற்ற மயக்கங்களே” என்று … அப்படி!”

    சாத்தான் மறைந்தது.

    இப்போது கூட சாத்தான் வரவுக்காகத்தான் காத்துக் கிடக்கிறான். இன்று முழு நிலா. நியந்தா எப்படியும். உயிரோடு எழுந்து விடுவாள். சிந்தனையை பின்னோக்கி குவித்த அகன்க்கு கவிஜி வீட்டுக்குள் சென்று பிணமாக கிடந்த நியந்தாவின் அருகில் படுத்து தன் உயிரை வெளியே எடுத்து, அவளின் உடம்பில் பொருத்திக் கொள்ளும் கூடு விட்டு கூடு பாயும் கலையை செய்தது கண்களில் விரிந்தது.

    “இங்கு எப்படி வந்தோம்”- என்று மயக்கம் தெளிந்து யோசித்துக் கொண்டிருந்த சந்தோஷ் மற்றும் சரவணா இருவருக்கும் தலை மீண்டும் சுற்றியது. இப்போது அகனும் மெல்ல சரிந்தார்.

    “மரணத்தை யாராலும் வெல்ல முடியாது” என்று அலையாகி தடுத்துக் கொண்டிருந்தார் கடவுள்.

    வாசலில் நின்று உள்ளே போக முடியாமல் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த நியந்தாவின் ஆத்மா இம்முறை கொண்டிருந்த உருவம். அது. அது அது அவள்.

    கூடு பாயும். கூடு தொடரும்

    Share
  • சித்திர வெளி

    கவிஜி.

    சட்டென நின்றான். கண்களை கூர்மையாக்கினான்.

    அந்தத் தேநீர்க் கடையின் சுவற்றில் ஒட்டியிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் கண்கள் சுழன்றது. தலையே கிறுகிறுத்தது. நம்ப முடியாத கண்களை இன்னும் ஒரு முறை அழுந்தத் துடைத்தான். மூளைக்குள் அந்தக் காட்சியைப் பதிய இன்னும் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டி இன்னும் கொஞ்சம் உற்று நோக்கினான். மனமெங்கும் இடி விழுந்த சத்தம். மெல்ல மெல்ல பயந்தபடியே அருகில் சென்றான். நம்பிக்கை இழந்தே போனான். ஆழ்மனம் நம்ப மறுக்கிறது. யார் இது? நானா? நேற்று இறந்து விட்டேனா? அதுவும் அகால மரணம்!!! கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் அவனைக் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. அவனாலும் யாரையும் கண்டு கொள்ள முடியவில்லை. மனம் எங்கும் ஊசி குத்தும் வலி. பனிக் காட்டுக்குள் ஆடையின்றி உருண்டு புரளும் வலி. கலங்கிய கண்களில் அப்பா அம்மாவும், அண்ணன் தங்கையும், நட்பும் உறவும் உருண்டு திரண்டு கண்ணீராய் உருண்டு விழக் காத்திருந்தார்கள்.

    அவன் பார்வையில் அத்தனை நேரம் ஓடிக் கொண்டிருந்த வாகனங்களும், அவனைக் கடந்து கொண்டிருந்த மனிதர்களும், 3டி எஃபெக்டில் முன் பின் மாறி இருப்பதாகத் தெரிய ஆரம்பித்தது. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். வானம் பார்த்தான். வானம், பால்வீதி, கேலேக்சி, நட்சத்திரம் நியுற்றினோ, நிலா சூரியன், கோள்கள், எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியுட்ரான், ராக்கெட் , ஒளி ஆண்டு, ஓசோன் மண்டலம் என ஒவ்வொன்றாக மறக்க ஆரம்பித்ததாக ஒரு தோன்றல். அவனது உறவுகள் நட்புகள், அம்மா அப்பா உட்பட அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளில் இருந்து நீந்தி வெளியேறிக் கொண்டிருப்பதாக ஒரு தோன்றல்.

    பிறப்பதற்கு முன்னால் இருந்த வெற்றிடம் நோக்கி தான் தள்ளப்படுவதாக ஒரு எண்ணம். அவன் கால்கள் தடுமாறி தடுமாறி நடக்க ஆரம்பித்தது. இதோ இந்த பூமி அவனை உதறப் போகிறது. அதோ அங்கே போவது அவனின் நண்பன். ந…ண்…ப…ன்… அய்யோ! பெயரை மறந்து விட்டோமே. அவன் ஞாபகக் கிணற்றுக்குள் எட்டிக் குதித்தான். நீச்சல் அடிப்பது மறந்து போயிருந்தது.

    எதிரே உள்ள தேநீர்க் கடையில் ஒருவர் ஊத்தி ஊத்தி ரசித்து ருசித்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் ஒரு முறையாவது இத்தனை ரசனையாக ஒரு தேநீர் குடித்திருப்போமா? அவன் மனம் தேடியது. எதுவெல்லாம் இன்பமாய், சுகமாய் இருந்ததோ அவையெல்லாம் மிக சுலபமாகக் கிடைத்த சின்ன சின்ன சந்தோசங்கள். மனிதன் ஒரு போதும் அதில் வாழ்வதேயில்லை. பெரிய பெரிய சாதனைகளில் தன்னை இருத்திக் கொள்வதே தன் இருப்பாக இருக்க முடியும் என்ற கற்பனைக்குள் நீந்தி கொண்டே, கரை கொண்ட காலடிகளை மறந்து போகிறான். அவனும் அப்படித்தான் மறந்து போனான். இன்னும் மறந்தே போகிறான். சாலையோரம் விளையாடும் குழந்தைகளின் முகங்களை உற்று பார்த்தான். அவைகள் வண்ணங்களற்று தெரிந்தது. பூச்சு இல்லாத பூக்களாய் மலர்ந்து திரிவதை காண முடிந்தது. வெப்பச் சலனமும், கானல் நீரும் கவிதை எழுதத் தூண்டியது. ஆனால் வார்த்தைகளற்ற எண்ணமும், தீர்ந்து போன பேனாவும், ஏற்கனவே எழுதி முடித்த காகிதமும் அவனை சுற்றிச் சுழன்றடிக்க, எப்படி எழுதுவது கவிதையை.

    எப்போதாவது சாலையில் ஓடியிருக்கிறோமா? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியிருக்கிறோமா? வீசும் காற்றை முழுக்க உள் வாங்கியிருக்கிறோமா? ஒரு மழை நாளில் குடை மறந்து நனைந்திருக்கிறோமா? ஒரு ஓவியம் ரசித்திருக்கிறோமா? பாரதியைப் படித்ததில்லை. பால் மணக்கும் குழந்தையைக் கொஞ்சியது இல்லை. நாய்க்குட்டியை வளர்க்க நேரம் இல்லை. வானவில் கண்டதும் செல் போனில் தானே படம் பிடித்தோம். வெறும் கண்ணால் கண்டதில்லையே. காடு கண்டதில்லை, காட்டாறு கண்டதில்லை, நதி தேடியதில்லை, கரை கொண்ட மரம் ரசித்ததில்லை. யாருக்காவது உதவி செய்திருக்கிறோமா ?

    யோசிக்க யோசிக்க அவனின் மனம் பதற ஆரம்பித்தது. காற்று குறைந்து கொண்டே போனது. அவனின் கால்கள் தனது சக்தியை இழந்து கொண்டிருந்தது. அவனின் சிறு வயது ஞாபகங்கள் ஒவ்வொன்றாக மறக்கத் துவங்கியிருந்தது. அவன் கடந்து வந்த பாலத்தைப் பார்த்தான். எத்தனை பாதங்களைக் கண்டிருக்கும்? எத்தனை சுமைகளைத் தாங்கியிருக்கும்? இதை கட்டும் போது வேலை செய்தவர்களில் பலர் இப்போது இறந்திருக்கலாம். அவர்களும் தன் நினைவுகளை, வாழ்வை மறந்திருக்கலாம், இந்த பாலத்தையும் சேர்த்து.

    முதலில், இறந்தவன் மறக்கிறான் பின் இறந்தவன் மறக்கப்படுகிறான். எவன் வகுத்த நியதி. ஒரு மரணம் எல்லாரையும் விட மரணித்தவனையே அதிகம் பாதிக்கிறது. மற்றவர்களுக்காவது, மரணித்தவன் யாரென்று தெரியும். ஆனால் மரணித்த பின், தான் யாரென்று கூட தெரிவதில்லை மரணித்தவனக்கு. மரணம் மிகக் கொடுமையான ஒன்றாக இந்த இடத்தில் தான் மாறுகிறது. விடியலில் மறந்து போகும் கனவுகளை ஒத்தது இந்த மரணம். தன் உடல், எடையை இழப்பதை உணர முடிந்தது. தன் வீட்டில் தன் இழப்பு எப்படி இருக்கும்? இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வீட்டிற்க்குச் செல்ல முடியும் ?

    இனி என்ன பெயர் சொல்லி என்னை அழைப்பார்கள்? நான் அயர்ன் பண்ணி வைத்த சட்டை பேண்ட்களை இனி யார் அணிவார்கள்? ஒரு அம்மாவாய், ஒரு அப்பாவாய் என் மரணத்தை எப்படித் தாங்குவார்கள்? இனி நான் என்னை சார்ந்தவர்களின் நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருப்பவனாகி விட்டேன். இல்லையா?

    அவனின் தலைக்குள் ராட்டினம் சுற்றத் தொடங்கியிருந்தது. அதிலிருந்து பட்டாம் பூச்சிகள் முளைக்க ஆரம்பித்தது. ஒரு பெருங் காட்டைக் கடக்க போகும் மனநிலைக்குள், தான் தள்ளி விடப் பட்டதாக தோன்றியதை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் தோன்றியது. அவன் சுடச் சுட சாதமும், கத்திரிக்கா பொறியலும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தான். ஆமாம், சாதம் வெள்ளையாகத் தானே இருக்கும். ஏனெனில் இப்போது வண்ணங்களை சுமப்பதே வேதனையாக இருந்தது அவனுக்கு.

    அவனை நோக்கி யாரோ ஓடி வருவதை உணர்ந்தான். யார் அது? அதுவும் அவனின் ஆடை எதிலோ நனைந்திருக்கிறதே. நன்றாக யோசித்து, யோசித்து, மிகுந்த கஷ்டத்திற்குப் பின், மூளையை வருத்தி யோசித்த நொடியில், சில வினாடி நினைவு வந்து போனது. ஆம். அது சிவப்பு வண்ணம். சிவப்பு வண்ணமா? ஐயோ!!! அது ரத்தம். ஆம், ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவன் ஓடி வந்து கொண்டிருக்கிறான். யார் அவன்? எதற்காக? மனமெங்கும் பயங்கள் முகமூடி போட்டுக் கொண்டு பல்லை ஈ … ஈ… ஈ… எனக் காட்டி முன்னேறுவதாக ஒரு பிரம்மை. அவனைப் பின் தொடர்ந்து இன்னொருவன். ஆங்காங்கே தன் உடலில் வழியும் ரத்தங்களுடன் துரத்தி வந்து கொண்டிருக்கிறான்.

    அவனை நோக்கி ஓடி வந்தவர்கள், அவனைக் கடந்து ஓடினார்கள். முன்னால் ஓடியவன் நன்றாக நனைந்திருந்தான் ரத்தத்தில். பின்னால் விரட்டிக் கொண்டு ஓடியவன் ஆங்காங்கே நனைந்திருந்தான். ஒரு விஷயம் கவனிக்க வேண்டியதாய் இருந்தது. முன்னால் ஓடியவன் நன்றாக பார்த்துக் கொண்டே ஓடினான். பின்னால் விரட்டியவன் தன்னை கண்டுகொள்ளவில்லை. யாருமே கண்டு கொள்ளாத இறந்தவனான தன்னை அவன் மட்டும் எப்படி உற்று பார்த்தான். கேள்விகளால் ஆனது மரணமும்… வாழ்வும்…

    நடை நின்றது. மனக் கண்ணில் புயலுக்கு பின்னாலான அமைதியோடு அவன் வீடு பார்த்துக் கொண்டிருந்தது. வெறித்த பார்வையில் பூச்சிகள் பறந்தன. இனி எனக்கும் இந்த வீட்டிற்கும் என்ன தொடர்பு? வாசலெங்கும் சிதறிக் கிடந்த மலர்களில் தேங்கி நின்றது நேற்றையக் கண்ணீர்த்துளிகள். அனாதையாக்கப்பட்டவன், இயலாமையின் உச்சி மீது பயந்தபடியே நின்று கொண்டிருந்தான். இது என் வீடு, என் வாசல். அதோ… அது என் சைக்கிள். இனி இவையெல்லாம் யாருடையது. வீட்டிற்குள் செல்ல அனுமதி இல்லை என்பதை வீட்டு முற்றத்தில் அடித்து வைத்த ஆணி பறை சாற்றியது. தன் முகம் மறக்கத் துவங்கியிருந்தது அவனுக்கு. ஒரு பெருமழைக்கான அழுகை நெஞ்சுக் கூட்டில் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. தான் வளர்த்த கொய்யா மரம் தன்னை மறந்திடுமா.

    இதே நேரம்…

    அங்கே ஒரு வீட்டு வாசலில் ரத்தம் தோய்ந்தவனை, விரட்டிப் பிடித்தவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.

    “முதல்ல சொல் பேச்சு கேட்டு பழகு. என்ன அவசரம். ம்… ம் … நான் தான் எல்லாம். என்னால படைக்கப் பட்டவன் தான் நீபுரிஞ்சுக்கோ. கொஞ்சம் காத்திருக்க முடியலயா.ம்ம்ம்ம்ம் …”

    “எல்லாம் நீங்கதான்னு சொல்லாதீங்க. என்னால தான் நீங்க படைப்பாளி. அப்போ நான் தான் எல்லாம்.”

    “இவ்ளோ வாய் பேச எங்க கத்துகிட்ட? உன்கிட்ட வாதாட எனக்கு நேரமில்ல. உள்ள போ… பினிஷிங் டச் தரணும்.”

    உள்ள போ, கோபத்தைக் கிளராதே என்றபடியே அந்த படைப்பாளி, அந்த ஓவியன், அதாவது விரட்டிக் கொண்டு ஓடினானே அவன், மிரட்டிக் கொண்டிருந்தான்.

    எல்லாம் விதி என்றபடியே ரத்தம் சொட்ட சொட்ட ஓடினானே அவன், அது ரத்தமல்ல சிவப்பு வண்ணம், அவன் அந்த ஓவியத்திற்குள் நுழைந்தான்.

    நுழைய சொன்னவன் ஓவியன். நுழைந்தவன் ஓவியமாய் நின்றவன்.

    ஓவியன் வரையத் துவங்கினான். ஜோல்னா பை, கண்ணாடி சகிதம் யாரையோ தேடிக் கொண்டு வந்த இன்னொருவன், ஓவியனிடம் ஏதோ விசாரிக்க, ஓவியன் ஒரு நிமிஷம் என்றபடியே அவன எங்கயாவது பார்த்தயாடா என்று ஓவியத்துள் அடைபட்டவனிடம் மிரட்டிக் கேட்க, அவன் முனகி கொண்டே சின்ன பாலத்துகிட்ட பார்த்தேன் என்றான். “இதே வேலைப்பா இவுங்களுக்கு”, என்றபடியே ஜோல்னா பை கடந்து சென்றது அந்த இடம் தாண்டி.

    வீட்டை வெறித்துப் பார்த்தபடியே அவன் நின்று கொண்டிருந்தான். பிணம் போல மாறிவிட்டிருந்தான். அனைத்தும் மறந்திருந்தான். அனிச்சை செயலைப் போல
    இதோ திரண்டு நின்ற கண்ணீர், தன்னை விடுவித்துக் கொண்டு பூமியில் ஒரு அணு குண்டை போல விழப் போகிறது. கதவு மூடியிருந்தது. இவன் வெற்றுக் கண்களில் வெறித்துக் கொண்டிருந்தான்.

    சட்டென தோளில் விழுந்த கை … அவனைத் திடுக்கிட வைத்தது. திரும்பிப் பார்த்தான். ஜோல்னா பை முறைத்துக் கொண்டு நின்றது. “கொஞ்சம் பாருங்க சார், என்ன அவசரம் உங்க கேரக்டர நான் இன்னும் முழுசா எழுதி முடிக்கல, அதுக்குள்ளே இப்படி ரிகர்சல் பாக்க கிளம்பிட்ட எப்படி சார்? வாங்க, சமத்தாஉள்ள வந்துடுங்க” என்றான் ஜோல்னா பை.

    இல்ல சார், இப்போ இந்த கதவு திறந்தா என்னாகும்னு தெரிய ஆர்வமா இருக்கு, அதையும் பார்த்துட்டுப் போய்டலாமா என்றது அந்த கதாபாத்திரம் கெஞ்சலாக.

    “எப்போதுமே ஒரு படைப்போட முடிவ அதப் படைக்கற படைப்பாளிதான் முடிவு பண்ணனும். படைப்புகள் அவனால்தான் படைக்கப் படணும். இப்போ நீ 7 மாச கரு மாதிரி. இப்ப நீயா எந்த முடிவும் பண்ணக்கூடாது. கதவு திறக்கப் படுமா வேண்டாமான்னு நைட் தான் எழுதப் போறேன், நீ வா உள்ள” என்றான் ஜோல்னா பை. மெல்ல யோசித்துத் தயங்கியபடியே கதாபாத்திரம் ஜோல்னா பைக்குள் இருக்கும் நோட்டுக்குள் நுழைந்து கொண்டது.

    படைப்பாளியின் ஆளுமை எப்போதுமே படைப்புகளை ஆண்டு கொண்டு தான் இருக்குமோ என்னவோ. படைப்புகள் படைப்பாளியை உருவாக்க கூடாதா கேள்வியும் பதிலும் எதற்குட்பட்டவைகள்?

    ஒரு வீதி தாண்டி.

    அவள் ஓடிக் கொண்டிருந்தாள்… பின்னால் கையில் உளியோடு அந்த சிற்பி விரட்டிக் கொண்டிருக்கிறான்…

    Share
  • விதவையின் முதல் இரவு….

