Advertisements
இலக்கியம்கவிதைகள்சேக்கிழார் பா நயம்தொடர்கள்

சேக்கிழார்  பா நயம் – 54

திருச்சி  புலவர் இராமமூர்த்தி

இலக்கியங்களில் திணை, பால் ,  எண், இடம் ஆகியவற்றுக்கு உரிய சொல்லோ தொடரோ ஒன்றுக்கொன்று விரவி வரலாம். அந்நிலையில் தகுதிபற்றி  ஒரு திணையின் முடிபைக் கொண்டு தொடர் நிறைவுறும். ‘’மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா!’’ என்பது உலகியல் மொழி. இதில்  மூர்க்கன்- உயர்திணை ஆண்பால், முதலை- அஃறிணை ஒன்றன் பால். இவையிரண்டையும் கொண்ட தொடர்,‘’கொண்டது விடான்’’ என்றோ,‘’கொண்டதுவிடாது’’  என்றோ முற்றுப் பெறாது. உயர்திணை, அஃறிணை ஆகிய இரண்டிற்கும் பொதுவான வினைமுற்று இல்லை. விடான் என்று உயர்திணை முற்றைக் கூறுவதை விட , கொண்டது விடாமை  என்ற இழிவான செயல் பற்றி, விடாது என்று முடிக்கலாம். மூர்க்கனையும் அஃறிணையாகக் கருதிப் பலவின்பாலாக்கி , ‘’விடா ‘’ என்று தகுதி கருதிக் கூறினர். இவ்வாறே  திருவள்ளுவரும் , 

‘’எனைத்துணையர் ஆயினும்  என்னாம் தினைத்துணையும்
தேரான்   பிறனில்  புகல் ‘’

என்ற  குறட்பாவில்  ‘எனைத்துணையர்’  என்று உயர்த்திக் கூறியவர், அவர்  செய்த இழிசெயல் பற்றித் ‘ தேரான்’  என்று தாழ்த்திக்கூறினார். இதற்கு உரை கூறும் தேவநேயப் பாவாணர்’’ எத்துணை உயர்ந்தோன் ஆயினும் குற்றம் குற்றமே’’ என்கிறார். ஆகவே தொடர்  முற்றுப்பெறும் பொது தகுதியுடைய திணை, பால், எண், இடங்களுக்கு உரிய முற்றினைப்பெறும். கம்பராமாயணத்தில், சீதையைக் கண்டு உள்ளத்தை இழந்த இராமபிரான், ஜனகரின் விருந்தினனாய் இருப்பிடங்களில்  தங்கிய போது, இராமபிரானுடன், இரவும், நிலவும், அச்சீதையின் நினைவும் இணைந்து விளங்கியதைக் கம்பர்,   

முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்திய பின் இருள்
கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்
தனியும் தானும் அத் தையலும் ஆயினான்

என்ற பாடலில் , கங்குலும், திங்களும், இருள்கனிபோன்ற தனித்த தானும்,  அத் தையலும் இணைந்து, அஃறிணை, உயர்திணை, ஆண்பால் , பெண்பால் ஆகிய

நான்கும் சேர்ந்து  இருந்ததை, இராமனின் தகுதி பற்றி ஆயினான் என்று உயர்திணை  ஆண்பால் வினைமுற்றாகக் கூறினார். இதற்கு ,

‘’யானும்  தோழியும் ஆயமும் மேவிய  அந்நாளில்
தானும் தேரும் பாகனும் வந்து என்நலன்உண்டான்,
தேனும்  பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்
கானும்  கைதையும் கடலுமே அன்றிக் கரியாதே!’’

என்ற  பழம்பாடலில் ‘’தானும் தேரும் பாகனும் வந்துஎன்நலன் உண்டான்’’ என்று  தகுதி பற்றி அவனுடைய செயலாகவே கூறப்பெற்றது. இவற்றை நன்கு கற்றறிந்த சேக்கிழார்   சுவாமிகள், ‘’குளங்களில் இருந்த பறவைகளின் ஒலிகுறைந்த நள்ளிரவில், பரவையார் துணையின்றித் தனித்திருந்த சுந்தரர், தம்காதல்உள்ளத்துடனும், தம் உயிர்த் துணைவராகிய இறைவனுடனும் இருந்த நிலையை, ‘’பாவை தந்த படர்பெருங் காதலும்  ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்’’ என்று காதல் ,தனிமை, இறைவன், ஆகிய துணைகளுடன், சுந்தரர் தனியர் ஆயினார்! என்றுபாடினார். இப்பாடலுக்கு விளக்கம் கூறிய உரையாசிரியர் ஆவி சூழ்ந்த தனிமையும் – தமது ஆவியைச் சூழ்ந்த தனியாந்தன்மையும். அஃதாவது ஆவி இங்கு நின்றும் பரவையாரிடம் போயினமையால் ‘ஆவி நல்குவர்’ என ஆரூர்ப் பெருமானை வேண்டிக் கொண்டனர் நம்பிகள்.. ஆனால் ஆவி நல்காது (பரவையாரைத் தாராது) பெருமான் தாமே தனியாய்த் துணையிருந்தார் என்பது. ஆவி சூழ்ந்த தனிமையாவது இறைவன் உயிர்க்குள் உயிராய்க் கலந்து சூழ்ந்து நிற்குந்தன்மை. இங்கு ஆவி வேறிடமிருந்தமையின் முன் அதனைச் சூழ்ந்திருந்த அவன் தனியனாயிருந்தான். தனிமை – தனிப்பொருளாந் தன்மை. தோழர் தனியராயினமையின் தாமும் தனியர் ஆயினர் என்பதும் குறிப்பாம். நாவலூரர் காதலும் தனிமையும் ஆயினார் என்று முடிக்க. பரவையில்லாது அது தந்த காதல் மட்டும் இருந்தது; ஆவியில்லாது அது சூழ்ந்த தனிமைமட்டும் இருந்தது; பரவை உண்டாயின் ஆவியும் உளதாம்; அப்போது தனிமையும் நீங்கும் என்க. “தமியனேன் தனிமை நீங்குதற்கே“ என்ற திருவிசைப்பாக் கருத்தையுங் காண்க. காதலோடு தனித்து முன்னர்க் கூறியபடி யாவரோடும் உரையியம்பாது இருந்தனர் நம்பிகள் என்க.’’ என்றுகூறினார். 

மேலும்  இப்பாடலில்  சுந்தரருக்கு  இரவில் துணையாக இருந்த  பறவைகளின் பேரொலி சுந்தரர்  நினைவுக்கு வரவில்லை. அந்த அளவுக்கு  அவர் நினைவு தனித்திருந்தது. இது காதல் வயப்பட்டவர்  நிலை போலும். அவர் தனிமை இறைவனுடன் கலந்திருந்தமையால்  அதனைப் பறவை முதலாயின காணாமல் ஒதுங்கி மாறின. இனிப் பாடலை முழுமையாகப்  பயில்வோம்.

வாவி புள்ளொலி மாறிய மாலையில்
நாவலூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர் பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.

ஆகவே  சுந்தரரின் காதலுக்கு இறைவனும், பரவையார் நினைவும்  துணையாய் இருந்தமையை நாம் புரிந்து கொள்கிறோம்.

சுந்தரரின்   மனோநிலை இறைவனுடன்  கலந்து இருந்ததற்குக்  காரணம் சுந்தரரின் உயிர்  போன்ற பரவையாரைச் சிவபிரான்  கொண்டு வந்து சேர்ப்பர் என்ற நம்பிக்கை ஆகும்!  அந்த இறைவனுடனும், மனங்கவர்ந்த காதலுடனும் சுந்தரர் இருந்ததை,   உயிர்கள் தம் மும்மலங்களில் இருந்து நீங்கிச் சிவனடிக்கீழ் சேரும்போதும்  புதிய விளைவாய் ஆணவ மலம் சற்றுப் பின் நோக்கிப் பார்க்கும் என்று ‘’ உண்மை விளக்கம்’’ என்ற  சித்தாந்த சாத்திரம் விளக்குகிறது. ஒரே நேரத்தில் ஆன்மா இறைவனிடமும் பாசங்க ளிடமும் சேர்ந்து  விளங்கும் அற்புதம் சிவலோகம் சென்று இறைவனிடம் அருளும் அனுமதியும் பெற்ற சுந்தரர். மையல் மானுடமாய்  மயங்கிய போதும் சிவ பெருமானுடன் உடன்பட்டும், முரண்பட்டும் நேரில் பேசிய போதும் வெளிப்பட்டது . இதற்கு  சித்தாந்தம் இசைவு தருவதைத் திருஞான சம்பந்தர், மற்றும் திருநாவுக்கரசர் வாழ்விலும், காண்கிறோம். சிவபிரானுடன்  நேரில் பேசும் பெருமை மிக்க அடியார்களுக்கு நேரும் அற்புதம் இது! அத்தகைய அற்புதங்கள் இப்போதும் நாம் வாழும் நாளில் நிகழ்கின்றன. நம்மைச் சுற்றி வாழும், வாழ்ந்த ரமண பகவான், சேஷாத்ரி  சுவாமிகள், மஹாபெரியவர் போன்றோரின் வாழ்வியல் அற்புதங்கள் இதனை உணர்த்தும். அதன் முன்னோடியாக, அப்பூதி யடிகள், அப்பர் அருளால் துன்பில் பதம் பெற்றார்! வாழும்போதே,திருஞான சம்பந்தர் திருமணத்தில் பங்கேற்றோருக்கும் திருவடிப்பேறு கிட்டியது! சேரமான் பெருமாள் நாயனார் உடம்போடு கைலாயம் சென்று ‘’திருக்கயிலாயஞானஉலா’’  பாடினார்.ஆன்மாவின் நோக்கமாகிய இறைவனடி சேர்ந்தபின்னும், மீண்டும் இங்கே வந்து தம் வாழ்வால் உயிர்களுக்கு வழிகாட்டிய அடியார்களின் அருள் வரலாறே திருத்தொண்டர் புராணம்! இவற்றைச் சேக்கிழாரின் பாடல்கள் செவ்வனே விளங்குகின்றன.    

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here