Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170918 - DWA -Hrishikesha -The Carousel -lr

    ”சீரங்க ராட்டினம் சேய்வி ஜயர்சவாரி,
    பாரங்கள் போக்கிடும் பாரத -ஓரங்க
    நாடகம் சுற்றும் நவனீதக் கண்ணனவர்
    வீடகம் பாற்கடல்,பேர் விஷ்ணு’’….கிரேசி மோகன்….!

    Share
  • சூரி நாகம்மாள்….ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு….!

     

    ’’ஈருபத்து கைகளால் ஈசன்கை லாஸத்தை
    தாருபத்(து) அணிந்தவர் தூக்கிட, -வீறுகொண்டு
    வீழ்த்தினன் கட்டை விரலால் அவன்கர்வம்:
    வாழ்த்துமப்பர்(வாழ்த்துப் பண்பாடும் அப்பர் பதிகம்) பாடலின் வேட்கையால் -தாழ்த்தினர்
    நாள்நிறைய, தப்புணர்ந்த நாடகக் காரனவர்,
    தாள்மறைக் காட்டில் தடார்(திறப்பு)’’….கிரேசி மோகன்….!

    ஈருபத்து -இருபது….
    தாரு பத்து -மாலை பத்து(பத்து தலை, பத்து கழுத்து, 10 மாலை) இராவணர்….
    நாள் நிறைய -லேட்டாக…
    வாழ்த்துமப்பர் -வாழ்த்தும் அப்பர்….
    தாள் மறைக்காடு -வேதாரண்யக் கோவில் கதவு….

    Share
  • படக்கவிதைப் போட்டி (128)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    21622086_1427486197305575_203494868_n
    வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.09.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • சேர்த்து வைத்த கனவு..!

    பெருவை பார்த்தசாரதி

    dream girl

    பார்த்தமுதல் நாளிரவுமுதல் கனவில்வந்த நீதானெனக்கு

    ……….பத்தினியாய் ஆவாயென தினமும்நான் கனவுகண்டேன்.!

    ஊர்கூடி தேரிழுக்கும் வழக்கம்போல் உன்னைநானும்..

    ……….உற்றாறுறவினரொடு ஊரறியமணப்பது போல் கனவுவரும்.!

    கோர்க்கின்ற பூக்களெல்லாம் நாருடன் இணைவதுபோல்

    ……….கொண்டாடி மகிழத்தான் தினமும்நான் கனவுகண்டேன்.!

    சேர்த்துவைத்த கனவெலாம் சிலநாளில் நனவாகுமெனச்..

    ……….சென்றயிரவுகள்…..உறங்காததாக ஓராயிர மானதம்மா.!

     

    உருவத்தில் பெண்ணாய் உலகழகியாய்நீ வலம்வரவேணும்..

    ……….உனைப்படைத்திட்ட பிரம்மனே பெருமூச்சு விடவேணும்.!

    பருவநிலா புருவமுடன் படைத்திவளைப் படைத்தவனும்..

    ……….பாவலன்நானும்..கண்ட கனவுக்காட்சி நனவாகவேணும்.!

    ஒரு எண்ணிக்கையில் கண்டகனவுகள் கோடியானாலும்..

    ……….ஓரிரவுசேர்த்து வைத்தகனவுமொரு நொடியில் மறையும்..!

    வருத்தமுடன் குமுறுகிறேன்.!..வருவாயாநீ நிஜத்துடன்..

    ……….வாஞ்சையொடு வேண்டுகிறேன் இறைவாநீ அருள்வாயா.!

     

    எண்ணத்தில் தோன்றுவதில் ஆயிரம் வகையுண்டாமதில்..

    ……….ஏதொவொன்று ஆழமாய் ஊன்றிடினது கனவாகுமாம்.!

    கண்மூடியென் மனதில் கண்ணிறைந்த காரிகையாயுனைக்..

    ……….காண ஆவல்மிகுவதால்…அடிக்கடியென் கனவில்வருவாய்.!

    கிண்ணத்தில் நிரம்பியமதுவைப்போல்…கனவில் வந்தமாதுநீ..

    ……….கிட்டத்தில் வந்துவிடின் காதல்போதை உடன்தலைக்கேறும்.!

    பெண்ணெனும் உருவிலுன்னழகை உருவகமாய் என்மனதில்.

    ……….பெரிதாய்ச்சேர்த்து வைத்தகனவு….கலையுமோர் விடியலில்.!

    =============================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::11-09-17

    நன்றி:: படம் கூகிள் இமேஜ்

    Share
  • நீர் !

    எம் .  ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

    பாரினிலே நாம்வாழ நீரெமக்கு முக்கியமே

    வேரினுக்கு நீரின்றேல் விருட்சமெலாம் வந்திடுமா

    ஊருக்கு ஒருகுளத்தில் நீர்நிரம்பி இருந்துவிடின்

    ஊரெல்லாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடுமே

    நீரின்றி பலமக்கள் நீழ்புவியில் இருக்கின்றார்

    ஆர்நீரைக் கொடுத்தாலும் அருந்திவிடத் துடிக்கின்றார்

    கார்கொண்ட மேகங்கள் கனமழையைக் கொட்டிவிடின்

    நீரின்றி இருப்பார்கள் நிம்மதியாய் இருப்பரன்றோ !

     

    விஞ்ஞானம் வளர்ந்ததனால் விந்தைபல விளைகிறது

    நல்ஞானம் எனமக்கள் நாளுமே போற்றுகிறார்

    அவ்ஞான வளர்ச்சியினால் அளவற்ற தொழிற்சாலை

    ஆண்டுதோறும் பெருகிநின்று அவலத்தைத் தருகிறது

    தொழிற்சாலைக் கழிவனைத்தும் தூயநீரில் கலக்கிறது

    அதையருந்தும் மக்களெலாம் ஆபத்தில் சிக்குகிறார்

    ஆபத்தைத் தடுப்பதற்கு ஆட்சியாளர் வராவிட்டால்

    அருந்துகின்ற நீராலே அவலம்தான் பெருக்கெடுக்கும் !

     

    கிராமப் புறங்களிலே கிணற்றுநீர் இருக்கிறது

    மழைபொய்த்து விட்டுவிட்டால் அந்நீரும் வற்றிவிடும்

    நகரப்புறங்களிலே நன்னீரே என்று சொல்லி

    தகரத்தில் போத்தல்களில் தண்ணீரைக் காணுகிறோம்

    விதம்விதமாய் போத்தல்களில் விற்கின்ற நீரனைத்தும்

    வெளிக்கிட்டு வருமிடத்தை யாருமே பார்ப்பதில்லை

    போத்தல்களில் வரும்நீரை  பொறுப்பின்றி அடைப்பதனால்

    குடிக்கின்றார் அனைவருமே கிடக்கின்றார் கட்டிலிலே !

     

    உயிர்வாழ வேண்டுமெனில் உடல்கேட்கும் நீரினையே

    நீரின்றி வாழ்ந்திடுதல் நினைத்திடவே முடியாது

    உட்செல்லும் நீராலே உடல்நிறைவு பெறுகிறது

    உயிரோட்டம் தருவதற்கு நீரெமக்கு தேவையன்றோ

    ஆற்றுநீர் ஊற்றுநீர் அனைத்தையும் குடித்தாலும்

    அசுத்தமில்லா நீரினையே அருந்திடுதல் முறையாகும்

    உள்போகும் நீரினைநாம் உயிரெனவே நினைத்திடுவோம்

    உவப்புடனே நீரருந்தி உலகத்தில் வாழ்ந்திடுவோம் !

     

    ஆபிரிக்க நாடுகளில் அருந்துதற்கு நீரில்லை

    அவர்நீரை எடுப்பதற்கு அலைந்தபடி இருக்கின்றார்

    ஆட்சிதனில் இருப்பார்கள் அதைப்பற்றி அலட்டாமல்

    ஆடிப்பாடி விடுதிகளில் அருந்துகிறார் குடிவகையை

    குடிக்கின்ற நீருக்குக் குடிகள்படும் அவலமதை

    குடித்தாட்டம் போடுகிறார் கொஞ்சமேனும் நினையாமல்

    அடிக்கின்ற கூத்ததனை ஆண்டவனே நீபாரு

    அல்லல்படும் மக்களுக்கு அருந்திவிட நீரைக்கொடு !

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (73)

    நிர்மலா ராகவன்

    பிறர் போற்ற

    நலம்
    தனது முதல் குழந்தையை முதன்முதலாகப் பார்க்கும் தாய், `இவனுக்காக உயிரையே கொடுப்பேன்!’ என்று எண்ணக்கூடும். பார்ப்பவர்கள் அனைவரும் தன் குழந்தையை மெச்சவேண்டும் என்ற ஆவல் பிறக்கும்.

    ஆனால், பிறருக்கு அதுவே தொல்லையாகிவிடும்.

    `எப்போதும் அந்தக் குழந்தையையே பாக்கணும் என்பார்கள்!’ என்று ஒருவரும், `எத்தனையோ குழந்தைகளைப் பாத்தாச்சு, போ!’ என்று அலுத்துக்கொண்ட பெண்மணிகளையும் கண்டிருக்கிறேன்.

    அந்தமாதிரி ஒர் உறவினர் வீட்டில் தங்கியபோது, `இவளைப் பாருங்களேன்!’ என்று தன் இரண்டு வந்து மகளின் பராக்கிரமத்தை ஓயாது பறைசாற்றினாள் அவளுடைய தாய்.

    குழந்தை என்னவோ, வயதுக்கு மீறிய புத்திசாலிதான். ஆனால், அவளை மெச்சுவதைத் தவிர நமக்கு வேறு வேலை இல்லையா, என்ன!

    ஒரு முறை, `நான் படிச்சுண்டு இருக்கேன். தொந்தரவு பண்ணாதே!’ என்றேன் முகத்தை சற்றே திருப்பி. அவளுடைய வாய் அதிர்ச்சியில் பிளந்தது.

    சில வருடங்கள் கழித்து, அவளுடன் பேசும்போது, “உன் குழந்தையைப் பார்ப்பவர்களிடமெல்லாம் காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ளாதே!” என்றேன், அறிவுரை கூறும் வகையில்.

    “நான் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. அவளுடைய அப்பாவை அப்படித்தான் நடத்தினார்களாம். அதனால் வேண்டாம் என்கிறார்!” என்றாள். ஏன் கூடாது என்று அவளுக்குப் புரியத்தானில்லை.

    பிறரிடம் தம்மைப் புகழ்கிறார்களே என்று குழந்தைகளுக்கு முதலில் பெருமையாக இருக்கும். நாளடைவில், `நான் செய்வதெல்லாம் பெற்றோருக்குப் பெருமை தரக்கூடியதாக இருக்கிறதோ?’ என்று யோசித்து, யோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முனைவர். அதற்கு ஈடாக, பெற்றோரும் குழந்தைகள் செய்ய வேண்டிய காரியத்தையும் தாம் செய்வர். இரு தரப்பினருக்குமே நிம்மதி கிடைப்பதில்லை. குழந்தைகளுக்குச் சுதந்திர உணர்ச்சி எப்படி வரும்?

    எதிலாவது வெற்றி பெறாவிட்டால், `பெற்றோர் கலங்குவார்களே!’ என்ற ஏமாற்றம் எழும். புதிதாக எதையும் செய்யும் ஆர்வமோ, துணிவோ இல்லாது போய்விடுவதும் இதனால்தான்

    `நான் ரொம்ப அழகாம்!’

    பதின்ம வயதினருக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், கல்வியில் நாட்டமோ, திறமையோ இல்லாத மாணவிகள் நிரம்பிய வகுப்பில் ஒரு பொதுவான தன்மை இருந்ததைக் கண்டு ஆச்சரியம் எழுந்தது எனக்குள். எல்லாருமே அழகாக இருந்தார்கள்.

    சிறு வயதில், `அழகு!’ என்று பலரும் கொஞ்சியிருப்பார்கள். அதனால் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்திருக்கிறார்கள். வகுப்பில் ஒரு சிறு கண்ணாடியைக் கையில் வைத்துக்கொண்டு தம் முகவசீகரத்தை ரசித்துக்கொண்டிருப்பார்கள்!

    அழகு, அறிவு – இப்படி ஏதாவது ஒன்று இருந்தால் போதுமா? குணம்?

    உணர்ச்சிமயமான தாய்

    அச்சிறுமிக்கு இரண்டு வயதுதான். ஆனாலும், முதல் குழந்தை ஆயிற்றே, பிறர் பாராட்டுவதுபோல் நடக்க வேண்டாமா என்று தாய் ஓயாது அவளைத் திருத்துவாள். வெளியில் அழைத்துப் போகுமுன்னர் `அதைச் செய்யாதே, இப்படிப் பேசாதே’ என்று போதனை நடக்கும். மகள் மிரண்டுபோய் வாய்பேசாது இருப்பாள். அப்படியும் தப்பு கண்டுபிடித்து, வீட்டிற்கு வந்ததும் திட்டுவாள் தாய்.

    ஐந்து வயதிற்குள் தாயின் குணம் குழந்தைக்குப் படிந்தது. தாய் பேசுவதைப்போலவே அவளிடமும் பிறரிடமும் மரியாதையின்றி பேச ஆரம்பித்தாள்.
    `எவ்வளவு கண்டிப்பாக வளர்த்தேன்! இப்படி நடந்துகொள்கிறாளே!” என்று பெரியவள் கலங்குகிறாள். அவளுடைய வசவு அதிகரிக்கிறது.

    பெரியவர்களைப்போல் குழந்தைகள் எப்போதுமே நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியல்ல. அவர்கள் செய்யும் சிலவற்றை `குழந்தைத்தனம்’ என்று விட்டுவிட வேண்டியதுதான். அளவுக்குமீறி உணர்ச்சிவசப்பட்டால் எதிர்விளைவுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

    எல்லாரையும் மட்டம் தட்டும் தாய்

    தன் மகன் புத்திசாலி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தாய் அவள். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்தில் அவன் வாங்கிய மதிப்பெண்களோ அவள் நினைப்பைப் பொய்ப்பிக்க வைப்பதாக இருந்தது.

    `உங்கள் ஆசிரியைகள் எல்லாரும் முட்டாள்கள்! உன் அறிவை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை!’ என்று மகனிடமே பழித்தாள். மகன்மூலம் பள்ளிக்கு ஒரு கடிதம் அனுப்பினாள், `என் மகனுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண்களைவிட அதிகம் வாங்கத் திறமை இருக்கிறதென்று எண்ணுகிறேன்!’ என்று!

    சிலர், “நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் காட்டுமிராண்டிகள். இப்படியா, உரக்க டி.வியும் ரேடியோவும் போடுவார்கள்!” என்பார்கள்.

    இதையெல்லாம் கேட்டு வளரும் மகன் மட்டும் எப்படிப் பிறரை மதித்து நடப்பான்?
    முதலில் வீட்டுக்கு வெளியே இருப்பவர்களைக் குறை கூறுவதில் ஆரம்பித்து, பிறகு பெற்றோரிடமும் மரியாதை இல்லாதுதான் நடப்பான். ஏனெனில், அதுதான் சிறுவயதிலேயே அவனிடம் படிந்த குணம்.

    முன்பு, கிழக்கு மலேசியாவில் (போர்னியோ) பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் சிரித்தபடி கூறினார்: “பெற்றோர் பிரம்பைக் கொண்டு கொடுத்து, `எங்கள் மகன் தவறு செய்தால் இதைக்கொண்டு அடியுங்கள்!’ என்பார்கள்!”

    அதைக் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள், “இப்போது, மகனை அடித்தால், அப்பாவே நம்மை அடிக்க வருவார்!” என்று சிரித்தோம்.

    `பெரியவர்களிடம் மரியாதையாக இரு!’ என்று குழந்தைகளுக்குப் போதித்தால் மட்டும் போதாது. நாமும் அவர்களது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, பிறரிடமும் அப்படி நடந்துகொண்டால், இளையவர்களுக்கு இயல்பாகவே அக்குணம் வரும்.

    அன்பில்லாமையால் எதிர்ப்பு

    தாயற்ற பெண் என்று வீட்டிலுள்ள பெண்டிர் எல்லாரும் தன்னைத் திட்டுவதாக எப்போதும் என்னிடம் குறையாகக் கூறுவாள் என்னுடன் படித்துக்கொண்டிருந்த வித்யா. அவள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள்.

    ஒரு முறை, என் தாய் சமையலறையிலிருந்து, “கடைக்குப் போய் கொஞ்சம் சாமான் வாங்கி வருகிறாயா?” என்று உரக்க என்னிடம் கேட்டபோது, “இப்போதே வேண்டுமா, இல்லை, கொஞ்ச நேரம் கழித்துப் போகட்டுமா?” என்று கேட்டேன்.

    “அவசரமில்லை,” என்று பதில் வந்தது.

    எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வித்யா, “என்ன, நீ! உடனே சரியென்று சொல்கிறாய்! நானாக இருந்தால், `மாட்டேன்!’ என்று சண்டை பிடித்திருப்பேன்,” என்றாள்.

    அவள் ஏன் அதிசயப்பட்டாள் என்று நான் யோசித்தபோது புரிந்தது: பிறர் சொல்வதை உடனுக்குடன் நிறைவேற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருக்கவில்லை.
    அம்மா, `வாங்கி வா!’ என்று கட்டளை இடவில்லை. கோரிக்கை விடுத்தாள். அதனால், செய்யலாமா, வேண்டாமா என்ற முடிவு எனக்கே விடப்பட்டிருந்தது.

    வித்யாவை வளர்த்தவர்களோ, தாயற்ற பெண்ணைத் தவறாக வளர்த்துவிட்டோம் என்று பிறர் குறை கூறிவிடுவார்களோ என்று பயந்து, அன்பை மறைத்து, கடுமையாக நடந்துகொண்டார்கள்.

    அவர்கள் போக்கால் ஆத்திரமும் வருத்தமும் ஒருசேர, தன்னிடம் ஓயாது குற்றம் கண்டுபிடிப்பவர்கள் அனைவரையும் அயர்ச்சி அடையச்செய்வதுதான் தன் வெற்றி என்பதுபோல் நடந்துகொண்டாள்.

    வகுப்பில் ஆசிரியை கேள்வி கேட்கும்போது, அலட்சியமாக எங்கோ பார்த்துக்கொண்டிருப்பாள். `வெளியே போய் நில்!’ என்று ஆசிரியை வழக்கமாக இரையும்போது, எதையோ சாதித்துவிட்டதுபோல், அளவுகடந்த ஓசையுடன் வெளிநடப்பாள். எங்களுக்கு அது வேடிக்கையாக இருக்கும். சிரிப்பை அடக்கப் பாடுபடுவோம்.

    தோல்வியிலும் வெற்றி

    குழந்தைகளிடம் உண்மையான அக்கறை கொண்ட பெற்றோர், அவர்கள் தோல்வி அடையும்போதும் கலங்காது, பக்கபலம் அளிப்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக, ஒரு சிறுவன் ஏதாவது போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறாவிட்டால், தாயும் சேர்ந்து அழுகிறார்கள் (தொலைகாட்சியில் பார்த்தது). அதைவிட்டு, `நீ சிறப்பாகத்தான் செய்தாய். ஆனால், மற்றவர்கள் உன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள். அந்த வயது வந்தால், நீயும் நன்றாகச் செய்வாய்!’ என்றால், அவனுடைய உற்சாகம் குன்றாது. `போட்டி’ என்றால் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும் என்று புரிந்துகொள்வான்.

    ஒரே நிலையான நடப்பு

    சிறுவர்கள் செய்த தவற்றை சில சமயம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், வேறு சமயங்களில் (பிறர் தப்பாக நினைத்துவிடப்போகிறார்களே என்று) அளவுக்குமீறி தண்டிப்பதும் அவர்களைக் குழப்பத்தில்தான் ஆழ்த்தும். பிறர் பார்க்க, முக்கியமாக, அவர்கள் நண்பர்கள் எதிரே கண்டிப்பதும் தண்டிப்பதும் வெறுப்பைத்தான் வளர்க்கும்.

    “நீங்கள் சொன்னால் வாய்மூடி கேட்டுக்கொள்கிறான்! இதையே நாங்கள் சொன்னால் எதிர்த்துப் பேசுவான்!” என்று பல பெற்றோரும் வளர்ப்பவர்களும் என்னிடம் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்கள்.

    மரியாதை கொடுத்தால்தான் திரும்ப வாங்கலாம். இந்த நியதி எல்லா வயதினருக்கும் பொருந்துமே! அவர்களுடைய நன்மைக்காகச் சொல்கிறாம், நம் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக இல்லை என்பதைப் புரிய வைத்தால், அதன்படி நடப்பார்கள். பிறர் பாராட்டும்போது தம்மை அப்படி வளர்த்தவர்களிடம் கொண்ட மரியாதை கூடும்.

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 95

    க. பாலசுப்பிரமணியன்

    காட்சி-வெளிசார்ந்த நுண்ணறிவு (Visual-Spatial Intelligence)

    education-1

    பல்வகை நுண்ணறிவுகளில் இந்த நுண்ணறிவுக்கு ஒரு மதிப்பான இடம் அளிக்கப்படுகின்றது. இந்த நுண்ணறிவில் சிறப்புப் பெற்றோர் காட்சிகள், (visuals) கற்பனைகள், (Imageries) இட மதிப்பீடுகள் (Spatial assessments), மற்றும் இடத்துக்கும் அதன் அமைப்புக்களுக்கும் தகுந்தவாறு செயல் திறன்களைப் படைப்பதில் திறனுள்ளவர்களாக இருப்பார்கள்.

    பொதுவாக இந்த நுண்ணறிவில் சிறந்தவர்களாக விளங்குபவர்கள் :

    1. ஓவியர்கள்
    2. சிற்ப வல்லுநர்கள்
    3. கட்டட அமைப்பாளர்கள்
    4. கட்டுமானப் பணியாளர்கள்
    5. தோட்டவியலாளர்கள்
    6. விளையாட்டு வீரர்கள்
    7. சினிமாத் துறையில் பின்னணி அமைப்பாளர்கள்
    8. திரைப்பட இயக்குனர்கள்
    9. ஒளிப்பதிவாளர்கள், நடன இயல்-மேடை வல்லுநர்கள்
    10. பத்திரிகை ஆசிரியர்கள்/பதிப்பாளர்கள்
    11. நாடக மேடை அமைப்பாளர்கள் /ஒளி-ஒலி இயக்குனர்கள்
    12. கார்ட்டூன் வரைபவர்கள்
    13. நிழற்படம் எடுப்பவர்கள் – புகைப்படம் எடுப்பபவர்கள்
    14. மந்திரவாதிகள்

    இந்த நுண்ணறிவின் பின்னணியில் வெளிப்படும் சில திறன்கள்:

    1. கண்களைக் கவரும் காட்சிகளைப் படைத்தல் -பயன்படுத்துதல்
    2. வண்ணங்களைப் படைத்தலிலும் உபயோகப்படுத்துவதிலும் திறன்கள் காட்டுதல்
    3.  இடம்- அமைப்புகளுக்குத் தகுந்தவாறு செயல் படுதல்
    4. நிலம்-நீர்- இட அமைப்புக்களில் அழகு செய்தல் – கற்பனை வளம் காட்டுதல்
    5. கருத்துக்களை காட்சிகள் வரைபடங்கள் மூலம் வெளிப்படுத்துதல்

    இதைத் தவிர மற்ற பல தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்தத் திறன்கள் மாறுபட்ட  அளவில் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஏனெனில் எந்தத் தொழிலில் இருந்தாலும் காட்சிகள் -இட அமைப்புக்களின் தாக்கம் இருக்கும். ஆகவே இந்த நுண்ணறிவு எல்லாத் தொழில்களுக்கும் சிறிதளவில் அடிப்படையானதாகத்  தோன்றுகின்றது.

    உதாரணமாக ஒரு சாதாரண மனிதன் தனக்கென வீடு கட்டும்பொழுது அதன் உள்வரைப்படம் மனத்தளவில் வரையப்பட்டு அதற்கான உருவகத்தை வரைந்து கொள்கின்றான். அதன்படி அந்த இடத்தை எவ்வாறு அதிக அளவில் அழகுக் குறிப்புகளோடு உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து செயல் படுகின்றான்

    அதேபோல் கிரிக்கெட், கால் பந்து, ஹாக்கி போன்ற பல விளையாட்டுக்களில் வீரர்களுக்கு எந்த இடத்தில் எந்தத் தருணத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற நுண்ணறிவு தேவைப்படுகின்றது.

    ஒரு மேடைநாடகத்தில் நடிகர்களும் அதன் உதவியாளர்களுக்கு எந்தக் காட்சி எப்படி வரவேண்டும் எந்தப் பொருள் எந்தக்காலத்தில் எப்படி இருக்கவேண்டும் என்று அறிந்து செயல்பட வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது

    இவையனைத்தும் காட்சி-வெளி சார்ந்த நுண்ணறிவின் தாக்கங்கள்.

    கற்றலின் போது பள்ளிக்கூடங்களில் நேரடியாக இந்தத் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புக்கள் அதிக அளவில் இருப்பதில்லை. பாடப் புத்தகங்களிலும் பாடத்திட்டங்களில் இந்த நுண்ணறிவுகளை வளர்ப்பதற்கான போற்றுவதற்கான வாய்ப்புக்கள் கொடுக்கப்படுவதில்லை. எனவே, வகுப்பறைகளில் இந்தத் திறன்களை மறைமுகமாக வளப்பதற்கு ஆசிரியர்களின் திறமையும் நுண்ணறிவும் அதிகமானதாகத் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு பாடத்திலும் அதனைச் சார்ந்த கருத்துக் பரிமாணங்களை அலசி ஆராய்வதற்கு இந்த நுண்ணறிவின் பல உள்ளீட்டுக்களைப் பயன்படுத்துதல் அவசியம். உதாரணமாக

    1. கருத்துக்களை ஓவியங்களாக வரைதல்
    2. நிழல் படங்கள்/ புகைப்படங்கள் தயாரித்தல்
    3. மேடை நாடகங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம்
    4. விளையாட்டுகள்/ நாட்டியங்கள் மூலம் வெளிப்பாடுகள்
    5. கார்ட்டூன் வரைதல்
    6. ஓட்ட வரைபடங்கள்/ பை வரைபடங்கள்

    இதுபோன்ற பல உத்திகளைக் கையாண்டு கருத்துக்களைக்  கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொண்டதை வெளிப்படுத்தியும் கற்றலை  மேம்படுத்தலாம்.டரும்..

    (தொடரும் )

    Share
  • தமிழிசைப்பண்கள்

    சிறீசிறீஸ்கந்தராஜா

    **************************************************

    உலகின் முதல் இசை

    தமிழிசையே!!

    ***********************************************

    இசைத்தமிழின் தொன்மை – 78

    ***********************************************

    பழந்தமிழிசையில் பண்கள்

    **********************************

    அமைச்சர் கோவிந்த தீட்சதர்

    ********************************************

    தஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து வழிகாட்டி, நல்ல பல காரியங்களை மக்கள் நலனுக்காக செய்தவர் கோவிந்த தீட்சதர்.

    எழுபத்தைந்து ஆண்டுகள் இவர் அமைச்சராக மூன்று மன்னர்கள் காலத்தில் இருந்து தொண்டாற்றியவர் கோவிந்த தீட்சதர்.

    நாயக்கர் காலத்திலும், பின்னர் வந்த மராத்தியர் காலத்திலும் தஞ்சை அரசர்களின் ஆளுமைக்குள் இருந்த கலைஞர்கள், வேத விற்பன்னர்கள், இசைக் கலைஞர்கள் போன்றோர் இங்கிருந்து சிறிது தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருவையாற்றில் குடியிருந்திருக்கின்றனர்.

    காவிரி ஒரு புனித நதி. கரையெங்கும் காவிரித்துப் புகழ் பரப்பி ஓடும் ஜீவநதி.

    அந்த காவிரியின் கரையெங்கும் படித்துறைகள்.

    புனிதத் தலங்களில் புஷ்ய மண்டபங்கள், அவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை என்று இன்றும் மக்கள் பயன்பாட்டுக்குக் காணக்கிடைப்பவை.

    இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் சில ஊர்களை முழுவதும் தானமாகக் கொடுத்திருந்தார்.

    பல வேத பாடசாலைகளையும் அவர் உருவாக்கிவைத்தார்.

    இத்தகைய பாடசாலையில் படித்துப் பின் இசைத் துறையில் பிரபலமடைந்தவருள் ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் முக்கியமானவர்.

    பெருமைக்குரிய கோவிந்த தீட்சதருடைய இளைய மைந்தன் வேங்கடமகி என்பார் பல இலக்கியங்களைப் படைத்திருக்கிறார்.

    சம்ஸ்கிருத இலக்கியங்கள் தவிர இசைத் துறையில் “சதுர்தண்டி பிரகாசிகா” எனும் நூலையும் இயற்றியிருக்கிறார்.

    வெங்கடமகி

    **********************

    72 மேளகர்த்தா ராகங்களின் அட்டவணை,

    16-ஆம் நூற்றாண்டில் வெங்கடமகி என்ற இசைமேதையால் தொகுக்கப்பட்டவை.

    கர்நாடக இசை வரலாற்றின் ஒரு முக்கியமான நிகழ்வு வேங்கடமகியின் மேளகர்த்தா ராக அட்டவணை ஆகும்.

    வேங்கடமகி இப்படி ஒரு அட்டவணையை முன்வைக்கும்வரை, வெறும் 19 ராகங்களே கர்நாடக இசையில் பிரபலமாக இருந்திருக்கின்றன.

    அரிதாக உபயோகப்படுத்தப்பட்ட சில ராகங்களோடு சேர்த்து அதிகபட்சம் நாற்பது ராகங்கள் புழங்கி வந்திருக்கின்றன.

    வெங்கடமகி அடிப்படை ஸ்வரங்களைக் கணித வரிசைப்படுத்தி ஆரோஹணம், அவரோஹணத்தில் முழுமையாக ஏழு ஸ்வரங்கள் இருக்கும் 72 ராகங்களை அட்டவணைப்படுத்தினார்.

    மனிதக் காதுகளால் 22 ஸ்வரங்களைப் பிரித்தறிய முடியும் என்று அறிவியல் சொல்கிறது.

    சீன மரபிசையில் இன்னும் 22 ஸ்வரங்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

    ஆனால் இந்த 22 ஸ்வரங்களிலும் வெகு துல்லியமாகப் பிசிறில்லாமல் நாம் அறிய முடிவது 12 ஸ்வரங்களேயாகும்.

    மேற்கிசையிலும் இந்திய இசையிலும் மேலும் இந்த 12 ஸ்வரங்களே உபயோகப்படுத்தப்படுகின்றன.

    (ச-ரி-க-ம-ப-த-நி-ஸ என்று ஏழு ஸ்வரங்கள் என்று சொன்னாலும் சின்ன ரி, பெரிய ரி என ரி, க, ம, த, நி இவை இரண்டிரண்டாக இருக்கும்).

    வேங்கடமகி இந்த 12 ஸ்வரங்களோடு சேர்த்து மேலும் நான்கு ஸ்வரங்களை இணைத்து 16 ஸ்வரங்களாக்குகிறார்.

    (ரி, க, ப, த ஆகியவை மூன்று மூன்றாக இருக்கும்).

    16 ஸ்வரங்களிலிருந்து ஏழு ஆரோஹணம், ஏழு அவரோஹணங்கள் இருக்கும் முழுமையான ராகங்களை

    இவர் அட்டவணைப்படுத்தியதே ‘வேங்கடமகி மேளகர்த்தா அட்டவணை’.

    தில் அவர் இசையினிமையை அளிக்காத ஸ்வரக்கூட்டுகளைத் தவிர்த்தே 72 ராகங்களைத் தந்திருக்கிறார்.

    ஆக, கணிதமுறையையும், இசை இனிமையையும் முன்வைத்துக் கிடைக்கும் அதிகபட்ச சம்பூர்ண ராகங்கள் இந்த 72 ராகங்கள்.

    “12 அடிப்படை ஸ்வரங்களைக் கொண்டு 72 ராகங்களைத்

    தரமுடியும் என ஒரு தென்னிந்திய மேதை நிரூபித்திருக்கிறார்.

    இந்த மேளகர்த்தா திட்டம் தர்க்க ஒழுங்குடனும், கணித நேர்த்தியுடனும், இசையினிமையுடனும் இருக்கிறது” என்று சொல்கிறார் பிரபல இசை வல்லுநர் பேரா.சாம்பமூர்த்தி.

    (வேங்கடமகி 16 ராகங்களைக் கொண்டு அட்டவணையைத் தந்திருந்தாலும், அவற்றில் நான்கு துணை ஸ்வரங்கள் என்றறியப்படுகின்றன.)

    தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்களில் தலைசிறந்த மன்னன் விஜயரகுநாத நாயக்கன் என்பவன்ஆவான்.

    சுமார் 1600லிருந்து 1630 வரை ஆண்ட இம்மன்னன் இசைக்கலையிலும், நாட்டியக்கலையிலும் சிறந்திருந்தான்.

    பல நூல்களை இயற்றியிருக்கிறான்.

    இவனது அவையை அலங்கரித்தவர்களில் வேங்கடமகி

    என்பவர் குறிப்பிடத் தகுந்தவர்.

    அவர் கர்நாடக இசைக்கு இலக்கண நூல் எழுதியிருக்கிறார்.

    72 மேளகர்த்தா இராகங்கள் என்று வகுத்தவர் இவர்தான்.

    இன்றைய கர்நாடக சங்கீதத்துக்கு இவரையே தந்தை என்று கூறுவர்.

    தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் போன்ற இசைமேதைகள் எல்லாம் இவரது மரபைத்தான் பின்பற்றினார்கள்.

    இந்த வேங்கடமகி என்பவர் 1625ல் சதுர்தண்டி பிரகாசிகை என்ற ஒரு சிறந்த இசை நூல் சமஸ்கிருத மொழியில் இயற்றியிருக்கிறார்.

    இவருக்கு முன்னர் திகழ்ந்த மரபுகளைத் திரட்டி இந்நூலில் வகைப்படுத்தியுள்ளார்.

    இன்றைய கர்நாடக இசைக்கு அடித்தளமான நூல் இதுவேயாகும்.

    இதில் சுருதி ஸ்வரம் ராகம் கீதம் என்றால் என்ன?

    அவை எவ்வளவு வகைப்படும்?

    என்று தனித்தனி அத்தியாயங்களில் விவரித்துள்ளார்.

    இவற்றில் “ஆலாபம்” என்று ஒரு அத்தியாயம் உள்ளது. ஆலாபனை என்பது என்ன?

    எப்படி செய்தல் வேண்டும்?

    அதன் உட்பிரிவுகள் என்ன?

    என விவரிப்பது இப்பகுதி.

    அதாவது ராகங்களை ஆலாபனை செய்யும்

    விதத்தைக் கூறுவது.

    இசைச் சொற்களை இவர் விளக்கும்போது உலகிலே மக்கள் இதை என்ன சொல்லி வருகிறார்கள் என்பதையும் இவர் குறிக்கிறார்.

    இது ஒரு பாரிய தொண்டாகும்.

    ஆராச்சியாளருக்கு அமுதம் போன்றது.

    இவருக்கு முன் இருந்த மரபு இச்சொற்களில்

    இடம் பெறுகின்றன.

    அவ்வாறு “ஆயத்தம்” என்று ஒரு சொல் உள்ளது.

    ராகத்தை ஆலாபனை செய்ய தொடங்குவதற்கு

    “ஆயத்தம்” என்று சொல்வது உலக வழக்கு.

    ஒரு ராகத்தை ஆலாபனைக்கு எடுத்துக் கொண்டதும் “ஆயத்தம்” செய்து படிப்படியாக அதை “விஸ்தாரம்” செய்து ராகத்தின் இயல்பை உணரும்படி பாடுதல் என்பது ராக ஆயத்தம் தொடங்கிய பிறகு படிப்படியாக வளர்க்க வேண்டும்.

    அதற்கு ராகவர்த்தினி என்று பெயர்.

    ராகவர்த்தினிக்கு மக்கள் வழக்கில் “எடுப்பு”

    என்று வேங்கடமதி கூறுகிறார்.

    ஆதலின் “எடுப்பு” என்பது ராக ஆலாபனையின்

    நூணுக்கமான இன்றியமையாத அரங்கம் ஆகும்.

    எடுப்பு எடுத்தல் என்றால் இசை மரபில் இராக ஆலாபனை செய்தல் என்று பொருள்.

    கர்நாடக இசையின் அடிப்படை நூலான இந்த

    வேங்கடமகியின் நூலில் “எடுப்பு” என்ற தமிழ்ச் சொல்

    அப்படியே எடுத்தாளப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    வேங்கடமகி தமிழ்நாட்டிலிருந்த இசை மரபை அப்படியே எடுத்துக்கொண்டு அதை தம் நூலில் வகுத்துள்ளார் என்பது

    இதனால் தெளிவு பெறுகிறது.

    சுருங்கச் சொன்னால் தமிழ் இசையின் மறு வடிவே கர்நாடக இசை என்பதற்கு இது ஒரு அடிப்படை சான்று எனலாம்.

    திருஞானசம்பந்தர் “பாடல் எடுத்தல்” என்பதின் நூணுக்கம் இப்பொழுது தெளிவாகிறது.

    தாம் பாட எடுத்துக்கொண்ட பாடலின் இராகத்தை விரிவாக ஆலாபனை செய்வதையே எடுத்த பாடல் என்பதால் குறிக்கிறார்.

    இதனால் இசை மரபில் “எடுத்தல்”, “எடுப்பு” அல்லது “ராக ஆலாபனை” என்பது 1300 ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழகத்தில் சிறந்திருந்தது என்று அறிகிறோம்.

    ***********************************************

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    16/09/2017

    Share
  • குறிஞ்சிவாழ் பசுமா மயிலா!

    -மீனாட்சி பாலகணேஷ்

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கே உரிய ஐவகை நிலங்களின்  செழிப்பையும் அழகையும் புகழ்ந்து இயற்றப்பட்ட பல பாடல்களை அனைத்துப் பருவங்களிலும் இயற்றிய புலவர்களின் கற்பனைக்கேற்பக் கொண்டமைந்து விளங்குகின்றன. இலக்கியச் சுவையையும் மேம்படுத்துகின்றன. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளம் இந்த ஐவகை நிலங்களின் செழிப்பாலும் உணரப்படும்.

    முருகப்பெருமான் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களில் இந்த நயங்கள் மிகச்சிறப்பாகப் பாடப்படும். ஏனெனில் குறிஞ்சிநிலத்திற்குக் கடவுள் குமரப்பெருமானல்லவா?

    இந்தவரிசையில் நாம் முதலில் காண்பது திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்றினையே! திருச்செந்தூரானது கடல்சார்ந்த நெய்தல் நிலப்பகுதியாயினும் குன்றுதோறுமுறைபவனாகிய குமரப்பெருமானின் குறிஞ்சிமலை வளத்தையும் பாடுதல்தானே முறைமை?

    பகழிக்கூத்தர் விளக்கும் ‘மலையும் மலைசார்ந்த இடமுமான’ குறிஞ்சிநிலத்து மலைப்புறத்தின் அச்சமூட்டும் பேரழகு அருமையான பாடல்வரிகளாக விரிகிறது:

    நெடிய மரங்கள் கொடிகளுடன் பின்னிப்பிணைந்து அடர்ந்து வளர்ந்துள்ளமையால் பகல்போதிலும் இருள் meena1சூழ்ந்திருக்கும் அச்சம்தரும் மலைப்பிரதேசம். இங்கு எவ்வாறு வழிபார்த்து நடந்து செல்வது? அந்த இருளை நீக்கவும் இயற்கையே வழிசெய்கிறது. அங்குள்ளதான கொடிய நஞ்சினை உடைய ஒரு பாம்பு தன் வாயை அகலத்திறந்து மாணிக்கல்லை உமிழ்கின்றது; அந்த மாணிக்கக்கல் ஊழிக்கால இருள்போன்ற கொடிய இருளை நீக்குகின்றதாம்.

    மலையில் வாழும் குறவர்கள் உணவுக்காகத் தினை பயிரிடுவர். அதுவே அவர்களின் முக்கிய உணவாகும். meena2அதற்கு எருவாக அவர்கள் பயன்படுத்துவது என்ன தெரியுமா? கவரிமானின்  முலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் பால் சூரியஒளியினால் காய்ந்து, பாறைகள்மீது படர்ந்துள்ளது; சூரிய ஒளியில் அது வெள்ளித்தகடுகள் போன்று பளபளவென்று ஒளிவீசுகின்றது. மலைவாழ் குறவர்கள் அதனை எடுத்து தங்களது தினைப்பயிருக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்களாம். ஆச்சரியமாக இல்லை? மலையின் வளப்பத்தைக்கூற இன்னும் வேறுபல சொற்கள் வேண்டுமோ?

    இக்குறிஞ்சி நிலத்தில் வாழும் கருநிறம் கொண்ட குறமகளிரின் இன்றியமையாத வேலை, தினைப்பயிரைத் தின்னவரும் கிளிகளையும் மற்ற பறவைகளையும், ‘ஆலோலம்,’  எனக்கூறி கவண் எறிந்து ஓட்டுவதே! சிலபொழுது அவர்களின் கவனம் பறவைகளை விரட்டுவதில் ஈடுபடுகிறது; இன்னும் சிலபொழுது தங்கள் குலமகளான வள்ளியின் உள்ளம் கவர்ந்த குமரனையும் அவன் திருவுருவையும் எண்ணி நெகிழ்ந்து கனிகின்றது. இவ்வாறு இருவிதமான எண்ணங்களும் மாற்றி மாற்றி அவர்களுடைய உள்ளங்களில் ஊசலாடுகின்றனவாம்!

    இவ்வாறெல்லாம் குறிஞ்சிநிலவளம்கூறிப் பின்பு
    குறமகளிரின் செம்மைபாய்ந்த கண்களைக் கொள்ளைகொண்ட முருகப்பெருமானைத் தலையசைத்து, திருவாய் திறந்து சில சொற்களைக்கூறிச் செங்கீரையாட வேண்டுகிறார் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழினை இயற்றிய புலவர் பகழிக்கூத்தனார்.

    ‘வெங்காள கூடவிட மொழுகுபற் பகுவாய்
    ………………………………….
    மங்காம லிரசதத் தகடெனச் சுடர்விட
    மலைக்குறவர் கண்டெடுத்து
    வண்டினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற
    மகளிருள மூசலாட…….’ (திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்-செங்கீரைப்பருவம்)

    ***

    அடுத்து நாம் காணப்போவது திருமலை முருகன் பிள்ளைத்தமிழிலிருந்து சுவையான ஒருபாடல். இது குறிஞ்சிநிலமான வள்ளிமலையில் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கின்றது!

    வள்ளிமலையில் ஒரு சிவமுனிவர் தவம்செய்து கொண்டிருந்தபோது அவர்முன்பு அழகானதொரு மான் வந்து உலவியது. முனிவர் மோகத்துடன் அம்மானை நோக்கவும் அது கருப்பமடைந்து, ஓடோடிச்சென்று ஒரு குழிக்குள் கருவை ஈன்றுவிட்டுச் சென்றது. அவ்விடம் வந்த வேட்டுவர்கள் தோகைமயில் போல் விளங்கிய அக்குழவியான வள்ளியை எடுத்துவந்து மிக்க பெருமையுடன் வளர்த்தனர்.

    வளர்ந்து இளம்குமரியான வள்ளியைத் தினைப்புனக் காவலுக்கும் அனுப்பிவைத்தனர். அப்போது அங்குவந்த முருகவேள் அவள்மீது மோகம் கொண்டான். meena3அவ்வள்ளியின் கையால் தேன்கலந்த தினைமாவைப் பெற்றுண்ண ஆசைப்பட்டு அவளிடம் வேண்டவும் செய்தானாம்.

    ‘அத்தகைய குமரனே! சிறுபறையை முழக்குக,’ என வேண்டுவதாகத் திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலினை இயற்றிய கவிராச பண்டாரத்தையா பாடியுள்ளார்.

    ‘வள்ளிமலை தனில்முதிய சிவமுனிவன் முன்னர்ஒரு
    மான்வந் துலாவ மானை
    ………………………………………….
    …………………. தினைப்புனத் தினில்வைத்த
    வேட்டுவமடந்தை கையால்
    தெள்ளுதினை மாவுக் கவாவுற்ற மோகனே
    சிறுபறை முழக்கி யருளே…’ (திருமலை முருகன் பி. த. சிறுபறைப்பருவம்)

    இது வள்ளியம்மை பற்றிய பாடல்.

    ***

    முருகன்மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்களெல்லாம் அவன் உறையும் குறிஞ்சிநிலத்தின் பெருமைகளைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

    திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழினை இயற்றிய வரகவி மார்க்கசகாய தேவரும் இதற்கு விதிவிலக்கல்ல. சந்தநயம் பொங்குமொரு அழகான பாடலைத் தாலப்பருவத்தில் பாடிவைத்துள்ளார்.

