சேக்கிழார் பா நயம் – 52 (பஞ்சின்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
—————————————————-
இயற்கை நிகழ்ச்சிகளில் கதிரவன் மறைதலும் , இரவின் தோற்றமும், நிலவு வெளிப்படுதலும் இலக்கியங்களில் தனித்த இடம் பெறும் . கதிரவன் மறைவுக்குக் காரணம் கற்பித்து உருவகமும் தற்குறிப்பேற்றமும் கலந்த பாடலை அடுத்து, அதனோடு ஒப்பிடும்வகையில் வானின் இருள் நீண்டு நெடுநேரம் விளங்கியதைக் கவிஞர் பாடுகிறார்.
இத்தகைய பாடல்களில் தாம் விரும்பும் தத்துவங்களை எடுத்துக்கூறி விளக்குவது கவிஞர்களின் உத்தியாகும். இராமாயணத்தில் வஞ்சனை அரக்கர்தம் வடிவைப் போலவும், அவர்களின் நெஞ்சைப்போலவும் நீலவானம் இருண்டது என்பதைக்கம்பர்,
நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர்
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின்
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின்
நெஞ்சினின் இருண்டது நீல வானமே
என்று பாடுகிறார். மேலும் கூனியின் உரையாகிய நஞ்சு பாய்ந்தமையால் கலங்கிய கைகேயி தன் சிந்தை போல, சிவந்த வானம் இருண்டது என்பதை,
அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம்
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன்
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய
சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே
என்றும் பாடுகிறார். அடுத்து இராமனின் கார்வண்ண மேனியைப் பார்த்த பெண்களின் கண்கள் கருத்தனவோ?, இப்பெண்களின் மைதீட்டிய கண்களின் பார்வையால் இராமன் மேனி கருத்ததோ? என்பதைக் கம்பர்,
பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம்
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம்
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம்
அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால்
என்றும் பாடுகிறார். போர்க்களத்தில் இரவில் இராமனைக் காண வந்த வீடணன், இராமன் தனியே இரவில் நிற்பதைக் கண்ட கதிரவன் வருந்தி மேலை மலையில் புகுந்தான் என்பதைக் கம்பர் ,
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும்
சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான்
என்றும் , பின்னர் அவ்வானம் வேதம் நான்கும் இல்லை என்றும், மனுமுதல் சாத்திரங்கள் இல்லை என்றும், வேள்விகள் உண்மை இல்லை என்றும், தெய்வத்தன்மை வாய்ந்த வேதியர் தம் ஈடுபாடும் இல்லை என்றும் கூறி, தாமரைக் கையை உடைய ஆதிமுதல்வனாகிய திருமாலைப் பரம்பொருள் என்று வணங்காத பேதையர் உள்ளம் போல இருண்டது என்பதைக் கம்பர் ,
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும்
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே
ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்
என்றும் பாடுகிறார். இவ்வகையில் சேக்கிழார் பெருந்தகை, ‘’பஞ்சு போன்ற மெல்லிய பாதம் கொண்ட வேசையர் உள்ளமும், வஞ்சனை உடைய மக்களின் கொடிய பாவமும், சிவப்பரம்பொருளின் ஐந்தெழுத்தின் தியான முறைகளை அறியாதோரின் நெஞ்சும் போல , எல்லாத் திசையிலும் நீண்ட வானம் இருண்டது’’ எனப் பாடுகிறார். அந்தப் பாடலை இங்கே படித்து உணர்வோம்.
‘’பஞ்சின் மெல்அடிப் பாவையர் உள்ளமும் ,
வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன்
அஞ்சு எழுத்தும் உணரா அறிவிலோர்
நெஞ்சும் என்ன இருண்டது நீலவான்’’
இப்பாடலில் இருமனப் பெண்டிராகிய பாவையர்தம் தன்னலம் மிக்க உள்ளம் இருண்டே விளங்கும் என்ற தனி மனிதத் தீமையும்,
வஞ்சனை செய்து வாழுவோர் செய்யும் பாவங்கள் என்னும் சமுதாயத் தீமையும்,
(வஞ்ச மாக்கள்தம் வல்வினையும் – வல்வினைமாக்கள் வஞ்சமும் என்று உம்மையைப் பிரித்துக் கூட்டி உரைத்தலுமாம். முன் வினையின் பயனாகி வரும் வஞ்சம் மேன்மேலும் வினையை விளைத்தலால் வஞ்ச மாக்கள் வல்வினை என்றார். “வினையின் வந்தது வினைக்கு விளையாது“ என்றதும் காண்க. “வஞ்ச வல்வினைக் கறுப்பறு மனத்தடியார்கள்“ என்று பின்னர்க் கூறுவதுங் காண்க. வஞ்சமுடைமையால் மக்கள் மாக்கள் எனப்பெற்றனர். ஐயறிவுடைய மிருகங்கள் போன்றார் என்பது குறிப்பு. விலக்கலாகாமையின் வல்வினை என்றார் என்ற விளக்கமும் காண்க).
சிவபெருமானின் மந்திரமாகிய ஐந்தெழுத்தின் பெருமையையும், அவற்றை உச்சரிக்கும் வைகரி, பைசந்தி, சூக்குமை ஆகிய மூவகைப் பாராயண முறைகளை அறிந்து அவற்றை ஓதாதவரின் உள்ளம் அறியாமை உடையது என்னும் ஆன்மிகத் தீமையும்
(அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் – அரன் -ஆன்மாக்களுடைய பாசங்களை அரிப்பவன். அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் – அஞ்செழுத்தை உணரப் பெறாத மடவோர் என்க. “மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம் தன்னி லொன்று வல் லாரையுஞ் சாரலே“ என்று இமயன்றூதர்க்கு அப்பர் பெருமான் இட்ட ஆணையும் காண்க. “விதி எண்ணு மஞ்செழுத்தே“ என்றபடி எழுத்து அறிவினுள்ளே உணரப் பெறுவ தொன்றாதலின் உணரா அறிவிலோர் என்றார்.
இத்திருவைந்தெழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் – பொருளும் – உள்ளீடும் -நிற்குமுறை-ஓதுமுறைமுதலியனவும்உண்டு.இதனை
“எவ்வெவ்கோட்படுபொருளும்“ என்ற குரு தோத்திரத்திலே குறித்தருளினர் எமது மாதவச்சிவஞான முனிவர் அஞ்செழுத்தின் வகையும் பெருமைகளும் நூல்களிற்பேசப்பெறுவன. சைவாசாரியார்பாற் கேட்கத்தக்கன. “நாயோட்டு மந்திரம்“என்று அதன் பெயர்தானும் சொல்லலாகாது என அறிவிப்பர் திருமூலதேவர்.மூவர் முதலிகள் கருணையினாற் பஞ்சாக்கரப் பதிகங்களை அருளினர். மணிவாசகப் பெருமானார் “நமச்சிவாய வாழ்க“, “நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்“ முதலிய திருவாசகங்களில் பஞ்சாக்கரங்களை அருளினர் என்பர்.)
ஆகிய மூன்றும் இருளடைந்த உள்ளத்தைக் காட்டுவன, என்று சேக்கிழார் பாடுகிறார்.
‘’நமச்சிவாய வாழ்க’’ என்று தொடக்கத்திலும், ‘’யானேயோ தவம் செய்தேன் , சிவாய நம எனப்பெற்றேன் ‘’ என்று இடையிலும்
இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நம சிவ என்னும்
அயன் தனை யோரும் பதம் அது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம் என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே
நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற
பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ
சிவாயநம என சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமை அது ஆக்கி
சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே
மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே
ஆயும் சிவாயநம மசிவாயந
ஆயும் நமசிவாய யநமசிவா
ஆயுமே வாயநமசி எனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே
என்றெல்லாம் பல வகைகளிலும் பக்குவத்திற்கேற்ப அஞ்செழுத்து ஓதுதல் சிவஞானியர் வழக்கங்களை சேக்கிழார் சுவாமிகள் உரைத்தருளுகின்றார். அகவிளக்காகி இருள் கெடுப்பது ஐந்தெழுத்தாதலின் அது ஏற்றப்பெறாத நெஞ்சு இருண்டிருக்கும் என்பது குறிப்பு. இவற்றை அறிந்து, உணர்ந்து கொண்டோர் வாழ்க்கை ஒளி பெறும். என்பதை இப்பாடல் நயமாக விளக்குகிறது.
(தொடரும்…