அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

சத்யா எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (27.10.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 229

  1. கதிர் விழித்த இளங்காலை வேளையிலே
    கதிர் விளைந்த சோளக்கெல்லை எல்லையிலே
    கதிர் கெய்ய வந்த கான் கிளிக்கூட்டத்தில் என்விழிக்
    கதிர் கண்டுவியந்த கண்கொள்ளாக் காட்சியிது

    பச்சை பசுங்கிளிகள், பறந்து திறியும்
    பசுஞ்சோலை பூங்கிளிகள் இரண்டும்
    இச்சை கொண்டு இணைந்திருக்கும் இன்பக் காட்சியிது
    இணையில்லா இயற்கையின் ஆட்சி இது

    செம்பவள மூக்கழகில் செயலிலந்தேன்
    செழும்மஞ்சள் கழுத்தழகில் மனமிழந்தேன்
    சேர்ந்த இரு விழியின் இணையழகில்
    சொந்த நினைவினை நானிழந்தேன்

    விழித்தெழுந்தேன் விளைந்த கற்பனை
    மொழி விடுத்து வியனுலகில் நடைமுறையில்
    மெலிந்த பல்லுயிர்களுக்கு விளையும் கேடெண்ணி
    அழிந்த அவற்றின் கூடெண்ணி ஐயுற்றேன்

    வஞ்சனையாய் வலைவிரித்து சிறை பிடித்து
    வாயினிலே சூடுவைத்து வாலறுத்து
    வண்ணப் பசுஞ்சிறகை வன்முறையாய் வெட்டிவிடும்
    வஞ்சகர் கையிலினி சிக்காது விழிப்புடனே பறந்திடுவீர்

    முக்காலம் அறிந்திடவும் முயற்சிக்கா வாழ்வின்
    முழுப்பயனும் தெரிந்திடவும் மூளையில்லா
    மூடர்சிலர் இக்காலத்தலும் உங்களை கூண்டிலிட்டு
    மூக்காலே சீட்டெடுக்க முடுக்கிடுவார் சிக்காதிர்

    மாமதுரை அரசாளும் அங்கயற்கன்னி
    மங்கை மீனாட்சி திருத்தேளில் அமர்ந்திருக்கும்
    மங்கள கிளிகள் உங்கள் அருளாலே மாநிலத்தில்
    மங்காமல் பசுஞ்சூழல் தழைத்தோங்கட்டும்
    யாழ். நிலா. பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com
    noyyal.blogspot.in

  2. அந்த வாழ்க்கை…

    கிளியே கிளியே ஆசைக் கிளியே
    கேளடி சேதி கருத்தில் கொள்ள,
    எளிதாய் மனிதனை நம்பி விடாதே
    ஏய்த்தே உன்னைக் கூண்டி லடைப்பான்,
    வெளியே விடுவான் சீட்டை எடுக்க
    வெற்றுரை பேசிக் காசு பறிப்பான்,
    அளிப்பான் ஒருநெல் அடைப்பான் மீண்டும்
    அடிமை வாழ்க்கை வேண்டாம் பறந்திடு…!

    செண்பக ஜெகதீசன்…

  3. அஞ்சுவதுபோல் தெரிகிறதே
    பஞ்சவர்ணக்கிளிகளே
    கொஞ்சம் சிறகு விரித்து
    பறக்க முற்படுங்கள்
    சொன்னதையே சொல்லிச் சொல்லி
    முடங்கிய நாட்கள் போதும்
    விரிந்த வானம் அழைக்கிறது
    பரந்த இயற்கை எழிலின்
    ரகசியத்தை அறிந்திட வாருங்கள்
    இந்த மானுடம் உங்களை
    பந்தமுடன் கூண்டிலடைக்கக் காத்திருக்கிறது
    கவனமுடன் இருங்கள்
    கனிதரும் மரங்கள் சாலையெங்கும்
    சாமரம் வீசியபடி இருக்கின்றனவே….
    சற்று மேலெழுந்து பறந்தபடி வாருங்கள்
    இயற்கையோடு கைகோர்ப்போம்…!

    ……கா.ந.கல்யாணசுந்தரம்

  4. கிளி பேச்சை கேட்க வா….

    பெண் கிளிகளை
    கண்டு ரசிக்கும் கண்களில்
    பஞ்சவர்ண கிளிகள் ரெண்டு
    பாட்டெழுத வேண்டி நின்றதுவோ?

    அழகாய் நம்மை பார்க்கும் கிளிகளில்
    ஆண் எது பெண் எது என்று தெரியாது
    உடன் இருப்பது துணையா என்றும் தெரியாது
    இருந்தும் ஜோடிக்கிளியாய் தான் உமை பார்க்கும் ஊர் முழுதும்

    சுதந்திரம் என்று ஆணும் பெண்ணும்
    சுற்றி திரிய
    அழகால் அரங்கேறும் ஆபத்துகளை கண்டு பயந்திடும் மனம்
    கரையை கண்டு பயந்து
    நிலவின் அழகை ரசிக்க மறந்திடும் தினம்

    கிளியை பார்ப்பது அரிது
    சுதந்திரமாய் பார்ப்பது அதிலும் அரிது
    இறகை விரித்து பறந்தால்
    இந்த வானமும் வசப்படும் உனக்கு
    இருந்தும் இமைக்காமல்
    எமை கண்டு வியப்பது ஏனோ?

    இணையம் என்று இங்கு வந்து
    இவ்வுலகை சுருக்கி
    உள்ளங்கையில் வைத்தது
    கைபேசி எனும் கருவியில்
    அறிந்து கற்றவை யாவும் இன்று
    கண்டு கற்கிறோம்
    கணணியாய் மாறிய கைபேசியில்
    இதற்கு அடிமையாய் ஆகி
    இறகுகளை விரிக்க மறந்தோம் இயற்கையை ரசிக்க மறந்தோம்
    கூண்டுக்கிளியாய் மாறி
    இணையவளைகளில் சிக்கிய
    எமை கண்டு வியந்தாயோ?

  5. கோலக்கிளியே
    என் கண்ணம்மா…
    எனை காணாதிருப்பதும்
    ஏனம்மா…
    கொஞ்சும் மொழியின்
    செல்லம்மா…
    எனை நீ தேடாக்
    காரணம் சொல்லம்மா…

    நீ உண்ணும் கனியை
    நான் கடித்துவிட்டேனா…

    அம்பு கொண்டு நின்
    உயிர் வதைத்தேனா……

    உனை பிடித்து உன்
    இறகுடைத்தேனா…

    வேண்டாம் போ
    என விரட்டியடித்தேனா….

    இல்லை
    உன்னை
    கூண்டுச்சிறையில்
    அடைத்தேனா…

    பிறகு ஏன்
    இன்னும் நீ
    வரவில்லை…
    என் விழியில் உன்
    நிறம் பதிக்கவில்லை…
    என் செவியில் உன்
    இசை கேட்கவில்லை…
    என் நெஞ்சில் உன்
    நினைவசையவில்லை..

    உண்ணா நோன்பு
    நானிருந்து பல
    கனியை உனக்காய்
    வளர்த்தேனே…

    நீ தின்னும் அழகை
    தேன்மதுரம் என
    தேவதை போல்
    உனை ரசித்தேனே…

    உண்ணும் போது
    மிடறுவிழுங்கிக்கொள்ள
    நன்னீரும் உனக்காய்
    வைத்தேனே…

    சப்தம் கேட்டால்
    நீ பறப்பாய்
    என்றே….
    என் மூச்சின்
    சப்தம் குறைத்தேனே…

    இத்தனை செய்தும்
    பாவம் என்றே…
    ஏழைக்கிறங்கி நீ
    வருவாயா…
    நித்தம் நித்தம்
    என் கலி தீர
    உனை காணும்
    இன்பம் தருவாயா…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.