     

    வண்ணங்களை 
    தொலைத்த
    விதவை என்பவள் 
    எண்ணங்களை 
    தொலைப்பது சாத்தியமா….?
    அறை முழுக்க 
    அலங்கோலமாய் 
    கிடக்கும்
    அவன் வாசம் 
    நுகராமல் இருப்பது 
    எப்படி?
    அவன் 
    அழுந்த பதித்த 
    முத்தங்களை 
    துடைத்து விட்டு 
    விடியலை எதிர்நோக்க
    அவளால் முடியுமா?
    அவனுக்காய் 
    தேய்த்து அடுக்கிய 
    அவன் ஆடைகளை 
    அவள் நிர்வாணம் 
    என்னதான் செய்யும்?
    அழுது ஓய்ந்து 
    மூடாத ஜன்னலில் 
    சிறைப்பட்ட 
    பார்வையோடு, 
    அவள் நகரும் 
    பின்னிரவில் 
    தோள் தொட்டு
    திருப்பிடாத அவன் மரணம் 
    அவளை சாந்தபடுத்துமா?
    அவள் கண்மூடித் 
    தொலையத் துவங்கும் 
    நேரம் 
    உடைந்து அழுகிறது, 
    வண்ணங்களில் 
    தீராத கண்ணீர்….
    கவிஜி 
    Share
  • இரும்பு பட்டாம் பூச்சி

    கவிஜி.

    இரவு … மணி 2.
    ஊசி குத்துவது போல உடலுக்குள் புகுந்து வெளிவந்து கொண்டிருந்தது குளிர். எங்கும் இருட்டு. ஷிப்ட் முடிந்து சாப்பாட்டு பேக்கும், சின்ன டார்ச்சுமாக வீடு நோக்கி நடக்க துவங்கியிருந்தான் செல்வராஜ். உடன் வந்த சிலர் அவரவர் பாதையில் பயணிக்க, செல்வராஜ் வீடு இருக்கும் பகுதிக்கு அவன் மட்டுமே செல்லும் தனிக்காட்டு ராஜாவின் பயணம் அது. அந்த ஏரியாவில் இருந்து அவன் மட்டும்தான் நைட் ஷிப்ட் வேளைக்கு வருகிறான். நண்பர்கள் உடன் வந்த வரை குளிர் வெறுங்குளிராக இருந்தது. அவரவர் கலைந்து தனியாக நடக்க ஆரம்பிக்கையில், குளிர் வெவ்வேறு ஞாபகங்களை நடுங்கிக்கொண்டே ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.

    “செல்வராசு, உங்க தாத்தா ஒரு முறை இதே மாரிதான், நைட் வேல முடிஞ்சு ஒத்தையா வந்தாக. அப்போ, அத்தனை அழகா ஒரு பொண்ணு, மல்லிகை பூவும், செண்டு வாசனையுமா ஜல்லு ஜல்லுனு, நடந்து போயிருக்கா. இவுகளுக்கு ஒரே டவுட்டு. யார்டா, நமக்கு தெரியாம இவ்ளோ அழகா நம்மூர்ல ஒருத்தின்னு, அவள நெருங்க, வேக வேகமா நடந்துருக்காக”

    “……!”

    “அவளும், தொணைக்கு ஒரு ஆள் இருந்தா நல்லதுதானன்னு நெனைச்சாளோ என்னவோ, நடந்தவ கம்முனு நின்னுருக்கா. கிட்ட போன இவுக, ஏய் , ஏய் பொண்ணு, யாரு இந்த நேரத்துல அப்டீன்னு சொல்லிட்டே அவள தாண்டி முன்னால போய் நின்னுருக்காக. அவ்ளோதான், மனுஷன் நடுங்கி, பேச்சு வராம, தலை தெறிக்க ஓடி வந்து பத்து நாள் ஆஸ்பத்திரில கிடந்து செத்து பொழைச்சாக”

    “ஏனாம் ?”

    “அந்த அழகிக்கு பின்னாலதான் பொம்பள ஒடம்பு முன்னால வெறும் ஓட்டை”

    நினைவுகளை என்ன செய்தும் அடக்க முடியவில்லை. அவைகள் தன் பேய் கைகளையும், கால்களையும், நாக்கையும் நீட்டி ஞாபகங்களை கிளறியபடியே இருக்க, செல்வராஜுக்கு கால்கள் நடுங்கத் தொடங்கின. காற்றும் குளிரும் புதுக்கதைகள் சொல்லிக்கொண்டிருந்தன. ஒற்றையடிப்பாதையில் ஒரே ஒரு வெளிச்சம் தூரத்தில் மினுங்கிக்கொண்டிருக்க திக் … திக்… இன்னும் அதிகமானது.

    “பிணம் சுற்றும் முக்கில் ஒற்றை தீபம் எரிகிறதென்றால், ஐயோ, கடவுளே. என்ன செய்வேன்”

    இன்று யாரோ ஒருவருக்குப் பேய் ஓட்டியிருக்கிறார்கள். அதனின் தொடர்ச்சிதான் இந்த ஒற்றை விளக்கு. நடை தாறுமாறாகப் போனது செல்வராஜுக்கு. நினைவுகளும் தான் … ஒரு முறை கறி வாங்கி வந்த மாமாவை வீடு வரை விரட்டி வந்து மிரட்டிய மோகினியின் கதையும் ஞாபகக் கிணற்றில் இருந்து பூதமாக கிளம்பியது. பேசாமல் பின்னால் திரும்பி பேக்டரிக்கே போய் விடலாமா என்று யோசித்தவன் சட்டெனத் திரும்பும் யோசனையைக் கைவிட்டான்.

    “செல்வராசு, எப்பவுமே நைட் நேரத்துல தனியா நடக்கறப்போ சட்டுன்னு திரும்பி பார்த்திரக்கூடாது, கொள்ளிவாய்ப் பிசாசு பின்னால வந்தாலும் வரும். ஏன்னா இந்த பூலோகம் மனுசங்களுக்கு மட்டும் படைக்கப்படல, அமானுஷ்ய சக்திகளுக்கும், பில்லி சூனியத்திற்கும், மொட்ட மோகினிகளுக்கும், சங்கிலி முனிகளுக்கும், ரத்தக்காட்டேரிகளுக்கும் சேர்த்தே படைக்கப்பட்டது தான்” பாட்டியின் குரல் பாடாய் படுத்தியது.

    ஆனால் அவளே ஒரு தப்பிக்கும் யோசனையும் சொல்லியிருந்தாள் “ஒருவேளை பேயிடம், அது எந்த பேயாக இருந்தாலும், மாட்டிக்கொண்டால் கால் பெரு விரல் கொண்டு, நின்றபடியே உன்னை சுற்றி ஒரு வட்டம் வரை. வட்டம் தாண்டிய பேய்களை ரத்தம் கக்க செய்யும் சக்தி அந்த வட்டத்திற்கு உண்டு. அது சூரியனை பிரதிபலிக்கும் மந்திரம்”… கொஞ்சம் தைரியம் வந்தது.

    கடைசி ஆயுதம் கொண்டு எப்படியும் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை துளிர் விடும் போது, பிணம் சுற்றும் முக்கை தாண்டும் மணித்துளி. உறைந்து விடத் துடிக்கும் காலமும் உடலும், கரைந்து காணாமல் போகத் துடிக்கும் உயிரும் உலகமும், பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடைக்கண்ணில் தொடங்கி நன்றாகவே பார்த்து விட்டான். ஆம், கண்டிப்பாக சற்று முன் நடந்த மந்திர தந்திர வேலைக்கான அத்தனை சாட்சியும், கொத்து முடியோடு, எலுமிச்சை மாலையோடு, ஒற்றை விளக்கு பல் காட்டி சிரித்தது. இதய துடிப்பை துல்லியமாக கேட்க முடிந்தது. நெஞ்சை ஒரு கையால் பிடித்தபடியே வேக வேகமாய் நடந்தான்.

    பின்னால் வரும் ஒருவரை அல்லது ஒன்றை அவனால் உணர முடிந்தது அல்லது உணருவது போல ஒரு நம்பிக்கை அல்லது அவ நம்பிக்கை. திரும்பி பார்க்கக் கூடாது. நடையை கூட்டினான். முன்னால் ஒரு பனிமூட்டம் விலகி கொண்டே இருப்பது போன்ற உணர்வு. பாட்டியின் கதைகளில் ஒன்றாக இருக்கட்டும் என்றே வேண்டிக்கொண்டான். பன்றிகளின் சத்தமும், சேவல்களின் கத்தலும் பனி விழும் இரவை பறையடித்து எழுப்பிக்கொண்டிருந்தது.

    தட்டினான். தட்டினான், தட்டி…..

    “அதான் வரேன்ல, என்ன அவசரம்?” என்றாள் அம்மா கதவைத் திறந்தபடியே.

    “உனக்கென்ன தெரியும், சாமத்துல தனியா நடந்து பாரு ” என்றபடியே “அப்பாடா” என்ற பெருமூச்சுடன் உள்ளே புகுந்தவன் கதவை வேகமாய் அடைத்தான். அதற்குள் அம்மா அவளின் அறைக்குள் புகுந்திருக்க. கடவுளுக்கு நன்றி சொல்லிக் கைகூப்பி கும்பிட முனைகையில் யாரோ கதவைத் தட்டினார்கள். சட்டென கதவு நோக்கித் திரும்பியவன் கதவின் தட்டப்படும் அதிர்வையும் அதிர்வுக்கு தகுந்தாற்போல முன் பின் தன்னை தளர்த்தும் தாழ்ப்பாளையும் வெறித்துப் பார்த்தபடியே …

    திக், திக், பக், பக், லப் டப்,லப் டப், லபக் லபக்….எச்சில் விழுங்கிக் கொண்டே வராத வார்த்தைகளை இடுக்கி போட்டு இழுத்து,” யா…ரு… யாருங்க ” என்றான் மெதுவாக. கதவு தொடர்ந்து தட்டப் பட்டுக் கொண்டே இருக்க, ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டவன், எல்லா சாமிகளையும் வேண்டிக் கொண்டு தாழ்ப்பாளைத் தொட முனைந்தான்.

