Tag: திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

  • சேக்கிழார் பாடல் நயம் – 102 (அரசியல்)

    சேக்கிழார் பாடல் நயம் – 102 (அரசியல்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    பாடல் :

    அரசியல்  ஆயத்   தார்க்கும்   அழிவுறும்   காதலார்க்கும்
    விரவிய  செய்கை தன்னை   விளம்புவார்  ‘’ விதியினாலே
    பரவிய  திருநீற்   றன்பு    பாதுகாத்து   உய்ப்பீர் ‘’  என்று
    புரவலர்   மன்றுள்  ஆடும்   பொற்கழல்   நீழல்   புக்கார்.

    உரை :

    தமக்குப் பின் அரசியல் நடத்தும் முறைமையில் வரும் இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம்மிடத்துக் காதலால் மனம் வருந்தும் தேவிமார், ஏனைச் சுற்றத்தார் முதலியோர்க்கும், பொருந்திய செய்தியைக் கூறுவாராகி “விதியினாலே பரவப்பெற்ற திருநீற்றினிடத்து வைத்த அன்பினையே சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு செலுத்தக் கடவீர்“ என்று உறுதி மொழிக் கட்டளையைக் கூறியபின், அரசர், திருமன்றிலே அருட் கூத்தாடு கின்ற பூங்கழலணிந்த எடுத்த திருவடியைச் சிந்தித்திருந்தனர்.

    அடியார் பணி முதலிலும், அரசியலாகிய நாட்டின் காரியம் அதற்குப் பின்னரும், குடும்பப் பொருள் இறுதியிலும் வைக்கற்பாலன என்பது ஆசிரியர் கருத்துமாகும். அரசியல் ஆயத்தாரும் காதலாரும் கொண்டொழுகும்படி அரசர் பணித்ததும் தம் கொள்கையாகிய வேடமே சிந்தித்த லொன்றேயாம் என்பதும் குறிக்க.

    அரசியல் ஆயத்தார் -. அரசும் அங்கமுமாகிய யாவும் இதனுள் அடங்கும். இவற்றின் விரிவு திருக்குறள் முதலிய நீதி நூல்களுட் காண்க.

    அழிவுறுங் காதலார்– தம்மிடத்து வைத்த காதலாற் பரிந்து, தம் நிலைக்கழிந்து, இத்தகைய தலைவரைப் பிரிய நேரிடுகின்றதே யென்று கவலைப்பட்டு அழியும் தேவிமார், மக்கள் முதலிய சுற்றத்தார். ஆயத்தார் – மக்கள் முதலிய சுற்றத்தார் என்றும், காதலார் மந்திரி முதலாயினார் என்று முரைப்பாருமுண்டு.

    விரவிய செய்கை – நடந்த செய்தியையும், இனி நடைபெற வேண்டுவதாய்ப் பொருந்திய செய்தியையும் என்க. விளம்புவார் – எதிர்கால வினையாலணையும் பெயர். சொல்வாராகி. என்று என்பதனோடு முடிந்தது. விதியினாலே – இங்கு நிகழ்ந்த செய்தி விதியின் காரணமாய் விளைந்தது. விதி – “திருவேடத்தை அரனெனத் தொழுக“ என்று ஆகமம் விதித்த விதி. இதனால் இதுவரை நேர்ந்த செய்தி முற்றும் அடங்க ஒரு சொல்லிற் சுருக்கி அறிவித்ததனோடு அமைதியும் கூறியவாறு. நிகழ்ந்தது என்ற வினைமுற்றுத் தொக்கி நின்றது. நியதிப்படி என்றலுமாம். விதியினாலே பரவிய என்று கூட்டி விதிப்படி இதுவரை நான்போற்றி வந்த – என்றுரைத்தலுமாம். நான்- எழுவாய் வருவிக்க. பரவிய – வேதங்களாலே பரவப்பெற்ற  திருநீற்றன்பு பாதுகாத்து உய்ப்பீர் – திருநீறும் ஏனைத் திருவேடமும் எனுமிவற்றில் வைத்த அன்பின் ஒழுக்கத்தைச் சோர்வுபடாமல் காத்து உலகத்திற் செலுத்தி வருவீர்களாக! இதுவே இந்த, முடிவுறும் நிலையில் நான் உங்களுக்குச் சொல்லத்தக்க உறுதிப் பொருள். இஃதொன்றனையே ஆயத்தார், காதலார் என்னும் இருதிறத்தார்க்கும் அரசர் உறுதி கூறியவாறு காண்க. இஃதொன்றினைக் குறிக்கோளாகக் கொண்டொழுகுதலே அனைவர்க்கும் திருவருளின்பம் தரும் என்பது நாயனாரது துணிபாம்.  வேடத்தில்  தலைமை பெற்ற நீற்றினைச் சொல்லவே ஏனைய வேடங்களும் உடன்கொள்ளப் பெறும்.

