ஐயப்பன் காவியம் – 9
-இலந்தை சு. இராமசாமி
இந்திரலோகப் படலம் – தொடர்ச்சி
அழகெனில் இஃதே அழகெனச் சொல்லும்
அற்புத மோகினி யாகப்
பழகிய வள்போல் படபட விழிகள்
பரிவுடன் அரக்கனை நோக்கக்
குழைவொடும் ஈர்க்கும் குறுநகை யோடும்
குறுகினள் அரக்கனின் பக்கம்
ஒழுகிடும் வாயன் பத்மனும் பார்த்தான்
உடன்கரம் பற்றிடப் போனான் 122
“இருயிரு, பத்மா, ஆடலில் சிறந்தோன்
என்பதை முன்னரே அறிவேன்
ஒருபெரும் போட்டி ஆடுவோம் நாமே
உன்னையும் வென்றிடு வேன்நான்
சரிவர ஆடி என்னைநீ வென்றால்
தந்திடுவேன் உனக் கெனையே
பருவரை யதனைச் சரிசமப் படுத்து
பந்தயம் தொடங்குவம் என்றாள் 123
மரத்தினை ஒடித்தான், மலைகளைப் பொடித்தான்
வடிவுடன் தளத்தினை அமைத்தான்
தரத்தினில் மிகுந்த தனையவள் வெல்லச்
சாத்தியம் இலையென நினைந்தான
கரத்தினைத் தட்டித் தொடங்கெனச் சொன்னான்
கால்களை தூக்கிக் குதித்தான்
வரத்தினைப் பெற்ற செருக்கினால் பத்மன்
மகிழ்ச்சியின் எல்லையில் நின்றான் 124
*
கால்களால் குதித்தாள் – இரு
கைகளால் நொடித்தாள்- விழி
காட்டியே நடித்தாள்-பின்
மேல்குதிப்பதும் கீழ்குதிப்பதும்
வேகமே பதித்தாள்- தரை
மீதிலே மிதித்தாள் 125
கால்களால் குதித்தான் – மரம்
கைகளால் பொடித்தான்-கனல்
கக்கியே குடித்தான்- பின்
மேல்குதிப்பதும் கீழ்க் குதிப்பதும்
வேகமே சிதைத்தான் – தரை
வீழ்ந்திடப் புதைத்தான் 126
முத்திரை விரித்தாள்- மிக
மோகமாய்ச் சிரித்தாள்- விழி
மூடியே பிரித்தாள்-பின்
சித்திரந்தனை ஆட்டுவித்தாய்ச்
சீக்கிரம் அசைத்தாள்- இசை
தேனென இசைத்தாள் 127
முத்திரை விரித்தான் – பயம்
மூட்டிடச் சிரித்தான்-மலை
மோட்டினைச் சரித்தான்-பின்
தத்தரத்தரத் தத்தரத்தரத்
தாளமே பிடித்தான் பல்லைச்
சத்தமாய்க் கடித்தான் 128
*
வேகம் வேகம் வேகம் வேகம் வேகமெடுத்தாள்- தன்
வித்தகங்கள் யாவும் காட்டி வீசி நடித்தாள்
பாகம் பாகம் பாகம் பாகம் ஆட்டி நடித்தாள்- காணும்
பக்க மெல்லாம் தானிருக்கும் தோற்றம் கொடுத்தாள் 129
வேகம் வேகம் வேகம் வேகம் வேகமெடுத்தான் -தன்
வித்தகங்கள் யாவும் காட்டி விந்தை தொடுத்தான்
பாகம் பாகம் பாகம் ஆட்டிப் பல்லை இளித்தான் – தன்
பக்கத்தில்தான் வெற்றியென்று பாடிக் களித்தான் 130
வளைந்தாள் விழுந்தாள் எழுந்தாள் குழைந்தாள்
இடுப்பில் கரம் வைத்தாள்
நெளிந்தாள் துளைந்தாள், குனிந்தாள் நிமிர்ந்தாள்
சிரத்தில் கரம் வைத்தாள் 131
வளைந்தான் விழுந்தான் எழுந்தான் குழைந்தான்
இடுப்பில் கரம் வைத்தான்
நெளிந்தான் துளைந்தான், குனிந்தான் நிமிர்ந்தான்
சிரத்தில் கரம் வைத்தான் 132
*
சடபட படபட சிரமும் வெடித்தது
தரையோ அவனுடல் எடையில் பொடித்தது
கடகட கடகட அகிலம் சிரித்தது
கடுமன அரக்கரின் கருவம் மரித்தது
எடுமெடு மெடுமென திசைகள் அதிர்ந்தன
எரிகல் பலப்பல இறங்கி உதிர்ந்தன
படபடபடபடவென அமரர் இறங்கினர்
பரவசம் மிகமிகக் களியில் கிறங்கினர் 133
-தொடரும்