விசாகை மனோகரன்

 

 

ஏரெடுத்துழைத்துமை வளர்த்தவர்களை
ஏறெடுத்தும் பார்க்காத தலைமுறையே!
ஏற்றிவிட்ட ஏனியை எட்டி உதைத்தவர்களே
அந்நிலை உதைப்பவனுக்கே திரும்பாதா!
தந்தை வழி நட என்பது சரியாயின்
உங்கள் பிள்ளைகளும் எட்டி உதைப்பார்களே!

முதியோர் இல்லம் அனாதைகளுக்கே
அனாதை ஆக்கப்பட்டவர்களுக்காக இல்லயே!
முற்றிலும் துறந்த முனிவனுக்கு துணை தேவையில்லை
நமக்காக முழுவதும் துறந்தவருக்கு அது அவசியம்தானே!

முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்
பணம் கொடு, பொருள் கொடு, வசதிகொடு
பெற்றவர்களையே கொடுக்காதே!!!!!!!!!!!!

தவமாய் தவமிருந்து மெய்வலிக்கப்பெற்று
கண்ணுக்குள் வைத்து வளர்த்து
எங்கள் சந்தோஷத்தில் சந்தோஷித்த
பெற்றோர்களே! உங்கள் இயல்பு
நீங்கள் இதையும் மன்னிப்பீர்கள்
தலை வணங்குகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on “முதியோர் இல்லம்

  1. மிக அருமையான உண்மை சொல்லும் கவிதை திரு மனோகரன் அவர்களே.   ஆனால், முதியோர் இல்லங்கள் இக்கால கட்டங்களில் ஒரு அவசியமான நன்மை ஆகிக்கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.   இன்னும் எதிர்காலத்தில், முதியோர் இல்லம் என்பது பெரிய அளவில் ஒரு வியாபாரமாகவும், தர்ம சிந்தனை உள்ளவர்கள் ஆதரவில் சில இடங்களில் கட்டணமில்லா காப்பகங்களாகவும் பெருகும் தவிர்க்க முடியாத வாய்ப்புக்களும் உள்ளன.   . விரும்பினாலும் பெற்றோர்களை அழைத்துச் செல்லமுடியாத  வெளிநாட்டில் தங்கிவிட்ட பிள்ளைகள்,  அண்ணன் தம்பி இல்லாத திருமணம் ஆன பெண்கள் இவர்களுக்கு தங்கள் வயதான உடல் நலம் குன்றிய பெற்றோர்களைப் பாதுகாக்க சில நல்ல முதியோர் இல்லங்கள் பெரிதும் உறுதுணையாகிருக்கின்றன, அது அவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்பது நிதர்சனம்.  எனது நெருங்கிய நண்பர் தம்பதியர் உடல நலம் குன்றியதால், வெளிநாட்டில் குடியேறிய பிள்ளைகள் ஒப்புதல் அளித்து, வேறு வழியின்றி சமீபத்தில் ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் குடி பெயர்ந்துவிட்டனர்.   சமையலும் அது சம்பந்தமான வேலைகள், வீடு பராமரிப்பு வேலைகள் முதலிய எந்த பிரச்சினையும் இல்லாமல மகிழ்வுடன் இருப்பதாக தகவல் அனுப்பியுள்ளனர்.   ஆனால், நான் இதை நியாயப் படுத்தவில்லை. வயதான  பெற்றோர்களைப் பராமரிக்கத் தவறும் எந்த ஒரு  மகனுக்கும் இவ்வுலகில் அந்த பெற்றோரின் வாழ்த்து என்றும் உண்டு என்றாலும் விண்ணோரின் ஆசி நிச்சயம் கிடைக்காது.

  2. நன்றி திரு.ராமசாமி ஐயா அவர்களே. “முதியோர் இல்லங்கள் இக்கால கட்டங்களில் ஒரு அவசியமான நன்மை. உண்மை ஆனால், நான் சுட்டிக்காட்டியிருப்பது பெற்றவர்களை மதிக்காத, உள்ளூரிலேயே இருந்து கொண்டு அவர்களை வேறு இடங்களில் தங்கவைப்பவர்களையே. தங்கள் கடைசி வரி முற்றிலும் உண்மை. வணக்கம்

  3. ஏரெடுத்து வளர்த்த பெற்றோரை
    ஏறெடுத்துப் பார்க்காமல்
    வேறிடத்துக்கு  அனுப்பும் கொடுமையின்
    வேதனைக் கவிதை நன்று…!