    கரகரப்பான குரலில், “செல்வராசு, இன்னைக்கு தப்பிச்சிட்ட. மாட்டுவ ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்…” என்று ஒரு குரல் அணத்து அணத்தி விட்டு அடங்கியது கதவுக்கு பின்னால். அடுத்த நொடி. செல்வராஜ் அம்மா அறையில் கிடந்தான். பேச்சு மூச்சு இல்லை. நடுக்கம்… நடுக்கம்… நடுக்கம்… நடுக்கம்… நிலை குத்திய பார்வையில் பேய்கள் நிறைந்து கிடந்தன. பாட்டி சொன்ன கதைகளுக்கான அன்றைய கிளைமாக்ஸ்தான் பின்னால வந்ததா.

    “ஏன்னா, கதவு தட்டப்பட்டதும், வசனம் பேசியதும் உங்களுக்கு மட்டும்தான் கேட்டிருக்கு. அதே வீட்ல இருந்த உங்க அம்மாக்கு கேக்கல. அப்போதான் கதவ திறந்த உங்க அம்மா அதுக்குள்ள தூங்கியிருக்க முடியாது”

    “ஆக, உள்ளுக்குள்ள இருந்த பேய் பயம் கை கால் முளைச்சு, சரியான நேரம் பார்த்து தன்னை வெளிப்படுத்தியிருக்கு. எதுக்குமே ஒரு முடிவு வேணும் இல்லையா. அந்த முடிவுதான் கதவுக்குப் பின்னால பேய் பேசினதா நீங்களே கற்பனை பண்ணிகிட்ட அந்த கிளைமாக்ஸ் சீன். பூமி தோன்றின காலத்துல இருந்து எத்தன பேர் தற்கொலை பண்ணியும், கொலை செய்யப்பட்டும், விபத்துகளாலும் செத்து போயிருக்காங்க. உங்க கருத்துப்படி, அவுங்க அத்தன பேரும் பேயா சுத்தறாங்கனு எடுத்துக்க முடியுயமா? மனித உடல் என்பது ஒரு இயந்திரம். இதயமே அதனின் பிரதான இயங்கு சக்தி. அதன் இயக்கம் நிற்கும் போது அந்த இயந்திரம் நின்று விடுகிறது. அணுக்கள் அதற்கு மேல் தன்னை தற்காத்துக் கொள்ள இயலாமல் மெல்ல மெல்ல அழியத் துவங்குகிறது. அதுவரை இருந்த ஞாபங்கங்கள் மறையத் துவங்குகையில் அதை மரணம் என்கிறோம். மாண்டவரை புதைக்கவோ, எரிக்கவோ செய்து விடுகிறோம். ஒரு பிரிந்த உயிர் வேறு ஒருவரை பிடிக்கும் என்றால், ஏன் அது தன்னுடைய உடலையே மீண்டும் பிடிப்பதில்லை?”

    மனோதத்துவம், தத்துவங்களில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வராஜுக்கு தன்னம்பிக்கை முளைக்க ஆரம்பித்திருந்தது. உடல் நலமும், மன நலமும் தேறிக் கொண்டு வந்தது. பேயே முன்னால் வந்தாலும் உட்கார்ந்து நலம் விசாரிக்கும் அளவுக்கு மனம் திடமாகி இருந்தது. இன்னும் சொல்லப் போனால் பேய்களின் உலகம் பற்றிய ஆர்வம் மேலோங்கி இருந்தது. அது நிஜமா, கற்பனையா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு இருப்பதை ஆக்கப்பூர்வமாக எடுத்து கொண்டான்.

    ஒரு வாரத்திற்குப் பின் … ஒரு விடுமுறை நாள்.

    ஆற்றில் தூண்டிலிட்டு அமர்ந்திருந்தான், தனிமையில் தவம் செய்வது போல கானல் நீரால் காட்சிப் பிழைகளை சுமந்து கொண்டிருந்த கண்களை ஒரு முறை கசக்கிக் கொண்டான். தூண்டிலில் சட்டென கூடிய கனத்தை உணர்ந்தபடியே, தண்ணீருக்குள் உற்று பார்த்தான். கண்கள் மூடிய நிலையில் ஒரு பெண்ணின் முகம். தாமரைப்பூவாய் மலர்ந்து மிதந்தது. இன்னும் ஆழமாகப் பார்த்தான். அவனுள் பயம் துளியேனும் இல்லை. யாரிவள், வெறும் முகத்தோடு மிதக்கிறாள் என்றபடியே அவளை வெளியே இழுக்கும் முயற்சியில் நீரில் கை வைக்க, சட்டென கண்கள் திறந்து மெல்ல மூழ்கி போனாள்.

