Tag: விசாகை மனோகரன்

  • ஜன்னல் முகங்கள்

    -விசாகை மனோகரன்

     

    வீட்டில், தெருவைப் பார்த்த ஒரு ஜன்னல்

    அதில் ரசித்துப் பார்த்த பல முகங்கள்

    ஆண்,  பெண், கருப்பு, வெளுப்பு,

    சிறுவயது, வயதிற்கு வந்தது, வயது போனது

    இப்படி எத்தனையோ!!

     

    எத்தனை முகங்கள் எத்தனை பாவங்கள்

    அதில்  மனதுள் பதிந்தன சிலமுகங்கள்

    கற்பனைக்கு மேனி தந்து

    மனதின் வேலி உடைத்து

    இரவு தூக்கத்தை கெடுத்து

    கனவுகளில் வந்தன சில முகங்கள்.

     

    ஜன்னல் வழியே பார்த்து

    மனக் கதவை உடைத்து

    உள்ளே வந்து குடியேற

    அனுமதி கேட்கும் சில முகங்கள்

    அனுமதி இல்லாமலே வந்தமர்ந்த சில முகங்கள்.

     

    குழாயடிச்சண்டை,

    தெரு நாய்களின் கூட்டம்

    நரிக் குறவர்களின் கூச்சல்,

    பிச்சைக்காரர்களில் கூவல்

    அனைத்துமே அந்த ஜன்னல் வழி பார்த்தவையே

    ஆனால் இவை எதுவும் பாதிக்காத என் மனதை

    அந்த சில முகங்கள் மட்டும் ஏன் பாதித்தன?

     

    நேரிலே பலமுகங்களைப்  பார்த்தாலும்

    அந்த ஜன்னல் முகங்கள் மட்டும் ஏன் வேறுபடுகின்றன

    அந்தப் பார்வையின் நோக்கில் மட்டும் ஏன் நெருடல்கள்

     

    புரியவில்லை, புரிந்தால் சொல்லுங்களேன் !!

     

    Share
  • பதில்??

    -விசாகை மனோகரன் 

     

    ஏங்க, நாளைக்கு எத்தன மணிக்கு ட்ரெயின்

    பொறப்படும்?

     

    எத்தன தடவ தான் கேட்ப மாலதி? 6மணிக்கு.

     

    காலேலயா சாயிந்தரமா?

     

    சாயிந்தரம்தான். போதும் நீ உன் அம்மா வீட்டுக்கு

    போறதும் போதும், என் உயிர வாங்குறதும் போதும்.

     

    ஏன் சொல்ல மாட்டீங்க? உங்க அம்மா மாதிரி,

    எங்க அம்மாவும் மூணு மாசத்துகொருதரம் வந்து,

    ஆறு மாசமா தங்கறாங்க? உயிர வாங்கறேனாமே

    உயிர. போயி ஒரு மாசம் இருந்தா தெரியும்

    சாப்பாட்டுக்கு திண்டாடறது.

     

    சாப்பாட்டுக்கா, நானா, உன்ன விட பிரமாதமா சமைப்பேன் நான், திண்டாடறதாமே திண்டாடறது.

     

    பாக்கலாம் பாக்கலாம், மூணாவது நாளே போன் பண்ணி வான்னு கூப்பிடுங்க, அப்ப சொல்றேன்.

     

    அடுத்த நாள் ட்ரேயின் ஏத்தி விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். அடுப்பில் பால் காயிச்சியது இருந்தது. காபி டிக்காக்ஷனும் இருந்தது. சூடா ஒரு காபி கலந்து குடித்தேன். ஒன்பது மணிக்கு அவள் செய்து வைத்து விட்டு போயிருந்த சப்பாத்தியும் கறியும் சாப்பிட்டுவிட்டு, தூங்கினேன்.

     

    காலையில் எழுந்து, காபி கலந்து குடித்துவிட்டு, குளித்தேன். டிபன் என்ன பண்ணலாம் யோசித்து, பிரட்டு ஆம்லேட் பண்ணி சாப்பிட்டேன். லஞ்சு வெளியே. வந்து நைட்டுக்கு சமைச்சுக்கலாம்.

     

    சாப்பாட்டுக்கு திண்டாடறதாமே, அதுவும் நான். பிரவீனா கொக்கா?

     

    மனதிற்குள் எண்ணம் ஓட, மத்தியானம் சரவணபவனில் சாப்பிட்டேன். அமிர்தம். வீட்டுக்கு வரும் போது மணி ஆறு. காபி கலந்து குடித்துவிட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி, என்ன சமைக்கலாம்னு யோசித்தேன்.

