அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

Ayman bin Mubarak எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (20.10.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

3 thoughts on “படக்கவிதைப் போட்டி – 228

 1. குதிரைச் சவாரி

  தடைகள் அனைத்தும் தவிர்த்து

  தளைகள் உடைத்து எறிந்து

  சிறுமை அனைத்தும் களைந்து

  சிறகுகள் விரித்திட வேண்டும்

  குறுநகை புரிந்து பின்னால்

  குயுக்திகள் செய்யும் வீணர்

  குறுக்கீடு தாண்டிப் பாய்ந்து

  குவலயம் வென்றிட வேண்டும்

  சிறுமைகள் செய்திட விழையும்

  குறுமதி செயல்கள் தவிர்த்து

  நேர்பட நிமிர்ந்து செல்லும்

  நெஞ்சுரம் பெற்றிட வேண்டும்

  மயக்கிடும் வீண்செயல்தனை மறைக்கும்

  கண்ணிய கடிவாளம் கொண்டு

  கடமைக் குதிரை ஏறி – துன்பக்

  கடலினைத் தாண்டிட வேண்டும்

  எதிர்ப்புகள் எத்தனை வந்தும்

  உயிர்ப்புடன் அவற்றை வென்று

  பொறுப்புடன் செயலது புரியும்

  மனிதரைப் போற்றிட வேண்டும்

 2. பரந்த நீலக்கடலின் ஓரத்தில்
  பாயும் புரவியின் வேகத்தில்
  விரிந்த கரை மணல் திடலில்
  விரைந்தோடுதே வாழ்வின் சாகசம்

  கடலாட வருவோரை, காலார நடப்போரை
  கவர்ந்திடவே காற்றாகப் பறந்திடும்
  கரையோர குதிரைகள்- வாடிக்கை
  காணாமல் போனாலும் காட்டுமே வேடிக்கை

  குட்டிக் குழந்தை முதல் குடுகுடு கிழவர் வரை
  குதிரையில் ஏற்றி குதுகலமூட்டும் வித்தைக்காரன்
  கூட்டம் தேடி ஓடும் நேரத்தில் வாழ்வை வெறுத்து
  கடலில் மாய வருவோர் காக்கும் காவல் வீரன்

  உப்புக் காற்றின் ஊர்வலம் வரும்
  உப்பரிகையின் தேசிங்கு ராசா- இவன்
  ஊர்சுற்றிப் பார்க்க வரும் பயணிகளுக்கு
  உற்சாகமாக பரியேற்றம் காட்டும் பாமர சாரதி

  வரும் போகும் விரிகடல் அலை போலே
  வந்து போகும் வாடிக்கையர் தரும் வருவாயில்
  வயிறு வளர்க்கும் வாழ்கைக்கு தான் வறுமை
  வற்றாத மகிழ்ச்சி தான் மனதுக்குள் என்றும்

  தள்ளிப்போடு துன்பத்தின் வலியை
  துள்ளியோடு வெள்ளி மீனாக புது நம்பிக்கை விளையும்
  தூங்காத இரவுகள் இனி நீங்கிவிடும்
  நீங்காத துயரங்கள் இனி தூர விலகிவிடும்

  யாழ். நிலா. பாஸ்கரன்
  ஓலப்பாளையம்
  கரூர்- 639136
  9789739679

 3. உதவிப் பவனி…

  அலைகள் மோதும் கடற்கரையில்
  அழகுப் புரவி மீதேறி
  சிலைவரும் அம்பாய்ப் பாய்பவரின்
  சிறப்புப் பணியைப் போற்றுகின்றேன்,
  அலையில் மாட்டிடும் மனிதர்முதல்
  அனைத்து பேர்க்கும் உதவுகின்றார்,
  நிலையா உலகில் இவர்பணிதான்
  நிலைத்து நிற்கும் மனங்களிலே…!

  செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க