    என்று – என்று சொல்லி, இவ்வாறு தனது கடமைகள் யாவும் நிறைவேற்றி முடித்துக் கொண்டு, அதன்பின், இறுதியாக. புரவலர் – காத்தலின் வல்லவர் – அரசர். இங்கு இப்பெயராற் கூறியது மேற்கூறிய பற்பலவகைக் கடமைகளையும் பாதுகாக்கும் வழியிற் காத்துநின்றமை குறித்ததாம்.

    மன்றுளாடும் பூங்கழல் – சிற்றம்பலத்திலே அருட்கூத்தாடும் அம்பலவாணனது அழகிய கழலணிந்த திருவடி. ஆடும் கழல்  என்றமையால் எடுத்தபாதம் என்க. இங்கு அரசர் தாம் ஆன்மார்த்தமாய்க் கொண்டு தினமும் பூசித்து வந்த சிற்றம்பலவாணன் திருவடிகளைச் சிந்தித்தார் என்க.

    முன்னர் “தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமா னன்பர்க் காவன வாகும்“ (470) என்றதும், வரும் பாட்டில் “அவர்முன் றம்மைக் கண்டவா றெதிரே நின்று காட்சிதந் தருளி“ என்பதும் காண்க. இவ்வாறே கழறிற்றறிவார் நாயனார் சிற்றம்பலவாணனைத் தினமும் பூசித்துத் திருச்சிலம்பொலி கேட்ட சரிதமும் இங்கு நினைவு கூர்க

    இவ்வுடல் விட்டு உயிர் பிரிந்துபோம் பொழுது இறைவனை நினைத்தல் வேண்டும் சாகும்   காலத்து வரும் எண்ணப்படியே ஒருவன் பின்னர் ஆகின்றான் என்பர்.

    “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைமே லுந்தி, அலமந்த போதா“கிய அப்போது, தனது மரணவேதனையினாலும், அறிவு மயக்கத்தானும், தன்பிரிவு பற்றித் தன் முன்னின்று, தொடர்புடைய பிறர்படுகின்ற துன்பங் காண்பதாலும், பிறவாற்றாலும் இது எளிதிற் கூடுவதன்று. இதுபற்றியே ஒருவன் இறக்குங்காலத்துச் சூழ இருப்பவர் சிந்தனை முகத்திற்றேக்கி அழுதல் முதலியன செய்யாது தேவாரந் திருவாசக முதலிய அருட்பாக்களை ஓதிக்கொண்டிருத்தல் வேண்டுமென்று பெரியோர் கூறுவர். ஆயின் இவ்வாறு ஆவி பிரியும்போது இறைவனை நினைக்கப்பெறுதல் நெடுங்காலம இறைவனை எண்ணி யெண்ணி வேண்டிக்கொண்டதன் பலனாகவே இறைவன் அருளினாற் பெற வேண்டியதொன்றா மல்லது எவரும் அக்காலத்துத் தாமாகச் செய்துகொள்ளத்தக்கதன்று; பிறர்தர வருவது மன்று. இதன் அருமையும் பெருமையும்பற்றியன்றே, கந்தை மிகையாங் கருத்துடையராய், முழுத்துறவுவேந்தராய், இறைவனிடத்துத் தம்பொருட்டு எவ்வரமும்வேண்டாதவராய் உள்ள எமது பரமாசாரிய ஞானமூர்த்திகளாகிய அப்பர் பெருமானும் இவ்வொரு வரத்தினையே பலவிடத்தும் இறைவன்பால் மன்றாடி வேண்டினார்.

    இப்பாடலில்  ‘’விதியினாலே   பரவிய  திருநீற்றன்பு பாதுகாத்து  உய்ப்பீர்!’’  என்று  மெய்ப்பொருள் நாயனார்  கூறியது  மக்களின் மனோநிலையை  அரசன் நன்கறிந்தவன் என்பதைக் காட்டுகின்றது,  திருநீறு பூசிய ஒருவன் அரசரைக்  கொன்றான்  என்பது கேட்ட மக்கள் திருநீறு பூசிய அடியார்கள் பாலும் , அவர்கள் பூசிக்கொண்ட   திருநீற்றின்  பாலும்  குற்றம் கண்டு அத்தகையோர்  அனைவரையும்  வெகுண்டு கொல்லலாம்  என்று எண்ணுகிறான்.  அவ்வாறே  முத்த நாதனை  மக்கள் கொள்ள  முற்பட்டார்கள்.