    ஒருவேளை தேவதை என்பவள் இப்படித்தான் இருப்பாளோ. அல்லது மோகினியா. அப்பப்பா எத்தனை அழகு. பேய் அழகு என்பது இது தானா. கற்கண்டு கண்கள், ஒற்றை மூக்குத்தியில் உயிரை இழுக்கும் உத்சவம், நெல்லிக்கனி அடக்கிய கன்னங்களில், கள் எடுக்கும் தண்ணீர். மிதக்கும் இலை ஒன்று தடவி தந்த முத்தத்தில் பூத்திட்ட இதழ்களா? நெளிந்த அலையில் நிலவென்று எண்ணத் துடிக்கும் நெற்றியில் கற்றை முடி ஒதுக்கிய அலையை என்ன சொல்ல. பேயாய் இருந்தாலும் அவளை அறியாமல் விட முடியாது.

    மறுநாளும் காத்திருந்தான் …

    முகமோடு உடலும் நனைத்திருந்தது. இரு மலை கட்டிக்கொண்டு மிதந்தாளோ, கொடி என்று வளைத்து பிடித்து கரையில் இழுத்து போட வாய்ப்புள்ள இடை கொண்டவள். தொடை வரை மேல் ஏறிய புடவையில் சூரியனின் வெளிச்சமென வண்ணம் என அறிந்த கண்ணில் காதல் கசிய, காமம் நிறைந்தது.

    யாரிவள்? கண்ணதாசனின் கோப்பைகளில் நிறைந்தவளா. பல்லவன் சிற்பத்தை கடத்தி செல்கையில் தடுமாறி தண்ணீரில் விழுந்திட்ட பொற்சிலையா? தூண்டில் போட்டவனே அகப்பட்டுக்கொண்ட கவித்துவம் ஆம் துடிக்கத்தான் செய்கிறான். தூண்டிலிட்டவன்.

    “பெயர் என்ன?”

    சிரித்தபடியே மூழ்கி போனாள்

    விடிய காத்திருந்தான் செல்வராஜ். விடிந்ததும் காத்திருந்தாள் கனகா.

    சுற்றும் முற்றும் பார்த்தான் அனல்காற்று நீர்ப்பரப்பின் மேலெங்கும் மினுமினுத்தது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஆறும், ஆறு சார்ந்த காலமும். சூடான காற்றும், சுவையான காட்சியும். நெருங்கினான். நெருங்கினான் …

    ஆம், முகம் காட்டியவள் இன்று முழுதும் காட்டிக் கொண்டு, அவன் அமரும் இடத்தில் அமர்ந்தவண்ணம் காத்துக்கொண்டிருந்தாள். உற்று நோக்கின் அது ஒரு ஓவியமெனவே தோன்றும். ஓவியத்திற்குள் சில நேரம் நுழைந்து விடும் ஓவியனைப் போல, அவன் அவளருகே அமர்ந்தான். முழுமையான ஓவியம். காண ஆளில்லாமல் கரையோடு காற்றில் நிறைந்து கிடந்தது.

    அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் தூண்டிலுக்கு வேலை இல்லை. மீன்கள் வாழ்த்திச் சென்றன. முகமும் முகமும் பார்த்துக் கொண்டேயிருக்க, அங்கே யுகங்கள் கடக்கத் தயாராயின. ஒரு காதலும் காதலால் நிரம்பிய காமமும். மிதந்து கொண்டிருந்த தூண்டிலை மெல்ல தடவிப் பார்த்த மீன் ஒன்று விசும்பியபடியே சில நினைவுகளை அசை போடத் துவங்கியது.

    மார்பில்லாதவள் என்ற கேலியும் கிண்டலும், தாழ்வு மனப்பான்மையின் உச்சிக்கு இழுத்துக் கொண்டு போய் தற்கொலையில் விழச்செய்த கதையை ஊர் அறியும். கனகா பிணமான விதமும் மூன்று நாள் கழித்து மிதந்த கணமும் நான் அறிவேன். அழகுக்கும் அன்புக்கும் ஏங்கிய கனகாவின் கனவை யாரறிவார்? மீன் நீந்தியபடியே நினைத்துக் கொண்டு மறைந்தது. இக் கதையை நன்கு அறிந்த நான் ஒன்று சொல்கிறேன்.

    மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த செல்வராஜ் அன்றே அவனின் மாமா வீட்டிற்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

    Share