     

    கிச்சன்ல என்ன காய் இருக்கிறதென்று தேடினேன். உருளைக்கிழங்கும் வெங்காயமும் தான் கிடைத்தது. சரி நாளைக்கு கறிகாய் வாங்கனும்னு மனதிற்குள் சொல்லிக்கிட்டு, சாதம் வடித்து, வெங்காய சாம்பார் வைத்து, உருளை ஃப்ரய் பண்ணினேன். சாப்பிட்டேன். சரவணபவனைவிட அமிர்தம்.

     

    ‘சூப்பர் பிரவீன்’. சமையல்னா இதுதான் சமையல். சாப்பாட்டுக்கு திண்டாடறதாமே, அதுவும் நான். பிரவீனா கொக்கா?

     

    அவள் ஊருக்கு போய் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. அன்றைக்கு சனிக்கிழமை. ஜாலியாக நைட் ஷோ சினிமா போயிவிட்டு வந்து படுத்துவிட்டு, காலையில் எழுந்திரிக்கும் போது மணி பத்து. அடடா பாத்திரமெல்லாம் கழுவாம அப்படியே இருந்திச்சு. வேலக்காரிக்கு போன் பண்ணினேன்.

     

    “சார், நேத்து வந்தேன் வீடு பூட்டியிருந்திச்சு, இப்ப காலேல வந்து பெல் அடிச்சேன் அடிச்சேன் யாரும் திறக்கல.  சாயிந்தரம் நான் பேமிலியாட வெளிய போறேன், நாளைக்கு காலையில வரேன்”.

     

    வேலைக்காரியிடம் பேசவா முடியும். எல்லா வேலையும் முடியும் போது மணி ஒன்று. பசி வயிற்றைக் கிள்ளியது. இனிமேல் சமைத்துச் சாப்பிட நேரமில்லை. பக்கத்தில இருக்கிற ஓட்டலுக்கு போய், சிக்கன் பிரியானியும், மட்டன் குருமாவும் சாப்பிட்டேன். சாயிந்தரம் வயிறு கடமுட ஆகி, தொல்லை செய்தது. வலியும் ஆரம்பித்துக் கடைசியில் தாங்க முடியாமல் டாக்டர் கிட்ட ஓடினேன். பிளட் டெஸ்ட், எக்ஸ்ரே, ஸ்க்கேன் எல்லாம் செய்து, புட் பாய்சன்னு சொல்லி, மருந்து மாத்திரை குடுத்தார். மெடிக்கல் ஷாப் பில் நூறு ரூபாய், டாக்டர் பீஸ் 300/=, டெஸ்டிங் பில் 1700/=. இனிமேல் சாப்பாடு வெறும் சாதம் மோர். தண்டம். இந்த மாலதியை யார் ஊருக்குப் போகச் சொன்னது?.

     

    நினைச்சேன் போன் அடிச்சது. அவளே தான்.

     

    என்னங்க எப்படி இருக்கீங்க? போனே பண்ணல.

     

    நான் நல்லாதான் இருக்கேன்.

     

    ஏங்க குரல் ஒரு மாதிரியா இருக்கு, உடம்புக்கு ஒண்ணும் இல்லியே?

     

    அதெல்லாம் ஒண்ணுமில்ல, ஏதோ புட் பாய்சனாம், டாக்டர் மாத்திர கொடுத்தாரு டாக்டர். அவ்வளவுதான்.

     

    என்னங்க ஆச்சு, நான் உடனே புறப்பட்டு வரேங்க.

     

    வேணாம் மாலதி, ஒன்ணுமில்ல, மாத்திர சாப்பிட்டா ஓகேவாயிரும்.

     

    இல்லங்க நான் ஒடனே புறப்படறேன்.

     

    சொன்னா கேட்கமாட்டே, உன் இஷ்டம்.

     

    காலையில்  ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டாள்.

     

    என்னங்க இது, ஒரு வாரத்தில இப்படி ஆயிட்டீங்க. இரண்டு நாள் ஆபீஸிக்கு லீவ் போட்டு, ரெஸ்ட் எடுங்க. நான் கஷாயம் வச்சு தரேன். எல்லாம் சரியாயிரும்.

     

    இரண்டு நாட்களில் உடல்நலம்  சரியாகி, ஆபிஸ் போக ஆரம்பித்தேன்.

     

    ஒரு வாரம் கழித்து மாலதி, எங்க, என்னமோ ‘நானா, சாப்பாட்டுக்கா, திண்டாடறதா’ அப்படின்னு சொன்னீங்க, அப்பறம் ஏங்க டாக்டருக்கு 2000/= செலவு, உடம்பு பிரச்சினை எல்லாம்?

     

    அது, அது, வந்து ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கல அவ்வளவுதான்.

