குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2

-மீனாட்சி பாலகணேஷ்
(சிறுபறைப்பருவம்- ஆண்பால்)
சிறுபறைப்பருவப் பாடல்கள் கருத்துவளமும் சந்தநயமும் மிகவும் நிறைந்து விளங்குபவை. சைவத்தின் தனிப்பெருங்கடவுளான சிவபெருமான் பிறப்பிலிப் பிஞ்ஞகன்; சிவபிரான் மீது பிள்ளைத்தமிழ் பாடவியலாத குறையை அடியார்கள் அவனுடைய பலவிதமான நடனங்களைப் பற்றிக் குழந்தையின் பல்வேறு பருவங்களிலும் பாடிமகிழ்ந்து நிறைவுசெய்து கொண்டனர். சந்தநயம் மிகுந்த பல பாடல்கள் சிவபிரானின் திருநடனத்திற்கேற்பக் குழந்தை முருகன் தனது சிறுபறையின் ஒலியினை எழுப்புவதாக அமைந்து இன்புறுத்தும்.
சிறுபறை முழக்கி வரும் முருகன் எனும் சிறு குழந்தை பெரிய மணி போன்று ஒளிர்கின்றான்; வாடாத புதுமை நிறைந்த மென்மலர் போலப் பொலிகின்றான். கண்ணூறு பட்டுவிடப் போகின்றதே எனத் தாய் உள்ளம் எண்ணுகிறது.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து விதமான தொழில்களையும் செய்யும் சிவபிரான் நடனமாடுகிறான். அவனுடைய நடனத்திற்கேற்ப குமரனின் சிறுபறை முழங்குகிறது. இறைவனின் கூத்துக்கு ஆயிரம் கைகளாலும் மத்தளம் கொட்டும் வாணன் என்பவன் தோற்று வெட்கும்படியாக முருகனின் சிறுபறை சிறப்பாக முழங்குகின்றதாம்!
நந்திதேவன் இதைக்கேட்டு அதிசயித்து, “எமக்கு இதற்கேற்ப ஜதி சொல்ல வராது அப்பா குழந்தாய்!” எனக் குமரக்குட்டனிடம் தனது இயலாமையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டான்! முருகனின் சிறுபறை முழக்கத்தைக் கேட்டு உள்ளம் உவந்த தந்தை சிவபிரான், நடனம் ஆடும்பொழுதே தலையை இயைவாக அசைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். பக்கவாத்தியக்காரர்கள் அனுசரணையாகவும் திறமையாகவும் இசைக்கருவிகளை வாசிக்கும்போது தலையை அசைத்து அவர்களைப் பாராட்டித் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் கலைஞர்கள் இயல்பு. இதனைச் சிரக்கம்பம் என்பர்.
‘தந்தன தந்தன திந்திமி,’ என்று ஜதிகளை முதலில் வாயால்கூறி பின் அவற்றை சிறுபறையில் தோன்றுமாறு முழக்குகிறான் குமரன். தாயான உமையவளுக்கு ஆனந்தம் பொங்குகிறது; குமரன் கூறும் ஜதிகளுக்குத் தானும் பொருத்தமாகக் கைத்தாளம் இட்டு காலப்பிரமாணம் வரையறுக்கின்றனளாம்!
‘இவ்வகையாக கொத்துக் கொத்தான மலர்கள் பூத்த சோலைகள் நிறைந்த எட்டிக்குடி குகனே, சிறுபறை முழக்குவாயாக!’ எனத் தாய் ஆசை பொங்க வேண்டுவதாகப் புலவர் நடேச கவுண்டர் எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழில் முருகப்பெருமானை வேண்டுகிறார். படிக்கும் நமது உள்ளங்கள் ஆனந்த வெள்ளத்தில் முழுகுகின்றன. இது 20-ம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற அருமையான ஒரு பிள்ளைத்தமிழ் நூலாகும்.
ஐந்தொழி லுஞ்செயு மெந்தை நடஞ்செய
வாயிர மங்கைகளால்
அணிமத் தளமறை யுந்தொழில் வாணனும்
அகமிக வெள்குறவே
நந்தியு மிந்த விதஞ்சதி கொட்ட
நமக்குவ ராதெனவே
நாதனு மாதர வாகித் தலையை
யசைத்து நடஞ்செயவே
தந்தன தந்தன திந்திமி யென்று
சதிக்கண முந்துறவே
தாயுமை யானந் தக்கொடியுங்
கைத்தாளங் கொட்டிடவே
கொந்தண வும்பொழி லெட்டிக் குடிக்குக
கொட்டுக சிறுபறையே
கோவா மணியே வாடா மலரே
கொட்டுக சிறுபறையே1.
சிறுபறையில் ஒலி சந்தநயத்துடன் நமது காதுகளில் கேட்கின்றதல்லவா? அதுவே இப்பாடலின் பெருமையாகும்!
சில பாடல்களில் சிறுபறையின் ஒலிக்கேற்ப இன்னும் என்னவெல்லாம் ஒலித்தன எனக்கண்டு களிக்கலாம். சில பாடல்கள் முருகப்பெருமான் போர்க்களத்தில் செய்த வீரதீரப் பிரதாபங்களைப் பேசுவனவாகும். இத்தகைய பாடல்களின் சந்தம் போர்முரசம் போன்றும் அமைந்திருக்கும். இன்னுஞ்சில, ஐவகை நிலங்களின் அருமைபெருமைகளைப் பாடும். அத்தகையதொரு பாடல்தான் நாம் இப்போது காணப்போவது:
அழகான திருப்போரூர் முல்லைநிலங்கள் செறிந்த ஊர். இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள் தயிர்கடையும் கலங்களில் முழங்குகின்றன; தம் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே பசுக்கூட்டங்கள் அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச்சுரந்து, அன்போடு விம்மிக்கதறும் முழக்கமும் மிகுகின்றது. மூங்கில்களின் துளைகளின் வழியே விரல்களை விட்டுப்பிடித்து இசையினை எழுப்பும் தொறுவர்கள் எனப்படும் இடையவர்கள் ஊதும் குழலோசையும் கேட்கின்றது. பலநிறம் பொருந்திய காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக்கூவும் ஒலியும் எழுந்த வண்ணம் உள்ளது. விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியலில் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இந்தப் போரூரின் முல்லைநிலங்கள். இப்போரூரின் இறைவன் குமரவேள் ஆவான்.
ஒருவரை அறிமுகம் செய்யும்போது அவருக்கு என்ன ஊர், பிறப்பால் எந்தக்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிப்பது வழக்கம். அதுபோன்று இங்கு புலவர் முருகன் வளரும் போரூரின் சிறப்பைப் பற்பல சொற்களிற் கூறினார். அவனுடைய குலம்- குடிப் பெருமை கூற ‘குளமலிகண்ணன் தரும் இறை’ எனச் சில சொற்களையே கூறினார். இதுவே மிகவும் பெருமை தரும் அறிமுகமாக விளங்கி அழகு செய்கின்றது. குளம்- நெற்றி; அலிகம்- நெற்றி; – நெற்றிக் கண்ணனான சிவபிரான் தந்தருளிய முருகக் கடவுள் என்கிறார். வேறு என்ன பெருமை வேண்டும் மகனுக்கு? அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் தனது பெற்றோரைப்போல் தொடர்ந்து வளர்த்து அருளியவன்தான் அல்லவா?
“திருப்போரூர்க் குமரனே! நீ சிறுபறை முழக்குக,” எனப் புலவர் சிதம்பர அடிகளார் வேண்டுகின்றார். திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் இவர் பாடிய திருப்போரூர் சந்நிதி முறையில் உள்ள முப்பத்தாறு நூல்களுள் ஒன்றாகும். பொருள் வளமும் கற்பனை வளமும் மிக்கு விளங்குவது.
அளைகடை முடைகதுவிய தளிர் வடிவத்து ஆய்ச்சியர் மத்தொலியும்
அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி ஆன்நிரை கத்தொலியும்
கிளைபடு தொளைவழி விரல்விடு தொறுவர்கள் கீதக் குழலொலியும்
கேழ்செறி கானக் கோழிகள் முறைமுறை கிட்டிக் கூவொலியும்
விளைதரு தளவத் தளிபல விளரி விளக்கிய சீரொலியும்
விடியற் காலைக் கடலைப் பொருவ மிகுத்தெழு மாமுல்லைக்
குளமலி கண்ணன் தருபோரூர் இறை கொட்டுக சிறுபறையே
கொத்துறு முத்தமிழ் மெத்த வளர்த்தவ கொட்டுக சிறுபறையே2.
புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை இப்பாடலில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது. இவ்வாறு நுணுக்கமான நயங்களைப் புலவர் பெருமக்கள் தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளமை வியக்கத்தக்கது.
முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஒரு இலக்கிய உத்தியாகும்.
இதேபோன்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப் பருவத்துப் பாடலொன்றில், ‘விளரிப் பண்ணைப் பாடுகின்ற வண்டுகள் முழங்குகின்ற கூந்தலையுடைய கொடி போன்றவளே!’ என அன்னை விளிக்கப்படுகிறாள்.
‘விளரிமி ழற்றருளி குமிறுகு ழற்கொடி3.’ என்பன பாடல்வரிகள்.
திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் இன்னொருவகை இனிமையைக் கண்டு ரசிக்கலாம். தகப்பன்சுவாமியாகிய முருகப்பெருமான் உறையும் சுவாமிமலையின் சிறப்புகளைக் கூறுமுகமாக அங்கு என்னவெல்லாம் எவ்வாறு முருகனின் சிறுபறை ஒலிக்கேற்ப ஒலிக்கின்றன எனப் புலவர் கூறும்விதம் மிகுந்த நயம் வாய்ந்தது.
அரங்கமெல்லாம் மத்தளம் எனப்படும் பறைமுழக்கம் ஒலிக்கும்; சாலைகள் அனைத்திலும் தருமமாகிய முரசொலி கேட்கும்; ஊரின் சபைகள் அனைத்திலும் தமிழின் இனிமை கேட்கும்; அங்கு வாழும் மக்கள் சிந்தை முழுவதும் சாந்தம் எனும் தன்மை நிரம்பியிருக்கும். பெண்கள் விளையாடும் இடங்களிலெல்லாம் கழங்கு, அம்மானைப் பண்கள் ஆகியவை பெருமளவில் பாடப்படும். மேகங்கள் கூடுவதைக் கண்ட மயில்களின் ஆனந்த அகவலோசை மலர்ப்பூங்காக்களில் நிறைந்திருக்கும்.
வயல்கள் சூழ்ந்த தடங்களிலெல்லாம் பூந்தேனைச் சொரியும் கனிவாழைகளும், முதிர்ந்து வெடித்த தேன்மாங்கனிகளும் நிறைந்து, பறவைகளின் இன்னொலியால் நிறைந்திருக்கும்; இங்ஙனம் பலவித ஓசைகள் முழங்கும் சாமிமலை முருகனே! நீயும் உனது சிறுபறையை இவ்வோசைகளுக்கு ஈடாக முழக்கியருளுக! என்பார் புலவர்.
தழங்கு முழவ மரங்கமெலாம் தரும முரசஞ் சாலையெலாம்
தமிழி னினிமை சபைகளெலாம் சாந்த நிலைமை சிந்தையெலாம்
கழங்கு கழலம் மனைப்பண்கள் கனிவாய் மகளிர் பண்ணையெலாம்
களிக்கு மயிலி னகவல்மழைக் கலிப்பு மலர்ப்பூங் காவிலெலாம்
விழுங்கு பூந்தேன் கனிவாழை வெடிப்புத் தேமா விளைந்தகனி
வீழ விரியும் புள்ளினொலி விளைந்த வயற்சூழ் தடங்களெலாம்
முழங்குஞ் சாமி மலைமுருகா முழக்கி யருள்க சிறுபறையே
முடியா முதலே வடிவேலா முழக்கி யருள்க சிறுபறையே4.
குழந்தை முருகன் சிறுபறையைக் கையில் ஏந்தி முழக்குகின்றான்- அவ்வொலியைக் கேட்பவர்களுக்கு அது ஒவ்வொரு விதமாகத் தோன்றுகிறதாம். இது ஒருவிதமான இனிய கற்பனை!
வடகலையோடு தென்கலையைப் பயிலுகின்ற புலவர் குழாம் ஒன்று ஆர்வமாகப் புரவலர்களைத் தேடி வருகின்றது. அவர்கள் செவியில் குமரன் முழக்கும் சிறுபறையொலி விழுகின்றது. உடனே கவிவாணர்கள் பரபரப்புடன் ஒருவருக்கு ஒருவர், “வாருங்கள், புலவர் பெருமக்களே, இந்நகரில் முழங்கும் கொடைமுரசின் ஒலி உங்களுக்குக் கேட்கவில்லையா? அது நம்மை, ‘வருக,’ என அழைக்கிறது; விரைந்து வாருங்கள், சென்று நமது கலைத்திறமை விளங்கப் பாடிப் பரிசில் பெறுவோம்,” என கூறிக் கொண்டு மற்றவர்களை ஊக்குவித்தபடி விரைகின்றனர்.
சிவபெருமானுடன் அமர்ந்து உமையம்மை உரையாடிய வண்ணம் இருக்கிறாள். அவர்கள் செவியில் இந்தச் சிறுபறையொலி கேட்கின்றது. சின்னஞ்சிறு பிராயத்திலேயே சூரசங்காரம் போன்ற பெரிய வீரச் செயல்களை எல்லாம் செய்து புகழ் பெற்றுவிட்டான் இவர்கள் மைந்தன் முத்துக்குமரன். இனி இப்போது அவனுக்கு மணம்முடித்துப் பார்க்கவேண்டும் எனும் ஆவல் பெற்றோர் இருவர் உள்ளத்திலும் பொங்கி எழுந்துள்ளது. மெல்லிய இளம்பிடி போன்ற தேவ உலகத்துப் பெண்ணானவளும் தேவர்க்கு அதிபதியின் மகளுமான தெய்வயானை எனும் அணங்கை மணம்முடிக்க எண்ணம் கொண்டுள்ளனர்! அவ்வாறு அவளைக் குமரன் மணந்துகொள்வதற்கு உரிய மணமுரசு தான் ஒலிக்கின்றது என்று எண்ணி ஒருவருக்கொருவர் புன்முறுவல் கொண்டு உள்ளம் மகிழ்கின்றனராம்.
தேவர்கள், அவர்களது அரசன் இந்திரன் ஆகியோர் எப்போதும் பகைவர்கள் தம்மை வெருட்ட வருகின்றனர் என எண்ணியவாறே உள்ளனர். தேவசேனாபதியாகிய குமரப்பெருமான் அவர்களது குலத்தை யாங்கணும் காத்து வருகின்றவன். இச்சமயம் அத்தேவர்கள் செவியில் முருகனான இச்சிறுபிள்ளை முழக்கும் சிறுபறையொலி விழுகின்றது. உடனே அவர்கள் உற்சாகமடைந்து ஒரு திருவிழாவிற்கே ஏற்பாடு செய்ய முனைகின்றனராம். எதனால்? இன்னுமொரு பகைவனின் படைதனை செங்குருதி பாயும் போர்க்களத்தில் வென்று வாகைசூடிவிட்டான் அவன்; அவனுடைய வெற்றியைக் கொண்டாடும் வெற்றிமுரசின் ஒலியாக இவ்வொலி அவர்கள் செவிகளில் கேட்கின்றதாம்!
இவ்வாறு ஒரு திருநாட்டுக்கு உரிய கொடை, வீரம், மங்கலம் எனும் மூன்றுவிதமான முரசங்களும் இக்காவிரி நாட்டில் (புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீசுவரன் கோவிலில்) முழங்குகின்றன. ‘இந்நாட்டினை உடையவனும் முத்தமிழைப் பயில்கின்றவனுமாகிய பருதிப்பதியின் முருகவேளே, சிறுபறை முழக்குக,’ என மகிழ்வுமிகக் குமரகுருபரனார் முருகப்பெருமானைத் தாயின் நிலையில் நின்று பெருமிதம் பொங்க வேண்டுகிறார்.
வம்மினெனப் புலவோரை அழைத்திடு
வண்கொடை முரசமென
வடகலை தென்கலை யொடுபயி லும்கவி
வாணர்கள் ஓடிவர
அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்ற
அணங்கை மணம்புணரும்
அணிகிளர் மணமுரசென்ன எம் ஐயனொடு
அம்மை மனங்குளிர
தெம்முனை சாயச் சமர்விளை யாடிச்
செங்கள வேள்வி செயும்
திறன்முரசு என இமையவர் விழவயரச்
செழுநகர் வீதிதொறு
மும்முரசமும் அதிர் காவிரி நாடன்
முழக்குக சிறுபறையே
முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன்
முழக்குக சிறுபறையே5
தாரகாசுரன் முதலான அரக்கர்களுடன் முருகன் போரிடுகிறான்; முருகப்பெருமானின் படையின் நவகோடி வீரர்கள் அட்டகாசம் செய்தவாறு வருவதனால் நாற்றிசைகளும் பதறிக் கலங்குகின்றனவாம்; நாற்கோணமாக வியூகம் வகுத்து நான்குவிதப் படைகளும் அணிவகுத்து வருவதனால் கருங்கடல் கலங்கியது; பலவாறு தவமியற்றிப்பெற்ற வரங்களால் கிடைத்த கோடிகோடியான வெற்றிகள் அழிந்தொழியப் போவதனால் தாரகாசுரன் தன் மனம் கலங்கலானான்; தோல்வியையடையாத படைகளைக்கொண்ட மாயாபுரியைச் சேர்ந்த அவுணர்கள் இனி வரப்போகும் தோல்விக்கு அஞ்சித் தம் கண்கள் கலங்கி வருந்தினர். தீய மனத்தவர்களான அசுரர்களின் பெண்டிர் தமது அருமையான கருப்பம் கலங்குமாறு அச்சம் கொண்டனர். கோடிக்கணக்கில் வரும் அரக்கர்களின் கோடிக்கணக்கான உயிர்கள் அலறிடவும், அந்தகனான காலன் திசைகளில் நின்று கலங்கவும், சிவனுடைய அவதார வடிவமாக வந்துதித்துள்ள முருகவேளே! நீ உனது சிறுபறையை முழக்குவாயாக, என வேண்டுவதாக அமந்த பாடலிதுவாம்.
நவகோடிவீரர்வரு மட்டகாசத்தினா
னாற்றிசைகள் கெடிகலங்க
*தகசதுரங்கபத சதுரங்கவர்க்கத்தி
னாற்கருங் கடல்கலங்கத்
தவகோடியால்வந்த செயகோடிசாயவே
தாரகன் மனங்கலங்கச்
சாயாதபடையான மாயாபுரத்தவுணர்
தம்மிலே கண்கலங்க
அவகோடிபெருமவுணர் புணர்கோடிமடவார்க
ளரியகர்ப்பங் கலங்க
வருகோடிவருமசுர ருயிர்கோடியலறவே
யந்தகன் றிசைகலங்க
சிவகோடியவதார வடிவாகவருமுருக
சிறுபறை முழக்கியருளே 6
இப்போரின் காட்சிகள் குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழில் காட்சியாக்கப்பட்டுள்ளன.
முருகன் தமிழ்த்தெய்வமல்லவா? முருகனின் சிறுபறை ஒலிக்கேற்பப் புலவர்கள் தமிழ்மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐவகை இலக்கணங்களின் துணைகொண்டு சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி எனும் ஐம்பெரும் காப்பியங்களை அமைத்தனர். மேலும் தமிழின் பலதுறைகளையும் ஆராய்ந்து செய்யுட்களின் நடைவகையான க்ஷீரபாகம், திராக்ஷாபாகம், கதலீபாகம், இக்ஷுபாகம், நாளிகேரபாகம் முதலானவைகளைக் கொண்டும், ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி எனும் கவிதைவகைகளைக் கொண்டும் தமிழ்மொழியைத் துதித்து முழக்குகின்றனர். இதற்கியைய நீயும் உனது சிறுபறையை முழக்குவாயாக என வேண்டும் பாடல்.
தமிழ்க்கடவுளான குமரனைத் தமிழ்மொழியின் நயங்களுடன் இணைத்துப் போற்றும் இனியதொரு பழனிப்பிள்ளைத்தமிழ்ப் பாடலிதுவாகும்.
‘ஐவகை யிலக்கணமு மைங்காவி யத்துறையு
மாராய்ந்து பாகமுறையால்
ஆசுமது ரஞ்சித்ர வித்தார முஞ்சொலு
மருங்கவிஞர் துதிமுழக்க7‘ என்பன பாடல்வரிகள்.
‘பான் முந்திரிகை வாழைக் கனியாய்க்,
கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத்து- இளங்கனியாய்த்
தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே8,‘எனும் தமிழ்விடு தூதின் கவிதைவரிகளை இங்கு நினைவு கூரலாம்.
முருகனின் சிறுபறை முழக்கொலி ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களது சமயம் சார்ந்த ஒலியாகத் தோன்றுகின்றது: சங்கரனாம் சிவபிரானின் அன்பர்களான சைவர்களுக்கு அது அவர்களது சமய முழக்கமாகக் கேட்கின்றது; பாம்பணையில் வளரும் சங்கேந்திய திருமாலின் அன்பர்களுக்கு அது வைணவசமய முழக்கமாகக் கேட்கின்றது. புத்தனின் அடியார்களுக்கும் அருகப்பெருமானின் தொண்டர்களுக்கும் அவரவர் சமய முழக்கமாகக் கேட்கின்றது. தூய ஏசுநாதனின் தாமரைமலர்ப் பதங்களைப் பணியும் அடியவருக்கும் அல்லாவின் பக்தர்களுக்கும் தமது மதமுழக்கமாகவே இச்சிறுபறையொலி கேட்கின்றது.
‘சங்க ரன்பா லன்பு கொண்ட
சைவ ரோடு பாம்பணை
தங்கு சங்க ணிந்த வன்றன்
தாள்வ ணங்கு வைணவர்
………………………………………….
பங்க யம்ப ணைந்து ளோரும்
பகரு மல்லா பக்தரும்
பால னுன்மு ழக்கு தத்தம்
மதமு ழக்க மென் றிட9
…………………………………..’ என்பன பாடல் வரிகள்.
(குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- தி. சு. ஆறுமுகம் சிவதாசன்)
இப்பாடலின் உட்பொருள் மிக அருமையானது. ஒன்று, இப்பாடலில் அனைத்து சமயங்களும் ஒன்றே எனும் கருத்து தொக்கி நிற்கின்றது. அவை பரம்பொருள் எனும் பெருங்கடலில் நாம் சென்று சேர்வதற்கு இறைவனைக் குழந்தையாகக் கொண்டு நாம் செலுத்தும் அன்பும் ஒரு காரணமாகும்.
இவ்வாறு பல சுவைகளையும் இப்பாடல்களில் நாம் படித்து இன்புறலாம்.
(வளரும்)
———————–&—————-
பார்வை நூல்கள்:
- நடேச கவுண்டர்- எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
- சிதம்பர அடிகள்- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
- குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
- நடேச கவுண்டர்- திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்
- குமரகுருபரர்- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
- மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்- மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ்
- விசயகிரி வேலோச்சின்னவையன்- பழனிப் பிள்ளைத்தமிழ்
- தமிழ்விடு தூது
- தி. சு. ஆறுமுகம் சிவதாசன்- குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்.
அருமை.அற்புதம் .இன்று தான் இந்த இணையம் கண்டேன்.படித்தேன். பெரிதும் மகிழ்வுற்றேன். தொடா்ந்து இலக்கிய அமுதம் கிடைப்பதால் தொடா்ந்து உண்பேன். வாழ்க. வாழ்க.தொடரட்டும் பணி.