படக்கவிதைப் போட்டி – 231

Camera Info : Nikon Corpotaion,Nikon D700+Sigma 70-300
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (10.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
அம்மையப்பனாய்…
அன்னை தந்தை சேர்ந்தேதான்
அண்ணன் உருவம் ஆனதுவோ,
அன்பைக் கொடுப்பதில் அன்னையாக
ஆசையாய் வளர்ப்பதில் தந்தையாக,
என்றும் காப்பான் நன்றாக
என்னும் உறுதி தங்கைக்கே,
இன்னும் என்ன பயமென்றே
இறுக்கிப் பிடித்தாள் அண்ணனையே…!
செண்பக ஜெகதீசன்…
பிஞ்சு (ெ)நஞ்சு
கனியமுதுக் குழந்தையென்றால்
கள்ளமில்லா புன் சிரிப்பும்
வெள்ளைத் தும்பைப்பூ மனதும்
கண்முன்னே நின்றதொரு காலமம்மா-அது
கனவாகப் போனதிந்த காலமம்மா
வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சில்
சூதானமாய் இருக்கச் சொல்லி
நஞ்சதனைக் கலந்திட்டோம்
வெம்பியிங்கு நிற்க வைத்தோம்வெள்ளாவியில் விதைநெல்லால் பொங்கல் வைத்தோம்
இன்ப துன்பமெல்லாமே
இரு நொடியில் மறந்துவிடும்
கள்ளமில்லா நெஞ்சதனில்
தந்திரத்தைப் புகுத்திவிட்டோம்
நம்பிக்கையின்மையை நிலைக்கவிட்டோம்
பஞ்சு போன்ற நெஞ்சதனை
போட்டி பல போடச் சொல்லி
ஊடகச் சோதியிலே
எரிபானையாக்கி விட்டோம்
ஏய்த்துப் பிழைப்பதைக் கற்க வைத்தோம்
அறிவு வளர்க்கும்
கல்வியதை கற்பிக்காமல்
வெற்று வெற்றியே குறிக்கோளாய்
முற்றிபோகச் செய்துவிட்டோம்
முளைக்குருத்தை முற்செடியாய் ஆக்கிவிட்டோம்
பெற்றோர் தம் பேராசையால்
பிஞ்சினிலே பழுத்து
சுயநல ஆழ்துளையில் வீழ்ந்து
மறைந்ததுவே அவர்தம் குழந்தைத் தனம் – இதில்
வெற்று கொண்டாட்டமே மழலையர் தினம்
அன்பே ஆருயிரே
மொட்டு விட்ட மலரே!
இருள் சூழ்ந்திருக்க கண்டு பயந்தாயோ
இருளென சூழ்ந்திருக்கும்
இன்னல்கள் கண்டு பயந்தாயோ
வெளிச்சம் தரும் விளக்காய் நான்
அணையாமல் என்னை காக்கும்
உதவும் கரங்களாய் நீ!
அஞ்சாதே, அச்சம் தவிர், நெஞ்சம் நிமிர்
இரவென்று இருள் சூழ்ந்த வானம்
வெளிச்சம் எனும் விடியல் வந்து
நீளமாய் நிறம் மாறும்
உறங்கி இருக்கும் இயற்கை கூட
விழித்தெழும் விடியலாய்
வெளிச்சம் வந்ததும்.
குஞ்சுகளை இறகுகளில் மறைத்து
காத்து நிற்கும் தாய் பறவை
இறகுகளாய் நான் இருப்பேன்
உன் இறகுகளை விரித்து பறக்க முயன்றிடு
அந்த வானம் உனக்கு வசப்படும்.
உயர பறக்கும் பட்டத்திற்கு
உதவிடும் வாலாய் நூலாய்
உதவிடுவேன் உனக்கு நான்
உயரப்பறந்திடவே
நம்பிக்கையோடு பற்றிக்கொள்
உன்னை ஏற்றிவிடும் ஏணியாய்
நான் இருப்பேன்.
அம்மை அப்பன் இன்றி
இங்கு யாரும் பிறப்பதில்லை
உதவிக்கரம் நீட்டும் உருவங்களில்
அண்ணனாய், தந்தையாய், தாயாய்,
தோழனாய், தோழியாய், துணையாய்
அன்பை பொழியும் உறவுகளை கண்டால்
அனாதைகள் அழிந்து
அன்பும் பாசமும் பொழியும்
உள்ளங்களால் இவ்வுலகம் நிறைந்திடுமே!
உறவாய் மாறி உள்ளங்கள் போற்றிடுமே!