    சிறுகுழந்தைகள் பசியால் வாடிவிடாமல் அன்னை அவர்களின் பசியறிந்து அன்போடு பாலூட்டுவாளல்லவா? நிலம் என்னும் குலமகள் அத்தகைய தாய் போன்றவளாம். தனது சிறார்களான சின்னஞ்சிறு பயிர்கள் பசியால் வாடிவதங்காமல் காப்பதற்காக மலையிலிருந்து விழும் தாய்ப்பால் போன்ற அருவிநீரை விரைந்தோடி வரச்செய்கின்றாள். இதனால் குறிஞ்சிநில மக்கள்கூட்டம் மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் கடவுளான முருகனைக் கொண்டாடுகின்றனராம். ‘அந்தக் குறிஞ்சிநிலத்து வாழும் முருகன் பச்சைநிறம் கொண்ட பெரியமயில்மீது அமர்ந்திருப்பவன். முனிவர் போற்றும் சிவபிரானின் பாலகன். சரவணபவன்,’ என அவனுக்குத் தாலாட்டுப் பாடுகின்றார் புலவர்.

    ‘நிலனெனும் ஒருகுல மடமகள் சிறுபயி
    ராயசி றார்க ளெலாம்
    …………………………………………….
    மலைதரும் அருவி விரைந்து வரக்குற
    வாணர் இனங்க ளெல்லாம்
    மகிழ்வுட னாடுகு றிஞ்சிநி லந்தனில்
    வாழ்பசு மாமயிலா….’ (திருவிரிஞ்சை முருகன் பி. த. தாலப்பருவம்)

    இவ்விதமாக ஒவ்வொரு புலவரும் சளைக்காமல் மலைவளம்கூறிக் குமரனை வழுத்துகின்றனர்.

    ***

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(184)

    செண்பக ஜெகதீசன்

     

    அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்

    பெற்றான் பொருள்வைப் புழி.

           –திருக்குறள் –226(ஈகை)

     

    புதுக் கவிதையில்…

     

    வறியவர் பசியைப்

    போக்கவேண்டும்,

    பொருள் இருப்பவன்..

     

    அதுவே அவனுக்குப்

    பிற்காலத்தில் உதவிடத்தக்க

    சேமிப்பாகும்…!

     

    குறும்பாவில்…

     

    வைத்திருக்கும் செல்வத்தினால்

    வறியேர் பசிப்பிணி போக்குபவனுக்கு,   

    பிற்கால சேமிப்பாகும் அது…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அதிகப் பசியில் வாடுவோர்க்கே

    அன்ன மளித்துக் காப்பாற்ற

    அதிகப் பொருளைச் செலவிட்டே

    அவர்தம் பசிப்பிணி போக்கிட்டால்,

    அதில்வரும் செலவது இழப்பல்ல

    அறப்பணி செய்த செல்வருக்கே,

    எதிர்வரும் காலத் தேவைக்கது

    ஏற்ற நல்ல சேமிப்பே…!

     

    லிமரைக்கூ..

     

    வறியவரின் பசிப்பிணியைப் போக்கு, 

    செல்வமது இதிலே செலவிட்டதை

    வருங்கால சேமிப்பாய் ஆக்கு…!

     

    கிராமிய பாணியில்…

     

    குடுத்துவாழணும் குடுத்துவாழணும்

    கைப்பொருளக் குடுத்துவாழணும்,

    காசில்லாத ஏழபசிபோக்க

    கைப்பொருளக் குடுத்துவாழணும்..

     

    பெரும்பசியில வாடுறவன்

    பசிபோக்கச் செலவளிச்சா

    பணக்காரனுக்கு அது போக்கில்ல,

    எதிர்காலத்தில அவன் தேவைக்கு

    இப்பவே சேமிச்ச சேமிப்புதான்..

     

    அதால,

    குடுத்துவாழணும் குடுத்துவாழணும்

    கைப்பொருளக் குடுத்துவாழணும்,

    காசில்லாத ஏழபசிபோக்க

    கைப்பொருளக் குடுத்துவாழணும்…!

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 239

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – கட்டுரை காதை

    வார்த்திகனைச் சிறையிட, ஐயை கோயிலின் கதவம் திறவாமை 

    தட்சணாமூர்த்தி அணிந்த அணிகலன்களைப்
    பார்த்துப் பொறாமையுற்ற
    அரசுப் பணியாளர்கள் சிலர்
    “இவன் புதையலைக் கவர்ந்த பார்ப்பனன்”
    என்றே கூறிக்
    கள்வரை அடைக்கும் சிறையில்temple doors
    அவனை அடைத்தனர்.

    அங்ஙனம் சிறையுற்ற
    வார்த்திகனின் மனைவி கார்த்திகை
    அம்முறையற்ற செயலால்
    பெரிதும் வருந்தினாள்
    மயங்கி நிலத்தில் விழுந்து புலம்பினாள்.

    ஒரு பாவமும் செய்யாத தன் கணவனுக்கு
    நேர்ந்த கொடுமையை எண்ணி
    இறைவன் மீது கோபம் கொண்டாள்.

    அவளின் இந்தச் செயல் கண்டு
    குற்றமேதும் இல்லாத சிறப்பினை உடைய
    சிற்ப வேலைகள் அமைந்த
    கொற்றவைக் கோயிலின் கதவு மூடிக் கொண்டது.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 127-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    kids and animals

    படம்பார்த்துக் கதைசொல்லும் வகையில் அமைந்த அரியதொரு காட்சியைக் கறுப்புவெள்ளையில் ஒளிஓவியமாய்த் தீட்டியிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர் திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் என் இனிய நன்றி!

    சிறுமியை இடையில் இடுக்கி இதழ்க்கடையில் புன்னகையை இருத்தி நிற்கும் ஒரு சிறுவன், உடைந்த கிளையின்மீது(ம்) உடையாத நம்பிக்கையோடு ஒயிலாக நிற்கின்ற மற்றொரு சிறுவன், இவர்களுக்குச் சற்றுதொலைவிலே நின்ற திருக்கோலத்திலும் கிடந்த திருக்கோலத்திலும் அருங்காட்சி நல்கும் கால்நடைச் செல்வங்கள் என்று இப்புகைப்படமே நல்லதோர் வாழ்க்கைச் சித்திரமாய் நம் கண்முன் விரிகின்றது!

    கவி வடிப்பதில் வித்தகர்களான நம் கவிஞர்கள் ஒரு காவியமே வரையலாம் இப்படத்திற்கு!

    இனி கவிஞர்களின் முறை…

    *****

    உற்றதுணையாய் உடன்பிறந்தோர், சுற்றமாய்க் கால்நடைகள்…இவை சுற்றியிருக்க, வேறு தெய்வங்கள் எதற்கு? ஈடாமோ இதற்கு? என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உயர்வாய்…

    பெற்றோ ரில்லா நிலையினிலும்
    பேணி வளர்க்கும் அண்ணன்மார்,
    உற்ற துணையாய் உடன்பிறந்தோர்
    உலகி லுயர்ந்த பாதுகாப்பு,
    சுற்ற மாகக் கால்நடைகள்
    சுழலும் வாழ்வும் சிறப்பாக,
    மற்ற தெய்வ மெல்லாமே
    மண்ணில் செய்த பதுமைகளே…!

    *****

    மரமேறிக் குதித்தது, மாங்காய்ப் பறித்து, பச்சைக் குதிரையை இச்சையொடு தாண்டியது, பாம்பைக் கண்டு பயந்து பதுங்கியது என்று இனிமையான தன் இளமைக்காலக் கிராம வாழ்க்கையை நகரத்து நரக வாழ்க்கையின் மத்தியிலும் அசைபோட்டு ஆனந்தம் கொள்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    உடலும் உயிரும்

    துள்ளித் திரிந்த பிள்ளைப் பருவம்
    நினைக்க, நினைக்க உள்ளம் இனிக்கும்!
    கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்!
    கவலை இல்லா அருமைக் காலம்!
    தட்டான் பிடிக்க ஓடியதும்
    நுங்கு வண்டி ஓட்டியதும்
    குட்டையில் மீன் பிடித்ததும்
    பச்சைக் குதிரை தாண்டியதும்
    மரம் ஏறிக் குதித்ததும்
    மாங்காய் பறித்துத் தின்றதும்
    தென்னந் தோப்பு நிழலினிலே
    தோழருடன் கூடிக் களித்ததும்
    ஏற்றம் இறைப்பதை ரசித்ததும்
    நெற்பயிர் வாசம் ருசித்ததும்
    ஆட்டுக்குட்டியை தழுவி மகிழ்ந்ததும்
    கன்றுக்குட்டியுடன் துள்ளிக் குதித்ததும்
    பாம்பைக் கண்டு பயந்ததும்
    வாய்பாடு பாட்டாய்ச் சொன்னதும்
    கணக்குப் பாடம் கண்டு மிரண்டதும்
    தமிழில் பாடம் படித்ததும்
    இன்பச் சுற்றுலா சென்றதும்
    மஞ்சு விரட்டு பார்த்து மனம் மயங்கி நின்றதும்
    ஒழுக்கம், இரக்கம், உண்மை சொல்லித் தந்த
    ஆசிரியரைத் தெய்வமாய் நினைத்ததும்
    கிராமத்து வாழ்க்கை இன்பமடா!
    நகரத்து வாழ்க்கை நரகமடா!
    நான் அனுபவித்தததைச் சொல்லுகிறேன்!
    உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறேன்!
    உயிரெனும் கிராமத்தைக் கொன்று விட்டு
    உடலெனும் நகரத்தில் வாழுகின்றோம்!
    உயிரற்ற உடலால் என்ன பயன்?
    உயிரும் உடலும் சேரட்டும்!
    இன்பம் என்றும் நிலைக்கட்டும்!

    *****

    உயிர்ப்பான இப்படத்திற்குக் கவிதைகள் அதிக அளவில் வாராதது வருத்தமே! எனினும், பங்குபெற்ற கவிஞர்கள் நல்ல சிந்தனைகளைத் தம் கவிதைகளில் நட்டுவைத்திருப்பதில் மகிழ்ச்சியே!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    ஏழைச் சிறுவனின் ஏக்கம்!

    உருளுகின்ற இவ்வுலகில் உழைக்கும் வர்க்கமாய்..
       உழல்பவர்கள் ஏராளம்! அதிலும் உழைக்காமலே..
    பொருளீட்டும் மாந்தரும் உண்டாம் இவர்களின்..
       இருட்டு மனத்திலேயாம் வெளிச்சம் தேடுகிறோம்!
    மருண்டே வாழ்ந்து மண்ணில் மடிவதுதானெம்..
       மக்களின் தலையில் எழுதியதலை விதிபோலாம்!
    அருளுகின்ற இறைவனும் ஏழை எமக்கென்றே..
      ஆரோக்கியமும் பிள்ளைச் செல்வமும் அருளினான்!

    ஆனால்…

    பள்ளிசெல்லும் எண்ணமே சத்துணவுக் காகத்தான்..
       படிப்பிலே கவனமிலாப் பலசோலி எங்களுக்குண்டு!
    வெள்ளி முளைக்குமுன் வேகமாய்ச் செயல்புரிந்தே..
       வதைக்கும் உழைப்பால் படிப்பினில் நாட்டமில்லை!
    பிள்ளையாய் இருக்கும்போதே இடுப்பில் இன்னொரு..
       பிள்ளையைச் சுமக்க வேண்டுமா ஏழ்மையென்பதால்!?
    கள்ளமிலா மனதோடு கல்விகற்க ஆசைதான் ஆனால்…
       சல்லாபமாய் வாழநினையின் சங்கடமே வருகிறது!
    அப்பனும் ஆத்தாளுமில்லை அரவணைத்து வளர்க்க..
       ஆதரவாய் உற்றோர் உறவினருமென எவருமிலை!
    தப்பேதும் செய்யாமலே தண்டனை மிகப்பெரிதோ…
       தகும்நூலைப் படித்துயர ஒருபோதும் வழியில்லை!
    எப்படி வாழ்வதென எண்ணியே கலங்குகின்றோம்..
       எங்கள் கடமைகளை அனுதினமும் செய்கின்றோம்!
    இப்பாரினில் ஏழ்மைக் குழந்தைபடும் துயரம்போல்..
       எவருக்குமே வராதென…..அருள்வாயா இறைவா?

    ஏழைகளின் வாழ்க்கை இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ? வறுமை அவர்கள் வாழ்வைச் சூறையாட, பொறுப்புகள் அவர்கள் இளமைக்கால இனிமையைச் சூறையாட, மிஞ்சியிருப்பது அவநம்பிக்கையும் விரக்தியுமே!

    உருண்டோடிடும் பணங்காசெனும் செல்வம் அவர்களிடம் குறைந்திருந்தாலும், தளர்நடையால் மனம்மயக்கும் வளர்பிறைபோலும் மழலைச்செல்வம் அவர்கள் மனையிலே நிறைந்திருக்கும். எனினும், கல்வி எனும் கண்பெற்றுக் கற்றோர் அவைக்கண் ஏறுபோல் பீடுநடைபோட அவர்களின் இன்மை பெருந்தடையாய் இருப்பது புன்மையே!

    அவ்வகையில் ஏழைபடும் பாட்டை ஓர் ஏழைச்சிறுவனின் வாய்மொழியாய் உளங்கசியும் வண்ணம் உருக்கமாய்த் தன் பாட்டில் பதிவுசெய்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • தினமலரில் கிரேசி!

    இன்றைய ‘’தினமலரில்’’ வெளியான அடியேன் பேட்டி….!கிரேசி மோகன்….!

    17_09_2017_007_005

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    அர்ஜுன உவாச(கீதை கேட்டல்)….!
    —————————————————————————-

    170917 -sishyaste aham Shadhi maam tvaam prapannam -DWA -lr -watercolor on papyrus

    ‘’காலைப் பிடித்துக் கதறுகிறார் காண்டீபர்,
    பாலை வனத்துப் பசுமையாய்: -மாலை(பெருமாளை)
    விழுந்து ,வியர்த்து,வளைந்து ,வணங்க
    அழுந்திய பாதத்தில் ‘’ஆ’’(கோமாதா)….கிரேசி மோகன்….!

    Share
  • முரண்கோள் [Asteroid] ஃபிளாரென்ஸை இரு துணைக்கோள்கள் சுற்றுவதை ரேடார் குவித்தட்டு காட்டுகிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
     ++++++++++++
    aj
     
    முரண்கோள் ஃபிளாரென்சுக்கு இரு நிலவுகள்
     
    +++++++++++++++++++
    +++++++++++++
    Image result for asteroid florence has two moons
    முரண்கோள் ஃபிளாரென்சுக்கு இரு நிலவுகள்
     
     
    ரேடார் கண்டுபிடித்த முரண்கோளின் இரு நிலவுகள்
     
    2017 செப்டம்பர் முதல்  தேதி  நாசாவின் கோல்டு ஸ்டோன் ஆழ்வெளித் தொடர்பு இணைப்பு   [Goldstone Deep Space Communications Complex] மூலம், 70 மீடர் [235 அடி] ரேடார் வானலைத் தட்டு முரண்கோள் ஃபிளாரென்ஸ் [Asteroid Florence : 3122] பூமிக்கு அருகில் குறுக்கிட்டதைக் கண்டுள்ளது.  மேலும் அந்த முரண்கோளை இரு துணைக்கோள்கள் சுற்றி வருவதையும் காட்டியுள்ளது.  அத்துடன் முரண்கோள் சுமார் 4.5 கி.மீ. [2.8 மைல்] வடிவம் உள்ளது என்றும் அளந்துள்ளது.  இன்றுவரைக் கண்டுபிடித்த 16,400 முரண்கோள்களில் ஃபிளாரென்ஸ் முரண்கோள் மட்டுமே இரு நிலவுகள் சுற்றிவர அறியப் பட்டுள்ளது.  இரு நிலவுகளின் அளவு துல்லியதாக இன்னும் அறியப்பட வில்லை.  அவை 100 – 300 மீடர் [300 – 1000 அடி] அகலம் இருக்கலாம் என்று யூகிப்பப் படுகின்றன.   அவை இரண்டும்  முரண்கோளைச் சுற்றிவரும் காலமும் இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை.   உட்புற நிலவின் சுற்றுக் காலம் சுமார் 8 மணி நேரமாகவும், வெளிப்புற நிலவு சுற்றும் நேரம் 27 மணியாக இருக்கலாம் என்று கணிக்கப் படுகின்றன.  அத்துடன் ஃபிளாரென்ஸ் முரண்கோள் தன்னைத் தானே சுற்றும் நேரம் 2.4 மணி அளவு என்றும் கணிக்கப் பட்டுள்ளது.  பணிமாது ஃபிளாரென்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் நினைவாக இம்முரண்கோள், பெயரிடப்பட்டது என்று தெரிகிறது.
    nasa-sample-mission

    நிலவினில் தடம் வைத்தார்

    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆராயத்
    தளவுளவி சிலவற்றை
    நாசாவும்
    ஈசாவும் இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    வால்மீனை விரட்டிச் சென்று
    தூசியைப் பற்றிக்
    காசினியில் இறக்கினார் !
    முரண் கோள் ஒன்றின்
    மாதிரி மண் தூசியை
    வையத்தில் இறக்கும் ஜப்பான்
    ஹயபுஸா  விண்ணுளவி !
    அயான் எஞ்சினை இயக்கி
    பில்லியன் மைல்கள்
    பயணம் செய்து
    முரண் கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்ட பின்
    நாசா விண்ணுளவி சுற்றியது
    செரிஸ் குள்ளக் கோள் !
    முரண்கோள் மண் மாதிரி எடுக்கப் போகுது
    நாசா விண்ணூர்தி இப்போது !

    +++++++++++

    nasa-probe-instruments

    கார்பன் செழிப்பான பென்னு [Bennu] போன்ற பூர்வ முன்னோடி முரண் கோள்களில்தான் 4.5 பில்லியன் ஆண்டுக்கு முன் சேர்ந்த மண் தாதுக்கள் சேமித்துக் கிடக்கின்றன.  நமது பூமியிலோ அல்லது நமது சூரிய மண்டலக் கோள்களிலோ உயிரினத் தோற்ற மூலத்திற்கு அவை காரணமாய் இருக்கலாம்.