     

    ‘என்ன விட நல்லா சமைப்பேன்னுட்டு, ஏங்க ஹோட்டல்ல சாப்பிட்டீங்க’ ?

     

    ‘சமைக்கத் தெரியாம எல்லாம் இல்லை. ஏன்னமோ அந்த ஹோட்டல்ல போய் மாட்டிக்கிட்டேன். அடுத்த தரம் பாரு, ஹோட்டல மாத்திரமாட்டேன்’ .

     

    மாலதி !!!!!!!!!!!!!!!!

    Share
  • நினைவுகள்

    விசாகை மனோகரன்

     

    கடந்து போன பாதையின்,
    வழி நடந்த வாழ்க்கையின்
    விபரீத விளையாட்டுகளை
    நினைத்துப் பார்க்கிறேன்.

    இளமைப் பிராயத்தின் இளரத்த வேகத்தில்
    செய்யக் கூடாது என் தெரிந்தும் செய்த தவறுகள்
    நிகழக்கூடாது என தெரிந்தும் நிகழ்ந்த நிகழ்வுகள்
    மாட்டோம் என நினைத்தும் புகைத்த பெட்டிகள்
    தொடவே கூடாது  என் நினைத்தும் திறந்த புட்டிகள்

    நண்பர்களை சந்தேகித்து, பகைவர்களை சம்பாதித்த
    விபரீதங்கள்
    கேளிக்கையை பிரதானமாக்கி செலவான நிமிடங்கள்
    நாணயங்கள்

    கேளிக்கையான வாழ்க்கையின் நடுவில் திடீர் மாற்றம்
    அனைத்தும் மாறிவிட்டன எனக்கென வந்த ஒருத்தியால்
    அன்று தாய் சொன்னதை கேட்க மனதில்லை
    இன்று இவள் சொல்வதை மறுக்க முடியவில்லை
    தாயால் முடியாதது தாரத்தால் முடியும்
    என இதைத் தான் சொன்னார்களோ?

    புகையை விட்டேன், மதுவையும் விட்டேன்
    நண்பர்கள் வந்தனர், நல்ல நட்பும் வந்தது,
    காரணம், அன்றே சொன்னானே  அந்த தெய்வக் கவிஞன்
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று
    நினைவலைகள் நீங்க மனதிற்குள் ஒரு பாட்டு கேட்டது
    நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்!!!

     

    படத்திற்க்கு நன்றி: கூகுள்

    Share
  • முதியோர் இல்லம்

     

     

    விசாகை மனோகரன்

     

     

    ஏரெடுத்துழைத்துமை வளர்த்தவர்களை
    ஏறெடுத்தும் பார்க்காத தலைமுறையே!
    ஏற்றிவிட்ட ஏனியை எட்டி உதைத்தவர்களே
    அந்நிலை உதைப்பவனுக்கே திரும்பாதா!
    தந்தை வழி நட என்பது சரியாயின்
    உங்கள் பிள்ளைகளும் எட்டி உதைப்பார்களே!

    முதியோர் இல்லம் அனாதைகளுக்கே
    அனாதை ஆக்கப்பட்டவர்களுக்காக இல்லயே!
    முற்றிலும் துறந்த முனிவனுக்கு துணை தேவையில்லை
    நமக்காக முழுவதும் துறந்தவருக்கு அது அவசியம்தானே!

    முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்
    பணம் கொடு, பொருள் கொடு, வசதிகொடு
    பெற்றவர்களையே கொடுக்காதே!!!!!!!!!!!!

    தவமாய் தவமிருந்து மெய்வலிக்கப்பெற்று
    கண்ணுக்குள் வைத்து வளர்த்து
    எங்கள் சந்தோஷத்தில் சந்தோஷித்த
    பெற்றோர்களே! உங்கள் இயல்பு
    நீங்கள் இதையும் மன்னிப்பீர்கள்
    தலை வணங்குகிறேன்.

    Share
  • ஞானோதயம்

    விசாகை மனோகரன்

    தமிழாசிரியர் சுந்தர வாத்தியாருக்கு அன்று  மனதே சரியில்லை. பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடலாமா என்று யோசித்தார். வேண்டாம், அங்கு சென்று குழந்தைகளின் பிஞ்சு முகங்களைப் பார்த்தாவது மனது சற்று  சாந்தமாகும். புறப்பட்டார். வழியில் பார்த்தவர்கள் எல்லோரும் வணங்கினார்கள். அதை ஏற்கும் மனநிலை இல்லை இன்று அவருக்கு. மனம் அன்று நடந்தவைகளை நினைத்துப் பார்த்தது.

    காலையில் அவர் தன் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர் ஒரு சாதாரண தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா. இரண்டு பெண்கள், ஒரு பையன் அவருக்கு. பையன் வெகு காலம் கழித்து, யாசித்து, தவமிருந்து பிறந்தவன். அவர் முதல் பெண் திருமணத்திற்கே தடுமாறிவிட்டார். சுந்தர வாத்தியார்  உதவியிருக்கா  விட் டால் இரண்டாவது பெண் கரையேறிருக்கவே மாட்டாள். பெரியவரும் தன் தம்பியை நினைத்துப் பார்க்காத நாளேயில்லை. பையனுக்கு ஒரு நல்ல இடத்தில் வேலையும் வாங்க உதவினார் தம்பி.

    இன்று காலை அண்ணன் வீட்டில் ஏதோ பேசுகையில், பையன் ஏதோ சொல்ல, சுந்தர வாத்தியாருக்கு கோபம் வந்து விட்டது. பேச்சு முற்றியது. கேட்டுக்கொண்டிருந்த அண்ணன், தன் பையனை ஏன் என்று  கேட்காமல், அவனைத் திட்ட வாத்தியாருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று கூறி வெளியே போகச்சொல்லி விட்டார்.

    தான் பார்க்க வளர்ந்த, வளர்த்த  பையன். அவனை சொல்ல உரிமையில்லையா? எவ்வளவு செய்திருக்கிறேன் அண்ணன் குடும்பத்திற்கு? வள்ளுவன் சொன்ன குறள் நினைவிற்கு வந்தது.

    “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு”  எவ்வளவு அழகாக, கருத்தாழத்துடன் கூறியிருக்கிறான்.

    யோசித்துக் கொண்டே பள்ளிக்கு வந்து, வகுப்பறைக்குச் சென்றார். அன்று பாடம்  திருக்குறள் பற்றியது. முதல் மாணவனைப் பார்த்து ஒரு குறள் சொல்லச் சொன்னார். அந்த பையன் உடனே சொன்னான்.

    “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று.”

    நெற்றியில் அடித்தது போலிருந்தது வாத்தியாருக்கு. தான் அண்ணனுக்குச் செய்தது பண உதவி தான். ஆனால் அண்ணன்! பிறந்த உடனேயே தாய், சில நாட்களிலேயே தந்தை, இருவரையும் இழந்த நிலையில் தான் படிக்காமல், தன்னை படிக்க வைத்தவர். தான் அவருக்கு உதவும் நிலையை தந்தவரே அவர்தானே. அப்படியிருக்க அவர் சொன்ன வார்த்தைகளை நான் உடனே மறந்திருக்க வேண்டாமா?

    அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சுந்தர வாத்தியார் தன் அண்ணனைப் பார்க்க!!!!!!!!!!!

    படத்திற்கு நன்றி : கூகுள்

    Share
  • யாரைக் கேட்டு இங்கு வந்தாய்?

     

    விசாகை மனோகரன்

    விண்வெளியின் முற்றத்தினுள்ளே 

    நட்சத்திரக் கோலங்களின் வழியே

    தவழ்ந்துவரும் முழுநிலவே!

    யாரைக் கேட்டு இங்கு வந்தாய்?

     

    நீ இருக்க நான் பார்த்தது

    அவள் முகம்தானே!

    அவள் அனுமதித்தே வந்தாயா

    இல்லை அழவைத்து வந்தாயா?

     

    அவளிடத்தில் இல்லையேல் நீ அழகில்லை

    உன் அழகே அவள் தானே

    நீயில்லாமல் அவளைப் பார்க்கலாம்

    அவளில்லாமல் உன்னை….

     

    அழகிற்கு மறுபெயர் அவள்

    அவளுக்கு பின் தானே நீ!

    நீ தரும் வெளிச்சமே அவள்தானே

    அவளில்லாமல் நீ இல்லை,

    ஏன்! 

    நானும் இல்லை.

    படத்திற்கு நன்றி

    Share
  • அவன்

    விசாகை மனோகரன்
     

    வாழ்க்கை ஓடத்தின் ஓட்டத்தில்

    வாழ்ந்து கொண்டிருக்கும் வேடத்தில்

    நிரந்தரம் என்பது ஏதடா?

    அதை நினைத்து மாய்வது ஏனடா?

     

    ஆட்டத்தின் நாயகன் அவன்

    ஆட்டுவிப்பனும் அவன்

    ஆடாது நிற்க முயன்றால்

    ஆட்டாது விடுவானோ அவன்

     

    ஆட்டுவதும் அவனே

    அரவணைப்பதும் அவனே

    அவன் ஆடாத ஆட்டமா?

    அவன் இல்லாமல் நாமா?

     எல்லாம் அவனே!!!!!!!!

     

     படத்துக்கு நன்றி

    http://www.puppetryindia.org/page1/page7/page7.html

     

    Share