    இதை நான் இப்படிச் சொல்லியுள்ளேன் எனது முகநூலில்-
      சரணாலயம்…
    தங்கள்குஞ்சுகளால்
    தாய்ப் பறவைகள்
    தங்கக் க(கா)ட்டிய
    சரணாலயம்-
    முதியோர் இல்லம்…!

                           -செண்பக ஜெகதீசன்…

  4. முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்
    பணம் கொடு, பொருள் கொடு, வசதிகொடு
    பெற்றவர்களையே கொடுக்காதே!!!!!!!!!!!!
    இவை நல்ல வரிகள் மனோகரன், நன்றி.

    என்னைப் பொறுத்தவரை, தலைமுறை இடைவெளியினால் ஏற்படும் மன அழுத்தங்கள் இன்றி, ஒத்த வயதினருடன் வாழும் ஓய்வு பெற்ற விடுதி வாழ்க்கை மேல் என்ற எண்ணம் உள்ளது.
    இளமையில் அனுபவித்த கல்லூரி விடுதி வாழ்க்கைபோல உணவு தயாரித்தல், வாழ்விட பராமரிப்பு மேற்பார்வை பொறுப்புகள் இன்றி, விருப்பப்பட்ட பொழுது போக்குகளில் காலத்தை செலவிட மனம் விரும்புகிறது.

    …. தேமொழி

  5. அருமையான வரிகள் ஜெகதீசன் ஐயா. நன்றி.

  6. தேமொழி: நன்றி. பள்ளி, கல்லூரி விடுதிகள், அடிக்கடி இடம் மாறும் பெற்றோர்களுக்கே அன்றி, உள்ளூரிலேயே இருந்துகொண்டு, குழந்தைகளை கவனிக்க நேரமில்லாமல் அனுப்பும் இடம் இல்லவே. உங்கள் எண்ணம் சரியே. ஆனால் பெற்று வளர்த்தவர்களுக்கு பிறகு தானே எல்லாம்.

  7. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்தில் வார்த்தெடுத்தது. இறை நம்பிக்கையோடு, பாவ புண்ணியங்களுக்குப் பயப்படும் மனப்பான்மையுள்ளவர்கள் வசதியில்லை என்றாலும் பெற்றவர்களை இவ்விதம் நிச்சயம் தவிக்க விடமாட்டார்கள். மீறிச் செய்பவர்களை என்ன செய்ய?. முன்பு தர்மஸ்தாபனங்களாகச் செயல்பட்டு வந்த முதியோர் இல்லங்கள் பலவும், ‘மாவுக்குத் தகுந்த பணியாரம்’ ரீதியில், காசுக்குத் தகுந்த உணவு, உறைவிடம், மற்ற வசதிகள் தருவதாகக் கூவிக் கூவி விற்கும் விளம்பரங்கள் பலவும் காண்கிறேன். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. நீங்கள் எழுதியிருப்பதைப் போல் பெற்றோர்கள் மன்னிப்பார்கள். ஆனால் ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்ற வாக்கு நிச்சயம் பொய்க்காது.

  8. I remember kousalya & you taking care of your mother …… so patiently & passionately  till she breathed her last..!!

  9. அன்பு ,நண்பர் திருவாளர் மனோகரனுக்கு ,உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள் ,எதை வேண்டும் என்றாலும் கொடுங்கள் அனால் தாயை  மட்டும் எதற்கும் விட்டு கொடுக்காதீர்கள் ,அற்புதம் தொடரட்டும் எல்லோருக்கும் புரியும் படி எழுதி இருப்பது உங்கள் கவிதை திறமையை காட்டுகிறது ,அமாம் இவ்வளவு நாள் உங்கள் திறமையை எங்கே வைத்து இருந்தீர்கள் ????.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *