valluvar

-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் 

71.குறிப்பறிதல்

குறள் 701:

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி

ஒருத்தங்க பேச வாயத் தொறக்காம இருக்கயிலேயே அவுக மனசுக்குள்ளார என்ன நெனைக்காங்கனு அறிஞ்சுக்கிடுதவன் ஒலகத்துக்கு பூட்டுத நகநட்டு ஆவான். 

குறள் 702:

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

அடுத்தவன் மனசுக்குள்ளார இருக்கத ஐயமில்லாம கண்டுக்கிடுதவன தெய்வத்துக்கு சமமா மதிக்கணும். 

குறள் 703:

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்

ஒருத்தரொட மொகத்தப் பாத்தே மனசுல இருக்கத தெரிஞ்சுக்கிடுத தெறம இருக்கவங்கள எதுனாச்சும் சோலியக் கொடுத்தாவது தொணையா வச்சிக்கிடணும். 

குறள் 704:

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு

ஒருத்தன் மனசுல இருக்கத அவன் சொல்லாமலே தெரிஞ்சுக்கிடுத தெறம உள்ளவங்க மூஞ்சி,கை,கால்  (உறுப்புக்களால்) பாக்க ஒரேமாரி தோணினாலும் அறிவால வித்தியாசப்படுவாக. 

குறள் 705:

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்

அடுத்தவனோட மொகமும் கண்ணும் காட்டுத ஜாடைய (குறிப்ப) புரிஞ்சுக்க முடியாமப் போவுத சமயம் ஒசந்த உறுப்பான கண்ணு இருந்து என்ன பிரயோசனம்? 

குறள் 706:

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

அடுத்தாப்ல இருக்குதத தனக்குள்ளார காட்டுத பளிங்கு கணக்கா ஒருத்தன் மனசுல உள்ளத அவன் மொகம் காட்டிப்போடும். 

குறள் 707:

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்

ஒருத்தன் எதுமேலயும் ஆசவச்சாலோ வெறுத்தாலோ முந்திக்கிட்டு அதக் காட்டிக்கொடுத்துப் போடுத மொகத்த விட அறிவாளி வேற ஏதும் உண்டா? 

குறள் 708:

முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்

தன் மனசுல இருக்கத மொகத்தப்பாத்து அறிஞ்சுக்கிடுதவர தொணையா வச்சிருக்கவன் அவர் மொகத்துக்கு நேரா நின்னாப் போதும். 

குறள் 709:

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்

கண் பார்வைல இருக்க வித்தியாசத்த புரிஞ்சிக்கிடுதவங்க அடுத்தவங்களோட கண்ணப் பாத்தே அவுக மனசுல இருக்கது நட்பா பகையான்னு தெரிஞ்சுக்கிடுவாங்க.  

குறள் 710:

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற

நாங்க நுண் அறிவுடையவர்கள் னு சொல்லிக்கிடுதவங்க மத்தவங்க மனசுல இருக்கத தெரிஞ்சுக்கிடுதக்கு ஒபயோகிக்க சாதனம் என்னன்னு பாத்தா அவுக கண்ணு தான். 

(அடுத்தாப்லையும் வரும்…) 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.