சேக்கிழார் பாடல் நயம் – 102 (அரசியல்)

திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

பாடல் :

அரசியல்  ஆயத்   தார்க்கும்   அழிவுறும்   காதலார்க்கும்
விரவிய  செய்கை தன்னை   விளம்புவார்  ‘’ விதியினாலே
பரவிய  திருநீற்   றன்பு    பாதுகாத்து   உய்ப்பீர் ‘’  என்று
புரவலர்   மன்றுள்  ஆடும்   பொற்கழல்   நீழல்   புக்கார்.

உரை :

தமக்குப் பின் அரசியல் நடத்தும் முறைமையில் வரும் இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம்மிடத்துக் காதலால் மனம் வருந்தும் தேவிமார், ஏனைச் சுற்றத்தார் முதலியோர்க்கும், பொருந்திய செய்தியைக் கூறுவாராகி “விதியினாலே பரவப்பெற்ற திருநீற்றினிடத்து வைத்த அன்பினையே சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு செலுத்தக் கடவீர்“ என்று உறுதி மொழிக் கட்டளையைக் கூறியபின், அரசர், திருமன்றிலே அருட் கூத்தாடு கின்ற பூங்கழலணிந்த எடுத்த திருவடியைச் சிந்தித்திருந்தனர்.

அடியார் பணி முதலிலும், அரசியலாகிய நாட்டின் காரியம் அதற்குப் பின்னரும், குடும்பப் பொருள் இறுதியிலும் வைக்கற்பாலன என்பது ஆசிரியர் கருத்துமாகும். அரசியல் ஆயத்தாரும் காதலாரும் கொண்டொழுகும்படி அரசர் பணித்ததும் தம் கொள்கையாகிய வேடமே சிந்தித்த லொன்றேயாம் என்பதும் குறிக்க.

அரசியல் ஆயத்தார் -. அரசும் அங்கமுமாகிய யாவும் இதனுள் அடங்கும். இவற்றின் விரிவு திருக்குறள் முதலிய நீதி நூல்களுட் காண்க.

அழிவுறுங் காதலார்– தம்மிடத்து வைத்த காதலாற் பரிந்து, தம் நிலைக்கழிந்து, இத்தகைய தலைவரைப் பிரிய நேரிடுகின்றதே யென்று கவலைப்பட்டு அழியும் தேவிமார், மக்கள் முதலிய சுற்றத்தார். ஆயத்தார் – மக்கள் முதலிய சுற்றத்தார் என்றும், காதலார் மந்திரி முதலாயினார் என்று முரைப்பாருமுண்டு.

விரவிய செய்கை – நடந்த செய்தியையும், இனி நடைபெற வேண்டுவதாய்ப் பொருந்திய செய்தியையும் என்க. விளம்புவார் – எதிர்கால வினையாலணையும் பெயர். சொல்வாராகி. என்று என்பதனோடு முடிந்தது. விதியினாலே – இங்கு நிகழ்ந்த செய்தி விதியின் காரணமாய் விளைந்தது. விதி – “திருவேடத்தை அரனெனத் தொழுக“ என்று ஆகமம் விதித்த விதி. இதனால் இதுவரை நேர்ந்த செய்தி முற்றும் அடங்க ஒரு சொல்லிற் சுருக்கி அறிவித்ததனோடு அமைதியும் கூறியவாறு. நிகழ்ந்தது என்ற வினைமுற்றுத் தொக்கி நின்றது. நியதிப்படி என்றலுமாம். விதியினாலே பரவிய என்று கூட்டி விதிப்படி இதுவரை நான்போற்றி வந்த – என்றுரைத்தலுமாம். நான்- எழுவாய் வருவிக்க. பரவிய – வேதங்களாலே பரவப்பெற்ற  திருநீற்றன்பு பாதுகாத்து உய்ப்பீர் – திருநீறும் ஏனைத் திருவேடமும் எனுமிவற்றில் வைத்த அன்பின் ஒழுக்கத்தைச் சோர்வுபடாமல் காத்து உலகத்திற் செலுத்தி வருவீர்களாக! இதுவே இந்த, முடிவுறும் நிலையில் நான் உங்களுக்குச் சொல்லத்தக்க உறுதிப் பொருள். இஃதொன்றனையே ஆயத்தார், காதலார் என்னும் இருதிறத்தார்க்கும் அரசர் உறுதி கூறியவாறு காண்க. இஃதொன்றினைக் குறிக்கோளாகக் கொண்டொழுகுதலே அனைவர்க்கும் திருவருளின்பம் தரும் என்பது நாயனாரது துணிபாம்.  வேடத்தில்  தலைமை பெற்ற நீற்றினைச் சொல்லவே ஏனைய வேடங்களும் உடன்கொள்ளப் பெறும்.

என்று – என்று சொல்லி, இவ்வாறு தனது கடமைகள் யாவும் நிறைவேற்றி முடித்துக் கொண்டு, அதன்பின், இறுதியாக. புரவலர் – காத்தலின் வல்லவர் – அரசர். இங்கு இப்பெயராற் கூறியது மேற்கூறிய பற்பலவகைக் கடமைகளையும் பாதுகாக்கும் வழியிற் காத்துநின்றமை குறித்ததாம்.