    கிரிஸ்டினா ரிச்சி [விண்ணூர்தி நாசா துணைத் திட்ட அதிகாரி]

    இதுவரை நாங்கள் முன்னறியாத இந்தப் புதிய உலகின் [Asteroid] தளவியல் படத்தைப் பதிவு செய்யப் போகிறோம்.  பல்வேறு காமிராக்கள், லேசர் கதிர்கள், ஒளிப்பட்டை மானிகள் மூலம், அதன் உலோகத் தாதுக்கள் அந்த முரண்கோள் தளம் நெடுவே பரவியுள்ளதை நாங்கள் ஆழ்ந்து அறியப் போகிறோம்.  விஞ்ஞான வரலாறு அவ்வித நிகழ்ச்சியை வேண்டுவதால், அம்மாதிரித் தேடலுக்கு நாங்கள் முன்னோடியாய் இருக்கிறோம்.

    பேராசியர் தாந்தே லராட்டா [ முதன்மை ஆய்வாளர், அரிசோனா பல்கலைக் கழகம்]

    nasa-rocket-launching

    நாசா முதன்முதல் ஏவும் முரண்கோள் மண் மாதிரி எடுத்து மீளும் விண்ணூர்தி.

    2016 செப்டம்பர் 9 ஆம் தேதி நாசா முதன்முதல் முரண்கோள் ஒன்றின் மண் தூசியை எடுத்து பூமிக்கு மீளும் விண்ணூர்தியை அனுப்பி உள்ளது. 800 மில்லியன் டாலர் செலவில் பூமிக்கு அருகே சூரியனைச் சுற்றிவரும் “பென்னு” [ASTEROID BENNU] என்னும் முரண்கோளை ‘ஓஸிரிஸ்-ரெக்ஸ்’ [OSIRIS-REx] எனப் பெயரிடப்பட்ட விண்ணூர்தி ஈராண்டுகள் பயணம் செய்து தளப்பதிவு படமெடுக்கப் போகிறது.   பென்னு முரண்கோள் சூரிய குடும்பத்தின் 500,000 முரண்கோள்களில் பூமிக்கு அருகில் சுற்றுமோர் சிறிய பூர்வீக முரண்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.  அது கார்பன் செழிப்பான முரண்கோள். பூமியிலும், சூரிய குடும்பக் கோள்களிலும் உயிரினத் தோற்ற மூலத்துக்கு, அது அடைப்படைத் தாதுக்களைக் கொண்டிருக்கலாம்.  முரண்கோள்களில் எப்படி நீர், உலோகங்கள் தோன்றின என்று அதனால் அறிய முடியலாம்.

    nasas-target-asteroid

    நாசா விண்ணூர்தி பென்னு முரண்கோளை 2018 ஆகஸ்டில் நெருங்கும். அதை விண்ணூர்தி ஈராண்டுகள் சுற்றி ஆராய்ந்து, 2020 ஜூலையில் அதன் மண்தூசியை அள்ளிக் கொண்டு பூமிக்கு வந்து சேரும். அள்ளும் நீள்கரச் சாதனத்தால்  மண்தூசி 300 கிராம் [10 அவுன்ஸ்] வரை எடுத்துக் கொண்டு வர முடியும்.  விண்ணூர்தி முரண்கோள் தளத்தில் இறங்காமலே, நீள் கரத்தில் மண்தூசியை அள்ளிக் கொண்டு வரும். காற்று அழுத்தமுடன் வீசி, தளத்தில் தூசியைக் கிளப்பி, அது உறிஞ்சப்படும். அந்த மண் தூசியில் 4% கனடாவுக்கும், 0.5% ஜப்பனுக்கும் தரப்படும்.  இரு நாடுகளும் தம் சோதனைகள் புரிய நாசாவுக்கு நிதி அளித்துள்ளன.

    asteroid-bennu

    அடுத்த சோதனை “சுற்றுவீதி தள்ளல்”  [Orbital Nudges]  எனப்படும் எர்கோவ்ஸ்கி விளைவு  [Yarkovsky Effect] பற்றி ஆராய்வது.  சூரினைச் சுற்றிவரும் முரண்கோள் எப்படிச் சூரிய ஒளி அதன் சுற்றுவீதியைத் தள்ளி நெருக்குகிறது என்று அளப்பது.  அதன் மூலம் முரண்கோள் எதிர் காலத்தில் பூமியை நெருங்கி மோதிவிடும் அபாய எதிர்பார்ப்பு வாய்ப்பை அறிந்து விடலாம்.   இந்த முயற்சிபோல்  2010 ஆண்டில் முதன்முதல் ஜப்பான் விண்வெளித் தேடல் ஆணையகம் [JAXA] தனது “ஹயபுஸா” விண்ணூர்தியை முரண்கோள் ஒன்றுக்கு அனுப்பி, சில மைக்ரோ கிராம் பொருளைப், பூமிக்கு எடுத்துக் கொண்டு வந்துள்ளது.  2014 டிசம்பரில் அடுத்து ஜப்பான் ஹயபுஸா-2 முரண்கோள் “ரியூகு” [RYUGU]  அனுப்பி, அதன் தளவுளவி “மஸ்காட்” [MASCOT]  இறக்கி மண்தூசி எடுத்து 2020 ஆண்டில் புவிக்கு மீளும்.

    nasa-selection-of-asteroid

     

    +++++++++++++

    முரண்கோளை ஆராயப் போன நாசா விண்ணிளவி

    “முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    “2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

    ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

     

    Fig 8 Japan Space Probe to Asteroid

    “புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)

    “வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.

    அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    “வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

     

    நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண் கோள் நோக்கிச் சென்றது.

    முதல் விண்வெளிக்  குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்”  [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது.    2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது.   ஏறக்குறைய  ஒன்பது மாதங்கள்  புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண் கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.

    2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி  2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி  அதைச் சுற்ற ஆரம்பித்தது.   விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது.   சூரியனி லிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது.  இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப்  படுகிறது.  புலர்ச்சி விண்ணுளவி  வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்து, இப்போது சுற்றி வருகிறது.

     

     

    இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System].   அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300  மைல்கள்.  அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ.  இப்போது [2012 நவம்பர்]  புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது.   புலர்ச்சிக்குச் செரிஸ் முரண் கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

    நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.

    நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.

     

     

    விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

    2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.

     

    வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வா யிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது

    பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.

    முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.

     

    பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :

    1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.

    2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.

    3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.

    4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.

    புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.

     

     

    (தொடரும்)

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
    By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
    23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
    25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp[Dawn Update]
    26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
    27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [October 17, 2012]
    28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp[October 31, 2012]

    29.  http://www.pcmag.com/article2/0,2817,2417734,00.asp  [April 23, 2013]

    30.  http://www.nasa.gov/content/goddard/new-nasa-model-gives-glimpse-into-the-invisible-world-of-electric-asteroids/#.U8ldUjC_gcE  [June 25, 2014]

    31. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ejIXRFzXgsg

    32. https://en.wikipedia.org/wiki/Sample_return_mission  [September 6, 2016]

    Attachments area

    Preview YouTube video Giant asteroid ‘Florence’ whizzes past Earth revealing two moons

    Giant asteroid ‘Florence’ whizzes past Earth revealing two moons

    Preview YouTube video Asteroid Florence: Earth vibrates, brings two moons along for the ride

    Asteroid Florence: Earth vibrates, brings two moons along for the ride

    Preview YouTube video Asteroid Florence: 3-mile asteroid set to pass Earth on Sept 1; Earthquake proof building -8/22/2017

    Asteroid Florence: 3-mile asteroid set to pass Earth on Sept 1; Earthquake proof building -8/22/2017

    Preview YouTube video Radar Reveals Two Moons Orbiting Giant Asteroid Florence

    Radar Reveals Two Moons Orbiting Giant Asteroid Florence

    Preview YouTube video NASA’s OSIRIS-REx Asteroid Sample Return Mission

    NASA’s OSIRIS-REx Asteroid Sample Return Mission

    Preview YouTube video OSIRIS-REx Tech – Surveying an Asteroid with X-rays

    OSIRIS-REx Tech – Surveying an Asteroid with X-rays

    Preview YouTube video NASA | OSIRIS-REx Investigates Asteroid Bennu

    NASA | OSIRIS-REx Investigates Asteroid Bennu

    Preview YouTube video NASA | Asteroid Bennu’s Journey

    NASA | Asteroid Bennu’s Journey

    Preview YouTube video Pre-Launch Briefing for NASAs Asteroid Sample Return Mission – OSIRIS-REx

    Pre-Launch Briefing for NASAs Asteroid Sample Return Mission – OSIRIS-REx

    Preview YouTube video OSIRIS-REx Tech: Mapping an Asteroid with Lasers

    OSIRIS-REx Tech: Mapping an Asteroid with Lasers

    Preview YouTube video NASA Announces Asteroid Identification, Capture and Sampling Initiative

    NASA Announces Asteroid Identification, Capture and Sampling Initiative
    Share