    ஆம், இந்திரா காந்தியைக்  கொன்றவன்  சீக்கியன் என்பதனால்  மக்கள் சீக்கியரைத் தவறாகக் கருதிப் பல இடங்களில் அவர்களை விரட்டிக் கொன்றனர், அதனால் சீக்கியர்கள் தலைப்பாகையை  எடுத்து, தாடியையும் மழித்துக்  கொண்டார்கள்  என்பதை நாம் நேரில் கண்டோம்;

    அத்துடன்  ராஜீவ் காந்தியை இலங்கைத் தமிழர் குண்டுகளால்  கொன்ற பின்னர் தமிழ்  மக்களையும். தமிழ் நாட்டையும்  சந்தேகக் கண் கொண்டு பார்த்து, குறிப்பாக  இலங்கை மக்கள்  இகழ்ந்தனர்.

    இத்தகைய சூழல் வரக்கூடாது என்று எண்ணிய   மெய்ப்பொருள் நாயனார்  ‘’விதியினாலே  பரவிய   திருநீற்றின்’’  பால்  பற்றுக் கொண்டு அடியார்களை  இகழாது, பாதுகாத்து,   உய்வடையச்  செய்வீர் என்றார்,  இது நாயனாரின் தொலைநோக்குப் பார்வையைப் புலப் படுத்துகிறது. இவ்வண்ணம் செய்யுள் இயற்றிய   சேக்கிழாரின் பாட்டுத்திறமும்  இங்கே  புலனாகின்றது!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 55

    சேக்கிழார் பா நயம் – 55

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    —————————————————-

    திருவாரூர்த் திருக்கோயிலில் பரவையாரைக் கண்டு காதல் கொண்ட சுந்தரர், அப்பரவையார் விரைந்து தம்மில்லம் சார்ந்தபின் அவரைத் தேடினார். தம்முள்ளத்தைக் கொள்ளை கொண்ட பரவையாரை மீண்டும் காண விரும்பினார். முன் யாவரோடும் உரை இயம்பாதிருந்த நம்பிகள், தனிமையாகக் காதல் மேன்மேற் படர்ந்து பெருகியபோது அக்காதலைத் துன்பமயமாக்கும் பொருள்களை நோக்கி, இயம்பும் உரைகளைக் கூறுகின்றார். காதற்றுன்பமிகுதியால் இவ்வாறு தனிமையில் இயம்புவது இயல்பு. அது அத்துன்ப மிகுதிப் பாட்டைக் காட்டும். இதனைத் தொல்காப்பியம், களவியலில்,

    ‘’காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி
    வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்’’

    என்று கூறும். அதன்படி மன்மதன் தம் முன் வந்து நின்று மலரம்புகளை எய்து தம் காமத்தைத் தூண்டுவதை உணர்ந்து வேட்கையால் மயங்கிச் செய்வதறியாது நின்றார். தாம் சிவபெருமானின் நெருங்கிய தோழர் என்பதை உணர்ந்தும், மன்மதன் மலரம்புகளைத் தொடுக்கலாமோ? என்றெல்லாம் கலங்கினார்.

    முன்பு முருகப்பிரான் திருவவதாரம் நிகழ , சிவபிரான் யோகத்திலிருந்த போது, மன்மதன் அவர் முன் நின்று மலரம்புகளை எய்தான். அப்போதே இறைவனின் நெற்றியிலிருந்த ஒற்றைக் கண்ணால் மன்மதன் எரிந்து, உருவழிந்தான். அத்தகைய சிவபெருமானுடன் தோழமை கொண்ட சுந்தரர், ஆரூரில் பரவையார் மேல் காதல் கொண்டதை அவரே வியந்து கொள்கிறார். அதனால்தான், சிவபெருமான் திருவருளையே சிந்தித்துக் கொண்டிருந்த தமக்குக் காதல் உண்டானது எவ்வாறு ? என்றெண்ணிய அவர் அக்காதலை ‘’அற்புதமோ, சிவனருளோ,’’ என்றெல்லாம் சிந்தித்தார். இப்போது மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த சிவபெருமான் தோழராகிய என் கண்முன் மன்மதன் தோன்றியதும், அவன் வில்லை எடுத்ததும், மலரம்புகளைத் தொடுத்ததும், நிகழக்கூடியவை அல்லவே. எரிந்ததன் பின் அவன் மீண்டும் தன் உருவத்தை அடைய மாட்டான் என்று சுந்தரர் எண்ணி யிருந்தார். ஆனால் திருவாரூரில் பரவையார் மேல் கொண்ட காமத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அவர் முன் வந்து, நின்று கரும்பு வில்லுடனும், ஐந்து மலர்களாகிய அம்புகளுடனும் மன்மதன் தோன்றினான். வெந்த காமன் பின்னர் உயிர் பெற்றா னாயினும் உருவிலனேயாவன். ஆனால் இவன் அவ்வாறன்றி உருவத்துடன் கூடினன் அதாவது, செயல் மிகுதியால் உருத் தோன்றுதல். என் முன்னால் வரவுங்கூடாத இவன் என் முன்னரும் வரவல்லவனாகி விட்டானே! அவ்வாறு என் முன் வருதலே பெருங் காரியம்; என் முன். வருதலேயன்றி என்மேல் அம்புகளையும் எய்கிறானே! ‘’ என்கிறார் சுந்தரர்! இதனைச் சேக்கிழார்,

