-மேகலா இராமமூர்த்தி

திரு. முகம்மது ரபி எடுத்திருக்கும் ஒளிப்படமிது! வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இதனைத் தேர்வுசெய்து இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். ஒளி ஓவியர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

சிந்தனைகளை முகத்தில் தேக்கி, குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் இச்சிறுவனின் அகத்தைப் படம்பிடிக்க முயலுங்கள் என்று வல்லமையின் சொல்லோவியர்களை நல்வாழ்த்துக்கூறி அழைக்கின்றேன்.

*****

”ஓரமாய் ஒண்டிடும் ஒளிக்கதிரே! ஊராரின் உள்ளமதில் இடம்பிடிக்க ஓயாதுழைப்போம்! அடிமைத் தளையறுத்துச் சுடர்விடுவோம்! என்று நம்பிக்கை விதைகளைச் சிறுவனின் மனத்தில் விதைக்கிறார் திருமிகு. எம். புஷ்ப ரெஜினா.

ஒடுக்கப்பட்டோம் ஒளிவீசுவோம்!

ஓலைக்குடிசையில்
ஓட்டை ஒடசலுடன்
ஓரமாக ஒண்டிடும்
ஓர் ஒளிக்கதிர்….
ஓராயிரம் கனவுகளுடன்
ஓயாத உழைப்புடனே
ஓவியமென
ஓய்ந்திருப்போனே…
ஓடமாய் மனம் அலைந்திட
ஒன்றுக்கும் வழியின்றியே
ஒப்பற்ற நிலைக்கு
ஒளிவிளக்காகிடவே….
ஓரறிவுயிர்களும் ஒடுங்கிட
ஒடுக்கினோர்கள்
ஒழிந்துபோயினர்
எல்லாம் ஒளிமயமே…
ஓயாது உழைத்திடுவோம்
ஊராரின் உள்ளமதில்
ஓங்கி உயர்ந்திடவே
ஓசோனில் கால்பதிப்போம்…
வாராய் என் இளஞ்சிங்கமே,
ஒளிவிளக்காவோம் அடிமைத் தளைஅறுத்து,
ஆர்வமுடன் நிலைநாட்டுவோம்!

*****

”பள்ளிசென்று மீண்ட பிள்ளை பெற்றோரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான்! விரைந்து வரட்டும் பெற்றோரும் பொற்காலமும்!” என்று வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

நம்பிக்கையில்…

பள்ளிக்குச் சென்ற
பிள்ளை வந்துவிட்டான்,
பணிக்குச் சென்ற
பெற்றோர் வரவில்லை..

மதிய உணவைப்
பள்ளி பார்த்துக்கொண்டது,
இரவு உணவுக்கு
வழிதேடிச் சென்றவர்கள்
வரவில்லை இன்னும்..

வாசலில் காத்திருக்கிறான்
வாடியே பிள்ளை
நம்பிக்கையில்,
வரட்டும் சீக்கிரம்-
இப்போது பெற்றோர்,
நாளை நல்வாழ்வு…!

*****

”வாழ்க்கையாம் வட்டத்திற்குள் வறுமை என்றும் நிரந்தரமில்லை; முடக்கிய கால் நிமிர்த்தி மடக்கிய கரம் தளர்த்தித் தடம் பதிக்க வா!” என்று சிறுவனுக்கு அறைகூவல் விடுக்கிறார் திருமிகு. சத்யா இரத்தினசாமி.

வழு இல்லா வாழாநிலை போல் ஓர் நெறி முறைக்குள் நிற்பவனாய்…… வாயில் தாண்ட வாஞ்சையின்றி வையம் நோக்கி இருப்பதேனோ.?

வீட்டினுள்ளே காவல் காக்க வேறுயிர் ஏதும் இருக்கிறதோ? – அன்றி வெறும் வயிறு பசி தணிக்க வரும் நுந்தை வழி நோக்கி அமர்ந்தனையோ….?

எதுவாகில் இருந்திடினும் – நீ இளைத்துப் போய் இருத்தல் வேண்டாம்…. வாழ்க்கையாம் வட்டத்திற்குள் வறுமை மட்டும் நிரந்தரமா ?

நின் விழி தான் உரைக்கின்றதே இந்நிலை வென்றிடலாம் என்று…….எனவே முடக்கிய கால் நிமிர்த்தி மடக்கிய கரம் தளர்த்தி முனைப்போடு தடம் பதித்து முன்னே வா செழுஞ்சுடரே…….!

*****

சிறுவனின் பார்வையில் தெரிந்த சோர்வைப் போக்கிச் சுறுசுறுப்பூட்டும் வகையில் அருமருந்தெனக் கவிதைகள் அளித்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

*****

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

கீற்றுக் குடிசையின் கிழக்குச் சூரியன்
நேற்று இன்றின் நீங்காத் துயரை – நாளை
மாற்றும் நம்பிக்கையின் மின்னல் கீற்று!
காற்றுப் புகா இடத்திலும் பாயும் ஓளியின் நாற்று!

இடிந்த சுவரை எண்ணி
இடிந்திடாதே தம்பி!
இழந்ததை எண்ணிக் கலங்காதே,
இருப்பதைக் கொண்டு போராடு!

அள்ளக் குறையாத அறிவூறும்
அட்சய பாத்திரம் தான்
அருகில் இருப்பவை எல்லாம்
அள்ளிப் பருகு; ஆளுமை கொள்!

கீழகழ்ந்து தேடாமல் இருந்தவரை வைகையின்
கீழடி கூட நம் காலடிக்குக் கீழே தானே கிடந்தது?
கிளறித் தோண்டிய பின்னே தான் அது தமிழனின்
கிட்டாப் பெருந்தனம் எனப் புரிந்தது!

தலைநிமிர் தடை தகர்!
தளையறு தடம் பதி!
விளையட்டும் புது விதி!
வீழட்டும் பழமையின் சதி!

கண்ணீர் சிந்தியொரு பயனுமில்லை
காலத்தைப் பூட்டிட யார் கையிலும் சாவி இல்லை!
கடினம் ஆயினும் கனமாய் அடி
கதவுகள் திறக்கும் கவலைகள் பறக்கும்!

வீணாய்க் கிடந்தால் வீழ்ச்சிதான் விரைந்தெழு!
விண்ணளக்கும் உன் உழைப்பால்
மண்குடிசை வாசலையும் வா
பொன் பளிங்கு மாளிகையாக்கலாம்!

”கீழகழ்ந்து தேடாமல் இருந்தவரை வைகையின் கீழடிகூட நம் காலடியில்தான் கிடந்தது. கிளறித் தோண்டிய பின்புதான் அது தமிழனின் கிட்டாப் பெருந்தனம் எனப் புரிந்தது. ஆதலால் தலைநிமிர்! தடை தகர்! பழைமைச் சதியை வீழ்த்திப் புதுமை விதியை நிலைநிறுத்து! உழைப்பால் உயர்ந்துநில்!” என்று சிறுவனுக்கு நம்பிக்கை உரமேற்றும் நல்லுரைகளைச் சுமந்திருக்கும் இக்கவிதையை யாத்த திரு. யாழ். நிலா. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *