-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள்

76.பொருள் செயல்வகை

குறள் 751:

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்

தகுதியில்லாதவங்களக் கூட ஒசத்தி மதிக்க வைக்கது அவுக கிட்ட குவிஞ்சு கெடக்க  பணம் தான். 

குறள் 752:

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

பணம் இல்லாதவுகள எல்லாரும் எளக்காரம் பண்ணுவாங்க. பணம் இருந்திச்சின்னா பெருமப் படுத்துவாங்க. 

குறள் 753:

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

பொருள் னு சொல்லுத அணையா விளக்கு நெனச்ச எடத்துக்குப்போயி எல்லா எடஞ்சலையும் தீத்து வச்சிரும். 

குறள் 754:

அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

நல்ல வழியில கெடுதல் செய்யாம சம்பாதிச்ச பணம் தான் ஒருத்தனுக்கு அறநெறியக் காட்டி சந்தோசத்தக் கொடுக்கும்.

குறள் 755:

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்

பொறத்தியார் மேல இரக்கம் காட்டாம, நேசம் இல்லாம சேத்த பணத்த வச்சிக்கிட்டு சந்தோசப்படாம அது கெடுதலத்தான் கொடுக்கும்னு நெனச்சி விட்டுப்போடணும். 

குறள் 756:

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்

வரியும், சுங்கமும், செயிச்ச பகையாளி நாடு கட்டுத கப்பமும் ராசாவோட பொருள்கள் ஆவும். 

குறள் 757:

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

அன்புங்குத ஆத்தா பெத்த அருள் ங்குத பச்சப்புள்ள பொருள் னு சொல்லுத வளர்ப்புத்தாயல வளரக் கூடியது.

குறள் 758:

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை

தன் கையில பணத்த வச்சிக்கிட்டு ஒரு காரியத்த தொடங்குதது மலை மேல ஏறி நின்னுக்கிட்டு பதனமா யானைச் சண்ட பாக்குதது போல ஆவும். 

குறள் 759:

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில்

பொருள சம்பாதிச்சி சேத்துவச்சிக்கிடணும். ஏம்னா பகையாளியோட அகராதிய (செருக்கு) அழிக்குத கூரிய அரிவாள் கணக்கா இருக்கது அதுஒண்ணுதான்.

குறள் 760:

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு

நல்ல வழியில நெறைய பணம் சேத்தவங்களுக்கு மத்த அறமும், இன்பமும் சுளுவாக் கெடச்சிப்போடும். 

(அடுத்தாப்லையும் வரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.