மன்றுளாடும் பூங்கழல் – சிற்றம்பலத்திலே அருட்கூத்தாடும் அம்பலவாணனது அழகிய கழலணிந்த திருவடி. ஆடும் கழல்  என்றமையால் எடுத்தபாதம் என்க. இங்கு அரசர் தாம் ஆன்மார்த்தமாய்க் கொண்டு தினமும் பூசித்து வந்த சிற்றம்பலவாணன் திருவடிகளைச் சிந்தித்தார் என்க.

முன்னர் “தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமா னன்பர்க் காவன வாகும்“ (470) என்றதும், வரும் பாட்டில் “அவர்முன் றம்மைக் கண்டவா றெதிரே நின்று காட்சிதந் தருளி“ என்பதும் காண்க. இவ்வாறே கழறிற்றறிவார் நாயனார் சிற்றம்பலவாணனைத் தினமும் பூசித்துத் திருச்சிலம்பொலி கேட்ட சரிதமும் இங்கு நினைவு கூர்க

இவ்வுடல் விட்டு உயிர் பிரிந்துபோம் பொழுது இறைவனை நினைத்தல் வேண்டும் சாகும்   காலத்து வரும் எண்ணப்படியே ஒருவன் பின்னர் ஆகின்றான் என்பர்.

“புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைமே லுந்தி, அலமந்த போதா“கிய அப்போது, தனது மரணவேதனையினாலும், அறிவு மயக்கத்தானும், தன்பிரிவு பற்றித் தன் முன்னின்று, தொடர்புடைய பிறர்படுகின்ற துன்பங் காண்பதாலும், பிறவாற்றாலும் இது எளிதிற் கூடுவதன்று. இதுபற்றியே ஒருவன் இறக்குங்காலத்துச் சூழ இருப்பவர் சிந்தனை முகத்திற்றேக்கி அழுதல் முதலியன செய்யாது தேவாரந் திருவாசக முதலிய அருட்பாக்களை ஓதிக்கொண்டிருத்தல் வேண்டுமென்று பெரியோர் கூறுவர். ஆயின் இவ்வாறு ஆவி பிரியும்போது இறைவனை நினைக்கப்பெறுதல் நெடுங்காலம இறைவனை எண்ணி யெண்ணி வேண்டிக்கொண்டதன் பலனாகவே இறைவன் அருளினாற் பெற வேண்டியதொன்றா மல்லது எவரும் அக்காலத்துத் தாமாகச் செய்துகொள்ளத்தக்கதன்று; பிறர்தர வருவது மன்று. இதன் அருமையும் பெருமையும்பற்றியன்றே, கந்தை மிகையாங் கருத்துடையராய், முழுத்துறவுவேந்தராய், இறைவனிடத்துத் தம்பொருட்டு எவ்வரமும்வேண்டாதவராய் உள்ள எமது பரமாசாரிய ஞானமூர்த்திகளாகிய அப்பர் பெருமானும் இவ்வொரு வரத்தினையே பலவிடத்தும் இறைவன்பால் மன்றாடி வேண்டினார்.

இப்பாடலில்  ‘’விதியினாலே   பரவிய  திருநீற்றன்பு பாதுகாத்து  உய்ப்பீர்!’’  என்று  மெய்ப்பொருள் நாயனார்  கூறியது  மக்களின் மனோநிலையை  அரசன் நன்கறிந்தவன் என்பதைக் காட்டுகின்றது,  திருநீறு பூசிய ஒருவன் அரசரைக்  கொன்றான்  என்பது கேட்ட மக்கள் திருநீறு பூசிய அடியார்கள் பாலும் , அவர்கள் பூசிக்கொண்ட   திருநீற்றின்  பாலும்  குற்றம் கண்டு அத்தகையோர்  அனைவரையும்  வெகுண்டு கொல்லலாம்  என்று எண்ணுகிறான்.  அவ்வாறே  முத்த நாதனை  மக்கள் கொள்ள  முற்பட்டார்கள்.

ஆம், இந்திரா காந்தியைக்  கொன்றவன்  சீக்கியன் என்பதனால்  மக்கள் சீக்கியரைத் தவறாகக் கருதிப் பல இடங்களில் அவர்களை விரட்டிக் கொன்றனர், அதனால் சீக்கியர்கள் தலைப்பாகையை  எடுத்து, தாடியையும் மழித்துக்  கொண்டார்கள்  என்பதை நாம் நேரில் கண்டோம்;

அத்துடன்  ராஜீவ் காந்தியை இலங்கைத் தமிழர் குண்டுகளால்  கொன்ற பின்னர் தமிழ்  மக்களையும். தமிழ் நாட்டையும்  சந்தேகக் கண் கொண்டு பார்த்து, குறிப்பாக  இலங்கை மக்கள்  இகழ்ந்தனர்.

இத்தகைய சூழல் வரக்கூடாது என்று எண்ணிய   மெய்ப்பொருள் நாயனார்  ‘’விதியினாலே  பரவிய   திருநீற்றின்’’  பால்  பற்றுக் கொண்டு அடியார்களை  இகழாது, பாதுகாத்து,   உய்வடையச்  செய்வீர் என்றார்,  இது நாயனாரின் தொலைநோக்குப் பார்வையைப் புலப் படுத்துகிறது. இவ்வண்ணம் செய்யுள் இயற்றிய   சேக்கிழாரின் பாட்டுத்திறமும்  இங்கே  புலனாகின்றது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.