காமராஜ் அய்யா

-கவிஜி

ராசா மகராசா நீரைய்யா – உம்
ஆட்சி பொற்கால தேரைய்யா
பாத்துட்டோம் உம்போல யாரைய்யா
கும்புட்டோம்நீர் படிக்காத மேதைய்யா!

சோறு குடுத்துப் படிக்க வைச்ச
சொக்காக்கூட தெச்சுக் குடுத்த                     kamaraj
மச்சு வீட்டுப் புள்ள கூட,
சரி சமமா நிக்க வச்ச

சொந்தப் பேர எழுத வச்ச
மந்தை கூட்டம் தெளிய வச்ச
கூரை வீட்டுக் காரனையும்,
குனியாதன்னு புரிய வச்ச

தொழில் பல கொண்டு வந்த
அடுப்பெரியக் கங்கு தந்த
பஞ்சம் பட்டினி விரட்டி விட்ட
தஞ்சம் அடைஞ்சா தூக்கி விட்ட

ஆகட்டும் பாக்கலாம்னு
ஆனமட்டும் பாத்திட்ட
ஐயோ பாவமுன்னு
ஜனங்களத்தான் காத்திட்ட

 அம்மாவும் அய்யாவும்
ஆனமட்டும் பறிச்சாங்க
அவுங்கவுங்க வீட்டுக்குத்தான்
ஆத்தக் கூட வித்தாங்க

ஆட்சி மாற
கணம் படைச்சு நின்ன
காட்சி மாற
மனம் உடைஞ்சு நின்ன

 நீர் கொடுத்த இலவசங்க
தலைமுறை காக்கும் கவசங்க
இப்ப கிடைக்கும் பணவசங்க
சோம்பேறி ஆக்கும் பவுசுங்க

ஓட்டுக்கெல்லாம் பணமைய்யா
ஒட்டுக் கோவணத்துலயும் போனைய்யா
பாவிப் பள்ளிக்கு ஒரு ரேட்டையா
புள்ள பொறந்ததுமே அட்மிஷன் பாட்டையா!

 காட்டழிச்சுக் கட்டிப்புட்டோம்
கட்டடத்துக்குள்ள,
கல்லறையப் புதைச்சுப்புட்டோம்!

பத்துல ஒரு மரம்
தூக்குப் போட உதவுது
பத்தாது தூக்குப் போட- குயில்
மரம் வைக்கக் கூவுது

நல்ல வேளை நீர் இல்லை
இன்று நல்ல
சோலை நீர் இல்லை
என்ன சொல்லி என்னாச்சு?
ஒன்பது வருஷத்தோடு,
ஜனநாயகம் நின்னாச்சு!

இந்த எழுத்து
நீர் போட்ட பிச்சை
என்ன எழுதி
நான் உம்மை மெச்ச!!

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *