Photo-poetry-contest-230

-மேகலா இராமமூர்த்தி

திரு. முகமது ரபியின் ஒளிப்படக்கருவி பதிவாக்கித் தந்த இப்புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 230க்குத் தெரிவுசெய்து தந்தவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். ஒளிப்பட நிபுணர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள் சென்று சேரட்டும்!

இளைஞனின் நீலநிற வண்ணம் தீட்டிய கோலமுகம் சலனமற்றிருந்தாலும், அகத்துள் ஆயிரம் சிந்தனைகள் சிறகடித்துப் பறப்பதை உணர முடிகின்றது.

அரியகலை நிகழ்த்தும் இவ் இளைஞனின் வாழ்வைக் கவலைகள் தின்னத் தகா! பெரிய சாதனைகள் படைக்கும் ஆற்றலைக் காலம் இவனுக்கு அளிக்க வேண்டும். இவனைப் பெற்றோர் மனம் களிக்கவேண்டும்!

நீலவண்ணக் கண்ணனாய் ஆடிமுன்னே நின்றிருக்கும் இளைஞனின் இதய எண்ணங்களைக் கவிதைகளில் வடித்துத் தாருங்கள் எனக் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கிறேன்!

*****

”உள்ஒன்று வைத்துப் புறமொன்றுபேசி வயிறு வளர்க்கும் நாடகத்தை
உயிர்வாழ்க்கை எனக்கூறி உழன்று நாளும் நாம் திரிவதனை
எடுத்திங்கே காட்டுதம்மா என் மனக்கண்ணாடி” என்று  வஞ்சக மனிதரின் நெஞ்சகத்தை ஆடியில் காட்டுகிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

மனக்கண்ணாடி

வீண் படாடோபம் கொண்டு
வெற்று வார்த்தை பேசி
நல்லவனாய்
வல்லவனாய்
நாலும் தெரிந்த தூயவனாய்
நித்தம் நூறு வேடம் கொண்டு
சுயநலப் பச்சோந்தியாய்
பிணந்தின்னும் சாத்திரம் சொல்லித்
தன்னுருவே தனை வெறுக்க
உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசி
வயிறு வளர்க்கும் நாடகத்தை
உயிர் வாழ்க்கை எனக்கூறி
உழன்று நாளும் திரிவதனை
எடுத்திங்கே காட்டுதம்மா
என் மனக்கண்ணாடி!

அரிதாரம் தனை நீக்கித்
தன்மானம் கொண்டு
சுயபிம்பம் எதுவென்று
தெளியும் நாள் எந்நாளோ?

*****

”ஏடெடுத்துப் படித்ததில்லை; எழுத்தாணி பிடித்ததில்லை. எனினும், போடும் வேடம் எதிலும் இவன் பொய்யாய் நடித்ததில்லை. இன்றோ முடங்கிக்கிடக்கிறான்; விடியட்டும் இவன் வாழ்வு” என்று நன்மொழி நவில்கின்றார் திரு. யாழ். நிலா. பாஸ்கரன்.

ஓட்டைக் கீற்றின் ஒதுக்கின் மறைவில்
ஒருசாண் வயிற்றுக்குக் கஞ்சி வார்க்க
ஒய்யாரமாய் ஒப்பனை செய்கிறான்
ஓயாது உழைக்கும் ஓர் குப்பத்து ராசா

அரியாசனம் இல்லாமலே, அரண்மனைதான் செல்லாமலே
அரிதாரம் பூசிக்கிட்ட அவன்தானே இந்நாட்டு ராசா
அரங்கேற்றம் ஆகின்ற அரங்கத்தில் எந்நாளுமே
அரசாளும் மகராசன் இவன் வந்தாலே கரகோசந்தான்

தெருவோரம்தான் இவன் அரசாங்கம்
இரவானால்தான் நடந்தேறும் இவன் அதிகாரம்
தெரியாத கதையாடல் இங்கேது திரைவிலகி ஒளி
தெரிந்தால் இவனாலே உருவாகும் புதுஉலகம்!

ஆயிரம் வழிகள் அவனுக்கு எது அடைத்தாலும் திறந்திடுவான்
ஆயிரம் வலிகள் அவனுள்ளே ஆனாலும் சிரித்திருப்பான்
ஆயிரம் விழிகள் அவன்மீது அதனாலே மகிழ்ந்திருப்பான்
ஆயிரம் வாழ்த்துகள் அவைதரும் ஆனந்தவாழ்கை அவனுக்கு

ஏடு எடுத்து படித்ததில்லை எழுத்தாணி பிடித்ததில்லை ஆனாலும்
போடும் வேடம் எதிலும் பொய்யாய் நடித்ததில்லை
ஆடும் கூத்தில் எங்கும் மனம் தடுமாறவிட்டதில்லை
ஓடும் நதிபோல ஓயாமலே தாவும் இவன் ஆட்டம்

முடிசூடா மன்னன் இவன் இ‌ப்போது முடங்கிக் கிடக்கின்றான்
முன்எப்போதும் இல்லாமல் இப்போது மூழ்கித் தவிக்கின்றான்
முகச்சாயம் பூசாமல் பல மாதம் முடிந்து போனது – இனி
முடியட்டும் பகல் முளைக்கட்டும் இரவு விடியட்டும் இவன் வாழ்வு!

*****

”முகம்மூடிச் செல்லுமுன்னே மனிதன் முகமூடி அணிகின்றான்; ஒப்பனையே இல்லாத இவன் நாடகம் எப்போது முடியும்?” என்று வினா எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

அரிதாரம்…

பாரினில் நாம்
பார்க்கும் முகங்களில் பல
பொய்ப்பூச்சில் மிளிரும்
போலி முகங்கள்..

உண்மை முகங்களைக்
காட்டுவதில்லை ஒருவரும்,
முகம்மூடிச் செல்லுமுன்னே
மனிதன் பல
முகமூடிகளை மாட்டிக்கொள்கிறான்..

அரங்கத்தில் நடித்திடவும்
ஆலய வேண்டுதல்களிலும்
அரிதாரம் பூசுபவர்களை
அடையாளம் கண்டுகொள்ளலாம்
எளிதாக..

ஒப்பனையே இல்லாமல்
வேடம் போடும்
மனிதனின் நாடகம்
எப்போது முடியும்…!

*****

முகவண்ணம் தீட்டிய இளைஞனின் அகவெண்ணத்தைக் காட்ட முற்பட்டிருக்கின்ற, அவன் வருங்காலம் வளமாயிருக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கின்ற கவிஞர்பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

அழகு!

பொய்யாய்ப் போகும் மெய்க்குப்
போராடிச் செய்கிறோம்
அலங்காரம் தினம்
அழகாய்த் தோன்றிடவே
அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்
என்று சொன்னதாலோ?
போராடித் தினம்

அலங்காரம் செய்து
உள்ளிருக்கும் மிருகத்திற்கு
முகமூடி போட்டுப்
புன்னகை பூட்டிய
பொய்முகம் தேவையில்லை!
சிந்தனைகள் சீராய் இருந்தால்
அகத்தின் அழகு தானாய் மெய்ப்படும்!

அசுரனாய் வேடமிட்டு
மேடை ஏறி
வர்ணஜாலம் காட்டிடவே
வர்ணம் பூசி
வந்து நின்றேன்
கண்ணாடியின் முன்னாடி!
தொண்டை வறண்டு

வாய்கிழிய வசனம் பேசி
அழிந்து போகும்
அசுரனாய் நான்
சூரஸம்ஹாரம் நாடகத்தில்!
பாராட்ட யாருமில்லை

பார்த்து ரசிக்கக் கூட்டமில்லை
அழிந்து போகும் இக்கலையால்
நஷ்டம் வந்து
நலிந்து போனேன்!
என்னுள் இருக்கும்
பசியெனும் மிருகம்தனைப்
போக்கிடவே
வந்த இந்த வாய்ப்பில்
அசுரனாய் முகமூடி அணிந்து
மேடை ஏறி அழிந்து போனேன்!
நிலைமாறும் இவ்வுலகில்
என் நிலை மாறும்
என்ற நம்பிக்கையில்!

கரகோஷம் மட்டும்
கலையை வளர்க்க உதவாது
கலையை அறிந்த
உயிரோட்டமாய் வாழும்
அந்த உயிர்களைக்
காத்து நிற்க
உதவிக்கரம் நீட்டுவோம்!
இப்புவியெங்கும்
நம் கலை அழகைப்
போற்றிடச் செய்வோம்!

நிகழ்த்துகலை (performing arts) வடிவங்களில் ஒன்றான நயமிகு கூத்துக் கலை, திரைப்படத்துறையின் அசுர வளர்ச்சியால், இப்போது நாடுவார் யாருமின்றி அழிவின் விளிம்பில் வாடிக்கொண்டிருக்கின்றது. நலிந்துவரும் இக்கலைக்கு உயிர்கொடுப்பதும், தம் வாழ்வாதாரத்துக்கு இக்கலையையே நம்பியிருக்கும் கலைஞர்களை ஆதரித்துப் புரப்பதுமே மக்கள் செய்யவேண்டிய உடனடிச் செயல்களாகும் என்பதைத் தம் கவிதையில் இதயம் தொடும் வகையில் பதிவுசெய்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்

  1. மிக்க நன்றி என் பதிவை சிறந்த
    கவிதையாய் தேர்வு செய்தமைக்கு
    பங்குபெற்ற அணைத்து
    கவிஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.