    ‘’வெந்த காமன் வெளியே உருச்செய்து
    வந்து என்முன் நின்று வாளி தொடுப்பதே ‘’

    என்று பாடுகிறார். மன்மதன் எரிந்தபின் சிவனடியார் முன் காமனும், காலனும் தோன்ற மாட்டார்கள் என்றே உலகம் கருதியது! ஆனால், திருவாரூரில் சுந்தரரின் காதல், மன்மதன் செயலால் படர்ந்து வளர்ந்தது.

    ‘’சுற்றும் அமரர் சுரபதி நின்திருப் பாதம் அல்லால்
    பற்று ஒற்ற இலோம்என்று பரவையுள் நஞ்சை உண்டான்
    செற்றங்கு அநங்கனைத் தீவிழித்தான் தில்லை அம்பலவன்
    நெற்றியில் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே!’’

    என்று, சிவனடியார் முன் மன்மதன் தோன்றாத சிறப்புக் குறித்து அப்பரடிகளே பாடியுள்ளார். அச்சிவபிரானின் நெற்றிக் கண்ணின் ‘எரிதழல்’ அடியார்கள் முன் குளிர்ச்சி செய்து காக்கும். இக்கண்ணின் தழலுக்கு எரிக்காது குளிர்ச்சி செய்து காக்கும் குணமுமிருத்தலின் அதனின்றும் பிரித்து வேறு தன்மையைக் கொண்ட தழல் என்றார். அடுக்களையின்கீழ் வைத்த தழல் பாகம் செய்தும்,, கூரையில் வைத்த தழல் வீட்டை எரித்தும் தொழில் செய்தல்போலக் காண்க.. ஆனாலும் தீ சுடும் என்று கூறும் பொருளியல்புக்கும் மாறுபாடிலாமையுங் காண்க. இதனைச் சேக்கிழார் ,

    ‘’தம் திருக்கண் எரிதழலில் பட்டு’’ என்ற தொடரால் குறித்தார். மேலும் சுந்தரர், ‘’எமது தலைவனாருடைய திருவருளும் இவ்வாறாவதொன்றோ? திருவருளின் முன் வரவும், நிற்கவும், வாளிதொடுக்கவும் மாட்டாதவன் மதனன்! அவன் தம்பிரான் தம்மையே தோழனாகத் தந்த திருவருள் நிரம்பிய என்முன் வந்து நின்று வாளி தொடுப்பதாயினன். அவனன்றி ஓர் அணுவு மசையாதாதலின் இதுவும் அவர் திருவருளின் ஒரு வண்ணமோ? எந்தையுடைய ஆரருளோ? இதனை,

    எந்தையார் அருள் இவ் வண்ணமோ?” என்பார்.
    என்று சேக்கிழார் பாடுகிறார். இனி, நாம்முழுப்பாடலையும் பயில்வோம்.

    “தந்திருக் கண் எரிதழலிற் பட்டு
    வெந்த காமன் வெளியே உருச் செய்து
    வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
    எந்தையார் அருள் இவ் வண்ணமோ?” என்பார்.

    என்பது பாட்டு! சிவனடியார் ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொள்ளுவதும், அது குறித்துச் சிந்திப்பதும் , மேலும் அக்காதல் நிறைவேறச் சிவபெருமானே அருள வேண்டும் என்று சுந்தரர் வேண்டுவதும் , முன்பு திருக்கயிலையில் நிச்சயிக்கப் பெற்ற சிவசங்கல்பமே என்பதை நமக்கு இப்பாடல் உணர்த்துகிறது.

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 54

    சேக்கிழார்  பா நயம் – 54

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    இலக்கியங்களில் திணை, பால் ,  எண், இடம் ஆகியவற்றுக்கு உரிய சொல்லோ தொடரோ ஒன்றுக்கொன்று விரவி வரலாம். அந்நிலையில் தகுதிபற்றி  ஒரு திணையின் முடிபைக் கொண்டு தொடர் நிறைவுறும். ‘’மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா!’’ என்பது உலகியல் மொழி. இதில்  மூர்க்கன்- உயர்திணை ஆண்பால், முதலை- அஃறிணை ஒன்றன் பால். இவையிரண்டையும் கொண்ட தொடர்,‘’கொண்டது விடான்’’ என்றோ,‘’கொண்டதுவிடாது’’  என்றோ முற்றுப் பெறாது. உயர்திணை, அஃறிணை ஆகிய இரண்டிற்கும் பொதுவான வினைமுற்று இல்லை. விடான் என்று உயர்திணை முற்றைக் கூறுவதை விட , கொண்டது விடாமை  என்ற இழிவான செயல் பற்றி, விடாது என்று முடிக்கலாம். மூர்க்கனையும் அஃறிணையாகக் கருதிப் பலவின்பாலாக்கி , ‘’விடா ‘’ என்று தகுதி கருதிக் கூறினர். இவ்வாறே  திருவள்ளுவரும் , 

    ‘’எனைத்துணையர் ஆயினும்  என்னாம் தினைத்துணையும்
    தேரான்   பிறனில்  புகல் ‘’

    என்ற  குறட்பாவில்  ‘எனைத்துணையர்’  என்று உயர்த்திக் கூறியவர், அவர்  செய்த இழிசெயல் பற்றித் ‘ தேரான்’  என்று தாழ்த்திக்கூறினார். இதற்கு உரை கூறும் தேவநேயப் பாவாணர்’’ எத்துணை உயர்ந்தோன் ஆயினும் குற்றம் குற்றமே’’ என்கிறார். ஆகவே தொடர்  முற்றுப்பெறும் பொது தகுதியுடைய திணை, பால், எண், இடங்களுக்கு உரிய முற்றினைப்பெறும். கம்பராமாயணத்தில், சீதையைக் கண்டு உள்ளத்தை இழந்த இராமபிரான், ஜனகரின் விருந்தினனாய் இருப்பிடங்களில்  தங்கிய போது, இராமபிரானுடன், இரவும், நிலவும், அச்சீதையின் நினைவும் இணைந்து விளங்கியதைக் கம்பர்,   

    முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு
    இனிய பள்ளிகள் எய்திய பின் இருள்
    கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்
    தனியும் தானும் அத் தையலும் ஆயினான்

    என்ற பாடலில் , கங்குலும், திங்களும், இருள்கனிபோன்ற தனித்த தானும்,  அத் தையலும் இணைந்து, அஃறிணை, உயர்திணை, ஆண்பால் , பெண்பால் ஆகிய

    நான்கும் சேர்ந்து  இருந்ததை, இராமனின் தகுதி பற்றி ஆயினான் என்று உயர்திணை  ஆண்பால் வினைமுற்றாகக் கூறினார். இதற்கு ,

    ‘’யானும்  தோழியும் ஆயமும் மேவிய  அந்நாளில்
    தானும் தேரும் பாகனும் வந்து என்நலன்உண்டான்,
    தேனும்  பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்
    கானும்  கைதையும் கடலுமே அன்றிக் கரியாதே!’’

    என்ற  பழம்பாடலில் ‘’தானும் தேரும் பாகனும் வந்துஎன்நலன் உண்டான்’’ என்று  தகுதி பற்றி அவனுடைய செயலாகவே கூறப்பெற்றது. இவற்றை நன்கு கற்றறிந்த சேக்கிழார்   சுவாமிகள், ‘’குளங்களில் இருந்த பறவைகளின் ஒலிகுறைந்த நள்ளிரவில், பரவையார் துணையின்றித் தனித்திருந்த சுந்தரர், தம்காதல்உள்ளத்துடனும், தம் உயிர்த் துணைவராகிய இறைவனுடனும் இருந்த நிலையை, ‘’பாவை தந்த படர்பெருங் காதலும்  ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்’’ என்று காதல் ,தனிமை, இறைவன், ஆகிய துணைகளுடன், சுந்தரர் தனியர் ஆயினார்! என்றுபாடினார். இப்பாடலுக்கு விளக்கம் கூறிய உரையாசிரியர் ஆவி சூழ்ந்த தனிமையும் – தமது ஆவியைச் சூழ்ந்த தனியாந்தன்மையும். அஃதாவது ஆவி இங்கு நின்றும் பரவையாரிடம் போயினமையால் ‘ஆவி நல்குவர்’ என ஆரூர்ப் பெருமானை வேண்டிக் கொண்டனர் நம்பிகள்.. ஆனால் ஆவி நல்காது (பரவையாரைத் தாராது) பெருமான் தாமே தனியாய்த் துணையிருந்தார் என்பது. ஆவி சூழ்ந்த தனிமையாவது இறைவன் உயிர்க்குள் உயிராய்க் கலந்து சூழ்ந்து நிற்குந்தன்மை. இங்கு ஆவி வேறிடமிருந்தமையின் முன் அதனைச் சூழ்ந்திருந்த அவன் தனியனாயிருந்தான். தனிமை – தனிப்பொருளாந் தன்மை. தோழர் தனியராயினமையின் தாமும் தனியர் ஆயினர் என்பதும் குறிப்பாம். நாவலூரர் காதலும் தனிமையும் ஆயினார் என்று முடிக்க. பரவையில்லாது அது தந்த காதல் மட்டும் இருந்தது; ஆவியில்லாது அது சூழ்ந்த தனிமைமட்டும் இருந்தது; பரவை உண்டாயின் ஆவியும் உளதாம்; அப்போது தனிமையும் நீங்கும் என்க. “தமியனேன் தனிமை நீங்குதற்கே“ என்ற திருவிசைப்பாக் கருத்தையுங் காண்க. காதலோடு தனித்து முன்னர்க் கூறியபடி யாவரோடும் உரையியம்பாது இருந்தனர் நம்பிகள் என்க.’’ என்றுகூறினார். 

    மேலும்  இப்பாடலில்  சுந்தரருக்கு  இரவில் துணையாக இருந்த  பறவைகளின் பேரொலி சுந்தரர்  நினைவுக்கு வரவில்லை. அந்த அளவுக்கு  அவர் நினைவு தனித்திருந்தது. இது காதல் வயப்பட்டவர்  நிலை போலும். அவர் தனிமை இறைவனுடன் கலந்திருந்தமையால்  அதனைப் பறவை முதலாயின காணாமல் ஒதுங்கி மாறின. இனிப் பாடலை முழுமையாகப்  பயில்வோம்.

    வாவி புள்ளொலி மாறிய மாலையில்
    நாவலூரரும் நங்கை பரவையாம்
    பாவை தந்த படர் பெருங் காதலும்
    ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.

    ஆகவே  சுந்தரரின் காதலுக்கு இறைவனும், பரவையார் நினைவும்  துணையாய் இருந்தமையை நாம் புரிந்து கொள்கிறோம்.

    சுந்தரரின்   மனோநிலை இறைவனுடன்  கலந்து இருந்ததற்குக்  காரணம் சுந்தரரின் உயிர்  போன்ற பரவையாரைச் சிவபிரான்  கொண்டு வந்து சேர்ப்பர் என்ற நம்பிக்கை ஆகும்!  அந்த இறைவனுடனும், மனங்கவர்ந்த காதலுடனும் சுந்தரர் இருந்ததை,   உயிர்கள் தம் மும்மலங்களில் இருந்து நீங்கிச் சிவனடிக்கீழ் சேரும்போதும்  புதிய விளைவாய் ஆணவ மலம் சற்றுப் பின் நோக்கிப் பார்க்கும் என்று ‘’ உண்மை விளக்கம்’’ என்ற  சித்தாந்த சாத்திரம் விளக்குகிறது. ஒரே நேரத்தில் ஆன்மா இறைவனிடமும் பாசங்க ளிடமும் சேர்ந்து  விளங்கும் அற்புதம் சிவலோகம் சென்று இறைவனிடம் அருளும் அனுமதியும் பெற்ற சுந்தரர். மையல் மானுடமாய்  மயங்கிய போதும் சிவ பெருமானுடன் உடன்பட்டும், முரண்பட்டும் நேரில் பேசிய போதும் வெளிப்பட்டது . இதற்கு  சித்தாந்தம் இசைவு தருவதைத் திருஞான சம்பந்தர், மற்றும் திருநாவுக்கரசர் வாழ்விலும், காண்கிறோம். சிவபிரானுடன்  நேரில் பேசும் பெருமை மிக்க அடியார்களுக்கு நேரும் அற்புதம் இது! அத்தகைய அற்புதங்கள் இப்போதும் நாம் வாழும் நாளில் நிகழ்கின்றன. நம்மைச் சுற்றி வாழும், வாழ்ந்த ரமண பகவான், சேஷாத்ரி  சுவாமிகள், மஹாபெரியவர் போன்றோரின் வாழ்வியல் அற்புதங்கள் இதனை உணர்த்தும். அதன் முன்னோடியாக, அப்பூதி யடிகள், அப்பர் அருளால் துன்பில் பதம் பெற்றார்! வாழும்போதே,திருஞான சம்பந்தர் திருமணத்தில் பங்கேற்றோருக்கும் திருவடிப்பேறு கிட்டியது! சேரமான் பெருமாள் நாயனார் உடம்போடு கைலாயம் சென்று ‘’திருக்கயிலாயஞானஉலா’’  பாடினார்.ஆன்மாவின் நோக்கமாகிய இறைவனடி சேர்ந்தபின்னும், மீண்டும் இங்கே வந்து தம் வாழ்வால் உயிர்களுக்கு வழிகாட்டிய அடியார்களின் அருள் வரலாறே திருத்தொண்டர் புராணம்! இவற்றைச் சேக்கிழாரின் பாடல்கள் செவ்வனே விளங்குகின்றன.    

    Share
  • சேக்கிழார் பா நயம் – 52 (பஞ்சின்)

    சேக்கிழார் பா நயம் – 52 (பஞ்சின்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    —————————————————-

    இயற்கை  நிகழ்ச்சிகளில் கதிரவன்  மறைதலும் , இரவின்  தோற்றமும், நிலவு வெளிப்படுதலும்   இலக்கியங்களில்  தனித்த இடம் பெறும் .  கதிரவன் மறைவுக்குக்  காரணம் கற்பித்து  உருவகமும்  தற்குறிப்பேற்றமும்  கலந்த பாடலை   அடுத்து, அதனோடு  ஒப்பிடும்வகையில் வானின் இருள் நீண்டு நெடுநேரம் விளங்கியதைக்  கவிஞர் பாடுகிறார்.

    இத்தகைய பாடல்களில் தாம் விரும்பும் தத்துவங்களை  எடுத்துக்கூறி விளக்குவது  கவிஞர்களின்  உத்தியாகும். இராமாயணத்தில் வஞ்சனை அரக்கர்தம் வடிவைப்   போலவும், அவர்களின் நெஞ்சைப்போலவும் நீலவானம்  இருண்டது என்பதைக்கம்பர்,

    நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர்

    அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின்

    வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின்

    நெஞ்சினின் இருண்டது நீல வானமே

    என்று பாடுகிறார்.  மேலும் கூனியின்  உரையாகிய  நஞ்சு பாய்ந்தமையால் கலங்கிய   கைகேயி தன்  சிந்தை போல,   சிவந்த  வானம்  இருண்டது என்பதை,

    அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம்

    நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன்

    மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய

    சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே

    என்றும் பாடுகிறார். அடுத்து  இராமனின்  கார்வண்ண  மேனியைப் பார்த்த பெண்களின்  கண்கள் கருத்தனவோ?, இப்பெண்களின்  மைதீட்டிய  கண்களின் பார்வையால்  இராமன் மேனி கருத்ததோ? என்பதைக்   கம்பர்,

    பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம்

    செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம்

    மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம்

    அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால்

    என்றும் பாடுகிறார்.  போர்க்களத்தில்  இரவில்  இராமனைக் காண வந்த வீடணன்,  இராமன்  தனியே இரவில் நிற்பதைக்  கண்ட கதிரவன் வருந்தி மேலை மலையில் புகுந்தான்  என்பதைக் கம்பர் ,

    மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து

    நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும்

    சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி

    இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான்

    என்றும் , பின்னர் அவ்வானம்  வேதம் நான்கும்  இல்லை என்றும், மனுமுதல் சாத்திரங்கள்  இல்லை  என்றும், வேள்விகள் உண்மை   இல்லை என்றும், தெய்வத்தன்மை  வாய்ந்த வேதியர்  தம்   ஈடுபாடும் இல்லை  என்றும் கூறி, தாமரைக் கையை   உடைய    ஆதிமுதல்வனாகிய  திருமாலைப்  பரம்பொருள் என்று வணங்காத  பேதையர்   உள்ளம் போல   இருண்டது  என்பதைக் கம்பர் ,

    வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும்

    வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே

    ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா

    ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்

    என்றும்  பாடுகிறார். இவ்வகையில் சேக்கிழார்  பெருந்தகை, ‘’பஞ்சு போன்ற மெல்லிய பாதம் கொண்ட வேசையர் உள்ளமும், வஞ்சனை உடைய மக்களின்  கொடிய  பாவமும், சிவப்பரம்பொருளின்  ஐந்தெழுத்தின்  தியான  முறைகளை   அறியாதோரின்  நெஞ்சும் போல , எல்லாத்   திசையிலும்   நீண்ட   வானம்       இருண்டது’’  எனப்  பாடுகிறார். அந்தப் பாடலை இங்கே  படித்து  உணர்வோம்.

    ‘’பஞ்சின்   மெல்அடிப்  பாவையர்   உள்ளமும் ,

    வஞ்ச   மாக்கள்தம்   வல்வினை   யும்அரன்

    அஞ்சு  எழுத்தும்  உணரா   அறிவிலோர்

    நெஞ்சும்   என்ன   இருண்டது   நீலவான்’’

    இப்பாடலில் இருமனப்  பெண்டிராகிய பாவையர்தம்  தன்னலம் மிக்க உள்ளம் இருண்டே  விளங்கும்  என்ற தனி மனிதத்  தீமையும்,

    வஞ்சனை செய்து வாழுவோர் செய்யும் பாவங்கள் என்னும் சமுதாயத் தீமையும்,

    (வஞ்ச மாக்கள்தம் வல்வினையும் – வல்வினைமாக்கள் வஞ்சமும் என்று உம்மையைப் பிரித்துக் கூட்டி உரைத்தலுமாம். முன் வினையின் பயனாகி வரும் வஞ்சம் மேன்மேலும் வினையை விளைத்தலால் வஞ்ச மாக்கள் வல்வினை என்றார். “வினையின் வந்தது வினைக்கு விளையாது“ என்றதும் காண்க. “வஞ்ச வல்வினைக் கறுப்பறு மனத்தடியார்கள்“ என்று பின்னர்க் கூறுவதுங் காண்க. வஞ்சமுடைமையால் மக்கள் மாக்கள் எனப்பெற்றனர். ஐயறிவுடைய மிருகங்கள் போன்றார் என்பது குறிப்பு. விலக்கலாகாமையின் வல்வினை என்றார் என்ற விளக்கமும் காண்க).

    சிவபெருமானின்  மந்திரமாகிய  ஐந்தெழுத்தின்  பெருமையையும், அவற்றை  உச்சரிக்கும்  வைகரி, பைசந்தி, சூக்குமை ஆகிய மூவகைப்  பாராயண முறைகளை அறிந்து   அவற்றை  ஓதாதவரின் உள்ளம் அறியாமை  உடையது   என்னும்  ஆன்மிகத்  தீமையும்

    (அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் – அரன் -ஆன்மாக்களுடைய பாசங்களை அரிப்பவன். அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் – அஞ்செழுத்தை உணரப் பெறாத மடவோர் என்க. “மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம் தன்னி லொன்று வல் லாரையுஞ் சாரலே“ என்று இமயன்றூதர்க்கு அப்பர் பெருமான் இட்ட ஆணையும் காண்க. “விதி எண்ணு மஞ்செழுத்தே“ என்றபடி எழுத்து அறிவினுள்ளே உணரப் பெறுவ தொன்றாதலின் உணரா அறிவிலோர் என்றார்.

    இத்திருவைந்தெழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் – பொருளும் – உள்ளீடும் -நிற்குமுறை-ஓதுமுறைமுதலியனவும்உண்டு.இதனை

    “எவ்வெவ்கோட்படுபொருளும்“ என்ற குரு தோத்திரத்திலே குறித்தருளினர் எமது மாதவச்சிவஞான முனிவர் அஞ்செழுத்தின் வகையும் பெருமைகளும் நூல்களிற்பேசப்பெறுவன. சைவாசாரியார்பாற் கேட்கத்தக்கன. “நாயோட்டு மந்திரம்“என்று அதன் பெயர்தானும் சொல்லலாகாது என அறிவிப்பர் திருமூலதேவர்.மூவர் முதலிகள் கருணையினாற் பஞ்சாக்கரப் பதிகங்களை அருளினர். மணிவாசகப் பெருமானார் “நமச்சிவாய வாழ்க“, “நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்“ முதலிய திருவாசகங்களில் பஞ்சாக்கரங்களை அருளினர் என்பர்.)

    ஆகிய  மூன்றும்  இருளடைந்த   உள்ளத்தைக்  காட்டுவன, என்று சேக்கிழார் பாடுகிறார்.

    ‘’நமச்சிவாய  வாழ்க’’  என்று தொடக்கத்திலும்,  ‘’யானேயோ  தவம் செய்தேன் , சிவாய நம   எனப்பெற்றேன் ‘’ என்று  இடையிலும்

    இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
    நயந்தனள் அங்கே நம சிவ என்னும்
    அயன் தனை யோரும் பதம் அது பற்றும்
    பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே

    ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
    ஆமே பரங்கள் அறியா இடம் என்ப
    ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
    ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே

    சிவசிவ என்கிலர் தீவினையாளர்
    சிவசிவ என்றிட தீவினை மாளும்
    சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
    சிவசிவ என்ன சிவகதி தானே

    நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
    சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற
    பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
    அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ

    சிவாயநம என சித்தம் ஒருக்கி
    அவாயம் அறவே அடிமை அது ஆக்கி
    சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
    அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே

    மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர்
    சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர்
    நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு
    வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே

    ஆயும் சிவாயநம மசிவாயந
    ஆயும் நமசிவாய யநமசிவா
    ஆயுமே வாயநமசி எனும் மந்திரம்
    ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே

    என்றெல்லாம்  பல வகைகளிலும்  பக்குவத்திற்கேற்ப அஞ்செழுத்து  ஓதுதல் சிவஞானியர்  வழக்கங்களை   சேக்கிழார் சுவாமிகள்  உரைத்தருளுகின்றார். அகவிளக்காகி இருள் கெடுப்பது ஐந்தெழுத்தாதலின் அது ஏற்றப்பெறாத நெஞ்சு இருண்டிருக்கும் என்பது குறிப்பு. இவற்றை  அறிந்து, உணர்ந்து கொண்டோர்  வாழ்க்கை ஒளி பெறும். என்பதை இப்பாடல்  நயமாக  விளக்குகிறது.

    (தொடரும்…

    Share