-மேகலா இராமமூர்த்தி

Mr. Ayman bin Mubarak-இன் காமிரா வண்ணத்தில் உருவான இவ் ஒளிப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 228க்கு வழங்கியுள்ளார் திருமிகு. சாந்தி மாரியப்பன். ஒளிப்பட வித்தகர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

வாரிதியின் ஓரமாய்ச் சவாரி செய்யும் இந்தக் குதிரைச் சாரதியின் முகத்தில்தான் எத்தனை பெருமிதம்….போர்க்களத்தில் வாகை சூடித் திரும்பும் வெற்றிவீரன்போல!

இவ்வண்ணப்படம் பல எண்ண அலைகளை நம் கவிஞர்கள் மனத்தில் உருவாக்கியிருக்கும் என நினைக்கிறேன். அவ்வெண்ணங்களைக் குழைத்து அவர்கள் கட்டித்தரும் பா மாளிகையை நாமும் இரசித்துவருவோம் களிப்போடு!

*****

”உப்புக் காற்றில் ஊர்வலம் வரும் உப்பரிகையின் தேசிங்கு ராசா இவன்; ஊர்சுற்றிப் பார்க்கவரும் பயணிகளுக்கோ பரியேற்றம் காட்டும் பாமர சாரதி” என்று சிறுவனின் சீர்த்தி பேசுகின்றார் திரு. யாழ். நிலா. பாஸ்கரன்.

பரந்த நீலக்கடலின் ஓரத்தில்
பாயும் புரவியின் வேகத்தில்
விரிந்த கரைமணல் திடலில்
விரைந்தோடுதே வாழ்வின் சாகசம்!

கடலாட வருவோரை, காலார நடப்போரைக்
கவர்ந்திடவே காற்றாகப் பறந்திடும்
கரையோரக் குதிரைகள் – வாடிக்கை
காணாமல் போனாலும் காட்டுமே வேடிக்கை!

குட்டிக் குழந்தை முதல் குடுகுடு கிழவர் வரை
குதிரையில் ஏற்றி குதூகலமூட்டும் வித்தைக்காரன்
கூட்டம்தேடி ஓடும் நேரத்தில் வாழ்வை வெறுத்து
கடலில் மாய வருவோர் காக்கும் காவல் வீரன்!

உப்புக் காற்றில் ஊர்வலம் வரும்
உப்பரிகையின் தேசிங்கு ராசா – இவன்
ஊர்சுற்றிப் பார்க்க வரும் பயணிகளுக்கு
உற்சாகமாகப் பரியேற்றம் காட்டும் பாமர சாரதி!

வரும் போகும் விரிகடல் அலை போலே
வந்து போகும் வாடிக்கையர் தரும் வருவாயில்
வயிறு வளர்க்கும் வாழ்கைக்குத் தான் வறுமை
வற்றாத மகிழ்ச்சிதான் மனதுக்குள் என்றும்!

தள்ளிப்போடு துன்பத்தின் வலியைத்
துள்ளியோடு வெள்ளி மீனாகப் புது நம்பிக்கை விளையும்
தூங்காத இரவுகள் இனி நீங்கிவிடும்
நீங்காத துயரங்கள் இனி தூர விலகிவிடும்!

*****

”அலையில் மாட்டிடுவோர்க்கும் ஏனையோர்க்கும் உதவிடும் இப்புரவி வீரனின் அரும்பணி புவியுளோர் மனத்தில் நிலைத்திடும் என்றும்” என நற்சொல் நவில்கின்றார் திரு.செண்பக ஜெகதீசன்.

உதவிப் பவனி…

அலைகள் மோதும் கடற்கரையில்
அழகுப் புரவி மீதேறி
சிலைவரும் அம்பாய்ப் பாய்பவரின்
சிறப்புப் பணியைப் போற்றுகின்றேன்,
அலையில் மாட்டிடும் மனிதர்முதல்
அனைத்து பேர்க்கும் உதவுகின்றார்,
நிலையா உலகில் இவர்பணிதான்
நிலைத்து நிற்கும் மனங்களிலே…!

பரியேறிவரும் சிறுவனைப் பாராட்டிப் பாக்கள் புனைந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

குதிரைச் சவாரி!

தடைகள் அனைத்தும் தவிர்த்துத்
தளைகள் உடைத்து எறிந்து
சிறுமை அனைத்தும் களைந்து
சிறகுகள் விரித்திட வேண்டும்!

குறுநகை புரிந்து பின்னால்
குயுக்திகள் செய்யும் வீணர்
குறுக்கீடு தாண்டிப் பாய்ந்து
குவலயம் வென்றிட வேண்டும்!

சிறுமைகள் செய்திட விழையும்
குறுமதி செயல்கள் தவிர்த்து
நேர்பட நிமிர்ந்து செல்லும்
நெஞ்சுரம் பெற்றிட வேண்டும்!

மயக்கிடும் வீண்செயல்தனை மறைக்கும்
கண்ணியக் கடிவாளம் கொண்டு
கடமைக் குதிரை ஏறி – துன்பக்
கடலினைத் தாண்டிட வேண்டும்!

எதிர்ப்புகள் எத்தனை வந்தும்
உயிர்ப்புடன் அவற்றை வென்று
பொறுப்புடன் செயலது புரியும்
மனிதரைப் போற்றிட வேண்டும்!

கண்ணியக் கடிவாளம் பிடித்து, கடமைக் குதிரையேறி, வாழ்வில் குறுக்கிடும் துன்பக் கடலினைக் கடந்திட வழிசொல்லும் பொருள்பொதிந்த இக் கவிதையை யாத்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 228-இன் முடிவுகள்

  1. சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *